EAST INDIA COMPANY CHEATED MAHARAJA AT THE AGE OF 15 AND STOLE KOHINOOR DIAMOND
இந்தச் சூழ்நிலையில், குழப்பங்களைத் தக்க வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள விரும்பியது இங்கிலாந்தின் கிழக்கிந்திய நிறுவனம். அரசி நாட்டின் எல்லையான சட்லஜ் நதியோரம், தெற்கு தென்கிழக்குப் பகுதிகளில் ஆங்கிலேயரை எதிர்கொண்டு போரிட படையை அனுப்பினார். படைத்தளபதிகளில் சிலர் ஆங்கிலேயர்களின் ஆசைவார்த்தைக்கு மயங்கி அவர்கள் கைக்கூலியாக மாறி நாட்டுக்கு இரண்டகம் விளைவித்தனர். அதன் விளைவாக, ஆங்கிலேயர் தொடங்கிய முதற்போரில் நாட்டைக் கைப்பற்றினர். ஆங்கில அரசு, சீக்கிய அரசுப் பொறுப்பை அரசரிடம் விட்டு வைத்தாலும், திட்டமிட்டு முதலில் இளவரசரின் சார்பாக பின்னணியில் அரசாட்சி செய்த இவரது தாயார் அரசி ஜிந்தனை பதவி நீக்கி அந்த இடத்தில் தங்களுக்கு ஆதரவான மற்றொருவரை நியமித்தது. பின்னர் அரசியைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தியது. இரண்டாவது ஆங்கில சீக்கியப் போரின் முடிவில் சீக்கியப் பேரரசு, ஆங்கில அரசின் பகுதியாக மார்ச் 29, 1849ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்டது. அந்த ஆவணத்தில் கையெழுத்திட்ட இளவரசர் துலிப் சிங்கிற்கு அப்பொழுது வயது பத்து. அவரது தந்தை பஞ்சாப் சிங்கம் ரஞ்சித் சிங் சீக்கியப் பேரரசை உருவாக்கிய முதல் மன்னர், ஆனால் அவரது மகன் துலிப் சிங்கோ சீக்கியப்பேரரசின் கடைசி மன்னர் என்ற நிலை ஏற்பட்டது. துலிப் சிங்கிற்கு ஆதரவாகப் புரட்சிகள் தோன்றி, சீக்கியப் பேரரசு மீண்டும் துலிப் சிங்கினால் தழைத்து விடாது இருப்பதற்காக, துலிப் சிங்கை அவரது தாய் இருக்கும் இடத்திலிருந்தே பிரித்து ஆங்கிலேய மருத்துவரான ஜான் லாகின், அவரது மனைவி லீனா லாகின் (Dr John Login & Lady Lena Login) என்பவர்களின் குடும்பத்தின் பொறுப்பில் அவர் 1850 இல் ஒப்படைக்கப்பட்டார், பஞ்சாபில் இருந்து 140 மைல்களுக்குத் தொலைவில் ஆங்கிலேயர் குடியிருப்புப் பகுதிக்கு மன்னர் துலிப் சிங் அனுப்பப்பட்டார்.
இவ்வாறு பஞ்சாபை இங்கிலாந்தின் கிழக்கிந்திய நிறுவனத்தின் பகுதியாக இணைக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அதனுடன் கோகினூர் வைரத்தையும் வெற்றிபெற்ற இங்கிலாந்திற்குப் பரிசாக வழங்க வேண்டும் என்ற குறிப்பையும் இணைத்து, சூழ்ச்சியால் கோகினூர் வைரத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் தனி அக்கறை எடுத்துக் கொண்டு செயல்படுத்தியவர் டல்ஹௌசி பிரபு. கிழக்கிந்திய நிறுவனத்திற்குச் சிக்கல் ஏற்படாமல் இருக்க இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு, இங்கிலாந்திற்கு நாடுகடத்தப்பட்ட துலிப் சிங், இங்கிலாந்தின் பேரரசி விக்டோரியாவிடம் கோகினூர் வைரத்தைக் கொண்டு சேர்த்த பொழுது அவருக்கு அகவை 15. சுருக்கமாக, இங்கிலாந்து அரசின் அரசியல் சதுரங்கத்தில் மன்னரும் ஒரு காயாக நகர்த்தப்பட்டார். வரலாற்றில் இங்கிலாந்தில் குடியேறிய முதல் சீக்கியரான பஞ்சாப் மன்னர் துலிப் சிங் பெற்றோர், குடும்பம், கலாச்சாரம், சமயம், நாடு, மொழி என அனைத்துத் தொடர்பும் துண்டிக்கப்பட்டு இளமையிலேயே தனிமையில் முற்றிலும் புதிய வேறோரிடத்தில் வாழ நேர்ந்தது. இதற்கிடையில், ஆங்கில அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டு, மகனிடம் இருந்து பிரிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட அரசி ஜிந்தன் பணிப்பெண் போன்ற மாறுவேடத்தில் சிறையில் இருந்து தப்பி, பத்து நாட்கள் தலைமறைவாக ஆங்கிலேயர் கண்ணில் மண்ணைத்தூவி பயணம் செய்து, நேபாளத்தில் காத்மண்டு அரச குடும்பத்தில் அடைக்கலம் புகுந்தார்.
தங்களது ஆட்சியின் கீழ் வந்த பிற நாடுகளின் கலைப்பொருட்களை கொணர்ந்து தங்கள் நாட்டில் காட்சிப்படுத்தி தங்களது வீரத்தை, பெருமையைப் பறைசாற்றுவது வெற்றிபெற்றோரின் மனப்பான்மை. சாதாரண வேட்டைக்குச் செல்பவர்களும்கூட தான் கொன்ற புலி, மான் இவற்றின் தலையைப் பாடம் செய்து வீட்டின் சுவரில் மாட்டிக் காட்சிப்படுத்தி தன் வெற்றியை அறிவித்துக் கொள்ளும் மனப்பான்மை (“YES, I did it!” – proud attitude) யாவருமறிந்த ஒரு நடைமுறையே. துலிப் சிங் போலவே மற்றொரு நாடிழந்த இந்திய இளவரசி கவுரம்மா என்பவரும், மற்றொரு ஆப்பிரிக்க இளவரசியும் கூட பேரரசியின் வளர்ப்புப் பிள்ளைகளாக வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளார்கள். இங்கிலாந்தின் பேரரசியார் அவர் வளர்த்த இந்திய இளவரசி கவுரம்மா, மன்னர் துலிப் சிங்கை மணந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்பினார், ஆனால் அவர்களுக்கு அதில் விருப்பமிருக்கவில்லை. இவ்வாறாக, தனது மதிப்பை அறிய வழியின்றி, அதை அறிவுறுத்துபவர் தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட நிலையில் அந்நிய நாட்டில் ஒரு ஆங்கிலேயப் பிரபு வாழும் வாழ்க்கையை இங்கிலாந்து தந்த அரசு மானியத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார் நாடிழந்த இளைஞரான மன்னர் துலிப் சிங். ஆனால், தனது தாயை சந்திக்கும் ஆசையை அவர் கைவிடவில்லை.
தனது தாயை அழைத்துக் கொண்டு இங்கிலாந்து திரும்பினார் துலிப் சிங். அங்குத் தனது மகன் ஒரு ஆங்கிலேயப் பிரபு போன்ற உல்லாச வாழ்வில் காலத்தைச் செலவிடுவதைக் கண்டு வருந்திய அரசி ஜிந்தன், மன்னர் துலிப் சிங் யார் என்றும், எப்பேர்ப்பட்ட வீரத் தந்தைக்கு, பண்பு நிறைந்த ஒரு பேரரசருக்குப் பிறந்தவர் என்றும், எதையெதை எல்லாம் இழந்துவிட்டு, அந்த இழப்பின் அருமை கூடத் தெரியாமல் வருத்தமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை எல்லாம் மகனுக்கு எடுத்துச் சொன்னார். தனது மகனுடன் வாழ்ந்து அவருக்குத் தெளிவேற்படுத்திய அந்த அன்னை அரசி ஜிந்தன் இரண்டாண்டுகள் கழித்து (1/8/1863 இல்) மறைந்துவிட்டார். அவர் இறந்த மறு ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக இந்தியா திரும்பி தனது தாயின் உடலுக்கு நாசிக், மும்பை பஞ்சவடி பகுதியில் எரியூட்டி இறுதிச் சடங்குகளைச் செய்த துலிப் சிங், தாய்க்கு ஒரு நினைவுமண்டபமும் அங்கே எழுப்பினார். அவரது நாடான பஞ்சாப் பகுதியில் எரியூட்டவோ இறுதிச் சடங்குகளைச் செய்யவோ ஆங்கில அரசு அவருக்கு ஒப்புதல் தரவில்லை.
இங்கிலாந்து திரும்பும் வழியில் கெய்ரோவில் ஆசிரியையாகப் பணிபுரிந்த ‘பம்பா முல்லர்’ (Bamba Muller) என்ற பெண்ணை (7/6/1864 அன்று) எகிப்தில் மணந்து, தனது மனைவியுடன் இங்கிலாந்தில் தனது ‘எல்விடன் ஹவுஸ்’ (Elveden House) இல் வாழத் தொடங்கினார் துலிப் சிங். தனது இளமைக்கால அரசவாழ்க்கையை நினைவூட்டும் வகையில் மாளிகையை அலங்கரித்து, அரசவாழ்க்கை வாழ முயன்றார். அவருக்கு மூன்று மகன்களும், மூன்று மகள்களும் பிறந்தனர். அவரது ஆடம்பரவாழ்வு வாழும் முறைக்குச் செலவு கட்டுப்படியாகாமல் அரசு மானியத்தை அதிகரிக்க அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். அவரது குடும்பத்துடன் நெருக்கமான உறவில் இருந்த இங்கிலாந்து அரசி இதற்கு ஒப்புக் கொள்ள விரும்பினாலும், இங்கிலாந்து அரசு ஒப்புக் கொள்ளவில்லை. தனது சீக்கிய அரசின் மதிப்பையும், அவரது இழப்பின் அளவையும் உணர்ந்திருந்த துலிப் சிங்கிற்கு இங்கிலாந்தின் இந்த முடிவு சினம் ஏற்படுத்தியது. பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து தனது பஞ்சாப் அரசை மீட்க உதவி கோரினார். ‘சூரியன் மறையாத அரசு’ என்ற பெயர் பெற்று வல்லரசு நிலையில் இருக்கும் இங்கிலாந்தை பகைத்துக் கொண்டு உதவ யாரும் முன்வராததால் அவரது சந்திப்புகள் தோல்வியில் முடிந்தன. இந்தியாவிற்குக் குடும்பத்துடன் திரும்பிவிட எண்ணி, தான் பிறந்த மண்ணுக்குத் திரும்பும் முயற்சிகளை மேற்கொண்டார். இதனை விரும்பாத இங்கிலாந்து அரசு, அவரது பயணத்தை இடையிலேயே தடை செய்தது, அவரை ஏடனில் (21/4/1886 அன்று) வீட்டுச் சிறையில் அடைத்தது. இதற்கிடையில் மீண்டும் சீக்கிய மதத்திற்குத் திரும்பிய மன்னர் துலிப் சிங் இங்கிலாந்து திரும்புவதை வெறுத்தார். குடும்பத்தை இங்கிலாந்திற்கு அனுப்பிவிட்டுத் தான் மட்டும் பாரிசில் தங்கினார். கணவரின்றி, பிள்ளைகளுடனும், உடைந்த மனதுடனும் இங்கிலாந்து திரும்பி, அரசு மானியத்தில் வாழ்வைத் தொடர்ந்த அரசி பம்பா மதுவுக்கு அடிமையானார். பிறகு சில நாட்களில் நோய் வாய்ப்பட்டிருந்த தனது மகளின் படுக்கைக்கு அருகில் இரவு முழுவதும் பணிவிடை செய்த அவர் கோமாவில் விழுந்து இறந்தார்.
கோகினூர் வைரம் இங்கிலாந்து சென்றடைய நேர்ந்தது, நாடிழந்து நாடு கடத்தப்பட்ட பஞ்சாப் மன்னர் துலிப் சிங்கால் என்பது ஒரு வரலாற்று உண்மை. அளவில் மிகப் பெரிய, 105 காரட் (21.6 கிராம்) எடையுடன் உலகிலேயே மிகப் பெரிய ஒளிவீசும் கோகினூர் வைரம் இந்தியாவின் ஆந்திராவின் குண்டூர் பகுதியில் வெட்டிஎடுக்கப்பட்டது என்பதும் அனைவரும் அறிந்த ஓர் உண்மைதான். விலைமதிப்பற்ற அதனை அடையக்கூடியத் தகுதியும் மன்னர்களைத் தவிர வேறு எவருக்கும் இருக்கவும் வாய்ப்பில்லை என்பதால் அரசக்குடும்பங்களில் மட்டுமே தங்கியது அந்தக் கோகினூர் வைரம். அரசுகளுக்கிடையே போர் நிகழ்வதும் மிகவும் இயல்பான ஒன்று. ஒவ்வோர் முறையும் வெற்றி பெற்ற மன்னர்கள் அதைக் கைப்பற்ற பற்பல இந்திய அரச குடும்பங்களிலும், ஆப்கானிய அரச குடும்பங்களிடமும் கோகினூர் வைரம் மாறி மாறிச் சென்றடைந்து இறுதியில் பஞ்சாப் சிங்கம் ரஞ்சித் சிங்கிடம் சென்று சேர்ந்தது.
ஆனால், சில பத்திரிக்கைச் செய்திகள் குறிப்பிடுவது போல பஞ்சாப் சிங்கம் ரஞ்சித் சிங் அதனை இங்கிலாந்தின் பேரரசிக்குப் பரிசாக வழங்கவில்லை. மன்னர் ரஞ்சித் சிங் இறந்த பின்னர், சீக்கியப் பேரரசில் ஏற்பட்ட பதவிப் போட்டியால் அரச குடும்பத்தில் ஏற்பட்ட தகராறுகளும், அதன் தொடர்ச்சியாக நாடு பிடிக்க விரும்பிய ஆங்கில அரசின் ஆசைகாட்டுதலுக்கு மயங்கிய பஞ்சாப் அரச அதிகாரிகள் செய்த இரண்டகத்தாலும் சீக்கியப் பேரரசு ஆங்கிலேயர் வசமானது. ஆட்சியில் இருந்த பத்து வயது சிறுவனின் ஆதரவாளரான அரசியைச் சிறைப்படுத்தி, மற்றவரைச் செயலிழக்கச்செய்து வஞ்சகமாக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி பஞ்சாபை தனது பகுதியாக இணைத்துக் கொண்ட கிழக்கிந்திய நிறுவனம், கோகினூர் வைரமும் வெற்றிபெற்றவருக்கு பரிசாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றப்பகுதியையும் இணைத்து பத்து வயது சிறுவனிடம் ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது. இவ்வாறு பத்து வயது சிறுவனுடன் போட்ட ஒரு ஒப்பந்தம், அல்லது அவரது ஆதரவாளர்களைச் சிறையில் அடைத்துவிட்டு, தங்களது ஆதரவாளர்களின் கண்காணிப்பில் உள்ள சிறுவனுடன் போட்ட ஒப்பந்தத்தை, தங்களது ஆதரவாளர்கள் உதவியுடன் ஆங்கில அரசு செயல்படுத்திக் கொண்டாலும் அந்த ஒப்பந்தம் ஒரு முறையான செயலாகுமா? அறியாச் சிறுவனாக இருந்த துலிப் சிங்கை மதமாற்றம் செய்ய வைத்ததே முறையல்ல என்றக் கருத்தும் இன்றுவரை உலவி வருகிறது.
பத்து வயது சிறுவன் தனித்து ஆட்சி செய்யவில்லை. அவன் சார்பாக அவனது பிரதிநிதிகள் நாட்டை ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் இடத்தில் நியமிக்கப்பட்டவர்கள் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆதரவாளர்கள் என்ற நிலையில் ஒரு நாடுபிடிக்கும் நாடகம் அரங்கேற்றப்பட்டது தெளிவாக விளங்குகிறது. கோகினூர் வைரமும் அந்த வஞ்சகமான முறையிலேயே ‘பரிசு’ என்ற பெயரிலும் கைமாற்றப்பட்டுள்ளது என்பதும் தெளிவாக விளங்குகிறது. அதனைத் தானே இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்த 15 வயது சிறுவனுக்கு இழந்த தனது நாட்டின் அருமையும் தெரியாது, தான் ஒப்படைக்கும் கோகினூர் வைரத்தின் மதிப்பும் தெரியாது. தனக்களிக்கப்பட்ட வைரத்தைத் தனது மணிமகுடத்தில் பதிக்கும் அளவிற்கு வெட்டி அதில் பதித்து அணிந்து கொண்டார் இங்கிலாந்து அரசி. பிற்காலத்தில் தனது நாட்டையே இழந்ததை உணர்ந்து மனமுடைந்த மன்னர் துலிப் சிங்கிற்கு, பறிபோன கோகினூர் வைரமெல்லாம் ஒரு பொருட்டாக இருந்திருக்கவும் வாய்ப்பில்லை.
இங்கிலாந்து கோகினூர் வைரத்தைத் திருப்பித் தர நினைத்தாலும் அது இந்தியாவிற்கு மட்டுமே கிடைப்பதுதான் முறை. வைரத்தை அரசியிடம் ஒப்படைத்த துலிப் சிங் பிறந்தது இக்கால பாகிஸ்தானில் உள்ள லாகூரில், அது அவரது கைநழுவிப் போன சீக்கியப் பேரரசின் பகுதி. இருப்பினும் அப்பகுதி சுதந்திரத்திற்கு முன்னர் இருந்த இந்தியாவின் பகுதிதான். கிழக்கிந்திய நிறுவனம், பிரிட்டிஷ் ராஜ், என்று கூறப்பட்டதும், இங்கிலாந்து அரசி தன்னை அரசியாக முடி சூட்டிக் கொண்டதும் இந்தியாவிற்குத்தான். பாகிஸ்தானுக்கு அல்ல. அது பின்னர் பிரிவினையால் தோன்றிய ஒரு நாடு. நேரு அவர் பிரதமராக இருந்த காலத்தில் கோகினூர் வைரத்தை மீட்க முயற்சிகள் செய்தாலும், இதுநாள் வரை இந்திய அரசு கோகினூர் வைரத்தை மீட்பதில் ஆர்வம் காட்டாதிருந்தது. இப்பொழுது உச்ச நீதிமன்றத்திலிருக்கும் வழக்கின் அடிப்படையில் இந்திய அரசு அமைதிகாக்க விரும்பும் தனது முடிவை மாற்றிக் கொண்டு கோகினூர் வைரத்தை இங்கிலாந்திடம் இருந்து மீட்க விண்ணப்பம் வைத்தாலும், (ஒரு பேச்சுக்காகவே வைத்துக் கொண்டாலும்…) இங்கிலாந்தும் அதை இந்தியாவிற்குத் திருப்பியே தந்துவிட்டாலும் வரலாற்றின் அடிப்படையில் அது என்ன மாற்றத்தைத்தான் இந்தியாவிற்குக் கொண்டுவரும் என்பதும் புரியவில்லை. இந்தியா ஒரு காலத்தில் இங்கிலாந்திற்கு அடிமைநாடாக இருந்தது என்ற பழி இதனால் நீங்கிவிடுமா?
No comments:
Post a Comment