Friday, 7 July 2017

M.G.RAMACHANDRAN FIRST FILM RAJAKUMARI , RISKING HIS LIFE AND DEATH




M.G.RAMACHANDRAN FIRST HERO IN 
FILM " RAJAKUMARI" , RISKING HIS 
LIFE AND DEATH

நான், கதாநாயகனாக நடித்து வெளியான, முதல் படம், ஜூபிடர் பிக்சர்சாரின், ராஜகுமாரி. இப்படத்திற்கு, இசை, எஸ்.எம்.சுப்பையா நாயுடு. 

இப்படத்தில், என்னை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யவிருக்கின்றனர் என்ற செய்தியை, எனக்கு முதலில் சொன்னவர், அவர் தான்.
ராஜகுமாரி பட இயக்குனரான, ஏ.எஸ்.ஏ.சாமி வாயிலாக, இதை அறிந்த சுப்பையா, தனக்கே உயர்வும், வாழ்வும் கிடைத்த மகிழ்ச்சியோடு, என்னிடம் சொன்னார்.

மந்திர தந்திரங்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படம் அது.
ஜூபிடர் பிக்சர்சார், ராஜகுமாரி படத்தில், கதாநாயகனாக நடிப்பதற்கு, மொத்தம், 2,500 ரூபாய் சம்பளம் பேசியிருந்தனர். மாதம், 200 ரூபாய் வீதம் பெற்று, படம் முடிந்த பின், மீதமிருந்தால், பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஒப்பந்தம்.
ஆனால், படம் முடிய, 18 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன; மாதம், 200 ரூபாய் வீதம் வாங்கியதில், ஒரு ஆண்டிலேயே, மொத்த தொகையும் தீர்ந்து விட்டது.
ஒருநாள், நானும், என் நண்பர்களாக நடித்த, நம்பியார் மற்றும் எம்.எஸ்.எஸ்.பாக்கியம் தனியறையில், சிறையிட்டிருக்கிற காட்சி படமாக்கப்படவிருந்தது.

நண்பர்கள் இருவரும் உறங்க, விழித்திருக்கும் கதாநாயகனுக்கு, வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு, தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான்.
அந்த அறையில் உள்ள தூக்குமேடை, அவனுடைய ஆசையை நிறைவேற்ற காத்திருக்கிறது. ஆனால், கதாநாயகன், தூக்கிட்டு கொள்ளும் போது, கதாநாயகனின் பாரத்தை தாங்காமல், உத்திரம் உடைந்து, அவனை கீழே வீழ்த்த, தூக்குமேடைக்கு கீழ் உள்ள அறைக்குள் விழும் கதாநாயகனுக்கு, அங்கிருந்து தப்ப வழி கிடைக்கிறது; மூவரும் தப்பி விடுகின்றனர். இது கதை!
கதாநாயகனான நான், தற்கொலை செய்து கொள்ள, மேடை மீது ஏறி நிற்கிறேன். ஒரே ஷாட்டில், நான் கயிற்றை மாட்டியதும், என் காலடியில் இருக்கும் பலகையை, திறப்பதற்காக என் கைகளுக்கு பக்கத்திலிருக்கும் கைப்பிடியை இழுக்க வேண்டும். காலுக்கு அடியிலுள்ள பலகை திறந்து விடுவதால், நான் கயிற்றில் தொங்கும்படியாகவும், அதேசமயம், என் கனத்தை தாங்காமல், உத்தரம் உடைந்து, கீழே விழ வேண்டும் என்பது தான், செட்டிங்.

'உங்களால் முடியுமா?' என்று என்னை கேட்டார், இயக்குனர்.
நான் எப்படி முடியாது என்று சொல்ல முடியும். அப்படி சொல்லி விட்டால், வேறு யாரையாவது கதாநாயகனாக போட்டு விட்டால், என் ஆசைக் கனவுகள் என்ன ஆகும்?
எப்போதும் சொல்வது போல், முடியுமென்று சொல்லி விட்டேன்.
மேடை மீது ஏறி, கழுத்திலே கயிற்றை மாட்டியபடி நின்றேன். மேலே உத்தரத்தை உடைத்து பொருத்தி, அது தெரியாமலிருப்பதற்காக, துணியால் மறைத்திருந்தனர்.
இயக்குனரும், கேமராமேனும் படம் பிடிக்கத் தயாராக இருந்தனர். என் காலுக்கு கீழேயுள்ள பலகையை இழுப்பவர்கள், கேமராவுக்கு தெரியாமல், மறைந்தபடி தயாராக இருந்தனர்.

கயிற்றிலே இருந்த சுருக்கு, கழுத்தை நெரித்து விடாமல் இருப்பதற்காக, முடிச்சு போடாமல், வட்டமாக கட்டி முடிச்சிட்டு, அது சுருங்காத அளவுக்கு, மிக எச்சரிக்கையோடு தான் வைத்திருந்தனர். 
ஆக் ஷன் என்றார், இயக்குனர். கையால், கைப்பிடியை இழுக்க, கீழேயிருந்த பலகையையும், இழுத்து திறந்து விட்டனர்.
அவ்வளவுதான்; நான் தூக்கிலே தொங்கினேன்.
என் தலைக்கு மேலுள்ள உத்தரம் உடைந்து, திறந்துள்ள பள்ளத்திற்குள் நான் விழ வேண்டும்; எனக்கு அடிபடாமல் இருப்பதற்காக, கீழே நார் மெத்தையும் போட்டிருந்தனர். எந்த அளவுக்கு, எனக்கு பாதுகாப்பு தர முடியுமோ, அத்தனையும் செய்துதானிருந்தனர்.
உத்தரத்திலிருந்து கட்டி தொங்க விடப்பட்டிருந்த கயிறு, என் கைகளால் பிடித்து இழுக்கப்படுவதல்ல; என் கழுத்தாலேயே இழுக்கப்பட வேண்டும். அடியிலிருந்து பலகை நீக்கப்பட்டு விட்டதால், கீழே பிடிமானம் இல்லாமல், என் உடல் அந்தரத்தில் தொங்கிற்று.
ஒரு வினாடி தான். நான் பலகையில் காலூன்றி நின்று கொண்டிருந்த போது, கழுத்திலே இடைவெளியோடு மாட்டப்பட்டிருந்த கயிறு, பலகை இழுக்கப்பட்டதால், என் உடல், கீழ் நோக்கி இழுத்த காரணத்தால், கழுத்தை நெருக்கியது.

என் கழுத்தின் குரல்வளை, மேல்நோக்கி இழுக்க, என் உடல் கனம், கீழ் நோக்கி இழுக்க, அடுத்த வினாடி, எப்படியோ என் கழுத்து வலது புறமாக திரும்பிற்று.
அந்த ஒரு வினாடிக்குள், உச்சந்தலைக்குள், 'சுர்'ரென்று ரத்தம் ஏறியது போன்ற ஒரு உணர்வு; நெஞ்சில் 4வலி!
இவ்வளவு ஏற்பட்டதும், ஒரு வினாடி கூட இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.
உத்தரம் உடைந்து, கீழே விழுந்தேன், சுய உணர்வற்ற நிலையில்! தலை குனிந்து, முன்புறம் சாய்ந்து விட்ட காரணத்தால், மேலேயிருந்து உடைந்து விழுந்த கட்டைகள், என் முதுகில் விழுந்தன.
படப்பிடிப்பிலே இருந்தவர்கள், எல்லாரும் ஓடி வந்தனர்.
அப்போதும், இக்காட்சியில் நடிப்பதற்கு நான் தகுதியற்றவன் என்று யாரும் சொல்லி விடக் கூடாதே என்பதில் தான் என் எண்ணம் இருந்தது.
நண்பர் நம்பியார் என்ன நினைத்தாரோ, குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.




என் கதாநாயகன் வேடம், முதல் படத்திலேயே, என்னை தற்கொலைக்கு தயார் செய்து விட்டது. அன்று, மற்றவர்கள் சிறிது கவனக் குறைவாக இருந்திருந்தால், முதன் முதலில் கதாநாயகன் வேடமேற்ற படத்திலேயே, தற்கொலை செய்து கொண்ட கதாநாயகனாக, என் வாழ்க்கை முடிந்து போயிருக்கும்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


No comments:

Post a Comment