K.P.KAMATCHI AND MGR
மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களும் , அண்ணன் சக்ரபாணியும் சிறு வயதில் கந்தசாமி முதலியார் நாடகக் கம்பெனியில் சேர, அப்போது அங்கு ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த ஒருவர் பெரும் உதவி செய்தார். பெயர் காமாட்சி.
பின்னர் பாகவதர், சின்னப்பா, எம்.கே.ராதா, எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் வரவுக்குப் பின் நாடகங்கள் குறைந்து சினிமா பிரபலமானது. நடிகர் காமாட்சிக்கு நடிப்பு வாய்ப்பு குறைந்து பாடல்கள் எழுத ஆரம்பித்தார். இவர்தான்
"உன் கண் உன்னை ஏமாற்றினால் " - படம் -வாழ்க்கை,
"புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே "
, "ஓ ரசிக்கும் சீமானே வா" படம் -- பராசக்தி,
"தேனுண்ணும் வண்டு மாமலரைக் கண்டு " படம் அமரதீபம்,
"சிற்பி செதுக்காத பொற்சிலையே" - படம் -எதிர் பாராதது
ஆகிய சிறந்த பாடல்களை எழுதிய காமாட்சி என்கிற கவி கே.பி. காமாட்சி.
புரட்சித் தலைவர் எம். ஜி ஆர் தன் சொந்த தயாரிப்பான நாடோடி மன்னன் படத்திற்கு பாட்டெழுத ,பல கவிஞர்களுக்கு தனது படத்தில் வாய்ப்பளித்தார்.
காமாட்சி செய்த நன்றியை மறவாமல் கவி கே.பி. காமாட்சியை தமக்கு கந்தசாமி முதலியார் நாடக கம்பெனியில் சேர பெரிதும் உதவி செய்ததற்கு நன்றிக்கடனாக பாடல் எழுத அழைத்திருந்தார்.
எம் ஜி ஆரை சந்திக்கச் சென்ற காமாட்சிக்கு இருந்த குடிப் பழக்கத்தினால் நாடோடி மன்னன் படத்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் எம்ஜிஆர் எதுவும் சொல்லாமல் அனுப்பி விட்டார்.
நாடோடி மன்னன் திரைப்படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.இதற்கிடையில் நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு வாய்ப்பு கிடைக்காத கவி காமாட்சி காலமான செய்தி மக்கள் திலகம் எம்ஜிஆர் காதுகளுக்கு எட்டியது.
கவி.காமாட்சி காலமாகிவிட்ட விஷயத்தைக் கேள்விப்பட்ட எம் ஜி ஆர்,
அவருடைய இல்லத்துக்கே சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன், வி.கே.ராமசாமி, கே.ஆர்.ராமசாமி போன்றவர்களும் காமாட்சி வீட்டிற்கே வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
காமாட்சியின் உடல் அலங்கரிக்கப்பட்ட பாடையில் வைக்கப்பட்டது. உடலைத் தூக்கிச் செல்லக் கூட சரியான ஆட்கள் இல்லை. இதை கவனித்த மக்கள் திலகம் எம் ஜி ஆர் சிறிதும் யோசிக்கவில்லை.
உடல் வைக்கப்பட்ட பாடையின் முன்புற கைப்பிடியின் ஒரு பக்கத்தை எம்ஜிஆர் பற்ற அடுத்த கைப்பிடியை என்.எஸ்.கிருஷ்ணன் தூக்கிக் கொண்டார்.
பின்புறம் கே.ஆர்.ராமசாமியும் , வி.கே.ராமசாமியும் தூக்கிக் கொண்டார்கள்.
சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூக்கி வந்த எம் ஜி ஆர், என்.எஸ்.கே ஆகிய நால்வரும் கண்ணம்மாபேட்டையில் வந்து தான் இறக்கினார்கள்.
அங்கு போயும் எம்.ஜி.ஆர் சும்மா இருந்தாரா. காமாட்சியின் உறவினர்கள் யார் எனக் விசாரித்தார். அங்கே இருந்த தயாரிப்பாளரும், கதைவசனகர்த்தாவும், இயக்குநருமான கலைஞானம்
"நான் தான் அவருடையதம்பி "என்றார்.. "
"காமாட்சி அண்ணன் ஏதாவது கடன் எவச்சிருக்காரா "? என்றார் எம் ஜி ஆர்.
"ஆயிரம் ரூபாய் கடன் இருக்குதுங்கண்ணே" என்றார் கலைஞானம்.
" நாளைக்கு வந்து ஆபீஸ்ல வாங்கி கொண்டு போய் கடனை அடைத்து விடுங்க" என்றார் மக்கள் திலகம்.
அதே போல் அடுத்த நாள் எம் ஜி ஆர் பிக்சர்ஸ் ஆபீஸ் சென்ற போது தயாராக ஒரு கவரில் ரூ 1000 போட்டு ரெடியாக இருந்தது. பிணம் தூக்கியது மட்டும் அல்லாமல் கடனையும் அடைத்தார் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்.
இந்த கவி கே.பி. காமாட்சி வேறு யாருமல்ல. பராசக்தி படத்தில் போலி பூசாரி்யாக நடித்தவர் இவர்தான். மேலும் பழைய அலிபாபா படத்தில் வீரப்பா செய்த திருடர் தலைவன் வேடம் செய்தவர்.
அதனால்தான் வாரியார் அவர்கள் பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை சூட்டி மகிழ்ந்தார் போலும்.
No comments:
Post a Comment