Saturday, 22 July 2017

SANDOW M.M. A. CHINNAPPA DEVAR - AN EXAMPLE OF HARD WORK


SANDOW  M.M. A. CHINNAPPA DEVAR - AN EXAMPLE OF HARD WORK





தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது.
அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —
நாகி ரெட்டியின், எங்க வீட்டு பிள்ளை, ஏவி.எம்.,மின், அன்பே வா, பந்துலுவின், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள், எம்.ஜி.ஆரை எட்ட முடியாத உயரத்துக்கு கொண்டு சென்றன. 1966ல், எம்.ஜி.ஆர்., ஓய்வு ஒழிச்சலின்றி நடித்துக் கொண்டிருந்த காலம். சிவாஜி கணேசன் மார்க்கெட் மொத்தமாக காலியானது போன்ற சூழல்!
இந்நிலையில், அன்று, தேவர் அலுவலகத்திற்கு வேகமாக வந்து கொண்டிருந்தார் சிவாஜி கணேசன். படிய வாரப்பட்ட தலை, நெற்றியில் விபூதி, வழக்கமான பைஜாமா, ஜிப்பா, இதழ்களில் புன்சிரிப்பு!
வருவது அவர் தானா என ஆச்சரியமாக பார்த்தனர் அங்கிருந்தோர். சிவாஜி கணேசனைப் பார்த்த தேவர், 'என்ன முருகா... இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்துருக்கீங்க...' என்றார்.


'நல்ல விஷயமாத்தேன் வந்துருக்கேண்ணே...' என்றார் சிவாஜி கணேசன். தொடர்ந்து தேவரின் அறையில் ஒலித்த உற்சாகம் கலந்த உரையாடல், கதை இலாகாவை எட்ட, அவர்கள் விஷயத்தை அறிந்து கொள்ள வராண்டாவுக்கு வந்தனர்.
'அண்ணே... 
சிவாஜி இங்க எதுக்காக வந்துருக்காரு... 
உங்களுக்கு ஏதாவது தெரியுமா...' 
என எடிட்டர் பாலுராவைக் கேட்டனர். அவர் தெரியாது என்றதும், 

'பத்மஸ்ரீ விருது கிடைச்சுருக்கில்ல... 
அதுக்கு ஆசிர்வாதம் வாங்க வந்திருப்பார்...' என்றும், 
'இப்ப சிவாஜி கணேசனோட மார்க்கெட் அவுட்டுப்பா... 
மோட்டார் சுந்தரம்பிள்ளை கூட, இந்தியில வசூல் ஆன மாதிரி, இங்கே போகாதுங்கறாங்க; 
புதுப்படம் எதுவும், 'புக்' ஆகலே. அதான் வாய்ப்பு கேட்டு வந்திருப்பார்...' 
என்றும் ஆளாளுக்கு கருத்துக் கூறினர்.

சிவாஜி கணேசனை வழியனுப்பி விட்டு வந்த தேவர், 
'இங்கே என்னப்பா செய்யறீங்க... 
நான் சொன்ன சீனை யோசிச்சீங்களா...' 
என்று குரலை உயர்த்தினார்.

'அண்ணே... 

சிவாஜி இப்ப எதுக்காக வந்தாருன்னு சொன்னாத் தான் எங்களுக்கு வேலை ஓடும்...' என்றனர்.
'என் பெரிய பொண்ணு சுப்புலட்சுமிக்கு, கணேசன் வரன் கொண்டு வந்துருக்காருப்பா. நாம அவருக்கு தொழில் கொடுக்கலன்னாலும், அவருக்கு என்மேல ஒரு தனிப் பாசம் இருக்கத் தான் செய்யுது. அவரே வீடு தேடி வந்து பேசிட்டுப் போறாரு...' என்று கணேசனை, புகழ்ந்து தள்ளினார் தேவர்.


மாப்பிள்ளை ஆர்.தியாகராஜனின் மூத்த சகோதரர் சேது, பொள்ளாச்சியில் பிரபல வணிகர்; சிவாஜி கணேசனின் நண்பர். கணேசனின் முயற்சியால், ஜூன் 1, 1966ல் தேவர் மகள் சுப்புலட்சுமி, திருமதி தியாகராஜன் ஆனார். தி.மு.க.,வை எப்படியாவது ஆட்சியில் அமர வைத்து விட வேண்டும் என்று இளைஞர்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருந்த நேரம்

அது. அச்சமயத்தில்,
 'அண்ணே... தனிப்பிறவி படத்துல ஒரு கனவு பாட்டு சீன் வருது; 
அதுல, நீங்க முருகர் வேஷமும், அம்மு வள்ளியா வந்தா நல்லா ருக்கும்ண்ணே... கவிஞர் பல்லவியை அற்புதமா ஆரம்பிச்சுருக்காரு...' என்று தேவர் கூறியதும், அதிர்ந்து போனார் எம்.ஜி.ஆர்.,

ஏற்கனவே, நல்ல தங்காள் படத்துக்கு வசனம் எழுத தடை விதித்து, கதை, வசனகர்த்தா ஏ.கே.வேலனுக்கு, நாவலர் நெடுஞ்செழியனுக்கு, கடிதம் அனுப்பிய வரலாறும் உண்டு.

மேலும்,
 'அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா...' என்று நடித்து கைத்தட்டல் வாங்கிய பின், திடீரென்று முருகனாகத் தோன்றினால், கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்புமே...' என்று தயங்கியவர், 'முகராசிக்கு கிடைச்ச வெற்றியில, 'ரிஸ்க்' எடுக்காதீங்க அண்ணே...' என்றார்.

உண்மையில், எம்.ஜி.ஆரும் முருக பக்தரே! ஜூபிடர் படங்களில் நடிக்கிற காலத்தில், தேவரோடு சென்று, மருதமலை முருகனை வழிபடுவார் எம்.ஜி.ஆர்.,
பராசக்தி படத்தின் வெற்றிக்குப் பின், வறுமையில் வாடிய தமிழர்களில் பெரும்பாலோர், தி.மு.க.,வில் நம்பிக்கை வைத்தனர். எம்.ஜி.ஆரும் அதுவரை கதர் ஆடை அணிந்த காந்தியவாதியாகவும், கழுத்தில் ருத்ராட்சம், நெற்றியில் சந்தனம், குங்குமம், திருநீறு என்று பக்திப் பழமாகவே வாழ்ந்தவர் தான். பராசக்தி அடித்த புயலில், அவரும் தி.மு.க.,வில் கரை ஒதுங்கினார்.


ஆனாலும், அவர் மனசுக்குள் எப்போதும் முருகனே குடியிருந்தான். கவிஞர் வாலியின் நெற்றியில் பூசிய விபூதியை, கே.ஆர்.ராமசாமி விரும்ப வில்லை என்பதற்காக, அதை அழிக்கச் சொன்னவர் எம்.ஜி.ஆர்., ஆனால், தேவர், தனக்கு முருகனின் திருநீற்றைத் தராவிட்டால், அவரிடம் பேசக்கூட மாட்டார் எம்.ஜி.ஆர்.,

'சும்மா நடிங்கண்ணே ஜோரா இருக்கும்...' என்றார் விடாப்பிடியாக தேவர். எம்.ஜி.ஆருக்காகவே ஆள் உயர வெள்ளி வேலுக்கும் ஆர்டர் கொடுத்தார். நீண்ட தயக்கத்துக்குப் பின், தேகமெங்கும் நகைகளும், ஆபரணங்களும் தவழ, கையில் வேலோடு முருகனாகக் காட்சி அளித்தார் எம்.ஜி.ஆர்.,

அக்காட்சி படமாக்கப்பட்ட போது, தேவர் -
எம்.ஜி.ஆர்., உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தனர். முருகன் கை வேலை, தன் நண்பருக்கே அன்புப் பரிசாக கொடுத்தார் தேவர். எம்.ஜி.ஆரின் முருக பக்தி குறித்து, பிப்., 1974ல், 'பொம்மை' இதழுக்கு தேவர் அளித்த பேட்டி இது:


நான் இப்போ சொல்லப் போற சேதி உங்களுக்கெல்லாம் பிரமிப்பா இருக்கும். எம்.ஜி.ஆருக்கு தெய்வ பக்தி இல்லன்னு ரொம்ப பேரு சொல்றாங்க. ஆனா, நான் எப்ப மருதமலைக்கு போனாலும், எம்.ஜி.ஆர்., பேருக்கு அர்ச்சனை செய்வேன்; அந்தப் பிரசாதத்தைக் கொடுக்கும் போது, உட்கார்ந்திருந்தால் கூட, எழுந்து, பய பக்தியோட வாங்கிப்பார். எம்.ஜி.ஆரிடம்., ஒருநாள், 'மருதமலை போயிட்டு வந்தே'ன்னு சொன்னேன்; உடனே, 'பிரசாதம் எங்கே?'ன்னு கேட்டார். ஆனால், பிரசாதத்தை எடுத்துப் போக மறந்து விட்டேன். அன்று முழுவதும் எம்.ஜி.ஆர்., என்னுடன் பேசவே இல்ல!
- இவ்வாறு கூறியிருந்தார் தேவர்.


தேவரின், 'தா' வரிசைப் படங்கள் வசூல் செய்த மாதிரி, கன்னித்தாய், தொழிலாளி மற்றும் முகராசிக்குப் பின் வந்த, தனிப் பிறவி மக்களைக் கவரவில்லை. செப்.,1966ல் தனிப்பிறவியோடு வெளியான, சரஸ்வதி சபதம், கே.எஸ்.கோபால கிருஷ்ணனின், சின்னஞ்சிறு உலகம் மற்றும் முக்தா பிலிம்சின், தேன் மழை அத்தனையும் வெற்றி!

கொடைக்கானலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஜெமினி கணேசன், மீண்டும் கோடம்பாக்கத்தில் பிசியானார். பொங்கல் ரிலீசாக, தாய்க்கு தலைமகன் படம் வெளியாக இருந்தது. அத்துடன், கந்தன் கருணை, 'சோ'வின் மனம் ஒரு குரங்கு, பீம்சிங்கின், பட்டத்து ராணி மற்றும் பெண்ணே நீ வாழ்க என்று நிறைய படங்கள் வெளியாக காத்திருந்தன.

ஜனவரி, 13ல், பொங்கலுக்கு முதல் நாள், வெலிங்டனில், தாய்க்கு தலைமகன் படத்தை வெளியிட முடிவு செய்தார் தேவர். சில நேரங்களில், பொங்கல் தினம், கரிநாள் என்றும், 'சுபம் விலக்க' என்று காலண்டர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். தேவருக்கு ராசி எண் 5; ஆனால், ஏனோ,

1967ல் போகி அன்றே, படத்தை வெளியிட்டார் தேவர்.
தேவர் பிலிம்சின் ஆஸ்தான எழுத்தாளர் ஆரூர்தாஸ் மற்றும் மாராவும், மதுரை திருமாறனும் இணைந்து உருவாக்கிய படம், தனிப்பிறவி. ஆனாலும், அப்படத்தை எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் புறக்கணித்து விட்டனர். அதனால், தாய்க்கு தலைமகன் படம் குறித்து ரொம்ப ஆர்வமாய் இருந்தார் தேவர்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஜெயலலிதா - ரவிச்சந்திரன் நடிக்க, மகராசி படத்தை இயக்கினார் திருமுகம். ஆனால், படம் பாதியில் நின்று விட்டது. காரணம், ரவிச்சந்திரனுக்கு, அம்மை!
அம்மை குணமாகி வந்த ரவிச்சந்திரன், அவர் ஒப்பந்தமான மற்ற படங்களை தவிர்த்து, முதலில், மகராசி படத்தில் நடித்துக் கொடுத்தார். அவரை வைத்து ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில், மூன்று சண்டை காட்சிகளை, அசுர வேகத்தில் படமெடுக்க முடிவெடுத்தார் இயக்குனர், எம்.ஏ.திருமுகம். இதனால், களைத்துப் போனார் ரவிச்சந்திரன். 'தம்பி சோர்ந்து போகாதீங்க... இன்னும் நம்ம கம்பெனியில நிறைய படங்கள் நடிப்பீங்க. நாளைக்கு காலையில பத்திரிகையை பாருங்க. 'ரவிச்சந்திரன் பூரண குணமானார்; ஒரே நாளில் மூன்று சண்டைக் காட்சியில் நடித்தார்ன்னு செய்தி வரும்; புதுசா நாலு பேர் உங்கள, 'புக்' செய்ய ஓடி வருவாங்க...' என்று உற்சாகம் ஊட்டினார் தேவர்.


கடந்த, 1967ல் தமிழ்ப் புத்தாண்டில் வெளியான, மகராசி பெரிய வெற்றி பெறவில்லை. அதே தினத்தில் வெளியான, பட்டணத்தில் பூதம் நல்ல வசூல். அதனால், அடுத்து தன் படங்களில் ஜெய்சங்கரை ஒப்பந்தம் செய்தார் தேவர். அவரை வைத்து, நேர்வழி, அக்கா தங்கை, பெண் தெய்வம், மாணவன் மற்றும் கெட்டிக்காரன் என்று, வரிசையாக படம் தயாரித்தார்.


ஓர் இடை வேளைக்குப் பின், மீண்டும் நடிக்க வந்தார் எம்.ஜி.ஆர்., உற்சாகமான தேவர், மறுபிறவி, விவசாயி, தேர்த்திருவிழா, காதல் வாகனம், மற்றும் தந்தையும் மகனும் என, பல படங்களுக்கு பூஜை போட்டார்.


இதில், மறுபிறவி படத்தில், எம்.ஜி.ஆர்., நிறைய குதிரை சவாரி செய்ய வேண்டி இருந்ததால், அவர் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை; கூடவே, சுடப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. அதனால், எம்.ஜி.ஆர்., மறுபிறவியை தள்ளிப் போட்டார்.


ஏறக்குறைய, 10 ஆண்டுகளுக்கு பின், மறுபிறவி படத்துக்கு உயிர் கொடுத்தார் தேவர். அப்போது எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வர். அவருக்கு பதில், ரஜினி நடித்தார். படத்தின் பெயர், தாய் மீது சத்தியம்!



அப்பா மற்றும் மகன் என, இரு வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்ட நாள் ஆசை. அத்தகைய கதை என்பதால், தந்தையும் மகனும் படத்துக்கு பூஜை போடப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பத்மினி, விஜயா என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், என்ன காரணமோ, அப்படத்தையும் தள்ளி வைத்து விட்டார் எம்.ஜி.ஆர்.,


எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கில் தீர்ப்பு வெளிவந்த, நவ., 1967ல் தீபாவளியன்று, விவசாயி ரிலீசானது. ஆனால், 'பாடல்களை நீக்கி விட்டுப் பார்த்தால், படம் அக்ரிகல்சுரல் டாகுமெண்டரி...' என்று பத்திரிகைகள் விமர்சித்தன; ரசிகர்கள் படத்தை ரசிக்கவில்லை.


விவசாயி வெளியாகி மூன்று மாதங்களுக்கு பின், தேர்த் திருவிழா வந்தது; அதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. டி.ஆர்.ராமண்ணாவிடம் பணிபுரிந்தவர், டி.என்.பாலு. பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த சம்பவங்களைக் கூறுவதில், புகழ் பெற்றிருந்தார். இவரின் கதைகளாலேயே, ராமண்ணா வெற்றி மேல் வெற்றி பெறுகிறார் என நினைத்த எம்.ஜி.ஆர்., அவரை தேவர் பிலிம்சுக்கு அழைத்து வந்து, அவருக்காக, தேவரிடம் வாதாடினார். வேறு வழியின்றி சம்மதித்தார் தேவர். ஆனால், அவரது, காதல் வாகனம் என்ற கதை, தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவிற்கும், தேவருக்கும் பிடிக்கவில்லை.


எம்.ஜி.ஆரின், 101வது படம், காதல் வாகனம். அதில் விசேஷமாக ஆங்கிலோ இந்தியப் பெண் வேடத்தில் வந்து போனார் எம்.ஜி.ஆர்., இப்படத்தின் படப்பிடிப்பின் போது மீண்டும் தேவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் மோதல் ஏற்பட்டது.


அச்சமயத்தில், அடிமைப் பெண் படத்தை இரண்டாவது முறையாகத் தயாரித்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்., இம்முறையாவது படத்தை முடித்து விட வேண்டும் என அவர் நினைத்துக் கொண்டிருக்கையில், தேவரின், காதல் வாகனம் குறுக்கிட்டு விட்டது. 1968ல், 'தீபாவளி ரிலீஸ், காதல் வாகனம்...' என்று தேவர் அறிவிக்க, எம்.ஜி.ஆரும், 'சரி...' என்றார்.


அதற்குள், அடிமைப்பெண் வெளிப்புறப் படப்பிடிப்புக்காக, எம்.ஜி.ஆர்., ராஜஸ்தான் செல்ல வேண்டியிருந்ததால், 'அண்ணே... நான் இல்லாத சீன் எல்லாத்தையும் எடுத்து முடிங்க; ராஜஸ்தான்ல இருந்து திரும்பி வந்து, என் போர்ஷனை சீக்கிரமே நடிச்சுக் கொடுத்துடறேன்...' என்றார் எம்.ஜி.ஆர்.,


சற்று எரிச்சலோடு எம்.ஜி.ஆரை வழி அனுப்பினார் தேவர். சொன்ன தேதியில் எம்.ஜி.ஆர்.,திரும்பவில்லை; மெதுவாகத் தான் சென்னை வந்தார்.


தீபாவளிக்கு சில நாட்களே இருந்த நிலையில், டென்ஷனான தேவர், 'முருகா... என் படம் கண்டிப்பா தீபாவளி ரிலீஸ்; முடிஞ்சா இப்பவே நீங்க வந்து வேலையை ஆரம்பிங்க. ரெஸ்ட் எடுக்கறேன்னு இன்னும் லேட் செய்யாதீங்க...' என்றார் சிறிது கறாராக! ஓடோடி வந்து, இரவு பகலாக நடித்துக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்., ஆனாலும் காதல் வாகனம் ஓடவில்லை. வடபழனி முருகன் கோவில் சன்னிதியில் நின்று, 'இத பார் முருகா... காதல் வாகனம் படம் தேவர் பிலிம்சுக்கு கரும்புள்ளி ஆகிடுச்சு. எம்.ஜி.ஆர்., கால்ஷீட்டும் இனி உடனடியாக கிடைக்காது. இதுவரை உன் தயவால, 30 படங்கள் எடுத்துட்டேன்; அதெல்லாம் எம்.ஜி.ஆர்., ஆதரவுல ஜெயிச்சது. அடுத்து, நான் எடுக்கற படத்துக்கு, உம்மேலே நான் வெச்சுருக்கிற பக்தியும், உனக்கும், எனக்குமான உறவு மட்டுமே மூலதனம்.



'என்னைக் கைத்தூக்கி விடறதும், குப்புறத் தள்ளுறதும் உன் இஷ்டம். இது, என் முதல் பக்திப் படம். இதுல ஜெயிச்சிட்டா, தொடர்ந்து, உன் புகழைச் சொல்ற மாதிரி நெறைய சாமி படம் எடுப்பேன். இல்ல வழக்கம் போல, நாயையோ, பாம்பையோ வெச்சு தான் படம் தயாரிப்பேன். என்ன சொல்ற... எனக்கு துணை நிக்கிறியா...' என்று மானசீகமாக முருகனிடம் கேட்டவரின் மனசுக்குள், துணைவன் என்ற வார்த்தையே விதையாக விழுந்து விட்டது. அதையே தன் அடுத்த படத்துக்கு தலைப்பாக வைத்தார். அப்போது புராணப் படங்களாக எடுத்து கொண்டிருந்தார் ஏ.பி.நாகராஜன். தேவருக்கு புராணக் கதைகளில் ஆர்வம் கிடையாது. அவர், தன் சொந்த வாழ்வில் முருகனோடு பெற்றிருந்த நிஜ அனுபவங்களே படம் எடுக்கப் போதும்; ஆனாலும், சிறு தயக்கம். தன் சொந்தக் கதைகளை எடுத்தால் எடுபடுமா என்று!


புதிய தயாரிப்புக்கு பக்திக் கதை தேவை; அதை யாரை வைத்து எழுதி வாங்கலாம் என்று யோசித்தார். கதை இலாகாவில் உள்ளோரிடம், 'ஏம்பா... எல்லாரும் இப்படி கம்முன்னு இருந்தா எப்பிடி... என் ரசனை தான் உங்க எல்லாருக்கும் தெரியுமே... படத்துல விலங்குகள் வர்றதோட, முருகனும் இருக்கணும். முருக வேஷத்துல சின்னக் குழந்தை நடிச்சா நல்லாருக்கும்...' என சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இடை மறித்த திருமுகம், 'பாலமுருகன் மாதிரியா...' என்று கேட்டார்.


'நல்ல வேளை ஞாபகப்படுத்தினே... பாலமுருகன், சிவாஜிக்கு எழுதிய, எங்க ஊர் ராஜா சக்கப்போடு போடுது; போயி அவர நான் கூப்பிட்டன்னு சொல்லுங்க...' என்றார். கதை இலாகா குஷியானது; கதாசிரியர் பாலமுருகன் வீட்டுக்கு, கார் பறந்தது.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


அண்ணாசாலையில் ஓடுகிற முக்கால்வாசி சினிமாக்களில், அந்த நடிகை, இரண்டாவது கதாநாயகியாகவே வந்து போனார். நிறமோ கறுப்பு; சர்ச் பார்க்கில் படித்திருந்தாலும், பேச்சில் முழுக்க முழுக்க தமிழ் நெடி. பிரபலமான நடன ஆசானின் உறவு பெண்ணான ஸ்ரீபிரியாவை தவிர, வேறு யாரையும், அலமேலுவாக தேவரால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

எதுகை மோனைக்காக, ஆட்டுக்கார அலமேலு என்று படத்திற்கு பெயர் சூட்டினர். ஏற்கனவே கஜானா காலி. அதனால், வழக்கமாக வாகினி ஸ்டுடியோவில் பூஜை போடுவதை தவிர்த்து, முதன் முதலாக தேவர் பிலிம்ஸ் அலுவலகத்திலேயே பூஜை போட்டனர். தன் பேத்தி சண்முக வடிவை, 'கேமரா ஸ்விட்ச் ஆன்' செய்ய வைத்தார் தேவர்.



ஆட்டுக்கார அலமேலு படத்திற்காக மேட்டுப்பாளையத்தில் முகாமிட்டார், தேவர். திரைக்கதை மற்றும் வசனத்தை தூயவன் எழுத, அதிக செலவில்லாமல், படம் எடுத்தனர். கிட்டு கவுண்டரின், 100 ஏக்கர் தோட்டத்தில், ராமுவின் தனி ஆவர்த்தனம்.
பாட்டெழுத கண்ணதாசன் அகப்படவில்லை. தேவர் யாருக்காகவும், எதற்காகவும், காத்திருந்து பழக்கப்படாதவர். மாராவை அழைத்து, 'ஏம்பா... நாலு பாட்டு தானே... நீயே எழுதிடேன்; இதுக்கு எதுக்கு கவிஞரு...' என்றார்.



வேர்க்கடலையை, உள்ளங்கையில் வைத்தபடி, ராமுவின் முன் செல்வார், பயிற்சியாளர் நசீர். ராமு, எம்.ஜி.ஆர்., கணக்காக குதிக்கும்; முட்டும்; கொம்பால் குத்தி மோதும்; எஜமானி அலமேலுவின் உயிரை காப்பாற்றும்; 'டேப் ரிகார்டரை ஆன்' செய்து, பாட்டு கேட்கும்; அதை வாயில் கவ்வியபடி, க்ளைமாக்சில் போலீசிடம் ஓடும். தேவரை கிண்டல் செய்து, 'என்ன அண்ணே... இந்த ஆடு, நம்பமுடியாத சாகசத்தையெல்லாம் செய்யுது, ஜனங்க ஏத்துக்குவாங்களா...' என்பார் சிவக்குமார்.



'அடப்போப்பா... விட்டலாச்சாரியா படங்கள மக்கள் எப்படி ரசிக்கிறாங்க. மாயாஜாலத்தை ஒத்துக்கிறவங்க, ஆடு பல்டி அடிக்கிறத ரசிக்க மாட்டாங்களா... தாசரி நாராயணராவ் தெலுங்குல எடுத்த, சொர்க்கம் நரகம் படம் வெள்ளிவிழா கொண்டாடிடுச்சு. அந்தப் படத்த இந்தியில, ரீ - மேக் செஞ்சு, காசு அள்றாரு நாகி ரெட்டி. நாம அந்தப் படத்த தமிழ்ல தயாரிச்சோம்; ஓடலை. தேவருக்கு எதுக்கு இந்த வேலை. 'இவர யாரு விலங்குக இல்லாம படம் எடுக்க சொன்னதுன்னு கடிதம் போடறானுங்க...' என்றார்.



தேவரை தவிர, ஒருவருக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை. வழக்கமாக அவரிடம் படம் வாங்கும் வினியோகஸ்தர்கள், 'ஒரு வாரம் தாங்காது அண்ணே...' என்று, முகத்தை தொங்கப் போட்டபடியே, படப்பெட்டியை எடுத்தனர். ஒரு சிலர் மிக புத்திசாலித்தனமாக வந்த விலைக்கு, வாங்கிய படத்தை விற்று விட்டனர்.
கோமாதா என் குலமாதா தேவருக்கு வெற்றிப்படம். ஆட்டுக்கார அலமேலு அந்த அளவு ஓடினாலும் போதும் என்று நினைத்தார் தேவர். 1977ல் தீபாவளி அன்று, வெலிங்டன், பரங்கிமலை ஜோதி, அபிராமி என்று, தியேட்டர்களுக்கு படை எடுத்தனர் மாரா மற்றும் தியாகராஜன்.


வழக்கமாக தீபாவளி ரேசில் பங்கு கொள்ளும் சிவாஜி, ஜெய்சங்கர் படங்களுடன் சிவகுமாரின் மூன்று படங்கள் வெளியாகி இருந்தன. முதன் முதலாக பெரிய கம்பெனியில், தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமான கதாநாயகி வேடம் என்பதால், படம் வெற்றியடைய வேண்டுமே என்று, தேவருக்கு மேல் முருகனை கும்பிட்டார் ஸ்ரீபிரியா.


தேவர் பிலிம்சிலிருந்து காலையிலேயே அவர் வீட்டுக்கு ஊழியர்கள் சென்று விட்டனர். ஸ்ரீபிரியாவிடம் பழநி பஞ்சாமிர்தம், விபூதி, சந்தன பிரசாதங்களை கொடுத்தனர். ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும், தங்களுடன் பணியாற்றிய கதாநாயகன், கதாநாயகிகள், டெக்னீஷியன்கள், கதை, வசனகர்த்தா அனைவருக்கும் பழநி பஞ்சாமிர்தமும், விபூதியும் வழங்குவது தேவர் பிலிம்ஸ் வழக்கம் என்று, அவருக்கு விளக்கினர்.


ஸ்ரீபிரியா கண்களில் ஒற்றி, 'முருகா நீ தமிழ்க் கடவுள்... நான் என்ன முயற்சி செஞ்சாலும், இங்கே தெலுங்கு, மலையாள கதாநாயகிகளுக்கு கிடைக்குற, வாய்ப்பு எனக்கு வரமாட்டேங்குது. அந்த நிலைமை மாறணும். நானும் முன்னணி கதாநாயகி ஆகணும்...' என, வேண்டிக் கொண்டார். அவர் வேண்டுதல் அப்படியே பலித்தது. 1977ம் ஆண்டு, ஆடு ஜெயித்த தீபாவளியாகி விட்டது. கதாநாயகன் சிவகுமார் முதல், 'ஜாக்பாட்டை' கோட்டை விட்ட வினியோகஸ்தர்கள் வரை, தேவரின் கணிப்பை மெச்சினர். தேவர் பிலிம்சில் அதுவரை எந்த விலங்குக்கும் கிடைக்காத பேரும் புகழும், ராமுவுக்கு கிடைத்தது.



ஆடு தோன்றிய ஒவ்வொரு காட்சியும், தியேட்டர்களில் ஆரவாரம். தேவர் பிலிம்சில் எம்.ஜி.ஆர்., நடித்த, 16 படங்களையும் கடந்து, ஆட்டுக்கார அலமேலு வெள்ளி விழா கொண்டாடியது. தெலுங்கிலும் இப்படத்தை, புட்டேலு பொன்னம்மா என்ற பெயரில் தயாரித்தது, தேவர் பிலிம்ஸ். தமிழை விடவும் அங்கு வசூலும், வரவேற்பும் அதிகம்.
மே 4, 1978ல் அபிராமி தியேட்டரில் ஆட்டுக்கார அலமேலு படத்தின் வெள்ளி விழா. அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, ராமு என்ற ஆடும் கலந்து கொண்டு, எம்.ஜி.ஆரிடம் கேடயம் பரிசு பெற்றது.


நீலமலைத் திருடன் மற்றும் நேர்வழி படங்களைத் தொடர்ந்து ரஜினியை குதிரை மீது ஏற்றி, தாய் மீது சத்தியம் படத்தை தயாரித்தார் தேவர். ரஜினிக்காக, 'புறப்படடா தம்பி, புறப்படடா! தர்மம் பூமியில் நின்று நிலையாய் வாழ புறப்படடா...' என எழுதினார் மருதகாசி.

மூன்று பாடல்களையுமே டி.எம்.சவுந்தரராஜன் பாடினார். காட்சியை படமாக்கலாம் என்றால், படப்பிடிப்பில் ரஜினி ஒத்துழைக்கவில்லை என்றனர். ரஜினிக்கு பைத்தியம் என்று, திரை உலகமும், பத்திரிகைகளும் சேர்ந்து முரசு கொட்டின. தேவருக்கும் அது புது அனுபவம். நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் வழி இல்லை. அதிக வேலை பளு மற்றும் போதை பழக்கத்தால் ஏற்பட்ட நரம்பு தளர்ச்சி என்று மருத்துவர்கள் காரணம் கூறினர். கடந்த 1978ல் தமிழ் சினிமா, ரஜினிக்கு மாறியிருந்தது. சிவாஜி கணேசன் படத்திலும், சிறப்புத் தோற்றத்தில் ரஜினி வந்தார். படப் பிடிப்புக்கு ரஜினியைத் தேடி சென்று தனியே கூப்பிட்டு பேசினார் தேவர்; தன் முடிவைக் கூறினார் ரஜினி.



'முடியல அண்ணே... எல்லாம் போதும்ன்னு இருக்கு. நான் எச்சித்துப்பினாக் கூட, 'நியூஸ்' வருது. சுதந்தரமா வாழ முடியல. பொறுமைய ரொம்பவே சோதிக்கறாங்க. தூங்கி நாலு நாளாச்சு. மூணு, ஷிப்டும், 'டைட் கால்ஷீட். 'ஷாட் ரெடி' மட்டும் தான் காதுல கேக்குது. எந்தப் புகழைத் தேடி சென்னை வந்தேனோ, அதுவே இப்ப என்னை ஓட ஓட விரட்டுது. தற்கொலை பண்ணிக்கலாம்ன்னு தோணுது...' என்றார் ரஜினி.


அதிர்ந்த தேவர், 'முருகா... என்ன வார்த்தை சொல்ற... உங்கிட்ட திறமையும், உழைப்பும் இல்லேன்னா இந்த வெற்றி வந்துருக்குமா... நீ பழசை மறக்கற ஆளு இல்ல; பெங்களூர்ல கண்டக்டரா வேல செஞ்சது முதல், எல்லாத்தையும் குமுதம் புத்தகத்துல படிச்சேன். கடவுள் பக்தியும் இருக்கு. அப்புறம் ஏன் ஒடிஞ்சு போறே? இத்தனைக் கெடுபிடியிலும் உடம்பு சுகமில்லன்னாலும், ஷூட்டிங்குக்கு சரியா வந்துட்ட. தொடர்ந்து நடி. எம்.ஜி.ஆருக்கு அப்புறம் வயசுப் பசங்க உங்கிட்ட தான் மயங்கிக் கிடக்கிறாங்க. போ தம்பி... மருதகாசி பாட்டைப் படிச்சப் பார்த்தியா, உனக்காகவே எழுதின மாதிரி இருக்கு...' என்று ஆறுதல் கூறினார் தேவர்.
குதிரையில் ஏறினார் ரஜினி.

No comments:

Post a Comment