Friday, 21 July 2017

SATYAJIT RAY - BEGINNING HISTORY OF CINEMA


SATYAJIT RAY  - BEGINNING HISTORY OF CINEMA



சத்யஜித் ரேயின் வாழ்வை மாற்றிய இத்தாலித் திரைப்படம்! #SatyajitRay


இந்திய திரைத் துறையின் பெருமிதம்மிக்க அடையாளம் சத்யஜித் ரே. இவரின்  96-வது பிறந்த நாள் இன்று. இயக்குநர், எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகம்கொண்ட ரே, தன் திரை சாதனைக்காக ஆஸ்கர், மகசேசே போன்ற உலகளாவிய அங்கீகாரங்களைப்  பெற்றவர்.
சத்யஜித் ரே
1921-ம் ஆண்டு, மே 2-ம் தேதி  கொல்கத்தாவில் பிறந்தார் சத்யஜித் ரே. இவரின் தந்தை சுகுமார் ரே, சிறு வியாபாரி;  சிறந்த எழுத்தாளரும்கூட. நடமாடும் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த சத்யஜித் ரேவின் தாத்தா கிஷோர் ரே, ஓவியம், கவிதை, இசை  போன்ற நுண்கலைகளில் வல்லுநர்.
ரே-க்கு மூன்று வயதானபோது தந்தை இறந்துவிட்டார். மாமாவின் அரவணைப்பில் வளர்ந்தார்.  1930-ம் ஆண்டில் அப்போது இருந்த `கல்கத்தா மாநிலக் கல்லூரி'யில் பட்டப்படிப்பை முடித்த ரே,  ரவீந்திரநாத் தாகூரின் கல்விக்கூடமான சாந்தி நிகேதனில் மூன்று ஆண்டுகள் ஓவியக்கலை பயின்றார்.  சாந்தி நிகேதன்தான் ரே-யின் மனதில் திரைப்படம் பற்றியக் கனவுகளை விதைத்தது. 
1943-ம் ஆண்டில் ஆங்கில விளம்பர நிறுவனம் ஒன்றில் ஓவியராகப் பணியில் சேர்ந்தார் ரே. இவரின் ஆர்வத்தையும் உழைப்பையும் கவனித்த அந்த நிறுவனம், பதவி உயர்வு அளித்து லண்டனில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பியது.  லண்டனில் சுமார் ஆறு மாதங்கள் பணியாற்றினார். இத்தாலி நாட்டுத் தயாரிப்பான ‘சைக்கிள் திருடன்’ என்ற திரைப்படம்தான், ரேயின் வாழ்க்கையையே மாற்றியது. ` `சைக்கிள் திருடன்'போல வாழ்க்கையில் ஒரு திரைப்படமாவது எடுத்துவிட வேண்டும்' என்ற இலக்கோடு இந்தியா திரும்பினார் ரே. 
பிரபல வங்க எழுத்தாளர் விபுதி பூஷண் பந்தியோபதெயே எழுதிய ‘பதேர் பாஞ்சாலி’ என்ற கதையை விலைக்கு வாங்கினார். அதைப் படமாக்குவதற்காக ரே பட்டபாடு கொஞ்சநஞ்சம் அல்ல. எந்தத் தயாரிப்பாளரும் அவரது முயற்சிக்கு ஆதரவு தரவில்லை; பலர் கேலிசெய்தர். மனம் தளராத ரே, தன் நண்பர்களிடம் 15,000 ரூபாய் கடன் வாங்கி கனு பானர்ஜி, கருணா பானர்ஜி, சுபிர் பானர்ஜி, உமா தாஸ்குப்தா, சன்னிபாலா தேவி, ரேபா தேவி போன்ற கவனம் பெறாத நடிகர்களைக்கொண்டு படப்பிடிப்பைத் தொடங்கினார். 
அரைகுறையாகத் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தைப் பார்த்த பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜான் ஹஸ்டன், `இந்தப் படம் நிச்சயம் வரலாற்றில் இடம்பிடிக்கும்' எனக் கூறி, நிதி உதவி செய்தார். வங்க அமைச்சர் பி.சி.ராய், படத்தின் உரிமையைப் பெற்றுக்கொள்வதாகக் கூறி,  ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கினார்.
 
1952-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘பதேர் பாஞ்சாலி’, 1955-ம் ஆண்டில் பல்வேறு இன்னல்களுக்கிடையே முடிவடைந்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆயினும், திரைத் துறை, எழுத்துத் துறை சார்ந்த பல ஆளுமைகள் ரேயின் முயற்சியைப் பாராட்டினர் . ஹாலிவுட் இயக்குநர் ஜான் ஹஸ்டன் ஏற்பாட்டில் அமெரிக்காவில் உள்ள ‘இந்தியப் பொருட்காட்சிச் சாலை' -யில் படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அமெரிக்கர்கள், ரே-யைக் கொண்டாடினர்.  கேன்ஸ் திரைப்பட விழா, சான்ஃப்ரான்சிஸ்கோ திரைப்பட விழா உள்ளிட்ட பல உலகப் பட விழாக்களில் `பதேர் பாஞ்சாலி' திரையிடப்பட்டு விருதுகளைக் குவித்தது. குறிப்பாக, கேன்ஸ் திரைப்பட விழாவில் `மனித வாழ்வின் நிறங்களை ஆவணப்படுத்தியுள்ள சிறந்த படைப்பு' என அறிவித்து விருது வழங்கப்பட்டது. இந்தப் படம் நியூயார்க் நகரில் உள்ள ஒரு திரையரங்கில் ஒன்பது மாதங்கள் தொடர்ந்து ஓடி, புதிய சாதனையைப் பதிவுசெய்தது. 
பதேர் பாஞ்சாலி

‘பதேர் பாஞ்சாலி’ சாதாரண கதைதான். ஆயினும், மனித வாழ்வில் ஏற்படக்கூடிய சோகம், மகிழ்ச்சி, விரக்தி, வெறுப்பு, ஜீவ-மரணப் போராட்டம் முதலியவற்றை உணர்ச்சிபூர்வமாகச் சித்திரித்திருந்தார் ரே . அப்பு என்கிற மனிதனின் பால்யம், வாலிபப் பருவம், முதுமை ஆகிய மூன்று பருவங்களையும் அழகுறக் காட்சிப்படுத்தியிருந்தார். 
`பதேர் பாஞ்சாலி'க்குப் பிறகு, உலக கவனம் பெற்ற ரே, தொடர்ந்து சிறந்த படங்களை இயக்கினார்.  `அகந்துக்', `ஷகா புரொஷகா', `ஞானஷத்ரு', `சுகுமார் ராய்', `காரே பைரே', `பிக்கூர் டைரி', `கிலாடி', `பாலா', `கூப்பி கைன் பாகா பைன்', `ரவீந்திரநாத் தாகூர்', `பரஷ் பதர்', `அபராஜிதோ' உள்பட 29  திரைப்படங்களும் எட்டு ஆவணப்படங்களும் எடுத்துள்ள ரே, ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். உயிருடன் இருந்த காலத்திலேயே இவரைப் பற்றி 15-க்கும் மேற்பட்ட ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டன. 
பிரான்ஸ் நாட்டின் லிஜியன் டி விருது, பிலிப்பைன்ஸ் நாட்டின் மகசேசே விருது, இந்தியாவின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது உள்ளிட்ட பல கௌரவங்களைப் பெற்றிருக்கிறார். 
1991-ம் ஆண்டில் சிறந்த திரைப்பட இயக்குநருக்கான `ஆஸ்கர்' விருது ரே-க்கு அறிவிக்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் ரேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். ஆஸ்கர் பரிசை அவரிடம் ஒப்படைக்க, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து ஒரு குழு கொல்கத்தாவுக்கு வந்தது. குடும்பத்தினர் மற்றும்  சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முன்னிலையில் அந்த விருதை கண்ணீர் மல்கப் பெற்றுக்கொண்டார் ரே. 
 மூன்று மாதகாலம் தீவிர சிகிச்சைப் பிரிவில்  இருந்த அவர், 23.4.1992 மாலை 5:45 மணிக்கு காலமானார்.  
இந்திய திரைத் துறை வரலாற்றை, சத்யஜித் ரே-வுக்கு முன்னர், சத்யஜித் ரே-வுக்குப் பின்னர் என இரண்டாகப் பிரிக்கலாம். அவர் காலத்துக்குப் பிறகான அத்தனை திரையுலகக் கலைஞர்களுக்கும் அவர்தான் ஆதர்சம். அவரது படைப்புகள் நல்ல சினிமாவுக்கு இன்றளவும் உதாரணமாகக் காட்டப்படுகின்றன. சமூகத்தின்பால் அக்கறையுள்ள படைப்பாளியும் , கலையம்சம் குலையாமல் உருவாக்கப்படும் படைப்புகளும் காலம் கடந்தும் நிற்கும் என்பதற்கு ரேயும் அவரின் திரைப்படங்களுமே உதாரணம்.




உங்கள் வாழ்வில் எப்போதேனும் நீங்கள் திருடியிருக்கிறீர்களா..? இந்தக்கேள்வியைக் கேட்டால் யாரிடமிருந்தும் ஒருமாதிரியான புன்னகைதான் பதிலாக வரும். அந்தப் புன்னகைக்கு ஆமாம் என்றும் அர்த்தம் கொள்ளலாம்..அல்லது இல்லையென்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உள்ளே திருடனாக ஒளிந்திருப்பதென்னவோ.. அப்பப்ப... விளையாட்டுத்தனமாகவேனும்... சின்னச்சின்னத் திருட்டுகளில் நாம் ஈடுபட்டிருக்கிறோம் என்பதாகத்தான் இருக்கும். வெற்றிகரமான திருட்டின் சாகசத்தன்மைதான் மறுபடியும் மறுபடியும் நம்மை அதை நோக்கி தள்ளியிருக்கக்கூடும். கள்ளன்-போலீஸ் விளையாடுகிறபோதும்கூட, ஒரு போலீஸ்காரனாய் இருந்து திருடனை  கண்டுபிடிக்கும்போது கிடைக்கிற பெருமிதத்தைக்காட்டிலும், ஒரு திருடனாக மாறி, வீடுகளின் கூரைகளைத்தாவித்தாவி கடக்கிறபோதும்.. போலீசுக்கு டிமிக்கி கொடுக் கிறபோதும் அடைகிற ஆனந்தமே.. பேரானந்தமாக இன்றும் நமது நினைவின் அடுக்குகளில் ஒரு ஆதிவாசியின் பச்சிலைச் சித்திரத்தைப்போல அழியாமல் பதிந்திருக்கிறது.

ஆனால், வாழ்வின் அர்த்தங்கள் பிடிபடத்துவங்கிவிட்டபின் அதே திருட்டு உங்களுக்கு பேரானந்தமாக இருப்பதில்லை. மாறாக அது உங்களை அவமானத்திற்குள்ளாக்குகிறது. துரத்தும் இந்த வாழ்வின் வறுமையும், அது உருவாக்கும் போதாமையும், அதை எதிர்கொள்ளமுடியாத இயலாமையும், திருட்டின் வாசலில் நம்மை கொண்டுபோய் நிறுத்திவைத்து வேடிக்கை பார்க்கிறது. வயிற்றுப்பாடும் வாழ்க்கைப்பாடும், களவாண்ட பொழுதுகளில் அது ஒரு நேர்மைக்குறைவான செயல் என்று  நம்மை யோசிக்க விடுவதில்லை. அதிலும், உழைப்பை நம்பி வாழ நினைக்கும் ஒருவன், திருட்டில் இறங்கும் நிலைக்கு தள்ளப்படுவது துயரமானது. அதிலும் துயரமானது, அந்த திருட்டைக்கூட செய்யத்தெரியாமல் கையும் களவுமாகச் சிக்கிக்கொள்வது. (பல லட்சம் கோடிகளைத் திருடிவிட்டு கூச்ச நாச்சமின்றி போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் நம்மூரு ராசா... ராணிகளையெல்லாம் இந்த நேரத்தில் நீங்கள் நினைவுப்படுத்திக்காதீங்க ஸார்... அதுங்க கதையே வேற...! )


அந்த துயரம்கூட உங்கள் பிள்ளையின் கண்ணெதிரிலேயே நடக்க நேர்ந்துவிட்டால்... அது உங்களை என்ன பாடுபடுத்திவிடும்... அதை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்...உங்கள் மகன் அதை எப்படி புரிந்து கொள்வான்... தந்தை குறித்து அவன் கட்டிவைத்திருக்கும் மனக்கோட்டை சீட்டுக்கட்டைப் போல அப்படியே சரிந்துவிடாதா...? இப்படியெல்லாம் உங்களுக்கு கேள்விகள் எழுந்தால், அதற்கான பதிலை ‘விட்டோரியா டி சிகா’ வின் ‘’பை சைக்கிள் தீவ்ஸ்’’ (BICYCLE THIEVES ) என்ற இத்தாலிய மொழி படத்தில் நீங்கள் கண்டடையலாம்.

இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய ரோம் நகரத்தின் புறநகர் பகுதியில் கதை துவங்குகிறது. வேலை வாய்ப்பை உருவாக்கித்தரும் அலுவலகத்தின் முன்பாக ஏராளமானோர் கூடியிருக்கின்றனர். சுருட்டு புகைத்தபடியே வெளியேவரும் அதிகாரி, நமது கதாநாயகன் ‘அன்டோனியா ரிசி ’ போஸ்டர் ஒட்டும் கம்பெனியில் வேலை கிடைத்திருப்பதாகவும், நாளைக் காலையில் ஒரு சைக்கிளுடன் அங்கு சென்று ஆஜராகவேண்டுமென்றும் கூறுகிறார். சைக்கிள் இல்லையென்றால் இந்த வேலை கிடைக்காது என்றும் தெரிவிக்கிறார். எப்படியும் சைக்கிளுடன் வந்துவிடுவேன் எனக்கூறி வேலைக்கான உத்தரவை பெற்றுச்செல்கிறான் ரிசி.



ஆனால் ரிசியின் சைக்கிளோ, அடகு வைக்கப்பட்டிருக்கிறது. வீட்டில் இருக்கும் படுக்கை விரிப்புகளை அடகுவைத்து பணம் திரட்டி சைக்கிளை மீட்டு எடுத்துக்கொண்டு போஸ்டர் கம்பெனிக்கு சென்று வேலையை உறுதிசெய்துகொண்டு ரிசியும் அவனது துணைவியான மரியாவும் வீடு திரும்புகின்றனர். வரும் வழியில் குறி சொல்லும் ஒரு பெண்ணைப் பார்த்து, அவளால்தான் வேலை கிடைத்தது என்று அவளுக்கு நன்றி சொல்லி காணிக்கை செலுத்த செல்கிறாள் மரியா. ரிசிக்கு அது பிடிக்காவிட்டாலும் மனைவியின் விருப்பத்திற்காக உடன் செல்கிறான். அடகிலிருந்து மீட்டு வந்த சைக்கிளை அன்று இரவு அவர்களது மகன் ப்ரூனோ, துடைத்து சுத்தம் செய்கிறான். அடுத்த நாள் காலையில் மகனுடன் வேலைக்கு கிளம்புகிறான். மகன் ப்ரூனோவை அவன் வேலைபார்க்கும் இடத்தில் விட்டுவிட்டு மாலையில் சந்திப்பதாக சொல்லிவிட்டு உற்சாகமாக புதிய வேலைக்கு செல்கிறான் ரிசி.

கம்பெனிக்கு சென்று ஒட்டுவதற்கான போஸ்டர்களையும், பசைச்சட்டியையும், ஒரு ஏணியையும் பெற்றுக்கொண்டு சக ஊழியருடன் சென்ரு பணியைத் துவக்குகிறான். ஓரிடத்தில் போஸ்டர்களை ஒட்டிவிட்டு, அடுத்த இடத்திற்கு ஒட்டுவதற்காக தனியே செல்கிறான். சைக்கிளை சுவரில் சாய்த்து வைத்துவிட்டு ஏணியைப்போட்டு மேலே ஏறிச்சென்று போஸ்டரை ஒட்டுகிறான். அப்போது அங்கு வரும் ஒருவன் சுற்றும்முற்றும்  நோட்டம் பார்த்துவிட்டு, அந்த சைக்கிளை திருடிக்கொண்டு செல்கிறான். அதை கவனித்து திடுக்கிடும் ரிசி, ஏணியிலிருந்து குதித்து அந்த சைக்கிள் திருடனை, ‘’ பிடியுங்கள்... திருடன்... திருடன்...’’ என்று கத்தியபடியே விரட்டிச்செல்கிறான். அந்தப்பக்கமாக வரும் ஒரு காரை மடக்கி அதில் தொற்றிக்கொண்டு திருடனை விரட்டுகிறான். ஆனால் அவனாவது... சிக்குவதாவது...! பஞ்சாய் பறந்துவிடுகிறான். திருடனைப் பிடிக்க முடியவில்லை. பல இடங்களிலும் தேடுகிறான்..ஒன்றும் பலனில்லை. மனச்சோர்வுடன் திரும்பிவரும் ரிசி, ஆத்திரத்தில் பசைச்சட்டியை தூக்கிப்போட்டு உடைக்கிறான்.


பின்னர், தனது சைக்கிளைக் காணவில்லையென போலீசில் புகார் செய்கிறான். போலீஸ் அதிகாரியோ, சைக்கிள் கிடைத்தாலும் கிடைக்கலாம்... அல்லது கிடைக்காமயே போனாலும் போகலாம் அலட்சியமாகக் என கூறுகிறான். மனம் உடைந்த நிலையில் தனக்காக காத்திருக்கும் மகனை அழைத்துக்கொண்டு வீடு திரும்புகிறான். சைக்கிள் எங்கேப்பா.. எனக்கேட்கும் மகனிடம், அது உடைந்துவிட்டதாக பொய் சொல்கிறான். வீட்டிற்கு வந்து மகனை விட்டுவிட்டு, தனது நண்பன் பையாக்கோவைச் சந்தித்து சைக்கிள் திருடு போய்விட்ட விஷயத்தை சொல்கிறான். மறுநாள் பழைய மற்றும் திருட்டு  பொருட்களை விற்பனை செய்யும் ஒரு மார்க்கெட் பகுதிக்கு சென்று தேடுகிறார்கள். ரிசி, ப்ரூனோ, பையாக்கோ, அவந்து நண்பர்கள் சிலர் என ஆளுக்கு ஒரு பகுதியாக பிரிந்து சென்று பறி கொடுத்த சைக்கிளை தேடுகின்றனர். அது கிடைத்தபாடில்லை.


அங்கு ஒருவன் ஒரு சைக்கிளின் பிரேமுக்கு பெயிண்ட் அடித்துக்கொண்டிருப்பதைக் கண்டு, அவனிடம் சென்று விசாரிக்க... அவனோ காச்மூச்சென்று கத்த... கடைக்காரன் மனைவியும் வந்து சண்டை போட... போலீஸ் வந்து விசாரிக்கிறது.. கடைசியில் அது ரிசியின் சைக்கிள் அல்ல என தெரிகிறது. ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். அடுத்த நாள் மற்றொரு மார்க்கெட் பகுதிகு சென்று தேடுவதென முடிவு செய்து, அதன்படியே ரிசியும் ப்ரூனோவும் அங்கு செல்கின்றனர். அப்போது பலத்த மழை கொட்டுகிறது. தந்தையும் மகனும் ஒரு சுவற்றின் ஓரம் ஒதுங்கி நிற்கின்றனர். அந்த சமயத்தில் அங்கு வரும் ஒருவனைப் பார்த்ததும், தனது சைக்கிளைத் திருடியவனோ என ரிசிக்கு சந்தேகம் வர, ஒரு கிழவனிடம் பேசிக்கொண்டிருக்கும் அவனை துரத்துகின்றனர். அவனோ தப்பியோடிவிடுகிறான். அந்த கிழவனைப் பிடித்து விசாரிக்கலாமென அவனைப் பின் தொடர்கின்றனர். அந்தக் கிழவனோ, தனக்கு ஒன்றும் தெரியாது எனக்கூறிவிட்டு அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறான். ஆனால் அவனை ரிசி விடுவதாக இல்லை. விடாமல் பின்தொடர்கின்றனர். அந்தக்கிழவன் ஒரு தேவாலயத்திற்குள் நுழைந்துவிடுகிறான். ரிசியும் பின் தொடர்கிறான்.


அங்கு பிரார்த்தனை தொடங்குவதற்கான நேரம். பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துவிடும் கிழவனை, ரிசி அங்கேயும் விடுவதாக இல்லை. உன்னிடம் பேசிக்கொண்டிருந்த சைக்கிள் திருடனைப் பற்றிக் கூறாவிட்டால் விடமாட்டேன் என கட்டாயப்படுத்துகிறான். ஆனால் தனக்கு யாரையும் தெரியாது எனக்கூறும் அந்தக் கிழவன் சமயம் பார்த்து அங்கிருந்து தப்பிவிடுகிறான். விரக்தியுடன் திரும்பிவரும் தந்தையிடம், நானாகயிருந்தால் அப்போதே பிடித்திருப்பேன்... இப்படி தப்பிக்கவிட்டுவிட்டீர்களே அப்பா... என மகன் ப்ரூனோ கேட்க, அவனை ஆத்திரத்தில் அடித்துவிடுகிறான் ரிசி. அதனால் கோபித்து கொள்ளும் ப்ரூனோவை சமாதானப்படுத்த முயற்சிக்கிறான். அவனை உணவுவிடுதிக்கு அழைத்துச்சென்று அவனுக்கு பிடித்தமானவைகளை வாங்கித்தருகிறான். தானும் சிறிது ஒயின் குடிக்கிறான். அப்போது, மீண்டும் வேலைக்கு போய் நிறைய சம்பாதிப்பேன் மகனே... அப்போது நாம் மிகுந்த சந்தோஷமாக இருக்கலாம்..என்று  நம்பிக்கையுடன் கூறுகிறான்.

வீட்டிற்கு திரும்பும் வழியில், தனது மனைவியிடம் குறி சொன்ன சந்தோனாவின் வீட்டிற்கு சென்று, தனது சைக்கிள் மீண்டும் கிடைக்குமா என்று கேட்கிறான். அவளும் போலீஸ் அதிகாரி சொன்னது போலவே, கிடைத்தாலும் கிடைக்கலாம்...கிடைக்காமலும் போகலாம்.. என்று சொல்கிறாள். வெளியே வரும்போது, ஒருவனைப் பார்த்ததும் தனது சைக்கிளைத் திருடியவனோ என சந்தேகம் எழ, அவனைத்துரத்துகிறான். அவன் ஓடிச்சென்று ஒரு பாலியல் தொழிலாளியின் வீட்டுக்குள் புகுந்துவிட, ரிசியும் பின் தொடர்கிறான். அங்கும் சண்டையாகி...  அவனை வெளியே தள்ளிக்கொண்டு வந்து விசாரிக்கிறான். அப்போது அவனுக்கு ஆதரவாக அப்பகுதியிலிருப்பவர்கள் கூடுகிறார்கள். அந்த சமயம் பார்த்து ரிசியின் மகன் ப்ரூனோ, போலீசை அழைத்துவருகிறான். போலீசுடன் சென்று அந்த இளைஞனின் வீட்டிற்குள் சைக்கிள் இருக்கிறதா என்று தேடுகிறார்கள். எதுவும் கிடைக்கவில்லை. போலீஸ் ரிசியை எச்சரித்து அனுப்புகிறது.


தனது முயற்சிகள் ஒவ்வொன்றும் தோல்வியிலேயே முடிவதால், ரிசி மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாகிறான். தந்தையும் மகனும் பல இடங்களிலும் திருடு போன தங்கள் சைக்கிளைத் தேடி அலைகிறார்கள். அப்போது ஒரு விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வருகிறார்கள். அந்தத் தெருவின் நடைபாதையில் மிகுந்த சோர்வுடன் உட்கார்ந்து விடுகிறார்கள். அந்தவழியே ஏராளமான மனிதர்கள் விதவிதமான சைக்கிள்களை ஓட்டிச் செல்வதை பார்க்கிறார்கள். இருவருக்கும் சோர்வும் துக்கமும் பீறிடுகிறது. மைதானத்திலிருந்து கிளம்பும் ஆர்ப்பரிப்பு சத்தம் அவர்களை மேலும் துயரத்துக்குள்ளாக்குகிறது. மைதானத்திற்கு வெளியே விடப்பட்டிருக்கும் சைக்கிள்களின் வரிசை ரிசியை துன்புறுத்துகிறது. துக்கமும், இயலாமையும் ரிசியையும் ப்ரூனோவையும் பிடித்து ஆட்டுகிறது.

அந்த மைதானத்திற்கு அடுத்திருக்கும் ஒரு சாலையை ரிசி கவனிக்கிறான். அந்தச் சாலையின் ஓரிடத்தில், ஒரு வீட்டின் முன்புறம் ஒரு சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சைக்கிளையே நோட்டம்விடும் ரிசி ஒரு முடிவுக்கு வருகிறான். தனது மகனிடம் காசு கொடுத்து,  அருகிலுள்ள ஒரு இடத்திற்கு சென்று காத்திரு... நான் சீக்கிரம் வந்துவிடுகிறேன்... என்று கூறுகிறான். அப்போது அந்தப்பகுதிவழியே வரும் டிராம் வண்டியில் ஏறிச்செல்லுமாறும் சொல்கிறான். தந்தையின் பதட்டமான நடவடிக்கைகளையே கவனித்துவரும் சிறுவன் ப்ரூனோ, ஒன்றும் புரியாதவனாய் டிராம் வண்டியை  நோக்கிச் செல்கிறான். ரிசியோ.. ஒரு தீர்மானகரமான முடிவோடு.. சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் சைக்கிளை நோக்கிச்செல்கிறான்.

ப்ரூனோ டிராமில் ஏறுவதற்குள் வண்டி புறப்பட்டுவிடுவதால்... அங்கேயே நின்றுவிடுகிறான்.அப்போது ரிசி சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் சைக்கிளை நோக்கிப்பாய்ந்து... அதை திருடிக்கொண்டு... ஏறி மிதித்து தப்பிக்க முயற்சிக்கிறான். அதை கவனித்துவிட்ட அந்த சைக்கிளின் உரிமையாளன், திருடன்..திருடன்... பிடிங்க...பிடிங்க... என்று கத்தியபடியே ரிசியை துரத்துகிறான். அவன் குரல் கேட்டு அருகிலிருப்பவர்களும் ரிசியைத் துரத்துகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க ரிசி முயலும்போது, டிராம் வண்டியொன்று குறுக்கே வந்துவிடுகிறது. அதனால் ரிசியால் தப்பிக்க முடியாமல் கூட்டத்தினரிடம் மாட்டிகொள்கிறான் . அதை  சிறுவன் ப்ரூனோவும் பார்த்துவிடுகிறான். அவன் கண்ணெதிரிலேயே ரிசியை கூட்டத்தினர் கண்டபடி தாக்குகின்றனர். அப்பா..அப்பா...அடிக்காதீங்க... என சிறுவன் கதறுகிறான். கீழே விழுந்துகிடக்கும் தனது தந்தையின் தொப்பியை எடுத்து அதில் ஒட்டியுள்ள மண்ணை தட்டித்தட்டி துடைக்கிறான். கூட்டத்தினர் ரிசியை போலீசிடம் ஒப்படைக்க இழுத்துச் செல்கின்றனர்.  ப்ரூனோ ஓடிவந்து அப்பாவின் கால்களைக் கட்டிக்கொள்கிறான். சைக்கிள் உரிமையாளன் தந்தையும் மகனையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, போலீசில் ஒப்படைக்க வேணாம்... ஒருமுறை மன்னித்து விடலாம்... எனக்கூறி போய்விடுமாறு கூறுகிறான்.

ரிசியையும் ப்ரூனோவையும் கூட்டத்தினர் தள்ளிவிடுகின்றனர். தந்தையும் மகனும் மெல்ல நடக்கின்றனர். ரிசி அவமானத்தால் துடிக்கிறான். ப்ரூனோ தொப்பியை தருகிறான். அதை வாங்கி அணிந்து கொண்டு நடக்கிறான் ரிசி. மகனும் உடன் நடக்கிறான். துக்கம் தாளாமல் நடக்கும் ரிசி, மகனின் கைகளை பிடித்துக்கொள்கிறான். அழுகை வெடிக்கிறது. குலுங்கி... கதறி...  அழுகிறான். அதைக் காணும் ப்ரூனோ, அப்பாவின் கைகளை இறுக்கிப்பிடித்துக்கொள்ள... துயரம் வழியும் இசையுடன் நிறைவடைகிறது படம்.


1940 களில் இத்தாலியில் உருவான நியோ-ரியலிச கோட்பாட்டு கலைப்படைப்பான இப்படம், உலகின் மிகச்சிறந்த திரைக்காவியங்களில் முதன்மையானது. சத்யஜித் ரே உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் பலரையும் ஆகர்ஷித்த படம் இது. வறுமையும் வேலையின்மையும், எளிய மனிதர்களை திருடச்செய்யும் அளவுக்கு தள்ளுவதை.. அதன் வலியோடு சொல்கிற படம் இது. இப்படத்தின் கதா நாயகனாக நடித்திருக்கும் லேம்பெர்ட்டோ மேகியோரனி, ஒரு சாதாரண ஆலைத்தொழிலாளிதான். தான் வேலை பார்த்த ஆலையில் இரண்டு மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு இப்படத்தில் நடித்திருந்தார். ப்ரூனோவாக வரும் சிறுவன் ஸ்டெயோலா, படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கவந்த ஒரு சிறுவன்தான். அவனின் நடிப்பும் பாத்திரப்படைப்பும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். உலகம் முழுக்க திரைப்படக் காதலர்களால் பெரிதும் கொண்டாடப்படும் இந்தப்படம் பல விருதுகளையும் பெற்றது.

இந்தத் திரைப்படம் முன்வைக்கும் சமூகப்பார்வை மிகவும் முக்கியமானது. படத்தை பார்க்கும் எந்த ஒரு சாதாரண பார்வையாளன்கூட எந்தக் குழப்பமும் இல்லாமல் படத்துடன் பயணிக்கமுடியும். அத்துடன் ஒன்றிவிடமுடியும். ஒரு எளியவனின் நேர்மை எப்படி காயடிக்கப்படுகிறது என்பதை பார்வையாளனுக்கு எந்தக்குழப்பமும் இல்லாமல் தனது திரைக்கதையின் வழியே சொல்லியிருப்பார் படத்தின் இயக்குனரான விட்டோரியா டி சிகா. பிரபல திரைப்பட விமர்சகர் ஆந்த்ரே பாஸன் சொல்வதைப்போல, தங்கள் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையின் காரணமாக எளிய மக்கள் திருடி வாழ நிர்பந்திக்கப்பட்ட நிலையில்,  தனது ஒரே சேமிப்பான சைக்கிளை திருடு கொடுக்கும் ஒருவனைப் பற்றிய இந்தப்படம், பிரச்சார நெடியின்றி... உண்மையின் சாட்சியாக வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் திரைக்கதை வலிமைக்கு சான்றாகும்.


இந்த உத்திரவாதமற்ற வாழ்வு சாதாரண மனிதர்களை இப்படித்தான் கேலிசெய்து பார்க்கிறது. அவர்களின் நேர்மையோடு விளையாடிப்பார்க்கிறது. நெருக்கடியின் முச்சந்தியில் கொண்டுவந்து நிறுத்தி, அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது. அதன் உக்கிரத்தை தாங்கமுடியாமல் நாமும் ரிசியைப் போல தடுமாறி விடுகிறோம். அந்த தடுமாற்றத்தின் பிரதிபலனாய் காலமெல்லாம் கண்ணீர் வடித்துக்கொண்டேயிருக்கிறோம். மரியாவைப் போல.. ரிசியைப் போல... குறி சொல்பவர்களை நாடுகிறோம். கடவுள்களின் சன்னதிகளில் சரணடைகிறோம். எந்த சாமிகளாவது வந்து நம்மைக் கரையேற்றிவிடாதா என கைகளைக் காற்றில் துழாவுகிறோம். சாமிகள் வராவிட்டாலும் ப்ரூனோக்கள் வருவார்கள்.. தங்களின் கறைபடியாத பிஞ்சுக் கைகளைத் தந்து நம்மை தாங்கிப்பிடித்துக்கொள்வார்கள்.  அந்தக் கைகளை சேர்த்து இறுகப் பற்றியபடியே நாம் நடந்துகடந்துவிடலாம் இந்த வாழ்வை. எங்கே அந்த ப்ருனோக்கள் என தேடுகிறீர்களா... அவன் இந்த சைக்கிள் திருடனுக்குள்தான் ஒளிந்திருக்கிறான்.  நீங்கள் படத்தைப் பார்த்தால், ஒருவேளை அவன் உங்கள் கைகளை ஆதரவாகப் பற்றி நடக்கக்கூடும்.    





எங்கிருக்கிறாய் துர்கா ? பதேர்பாஞ்சாலி


இரண்டு நாட்களுக்கு முந்தைய இரவில் பதேர்பாஞ்சாலி திரைப்படத்தை பின்னிரவில் தனியாக உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தேன்.  இதற்கு முன்பாக இருபது முறைகளுக்கும் மேலாக பார்த்திருக்கிறேன் என்றாலும் அந்த படம் அந்தரங்கமாக சில சலனங்களை எனக்குள் உருவாக்குகிறது என்பதற்காகவே அடிக்கடிப் பார்ப்பேன். விளக்கின் சுடர் நிசப்தமாக அசைந்து கொண்டிருப்பது போல காட்சிகளின் வழியே  ஏதோ துண்டப்பட்டு சலனம் கொள்ளத் துவங்கியிருந்தேன். முன்பு ஒரு போதும் பார்த்தறியாத ஒரு படத்தை காண்பது போலவே ஒவ்வொரு சிறு அசைவிற்கும் மனது கூடவே அசைந்தது.

எனது இருபத்திரெண்டாவது வயதில் பதேர் பாஞ்சாலி படத்தை முதன்முறையாக பெங்களுரில் உள்ள ஒரு திரைப்பட இயக்கம் நடத்திய திரைவிழாவில் பார்த்தேன். கல்லுரி விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு வந்திருந்த என்னை தற்செயலாக அந்த திரைப்பட விழாவிற்கு கூட்டிச் சென்றார் எனது மாமா. முதலிரண்டு நாட்கள் ஹங்கேரி படங்கள் திரையிட்டார்கள். அதில் எனக்கு பெரிதாக கவனம் கூடவில்லை.

ஒரு ஞாயிற்றுகிழமை காலை பத்து மணிக்கு பதேர்பாஞ்சாலி திரையிட்டார்கள். அன்று நாங்கள் திரையிடல் நடைபெற்ற இடத்திற்கு சென்றபோது ஐநுறுக்கும் மேற்பட்டவர்கள் முன்னதாகவே வந்து காத்திருந்தார்கள். கதவு திறக்கபடாததால் எல்லோரும் பொறுமையாக வெளியே காத்திருந்தார்கள். பத்து நிமிடங்களுக்கு பிறகு கதவு திறந்தது. ஒரு நபர் கன்னடத்தில் சத்யஜித்ரே பற்றி பேசினார். அதன்பிறகு பதேர்பாஞ்சாலி படம் ஒடத்துவங்கியது

வளைந்த மூங்கில் மரங்கள் அடர்ந்த பாதை, வெளிச்சம் இருளை துரத்தி விளையாடுகிறது. சுட்டசெங்கற்களால் ஆன வீடுகள். பழைய கால கிணறு, துருப்பிடித்த இரும்பு சட்டங்கள், வேதனையை மறைக்க தெரியாத மனிதர்கள் என ஒரு வங்காள கிராமம்  இடம் பெயர்ந்து வந்துவிட்டது போன்றிருந்தது. பார்க்க துவங்கிய சில நிமிசங்களிலே துர்காவிடம் என் மனதை பறி கொடுத்துவிட்டேன். துர்காவின் ஒவ்வொரு செயலும் என்னை அவளோடு மிகவும் நெருக்கமாக செய்தது.

துர்கா கொய்யாபழம் திருடுகிறாள். துர்கா அம்மாவிடம் திட்டுவாங்குகிறாள். துர்கா தம்பிக்கு அலங்காரம் செய்துவிடுகிறாள். ரயிலை காட்டுவதற்காக அழைத்துக் கொண்டு ஒடுகிறாள், பாட்டியோடு ஸ்நேகம் கொள்கிறாள். துர்கா பெரிய மனுஷியை போல புடவை கட்டியிருக்கிறாள். அப்பு பிறந்து வளர்ந்து வேடிக்கையான சிறுவனாக வளரும் போது கூட என்னால் அப்புவோடு நெருக்கம் கொள்ள முடியவேயில்லை. துர்காவின் பெரிய கண்கள், அடர்ந்த கூந்தல், முகச்சுழிப்பு, கள்ளசிரிப்பு என ஒவ்வொன்றாக என்னுள் வேர் பதித்து கொண்டேயிருந்தது.

துர்காவிற்கு உடல் நலமற்று போகிறது. அவள் இறந்து போய்விடுகிறாள். ஊரிலிருந்து திரும்பும் அப்பா எங்கே துர்கா என்று தேடும்போது அம்மாவால் பதில் பேசமுடியவில்லை. அவரது துக்கம் வெளிப்படுத்த முடியாமல் விக்கி நிக்கிறது. துர்கா இனி இல்லை என்று வீடே அவளின் வெறுமையை உணர்கிறது. அந்த நிமிசத்தோடு படத்திற்குள் முழ்கியிருந்த எனக்கு மூச்சடைப்பு ஏற்பட்டது போன்று படத்தை விட்டு கண்களை வேறு பக்கம் திருப்பத் துவங்கினேன். திரையைப் பார்க்கப் பிடிக்கவில்லை. ஒரு கண்ணாடிக் கோப்பையை கைதவற விட்டது போன்று உள்ளுக்குள் நடுங்கி கொண்டேயிருந்தது.

மாமா படத்தில் ஒன்றிப்போயிருந்தார். எழுந்து வெளியே போய்விடலாம் என்றாலும் தயக்கமாக இருந்தது. இருட்டுக்குள்ளாகவே தரையை வெறித்து பார்த்து கொண்டிருந்தேன். நாக்கில் கசப்பு படிந்துவிட்டது போன்றிருந்தது. என்னை அறியாமல் எப்போதாவது திரையை நேர்கொள்ளும் போது கூட அதனுள் மனம் ஒன்றவேயில்லை. துர்கா திருடி ஒளித்த வைத்த பொருட்களை அப்பு எடுத்து வெளியே எறியும் போது அத்தனையும் ஒடிப் போய் பொறுக்கி கொண்டுவிட வேண்டும் போலிருந்தது. ஈரக்களிமண் காலில் ஒட்டிக் கொள்வது போல மனதில் துர்கா அப்பிக் கொண்டு விட்டாள்.

படம்விட்டு வெளியே வந்து வெயில் மங்கிய சாலைகளில் நடந்து திரிந்தோம். ஆனாலும் அவள் உருவாக்கிய துக்கம் வடியவேயில்லை. இரண்டு நாட்களுக்கு மேல் பெங்களுரில் இருக்க முடியவில்லை. ஊருக்கு புறப்பட்டுவிட்டேன்.

அதன் பிறகு சென்னையில், திருச்சியில், திருவனந்தபுரத்தில், கல்கத்தாவில் என பலஇடங்களிலும் பதேர்பாஞ்சாலியின் மூன்று பகுதிகளையும் பார்த்திருக்கிறேன். அதைப்பற்றி எவ்வளவோ வாசித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். ஆனால் துர்காவை பற்றிய நினைவுகள் மட்டும் இன்றும் மனதில் அழியாமல் அப்படியே இருக்கின்றன

துர்கா உயிரோடிருந்தால் என்னவாகியிருக்கும். அவர்கள் அந்த ஊரிலிருந்து வெளியேறி போயிருக்கமாட்டார்கள். அதைவிடவும் அப்புவின் உலகம் வேறுவிதமாக ஆகியிருக்கும். ஆனால் துர்கா படித்திருக்க மாட்டாள். துர்கா யாரையோ திருமணம் செய்து கொண்டு ஒரு எளிய வாழ்க்கையை வாழ போயிருப்பாள். ஆனாலும் துர்காவின் பாசம் அப்படியே இருந்திருக்கும். அப்புவிற்கு வாழ்வின் மீதுள்ள பிடிப்பாக இருந்திருப்பாள். துர்காவும் அப்புவிற்கும் உள்ள வெளிப்படுத்தபட முடியாத அன்பு இன்னொரு தளத்தில் அக்கதையை கொண்டு போயிருக்கும்

துர்கா காசியை பார்த்திருந்தால் மிகுந்த சந்தோஷம் கொண்டிருப்பாள். அந்த படித்துறைகளில் அவளது பாதங்கள் ஒடி களிப்படைந்திருக்கும். படித்துறை புறாக்களுக்கு தீனி போட்டிருப்பாள். துர்கா கல்கத்தாவில் ரயில் நிலையத்தை ஒட்டிய அப்புவின் அறையை கண்டிருந்தால் பால்யத்தின் காட்சியை நினைவு கூர்ந்திருப்பாள். வேதனை மிக்க தங்களது கடந்த காலத்தினை நினைத்து தன்னை மீறி அழுதிருப்பாள்.

அவளால் தம்பி மனைவியின் சாவை தாங்கி கொண்டிருக்க முடியாது. அவளது பையனை தானே வளர்க்க துவங்கியிருப்பாள். துர்கா என்ற சரடு அந்தபடத்தில் கண்ணுக்கு புலனாகாமல் யாவற்றின் பின்னும் ஒடிக் கொண்டேயிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு துர்காவாக நடித்த சிறுமியின் ( உமா தாஸ் குப்தா, இன்று அமெரிக்காவில் வசிக்கிறாள்) நினைவுகுறிப்புகள் உலக பிரசித்தி பெற்ற இலக்கிய இதழான கிராந்தாவில் (எழ்ஹய்க்ஹ) வெளியாகியிருந்தது. அதற்காகவே அதை பிரதியெடுத்து அனுப்பும்படியாக அமெரிக்காவில் உள்ள நண்பருக்கு தெரிவித்தேன். இரண்டு வாரத்தின் பின்பு கையில் கிடைத்த இரவிலே வாசித்தும் முடித்தேன். உமா தாஸ்குப்தாவின் நினைவில் பதிந்திருப்பது முற்றிலும் வேறுபட்ட அனுபவங்கள். ஆனால் துர்கா உயிரோடு இருந்தால் என்ன செய்து கொண்டிருப்பாள் என்ற எனது தேடுதலுக்கு சிறிய ஆறுதலாக இருந்தது அந்த பேட்டி

அதன்பிறகு இரண்டு முறை விபூதிபூஷணின் பதேர்பாஞ்சாலி நாவலை வாசித்திருக்கிறேன். அதில் வரும் துர்கா சம்பிரதாயமான வங்காளச் சிறுமி. அவள் என்னோடு இத்தனை நெருக்கம் கொள்ளவில்லை. அதில் கதாபாத்திரங்களை விடவும் அந்த கிராமமும் அதன் இரவு பகல்களுமே என்னை வசீகரித்தன. அந்த நாவல் மிக நீண்ட விவரணைகளும் குறுக்கும் நெடுக்குமாக பல சரித்திர குறிப்புகளும் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் அது பழைய நாவல் வடிவத்தின் தொடர்ச்சியாகவே உள்ளது. ஆனால் சத்யஜித்ரே உருவாக்கிய பதேர்பாஞ்சாலி  விபூதி பூஷண் நாவலின் சாற்றை உள்வாங்கி கொண்டு உருவாக்கபட்ட தனித்துவமான கலைப்படைப்பு.

துர்கா ஏன் எனக்கு இத்தனை நெருக்கமாக இருக்கிறாள் என்று என்னை நானே பலமுறை கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். அவள் மீதான எனது விருப்பத்திற்கான காரணங்களில் சில வெளிப்படையாகவும் சில நிழல்மறைவிலும் இருக்கின்றன

துர்கா நான் பால்யத்தில் பார்த்த எனக்கு மிகவும் பரிச்சயமான ஒரு சிறுமியின் சாயலில் இருந்தாள். எனக்கு பரிச்சயமான அந்த சிறுமி ஒரு நாள் நீச்சல்தெரியாமல் கிணற்றில் விழுந்து இறந்து போனாள். அன்று ஊரே கிணற்றடியில் கூடியிருந்தது. நான் கிணற்றில் குனிந்து பார்த்தபோது படிக்கட்டில் அவளது அடர்ந்த கூந்தல் விரிந்து கொண்டிருக்க அவள் சரிந்து கிடந்தாள். அவளது ஊதா நிற பாவாடையில் ஈரம் சொட்ட மூர்க்கமான மதிய நேரத்து சூரியன் அவள் முதுகில் ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது. அந்த சிறுமியை துர்கா நினைவுபடுத்துகிறாள் எனலாம்.

இன்னொரு பக்கம் துர்காவை போல தம்பிகளை நேசிக்கும் அக்காக்கள் பலரையும் எனது பால்யம் முழுவதும் பார்த்திருக்கிறேன். அக்கா இல்லாமல் இருக்கிறோமே என்று சிறுவயதில் கவலைபட்டு அழுதிருக்கிறேன். அதுவும் கூட காரணமாக இருந்திருக்க கூடும்

இவையாவையும் விட ஊரை விட்டு வெளியேறி சென்ற குடும்பங்கள் யாவின் பின்புலத்திலும் ஒரு துர்மரணம் இருந்திருக்கிறது என்பதை நிதர்சனமாக கண்டதும் காரணமாக இருந்திருக்கலாம்

இப்படி கண்ணுக்கு தெரியாத ஏதோ காரணங்களை நினைவுபடுத்துவதோடு மட்டுமல்லாது ஒரு இரவே வாழ்ந்தாலும் மின்மினிப்பு காட்டிச் செல்லும் மின்மினிப்பூச்சி போல வாழ்வின் வசீகரத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறாள். அவளது சிறப்பே அவள் நம்மில் சிலரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறாள் என்பதே. பால்யத்தின் மாறாத கள்ளத்தை அவள் சிரிப்பு வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. துர்கா யாவர் வீட்டிலும் கரைந்து போயிருக்கிறாள்.

பதேர்பாஞ்சாலியை இந்த இரவில் பார்த்து கொண்டிருந்த போதும் அதே துக்கம் தொண்டையை அழுத்தியது. நான் ஒரு படம் பார்த்துகொண்டிருக்கிறேன் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்ட போதும் திரையை விட்டு கண்கள் நழுவுகின்றன. மனம் துக்கத்தின் சாலையில் நடந்து கொண்டேயிருக்கிறது.

துர்கா நினைவில் ஒரு சுடரை போல எரிந்து கொண்டேயிருக்கிறாள். நீங்கள் பதேர் பாஞ்சாலி பார்த்திருக்கிறீர்களா என தெரியாது. ஆனால் ஒருமுறை அவசியம் பார்க்க வேண்டும் என்பதற்கு ஒரேயொரு காரணமிருக்கிறது. அதில் உங்கள் பால்யமும் கரைந்து கிடக்கிறது. துர்காவை போன்ற சிறுமி உங்களுக்கு சகோதரியாக இருந்திருக்க கூடும். அதற்காகவாவது ஒரு முறை பாருங்கள். பதேர்பாஞ்சாலி வெறும் திரைப்படம் மட்டுமல்ல, அது வாழ்வு குறித்த ஒரு ஆவணம்.
பதேர்பாஞ்சாலி திரைப்படம் பற்றிய விரிவான எனது பதிவு நூறு பக்கங்களுக்கும் மேலாக உள்ளது. அது தனித்து பதேர்பாஞ்சாலி – நிதர்சனத்தின் பதிவுகள் என்ற புத்தகமாக உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

jeya mohan ,writer

No comments:

Post a Comment