Friday 20 November 2020

அப்துல்கலாம் வேடத்தில் நடித்த ஷேக்மைதீன்

 

அப்துல்கலாம் வேடத்தில் நடித்த ஷேக்மைதீன்


அப்துல்கலாம் வேடத்தில் நடித்த ஷேக்மைதீன்;படம் திரைக்கு வரும் முன்பே உயிரிழந்த சோகம்...



அப்துல் கலாம் மாதிரியே இருக்கும் ஷேக் மைதீன் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வேடத்தில் நடித்தவர் ஷேக் மைதீன். 


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இவர் அப்துல் கலாமைப் போன்ற உருவ தோற்றம் இருப்பதால் பிரபலமடைந்தவர். இதனால், 'உடுமலை கலாம்' எனவும் அழைக்கப்பட்டவர்.


தாம் நடித்த படம் திரைக்கு வரும் முன்பாகவே மரணம் அவரைத் தழுவிக் கொண்டதால், அவருக்கு மிகவும் பிடித்தமான அப்துல் கலாம் தோற்றத்தில் தம்மை திரையில் பார்க்கும் அவரது ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது குடும்பத்தினர் உருக்கமாக கூறுகின்றனர்.


அப்துல் கலாமின் மீது தீவிர பற்றுக் கொண்ட ஷேக் மைதீன், கலாமின் அறிவுரைகளை இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்வதில் தொடர்ந்து பணியாற்றி வந்ததாக தெரிவிக்கின்றனர் அவரது நண்பர்கள்.


"ஷேக் மைதீனை எனக்கு 13 வருடங்களாக தெரியும். ஏழ்மையான குடும்ப சூழலில் படிப்பறிவில்லாமல் வளர்ந்தவர் அவர். வாழ்வாதாரத்திற்காக பெயிண்டிங் வேலை செய்து வந்தார். அப்போதிலிருந்தே அப்துல் கலாம் மீது பற்றுக் கொண்டிருந்தார். பார்ப்பதற்கும் அப்துல் கலாமின் சாயலில் இருப்பார். 10 வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் அவரைப் போலவே முடி அமைப்பை மாற்றிக் கொண்டு வந்து நின்றார். ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாய் இருந்தது. அன்று முதல் அப்துல் கலாமைப் போலவே தனது தோற்றத்தை அமைத்துக் கொள்வதோடு, அவரது அறிவுறைகளையும் மாணவர்களிடம் பரப்பத் துவங்கினார்" என்கிறார் ஷேக் மைதீனின் நண்பர் லட்சுமணன்.


உடுமலைப்பேட்டையில் 2011ம் ஆண்டு துவங்கப்பட்ட தன்னார்வ குழுவில், ஷேக் மைதீனின் களப்பணி முக்கியமானது என கூறுகிறார் லட்சுமணன்.


கலாம் போலவே மாணவர் மத்தியில்... "பசுமைப் புரட்சி டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நற்பணி இயக்கம் என்ற தன்னார்வ குழுவை உருவாக்கி அதில் ஷேக் மைதீனை கெளரவத் தலைவராக நியமித்தோம். பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்பார். அவரைப் பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் வரும். அப்துல் கலாமைப் போலவே மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு ஷேக் மைதீனும் விருப்பப்படுவார். 


'படிப்பறிவு இல்லாததால் தான் நான் பெயிண்டிங் வேலைக்கு சென்றேன். அதனால், நீங்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். கலாம் ஐயாவைப் போல் உயர்ந்த பதவிகளை அடைய வேண்டும்' என எல்லா மேடைகளிலும் பேசுவார். 'ஷேக் மைதீன் எனும் உடுமலை கலாம்' என்று ஆரம்பத்தில் அவரை நாங்கள் அழைத்து வந்தோம். பின்னர், 'உடுமலை கலாம்' என்பதே அவரின் அடையாளமாக மாறிப்போனது" என்கிறார் லட்சுமணன்.


அப்துல் கலாமின் உருவ தோற்றம் இருப்பதால் போகும் இடமெல்லாம் ஷேக் மைதீனோடு செல்ஃபி எடுக்க மக்கள் கூட்டம் சேர்ந்துவிடும் என கூறுகிறார் அவரோடு சமூகப் பணிகளை மேற்கொண்ட அபு இக்பால். "பெரம்பலூரில் ஓர் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஷேக் மைதீனுக்கு அழைப்பு வந்தது. நானும், அவரும் திருச்சி பேருந்து நிலையத்தில் இறங்கினோம். திடீரென அவரைச் சுற்றி பொதுமக்கள் கூடத் தொடங்கினர். பலரும் அவரோடு செல்ஃபி எடுக்க குவிந்துவிட்டனர். இதனால், சுமார் 2 மணி நேரம் தாமதமானது. இருந்தும், அவர் அனைவரோடும் நின்று படம் எடுத்துக் கொண்டார். இதனால், பொது இடங்களுக்கு செல்கையில் தலைமுடியை மறைத்து துணியைக் கட்டிக்கொள்வார். பல சிரமங்கள் இருந்தாலும் மாணவர்களை சந்தித்து உரையாற்றுவதற்கு உற்சாகத்துடன் கிளம்பிவிடுவார். எல்லோரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர் ஷேக் மைதீன்" என்கிறார் இவர்.


திருப்பூர், கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தன்னார்வ குழுக்களோடு இணைந்து ஷேக் மைதீன் பணியாற்றியுள்ளார். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் சரவணனின் இயக்கத்தில், அப்துல் கலாமின் வேடத்தில் இவர் நடித்து பிரபலமடைந்துள்ளார். அதன் மூலமாகவே சூரரைப்போற்று திரைப்படத்திலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.


"5 வருடங்களுக்கு முன்னர் அப்துல் கலாம் குறித்த ஆவணப்படத்திற்காக ஷேக் மைதீனை முதல்முறையாக சந்தித்து பேசினேன். கலாமின் அசல் உருவ தோற்றத்தைக் கொண்டிருந்தார். ஆனால், அந்த ஆவணப்படத்தை எடுக்க முடியவில்லை. அதற்கு பின்னர், கும்பகோனம் பள்ளி தீவிபத்து குறித்த குறும்படத்தில் அவரை நடிக்க வைத்தோம். அது அவருக்கும் எங்கள் குழுவிற்கும் பாராட்டுக்களை பெற்றுத்தந்தது. 


அடுத்தடுத்து ஏராளமான குறும்படங்களில் அவர் நடித்தார். அதன் மூலம் பிரபலமானவர், சூரரைப்போற்று படத்திலும் அப்துல் கலாம் கதாப்பாத்திரத்திலேயே நடித்தார்" என்கிறார் சரவணன். கலாம் மாதிரியே மாணவர்களிடையே ஷேக் மைதீன் "சில மாதங்களுக்கு முன் அவரை நான் நேரில் சந்தித்து பேட்டி எடுத்தேன். அதில் மிகவும் உற்சாகமாக பல நினைவுகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஒரு முறை அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருக்கையில், உடுமலைப்பேட்டை வந்துள்ளார். அப்துல் கலாம் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு ஷேக் மைதீனும் சென்றுள்ளார். அப்போது இவர் தான் அப்துல் கலாம் என நினைத்துக் கொண்ட போலீசார் பாதுகாப்பில்லாமல் ஜனாதிபதி நடந்து வருவதாக நினைத்துக் கொண்டு ஷேக் மைதீனை காரில் ஏற்றியுள்ளனர். பின்னர், தான் அப்துல்கலாம் இல்லை எனக் கூறியதும் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


இச்சம்பவத்தை அறிந்துகொண்ட அப்துல்கலாம், ஷேக் மைதீனை நேரில் அழைத்து பேசியுள்ளார். அப்போது, 'கிராமங்களுக்கு என்னால் வரமுடியவில்லை. எனவே, என்னைப் போலவே இருக்கும் நீ, கிராமங்களுக்கு சென்று பள்ளி மாணவர்களிடம் உரையாடு' என வலியுறுத்தியதாக ஷேக் மைதீன் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்" என அவருடனான நினைவுகளை கூர்கிறார் இயக்குனர் சரவணன்.


சூரரைப்போற்று திரைப்படம் வெளிவந்த பின்னர், தன்னைப் பற்றி மேலும் பலருக்கு தெரியவரும் என தனது குடும்பத்தினரிடம் ஷேக் மைதீன் தெரிவித்ததாக கூறுகிறார் அவரது மூத்த மகன் ஜெயிலானி. "முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறந்த பின்பு அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, கலாமின் வீட்டிற்கும் சென்று குடும்பத்தாரை எனது தந்தை சந்தித்துள்ளார்.


கலாம் ஐயாவைப் போன்ற உருவத் தோற்றம் இருந்ததால் அவரின் குடும்பத்தினரோடு நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. இன்றும் அந்த தொடர்பு நீடிக்கிறது. பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசுவதற்காக உடல் நலத்தை கவனிக்காமல் ஊரெல்லாம் சுற்றி வந்தார். இதனால், குடும்பத்தினர் அனைவரும் அவரிடம் கடிந்து கொள்வோம்." "சூரரைப்போற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார். படப்பிடிப்பு முடிந்து வந்தது முதல் படம் வெளியாகும் நாளுக்காக காத்திருந்தார். 


இப்படத்தின் மூலம் தன்னை பற்றி மேலும் பலருக்கு தெரியவரும் என அவர் எங்களிடம் கூறியிருந்தார். ஆனால், படம் வெளியாகும் தேதி ஒவ்வொரு முறையும் தள்ளிப்போனது." "கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி, தனது அறுபதாவது வயதில் இயற்கை எய்தினார். படத்தை பார்க்காமலே இறந்துவிட்டார் என்ற சங்கடத்தால் நான் அந்த படத்தை பார்க்கவில்லை. இம்மாதம் படம் வெளியானதும் பலர் என்னை அழைத்து பேசி பாராட்டுத் தெரிவித்தனர். சமீபத்தில் தான் குடும்பத்தோடு சென்று சூரரைப்போற்று படம் பார்த்தோம். அவர் வாழ்ந்த அப்துல் கலாம் கதாப்பாத்திரத்திலேயே நடித்து புகழ் பெற்றுவிட்டார். அவர் எதிர்பார்த்த பாராட்டுக்கள் கிடைக்கும்போது அதனை பெற்றுக்கொள்ள அவர் இல்லையே என்ற வருத்தம் தான் எங்களுக்கு" என தெரிவிக்கிறார் ஷேக் மைதீனின் மூத்த மகன் ஜெயிலானி.


சாதாரண குடும்பத்தில் பிறந்து நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த அப்துல் கலாமின் உருவ ஒற்றுமை கொண்டதோடு மட்டுமல்லாமல், அவரது கொள்கைகளோடும் பயணித்த 'உடுமலை கலாம்' என்கின்ற ஷேக் மைதீன் அப்துல் கலாமாகவே திரையில் தோன்றி வரலாறாக மாறிவிட்டார் என பெருமை கொள்கின்றனர் ஷேக்மைதீனின் நண்பர்கள்.

No comments:

Post a Comment