Monday 10 July 2017

FORGOTTEN TAMIL ACTORS - - மறக்கப்பட்ட நடிகர்கள்:


FORGOTTEN  TAMIL ACTORS - 
- மறக்கப்பட்ட நடிகர்கள்: 

 - மறக்கப்பட்ட நடிகர்கள்: 

பி.வி. நரசிம்ம பாரதி



  • ‘நான் கண்ட சொர்க்கம்’ படத்தில் நாரதராக...
  • ‘சம்பூர்ண ராமாயணம்’ படப்பிடிப்பில் என்.டி.ஆர்., ஏ.பி.என்.னுடன் | படங்கள் உதவி: ஞானம்



கட்டுடலும், கவர்ச்சியான முகமும் கொண்ட நரசிம்ம பாரதி, பதினைந்து வயதில் தேர்ந்த ஸ்திரீ பார்ட் நடிகராகப் பெயர்பெற்றிருந்தார். எகிப்து நடனம், குறத்தி நடனம் ஆடி நாடக ரசிகர்களை மகிழ்விப்பதிலும் வல்லவராக இருந்தார். இவரது திறமையைக் கண்ட புளியம்பட்டி ஜமீன்தார் நாடக சபா ஆறு மாதக் குத்தகையில் அவரை மலேசியக் கலைப் பயணத்துக்கு அழைத்துச் சென்றது.
அங்கே ‘பாமா விஜயம்’ நாடகத்தை 100 நாட்கள் நடத்தினார் புளியம்பட்டியார். அதில் கர்வமும் மிடுக்கும் நிறைந்த ‘பாமா’வாகப் பெண் குரலில் பேசிப் பாடி, ஆடி நடித்தார் நரசிம்ம பாரதி. ஆடியதும் பாடியதும் பெண்ணா இல்லை ஆணா என்று மலேசியத் தமிழ் ரசிகர்கள் பலருக்கும் சந்தேகம். நாடகம் முடிந்ததும் மாலையுடன் மேடையேறிவிட்டார்கள் ரசிகர்கள். வேஷம் கலைக்காமல் சதுர் நடை நடந்துவந்து வந்து கழுத்தை நீட்டி ரசிகர்களிடம் மாலையை வாங்கிக்கொண்டார் நரசிம்ம பாரதி. பாமாவுக்கே மாலையிட்ட சந்தோஷம் ரசிகர்களுக்கு,

நடுக்கடலில் நாடகம்
பர்மிட் காலம் முடிந்து கப்பலில் நாகப்பட்டினம் துறைமுகம் நோக்கிப் புறப்பட்டனர் புளியம்பட்டியார் குழுவினர். உயர் வகுப்புப் பயணிகளுக்காகக் கப்பலில் ‘கிருஷ்ண லீலா’ நாடகத்தை நிகழ்த்தினார்கள். நாகப்பட்டினத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின் மதராஸ் செல்லும் அந்தக் கப்பலில் பயணித்தார் தமிழ் சினிமாவின் அன்றைய சூப்பர் ஹிட் இயக்குநரான ஒய்.வி. ராவ். நாடகக் கலையின் தாய்வீடான மதுரையைச் சேர்ந்த ‘மதுரை ராயல் டாக்கீஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் எம்.கே.டி நடித்த ‘சிந்தாமணி’ திரைப்படத்தை இயக்கியவர் ஒய்.வி.ராவ்.
அந்தப் படம் அப்போது மதுரையில் ஆறு மாதங்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அப்படிப்பட்டவர் தங்கள் நாடகத்தைப் பார்க்கிறார் என்றால் எத்தனை உற்சாகமாக நடித்திருப்பார்கள்! அந்த நாடகத்தில் வாலிப கிருஷ்ணாகவும் இரண்டாம் பாதியில் பெரிய கிருஷ்ணருக்கு மனைவியாக ருக்மணி வேடமும் ஏற்று நடித்த நரசிம்ம பாரதியைக் கண்டு ஆச்சரியப்பட்ட ராவ், அவரை அருகே அழைத்தார்.. “உன் வயதில் நானும் கிருஷ்ணன் வேஷங்களில் நடிப்பேன். உன்னைப் பார்த்தது என்னைப் பார்ப்பதுபோல் இருக்கிறது” என்று பாராட்டினார். நரசிம்ம பாரதிக்குத் தலைகால் புரியவில்லை. அந்தக் கணமே சினிமாவில் நடிக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.
16 வயதில் மதராஸ் வந்தவருக்கு மயிலாப்பூரில் அடைக்கலம் கிடைத்தது. 1938-ல் வெளியான ‘பக்த மீரா’ படத்தில் நரசிம்ம பாரதிக்குச் சிறிய வேடம் ஒன்றை அளித்தார் ராவ். படத்தில் வரும் சில காட்சிகளுக்கு ‘வாய்ஸ் ஓவர்’ கொடுக்கவும் அவரைப் பயன்படுத்திக்கொண்டார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் 18 வயதில் ராஜபார்ட் நடிகராக உயர்த்தப்பட்டார் நரசிம்ம பாரதி. சுமார் 6 ஆண்டுகள் ராமர், கிருஷ்ணர், நாரதர், முருகர் என பிஸியான ராஜபார்ட் நாடக நடிகராக வலம் வந்தவரை கோவையிலும் சேலத்திலும் மையங்கொண்டிருந்த தமிழ் சினிமா காந்தமாய் மீண்டும் சுண்டி இழுத்தது.
‘கஞ்சன்’ படத்தில் கதாநாயகன்
விடிய விடிய நாடகங்களில் நடித்துக்கொண்டு பகலில் ஓய்வெடுக்காமல் சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த நரசிம்ம பாரதியை ஜுபிடர் சோமுவிடம் அறிமுகப்படுத்தினார் 50களின் புகழ்பெற்ற கதை, வசனகர்த்தாவான இளங்கோவன். அப்போது ஜுபிடர் தயாரித்து வெளியிட்ட ‘கண்ணகி’ (1942) படத்துக்கு இளங்கோவன் எழுதிய வசனங்களில் சிலவற்றை நரசிம்ம பாரதி செந்தமிழில் பேசி நடித்துக்காட்ட வியந்துபோனார் சோமு.
ஏற்கெனவே ஜுபிடர் பிக்ஸாரின் ‘ஸ்ரீமுருகன்’ படத்தில் சிறு வேடம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தீவிர காங்கிரஸ்காரரும் எழுத்தாளருமான கோவை சி.ஏ. ஐய்யாமுத்துப் பிள்ளை, ஜுபிடர் நிறுவனத்துக்காக எழுதி இயக்கிய ‘கஞ்சன்’ (1947) படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் நரசிம்ம பாரதி. இலக்கிய நயமும் இனிய பாடல்களும் சீர்திருத்தக் கருத்துக்களும் கொண்ட இந்தப் படம் சிறந்த பாடமாக வெளியாகித் தோல்வியடைந்து. தராள மனம் கொண்ட தமிழர்களைக் ‘கஞ்சன்’என்ற தலைப்பு ஈர்க்கவில்லைபோலும். எனினும், அடுத்து வந்த ‘திகம்பர சாமியார்’(1950) நரசிம்ம பாரதியைக் கைதூக்கிவிட்டது.
தேடி வந்த தெய்வ வேடங்கள்
ஜுபிடர் நிறுவனத்துக்காகப் புகழ்பெற்ற படங்களை உருவாக்கிய சுந்தர்லால் நட்கர்னி இயக்கத்தில் வெளியான படம் ‘வால்மீகி’ (1946). அதில் நரசிம்ம பாரதியை ராமராகவும் மகாவிஷ்ணுவாகவும் தோன்ற வைத்தார் நட்கர்னி. பிறகு ‘கன்னிகா’ (1947) என்ற படத்தில் நாரதராக நடித்துப் புகழ்பெற்றார். டி.இ. வரதன் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் நரசிம்ம பாரதி ஏற்ற நாரதர் வேடம்தான் பிரதான பாத்திரம். இந்தப் படத்தில்தான் நாட்டியத் தாரகையராக லலிதா பத்மினி சகோதரிகள் அறிமுகமானார்கள். இதன் பிறகு நான் கண்ட சொர்க்கம் (1960), தக்ஷயக்ஞம் (1962) ஆகிய படங்களில் நாரதராகத் தோன்றியவரை விடாப்பிடியாகத் துரத்திய தெய்வ வேடம் கிருஷ்ண அவதாரம்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் கிருஷ்ண அவதாரமாக நடிப்பதென்றால் அது என்.டி.ராமராவாகத்தான் இருக்க வேண்டும் என்று அந்த வேடத்தை அவருக்குப் பட்டா போட்டுக் கொடுத்திருந்த காலகட்டம் அது. நரசிம்ம பாரதியின் வாட்ட சாட்டமான வசீகரத் தோற்றம் அதை மாற்றிக்காட்டியது. ஜுபிடர் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்த ‘அபிமன்யூ’ (1948) படத்தில் கிருஷ்ணராக நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றிருந்தார் நரசிம்ம பாரதி.
அந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடந்து இயக்குநர் சுந்தர் ராவ் நட்கர்னி ‘கிருஷ்ண விஜயம்’ (1950) படத்தை இயக்கினார். அதில் ராதாகிருஷ்ணராக நடிக்கப் பட முதலாளிகள் என்.டி.ராமராவைப் பரிந்துரைத்த நிலையில் நரசிம்ம பாரதியை விடப்பிடியாகத் தேர்வு செய்தார் இயக்குநர். அதிக தந்திரக் காட்சிகளோடு மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது இந்தப் படம்.
நண்பனுக்கு உதவி
அந்தப் படத்தில் ராதா கிருஷ்ண லீலையைச் சித்தரிக்கும் காதல் பாடலைப் பாட, காதல் ரசமும் கம்பீரக் குரலும் இணைந்த ஒரு பின்னணிப் பாடகரைத் தேடிக்கொண்டிருந்தார்கள் நட்கர்னியும் அந்தப் படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையாவும். பல புதிய பாடகர்களின் குரல்களைச் சோதனை செய்து பார்த்தும் திருப்தி வரவில்லை. அப்போது நட்கர்னியிடம் தனது நண்பன டி.எம்.சௌந்தர்ராஜனைப் பற்றி எடுத்துக் கூறினார் நரசிம்ம பாரதி.
உடனே அவரைக் கிளம்பிவரச் சொல்லுங்கள் என்றார் நட்கர்னி. சௌந்தர்ராஜனுக்கு உடனே தந்தி கொடுத்தார் நரசிம்ம பாரதி. மறுநாள் கோவை வந்து சேர்ந்த சௌந்தர்ராஜனை வைத்து ‘ராதே நீ என்னை விட்டுப் போகாதடி...’ என்ற பாடலைப் பாடச் சொன்னார் இசையமைப்பாளர் சுப்பையா. கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ ஒலிப்பதிவுக் கூடத்தில் ஆர்கெஸ்ட்ரா இல்லாமல் கம்பீரமாகப் பாடினார் டி.எம்.எஸ். அதன்பிறகு இசையுடன் அன்றே அந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டதோடு படத்தில் ஆண் குரலில் அமைந்த மற்ற பாடல்களையும் டி.எம்.எஸ்.ஸுக்கே கொடுத்தனர். முதல் வாய்ப்பைப் பெற்றுத் தந்த நரசிம்ம பாரதிக்கே டி.எம். எஸ். பாடிய அந்த முதல் பாடல் பின்னணியாக அமைந்துபோனது.
கிருஷ்ண விஜயம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாவிட்டாலும் “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று அழைக்கும் அளவுக்கு இயக்குநர் நட்கர்னியின் நெருக்கமான நண்பரானர் நரசிம்ம பாரதி. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருக்கு இணையாக வளர்ந்து நின்றிருக்க வேண்டிய நரசிம்ம பாரதி, யாரிடமும் வாய்ப்புக்காக இறைஞ்சி நின்றதில்லை. நாயகனுக்கான வாய்ப்புகள் இல்லாதபோது துணைவேடங்களில் நடிக்கவும் அவர் தயங்கியதில்லை.
பாரதி நாடக மன்றம்
ஒரு கட்டத்தில் திரையிலிருந்து மெல்ல ஒதுக்கப்பட்ட நரசிம்ம பாரதி, மன வருத்தம் ஏதுமின்றித் தனது தாய்வீடான நாடக மேடையை நேசிக்க ஆரம்பித்தார். அந்நாளின் இசையமைப்பாளர் கோவிந்தராஜுலு நடத்திவந்த நாடகக் குழுவுடன் இணைந்து தமிழகம் முழுவதும் பிரமாண்ட செட் அமைப்புகளுடன் 300க்கும் அதிகமான ‘ஸ்பெஷல்’ நாடகங்களை நடத்தியிருக்கிறார். பிறகு ‘பாரதி நாடக மன்றம்’ என்ற பெயரில் சொந்த நாடகக் குழுவைத் தொடங்கி ‘உலகம் அறியாத புதுமை’ உள்ளிட்ட பல சமூக நாடகங்களைத் தொடர்ந்து மேடையேற்றி நடத்திவந்த நரசிம்ம பாரதி 1978-ம் ஆண்டு தனது 55-வது வயதில் மறைந்தார். அவர் மறைவுக்கு ஓராண்டுக்கு முன் தமிழக அரசு 1977-ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி அவரைக் கவுரவித்தது.





Re: மறக்கப்பட்ட நடிகர்கள்:

முதல் ஆக்*ஷன் கதாநாயகி! - கே. டி. ருக்மணி



  • ‘மேனகா’ படத்தில் டி.கே. சண்முகம், கே.டி. ருக்மணி | படங்கள் உதவி: ஞானம்



ரசிகர் ஒருவரிடமிருந்து முதல்முதலாக வந்திருந்தது அந்த மடல். அம்மா தனபாக்கியம் கையில் கொடுத்த கடிதத்தை, ஆசையுடன் வாங்கி வாசித்தார் கே.டி. ருக்மணி. மனசெல்லாம் மகிழ்ச்சியின் மலர்த் தோட்டம்!
‘மதிப்பு மிக்க ருக்மணி் அவர்களுக்கு நமஸ்காரம். நான் உங்கள் தீவிர ரசிகன். ‘மேனகா’ படப்பிடிப்பில் உங்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கினேன். “இதோ பாருங்கள்… மின்னல் கொடி கே.டி. ருக்மணியின் விலைமதிப்பற்ற ஆட்டோகிராஃப்” என்று ஆசையுடன் என் தகப்பனாரிடம் காட்டினேன். அவ்வளவுதான்… “சினிமாக்காரியிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு வந்ததோடு, வெட்கமில்லாமல் வீட்டிற்கு வந்து எங்கிட்டேயே அதைப் பெருமையாக வேறு காட்டுகிறாயா...?’ என்று சொல்லி என்னை அடித்ததோடு உடனே அதைத் தபாலில் திருப்பி அனுப்பச் சொல்லிவிட்டார்.
எனக்கு வேறு வழி தெரியவில்லை. தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் ஆட்டோகிராஃபைத் திருப்பி அனுப்பினாலும் நான் என்றும் உங்கள் ரசிகமணிதான். அதை என் தகப்பனாராலும் மாற்ற முடியாது. இப்படிக்கு உங்கள் ரசிகன்.”
கடிதத்தைப் படித்து முடித்ததும் ருக்மணிக்கு அவமானமும் பெருமையும் மாறிமாறி உள்ளத்தை அழுத்தின. ‘சினிமாவில் நடிப்பது அத்தனை இழிவானதா...? அதிலும் இளம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக, ‘பாரிஸ் பியூட்டி’ என்று வர்ணிக்கப்படும் தன்னை ஒரு தந்தை எப்படி தரக்குறைவாக நினைக்கலாம்? இவர்கள் இன்னும் எத்தனை காலம் பெண்களைக் கட்டுப்பெட்டிகளாகவே பார்த்துக்கொண்டிருப்பார்கள்?’ அவரது மனக்குரல் சுள்ளென்று மூளையை உசுப்ப, அந்தக் கடிதத்தைக் கிழித்துப்போட்டார் ருக்மணி.
பத்து வயதில் ருக்மணிக்குக் கலைப்பித்து ஆரம்பித்தது அம்மாவிடமிருந்து. தாயோடு விடாப்பிடியாக நாடகம் பார்க்கத் தவறாமல் சென்றார். மேடையில் ஆடப்பட்ட நாட்டியங்கள் ருக்மணியையும் அறியாமல் அவருக்குள் குதிபோட்டன. மறுநாள் அவற்றை அப்படியே ஆடிக் காண்பித்தார். வீடு வியப்பில் ஆழ்ந்தது.
ஊமைப் படங்கள் உருவாகத் தொடங்கியிருந்த காலகட்டம். ருக்மணி சினிமா நடிகை ஆனார். அவரது முதல் மவுனச் சித்திரம் ‘பேயும் பெண்மணியும்’. டைரக்டர் ஆர். பிரகாசம் அவருக்கு வழங்கிய முதல் வெளிச்சம். அடுத்து இம்பீரியல் ஸ்டுடியோவின் ‘பாமா விஜயம்’. படம் வெளியான நான்காவது நாளில் ருக்மணிக்கு வெள்ளிக் குத்துவிளக்கு பரிசாகக் கிடைத்தது. ‘டெவில் அண்ட் தி டான்சர்’ என்கிற ஆங்கில சினிமாவிலும் ருக்மணி நடித்தார். ராஜா சாண்டோ இயக்கிய ‘விப்ரநாராயணா’, மற்றும் சி.வி. ராமனின் இயக்கத்தில் ‘விஷ்ணு லீலா’ ஆகிய மவுனச் சித்திரங்களிலும் ருக்மணி தோன்றினார்.

முதல் ஆக்*ஷன் நாயகி!
“சண்டைப் படம் ஒன்று எடுக்கப்போகிறோம். நீங்கள் ஆண் உடையில் வர வேண்டும். அதோடு துப்பாக்கி சுடுதல், நீந்துதல், மோட்டார் சைக்கிள் ஓட்டுதல், கத்திச்சண்டை செய்தல், சிகரெட் பிடித்தல், குதிரைச் சவாரி என ஆண்மகன் செய்யும் அத்தனையும் செய்ய வேண்டும்” என்றார் இயக்குநர். கே.டி. ருக்மணி கொஞ்சம் தயங்கினாலும் ஆர்வமாகக் கேட்டார். “போயும் போயும் ஆண் பிள்ளை உடையிலா நடிப்பது?”
“அதிலென்ன தவறு? வீரமான பெண் ஆணுக்கு இணையானவள்தானே?” என்று இயக்குநருடன் வீடு தேடி வந்த பட முதலாளிகள் உசுப்பேற்ற “பட ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுங்கள். இந்தாருங்கள் நீங்கள் கேட்கும் தொகை” என ருக்மணியின் தாயாரைப் பணத்தால் அர்ச்சித்தார்கள்.
அப்படியும் ருக்மணிக்கு உடன்பாடு இல்லை. இயக்குநர் பட்டியலிடும் வித்தைகளைத் தன்னால் செய்ய முடியுமா? ஏதாவது இசகுபிசகாகி அடிபட்டுவிட்டால் அப்புறம் யார் நடிக்கக் கூப்பிடுவார்கள்?” ருக்மணி அரைமனதுடன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அம்மா பணத்தை எண்ணி பீரோவில் வைத்துப் பூட்டினார். ருக்மணி ‘முடியவே முடியாது’ என்று அடம் பிடித்தார். டைரக்டர் கே. சுப்ரமணியம் உள்ளிட்ட ஜாம்பவான்கள் ருக்மணியை ரொம்பவும் வற்புறுத்தினார்கள்.
சர்க்கஸ் அழகியும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணுமான நாடியா நடித்து மாபெரும் வெற்றி பெற்ற இந்தி ஸ்டண்ட் சினிமாவை ருக்மணிக்காகத் திரையிட்டுக் காட்டினார்கள். ருக்மணியின் அச்சம் அகலப் பத்து நாட்கள் ஆயின. ஒரு வழியாகத் தமிழின் முதல் முழு நீள ஆக்*ஷன் சினிமா ‘மின்னல் கொடி’ ஒளிபெறத் தொடங்கியது. “யோகம் வரும் நேரத்தில் தைரியமும் வரும் என்பார்கள். அந்த மாதிரி அசட்டுத் துணிச்சல் எனக்கும் வந்துவிட்டது” என்று பட பூஜையில் பேட்டியளித்தார் ருக்மணி. என்றாலும் அவர் மனதுக்குள் அச்சம் இன்னும் இருக்கவே செய்தது. அவர் பயந்ததுபோலவே குதிரைச் சவாரி செய்யும்போது கீழே விழுந்து பலத்த அடி. உடனே சுதாரித்துக்கொள்ள இயலாதவாறு மாதக் கணக்கில் படுத்த படுக்கையில் கிடந்தார்.
“அவள் இனிமேல் நடிக்க மாட்டாள். தயவுசெய்து விட்டுவிடுங்கள்” என்ற அன்னையின் வேண்டுகோள் வீணாயிற்று. “என் மகள் ஒழுங்காக முழு சினிமாவையும் நடித்துக்கொடுப்பாள் என்று காண்ட்ராக்டில் கையெழுத்துப் போட்டிருக்கிறீர்கள். கை நீட்டிப் பணமும் வாங்கி இருக்கிறீர்கள். இப்போது ருக்மணியால் முடியாது என்று சொன்னால், உங்களின் மைனர் பெண்ணுக்குப் பதிலாக நீங்கள் வந்து நடித்துக் கொடுத்துவிட்டுப் போங்கள்” என டைரக்டர் அமர்நாத்திடம் இருந்து மிரட்டல் வந்தது. மெல்ல ருக்மணியின் உடல் தேறியது. ‘மின்னல் கொடி’ மறுபடியும் கேமராவில் படர்ந்தது.
கதாநாயகிகளின் அன்றைய நிலை
கே.டி. ருக்மணியிடம் முதல் ஆக்*ஷன் பட அனுபவம் பற்றிக் கேட்டார் நிருபர். “பம்பாயில ‘மின்னல் கொடி’ ஷுட்டிங். கேரள ராஜாவின் பங்களா உச்சியிலிருந்து குதிக்க வேண்டும். கால்களில் கனத்த பூட்ஸ்கள் வேறு. அப்பப்பா போதும் போதும் என்றாகிவிட்டது. அந்த கணத்தோடு தொலைந்தேன் என்றே நினைத்தேன். நல்ல நேரம். எனக்கு ஒன்றும் நேரவில்லை. என் நடிப்பு பல படங்களில் தொடர்ந்தது” என்று கூறினார் ‘மின்னல் கொடி’ ருக்மணி. தமிழ் சினிமாவில் கதாநாயகியொருவர் முதல்முறையாக இரட்டை ஜடை போட்டுக்கொண்டு வந்து நடித்த முதல் படமும் அதுவாக இருந்தது.
மின்னல்கொடியைத் தொடர்ந்து ஆக்*ஷன் ஹீரோயின் வாய்ப்புகள் அவரைத் துரத்தின. கே.டி. ருக்மணி தமிழ் சினிமாவின் முதல் ‘ஆக்*ஷன் ஹீரோயின்’ என்ற அழியாப் புகழைப் பெற்றார். விஜயலலிதா, ஜோதிலட்சுமி, விஜயசாந்தி, அனுஷ்கா ஆகியோருக்கு அவரே முன் மாதிரி.
கே.டி.ருக்மணி தன் முத்திரையை அழுந்தப் பதித்த மற்ற படங்களில் ‘தூக்குத் தூக்கி’, ‘மனோகரா’, ‘மேனகா’, ‘சாமூண்டீஸ்வரி’, ‘ஜெயக்கொடி’, ‘பஸ்மாசர மோகினி’, ‘வீரரமணி’, ‘சாந்தா’, ‘திருமங்கை ஆழ்வார்’ ஆகியவை அடங்கும்.
நாற்பதுகளின் தொடக்கத்திலேயே ஆக்*ஷன் ஹீரோயின் ஆகிவிட்டாலும் அன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமா கதாநாயகிகளின் நிலை எப்படியிருந்தது? ருக்மணியே சொல்கிறார்: “எந்த வசதியும் இல்லாத காலம். மேக் அப் போட்டுக்கொள்ளக்கூடத் தெரியாது. அதற்கென யாரும் இருக்க மாட்டார்கள். நாங்களேதான் போட்டுக்கொள்வோம். அது அழகாகவும் இருக்காது. கடைசி வரையில் ஒரு நாள் கூட நான் பிறரிடம் ஒப்பனை செய்துகொண்டது கிடையாது. விதவிதமான ஆடை அணிகலன்கள், எதுவும் தர மாட்டார்கள்.
ஒரே சேலையை அணிந்து படம் முழுக்க நடிப்போம். இருபது ரூபாய்க்குத் தரமான விலையுயர்ந்த புடவைகள் கிடைக்கும். பட அதிபர்கள் அதை வாங்கிக் கொடுக்கவும் யோசிப்பார்கள்.
‘வாங்க. உட்காருங்க’ என்ற வசனத்தை மெதுவாகப் பேசினால் முகத்தில் மகிழ்ச்சியைக் காட்ட முடியும். ஆனால் அது சரியாக ஒலிப்பதிவு ஆகாது. உரத்த குரலில் ஓங்கிச் சத்தம் போட்டுச் சொல்ல வேண்டும். பீச்சில் கடல் அலைகளின் ஒலி கேட்காமல் படமெடுக்கப் பத்து நாட்கள் ஆகும். டைரக்டர் வைத்ததே சட்டம். நடிகைகளுக்குக் கொஞ்சமும் மதிப்பு மரியாதை கிடைக்காது. என்னதான் வளர்ந்த ஹீரோயின் என்றாலும் ‘ருக்மணிக்கு எதற்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் எனக் கேட்டு, நானூறு ரூபாய்க்கு வேறு ஒருத்தியைத் தயார் செய்வார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் நான் ‘மின்னல்கொடி’ ஆனேன்” என்ற கே.டி.ருக்மணியின் பூர்விகமும் குடும்பப் பின்னணியும் பதிவாகாமலேயே போய்விட்டன.

Re: மறக்கப்பட்ட நடிகர்கள்:

தென்னகம் கொண்டாடிய திறமை! - குசலகுமாரி


Re: மறக்கப்பட்ட நடிகர்கள்:

இருபெரும் நடிகர்களின் ஒரே தேர்வு! - ஓ.ஏ.கே. தேவர் 2



  • ‘ராமு’
  • மனைவி ‘ஜெமினி’ செல்லமுடன்...
  • ‘பறக்கும் பாவை’




மேற்கத்திய கௌபாய் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பால், தமிழ் சினிமாவில் கௌபாய் ஜுரம் பரவிய 70-களின் காலகட்டம். கௌபாய் கதாநாயகனுக்கான இடத்தை மொத்தக் குத்தகை எடுத்துக்கொண்டவர் ‘தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட்’ எனப் புகழப்பட்ட ஜெய்சங்கர். கௌபாய் கதாநாயகனுக்கு சரியான சவாலாக அமையும் வில்லன் கிடைக்காவிட்டால், இந்த வகைப் படங்களுக்கே மவுசு கிடைத்திருக்காது. அந்தச் சவாலான இடத்தை நிரப்பியவர் ஓ.ஏ.கே. தேவர். ஜெய்சங்கரின் ‘கங்கா’ படத்தில் கொள்ளைக் கூட்டத் தலைவர்களில் ஒருவராக வந்து “அந்தக் கடவுளுக்கே நாங்க பயப்பட மாட்டோம்” என்று பகுத்தறிவு வசனம் பேசி நடித்தவர், கலைவாணர் மீது கொண்ட ஈடுபாட்டால் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
கௌபாய் படங்களில் ஜெய்சங்கருக்கு உச்சமாக அமைந்த படம் ‘சி.ஐ.டி சங்கர்’. படம் தொடங்கியதும் வில்லனின் நிழல் உருவத்தையும் அந்த மிரட்டலான குரலையும் கண்டு மிரள ஆரம்பித்த ரசிகர்கள், யாரந்த வில்லன் என்று முகத்தைத் தேட ஆரம்பித்தார்கள். அடுத்தடுத்த காட்சிகளில் பார்த்துவிடலாம் என்று காத்துக்கொண்டிருந்தவர்களை அந்தக் குரல் மட்டுமே மிரட்டிக்கொண்டிருக்கும். படத்தின் இறுதிக் கட்டக் காட்சியில் வில்லனாகத் தோன்றினார் ஓ.ஏ.கே.தேவர். மிகவும் பிரபலமான தனது குரலை ரசிகர்கள் அடையாளம் கண்டுவிட முடியாத அளவுக்கு மாற்றிப் பேசிக் கதிகலங்க வைத்தார்.
அப்படிப்பட்டவர் ‘பூக்காரி’, ‘பட்டத்து ராணி’, ‘கங்கா கௌரி’ ‘நீயும் நானும்’, ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ உட்பட பல படங்களில் வில்லன் அல்லாத மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து, தன் மீது படிந்த வில்லன் பிம்பத்தை மறக்கச்செய்தார். ‘சாது மிரண்டால்’ படத்தின் முதல் பாதி முழுவதும் ஆறு தோற்றங்களில் வரும் தேவர், இரண்டாம் பாதி முழுவதும் உறைந்த விழிகளோடு பிணமாக நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார்.
சமூகப் படங்களில் சாதனைகள் படைத்த கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் எல்லாப் படங்களிலும் இவர் தவறாமல் இடம்பெற்றுவிடுவார். கே.எஸ்.ஜி.யின் ‘குறத்தி மகன்’ படத்தில் கருத்து சொல்லும் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு அல்ல; தேவருக்குத்தான். ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் விபீஷணனாக நடித்துக் கண் கலங்கவைத்தவர், அதே ஆண்டில் வெளியான ‘விக்கிரமாதித்தியன்’ படத்தில் கதிகலங்க வைக்கும் மந்திரவாதியாக நடித்திருப்பார். எல்லா ஒப்பனைகளும் ஆடைகளும் பொருந்தக்கூடிய தோற்றம் கொண்ட கலைஞராக ஓ.ஏ.கே. தேவர் விளங்கினார்.


சிவாஜிக்கே சவால்
வீரசிவாஜி, வீரபாண்டிய கட்டப்பொம்மன் உட்பட சிவாஜி மன்றம் நடத்திவந்த புகழ்பெற்ற நாடகங்களில் சிவாஜி கணேசனுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்துவந்தவர் ஓ.ஏ.கே. தேவர். சிவாஜியுடன் நாடகங்களில் நடிக்கும்போது அடுத்த காட்சிக்கான ஆடையை மாற்ற மேடைக்குப் பின்புறமிருக்கும் ஒப்பனை அறைக்குச் செல்ல மாட்டாராம் சிவாஜி. மேடையின் பக்கவாட்டில் இருக்கும் மறைவான இடத்தில் நின்று தேவரின் நடிப்பைக் கவனித்துக்கொண்டே இருப்பாராம். “ஓ.ஏ.கே. கிட்ட கவனமா இருக்கனும்; எக்ஸ்ட்ரா டயாலாக் போட்டுக் கைதட்டல் வாங்கிடுவான். அடுத்த சீன்ல அதைவிட அதிகமா க்ளைப்ஸ் வாங்கணும்” என்று சிவாஜி பதற்றமடைவர் என குறிப்பிட்டுக்காட்டியிருக்கிறார் வானொலியாளர் கூத்தபிரான்.
தலைமுறைகளைக் கடந்து இன்றும் கொண்டாடப்படும் ‘கர்ணன்’ படத்தில், கனக மகாராஜாவாக நடித்திருப்பார் ஓ.ஏ.கே. தேவர். தனது மருமகனான கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன் என்று தெரிந்ததும் கோபம் தலைக்கேறி, கர்ணனைக் கேலி செய்து புறக்கணிக்கும் காட்சியில் சிவாஜியுடன் போட்டிபோட்டு நடித்திருப்பார். சிவாஜியைத் திட்டுவதுபோல் உள்ள கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று சிவாஜியிடமே கேட்டிருக்கிறார் இயக்குநர் பி.ஆர். பந்துலு. “ஓ.ஏ.கே தேவரைத் தவிர அந்த வேடத்தில் வேறு யாரைப் போட்டாலும் எடுபடாது” என சிவாஜி சொல்லியிருக்கிறார்.
விட்டுக்கொடுத்த எஸ்.எஸ்.ஆர்.
ஓ.ஏ.கே. தேவர் தனது குரு சக்தி வி. கிருஷ்ணசாமி எழுதிய ‘வீரபாண்டிய கட்டப்போம்மன் நாடகத்தில் சிவாஜியைப் போலவே வீரபாண்டிய கட்டப்பொம்மன், வெள்ளையத் தேவன், உமைத்துரை ஆகிய எல்லா முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படமாகத் தயாரானபோது அதில் தேவருக்கு வேடம் இல்லை. உமைத்துரை வேடத்தை எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு ஒதுக்கியிருந்தனர். அவரும் ஏற்றுக்கொண்டார். படத்தில் வேறு யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று எஸ்.எஸ்.ஆர். கேட்க, அதில் ஓ.ஏ.கே. தேவருக்கு இடமில்லை என்றதும் கோபமாகிவிட்டார். “என் கேரக்டரை அவருக்கு கொடுங்க. அவர் இல்லாமல் வீரபாண்டிய கட்டப் பொம்மனா?” என்று தனது கதாபாத்திரத்தை அவருக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்.
இளையராஜாவுக்கு நாடக வாய்ப்பு
எதிர்பாராமல் சிவாஜியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் சிவாஜி நாடக மன்றத்திலிருந்து பிரிந்து ‘தேவர் நாடக மன்ற’த்தை தொடங்கினார் ஓ.ஏ.கே. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘அன்பு வழி’ ‘சந்தனச் சிலை’ ‘காட்டு வழி’ உட்பட பல புகழ்பெற்ற நாடகங்களை நடத்தினார். சென்னையில் தனது சகோதரர்களுடன் தங்கி, திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தார் இளையராஜா.
ஆனால் வாய்ப்பு அத்தனை சீக்கிரம் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் ஓ.ஏ.கே. தேவர் தனது நாடக மன்றத்தின் புதிய தயாரிப்பன ‘மாசற்ற மனம்' நாடகத்தைத் திருச்சியில் அரங்கேற்ற ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். அந்த நாடகத்துக்கு இசை அமைக்க தேவரிடம் ராசய்யாவை அறிமுகப்படுத்தினார் தேவர் நாடக மன்றத்தில் இருந்த சங்கிலி முருகன். பாவலர் சகோதர்களின் இசையை கம்யூனிஸ்ட் மேடைகளில் கேட்டிருந்த தேவர், உடனே சம்மதம் தெரிவித்தார். பாவலர் சகோதரர்களின் இசையுடன் அரங்கேறிய அந்த நாடகத்தின் பாடல்கள் பாராட்டுப் பெற்றன.
இந்த நாடகத்தில்தான் தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்கள். பிற்காலத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களாகவும் ஆனார்கள்.
எம்.ஜி.ஆர். கண்ட ஆதித்த கரிகாலன்
எம்.ஜி. ஆருடன் ‘பறக்கும் பாவை’, ‘விக்ரமாதித்தியன்’, ‘நான் ஆணையிட்டால்’, ‘கண்ணன் என் காதலன்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘தாய்க்குப் பின் தாரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் தேவர். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.ஜி.ஆரே தயாரித்து, நடித்து, இயக்குவதாகத் திட்டமிடப்பட்டபோது வந்தியத்தேவன் கதாபாத்திரத்தைத் தானே ஏற்க விரும்பியிருக்கிறார் எம்.ஜி.ஆர். அதேபோல் குந்தவையாக வைஜெயந்திமாலா, அருண்மொழி வர்மனாக ஜெமினி கணேசன், வானதியாக பத்மினி என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஆட்களைத் தேர்வு செய்தவர் ஆதித்திய கரிகாலன் கதாபாத்திரத்துக்குத் தன்னைத் தேர்வு செய்திருந்ததை ஓ. ஏ. கே. தேவர் தன் நண்பர்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டிருக்கிறார்.
மார்டன் தியேட்டரில் பணியாற்றும்போதே கலைஞர் மு.கருணாநிதி மீது தோழமை கொண்ட தேவர், கலைவாணரின் மறைவுக்குப் பிறகு அவருடன் மேலும் நெருக்கமானார். கலைஞர் கதை, வசனம் எழுதி வெற்றிபெற்ற ‘குறவஞ்சி’, ‘பூம்புகார்’ உள்ளிட்ட பெரும்பாலான படங்களில் ஓ.ஏ.கே. தேவர் நடித்தார். 1972 ல் தனது 48-வது வயதில் மறைந்த ஓ.ஏ.கே. தேவர், கடைசி வரை திமுகவின் மேடைகளில் பிரச்சார நட்சத்திரமாகவும் விளங்கினார். எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி கண்டாலும் எம்.ஜி.ஆர். மீது வைத்திருந்த நட்பை மாற்றிக்கொள்ளவில்லை. தேவர் இறந்தபோது அஞ்சலி செலுத்த முதலில் வந்தவர் எம்.ஜி.ஆர்.

தேவர் கடைசியாக நடித்த படங்கள் ‘வாழையடி வாழை’, ‘சிசுபாலன்’. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பாக்தாத் பேரழகி’. தந்தையின் வழியில் நின்று திரை நடிப்பைத் தொடர்ந்துவருகிறார் அவரது மகன்களில் ஒருவரான ஓ.ஏ.கே. சுந்தர்.





  • ‘யார் பிள்ளை?’ படத்தில் நடனக் கலைஞர் அம்பிகாவுடன்.. - ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ படத்தில் ஸ்ரீராமுடன்.
  • ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் அன்று - குசலகுமாரி இன்று


தமிழ் சினிமாவை பராசக்திக்கு முன், பராசக்திக்குப் பின் எனப் பகுத்துப் பார்க்கலாம். நடிகர் திலகம் சிவாஜியின் அறிமுகம், திராவிட இயக்கத்துக்கு வலிமை சேர்த்த திரைப்படம் எனப் பல பெருமைகள் அதற்கு உண்டு.
அந்தப் படத்தின் முதல் காட்சி டி.டி குசலகுமாரியின் எழிலார்ந்த குளோஸ்-அப் முகத்துடன்தான் தொடங்கும். 'வாழ்க வாழ்கவே… வளமாய் எமது திராவிட நாடு வாழ்க வாழ்க வாழ்கவே' என்ற பாடலுக்கு விழிகளை அழகாய் உருட்டி, கச்சிதமாய் அபிநயங்கள் பிடித்தபடி குசலகுமாரி ஆடும் பரத நாட்டியம் ரசிகர்களைக் கட்டிப்போட்டது.

நாற்பதுகள் தொடங்கி அறுபதுகள் வரை இருபதாண்டு காலம் தனி நடனங்கள் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பரத நாட்டியத்துக்கு சினிமாவில் வரவேற்பு இருந்தது. பின்னணிப் பாடகர்களின் வரவால் சொந்தக் குரலில் பாடத் தெரிந்தால்தான் சினிமாவில் நிலைக்கலாம் என்ற நிலவரம் மாறியது. அழகுடன் அற்புதமாக நடனமாடத் தெரிந்தால் கதாநாயகி ஆகும் அதிர்ஷ்டம் தேடி வரத் தொடங்கியது.
அதிலும் வழுவூர் ராமையா பிள்ளையின் மாணவிகள் என்றால் தனி மவுசும் மரியாதையும். அவரிடம் நடனம் கற்ற லலிதா, பத்மினி, ராகினி, குசலகுமாரி, குமாரி கமலா, ஈ.வி. சரோஜா, சாயி சுப்புலட்சுமி, எல். விஜயலட்சுமி என்று பல பெண்கள் திரைப்பட நடனங்களில் தோன்றி, பின்னாளில் முன்னணி நட்சத்திரங்களாக மின்னினார்கள்.
கதாநாயகிகளுக்குக் குவியும் கூட்டத்தைப் போலவே இவர்களது நடனங்களைப் பார்க்கத் திரையரங்கு வரும் லட்சக் கணக்கான ரசிகர்கள் உருவானார்கள். குசலகுமாரி ஐம்பதுக்கும் அதிகமான படங்களில் நடனமாடி, பிரபலமான நடன நட்சத்திரமாகப் புகழ்பெற்ற பிறகே கதாநாயகியாக உயர்ந்தார். அதற்கும் முன்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக சுமார் நூறு படங்களில் நடித்தவர்.

தஞ்சையிலிருந்து சென்னைக்கு

டி.டி. குசலகுமாரியின் பெயரில் இருக்கும் முதல் டி. தஞ்சாவூரைக் குறிக்கிறது. இரண்டாவது டி. அவரது அம்மா தமயந்தியைக் குறிக்கிறது. ‘விகட யோகி’ உட்பட அவரும் பல படங்களில் நடித்திருக்கிறார். 06.12.1937-ல் தஞ்சையில் பிறந்து வளர்ந்த குசலகுமாரிக்கு மூன்று வயதிலேயே அறிமுகமானது பரதக் கலை. ஐந்து வயதாக இருக்கும்போது சென்னையில் குடியேறியது அவரது குடும்பம்.
சென்னை வித்யோதயா தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே 6 வயது சிறுமியான குசலகுமாரிக்கு சினிமா வாய்ப்பு வந்துவிட்டது. டி.ஆர்.ரகுநாத் இளங்கோவன் இணைந்து இயக்கிய ‘மகாமாயா’ 1944-ல் வெளியானது. பி.யு. சின்னப்பா பி. கண்ணாம்பா இணைந்து நடித்து வெளியான இந்தப் படத்தில் இவர்களது மகளாக நடித்து ‘யார் இந்தக் குழந்தை?” என்று கேட்க வைத்தார் குசலகுமாரி. அந்தப் படத்தில் ‘பேபி டி.டி. குசலாம்பாள்’ என்று டைட்டில் போடப்பட்டாலும் பின்னாளில் அவர் நடன மங்கையாக அறிமுகமானபோது அவரது பெயருடன் தன் பெயரின் பாதியைப் பாசமுடன் இணைத்தவர் டி.ஆர். ராஜகுமாரி.
தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி என்று கொண்டாடப்படும் டி.ஆர். ராஜகுமாரி குசலகுமாரியின் அத்தை. அத்தையை விடச் சிறப்பாக நடனமாடத் தெரிந்தவர், அழகான பொலிவான தோற்றம், கவர்ந்து ஈர்க்கும் புன்னகை, சொன்ன நேரத்துக்குப் படப்பிடிப்புக்கு வந்துவிடுவது, குசலகுமாரி நடனமாடிய படங்களின் தொடர் வெற்றி என்று அழகும் அதிர்ஷ்டமும் அவரைப் பிரபல நட்சத்திரமாக்கியது.
குசலகுமாரி எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஜெமினி படநிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துக்கொண்டிருந்த ‘சந்திரலேகா’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் டி.ஆர். ராஜகுமாரி. பள்ளி விடுமுறையில் அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு அத்தை ராஜகுமாரியுடன் கிளம்பிவிடுவார் குசலகுமாரி. சந்திரலேகா செட்டில் குசலகுமாரியைக் கண்ட பட அதிபர் எஸ்.எஸ்.வாசன் அப்படியே அவரது முகத்தை மனதில் இருத்திக்கொண்டார். பிறகு பிறகு ஜெமினி பட நிறுவனம் ‘அவ்வையார்’ படத்தைத் தொடங்கியபோது குமாரி அவ்வையாராக நடிக்க குசலகுமாரியைத் தேர்வு செய்தார்.
அந்தப் படம் வெளியாகி வெற்றிபெறும் முன்பே ‘பாரசக்தி’ படம் குசலகுமாரியைப் புகழடையச் செய்துவிட்டது. பாரசக்தியைத் தொடந்து சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படமான ‘கூண்டுக்கிளி’யில் சிவாஜியைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஏழைப் பெண் ‘சொக்கி’யாகத் துடிப்பான நடிப்பைத் தந்து ரசிகர்களைக் கவர்ந்தார். அந்தப் படம் தோல்வியடைந்தாலும் 16 வயதில் கதாநாயகியாக உயர்ந்த குசலகுமாரியின் நடிப்புக்கும் நடனத்துக்கும் கிடைத்த வரவேற்பு கொஞ்சநஞ்சமல்ல. ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் இடம்பெற்ற போட்டி நடனத்தில் குமாரி கமலாவுடன் இணைந்து இவர் ஆடிய ஆட்டம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. 
கேரளமும் ஆந்திரமும் கொண்டாடிய கலைஞர்
கூண்டுக்கிளியைத் தொடந்து ‘கள்வனின் காதலி’ படத்தில் சிவாஜிக்குத் தங்கையாக நடித்தார் குசலகுமாரி. அடுத்து வெளியான ‘நீதிபதி’ படத்தில் கே.ஆர். ராமசாமியின் தங்கையாக நடித்தார். படம் முழுவதும் வரும் கதாபாத்திரங்கள் என்றாலும் பிரபல கதாநாயகர்களுக்குத் தங்கையாக நடித்துவிட்டால் கதாநாயகி வாய்ப்பு எட்டாக்கனியாக மாறிவிடும் என்ற எழுதப்படாத சட்டம் குசலகுமாரியையும் பாதித்தது.
ஆனால், தெலுங்கில் என்.டி.ராமராவ், ரங்காராவ் நடித்த ‘ராஜூபேடா’ படத்தில் அறிமுகமான குசலகுமாரியை அங்கே ‘குசலகுமாரிகாரு’ என்று கொண்டாட ஆரம்பித்தார்கள் ரசிகர்கள். அந்தப் படம் அங்கே சூப்பர் டூப்பர் வெற்றியைப் பெற, தெலுங்கில் வரிசையாக நடிக்கத் தொடங்கினார். அந்த நேரத்தில் மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க அழைக்கப்பட்டார். ஆனால், ஏற்கெனவே பல தெலுங்குப் படங்களை அவர் ஒப்புக்கொண்டுவிட்டதால் அதில் தன்னால் நடிக்க முடியாமல் போனதை இந்த 79 வயதிலும் பசுமையுடன் நினைவுகூர்கிறார்.
“ சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவரையுமே அண்ணே அண்ணே என்றுதான் அன்போடு அழைப்பேன். அவர்களும் என் மீது உடன்பிறந்த தங்கைபோல் பாசத்தைக் கொட்டுவார்கள். ஆனால், கூண்டுக்கிளிக்குப் பிறகு எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமைந்தும் என்னால் நடிக்க முடியாமல் போனது எனக்குப் பெரிய இழப்புதான்” என்று கூறும் குசலகுமாரி கேரள ரசிகர்களின் மனதிலும் பெரும் புகழுடன் இடம் பிடித்திருக்கிறார்.
அங்கே பிரேம் நசீர் ஜோடியாக இவர் நடித்த ‘சீதா’ 200 நாட்கள் ஓடிய வெற்றிப் படம். அடுத்து இவர் நடித்த ‘மரியக்குட்டி’ ஜனாதிபதி விருதை வென்ற படம். கலைமாமணி, கலைச்செல்வம் விருதுகளால் கவுரவம் செய்யப்பட்ட செல்வி குசலகுமாரி தற்போது சென்னை நந்தனத்தில் தனது ஒரே தம்பி டி.டி. சேகருடன் வசித்துவருகிறார். “அவ்வையார் படத்தில் குமாரி அவ்வையாகத் திருமண மறுப்புக் காட்சியில் நடித்தது என் மனதில் இன்னும் நீங்காத காவியமாக இடம்பெற்றது. அதனால்தானோ என்னவோ எனக்குத் திருமணம் மீது நாட்டமே இல்லாமல் போய்விட்டது. என் தம்பி சேகரின் குடுப்பம்தான் எனது குடும்பம். அவனை வளர்த்து ஆளாக்குவதிலேயே என் வாழ்க்கையைச் செலவிட்டேன். என் தம்பியும் என் மீது தாயைப் போல் பாசம் கொண்டவன்” என்று நெகிழ்ந்துபோகிறார் குசலகுமாரி.

No comments:

Post a Comment