Sunday 16 July 2017

உலக சினிமா உருவான வரலாறு







உலக சினிமா உருவான வரலாறு

d.w.griffith
லூமியெர் சகோதரர்கள் முதலில் சினிமாவை தம்பட்டம் அடித்து காட்டத் துவங்கியவுடன்,    சென்னை வாசிகளுக்கும் பாரிசிலிருந்து அந்த அதிஷ்டக் காத்து வீசியது . 1897-ல் எம். எட்வ்ர்ட்ஸ் என்ற ஆங்கிலேயர், இரண்டு ”கினிமா” திரையிட்டார். அந்த இரண்டு கினிமாவுமே சில நிமிஷங்கள் தான் ஓடும் “The arrival of the train” மற்றும் ”Leaving the factory” என்ற இந்த இரண்டு ”கினிமா”க்களும் ”விக்டோரியா பொது மாளிகை”யில் திரையிடப்பட்டது. அந்த கட்டிடம் இன்றும் ரிப்பன் பில்டிங் அருகாமையில் உள்ளது. இந்த திரையிடல் மூலமாக  மக்களிடையே  ஆர்வம் பெருக, பல இடங்களில் பயாஸ்கோப், கினிமாஸ்கோப் என பெயர்களுடன்  உலா வந்தது. ”பாரு பாரு பயாஸ்கோப் படத்தப்பாறு, ஒன்றரை பைசா மட்டும் செலுத்தினால் போதும்” என்றவுடன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள்  மக்கள். மின்சாரம் இன்றி , லைசென்ஸ் என்று எதுவும் இன்றி. மக்னீசியத்தை  வைத்து ஒளிப்பரப்பு செய்தார்கள்.
1900-ம் ஆண்டு மக்களுடைய ஆர்வத்தையும் வரவேற்பையும்  பார்த்து சென்னையில்  வாரிக் மேஜர் (Warwick Major) ஒரு நிரந்தர சினிமா தியேட்டர் கட்டினார். அதன் பெயர் ”எலக்ட்ரிக் தியேட்டர்”. மௌன்ட் ரோடில் இன்றைய ஜெனரல் போஸ்ட் ஆஃபிஸ் இருக்குமிடம் தான் எலக்ட்ரிக் தியேட்டர் இருந்த இடம்.  கோஹன் என்பவர் ”லிரிக் தியேட்டர்” என்ற ஒரு தியேட்டரை மௌண்ட் ரோடில் நிறுவினார். அது பின்னர் தீயில் கருகியதால் எல்ஃபின்ஸ்டோன் தியேட்டர் அதே இடத்தில் நிறுவப்பட்டது.
raja harichandra
வெறும் ஒரு நிமிட படம், அதுவும் நடப்பதை அப்படியே பிடித்து காட்டிக் கொண்டிருந்தவர்கள், அடுத்த பரிணாமமாக நடிகர்களை நடிக்க வைத்து படம் எடுத்தனர். ஒரு தோட்டக்காரர் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்த்துக்கொண்டிருப்பார், அங்கே அவருக்கு தெரியாமல் நுழையும் குறும்புகார சிறுவன் தண்ணீர் பாய்ச்சப்படும் குழாயை மிதிக்க தண்ணீர் வரவில்லை என அந்த வயது முதிந்த தோட்டக்காரர் குழாயை அவர் முகம் அருகே வைத்து பார்க்கும் போது, அந்தச் சிறுவன் அவனது காலை எடுத்து விடுகிறான், அப்போது தண்ணீர் குபுக் கென அந்த முதியவர் முகத்தில் அடிக்க அவர் அந்த  சிறுவனை அடிக்க துரத்திக்கொண்டு ஓடுகிறார். இது தான் முதல் நகைச்சுவைப் படமாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி முதல் முதலாக ரசிப்பு தன்மையுடன் ‘வாடேரிங் தி கார்டனர்’ (Watering the Garderner) என்று தலைப்பிடப் பட்டது.
shooting first indian film
படிப்படியாக இந்த சில மணித்துளி படங்கள், கதையுடன் கூடிய 4000 அடி நீள படங்களாக மாறியது. ஹெரால்ட் லாய்ட், சார்லி சாப்லின், எடிக் போலோ போன்ற நடிகர்கள் நடித்தப் படங்கள் தமிழ்  subtitle உடன் திரையிடப்பட்டது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவிலும், இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் பொழுதுபோக்க  வேண்டுமென்றால், மக்கள் தேர்ந்து எடுத்த இடம், திரையரங்கமாகத்தான் இருந்தது. அன்று  இரண்டு அனா (இன்றைய மதிப்பில் 12 லு  பைசா) கொடுத்தால் கிடைத்தது சினிமா தியேட்டர் தரையோ நாற்காலியோ . சினிமா வெறும் ஒளிப்பதிவாளர்கள் கையில் இருந்தால் போதாது, அதில் சொல்லப்படும் கதையையும், காட்சிகளையும் இயக்க ஒரு இயக்குனர் வேண்டும் என உணரப்பட்ட தருணத்தில் தான் சினிமா இயக்குனர்களின் ஆதிக்கத்தில் செயல்படத் துவங்கியது.
உலகச் சினிமாக்களை தலைக் கீழாக புரட்டி சினிமாவை புதியதொரு பாதையில் கொண்டு செல்ல இயக்குனர்கள் தோன்றினார்கள். இருப்பினும் படம் எடுப்பவர்களை எல்லாம் இயக்குனர்களாக அங்கிகரிக்கப்படவில்லை. உன்னத கலை படைப்புகளை ஆரம்ப கட்டத்திலேயே படைத்து  சினிமாவை கட்டமைத்த பிதாமகன்கள்  அமெரிக்காவின் கிரிபித் (D.W.Griffith), விக்டர் ஸ்ட்ரோஜம் (Victor Sjostorm), பஸ்டர் கீட்டன் (Buster Keaton), சார்லி சாப்ளின் (Charlie Chaplin), எரிக் வான் ஸ்ட்ரோஹிம் (Eric Von Strohelm ) போன்றவர்களையும், பிற்காலத்தைய இயக்குனர்களில் ஆல்பிரட் ஹிட்ச்காக் (Alfred Hitchcock ), ஜான் போர்ட் (John Ford) ஹாவர்ட் ஹாக்ஸ் (Howard Hawks), ஆர்சன் வெல்ஸ் (Orson Welles), ஜெர்மனியில் எர்னஸ்ட் லூபிட்ச் (Ernst Lublstch ), ப்ரிட்ஸ் லாங் (Fritz Lang), முர்னோ (Murnau), இத்தாலியின் ரோபர்ட்டோ ரோஸலினி (Roberto Rosillini) மற்றும் விட்டோரியா டிசிகா (Vittorio de sica) ஆகியோர் கொண்ட பட்டியலை மட்டுமே தாங்கள் அங்கீகரிக்கும் முழுமையான இயக்குனர்களாக உலக சினிமா அரங்கில் அறிவிக்கப்பட்டனர். மற்றவர்கள் கதாசிரியர்கள் .அவர்கள் ஒருகதைக்குள் மக்களின் ஞாபகங்களை மூழ்கடித்தனர் . ஆனால் இவர்கள் மட்டும சினிமாவின் கலையை, கதைகளையும், ரசிகணையும் கடந்து அழைத்து சென்றவர்கள் என சினிமா வரலாற்றில் பொறிக்கப்பட்டது.
ஹீராலால் சென் (Hiralal Sen ) மற்றும் ஹரிச்சந்திர சக்ராம் படவேத்கர் (harishchandra sakharam bhatavdekar) தான் இந்திய சினிமாவின் முதல் இயக்குனர்கள். இருவரும் புகைப்படக் கலைஞர்கள்.
சென், 1898–ல்  மேடை நாடகங்களில் இருந்து கதைகளை எடுத்து  படமாக்கத் தொடங்கினார். அவர் ராயல் பயாஸ்கோப் கம்பெனி என்ற பெயரில் இந்தியாவின் முதல் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அவர்தான் உலகின் முதல் முழுநீளப் படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ என்ற படத்தை 1904–ல் உருவாக்கியவர் என்று நம்பப்படுகிறது. என்றாலும் அந்தப் படத்தின் பிரதி கிடைக்கவில்லை. அவரது படைப்புகள் அனைத்தும் தீவிபத்தால் முற்றிலும் அழிந்து போய்விட்டதாக கூறப்படுகிறது. நவம்பர் 1899–ல் படவேத்கர், மும்பை தொங்கும் தோட்டத்தில் குத்துச்சண்டை ஒன்றைப் படமாக்கினார். வாட்சன் ஹாஸ்டலில் இந்தியாவின் முதல் திரையிடல் 1896 ஜூலை 7–ல் நடந்தபோது அவர் அங்கு இருந்தார். இந்தியாவின் முதல் செய்திப்படம் என்று கருதப்படும் இங்கிலாந்திலிருந்து டிசம்பர் 1901–ல் இந்தியா திரும்பும் பாம்பே மாகாண கல்வித்துறை அமைச்சர் ஆர்.பி.பரஞ்சிப்பியின் வருகையையும் 1903 வருடம் கல்கத்தா நகரத்தில் நடைபெற்ற கிங் எட்வர்ட் க்ஷிமிமி அவர்களின் முடிசூட்டு விழாவில் கர்சன் பிரபு (Lord Curzon) என்கிற பிரிட்டிஷ் வைஸ்ராயை படம் பிடித்தார்.
VMH1
இந்தியாவின் முதல் திரையரங்கம், 1907  கல்கத்தாவில் எல்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் கதைப் படமான புந்தலிக், மே 19, 1912-ல் வெளியிடப் பட்டது. அதன் நீளம் 12 நிமிடங்கள்தான். இப்படம் மகாராஷ்டிராவின் துறவி ஒருவரைப் பற்றியது.
இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்க படும் “தாதாசாகே பால்கே” அவர்களின் “ராஜா ஹரிச்சந்திரா” தான் இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படம். இந்த படம் பம்பாய் கோரனேஷன் சினிமாட்டோகிராஃப்  என்ற  அரங்கில் 1913 மே 3–ம் தேதி வெளியானது. இப்படத்தில் நடித்த அனைவருமே ஆண்கள், அந்தக் காலத்தில் சினிமாவில் நடிப்பதற்கு பெண்கள் முன்வர வில்லை. அதனால் பால்கே அவர்கள் ஆண் நடிகர்களை பெண் வேடம் இட்டு, படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்களையும் படமாக்கினார்.

No comments:

Post a Comment