RADIOGRAPHICS PRESENTER K.S.RAJA
ரேடியோக்ராபிக்ஸ் வித்தகன் கே எஸ் ராஜா
ஒரு ரசிகனின் நினைவலைகள்.
- யாழ் சுதாகர்
'தூங்க வைப்பதல்ல வானொலி அறிவிப்பு
உற்சாகம் பொங்க வைப்பது தான்
உயிர்த்துடிப்பான அறிவிப்பு' என்று...
எழுபதுகளில் எழுந்து வந்த
மின்சாரத் தமிழே... வணக்கம் ! ...
வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்
ஆவலுடன் கூடியிருக்கும் எங்கள்
வானுயர்ந்த ரசனைகள் வற்றாத வரை...
உங்களை
மறக்க முடியுமா அய்யா ?
சென்னைக்குச் சுற்றுலா சென்று திரும்பிய
எங்கள் ஊர் ரசிக முகங்களிடம்...
எம்.ஜி.ஆர்., சிவாஜியைப் பார்த்தீர்களா ? என்று
என் விசில் வயதுகளில் நான் விசாரித்ததுண்டு.
பத்து வருடங்கள் கழித்து நான் இந்தியாவுக்கு வந்திருந்தபோது...
இந்திய நண்பர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளில்
எனக்கு இமய வியப்பைக் கொடுத்தது எது தெரியுமா ?
நீங்கள் கே.எஸ். ராஜாவைப் பார்த்திருக்கிறீர்களா ?
அவர் எப்படி இருப்பார் ?
------------------
மின்னல் வேகம்...
ஆனாலும் வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான
தெளிவான உச்சரிப்பு...இந்த இரண்டும் இணைந்து ஜொலித்த ஒரு பிறவி அறிவிப்பாளர்
உங்களைப்போல்... இனி பிறக்க முடியுமா?...
உங்கள் அருமையை சுருங்கச் சொல்லி...
விரிய விளங்க வைக்க இப்படியும் சொல்லலாம்.
ஒரு எம்.ஜி.ஆர்....
ஒரு கண்ணதாசன்...
ஒரு சிவாஜி...
ஒரு டி.எம். சௌந்தரராஜன்...
ஒரு கே.எஸ்.ராஜா...
தனித்துவமாக நடிக்கும் திறமை இருந்தாலும் புது முகங்கள்
சில காட்சிகளிலாவது...சிவாஜியின் பாதிப்பில் சிக்கிக் கொள்வதைப் போல
முதன் முதலாக ஒலிவாங்கிக்கு முன்னே நிற்கும் அறிவிப்பாளர் பலரை...
தொப்பி அணிந்து வரும் உங்கள் தோழமைக்குரல்
அப்பிப் பிடித்து ஆட்சி செய்வதை அவதானித்திருக்கிறன்.
பேசாதவர்களைப் பேச வைத்த..
பார்க்காதவர்களைப் பார்க்க வைத்த...
நடக்காதவர்களை நடக்க வைத்த...
சித்தர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால்... ஓடாததை எல்லாம் ஓடவைத்த சித்தரை
நேரில் பார்த்தேன்.உங்களைத் தான் சொல்கிறேன் !
இந்தியாவில் ஓடாத படங்கள் இலங்கையில்
உங்கள் மந்திர உச்சாடனம் கேட்டதால்
100 நாள்.. வெள்ளி விழா... என வெற்றி நடை போட்டனவே...
அதைத் தான் சொல்கிறேன்...
இந்தியாவிலும் கூட பின்னணியில் இருந்த பல படங்கள்...
திரை விருந்து நிகழ்ச்சிகளில் உங்கள் 'தங்கக் குரல் 'கட்டி விட்ட 'தாயத்து' மகிமையால்
சிங்க நடை போட்டு விநியோகஸ்தர்களை வசூல் மழையில் நனைத்ததைப் பற்றிய
வியப்புச் செய்திகளையும் பத்திரிகைச் செய்திகளில் படித்திருக்கிறேன்.
உங்கள் உற்சாக குரலுக்காக மட்டுமன்றி அந்த வார நிகழ்ச்சியில்
புதிதாக நீங்கள் செய்யப்போகும் ஒட்டு வேலைகளையும்,
விளம்பர சாதுர்யங்களையும் தவறாது ரசிப்பதற்காக
சலிக்காத ரசிக வேட்கையுடன் வானொலிப் பெட்டிக்கு அருகில் காத்துக் கிடந்தேன் என்பதை
அறிவீர்களா ராஜா ?
நடிகர் திலகத்தின் 'எங்கள தங்க ராஜா' படத்துக்கு
நீங்கள் விளம்பரம் வாசித்தபோது
எங்கள் என்று குதூகலமாக ஆரம்பித்து...
தங்க என்ற இடத்துக்கு வரும்போது
குரலில் குழைவு கூட்டி அவசரமாக நெகிழ்ந்து..
ராஜா என்று கம்பீரமாக முடிப்பீர்களே...
அன்று கேட்ட அந்த 'தங்க'
இன்றும் என் செவியோரங்களில் மங்காமல் தங்கி விட்டது.
'நான் ஏன் பிறந்தேன்' படத்தில்
கே.ஆர்.விஜயாவிடம் எம்.ஜி.ஆர் பேசுவதாக வரும்
'அழறவங்களை சிரிக்க வைக்கிறதும், சிரிக்கிறவங்களை சிந்திக்க
வைக்கறதும் தான் என்னோட லட்சியம்...'
என்ற வசனத்தை மட்டும் தனியே பிரித்தெடுத்து...
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களே உங்கள் இலட்சியம் என்ன ?
என்று நீங்கள் பேசிவிட்டு
அந்த இடத்தில் கொண்டு வந்து
லிங்க் கொடுப்பீர்களே... அடடா !
நீயா, குரு, நிறம் மாறாத பூக்கள். பட்டாக்கத்தி பைரவன், மீனவநண்பன், என்று பல படங்களுக்கு... நீங்கள் செய்து காட்டிய
இது போன்ற ரேடியோ கிராபிக்ஸை எல்லாம்
இன்றும் கூட என் செவிகள் அசை மீட்டு ரசிப்பதுண்டு.
ஈர்ப்புத் தமிழே... எனக்கு மட்டும்
இந்த ரகசியம் சொல்வீர்களா ?
'சந்திர வதனன் 'எம்.ஜி.ஆரின்
காந்தச் சிரிப்பைக் கண்டதும் வந்திடும் உற்சாகம்...
உங்கள் சுந்தரக் குரலால்
எம்.ஜி.ஆர் என்று சொன்னதைக் கேட்டதும் வந்ததே எப்படி ?
ஈர்ப்புத் தமிழே எனக்கு மட்டும்..
இந்த ரகசியம் சொல்வீர்களா ?
கவியரசர் கண்ணதாசன் காலமானார் என்ற சேதி அறிந்தவுடன்
மூச்சிரைக்க ஓடி வந்து...
இலங்கை வானொலி இசைத்தட்டுக் களஞ்சியத்துக்குள் பார்வை பதித்து...
உங்களுக்கே இயல்பான தேர்ந்த அவசரத்துடன்
கண்ணதாசன் எழுதிய முதல் இசைத் தட்டைத் தேடிப்பிடித்து...
இன்னும்... இன்னும்... அவர் கவிப்புலமைக்கு
மகுடம் சூட்டிய இசைத் தட்டுக்களை எல்லாம் அள்ளிக்கொண்டு
அவசர அவசரமாக அன்றைய திரை விருந்து நிகழ்ச்சியை
அரசவைக் கவிஞருக்கு கண்ணீர் அஞ்சலியாக்கி...
அயல்நாட்டு வானொலிகளையும் முந்தி நின்றீர்களே...!
அறிவிப்பு பாணியில் மட்டுமன்றி
உழைப்பிலும்...
கடமையிலும்...
தமிழன் என்ற துடிப்பிலும்...
உங்களுக்கு இருந்த வேகத்தை
அன்றைய நிகழ்ச்சியில் உணர்ந்து நெகிழ்ந்தேன்.
யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில்
யாழ்தேவிக்காக காத்திருந்த பயணிகள் மத்தியில்
எதிர்பாராதவிதமாக உங்களை இனங்கண்டு...
இன்ப அதிர்ச்சிக்குத் திரைபோடத் தெரியாத பாமரன் போல்
உங்கள் பக்கம் பாய்ந்து வந்து...
ரசிகன் என்ற அடைமொழியுடன் அறிமுகம் செய்து கொள்கிறேன்.
புன்னகையுடன் அங்கீகாரம் தருகிறீர்கள்.
அந்த அங்கீகாரமும், உங்கள் எளிமையும் தந்த தைரியத்தில்
அதிக உரிமை எடுத்துக் கொண்டு அளவளாவுகிறேன்.
தகரம் வேய்ந்த திரைஅரங்குகளின் பெயர்களையும்
ஸ்டைலோடு சொல்லி அவற்றிற்கு
சிகரகம்பீரம் கொடுக்கும் உங்கள் சிறப்புக் குரல் பற்றி -
(இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்குமோ என்ற அங்கலாய்ப்புடன்) பட்டியல் போட்டுப் பாராட்டுகிறேன்.
நீங்கள்... நெகிழ்வது தெரிகிறது...
அதற்குப் பிறகு நிறையவே பேசினீர்கள்.
எண் ஜோதிடம் பற்றியும் பேசினோம்.
உங்கள் பிறந்த தேதி கேட்டேன்
சொன்னீர்கள்.
(அடடா நீங்களும் எட்டா? இந்த விஷயத்தில் உங்களை ஒத்திருப்பதை உள்ளுக்குள் உரத்து மகிழ்கிறேன்.)
புகையிரத நிலைய பூபால சிங்கம் புத்தகக் கடை...
சிவராசா எழுதிய எண் ஜோதிட நூலை
என்னிடம் வாங்கிய நீங்கள்...
முகவரி தந்து கடிதம் போடச் சொல்கிறீர்கள்..
யாழ்தேவி புறப்படுகிறது...
அன்றைக்கு மட்டும் யாழ்தேவியின் கம்பீரம்
சற்று கூடியிருப்பதாகவே எனக்குத் தெரிகிறது.
உள்ளே... நீங்கள் அல்லவா ?
அதற்குப் பிறகு... ஓரிரு வருடங்கள் கழித்து...
ஈச்சமோட்டை சனசமூக நிலையம் நடத்தப்போகும்
பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை நீங்கள்
தொகுத்து வழங்க இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
இதற்கு முன்பு ஒரு முறை வீர சிங்கம் மண்டபத்தில்
உங்கள் போட்டி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள முயன்று
முடியாமல் போனது நினைவுக்கு வந்தது.
இருந்தாலும் நம்பிக்கையுடன்
நடுவர்களிடம் பெயர் கொடுத்தேன்.
போட்டியில் பங்கேற்கும் நூற்றுக்கணக்கான
நேயர்களில் என்னையும் ஒருவனாக தேர்ந்தெடுத்தார்கள்.
மேடையில் எனது முறை வருகிறது...
போட்டியின் ஆரம்பத்தில் என்னைப் பற்றிய மேடை அறிமுகத்துக்காக
என்னிடம் சில கேள்விகள் கேட்கிறீர்கள்.
ராஜாவுடன் ஒலிவாங்கி பிடித்துப் பேசுகிறோம் என்ற
உயர மிதப்பில் உற்சாகமாக பதில்களை சொல்லுகிறேன்...
சுதாகர்... உங்கள் பொழுது போக்கு என்ன ? என்று கேட்கிறீர்கள்.
எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து ரசிப்பது என்கிறேன்.
கரகோஷத்தில் ஈச்சமோட்டை அதிர்கிறது.
கரகோஷத்திற்காகத் தானே எம்.ஜி.ஆர் பெயரைச் சொன்னீர்கள் சுதாகர் ?
மறுபடியும் என்னைப் பேச வைக்க விரும்புகிறீர்கள்.
கரகோஷத்திற்காக நான் அவர் பெயரைச் சொல்லவில்லை. வானொலி உலகில் எப்படி ஒரே ஒரு கே.எஸ்.ராஜா இருக்க முடியுமோ அது போல மக்கள் திலகமாக திரை உலகில் ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் இருக்க முடியும்... என்று துவங்கிய என் எம்.ஜி.ஆர் புராணத்தில் சாமர்த்தியமாக உங்கள் பெயரையும் நுழைத்த பெருமிதத்துடன் பேச்சை முடிக்கிறேன்.
இரண்டு மடங்கானது கரகோஷம்!.
நெல்லியடி மகாத்மா திரையரங்கில்...
'உலகம் சுற்றும் வாலிபன்' வெளிவருவதற்கு சில தினங்கள் முன்பு...
அப்படம் நகரங்களில் ஓடும்போது நீங்கள் வழங்கிய வானொலி விளம்பரத்தை ஒலிநாடாவில் பிடித்து வைத்திருந்து,
வேறொரு படத்தின் இடைவேளை சமயத்தில் அதை ஒலிக்கச் செய்ததை எதிர்பாராதவிதமாக கேட்டபோது உங்கள் ரசிகனாக துள்ளி குதித்ததையும்,
சுமார் 15 ஆண்டுகள் கழித்து சென்னை கமலா திரையரங்கில் ஏதோ ஒரு படத்தின் இடைவேளையில்... ஆடியோ விளம்பரங்களின் நடுவில் எதிர்பாராதவிதமாக உங்கள் மின்னல் தமிழைக் கேட்டு அந்த 20 நொடிகளும் எங்கள் கந்தர் மடம் வீட்டுக்குள் நான் கால் பதித்ததையும் -
சீனி மாமாவிடம் வாங்கிய அவர் உயரத்தில் பாதி நீளம் கொண்ட பழங்காலத்து ரேடியோ பெட்டியின் பேசும் முகத்தை முத்தமிட்டதையும் -
உங்கள் குரல் நின்றுபோனதும் மீண்டும் வெறுமைக்குள் வந்து விழுந்ததையும் இங்கு சொல்லாவிட்டால்....
வேறு எங்கு சொல்வது ஐயா ?
அதற்குப் பிறகு....
1986 என்று நினைக் கிறேன்.
நீங்கள் சென்னை விவித்பாரதியில் இசை மலர் நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.
சென்னையில் திரைப்படப் பத்திரிகையாளனாக நான் பணியாற்றி கொண்டிருக்கின்றேன்.
டி.எம். சௌந்தரராஜன், சிவகுமார், கமல்ஹாசன் என்று கலையுலக சாதனையாளர்களை செவ்வி கண்டு எழுதிய நான்...
அந்த வரிசையில் எங்கள் மண்ணைச் சேர்ந்த உங்களைப் பற்றியும் எழுதிக் குளிர ஆசைப்பட்டு -
எங்கெல்லாமோ தேடி அலைந்து...
கடைசியில் தங்கக் குரலின் தங்குமிடம் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ளமாடி வீடு என்கின்ற தகவல் அறிந்து
உங்களை நாடி வந்து செவ்வி கண்டேன்.
இசை மலர் நிகழ்ச்சியில்
உங்கள் ஊஞ்சல் தமிழை ரசித்தவர்கள் இதயம் கனிந்து அனுப்பிய ஆயிரக்கணக்கான பாராட்டு மடல்களையெல்லாம்
உங்கள் இல்லத்தில் ஆசையோடு அடுக்கி வைத்திருந்தீர்கள்.
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வானொலியில் ஒலித்த உங்கள் வர்த்தக விளம்பரங்களையெல்லாம் ஒலிநாடாவில் பதிவு செய்த வைத்திருந்து...
நீங்கள் இந்தியாவில் இருப்பதை அறிந்ததும் அந்த ஒலிநாடாவை உங்களுக்கு அனுப்பி வைத்த தமிழ்நாட்டு ரசிகர் ஒருவரைப் பற்றி என்னிடம் பெருமிதத்தோடு சொல்லி நெகிழ்ந்தீர்கள்.
ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அந்த ஒலிநாடாவை எனக்காக ஒலிக்கச் செய்து என்னையும் பத்து வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்று பரவசப்படுத்தினீர்கள்.
1987, ஜூலை 27ம் தேதி, மாலை 6.30 மணி.
சென்னை மியூசிக் அகாடமியில் என் இசைத் தோழன் உதயா வழங்கும் இன்னிசை மழை நிகழ்ச்சி.
அரங்கு வழிந்த கூட்டம்.
வணக்கம் என்று சொல்லி உங்கள் பாணியில் கரங்களை உயர அசைத்தவாறே மேடையில் தோன்றுகின்றீர்கள்.
நீங்கள் மேடைக்கு வந்ததும் சொல்லி வைத்தது போல அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று கரகோஷம் செய்து உங்களுக்கு மரியாதை செய்கிறார்கள்.
நீங்கள் உணர்ச்சிப் பெருக்குடன் உங்கள் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி... 'எனக்கு போடப்பட்ட மாலை.... உங்களுக்கு போடப்படவேண்டிய மாலை'... என்று சொல்லி ஆடியன்ஸ் மத்தியில் தூக்கிப் போடுகிறீர்கள்...
அந்த நிகழ்ச்சியின் இடைவேளையில் - மேடையின் பின்புற வாயிலில் நின்று கொண்டிருந்த உதயாவை ஒரு ரசிகர் நெருங்குகிறார்.
நீங்கள் தானே இந்த இசை நிகழ்ச்சியின் பொறுப்பாளர் ?
ஆமாம்.... உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கிறார் உதயா.
கலைந்து போய் வாரப்படாத தலையுடனும், கசங்கிப் போன ஆடையுடனும், கலையாத ஆர்வத்துடனும் காணப்பட்ட அந்த ரசிகர் உடனே உதயாவின் கரங்களைப் பற்றுகிறார்.
'கே.எஸ் . ராஜாவை நேரில் பார்க்கணும்னு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு வந்திருக்கிறேன். அவரோட சில நிமிஷங்களாவது பேச ஆசைப்படும்றேன். தயவு செய்து ராஜாகிட்டே என்னை கூட்டிட்டுப் போய் அறிமுகப்படுத்திவைங்க...' என்று கக்கத்தில் இருக்கும் மஞ்சள் பை நழுவுவது தெரியாமல் உதயாவை கெஞ்சுகிறார் அந்த ரசிகர்.
உடனே அந்த ரசிகரை கே.எஸ். ராஜா இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்கிறார் உதயா.
திரை நட்சத்திரங்களின் நடுவில் நின்று கொண்டிருந்த ராஜாவை நெருங்கி அந்த ரசிகரைப் பற்றி சொல்லி அறிமுகப்படுத்துகிறார் உதயா.
உடனே... ராஜா அந்த ரசிகரை சேர்த்து அணைத்துக் கொள்கிறார்.
' நம் இருவரையும் ஒரு போட்டோ எடுங்கள்' என்று அருகில் நின்ற புகைப்படக் கலைஞரிடம் கட்டளையிடுகிறார்.
தோழமையுடன் அந்த ரசிகருடன் அளவளாவுகிறார்.
அறிவிப்பு தீபத்தை தரிசித்த திருப்தியுடன் திருவண்ணாமலை திரும்புகிறது.
இந்த செய்திகளையெல்லாம் பின்பு உதயா என்னிடம் சொன்ன போது இலங்கைத் தமிழனாக என்னுள் பெருமிதம் பெருக்கெடுத்தது.
வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்
ஆவலுடன் கூடியிருக்கும் எங்கள்
வானுயர்ந்த ரசனைகள் வற்றாத வரை...
உங்களை
மறக்க முடியுமா அய்யா ?
-யாழ் சுதாகர்
yazhsudhakar@gmail.com
No comments:
Post a Comment