Friday 13 November 2020

THANTHI TV AGE 8

 

THANTHI  TV   AGE 8

தினமலர் பெற வேண்டிய டிவி,



 தந்தி குழுமத்திற்குப் போயிற்று.

_______

" தந்தி தொலைக்காட்சிக்கு எட்டு வயது" என்ற விளம்பரத்தை தினத்தந்தி நாளிதழில் இன்று (13-11-2020) பார்த்தேன்.

 பழைய நினைவுகள் என்  இதயத்தில் சுழன்றன.  தினமலர் நாளிதழ் பெறவேண்டிய டிவி அது. சில  மாறுபாடுகள் காரணமாக தந்தி குடும்பத்திற்குப் போய்ச் சேர்ந்தது.

 இந்த நிகழ்வுகளில் நான் நேரடி தொடர்பு வைத்திருந்தவன் என்ற வகையில் வரலாற்று நிகழ்வுகளை இங்கே பதிவு செய்கிறேன்.

 மாத்ருபூதம் என் நெருக்கமான நண்பர். அவர் நடத்திய "புதிரா? புனிதமா?" தொலைக்காட்சித் தொடர் தமிழகத்தில் மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவுகள் நடத்த மதுரை, சேலம், புதுவை ஆகிய மாநகரங்களில் தினமலர் சார்பில் நேரடி நிகழ்ச்சிகள் நடந்தன. அரங்கினர் கேள்விகள் எழுப்ப,.  மேடையில் அமர்ந்திருந்த டாக்டர் மாத்ருபூதம் வேடிக்கையாகவும் விஷயப் பொதிவுகளோடும் பதிலளித்து,  அரங்கினரை அதிர வைக்கும் சிரிப்பை உண்டாக்கிக் கொண்டே இருந்தார்.

 இந்த ஒளிப்பதிவு நிகழ்ச்சிகளை விஜய் டிவி இரவு நேரங்களில் ஒளிபரப்பி வந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது தினமலர். 

மர்ம முடிச்சுகளுக்குள்  சிக்கிக் கிடந்த பாலியல் ஐயப்பாடுகளுக்கு இந்த நிகழ்ச்சிகளின் மூலமாக டாக்டர் மாத்ருபூதம், தெளிவான  விளக்கங்களை நகைச்சுவை ததும்ப கொடுத்துக் கொண்டிருந்தார்.

 இந்த நிகழ்ச்சி  விஜய்  டிவியில் ஒளிபரப்பானதற்கு முக்கிய காரணம் விஜய் டிவியின் அப்போதைய முதன்மைச் செயல் அலுவலராக இருந்த ரோஹித் ஆத்யா   மற்றும்  பொது மேலாளராக இருந்த ஃப்ளாரன்ஸ் பெரைரா.  இந்த இருவருடனான என் நெருக்க மிகு நட்பு காரணமாக இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாவது சாத்தியமாயிற்று.

 இந்த நிகழ்ச்சி தொடர்பாக நான் அடிக்கடி ரோஹித் ஆர்யாவுடன் நேரடியாகப் பேசிக் கொண்டிருந்த காலம் அது. 

ஒரு நாள் 

புதிதாக ஒரு திட்டத்தை என்னிடம் அவர் தெரிவித்தார்.

 "விஜய் டிவியில்  இதுவரை செய்தி ஒளிபரப்பு இல்லை. இனி கொண்டு வரத் திட்டமிட்டு இருக்கிறோம். காலையில் ஒரு நேரம், மாலையில் ஒரு நேரம் என இரண்டு முறை ஒளிபரப்பத் தீர்மானித்திருக்கிறோம். இந்த செய்திகளைத் தயாரித்து வழங்கும் பொறுப்பை தினமலர் நாளிதழுக்குக் கொடுத்து விடுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. உங்கள் தரப்பிலான ஒப்புதலைப் சொல்லுங்கள். பின்  இரு நிர்வாகத்தினரும் அமர்ந்து பேசி அடுத்த கட்ட நகர்வுகளை முடித்துக்கொள்ளலாம்" என்று ரோஹித் ஆதித்யா என்னிடம் யோசனை தெரிவித்தார்.

 மனதுக்குள் எனக்கு ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்த மாதிரியான ஒரு ஆனந்தக்  குதூகலிப்பு.  பாய்ந்தோடி தினமலர்  அலுவலகத்துக்குச் சென்றேன். ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியிடம் மகிழ்ச்சியில் மிதந்தபடி எடுத்துச் சொன்னேன்.

 பொறுமையாகக் கேட்டுக்கொண்ட அவர்,  சிறிது நேரம் மௌனமாக யோசித்தார். பின்னர் என்னைப் பார்த்துச் சொன்னார், "இந்தத் திட்டம் நமக்கு வேண்டாம்பா. போய்ச் சொல்லி விடு"

 எனக்கு இதயத்தில் இடி இறங்கியது போலிருந்தது.

 மீண்டும் மீண்டும்  மன்றாடிப் பார்த்தேன். ஆசிரியரோ அசைந்து கொடுக்கவே இல்லை.  அந்து மணியை நோக்கி  ஓடினேன்... பார்த்தேன்.  உற்சாகத்தோடு கேட்டுக்கொண்ட அவர், "ஆசிரியர் என்ன சொன்னார்?" என்று கேட்டார்.

 நான் நடந்ததைச் சொன்னேன்.

 "அப்படியா? அவர் முடியாது என்று சொன்னால் விட்டு விடலாம்" என்றார்.

 அடுத்ததாக  கஜினியை என் நெஞ்சில் நிறுத்திக்கொண்டு , அந்துமணியின் தம்பியான வெங்கட்ராமன் என்கிற வெங்கடேஷ் சாரை  நோக்கிப் படை எடுத்து, அவரைச் சந்தித்தேன்.  அப்பா வழியில் அண்ணன் என்றால், அண்ணா சொல்லைத் தட்டாத தம்பி என்றே பதில் ஆனது.

 இவ்வாறாக தினமலர் நிர்வாகக் குடும்பத்தாரிடம் பேசிப் பேசி நான்  தோல்வியில் விழுந்தேன்.

 மீண்டும் ஆசிரியரிடம் சென்று அடுத்த கட்ட முயற்சியில் ஈடுபட்டேன்.

 அவரோ இந்த முறை மிகப் பொறுமையாக என்னிடம் 15 நிமிடங்கள் பேசினார்.

"ஒரு ரவுண்டு அடித்து முடித்து விட்டாயாக்கும்." என்று பேசியவாரே என்னை எதிர் கொண்டார்.

 இந்தத் திட்டத்தை ஏற்று நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார். "எல்லாம் தெரிந்த நீயே எங்களிடம் வற்புறுத்திக் கேட்கலாமா?" என அவர் என்னைத் திருப்பிக் கேட்டார்.

 நான் மௌனத்தில் என்னைத் திணித்துக்கொண்டுத்  திரும்பி விட்டேன்.

 ரோஹித் ஆதித்யாவை சந்தித்து  'இயலாது' என்று தெரிவித்து விட்டேன்.

 அந்தத் திட்டம் இந்து ஆங்கில நாளிதழுக்குச் சென்று, பின்னர் என்டிடிவி என்ற தொலைக்காட்சியுடன் ஒருங்கிணைந்து,  அங்கிருந்து தான் தந்தி குடும்பத்திற்குச் சென்று சேர்ந்தது.

 இப்படியாகத்தான் தினமலர் நாளிதழுக்கு வரவேண்டிய அந்த தொலைக்காட்சி,  சிறு சுற்றலுக்குப் பிறகு  தந்தி குழுமத்திற்குச் சென்று சேர்ந்தது.  சென்ற இடமும் வென்ற இடம் தானே!


 நூருல்லா ஆர்     ஊடகன்

13-11-2020  ‌‌        9655578786



துக்ளக் சோ வின் எழுத்துச் சீர்மை

_________

துக்ளக் சோ தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நீண்ட நாள் வரை ஏற்காமல் இருந்தார் என்பது உண்மைதான். பின்னாளில் அவரே ஒரு எழுத்துச் சீர்மையைக் கொண்டுவருவதாகக் கூறிக்கொண்டு ஒரு அணுகுமுறையைப் புகுத்தினார். தமிழ் மொழியில் F  ஆங்கில எழுத்தைப் பயன்படுத்துவதற்கான அவசியம் இல்லை. ஏனெனில் அத்தகைய  எழுத்தைப் பயன்படுத்துவதற்கான வார்த்தை தமிழில் கிடையாது. நடைமுறைத் தமிழில் இத்தகு வார்த்தைகள் வந்து விடுகின்றன.  இவற்றை எழுதும் பொழுது நாம் முன்னால் ஆயுத எழுத்தைப் போட்டு எழுதிக் கொண்டிருக்கிறோம். 

இதில்தான் ஒரு மாறுதலைக் கொண்டுவர சோ எண்ணினார்.

 அவர் ஆங்கில எழுத்தான F  என்பதை அப்படியே தமிழ் வரி வடிவங்களில்  பயன்படுத்தலாம் என்று ஆலோசனை தெரிவித்தார்.

"க,ச,ட,த,ப,ர" எனும் எழுத்து வரிவடிவங்களில் F என்ற ஆங்கில எழுத்தையும் சேர்த்து விட்டார்.

 பிப்ரவரி என்பதை  எழுத F  என்ற எழுத்தைப் போட்டு அதற்கு ஒரு சுழி போட தொடங்கினார். அதைப் போலவே அனைத்துத் துணை எழுத்துக்களையும் இந்த ஆங்கில எழுத்தோடு இணைத்து வெவ்வேறு உச்சரிப்புகளில் பயன்படுத்த அவர் யோசனை தெரிவித்தார்.

 ஆனால் அந்த யோசனையைத் தமிழ் ஆர்வலர்களோ பொதுமக்களோ ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் அவை அப்படியே  மறைந்து காலாவதியாகிப் போயின.


 நூருல்லா ஆர்       ஊடகன்

12-11-2020    9655578786

No comments:

Post a Comment