KAMARAJ DEATH - CHO
காமராஜர் மறைவையொட்டி துக்ளக் இதழில் ஆசிரியர் சோ அவர்கள் எழுதிய தலையங்கம் !!(நாம் இப்போது நினைப்பதை அப்போது வெளிப்படுத்திய சோ )
துக்ளக் ஆசிரியர் திரு. சோ அவர்களின் தங்கப்பதக்கம் ' திரைப்பட நகைச்சுவையாகட்டும், அவருடைய அரசியல் நையாண்டி " துக்ளக் " திரைப்படமும் சரி கடந்த காலம், நிகழ் காலம், எக்காலத்துக்கும் பொருந்துபவையாகவே உள்ளது,
பெருந்தலைவர் திரு. காமராஜர் மரணத்தின் போது அவர் எழுதிய இரங்கல் கட்டுரை இதோ,
''இனிமேல் என்ன இருக்கிறது?" என்ற கேள்விதான் மற்ற எல்லாக் கேள்விகளையும்விட முதலில் எழுந்தது . மீண்டும் மீண்டும் எழுகிறது.
யாராலும் இட்டு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் தோன்றிவிட்டது என்ற எண்ணம்தான் மேலிடுகிறது...
மனம் சாய்ந்தபிறகுதான் சாய்ந்தது அந்த உடல். சந்தேகமில்லை. அந்த மனத்தைச் சாய்த்தவர்கள் பலரும் ஒன்றுகூடி சாய்ந்துபோன உடலுக்கு மரியாதை செலுத்தினோம். வாழும்போது அவர் மனத்துக்கு நாம் செய்த தவறுகளைப் பொறுத்துக்கொண்ட அந்த மனிதன், செத்த பிறகு அவர் உடலுக்கு நாம் செய்த மரியாதையையும் பொறுத்துக்கொண்டார் என்ற நினைப்புத்தான் நெஞ்சை அழுத்துகிறது.
''ஒரு சரித்திரம் முடிந்தது" என்று சொல்வார்கள் . "ஒரு சகாப்தம் முடிந்தது" என்று சொல்வார்கள். "ஒரு தியாக பரம்பரை முடிந்தது'' என்று சொல்வார்கள் . ''எல்லாமே முடிந்துவிட்டது" என்று சொல்வதுதான் உண்மையோ என்ற சஞ்சலம் வாட்டுகிறது.
மனவேதனை பெரிதாக இருக்கிறதென்றால் , வெட்கமும் அவமானமும் அதைவிடப் பெரிதாக இருக்கிறது. துக்கம் பெரிதாக இருக்கிறதென்றால் , விரக்தி அதைவிட அதிகமாக இருக்கிறது.
வருடத்திற்கு ஒருமுறை நாம் நினைத்துப்பார்க்கும் நல்லவர்கள் பட்டியலில் அவரும்
சேர்ந்தாகிவிட்டது. நாம் நினைத்துப்பார்க்கும் நம் வயிறுகள் மிஞ்சியிருக்கின்றன. கோடானுகோடி வயிறுகளின் நினைப்பையே தனது மனத்தில் நிறுத்தியிருந்த அந்த மனிதர் போய்ச்சேர்ந்துவிட்டார்.
மற்றவர்களையெல்லாம் வாழவைக்க நினைத்த அந்த மனிதனை , வாழவேண்டிய விதத்தில் வாழவைக்காதவர்கள் எல்லாம் சேர்ந்து "வாழ்க'' என்ற கோஷம் வானதிரக்கிளப்பி , அவரை வானுலகிற்கு அனுப்பிவிட்டோம்.
நேர்மை விடைபெற்றுக்கொண்டுவிட்டது. பொதுப்பணி , சொல்லிக் கொள்ளாமலே புறப்பட்டுவிட்டது. தியாகம், நமது நன்றி தேவையில்லை என்ற எண்ணத்தில் நம்மைவிட்டு எங்கோ மறைந்துவிட்டது.
திரு.காமராஜ் அவர்களின் மறைவு நம்மை ஒரு சூன்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதை இப்போது நாம் உணரமாட்டோம். வருங்காலத்தில் "அவர்மட்டும் இப்போது இருந்திருந்தால்...!" என்ற வருத்தம் அடிக்கடி தோன்றத்தான் போகிறது. சந்தேகமில்லை.
காலம் நமக்குப்புகட்டாத பாடத்தை , காலதேவன் நமக்கு சொல்லிக் கொடுத்துவிட்டான். ''எடுத்துச் செல்கிறேன் இவரை! அனுபவியுங்கள் இனி!" என்று சாபமிட்டிருக்கிறான் காலதேவன். செய்த தவறுகளுக்கெல்லாம் அனுபவிப்போம்.... நமக்கு வேண்டியதுதான்.
யாரும் , யாருக்கும் அனுதாபம் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை. சொல்லவேண்டிய அனுதாபங்களை நமக்கு நாமே சொல்லிக்கொள்வோம். அழவேண்டிய அழுகைகளை நமக்கு நாமே அழுதுகொள்வோம். அனுபவிக்கவேண்டிய தண்டனைகளை இனி நாம்தானே அனுபவிக்கப்போகிறோம்?
இனி நம்மால் அவரை வேதனைப்படுத்த முடியாது. இனி நம்மால் அவரை அவமானப்படுத்த முடியாது. பட்டதுபோதும் என்று போய்விட்டார் அந்த நல்ல மனிதர்.... படவேண்டியது இனி நாம்தான்...
- காமராஜர் மறைவையொட்டி துக்ளக் இதழில் ஆசிரியர் சோ அவர்கள் எழுதிய தலையங்கம்..வலைச்சேரிப்பட்டி கோனார்.வாட்ஸ் அப்பில் வந்தது.
No comments:
Post a Comment