2000 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களின் உடல் கண்டெடுப்பு
மத்திய தரைக் கடல் பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக மாபெரும் பூகம்ப ஆட்டங்களும், எரிமலைக் குமுறல்களும் எழுந்துள்ளதை வரலாற்று ஆய்வுகளின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இத்தாலியின் நேப்பில்ஸ் வளைகுடாப் பகுதியில் உள்ள வெஸ்சூவியஸ் சிகரம் புகழ்பெற்றது. கி.மு.5960, கி,மு.3580 ஆண்டுகளில் வெஸ்சூவியஸ் இருமுறை கக்கியதாக அறியப்படுகிறது.
கி.பி.79 முதலாம் நூற்றாண்டில் வெஸ்சூவியஸ் சிகரத்தில் தீவிர எரிமலைக் குமுறல் கிளம்பி ஹெர்குலானியம், பாம்ப்பி எனும் இரு பெரும் பண்டைய ரோமப் பேரரசின் நகரங்கள் புதைத்து போயின. அதில் சிக்கி சுமார் 20,000 பேர் அதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எரிமலை கொட்டிய கருஞ் சாம்பலையும், சகதியையும் அடுத்துப் பெய்த பேய்மழை அடித்துச் சென்று இரு நகரங்களையும் மூடிப் புதைத்தாக அறியப்படுகிறது.
முதன் முதல் 1595 ஆம் ஆண்டில் மறைந்த நகரங்களின் சில பகுதிகள் ஆராயப்பட்டன. அடுத்து 1748 இல் பாம்ப்பி நகரத்தை ஆய்வாளர் தோண்டிப் பல விந்தைகளைக் கண்டனர். நேப்பில்ஸ் என்கிற இடத்துக்கு அருகில் உள்ள அகழ்வாராய்ச்சி தளத்தில், தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில், பாம்ப்பி எரிமலை வெடிப்பில் சிக்கி 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த இருவரது எழும்புக் கூடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு பெரிய மாளிகை போன்றதொரு வீட்டை அகழ்வாராய்ச்சி செய்த போது இவர்களது எழும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒருவர் செல்வந்தர் என்றும் அவரது உயிரிழந்த போது அவருக்கு 30 முதல் 40 வயதிருந்திருக்கலாம் என்றும், மற்றொருவர் அவருக்கு அடிமையாக இருந்திருக்கலாம். அவருக்கு 18 முதல் 23 வயதிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அதிர்ச்சியால் அவர்கள் மரணமடைந்திருக்கலாம் என்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment