Saturday 14 November 2020

DEEPAVALI - SUJATHA

 

DEEPAVALI - SUJATHA




ஸ்ரீரங்கம், சென்னை, டெல்லி, பெங்களூர், அமெரிக்கா என்று பல இடங்களில் தீபாவளி கொண்டாடின அனுபவம் எனக்கு உண்டு.
சின்ன வயசில் தீபாவளியைவிட, அதன் எதிர்பார்ப்புகள்தான் சுவாரஸ்யமாக இருக்கும். புதுத் துணி வாங்குவது, பட்டாசு வாங்கி நன்றாக வெயிலில் காயப் போடுவது, அண்ணனுடன் பங்கு பிரித்துக்கொள்வது, டெய்லரிடம் சட்டை, டிராயருக்கு அளவு கொடுப்பது, அவர் ராத்திரி பன்னிரண்டு மணி வரை இழுத்தடிப்பது, தீபாவளி மலருக்கு அட்வான்ஸ் கொடுப்பது, தீபாவளி ரிலீஸ் படங்களின் சுவரொட்டிகளைப் பார்த்துப் பரவசப்படுவது... எல்லா எதிர்பார்ப்புகளும் பொழுது விடிந்து, எண்ணெய் தேய்த்துக்கொண்டு லேகியமும், தேங்காய் பர்பியும், தேன்குழலும் சாப்பிட்டபின் ஆவியாகிவிடும்!
பட்டாசு சீக்கிரமே தீர்ந்துவிடும். பாதி வெடிக்காது. ஆட்டம்பாம் ரெண்டு பொறி உதிர்த்துவிட்டு, கம்மென்று இருக்கும். பாம் ஸ்குவாடு போல, கிட்டே போய் அதை உதைக்க வேண்டும். அடிவயிற்றைக் கலக்கும். அடையவளஞ்சான் குட்டிப் பையன்கள் வந்தால், தைரியமாக அதைக் கையில் எடுத்து ஊதி, மாற்றுத் திரி போட்டு, 'டமால்' என்று வெடிக்க வைப்பார்கள்.

தீபாவளி ரிலீஸ் படங்கள் அத்தனை சிறப்பாக இருக்காது. தைத்த சட்டையில் காஜா அடிக்காமல், பட்டன் உதிரும். சட்டை நெஞ்சைப் பிடிக்கும். டிராயர் இடுப்பில் நிற்காது. இதையெல்லாம் சின்ன வயசில் பொருட்படுத்தாமல் ராத்திரியை, கார்த்திகையை, அடுத்த தீபாவளியை எதிர்பார்த்திருப்போம். பட்டாசு சுடுவதன் மகிழ்ச்சி இன்றும் பாக்கியிருக்கிறது. மற்றதெல்லாம் வேஷம் மாறிவிட்டது!
ஓலைப்பட்டாசு என்று ஒன்று இருந்தது. இப்போது அது தடை செய்யப்பட்டுவிட்டது. அதில் இரண்டு வகை. வாலுள்ளது, இல்லாதது.
கொள்ளிடம் போகும் பாதையில், ஒரு கடையில் செய்து சல்லிசாக விற்பார்கள். வெடி, காது அதிரும். வாலில்லாத ஓலைப்பட்டாசைக் கையில் பிடிப்பதுதான் தலையாய வீரம். வடக்கு வீதியில் கே.வி. ஒருத்தன் தான் அதைச் செய்வான். முழுச் சரத்தையும் கையில் வைத்துக்கொண்டு, அதைத் தூரப்போடா மல், வீரப்பனுக்கு வெடித்தார்களே... அதைப்போல வெடிப்பது இரண்டாவது வீர சாகசம். முன்பு சொன்னதுபோல வெடிக்காத குண்டைச் செயலிழக்கச்செய்ய, புத்தர்போல அமைதி யாக இருக்கும் லட்சுமி வெடியை அணுகி உதைப்பதுதான் மூன்றாவது வீரம்.
அதைப் புதுசாகத் திரி போட்டு வெடிக்க வைக்கும் சின்னப் பசங்களின் கிழிந்த டிராயரும், எண்ணெய் கண்டிராத பரட்டைத் தலையும், அப்போதே சமூகத்தின் அடித்தள ஏழ்மையை எங்களுக்கு அறிவிக்கும். என் அண்ணா, தன் பட்டாசில் பாதியை அவர்களுக்குக் கொடுத்துவிடுவான்!

தீபாவளி ரிலீஸ் படங்கள் பார்ப்பது சிலருக்குக் கட்டாயப் பாடம். என் உறவுக்காரப் பெண்மணி கோமளா, அதிகாலை எண்ணெய் ஸ்நானம் ஆன கையோடு, திருச்சி வெலிங்ட னுக்குப் போய், அங்கே காலைக் காட்சி பார்த்துவிட்டு, அருகே ராக்ஸியில் மத்தியானக் காட்சியும், அங்கிருந்து ராஜா தியேட்டர் போய் சாயங்காலக் காட்சியும், படம் நன்றாக இருந்தால் இரவுக் காட்சியும் பார்த்துவிட்டுக் கண்கள் சிவக்க வீடு வருவாள்.
என்ன கதை என்று கேட்டால் குழம்புவாள். புராணக் கதையும் சமூகக் கதையும் காபி போலக் கலந்து சொல்வாள். இப்போது அந்தத் தியேட்டர்களும் இல்லை... கோமளாவும் இல்லை!
வாழ்க்கையின் வருஷங்கள் கழியும்போது, தீபாவளியின் முக்கியத் துவமும், ஆரவாரமும் பரபரப்பும் மெள்ள மெள்ளத் திருத்தப்பட்டுத் தணிந்து, இப்போதெல்லாம் சாவகாசமாக எழுந்து, ஒரே ஒரு கை எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டு, கை வைத்த ஒரு புது பனியனும் வேஷ்டியும் அணிந்துகொண்டு, ஒரு சிலரோடு 'ஹேப்பி தீபாவளி' போன் பேசுவதோடு சரி!
டெல்லியில் தீபாவளி வேறுவிதமாக இருக்கும். அஜ்மல்கான் ரோட்டில், எவர்சில்வர் பாத்திரக் கடைக்காரர் தெருவையே அடைத்துவிடுவார். பஞ்சாபி இளைஞர்கள், கேர்ள் ஃப்ரெண்டுகள் கவனிக்கும்படியாக, பார்க்கில் அட்டகாசமாகப் பட்டாசு சுடுவார்கள். அப்போதே டென் தவுசண்ட்வாலா எல்லாம் இருந்தது!
பெங்களூரில் தீபாவளி, தமிழர்கள் மட்டும் அதிகம் கொண்டாடும் பண்டிகை. மல்லேஸ்வரம் மைதானத்தில் எல்லா பட்டாசுக் கடைக்காரர்களும் ஒன்று சேர்ந்து விற்பார்கள். கன்னடக்காரர்களுக்குப் புதுசு உடுத்தும் வழக்கம் கிடையாது. வேடிக்கைக்குப் பட்டாசு வெடிப்பார்கள்!
அமெரிக்காவில் ஒரு வருஷம் மவுண்டன் வியூவில், நண்பர் வீட்டில் தீபாவளி கொண்டாடினோம். அருகாமைத் தமிழர்கள் அனைவரும் கூடி, சாஸ்திரத்துக்கு ஒரே ஒரு புஸ்வாணம்தான் வைக்க முடிந்தது. 'வெடி வெடிப்பதற்கு போலீஸ் அனுமதி வேண்டும்' என்றார்கள். எல்லாரும் சேர்ந்து பெரிய விருந்து. தீர்த்தவாரி!
கேரளா, மகாபலி சக்ரவர்த்தியைக் கொண்டாடுவதால், தீபாவளி சுத்தமாகக் கிடையாது. ஆந்திராவிலும் பெரிசாக இல்லை. தீபாவளியை அகில இந்திய விழாவாகச் சொல்லமுடியுமா... தெரியவில்லை.
ஆனால், தீபாவளி தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்கு ஒரு முக்கியமான அம்சமாகிவிட்டது. நரகாசுரன் சாகவில்லையேல், சிவகாசியும் பட்டுச் சேலையும் பிழைக்காது!
தீபாவளிக்கு நண்பர்களுக்கு ஒரு கிரந்தம் (புத்தகம்) தரவேண்டும் என்று, ஒரு புராணக்கதை விஷ்ணு புராணத்தில் எங்கிருக்கிறது என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.
நன்றி: அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு

No comments:

Post a Comment