SCULPT ART - KRISHNAPURAM ,
VENKATACHALAPATHY TEMPLE ,NEAR NELLAI
சிற்ப கலைக்கு சிறந்த சான்று..
சிற்ப கலைக்கு சிறந்த சான்று, நெல்லை அருகிலுள்ள கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில்தான் என்பதை, அங்குள்ள சிற்பங்களை கண்டு ரசித்தவர்கள் ஏற்றுக்கொள்வர்..
திருநெல்வேலியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் திருச்செந்தூர் சாலையில் உள்ளது கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில். இக் கோயில் 16-ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது.
இக் கோயிலின் தனிச் சிறப்பு அங்குள்ள சிற்பங்களே. இந்த கோயிலின் வீரப்ப நாயக்கர் மண்டபம், அரங்க மண்டபம் ஆகிய இரு மண்டபங்களிலும் சுமார் 6 அடிக்கு குறையாமல் சுமார் 30-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன.
இந்த சிற்பங்கள் அனைத்தும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான தூண்களில்தான் உள்ளன. ஒரே தூணில் எண்ணற்ற சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள சிற்பங்களில் வீரன், அரச குமாரியை கடத்துதல், குறத்தி அரச குமாரனை கடத்துதல், அர்ச்சுனன், கர்ணன், ரதி, மன்மதன், நடன மங்கை என்று சிற்பக் கலைக்கு பெருமை சேர்க்கக் கூடிய சிலைகள் உள்ளன.
இந்த சிலைகளில் மனிதர்களுக்கு தெரிவதுபோல எலும்பு, நரம்பு, கை, கால் மொளிகள் தெரிவது காண்போரை பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன. மேலும், மன்மதன் கரும்பு வில் சிற்பத்தின் மேல் பகுதியில் ஒரு ஊசியைப் போட்டால் அதை வில்லின் கீழ் பகுதியில் எடுத்து விடலாம். இந்த அளவுக்கு நுட்பமும், கலைநயமும் நிறைந்த சிலைகள் கிருஷ்ணாபுரத்தில்மட்டும் தான் உள்ளன என்று சிற்பக் கலைஞர்கள் கூறுகின்றனர்.
கிருஷ்ணாபுரம் சிற்பங்கள், சிற்பக் கலைஞர்களால் அளிக்கப்பட்ட அருள்கொடை என்பதில் ஐயமில்லை. திருச்செந்தூர் சாலையில் பயணிக்கும் யாராக இருந்தாலும், இக் கோயிலின் சிற்பங்களை காணத் தவறுவதில்லை.
இந்த கோயில் 1.8 ஏக்கர்கள் (0.73 ha) பரப்பளவிலான வளாகமானது கருங்கல் மதிலால் சூழப்பட்டுள்ளது. இந்த கோவிலில் முதலில் மூன்று பிரகாரங்கள் இருந்தன.
அவற்றில் வெளிப்புற பிரகாரமானது ஆற்காடு நவாப்பின் உத்தரவினால் சந்தா சாகிப்பால் இடிக்கப்பட்டது. அக்கற்கள் பாளையங்கோட்டையில் கோட்டை கட்ட பயன்படுத்தப்பட்டன.
கோயிலின் நுழைவாயில் உள்ள ஐந்து அடுக்கு இராஜகோபுரமானது 110 ft (34 m) உயரமானது ஆகும். கருவறையில் 4 ft (1.2 m) உயரத்தில் கருங்கல்லால் அமைக்கபட்ட வெங்கடாசலபதி சிலை வடிவில் உள்ளார். இவர் நான்கு கைகளைக் கொண்டுள்ளார். இவரது பின்னிரு கைகள் சங்கு மற்றும் சக்ரத்தை ஏந்தியுள்ளன. முன் வலக்கையானது அபயமுத்திரையோடும், இடக்கையானது கடஹஸ்த முத்திரையோடும் உள்ளது.
இவரது இருபுறமும் ஸ்ரீதேவியும், பூமாதேவியும் உள்ளனர். உற்சவர் சீனிவாசன் என்று அழைக்கப்படுகிறார், மேலும் உற்சவரின் வடிவம் மூலவரின் அம்சங்களை ஒத்ததாக உள்ளன. அர்த்த மண்டபம் இருபுறமும் இரண்டு துவாரபாலகர்கள் உள்ளனர்.
மூன்றாவது வளாகத்தில் அலர்மேல்மங்கைக்கு தனி ஆலயம் உள்ளது, அதில் உற்சவர் சிலையும் உள்ளது.
கோவில் வளாகத்தில் பந்தல் மண்டபம், வாகண மண்டம், ரெங்க மண்டம், நங்குநேரி ஜீயர் மண்டபம் என பல மண்டபங்கள் உள்ளன. பந்தல் மண்டபத் தூண்களில் புஷ்பபொய்கை, பலகை மற்றும் வரிக்கோலம் ஆகியவற்றைக் கொண்ட கட்டடக்கலை அம்சங்கள் நிறைந்து உள்ளன.
No comments:
Post a Comment