Friday 7 July 2017

HENRIETTA SWAN LEAVITT , AMERICAN ASTRONOMER



HENRIETTA SWAN LEAVITT , AMERICAN ASTRONOMER


அமெரிக்க வானியலாளர்

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் வானியலாளரும் விண்மீன்களின் தொலைவைத் துல்லியமாகக் கணிக்கும் வழியைக் கண்டறிந்தவருமான ஹென்ரியேட்டா ஸ்வான் லீவிட் (Henrietta Swan Leavitt) பிறந்த தினம் இன்று (ஜூலை 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* மசாசூசெட்சில் உள்ள லான் கேச்டெர் என்ற இடத்தில் பிறந்தார் (1868). தந்தை, மத ஊழியர். இவரது பெற்றோர் பிள்ளைகளைக் கண்டிப்புடன் வளர்த்து வந்த தோடு அவர்களது கல்விக்கு முக்கியத்துவமும் அளித்தனர்.

* பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, ரெட்கிளிஃப் கல்லூரியில் கிரேக்கம், நுண்கலைகள், தத்துவம், பகுப் பாய்வு வடிவியல் மற்றும் நுண்கணிதம் பயின்று பட்டம் பெற்றார். கல்லூரி இறுதி ஆண்டில் வானியல் பாடத்தைத் தெரிவு செய்தார். எதேச்சையாக எடுத்த முடிவு என்றாலும், பின்னாளில் வானியலே இவரது வாழ்க்கையானது.
* திடீரென்று ஏற்பட்ட காய்ச்சலின் பாதிப்பால் கேட்கும் திறனை நிரந்தரமாக இழந்தார். 1880 முதல் ஹார்வர்ட் வான் ஆராய்ச்சி நிலையத்தில் எடுக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான புகைப்படத் தட்டுகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஏராளமான பெண்களில் ஒருவராகப் பணியாற்றினார்.

* அந்தப் புகைப்படத் தட்டுகளில் பல விண்மீன்கள், நெபுலாக்கள் போன்றவற்றின் நிறமாலை உள்ளிட்ட விவரங்கள் இருந்தன. அங்கே நட்சத்திரங்களின் ஒளியை அளவிடும் பணியில் ஈடுபட்டார்.
* ஃபோட்டோகிராபிக் ஃபோட்டோமெட்ரி துறையின் தலைமைப் பணியும் தொலைநோக்கிகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டன. காலப்போக்கில் மாறுபடும் நட்சத்திரங் களை (variable stars) ஆய்வு செய்யும் பணியையும் ஏற்றார்.

* புகைப்பட பிளேட்டுகளில் சிபிட்ஸ் வேரியபிள் ஸ்டார்ஸ் (Cepheid Variable Stars) என்ற அந்த வகை விண்மீன்களின் ஒளி மாறுபாட்டு வேகமும், அவற்றின் ஒளிர் திறனும் நேர் விகிதத்தில் இருப்பதைக் கண்டறிந்தார். தான் கண்டறிந்ததைக் கட்டுரையாக வெளியிட்டார். நமது பால்வெளிக்கு அப்பால் உள்ள வெளியில் உள்ள விண்மீன் திரள்களில் சிபிட்ஸ்கள் உள்ளன என்ற வானியலாளர் எட்வின் ஹபிளின் கண்டுபிடிப்புக்கு இவரது கட்டுரைதான் அடிப்படையாக அமைந்தது.
* ஒரு நட்சத்திரத்தின் ஒளி மாறுபாட்டுக் காலம் என்பதை இவர் வரைபடம் மூலம் வகுத்தார். நாம் இருக்கும் இடத்திலிருந்து அதிதொலையில் உள்ள அண்டங்கள் மற்றும் ஒளிமிகு நட்சத்திரங்களின் தொலைவைத் துல்லியமாகக் கணிக்கும் வழிமுறையைக் கண்டறிந்தார்.
* விண்மீன்களின் பிரகாசத்தை அடிப்படையாகக் கொண்டு பூமி மற்றும் விண்மீன் குழுக்களிடையேயான மிகப்பெரிய தொலைவைக் கணக்கிடுவதற்கான ஒரு வழிமுறையைக் கண்டறிந்தார். இதனால் தான், லட்சக்கணக்கான ஒளி தூரத்துக்கு அப்பால் இருக்கும் பொருள்களின் தொலைவை விஞ்ஞானிகளால் கணக்கிட முடிந்தது. மேலும் புகைப்பட அளவீடுகளுக்கான ஹார்வர்ட் தரநிலையை நிர்ணயம் செய்தார்.
* இது 1913-ல் புகைப்பட அளவுகளுக்கான சர்வதேச குழுவால் (International Committee of Photographic Magnitudes) ஏற்றுக் கொள்ளப்பட்டது.


 இவர் தன் வாழ்நாளில் 2,400 வேரியபிள் விண்மீன்களைக் கண்டறிந்தார். புற்றுநோய் பாதிப்பால் இவர் மரணமடைந்ததை அறியாத, சுவீடன் கணிதவியலாளர் ஒருவர் இவரது பெயரை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்க முன்வந்தார்.
* உயிரிழந்த ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை என்பதால் இவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. நிலவில் உள்ள சிறுகோள், குழிப்பள்ளம் என பலவற்றுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 20-ம் நூற்றாண்டின் இணையற்ற பெண் வானியலாளர், ஹென்ரியேட்டா ஸ்வான் லீவிட் 1921-ம் ஆண்டு 53-வது வயதில் மறைந்தார்.

No comments:

Post a Comment