HAPPY DEEPAVALI
.தமிழ்நாட்டில் நாம் கொண்டாடும் பண்டிகைகள் பல வட நாட்டில் கொண்டாடுவதில்லை. அதே போன்று வட நாட்டில் கொண்டாடப் பெறும் பல பண்டிகைகள் தென்னகத்தில் குறிப்பாகத் தமிழகத்தில் கொண்டாடப் பெறுவதில்லை.
ஆனால் இந்தியா முழுவதும் இந்துக்களால் கொண்டாடப்பெறும் ஒரே பண்டிகை தீபாவளி! ராமேஸ்வரம் தொடங்கி இமயம் வரை எல்லோரும் கொண்டாடுகின்றோம்.
தமிழகத்தில் பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்தி, இனிப்புக்களை உண்டு பெரியவர்களை வணங்கி ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து கொண்டாடுகின்றோம்.
வட நாட்டில் தீபங்களை வரிசையாக ஏற்றி அலங்காரமாக வைத்துக்கொண்டாடுகிறார்கள்.
பகவான் மஹாவிஷ்ணு வராஹ அவதாரத்தின் போது பூமாதேவியை மணந்து கொண்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் தோன்றிய மகன் பெயர் பௌமன். அவன் தவம் செய்து பல வரம் பெற்று அசுர குணங்களால் நிரம்பியவனாக எல்லோரையும் துன்புறுத்தியதால் "நரகாசுரன்' என்றழைக்கப் பெற்றான்.
இரக்கம் இல்லாத நெஞ்சினர் அரக்கர் என்பார் கம்பர். அவனை அழிக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் திருவுளம் கொண்டார். அதற்கு சத்யபாமாவே தேரோட்டிச் சென்றாள்.
தற்போதைய அசாம் மாநிலத்தில் பிராக்ஜோதிலிம் என்னும் நகரில் அவன் ஆட்சி செய்தான். தனக்குத் தன் தாயைத்தவிர வேறு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் வாங்கியிருந்தான். அவனுடன் பகவான் சண்டையிடும்போது அவனது கதாயுதம் பகவான் நெற்றியில் பட்டு தேரிலேயே மயங்கி விழுந்தார். உடனே சத்யபாமா வெகுண்டு எழுந்தார்.
வில்லையும் அம்பையும் தானே எடுத்துக்கொண்டு நரகாசுரனுடன் போரிட்டு அவனை அழித்தார். அந்த நாளே ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியாகும். நரகாசுரனை வதம் செய்ததால் அன்றைய தினம் நரக சதுர்த்தசி என வழங்கப்பெற்றது.
அவன் மரணத்தறுவாயில்தான் சத்யபாமாவுக்கு இவன் தன் மகன் என்ற உண்மை புரிந்தது. ஆயினும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலை அல்லவா இது? என உணர்ந்து பகவானிடம் வரம் வேண்டினாள். அதுவே உலக மக்களுக்கு நரகாசுரன் வதமானது ஒரு விழாவாக அமைந்தது.
தன் மகனே இறந்தாலும் கூட பகவானிடம் அந்தத்தாய் உலகமக்களுக்காக வரம் கேட்டாள். அதாவது வருடந்தோறும் அன்றைய தினத்தில் மக்கள் அனைவரும் விடியற்காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகளை பகிர்ந்து உண்டு, இறை வழிபாடு செய்து, ஆனந்தமாக வாழ வேண்டும் என வரம் கேட்டாள். அதற்கு பகவானும் புன்னகையுடன் சம்மதித்தார்.
"ஜலே கங்கா தைலே லக்ஷ்மி' என துலாம் மகாத்மியம் தெரிவிக்கின்றது. அதன்படி, அன்றைய தினம் விடியற்காலையில் எல்லோருடையஇல்லத்திலும் இருக்கும் நீரில், கங்கை குடிகொள்கிறாள். மகாலட்சுமி எண்ணெயிலும், சீயக்காய் தூளிலும் வாசம் செய்கிறாள். எனவேதான் அன்றைய தினம் நாம் விடியற்காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம்.
நம் இல்லங்களில் இதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெருகுகிறது.
தீபாவளி தற்போது வட மாநிலங்களில் லக்ஷ்மி பூஜையாக, குபேர பூஜையாகக் கொண்டாடப் பெறுகின்றது. இந்நாளில் அவர்கள் வியாபாரத்திற்கான புதுக்கணக்குகளைத் துவங்குகின்றார்கள். மண்ணாலான காளியை பூஜை செய்து, தீபாவளியை வங்காளத்தில் கொண்டாடுகின்றார்கள்.
மகாபலி சக்ரவர்த்தி தீபாவளித் திருநாளில்தான் முடிசூட்டிக் கொண்டார் என, வாமன புராணம் தெரிவிக்கின்றது. ஆதிசங்கரர் ஞான பீடங்களை தீபாவளித் திருநாளில்தான் நிறுவியதாக நம்பப் பெறுகிறது.
விஜயதசமியில் ராவண சம்ஹாரம் நிறைவடைந்து ஸ்ரீராமர், அயோத்திக்குத் திரும்பிய நன்நாளையே
அந்த யுகத்தில் (திரேதாயுகம்) மக்கள் புத்தாடை உடுத்தி, தீபங்களை ஏற்றி தீபாவளியாகக் கொண்டாடினார்கள்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பூவுலக வாழ்வை விடுத்து வைகுண்டம் திரும்பிய நாளை தீபாவளியாக குஜராத் மக்கள் வழிபாடு செய்கின்றார்கள்.
சமண சமயத்தில் 24 -ஆவது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்த நாள் தீபாவளியாகும்.
இருள் என்பது அறியாமை, அஞ்ஞானம். ஒளி என்பதே ஞானம், மகிழ்ச்சி, நம்பிக்கை, ஆனந்தமாகும். எனவே, இறையருளால் இந்த தீப ஒளித் திருநாள் அனைவர் வாழ்விலும் ஆனந்தத்தை உண்டாக்கி, வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்யும்.
No comments:
Post a Comment