பொதுவாக ரோமன் பொலன்ஸ்கி இயக்கிய படங்கள், தப்பிப் பிழைக்கும் ஓட்டங்களையும், சபலங்களையும், பேரிழப்புகளையுமே மையமாகக்கொண்டிருக்கின்றன. அதற்கு முக்கியக் காரணம், அவரது சொந்த வாழ்க்கையே அப்படித்தான் அமைந்திருக்கிறது.
.
போலந்து நாட்டைச் சேர்ந்த யூதரான ரோமன் பொலான்ஸ்கி சிறுவனாக இருந்தபோது, இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ், குடும்பத்தோடு காண்செண்ட்ரேஷன் கேம்ப்பில் அடைக்கப்பட்டார். அங்கு அவரது அம்மா இறந்துபோனார். சிறுவர்களுக்கான பகுதியில் அடைக்கப்பட்டிருந்த ரோமன் மிகச் சிரமப்பட்டு உயிர்தப்பி வெளியேறினார். போலந்தின் கிராமப்புறங்களில் அலைந்து திரிந்து, வெவ்வேறு குடும்பங்களின் தயவில், பல்வேறு வேலைகளைச் செய்து அவர் வாழ்ந்தார்.










அக்காலத்தில் ஜெர்மானிய படங்கள் மட்டுமே திரையரங்குகளில் காண்பிக்கப்படும் என்பதால் உள்ளூர்வாசிகள் யாரும் பொதுவாகப் படம் பார்ப்பதில்லை, ஆனால் ரோமன் தேசப்பற்றை ஓரங்கட்டிவிட்டு ஏராளமான ஜெர்மன் படங்களைப் பார்த்தார். பின்பு அவரது தந்தையால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு ஒன்று சேர்ந்தபிறகே அவர் படிப்பைத் தொடரமுடிந்தது..
ரோமன் முதலில் ஒரு நடிகராகத்தான்  திரையுலகுக்கு வந்தார். அதன்பின்பே அவர் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார், சில குறும்படங்களை இயக்கினார். அவர் இயக்கிய முதல் முழுநீளத் திரைப்படம்தான், போலந்தில் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு வெளிவந்த படங்களிலேயே, போருக்கு சம்பந்தமில்லாத கதையைக் கொண்ட முதல் படம். “Knife in the Water” என்ற அந்தப் படம் நிறைய விருதுகளையும் பெற்றது. அதன் பிறகு அவர் பிரான்ஸ் சென்று அங்கு படங்களை எடுத்து, பிறகு லண்டனுக்கு சென்று ஆங்கிலப் படங்களை எடுக்க ஆரம்பித்தார். அதன்பிறகு அவர் அமெரிக்காவுக்கு வந்து 1968யில் “ரோஸ்மேரிஸ் பேபி” படத்தின் மூலம் ஹாலிவுட்டுக்குள் நுழைந்தார். அந்த ஒரு படத்திலேயே அனைவரின் கவணத்தையும் ஈர்த்தார். ஆனால் அடுத்த ஆண்டே அவர் வாழ்க்கை நிலை குலைந்தது.













அவர் படவேலையாக ஐரோப்பாவில் இருந்தபோது, அவரது காதல் மனைவியும் நடிகையுமான ஷெரான் டேட் (Sharon Tate) அவரது அமெரிக்க வீட்டில் வைத்து மிகக்கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். சார்லஸ் மேன்சன் என்பவரால் வழிநடத்தப்பட்ட “மேன்சன் குழுமம்” என்று அழைக்கப்படும், தீவிரவாத கலாச்சார இயக்கத்தினர்தான் இந்தக் கொலையைச் செய்தார்கள். அப்போது ஷெரான் 8 மாதக் கர்ப்பினியாக இருந்தார், அவரோடிருந்த வேறு நான்குபேரும்கூடக் கொல்லப்பட்டார்கள். ரோமன் பொலன்ஸ்கிக்கு அதுவொரு தாங்க முடியாத பேரிழப்பு. அவரால் அமெரிக்காவில் இருக்க முடியவில்லை, மீண்டும் ஐரோப்பாவிற்கே திரும்பிச் சென்றார்.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் அமெரிக்கா வுக்கு வந்து, 1974-யில் எடுத்த படம்தான் “சைனா டவுன்”. அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்ட அந்தப் படத்தின் மூலம் ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இடம் பிடித்தார் ரோமன். ஆனால் அதுவும் வெகுநாள் நீடிக்கவில்லை.
ஜாக் நிகல்ஸனின் வீட்டில் நடந்த ஒரு பார்ட்டியின்போது 13 வயதுப் பெண்ணுடன் அவர் உடலுறவில் ஈடுபட்டதாக அவர்மீது வழக்குத் தொடரப்பட்டது. சட்டப்படி அது கற்பழிப்பு என்பதால், வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோது ரோமன் தலைமறைவாகி அமெரிக்காவைவிட்டு வெளியேறி பாரீஸில் தஞ்சமடைந்தார். அதன்பிறகு அவர் இன்றுவரை அமெரிக்க மண்ணில் கால் பதிக்கவே இல்லை, அவரைக் கைது செய்யும்படி நீதிபதி பிறப்பித்த உத்தரவு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. ஆகவே அவர் இத்தனை ஆண்டுகளாக சிறையைப் பற்றிய பயத்துடனேயே வாழ்ந்துவருகிறார்.
ஆனாலும் அவர் தொடர்ந்து படங்களை எடுத்தபடியேதான் இருக்கிறார். படப்பிடிப்புகளைத் தனக்குப் பாதுகாப்பளிக்கும் நாடுகளில் மட்டுமே வைத்துக்கொள்வார். இங்கிலாந்து சென்றாலும் அவர் கைது செய்யப்படுவார் என்பதால், “டெஸ்” படத்திற்காக ஒரு இங்கிலாந்து நகரத்தை அச்சு அசலாக பிரான்ஸில் உருவாக்கிப் படமெடுத்தார். அமெரிக்கப் பத்திரிகை ஒன்று மிக அவதூறாக ரோமன் பொலன்ஸ்கியைப் பற்றி எழுதியபோது, அவர் அதற்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பிரான்ஸில் இருந்தபடியே வீடியோ உரையாடல் மூலம் அவர் வழக்கில் பங்குபெற்று வெற்றியும் நஷ்டஈடும் பெற்றார். இங்கிலாந்து நீதித்துறை வரலாற்றில் முதல் வீடியோ சாட்சியம் அதுதான்.
32 ஆண்டுகளாக அமெரிக்காவால் அவர் தேடப்படுகிறார் என்றபோதிலும், அமெரிக்காவின் முன்னணி நடிகர்களும் தொழில் நுட்பக் கலைஞர்களும் தொடர்ந்து ரோமன் பொலன்ஸ்கியோடு இணைந்து பணியாற்றத்தான் செய்கிறார்கள். 2003ஆம் ஆண்டு “தி பியானிஸ்ட்” படத்துக்காக அவருக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டபோது, அதை அவர் சார்பாக நடிகர் “ஹாரிஸன் ஃபோர்ட்” பெற்றுக்கொண்டார். பின்பு அதை அவர் பிரான்சுக்கு எடுத்துச் சென்று ரோமனின் கைகளில் கொடுத்தார்.
.
ரோமன் பொலன்ஸ்கி பகிரங்கமாகவே தன் தவறை ஒத்துக்கொண்டுவிட்டார். குறிப்பிட்ட சம்பவத்த ன்று தான் போதை மருந்து உட்கொண்டிருந்ததால் சுயநினைவின்றி நடந்துகொண்டதாகவும், அதற்கா க வருந்துவதாகவும் அறிவித்தார். ‘அவர் இத்தனை ஆண்டுகள் அனுபவித்ததெலாம் போதும், அமெரி க்க  அரசு அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும், பத்திரிகையாளர்கள் விரோதப்போ க்கை நிறுத்த வேண்டும்’ என்று “வூடி ஆலன்” உட்பட பல அமெரிக்கப் பிரபலங்கள் குரல் கொடுத்துவருகிறார்கள். ரோமன் பொலன்ஸ்கி, 1989-யில் பிரஞ்சு நடிகையான “எம்மானுயேல் செய்ஞர்”-யை மணந்தார். இப்போது அவர்களுக்கு இரு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் அவர் 2009 செப்டம்பரில் ஸ்விட்ச ர்லா ந்தில் கைதுசெய்யப்பட்டார். அப்போது அவர் எடுத்துக்கொண்டிருந்த படமான “கோஸ்ட் ரைட்டர்” (Ghost Writer) அத்தோடு நின்றுபோகும் என்று எல்லாரும் நினைத்தார்கள். ஆனால் அவர் சிறையில் இருந்தபடியே அந்தத் திரைப்படத்தின் படத்தொகுப்பு வேலைகளைச் செய்தார். அவரது முழு கண்காணிப்போடு படம் இறுதி வடிவத்தை அடைந்தது. பின்பு அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார், ஆனாலும் ஸ்விஸ் அரசு அவரை வீட்டுக்காவலில் வைத்தது. மார்ச் 2010யில் “கோஸ்ட் ரைடர்” வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. முன்னாள் இங்கிலாந்து பிரதமர் “டோனி பிளேர்” நடவடிக்கையைக் கடுமையாக விமர்சிக்கும் அரசியல் படமது. அமெரிக்காவின் நட்பைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர்கள் எத்தகைய அநீதிக்கும் துணிகிறார்கள் என்று காட்டுகிறது படம்.
இந்நாள் வரை ஸ்விட்சர்லாந்தில் வீட்டுக்காவலில் இருக்கும் ரோமன் பொலான்ஸ்கி, விரைவிலேயே அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் செய்த பாவம் 32 வருடங்களாக அவரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அது அவரைத் தீண்டும் நேரம் நெருங்கிவிட்டது என்றே பொதுவாகக் கருதப்படுகிறது.