Sunday 1 October 2017

SIVAJI GANESAN சிவாஜி கணேசன் , திரை வானில் தோன்றிய வசந்த நிலா பிறப்பு அக்டோபர் 1,1927




SIVAJI GANESAN 

சிவாஜி கணேசன் ,
திரை வானில் தோன்றிய வசந்த நிலா
பிறப்பு அக்டோபர் 1,1927

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஸ்டுடியோ அதிபர், ஏவி.எம்.குமரன்; தன் தந்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கும், தனக்கும், சிவாஜி கணேசனுடன் ஏற்பட்ட சுவையான சம்பவங்களை, 'வாரமலர்' வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறார்:
என் தந்தையின் நெருங்கிய நண்பர், பி.ஏ.பெருமாள் முதலியார். என்.எஸ்.சி., எனப்படும் நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு, செங்கல்பட்டு போன்ற பெரிய ஏரியாக்களின், வெற்றிகரமான திரைப்பட வினியோகஸ்தர்.
ஒருமுறை, 'பராசக்தி என்று ஒரு நாடகம் பார்த்தேன்; நல்ல கதை. அதை திரைப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும்...' என்று, என் தந்தையிடம் சொன்னார், பெருமாள்.
'பெரிய வினியோகஸ்தரான நீங்க, ஒரு கதைய தேர்ந்தெடுத்து, இது படமாக வந்தால் நன்றாக இருக்கும்ன்னு நினைக்கும்போது, எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஸ்டுடியோ சம்பந்தப்பட்ட எல்லா உதவிகளையும் செய்வதோடு, தலைமை தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஏற்பாடு செய்து தர்றேன்...' என்று உறுதியளித்தார், என் தந்தை.

ஏவி.எம்., நிறுவனமும், பி.ஏ.பெருமாளின் நேஷனல் பிக்சர்சும் இணைந்து ,கூட்டுத் தயாரிப்பில் உருவானது தான், பராசக்தி திரைப்படம்.
இயக்குனராக கிருஷ்ணன் - பஞ்சு; வசனகர்த்தா மு.கருணாநிதி, இசையமைப்பாளர், ஆர்.சுதர்சனம், ஒளிப்பதிவாளர் மாருதி ராவ் மற்றும் அரங்க அமைப்பு பாலு போன்றோர், இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். படப்பிடிப்பு ஆரம்பமாகி, நல்ல முறையில் நடைபெற்று வந்தது.
இப்படம் கூட்டுத் தயாரிப்பு என்பதால், குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், அதைப் போட்டுப் பார்த்து, நிறை, குறைகளைக் கண்டு, அதற்கேற்ப, மேற்கொண்டு படப்பிடிப்பை தொடர்வது, என் தந்தையின் பழக்கம். எடுத்தது வரை, படத்தை போட்டுப் பார்த்ததில், சிவாஜி கணேசனின் தோற்றத்தில் திருப்தி ஏற்படவில்லை, என் தந்தைக்கு!
பெருமாள் மற்றும் கிருஷ்ணன் - பஞ்சு ஆகியோரை அழைத்து, 'என்னப்பா இது... இந்த பையன் எலும்பும் தோலுமாக இருக்கிறார்; இவரைப் போட்டு படம் எடுத்தால் சரியா வருமா... வியாபாரம் செய்ய முடியுமா... பேசாமல், எடுத்தவரை, 'கேன்சல்' செய்துட்டு, அண்ணாதுரை கதை வசனத்தில், வேலைக்காரி படத்தில் நடித்திருக்கும், கே.ஆர்.ராமசாமிய நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும்; அவருக்கு பேரும், புகழும் வேற இருக்கு...' என்றார். 
ஏவி.எம்.,மே இப்படி சொல்கிறாரே, எப்படி மறுத்து பேசுவது என்று, மூவரும் தயங்கினர்.
ஆனாலும், இயக்குனர் பஞ்சு, 'இந்தப் பையன், கருணாநிதி வசனத்தை, ரொம்ப அருமையா பேசியிருக்கார். இப்ப நீங்க பார்க்கிற கணேசனை வச்சு சொல்லாதீங்க. இவரு, 'டிராமா'விலிருந்து சினிமாவுக்கு வந்திருக்காரு. நாடகத்தில நடிச்சிட்டிருந்தபோது, வசதியா சாப்பிட்டிருக்க மாட்டார். அது தான் மெலிஞ்சு இருக்கார். 
ஏவி.எம்., ஸ்டுடியோவிலேயே ஒரு அறையை ஒதுக்கி கொடுங்க. மூணு மாசம் அங்கேயே தங்கி, வேளா வேளைக்கு சத்தான உணவா சாப்பிட்டு, நிம்மதியா உடம்பை கவனிச்சிக்கட்டும். அதன் பின், படப்பிடிப்பை வைச்சுக்கலாம். அதுக்குபிறகும் உங்களுக்கு திருப்தியில்லன்னா, என்ன செய்யலாம்ன்னு பார்ப்போம்...' என்றார்.
என் தந்தைக்கும் அது சரி என்று படவே, ஏவி.எம்., வளாகத்தில் கணேசனுக்கு அறை ஒதுக்கி தந்தார். அத்துடன், அந்த மூன்று மாதங்களும், உடம்பை தேத்துவதைத் தவிர, வேற வேலையை செய்ய கூடாது என்று கூறிவிட்டார்.
மூன்று மாதங்களுக்குப் பின், கணேசன் நடித்த அந்த காட்சிகளை, மறுபடியும் எடுத்துக் காட்டினர். 'பையன் பூசின மாதிரி இருக்கார்; பிரமாதமாக பேசி நடித்திருக்கிறார்...' என்று என் தந்தை சொல்ல, மொத்த படக் குழுவினரும் சந்தோஷப்பட்டு, விரைந்து படப்பிடிப்பை முடித்தனர்.
கிருஷ்ணன் - பஞ்சுவின் பிடிவாதம், பி.ஏ.பெருமாளின் ஒத்துழைப்பு, கருணாநிதியின் சம்மதம் இவற்றுடன் ஏற்கப்பட்ட நாடக நடிகர், கணேசன், பராசக்தி படத்தின் மூலம், திரை உலகின் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறி, சிவாஜி கணேசன் என்று மறுபிறவி எடுத்து, சரித்திரம் படைத்தார்.
கடந்த, 1951ல், பிரபல இயக்குனர், அகிராகுரோஸாவா இயக்கிய, ரோஷோமேன், உலக அளவில் எல்லாராலும் புகழப்பட்ட வெற்றிப் படம். 'அப்படத்தின் பாணியில், நான் ஒரு கதை எழுதியிருக்கேன்; நீங்க விரும்பினால், இதை, உங்கள் பேனரில் படமாக்கலாம்...' என்று, என் தந்தையிடம் சொன்னார், பிரபல வீணை வித்வானும், இயக்குனருமான, 
எஸ்.பாலச்சந்தர். ஏற்கனவே, அப்படத்தை ஜப்பானில் பார்த்திருந்தார், என் தந்தை. பாலச்சந்தர் சொன்ன கதையும் பிடித்திருந்ததால் சம்மதம் தெரிவித்தார்.
படம் கால் பாகம் முடிந்த நிலையில், எடுத்தவரை போட்டுப் பார்த்ததில், என் தந்தைக்கு திருப்தி இல்லை. 'நீங்க என்னிடம் கூறிய கதையில் இருந்த விறுவிறுப்பு, த்ரில், இந்த காட்சிகளில் இல்லயே... விஸ்வநாதனின் நடிப்பும், கதைக்கேற்றபடி சோபிக்கவில்லயே...' என்றார்.
இதை சற்றும் எதிர்பாராத இயக்குனர், 'கோல்கட்டா, விஸ்வநாதன் சிறந்த நடிகர்; கோல்கட்டாவில் நாடக மேடைகளிலும், திரைப்படங்களிலும் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது...' என்றார்.
'வங்கத்தில் அவர் புகழ் பெற்றவராக இருக்கலாம்; தமிழகத்தில் பேர் எடுக்கும் அளவுக்கு அவர் நடிப்பு இல்லயே... கணேசனைப் போட்டு, இந்தப் படத்தை எடுங்கள்; படம், நன்றாக, விறுவிறுப்பாக அமையும்...' என்றார், என் தந்தை.
எந்த, கணேசனின் தோற்றம் சரியில்லை என்று மாற்றச் சொன்னாரோ, அதே, கணேசனைப் போட்டு படம் எடுத்தால், படம் நன்றாக அமையும் என்று, கணேசனுக்கு பரிந்து பேசினார், தந்தை.
ஜாவர் சீதாராமன் சொன்ன சில மாறுதல்களை செய்து, கணேசனை நடிக்க வைத்து, படம் முடிக்கப்பட்டது. ஆரம்பித்த போது, 'ஒரு நாள்' என்று இருந்த பெயர், பின் மாற்றப்பட்டு, அந்த நாள் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
அக்காலத்தில், பாடல்கள் இல்லாமல் படம் எடுப்பது மிகவும் அரிது. ஆனால், இப்படம், பாடல்களே இல்லாமல் உருவானது. ஒளிப்பதிவு அமைப்பிலும், கேமரா நகர்விலும் புதிய பாதையை அமைத்ததை பத்திரிகைகள் பெரிதும் பாராட்டின.
கதாநாயகனாக நடிக்கத் துவங்கியிருந்த கணேசன், இப்படத்தில் வில்லனாக நடித்து, நடிப்பில் புதிய பரிமாணத்தை வெளிக்காட்டி, பேரும், புகழும் பெற்றார். ரிலீசான நேரத்தை விட, இந்தப் படம், அடுத்தடுத்து வெளியான நேரங்களில், பெரிய வெற்றியை அடைந்தது.



சிவாஜியின், 125வது படம், உயர்ந்த மனிதன்! தன், 125வது படம், ஏவி.எம்., நிறுவனத்தால் தயாரிக்கப்பட வேண்டும் என்ற தன் ஆசையை, என் தந்தையிடம் தெரிவித்திருந்தார், சிவாஜி கணேசன். அந்தப் படத்தை சிறப்பாக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கிருஷ்ணன் - பஞ்சு, ஜாவர் சீதாராமன், உதவி இயக்குனர்கள், கதாசிரியர்கள் எல்லாரையும் அழைத்து, 'சிவாஜிக்கு ஏற்ப நல்ல கதை வேண்டும்...' என்றார், என் தந்தை. 
அப்போது, வங்க மொழியில் ரிலீசாகி, வெற்றிகரமாக ஓடும், உத்தர் புருஷ் என்ற திரைப்படத்தைப் பற்றி அறிந்து, அப்படத்தை சென்னைக்கு வரவழைத்து பார்த்தோம்; கதை எல்லாருக்கும் பிடித்திருந்தது. தமிழ் கலாசாரத்துக்கு ஏற்ப, சில மாறுதல்கள் செய்யப்பட்டன. கதையைக் கேட்டதும், உடனே கால்ஷீட் கொடுத்து விட்டார், சிவாஜி.
கதையில், சிவாஜியும், மேஜர் சுந்தர்ராஜனும் சிறு வயது நண்பர்கள்; பெரும் செல்வந்தர், சிவாஜி. அவர் வீட்டு கார் டிரைவர், மேஜர்.
மலை பகுதி சாலையின் வழியாக வரும் போது, 'நாம் சின்ன வயசில் பள்ளிக்கு செல்லும் போது, நடந்த நிகழ்ச்சிகள் எனக்கு ஞாபகத்திற்கு வந்து விட்டன...' என்று சொல்லி, மனம் விட்டு சிரிப்பார், சிவாஜி. 'இந்த இடத்தில் ஒரு பாடல் வந்தால் நன்றாக இருக்கும்...' என்று, சொன்னார்கள், கிருஷ்ணன் - பஞ்சு. அக்கருத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டோம். 'என்ன மாதிரி பாட்டு அமைய வேண்டும் என்று ஒரு, 'க்ளூ' கொடுங்கள்...' என்று கேட்டார், 
எம்.எஸ்.விஸ்வநாதன்.
அப்போது சபையர் தியேட்டரில், மை பேர் லேடி என்ற படம் ஓடியது. அப்படத்தில், மலை அடிவாரத்தில், கதாநாயகன் ரெக்ஸ் ஹாரியன், கையில் ஒரு ஸ்டிக்கை வைத்து, அதைச் சுழற்றி, பேசியபடியே வருவார், சிரிப்பார், பாடுவார், ஓடுவார்; பார்க்க நன்றாக இருக்கும். அக்காட்சி என் நினைவுக்கு வந்தது. எம்.எஸ்.வி.,யிடம் விவரமாக சொன்னேன். 'வாலியை வரச் சொல்லுங்கள்; உட்கார்ந்து பேசி, 'கம்போஸ்' செய்துடுவோம்...' என்றார்.
ஏவி.எம்., நிறுவனம் தயாரிக்கும் படங்களில், இசை அமைப்பாளரோடு உட்கார்ந்து விவாதிப்பது, டியூன் போட வைப்பது, டியூனை, 'அப்ரூவ்' செய்வது, ஓ.கே., செய்வது இவை எல்லாம் என்னுடைய பொறுப்புகள்.
கவிஞர் வாலி வந்ததும், கதையில் பாடல் வரும் இடத்தைச் சொன்னோம். 'அந்த நாள் ஞாபகங்களை, நண்பரிடம் சொல்லி பாடுகிறார் சிவாஜி. இடையிடையே, அந்த நிகழ்ச்சிகளை வசனமாகவும் பேசுகிறார். அந்த வசனங்களையும், நீங்கள் தான் எழுத வேண்டும். இப்படி ஒரு பாடல் வேண்டும்...' என்று சொன்னேன்.
நாங்கள் சொன்ன முதல் வாக்கியத்தையே முதல் அடியாக வைத்து, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, நண்பனே நண்பனே... என்று பாடல் வரிகளை சொல்ல, அதை பாடிக் காண்பித்தார் 
எம்.எஸ்.வி., 'கம்போசிங்' சிறப்பாக முடிந்தது.
மறுநாள் ரெக்கார்டிங்; இப்போது இருப்பது போல, மல்டி டிராக் ரெக்கார்டிங் சிஸ்டம் கிடையாது; சிங்கிள் டிராக் ரெக்கார்டிங் சிஸ்டம் தான். ஒரே சமயத்தில் பாடலையும், அதன் நடுவே வரும் வசனங்களையும் பேசி, ரெக்கார்டிங் செய்ய வேண்டும். ஒரு மைக்கில், டி.எம்.எஸ்., பாட, மற்றொரு மைக்கில், சிவாஜியும், மேஜரும் ஜோடியாக நின்று வசனம் பேச, ரெக்கார்டிங் தியேட்டரில், இசை கலைஞர்கள், இசைக் கருவிகளை வாசிக்க, சிறப்பாக நடந்தது, ரெக்கார்டிங்.
சிவாஜியின், 125வது படமான, உயர்ந்த மனிதன் வெற்றி அடைந்து பேரும், புகழும் பெற்றுத் தந்தது. 
சிவாஜியின், 125வது படமான, உயர்ந்த மனிதன் படத்தை, அவரது முதல் படமான, பராசக்தி படத்தை இயக்கிய, கிருஷ்ணன் - பஞ்சு தான் இயக்கினர்.
கடந்த, 1968ல் தான், பின்னணி பாடகிக்கு விருதை அறிவித்தது, மத்திய அரசு. விருது அறிவிக்கப்பட்ட முதல் ஆண்டே, 1968ல், உயர்ந்த மனிதன் படத்தில், 'நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா...' என்ற, பாடலுக்காக, முதல் தேசிய விருது பெற்றார், பி.சுசீலா.
'ஏவி.எம்., ஒரு செல்லுலாய்டு சரித்திரம்' என்ற பெயரில், தன் தந்தையின் திரைப்பட அனுபவங்களை தொகுத்து, புத்தகமாக வெளியிட்டுள்ளார், 
ஏவி.எம்.குமரன்.
சிவாஜி கணேசனுக்கு, ஏவி.எம்., ஸ்டுடியோவில், ஏ.சி.,யுடன் கூடிய, பிரத்யேக, 'மேக் - அப்' அறை உண்டு.
- எஸ்.ரஜத்

No comments:

Post a Comment