VICTORIA HALL HELPED IN
CONSTRUCTION OF THEATRES
.சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் .......
டவுன் ஹால் என்று அழைக்கப்பட்டது மதராஸின் விக்டோரியா ஹால். சங்கரதாஸ் சுவாமிகளும் பம்மல் சம்பந்த முதலியாரும் நாடகம் நடத்திய ஹால் அது. ஜட்கா வண்டிகள், ரயிலில் வந்திறங்கி சிலுசிலு கடற்கரைக் காற்றை அனுபவித்தபடி அந்த ஹாலில் விடிய விடிய நாடகம் பார்ப்பது அன்றைய மதாராஸ்வாசிகளுக்கு ஆனந்த அனுபவமாக இருந்திருக்கிறது.
ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்கள் ‘ஷேக்ஸ்பியர் வீக்’ என்ற நாடகத் திருவிழாவாக இங்கே நிகழ்த்தப்பட்ட வரலாறும் உண்டு. அரங்கம் நிரம்பி வழிய பாரதியும் விவேகானந்தரும் கோபால கிருஷ்ண கோகலேவும், வல்லபாய் படேலும் பேசிய பெருமைக்குரிய இடம் இது. இன்று பயன்பாடற்றுச் சிதைந்துகொண்டிருக்கும் வரலாறாக, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை எதிரே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நிற்கிறது.
விக்டோரியா ஹாலின் பேசும் சித்திரம்
வெள்ளைக்காரர்களின் பால் ரூம் நடனத்துக்காக இந்தப் பொது அரங்கின் முதல் தளம் ஒதுக்கப்பட்டிருந்தது. இத்தனை பெருமைக்குரிய இந்த டவுன் ஹால், மதராஸின் முதல் திரையரங்கு என நாம் கொண்டாடும் ‘எலெக்ட்ரிக் தியேட்டர்’ உருவாக உந்துதலாக இருந்தது. இவை எல்லாவற்றுக்கும் சிகரம்போல் இந்த விக்டோரியா ஹால் மூலம்தான் தமிழக மக்களுக்கும் அன்றைய சென்னைவாசிகளுக்கும் மவுனத் திரைப்படங்கள் அறிமுகமாகின. நூற்றுக்கணக்கான மவுனத் திரைப்படங்கள் அந்நாட்களில் இங்கே திரையிடப்பட்டன. அப்படிப்பட்ட விக்டோரியா ஹாலில், பேசும்படம் பார்க்கும் உணர்வை, தாம் திரையிட்ட மவுனப் படங்களுக்கு வழங்கினார் ஒரு ஒளிப்படக்காரர். அவர்தான் ரகுபதி வெங்கய்யா நாயுடு என்கிற ஆர்.வெங்கய்யா.
ஆந்திர மாநிலம், இன்றைய கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டினத்தில் பிறந்தவர் வெங்கய்யா. அவரது தந்தையான ரகுபதி பிரிட்டிஷ் ராணுவத்தின் சுபேதாராக இருந்தார். வெங்கய்யாவின் பெற்றோர் மச்சிலிப்பட்டினத்திலிருந்து குடிபெயர, தனது 18 வயதில் மதராஸ் மண்ணில் கால் வைக்கிறார் வெங்கய்யா. ஓவியங்கள், சிற்பங்கள் ஆகியவற்றில் ஆர்வம் மிகுந்திருந்த வெங்கய்யா, தனது இருபதாவது வயதில் அப்பா அளித்த நிதியுதவியுடன் சிறு ஆர்ட் கேலரி ஒன்றைத் தொடங்குகிறார். அதில் ஸ்டில் கேமராவுக்கான சிங்கிள் பிலிம்களை விற்க ஆரம்பித்தார். அதனால் பல ஒளிப்படக் கலைஞர்கள் அவரது வியாபாரத் தலத்துக்கு வந்து சென்றனர். அவர்கள் மூலம் ஒளிப்படக் கலை மீதான ஆர்வம் வெங்கய்யாவுக்குத் தோன்றியது. ஒளிப்படக் கலையைக் கற்றுக்கொண்டு திறமையான போட்டோகிராபராக மாறுகிறார்.
அடமானம்
ஒரு கட்டத்தில் தனது ஆர்ட் கேலரியை போட்டோ ஸ்டூடியோவாகவும் மாற்றிவிடும் அவர், சிறந்த போட்டோகிராபர் என்ற பெயரையும் சம்பாதிக்கிறார். அவரது ஸ்டூடியோ தொழில் வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் மவுனப் படங்களுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. அப்போது ‘க்ரோனோமெகாபோன்' (Chronomegaphone) என்ற ஒலியை வெளிப்படுத்தும் கருவியைப் பயன்படுத்தி மவுனப் படங்களைப் பேசும்படங்கள்போல் காட்டலாம் என்ற செய்தி பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. அதைப் படித்து ஆச்சரியப்பட்ட வெங்கய்யா, அதுபற்றித் தனது மனைவியிடம் பகிர்ந்துகொண்டார். அவரது மனைவியோ “நாம் ஏன் அந்த அந்தக் கருவியை வாங்கக் கூடாது?” என்று கேட்டிருக்கிறார்.
அதன் விலை 30 ஆயிரம் ரூபாய். எனினும் மனைவி தந்த உற்சாகத்தால் உந்தப்பட்ட வெங்கய்யா, தனது போட்டோ ஸ்டூடியோவை அடகுவைத்துக் கடன் வாங்கினார். உபகரணத்துக்கான மொத்தப் பணத்தையும் கட்டி, ஜான் டிக்கென்ஸன் நிறுவனத்தின் மூலம் (John Dickinson and Company) அந்த ஒலிக் கருவியைத் தருவித்தார்.
மவுனப் படமா? பேசும் படமா?
கருவி கைக்குக் கிடைத்ததும் அதை வைத்து அவர் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவில்லை. க்ரோனோமெகாபோன் ஒலிப்பதிவுத் தட்டுடன் இங்கிலாந்தில் அன்று புகழ்பெற்று விளங்கிய 12 துண்டுப் படங்களை வாங்கினார். ‘அன்டர் தி பனாமா’ (Under the Panama), ‘ஸ்விங் சாங்’ (Swing Song), ‘சீ சர்பென்ட்’ (Sea Serpent), ‘ஃபயர்மேன் சாங்’ (Fireman Song), ‘மெகாடோ’ (Micado) உள்ளிட்ட அந்தப் படங்களை விக்டோரியா ஹாலில் திரையிட்டார். திரைக்குப் பின்னால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த க்ரோனோ மெகாபோனிலிருந்து திரையில் படம் தொடங்கும் அதே நேரத்துக்குத் துல்லியமான ஒத்திசைவுடன் (sink) ஒலிக்க விட்டார்.
பார்வையாளர்கள் இந்தப் புதிய அனுபவத்தால் சொக்கிப்போனார்கள். பேசும்படம் பார்ப்பது போன்ற அனுபவத்தை, பேசும்படங்கள் அறிமுகமாவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே பார்வை யாளர்களுக்குக் கொடுத்தார் ஆர். வெங்கய்யா. தனது திரையிடல்கள் சாமானிய மக்களையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்றும் அவர் நினைத்தார். இதனால் தனது க்ரோனோமெகாபோனுடன் சாமானிய மக்களை நாடிச் சென்றார்.
எக்ஸ்பிளனேட் டென்ட்டும் கெயிட்டியும்
அன்று ஆங்கிலேயர்களுக்குக் கலாசி வேலைகளைச் செய்வதற்காகக் குடியேற்றப்பட்ட தொழிலாளர்களும் சென்னையின் பூர்வகுடிகளும் நிறைந்திருந்த எஸ்பிளனேடில் 1910-ல் டென்ட் சினிமா கொட்டகை ஒன்றை அமைத்து அதில் தனது க்ரோனோமெகாபோனுடன் கூடிய துண்டுப் படங்களைத் திரையிட்டார். பின்னர் டென்ட் சினிமாவுடன் தனது சொந்த ஊரான மச்சிலிப்பட்டினம், பெங்களூர், பம்பாய் ஆகிய நகரங்களுக்குப் பயணம் செய்தார்.
தனது பன்னிரெண்டு படங்களும் தேய்மானம் ஏற்பட்டு, திரையில் கோடுகள் அதிகரித்து விட்டதைக் கண்ட வெங்கய்யா, ‘பேர்ல் ஃபிஷர்’ (Pearl Fisher), சிகார் பாக்ஸ் (Cigar Box), ‘ராஜாஸ் கேஸ்கெட்’ (Raja's Casket), ‘பிளாக் பிரின்சஸ்’ (Black princes) ஆகிய புதிய துண்டுப் படங்களைத் தருவித்துக்கொண்டு இலங்கை, பர்மா உட்படப் பல நாடுகளுக்குச் சென்று திரையிட்டுப் பெரும்பொருள் ஈட்டினார்.
நான்கு ஆண்டுகள் இவ்வாறு டென்டு சினிமா பயணம் மேற்கொண்ட வெங்கய்யாவுக்குச் சென்னை திரும்பும் வழியில் உதித்த எண்ணம்தான் கெயிட்டி திரையரங்கம். அலைந்து திரிந்து மக்களை நோக்கித் திரைப்படங்களைக் கொண்டுசெல்வதைவிட அவர்களைத் திரைப்படம் நோக்கி இழுக்க மேலைநாடுகளைப் போல் நாமும் திரையரங்கம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். 1912-ல் சிந்தாரிப்பேட்டையில் அன்று ‘கறுப்பர்கள் தெரு’ என்று அழைக்கப்பட்ட பிளாக்கர்ஸ் சாலையில் கெயிட்டி சினிமா ஹாலைத் தொடங்கினார்.
வரலாற்றில் இடம்
மவுனப்படக் காலம், க்ரோனோமெகாபோன் காலம், பேசும்படக் காலம், வண்ணத் திரைப்படக் காலம் என்று எல்லா காலத்திலும் புகழ்பெற்று விளங்கியது கெயிட்டி. 1939-ல் கே. சுப்ரமணியத்தின் ‘தியாக பூமி’ இங்கே வெளியானபோது பிரிட்டிஷ் அரசு அந்தப் படத்தைத் தடை செய்தது. அதையும் மீறி கெயிட்டி யில் திரையிடப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் போலீஸ் முதன்முதலில் தடியடி நடத்திக் கூட்டத் தைக் கலைத்தது இந்தத் திரையரங்கில்தான்.
இவ்வாறு வரலாற்றில் இடம்பிடித்த இந்தத் திரையரங்கம் 100 ஆண்டுகளைக் கொண்டாட விருந்த நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு தனது கலைச் சேவையை நிறுத்திக்கொண்டது. இன்று கெயிட்டி இருந்த இடம் வணிக வளாகமாக மாறி நிற்கிறது. கெயிட்டி திரையரங்கைத் தொடங்கிய வெங்கய்யா, பின்னர் கிரவுன், குளோப் ஆகிய திரையரங்குகளையும் சென்னையில் நிறுவி 1929-ம் ஆண்டு வரை புகழ்பெற்ற திரையரங்க அதிபராக விளங்கி 1941-ல் மறைந்தார்.
தந்தை வழியில் மகன்
வெங்கய்யாவின் மகன்களில் ஒருவரான ஆர். பிரகாஷ், தனது தந்தையின் விருப்பத்தை ஏற்று லண்டனுக்கும் ஹாலிவுட்டுக்கும் சென்று சினிமா ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றைத் திரைப்படப் பள்ளிகளில் முறைப்படி கற்றுத் திரும்பினார். பின்னர் 'ஸ்டார் ஆஃப் ஈஸ்ட் பிலிம்ஸ்' என்ற ஸ்டூடியோவைத் தொடங்கி 'கஜேந்திர மோட்சம்', 'நந்தனார்', 'பீஷ்மர் பிரதிக்ஞை' ஆகிய மவுனப் படங்களை இயக்கித் தயாரித்துப் புகழ்பெற்றார். இவரிடம் உதவியாளர்களாக இருந்து சினிமா பாலபாடம் கற்றுக்கொண்டவர்கள்தான் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற ஆரம்ப கால இயக்குநர்கள் சி. புல்லையா, ஒய்.வி.ராவ் ஆகிய இருவரும்.
No comments:
Post a Comment