Monday 7 September 2020

.தீபாவளி சிவகாசி பட்டாசுகள் : DEEPAVALI CRACKERS







DEEPAVALI CRACKERS
.தீபாவளி சிவகாசி பட்டாசுகள் : 

தீபாவளி என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது தீபாவளி பட்டாசுகள் தான். சமீப காலமாக சீனப்பட்டாசுகளின் வரத்து இந்தியாவிற்குள் அதிகரித்து வந்த காரணங்களால் சிவகாசி பட்டாசுகளின் பெருமையும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத்தான் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் பெருமளவில் பட்டாசுகள் உற்பத்தி செய்வது சிவகாசியில் தான்.

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் இந்த பகுதியில் பட்டாசு உற்பத்திக்கென ஆலைகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சில நேரங்களில் முறையான பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்ய நேரிடும் காலங்களில் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படுவதும் வழக்கமான கதைகளில் ஒன்றாகிப் போனது.

ஆனால் இந்திய அளவில் சிவகாசி பட்டாசுகள் புகழ்பெற்று இருந்தது என்பதிற்கு மறுப்புகள் ஏதும் இல்லை. சிவகாசி பட்டாசு மற்றும் அதன் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து ஒரு பார்வை.

பட்டாசு வரலாறு
ஆரம்ப காலங்களில் இருந்தே, இந்தியாவிற்கு சிவகாசி எப்படியோ, உலகிற்கு சீனா பட்டாசு உற்பத்தியில் முன்னோடி. சீனப் பகுதிகளில் காய்ச்சப்படும் உப்பில் அதிக அளவு பொட்டாசியம் நைட்ரேட் மிகுந்திருந்தது. அந்த உப்பை சமையலுக்கு பயன்படுத்திய போது சில உப்புகள் நெருப்பில் விழுந்து வெடிக்கத் தொடங்கின. பொறிகளை எழுப்பி அடங்கிய அந்த ஒளி மிகவும் பிரகாசமாகவும், கண்ணைக் கவரும் வகையில் இருப்பதையும் கண்டறிந்தனர்.

பின்னாட்களில் அந்த உப்பினை பயன்படுத்தி பல்வேறு விதமான கண்கவர் ஒளிகளை உருவாக்கினர். அதே உப்பினை மூங்கில் குருத்துகளில் அடைத்து பட்டாசு என்ற உருவாக்கத்தினை கண்டடைந்தனர். மூங்கில் குருத்தில் வெடிப் பொருட்களை அடைத்துவைத்து வெடித்த போது மிகவும் சத்தமாக வெடித்துச் சிதறியது பட்டாசு. சீனாவிற்கு சென்று வந்த பயணிகள் வழியாக இந்த இந்த பட்டாசு பொருட்களின் ரகசியங்கள் வெளி உலகிற்கு பரவின. இந்தியாவிலும் பரவியது.

சிவகாசி பட்டாசு
சிவகாசியில் இருந்து கொல்கத்தா மற்றும் கேரள மாநிலத்தில் இருக்கும் திருச்சூர் பகுதிகளுக்கு சென்று பட்டாசுகள் எப்படி தயாரிக்கப்படுகிறது எனபதை முறையாக கற்றுக் கொண்டு பின்னர் சிவகாசியில் பட்டாசுகள் தயாரிக்கத் தொடங்கினர்.

ஆரம்ப காலத்தில் தீப்பெட்டி தயாரிக்கும் பணிகள் தான் அங்கு மும்பரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பின்னர் மத்தாப்பூக் கம்பிகள் அறிமுகமாயின. அதன்பின்பு தான் ஓலை வெடி, சரவெடி, சங்கு சக்கரம், பூச்சட்டி போன்ற வெடிகள் ஒன்றன் பின் ஒன்றாக சிவகாசி பட்டாசு ஆலைகளில் உருவாக்கப்பட்டன.

பட்டாசு ஆலைகள் – சிவகாசி மக்களின் வாழ்வாதாரம்
ஒருநாள் கொண்டாடத்திற்காக ஓராண்டுகள் முழுக்க உழைத்துக் கொண்டிருக்கும் இம்மக்களிற்கும், இம்மண்ணிற்கும் பின்னால் 5 லட்சம் பேரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது இந்த தொழில். விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பட்டாசுத் தொழிலில் ஆரம்ப காலகட்டங்களில் பொதுமக்கள் அதிகம் பேர் ஈடுபட்டு வந்தனர்.

அப்பகுதியில் நிலவி வந்த வறட்சி, மழையின்மை ஆகியவற்றின் காரணமாக விவசாயத்திற்கு மாற்றாக மக்கள் பட்டாசு உற்பத்தி தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். அதிக அளவில் மக்கள் அந்த தொழிலில் ஈடுபட பட்டாசு ஆலைகள் அதிகமாக அங்கு உருவாகியது.

அங்கு பட்டாசு ஆலைகளில் வேலை பார்த்து வரும் மக்களுக்கென தனியாக பள்ளி கல்லூரிகளை உருவாக்கியுள்ளனர் அந்த ஆலைகளை நடத்திவரும் முதலாளிகள்.

தற்போதைய நிலை

ஒரு நாள் கொண்டாட்டமே என்றாலும், ஒரு வருடம் அதற்காக உழைத்துக் கொண்டே இருக்கும் ஓய்வறியா மனிதர்களை கொண்ட ஊர் சிவகாசி. செல்லமாக குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் இப்பகுதியின் பட்டாசுகள் தனித்துவம் மிக்கவையாக இருக்கிறது. ஆனாலும் பல்வேறு தடைகளை தாண்டி முன்னேறி வருவதற்குள் பட்டாசுகளையே வாழ்க்கையாக கொண்டிருப்பவர்களின் நிலை மோசமடைந்து வருகிறது.

சீனப்பட்டாசுகள் வரத்து, முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமையால் அடிக்கடி நடைபெறும் விபத்துகள், பட்டாசுகள் வெடிக்கத் தடை, இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு போன்ற நிபந்தனைகளால் இவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
💥🗯️💥🗯️💥🗯️💥🗯️💥🗯️💥🗯️💥🗯️💥

தீபாவளி என்றாலே பட்டாசுதான் நமக்கெல்லாம் முதலில் ஞாபகம் வரும். தீபாவளி தவிர்த்து புதுப்படம் ரிலீஸ், திருமண வீடு, அரசியல் கொண்டாட்டம் என எதுவாக இருந்தாலும் பட்டாசு இல்லாமல் முழுமை பெறாது. இப்படி எந்தக் கொண்டாட்டம் என்றாலும் பட்டையைக் கிளப்பும் பட்டாசு எப்படி உருவானது எனத் தெரிந்து கொள்ளலாமா ?

ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்ப அதன் கனிமமும்,வேதிப்பொருளும் மாறுபடும்.அதன்படி சீனாவில் பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட உப்பில் (பொட்டாசியம் நைட்ரேட்) அதிகளவில் இருந்துள்ளது. தவறுதலாக இது நெருப்பில் படும்போதெல்லாம் தீ ஜுவாலை ஏற்பட்டது.இதனை ஆராய்ந்த சீனர்கள் அதனை மேம்படுத்தி பட்டாசை உருவாக்கினர். அக்காலத்தில் மூங்கிலை வெட்டி அதனுள் வெடி மருந்தை நிரப்பி பட்டாசு உருவாக்கப்பட்டது. நீண்ட காலம் சீனா இந்த ரகசியத்தை யாருக்கும் தெரியாமல் பாதுகாத்தது.போருக்கு மட்டுமே சீனர்கள் இதனைப் பயன்படுத்தி வந்தார்கள்.

பதிமூன்றாம் நூற்றாண்டில் சீனாவில் ஊடுருவிய மங்கோலியர்கள் பட்டாசை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர்.போர்களின் போது எதிரிகளைப் பயமுறுத்தவும்,அவர்களுக்குத் தீக்காயம் ஏற்படுத்தவும் இதனைப் பயன்படுத்தினர்.இயல்பாகவே மங்கோலியர்கள் வில்வித்தையில் சிறந்தவர்கள். எனவே அதோடு பட்டாசையும் சேர்த்து தங்களின் அம்புகளில் பொருத்தி எதிரிகளைப் பெருமளவில் கொன்று குவித்தனர்.

இதைப் பார்த்த மற்ற நாடுகளும் பட்டாசு தயாரிப்பை அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டினார்கள். அதற்குள் சீனாவிலும் பட்டாசு பல வகைகளில் முன்னேற்றம் அடைந்து உருமாறி இருந்தது. அதை எப்படித் தயாரிப்பது என்பதை அறிந்து கொள்வதற்கு அரேபியர்கள் அலாதி ஆர்வம் கொண்டிருந்தார்கள். அந்த முயற்சியில் சிறிது வெற்றியும் பெற்றனர். அதன் பிறகு அவர்கள் மூலமாக அரேபியா,ஐரோப்பா என உலகில் பிற பகுதிகளுக்கும் பட்டாசு பரவத் தொடங்கியது. நாம் இன்று பயன்படுத்தும் நவீன கால பட்டாசின் தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் தொடங்கியது. உலகில் சீனா பட்டாசு வர்த்தகத்தில் தனி இடம் பெற்றுள்ளது.இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் உள்ள 'சிவகாசி' பட்டாசு தயாரிப்புக்கென பிரதான இடமாக விளங்குகிறது.1930களில் தான் இங்குப் பட்டாசு தயாரிக்கும் தொழில் ஆரம்பித்தது. மிகக் குறுகிய காலத்திலேயே தனித்தன்மையுடன் சிவகாசி பட்டாசு தயாரிப்பில் முதன்மையாக விளங்குகிறது. ஒரு வருடத்திற்குச் சராசரியாக இரண்டாயிரம் கோடி அளவிற்கு நம் இந்தியாவில் பட்டாசு வர்த்தகம் நடைபெறுகிறது.இதன்மூலம் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் அடைகின்றனர்.உலகளவில் சில பில்லியன் டாலருக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. நம் இந்தியா மட்டுமின்றி உலகளவில் அனைத்து நாடுகளிலும் பட்டாசு வெடிப்பது என்பது மிகப் பிரபலமான பொழுதுபோக்காகும். தீபாவளியைத் தவிர்த்து மற்ற எந்தெந்த பண்டிகைகளில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர் எனப் பார்க்கலாம்.

சீனப் புத்தாண்டு(chinese new year)

பட்டாசு வெடிக்காமல் சீனர்களால் அவர்களின் புத்தாண்டை கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாது.தனியாக மட்டுமின்றி குழுவாகவும் அவர்கள் வெடி வெடித்துக் கொண்டாடுவர் .ஒவ்வொரு வருடமும் பட்டாசு வெடிப்பதற்காகவே சீனர்கள் தங்களின் புத்தாண்டை எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள்.

அமெரிக்க சுதந்திர தினம் (American independence day)

அமெரிக்கர்கள் ஒவ்வொரு வருடமும் தங்களின் சுதந்திர தினத்தினை மிக விமர்சையாக கொண்டாடுபவர்கள். அப்பொழுது அமெரிக்கா உலக அரங்கில் வல்லரசாக எப்படி ஒளிர்கிறது என்பதை உணர்த்தும் பொருட்டு பெரிய அளவில் வான வேடிக்கை நிகழ்வை நடத்துவார்கள்.

கைய் பாக்ஸ் திருவிழா(Guy Fawkes night)

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 5 தேதி இத் திருவிழா கொண்டாடப்படுகிறது.1605 ஆண்டு 'முதலாம் ஜேம்ஸ் அரசரை' கொல்ல சதி நடந்தது. அதனை முறியடித்து அரசாட்சியைக் காப்பாற்றினர். இந்நிகழ்ச்சியில் பட்டாசு வெடிப்பது மட்டுமின்றி கொடும்பாவிகளையும் சேர்த்து எரிப்பார்கள்.

யான்சு திருவிழா (yanshui fireworks festival)

தைவானில் யான்சு மாகாணத்தில் இத் திருவிழா கொண்டாடப்படுகிறது.சீன யுத்த கடவுளான 'குவாங் யு'வை வழிபடும் பொருட்டு இது கொண்டாடப்படுகிறது. மற்ற விழாக்களில் ஒரு பகுதியாக வெடி வெடிப்பர் ஆனால் வெடி வெடிப்பதற்காகவே திருவிழா நடை பெறுகிறது என்றால் அது இங்குதான்."உலகின் மிக ஆபத்தான வெடி திருவிழா" எனப் பெயர் பெற்றுள்ளது.
.

No comments:

Post a Comment