#சிவாஜிகணேசன்_யார்?
சிவாஜி உயிருடன் இருந்தபோதேயே ஒரு விஷயம் சொல்லுவார்கள். தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி இங்கு வந்து பிறந்தது. அது தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம். ஆனால் சிவாஜியைப் பொறுத்தவரை அவருடைய துரதிர்ஷ்டம் அது. அவர் வெளிநாட்டிலோ, குறைந்தபட்சம் இந்தியாவின் வேறு மாநிலத்திலோ பிறந்திருந்தால் சிவாஜி எந்த இடத்திலோ வைத்துக் கொண்டாடப்பட்டிருப்பார். அது சிவாஜிக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்டமாக இருந்திருக்கும் என்று.
சிவாஜி தமிழ்நாட்டிற்கு எதற்குத் தேவைப்பட்டார் என்றால், எம்ஜிஆருக்கு parallel ஆக ஒரு நடிகர் தேவைப்படுகிறார்.
அது சிவாஜி.
இப்போது சிவாஜியா? எம்ஜியாரா? என்ற கேள்வி வருகிறது.
“எம்ஜிஆர்” என்று பதிலளிக்கிறது தமிழ்நாடு.
மற்ற விஷயங்களை ஒதுக்கிவிட்டு சிவாஜி விஷயத்தை மட்டும் பார்க்கும்போது சிவாஜி கணேசன் யார் என்பதையே இன்னமும் பெரும்பாலான தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவில்லையோ என்றே தோன்றுகிறது. எத்தனையோ நடிகர்களில் இவரையும் ஒருவராக மக்கள் எண்ணிவிட்டார்களோ என்றே படுகிறது.
எங்கேயோ தொலைதூரத்தில் இருக்கும் ஊரிலிருந்து கிளம்பிவந்து எம்ஜிஆரின் சமாதியில் இன்னமும் அவர் கட்டியிருந்த கடிகாரத்தின் டிக்டிக்டிக் ஒலி கேட்கிறதா என்று காதுகளை வைத்து கேட்டுச்செல்லும் கூட்டத்திற்கு சிவாஜிகணேசன் தேவையில்லை என்பது புரிந்துகொள்ளமுடிந்ததுதான்.
ஆனால் அவர்களை விடவும் மேம்பட்டு சமூகத்தின் சில விதிகளை நிர்ணயிக்கப் பிறந்தவர்கள்-
நம்முடைய பாரம்பர்யத்தையும் கலைகளையும் நமக்குத் தேவையான விழுமியங்களையும் அடையாளப்படுத்த இருப்பவர்கள்-
வரலாற்றைப் பேணிக்காத்து தொகுத்தளிப்பவர்கள்………………….. போன்ற மேல்நிலை மக்களுக்கும் சிவாஜி என்பவர் ‘மேலும் ஒரு நடிகர்’ மட்டும்தானா, திரையுலகில் வந்து போட்ட வேடத்தை நடித்துக்கொடுத்துவிட்டு சம்பாத்தியம் வாங்கிக்கொண்டு சென்றவர்தானா –
இப்படித்தான் சிவாஜியைப் பற்றி நினைக்கிறார்களா? என்பது உண்மையிலேயே புரியவில்லை.
சிவாஜிகணேசன் ஒரு நடிப்புச் சுரங்கம்,
சிவாஜி கணேசன் ஒரு நடிப்புப் பல்கலைக் கழகம்,
சிவாஜிகணேசன் நடிகர்களின் பிதாமகன்,
சிவாஜி நடிப்புலகின் கலைக்கலஞ்சியம் ,
தலைசிறந்த நடிகர்களுக்கெல்லாம் முன்னோடி என்றெல்லாம் சிவாஜி பற்றி எல்லாரும் நிறைய சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறமாதிரி நடைமுறையில் அவரை மதித்துச் சிறப்பிக்கும் விதமாக இங்கே ஏதாவது அரங்கேறியிருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ஒரு சிறு துரும்பைக்கூட அவருக்காக கிள்ளிப்போட யாரும் இங்கே தயாராக இல்லை.
"அதெல்லாம் எங்களுடைய வேலை இல்லை". அரசாங்கம் செய்திருக்கவேண்டும். நாங்கள் என்ன செய்யமுடியும்?’ என்று கேட்டு ஒதுங்கிவிடுவார்கள். அரசாங்கமும் நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் ஒதுங்கியே இருந்துவிடுகிறது.
பக்தவச்சலம் ஆட்சிக்குப் பிறகு வந்த அரசாங்கங்கள் எல்லாம் திராவிடம் பேசியே தமிழனுக்குக் கிடைக்கவேண்டிய அத்தனைப் பெருமைகளையும் கிடைக்காமல் செய்துவிட்ட அரசாங்கங்களே தவிர, நியாயமான பெருமைகளைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்த அரசாங்கங்கள் அல்ல.
கலைஞர் கருணாநிதி தாம் ஆட்சியில் இருந்தபோது, சிறந்த நடிகர்களுக்கான ‘பாரத்’ என்ற பட்டம் மத்திய அரசாங்கத்திலிருந்து சிவாஜிக்குக் கிடைக்கப்போகிறது என்ற செய்தி அறிந்ததும் (அது சிவாஜிக்குக் கிடைக்கவிருந்ததே மிக மிகத் தாமதமான ஒன்று) அப்போது தமது அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருந்த நாவலர் நெடுஞ்செழியனை அவசர அவசரமாக டெல்லிக்கு அனுப்பிவைத்து, “சிவாஜிக்கு வேண்டாம். அந்தப் பட்டம் எம்ஜிஆருக்குக் கொடுக்கப்பட வேண்டும்” என்று ‘அஃபிஷியல் லாபி’ செய்து எம்ஜிஆருக்குக் கிடைக்கச் செய்ததெல்லாமே அரசியல் நடவடிக்கைகளின் கறுப்புச் சம்பவங்கள். (எம்ஜிஆர் பிரிந்து அதிமுக ஆரம்பித்த பிறகு இந்தச் செய்தி எம்ஜிஆருக்கு எதிராகத் திமுகவினரால் சொல்லப்பட, அதுவரை ‘இந்தச் செய்தி பற்றி ஒன்றுமே அறிந்திராத அப்பாவி எம்ஜிஆர்’ துடித்தெழுந்து ‘துரோகி வாங்கிக்கொடுத்த இந்த பாரத் பட்டம் எனக்குத் தேவையில்லை’ என்று உதறி எறிந்தது அற்புதமான காமெடி).
மற்ற மாநிலங்களில் முத்துராமன், ஜெய்சங்கர் அளவு நடிகர்கள் எல்லாரும் பத்ம பூஷன், பத்ம விபூஷன் என்றெல்லாம் முன்னேறிக்கொண்டிருக்க சாதாரண பத்மஸ்ரீக்கே பல ஆண்டுக்காலம் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது சிவாஜிகணேசனால்.
தமிழகத்தைப் பல ஆண்டுக்காலம் ஆட்சி செய்யும் வாய்ப்புப் பெற்ற கலைஞர், சிவாஜி என்ற மகா கலைஞனுக்கும் கவியரசர் கண்ணதாசனுக்கும் இவர்கள் இருவரும் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மிக அரிய கலைஞர்கள் என்ற வகையில் எவ்வித அரசு மரியாதைகளையும் செய்யவில்லை என்பது கசப்பான உண்மை.
சிவாஜியும் கண்ணதாசனும் எவ்வளவு பெரிய கலைஞர்கள்………….”கண்ணதாசன் எவ்வளவு பெரிய கவிஞர்…………………………!
பெரிய கவிஞர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் மக்கள் அபிமானம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை. உங்கள் கண்ணதாசன் மக்களிடையே மிகப்பெரும் செல்வாக்கு பெற்றவர்.
அவருக்கு ஏன் உங்கள் அரசுகள் சரியான மரியாதை தரவில்லை?” என்று ஒரு சில கன்னட எழுத்தாளர்களும் கவிஞர்களும் விசாரித்திருக்கிறார்கள். எம்ஜிஆரால் தரப்பட்ட அரசவைக் கவிஞர் என்ற ஒன்றுமட்டும் இல்லாவிட்டால் அவருக்கு எந்தவித அரசாங்கச் சிறப்பும் கிடைத்திருக்காது.
கலைஞரைப் பொறுத்தவரை, தேவைப்பட்டபோதெல்லாம் ‘என்னுடைய ஆருயிர் நண்பன் சிவாஜி நாங்கள் இருவரும் ஒரே இலையில் உணவு உண்டவர்கள்; என்னுடைய ஆருயிர் நண்பன் கண்ணதாசன். நாங்கள் இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள்’ என்கிறமாதிரி சென்டிமெண்ட் டச் கொடுத்துப் பேசிவிட்டுப் போய்விடுவாரே தவிர அந்த இரண்டு பேருக்குமே அங்கீகாரமோ அரசு மரியாதையோ அளித்ததே இல்லை.
சிவாஜிக்கு கடற்கரைச் சாலையில் சிலை அமைத்தது என்பது தவிர்க்கமுடியாத காலச்சூழலின் கட்டாயத்தினால் நிகழ்ந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
சிவாஜிக்கு அந்த சிலையாவது அமைத்தார். கண்ணதாசனுக்கு எதையுமே அவர் செய்யவில்லை என்பதையும் வருத்தத்தோடு பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
சிவாஜி என்பவர் திரைப்பட உலகிற்குக் கிடைத்த எத்தனையோ நடிகர்களில் ஒருவர் அல்ல.
சில கலைஞர்கள் உருவாகிறார்கள்.
சில கலைஞர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.
சிலர் மட்டுமே தோன்றுகிறார்கள்.
சிவாஜி உருவானவரோ, உருவாக்கப்பட்டவரோ அல்ல; திரைப்படக் கலைக்காகவே ‘தோன்றியவர்களில்’ ஒருவர் சிவாஜிகணேசன்.
சிவாஜிக்கு அடுத்து சிறந்த நடிகராகப் போற்றப்படும் கமலஹாசனை வைத்தே இதற்கான உதாரணத்தைச் சொல்லலாம்.
ஏனெனில் இன்றைய இளையதலைமுறை முற்று முழுதாக அறிந்த ஒரு நடிகர் கமலஹாசன்.
கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக இருந்து இன்றுவரை நடித்துவருபவர். ஒரு ஐம்பது அறுபது படங்களுக்குப் பிறகுதான், அதுவும் மிகச்சிறந்த இயக்குநர்களின் கைகளுக்குச் சென்ற பின்னர்தான்-
பாலச்சந்தரால் பலமுறை புடம் போடப்பட்டு,
பாரதிராஜாவால் மிக அழுத்தமான கேரக்டர் கொடுக்கப்பட்டு,
மணிரத்தினத்தினால் சிறந்த தொழில்நுட்பமும் அழகிய திரைக்கதையும் வடிவமைக்கப்பட்டு திரும்பத் திரும்ப செதுக்கப்பட்ட பின்னரே அவரால் தம்மை ஒரு ‘சிறந்த நடிகராக’ நிலைநிறுத்திக்கொள்ளவும், மற்றவர்களைத் தம்மைப் பற்றிப் பேச வைக்கவும் முடிகிறது. அதற்கு முன்னால் கமல் நடித்த பல படங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும்.
பெரிய நடிகராகவும், குறிப்பிட்ட நடிகராகவும் கமல் வந்தபிறகு தன்னை மிகுதியான அளவிலே செதுக்கிக்கொண்டார் என்பதும் புடம் போட்டுக்கொண்டார் என்பதும் உண்மைதான்.
ஆனால் படங்களில் ஒரு புதுமையைச் செய்யவேண்டும் என்று நினைத்தாலோ, புதுமையான பாத்திரத்தில் தோன்ற வேண்டும் என்று நினைத்தாலோ அவருக்கு இன்றைக்கு நிறைய வசதிகள் இருக்கின்றன.
முற்றிலும் புதுமையான ஒரு பாத்திரத்தை ஏற்று நடிக்கவேண்டும் என்று கமல்
விரும்பினாரென்றால் உடனடியாக ஒரு ஐம்பது, ஏன்? இருநூறு டிவிடிக்களைப் பார்த்து ஒவ்வொரு காட்சியும் இப்படித்தான் இருக்கவேண்டும் இந்தக் காட்சியையே இப்படி வைத்துக்கொள்ளலாம். அல்லது, இந்தக் காட்சியில் இப்படி வைத்துக்கொள்ளலாம், இந்தக் காட்சியை இப்படிச் மாற்றிக் கொள்ளலாம், இந்த சீனை இப்படி வைத்துக்கொள்ளலாம் என்றெல்லாம் செப்பனிட்டு அழகுபடுத்தி முடிவெடுக்கும் வசதிகள் பெருகிவிட்டன.
மேக்கப் முதற்கொண்டு அத்தனை சினிமா உபகரணங்களையும் ஹாலிவுட்டிலிருந்து இறக்குமதி செய்யவும் வசதி வந்துவிட்டது.
அதற்கான தொழில் நுட்பக்கலைஞர்களையும் அங்கிருந்தே கூட்டிவந்து எத்தனைச் செலவானாலும் ஏற்றுக்கொண்டு கமலால் அல்லது இன்னொரு நடிகரால் இந்த இடத்தை மிகமிகப் பிரமாதமாய் பூர்த்திசெய்துவிட முடிகிறது.
அதுமட்டுமல்ல, அப்படிச் செய்து ‘எடுக்கப்பட்ட’ படத்தை உடனடியாக அந்த இடத்திலேயே அப்போதேயே ரிகர்சல் பார்த்து சரியாக வரவில்லையென்றால் உடனே மறுபடியும் தான் நினைத்தமாதிரி உருவாக்கிக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. அதனால் பார்க்கிறவர்களை ‘வியக்கவைக்கும்’ அளவுக்கு திரும்பத் திரும்ப வரும்வரைக்கும் அவர்களால் அதனைப் படமாக்கமுடியும்.
ஆனால் சிவாஜியின் காலம் அதுவல்ல.
நாடக மேடை………….. நாடக மேடையிலிருந்து நேரடியாக திரைப்பட உலகம் என்றிருந்த காலம்.
நாடக மேடையின் கருத்துருவாக்கம் என்பது தாங்கள் கேட்ட நாடோடிக் கதைகளிலிருந்தும் புராண இதிகாசங்களிலிருந்தும் ராஜா ராணி கதைகளிலிருந்தும் பாத்திரங்களையும் காட்சிகளையும் கற்பித்துக்கொண்டு அதற்கேற்ப படைப்புக்களை உருவாக்கிக்கொண்டிருந்த காலம்.
சமூக நாடகங்களுக்கான காட்சிகளும் கருப்பொருள்களும் அந்தந்த வட்டத்துக்குள்ளேயே உருவாகிக்கொண்டிருந்த காலம்தான் அது.
அந்தக் காலத்தின் சொற்ப நீட்சியிலேயே வந்து நடித்தவர்கள் வரிசையில் இரண்டாவது தலைமுறையில் வருகிறவர் சிவாஜி.
சிவாஜியின் காலத்தில் சினிமா என்பது ஏறக்குறைய ஒரு முழு வடிவத்தை அடைந்துவிடுகிறது என்பது உண்மைதான். ஆனால் அதனை மேலும் மேலும் மெருகேற்றி மக்கள் வியப்புறும் கலையாக கொண்டுசெல்லும் பெரும் பொறுப்புக்களைச் சுமக்க வேண்டிய தோள்களாக சிவாஜியின் தோள்களும் இருக்கின்றன.
சிவாஜிக்கு சமமாக இந்திப் படவுலகில் திலீப்குமார், ராஜ்கபூர், குருதத் போன்றவர்களும், தெற்கில் நாகேஸ்வரராவ், சத்யன், ராஜ்குமார் போன்றவர்களும் இருந்தார்கள் என்றாலும் இவருடைய நடிப்பின் ‘வீச்சுக்களுக்கு’ அவர்கள் என்றைக்குமே மிகப்பெரும் ரசிகர்களாகவும்,
வியப்பெய்தியவர்களாகவும் பல சமயங்களில் இவரைப் புகழ்ந்துரைத்தவர்களாகவும் இவரை அண்ணாந்து பார்த்தவர்களாகவும்தான் இருந்திருக்கிறார்கள்.
பல சமயங்களில் ‘இவர் நடித்த வேடங்களை ஏற்க முடியாது; அந்த அளவு எங்களால் நடிக்கமுடியாது’ என்று பத்திரிகைகளிலேயே அந்த மிகப்பெரும் நடிகர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததும் உண்டு. தவிர-
சிவாஜிக்கு இணையாக இத்தனைப் பல்வேறு பாத்திரங்களை ஒருவரே ஏற்று நடித்த கதாநாயகர்களாகவும் அவர்கள் இல்லை.
புராண இதிகாசப் பாத்திரங்கள், ராஜா ராணி பாத்திரங்களுக்கு அன்றைக்கு சிவாஜிக்கு முன்னோடியாக அவருக்கு முன்பிருந்த நாடக நடிகர்கள் இருந்தார்கள் என்பதை ஒரு பேச்சுக்காக வைத்துக்கொண்டாலும் அந்த நாடக நடிகர்கள் அவர்கள் நாடகங்களில் செய்ததெல்லாம் அந்த வேடத்தைப் போட்டுக்கொண்டு தோன்றுவதும், பாடல்கள் பாடிவிட்டுப் போவதும்தான்.
இவைமட்டுமே அவர்களின் செயல்பாடுகளாக இருந்தன.
பாட்டுப்பாடும் பாகவதர்கள் மட்டும்தான் சினிமாவில் நடிக்கமுடியும் என்றிருந்த நிலைமை லேசுபாசாக அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைபட ஆரம்பித்த காலத்தில் சிவாஜியின் வருகைதான் அதை முற்றிலுமாக ஒரேயடியாக உடைத்துப்போட்டு இனிமேல் ‘நடிகர்கள்தாம்’ சினிமாவில் கதாநாயகர்களாக நடிக்கமுடியும் என்ற இலக்கணம் உறுதியாக வகுக்கப்படுகிறது.
சிவாஜி வருகிறார்.
முகபாவனைகளைக் கொண்டு வருகிறார்.
‘பாடி லாங்க்வேஜ்’ என்று சொல்லப்படும் ‘உடல் மொழியை’ எல்லாப் பாத்திரங்களிலும் கொண்டுவருகிறார்.
பேசும் வார்த்தைகளில் ஏற்றத் தாழ்வுகளையும், உச்சரிப்பில் வேறு வேறு உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வித்தியாசங்களைக் கொண்டுவருகிறார்.
நடை உடை பாவனைகளில் உயிர்ப்பைக் கொண்டுவருகிறார்.
நவரச பாவங்கள் எத்தனை உண்டோ அத்தனையையும் கண்களில் மட்டுமே காட்டமுடியும் என்ற சினிமாவுக்கான சேதியையும் கொண்டுவருகிறார்.
அவர் நடிக்க ஆரம்பித்து ஒரு சில படங்களிலேயே ஒரு பரிபூரண படைப்பாளியாய்-
ஒரு பரிபூரணக் கலைஞராய்த் தம்மை நிலைநிறுத்திக்கொண்டுவிடுகிறார்.
எல்லாவித உணர்வுகளையும்….. அது சோகமாய் இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாய் இருந்தாலும் சரி,
வலியாய் இருந்தாலும், வேதனையாய் இருந்தாலும் சரி-
அதனை உணர்ந்து உள்வாங்கி உள்வாங்கியதை நுட்பமாக வெளிப்படுத்தும் திறமையும் கலையும்
அவரிடம் இருந்தது.
படைப்பாற்றலின் வலியோடு அவர் எப்போதும் வாழ்ந்துவந்தவர் என்பதை அவர் நடிக்கும் சோகக் காட்சிகளிலிருந்து அறிய முடியும்.
அவலத்தின் அத்தனை வலிகளையும் தன்னுள் ஏற்று நடித்த நடிகர் அவர்.
அதனால்தான் உலகில் வேறு எந்த நடிகரைக் காட்டிலும் சிவாஜிகணேசன் நடித்த படங்களைப் பார்த்துக் கண்ணீர்விட்டு அழுத மனிதர்கள் மிகமிக அதிகம்.
மக்களை சுலபமாக வசீகரிக்கும் சூத்திரங்களையும், முட்டாளாய் அடிக்கும் தந்திரங்களையும் கற்றுக்கொண்டு அதனை மக்களிடம் பிரயோகித்து வெற்றிபெறவேண்டும் என்று நினைத்தவரல்ல அவர்.
படைப்பின் வலிகளை எப்போதுமே சுமந்துகொண்டிருக்கத் தயாராய் இருந்தவர்.
அதனால்தான் ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறான பாத்திரங்கள்,
வெவ்வேறான கதைக்களன்கள்,
வெவ்வேறான சூழல்கள் என்று தேடித் தேடி நடித்துக்கொண்டே இருக்க முடிந்தது அவரால்.
வசன உச்சரிப்பில் சிவாஜியின் சாதனைக்கு ஈடு இணை கிடையாது.
வசன உச்சரிப்பு என்பது வாயைத் திறந்து வெறுமனே சேதி சொல்லுவது அல்ல என்பதை முதன் முதலாக தமிழர்கள் மூலம் இந்தியத் திரைக்கு அழுத்தம் திருத்தமாக அறிவித்தவர் சிவாஜிதான்.
தாய்மொழியை அதன் சரியான அர்த்தபாவங்களோடு, சரியான உச்சரிப்பு வேறுபாடுகளோடு அதன் கம்பீரம், அழகு இவையெல்லாம் கெடாமல் திரைக்குக் கொண்டுவந்திருக்கும் நடிப்புக்கலைஞர்கள்-
சிவாஜியைத் தவிர எத்தனைப்பேர் இருக்கக்கூடும்?
பாத்திரங்களைத் தத்ரூபமாகப் படைத்துக்காட்டும் எத்தனையோ நடிகர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அந்தப் பாத்திரங்கள் போலவே அவர்களால் வாழ்ந்துகாட்ட முடியும்.
ஆனால் தாய்மொழியைக்கூட சரிவர உச்சரிக்க முடியாது அவர்களால்.
நடிப்பை மறைத்துவிட்டு அவர்கள் பேசும் மொழியை மட்டும் கேட்டால் அவர்கள் பேசுகிறார்களா அழுகிறார்களா என்பது தெரியாது.
ஒன்று, குரலில் எந்தவித பாவங்களும் இருக்காது.
அல்லது வேண்டிய அளவில் அந்த பாவங்கள் அங்கே வெளிப்பட்டிருக்காது.
ஆனால்
நவரசத்தில் எத்தனை பாவங்கள் உள்ளனவோ அவை அத்தனையையும் பேச்சிலும் அதன் உச்சரிப்பிலும் கொண்டுவந்தவர் சிவாஜி.
அழுகையின் ஜீவனாகட்டும்,
உறவுகளின் நெகிழ்ச்சியாகட்டும்,
வலியின் வேதனையாகட்டும்,
ஆனந்தத்தின் சிதறலாகட்டும்,
பாசத்தின் துடிப்பாகட்டும்,
வீரத்தின் கூர்மையாகட்டும்,
வெற்றியின் ஓங்காரமாகட்டும்,
எஜமானின் மிரட்டலாகட்டும்,
அடிமைகளின் குழைவாகட்டும்,
ஒரு இனத்தின், சமூகத்தின், கலையும் கலாச்சாரத்தையும் இலக்கியங்களையும் காப்பாற்ற வேண்டியதும் அரசாங்கத்தின் கடமைதான்.
இந்த விழுமியங்களுக்குப் பங்களிப்பவர்களைச் சிறப்பித்து கௌரவிப்பதும் அரசாங்கத்தின் கடமைதான்.
அண்ணாவுக்கு ஆயிரக்கணக்கில் சிலைகள் இருக்கின்றன; பெரியாருக்கு, எம்ஜிஆருக்கு, மற்றவர்களுக்கு நூற்றுக்கணக்கில் சிலைகள் உள்ளன.
கலையின் உச்சம் தொட்ட சிவாஜிக்கு திருச்சியில் ஒரு சிலை...
சென்னையில் வைத்த சிலையைப் போக்குவரத்துக் காரணம் காட்டி அகற்றினார்கள்.
தமிழ்நாடு ஒரு மகா கலைஞனைக் கொண்டாடும் லட்சணம் இது.
அந்தக் கலைஞனுக்கு மென்மேலும் சிறப்புகள் செய்து கொண்டாடாவிட்டாலும் போகிறது.
அவமானப்படுத்தாமலாவது இருங்கள்.
சிவாஜியைப் பற்றி நடிகர் சிவகுமார் எழுதிய ஒரு புதுக்கவிதை நினைவு வருகிறது. சிவாஜி யார் என்பதை அறிந்துகொள்ள அந்தக் கவிதை உதவும்.
பள்ளிப் படிப்பில்லை
பரம்பரைப் பெருமையில்லை
இளமையில் வறுமையை
இறுகத் தழுவியவன்……………
ஆயினும்-
கலையுலகின் நாயகியை
கலைவாணி ஆசியினை
வரமாய்ப் பெற்றுத் திரையுலகில்
வரலாறு படைத்திட்டான்.
ஒரு சாண் முகத்தில்
ஓராயிரம் பாவங்காட்டி
சிங்கக் குரலில்
தீந்தமிழ் வசனம் பேசி
அவன் படைத்த பாத்திரங்கள்
திரையில்
அசைகின்ற ஓவியங்கள்……………….
கர்ணனாக,கட்டபொம்மனாக,
சிவாஜியாக,செங்குட்டுவனாக,
அரிச்சந்திரனாக,அசோகனாக,
அப்பராக,ஐந்தாம் ஜார்ஜாக,
பாரதியாக,பொற்கைப் பாண்டியனாக,
வ. உ .சியாக, வாஞ்சியாக -
அவன் ஏற்ற வேடங்கள்
எங்களுக்குப் பாடங்கள்.
நடக்கும் நடையில்
நானூறு வகைக் காட்டினான்.
மரமேறிக்கு ஒரு நடை-
மனோகரனுக்கு ஒரு நடை-
சட்டிசுட்டதடா பாடலுக்கு ஒரு நடை-
போனால் போகட்டும் போடாவுக்கு ஒரு நடை-
மொத்தத்தில் நவரசங்களையும் நமக்கு
நவராத்திரியில் காட்டிவிட்டான்.
கிறிஸ்துவுக்கு முன் - கிறிஸ்துவுக்குப் பின் - என்று
மானிட வரலாறு தொடர,
சிவாஜிக்கு முன்-
சிவாஜிக்குப் பின் - என்று
தமிழ்த்திரையுலக வரலாறு தொடரும்
#வாழ்க_சிவாஜி.
படித்ததில் பிடித்தது.
கட்டுரையாளர்;பெ.சங்கர் . ஆசிரியர்.
செந்துறை .
No comments:
Post a Comment