VENICE -FLOATING CITY IN SEA
வெனிஸ் ‘கடலில் மிதக்கும் நகரம்’
இத்தாலியிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
“அது கடலில் மிதக்கும் கம்பீரமான நகரம். அதன் அகன்ற தெருக்களிலும், குறுகலான தெருக்களிலும் வலம்வருகிற கடல் ஒருகணம் சீறியவாறு ஏறும், மறுகணம் சிணுங்கியவாறு இறங்கும். அதன் அரண்மனையின் பளிங்குக் கல்லில் கடற்பாசி அமர்ந்தபடி அடம்பிடிக்கும்.”—சாமுயல் ரோஜர்ஸ், ஆங்கில கவிஞர், 1822.
இங்கு விவரிக்கப்பட்டுள்ள அந்த “கம்பீரமான நகரம்” வெனிஸ் ஆகும். மிகப் பெரிய குடியரசு ஒன்றின் முன்னாள் தலைநகரான வெனிஸ், நில மற்றும் கடல் பேரரசை பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்நகரம் “கடலில்” எப்படிக் கட்டப்பட்டது, ஏன் கட்டப்பட்டது? இதன் கம்பீரம் எதன் மீது சார்ந்திருந்தது? இந்தப் பேரரசு எவ்வாறு முடிவுக்கு வந்தது? இதன் மகத்துவத்திற்கு அடையாளமான சின்னங்கள் ஏதாவது இன்றைக்கு மீந்திருக்கின்றனவா?
விரும்பப்படாத இடம்
ஏட்ரியாட்டிக் கடலின் வடமேற்கு முனையில் உள்ள கடற்கழியின் மத்தியில் அமைந்திருக்கும் வெனிஸ் நகரம் 118 தீவுகளால் ஆனது. அந்தக் கடலில் விழும் நதிகள் பேரளவான வண்டல் மண்ணை ஆழமற்ற கடலோரத்தில் படிய வைக்கின்றன. கடலேற்ற அலைகளும் நீரோட்டமும் தொடர்ச்சியான மணற்திட்டுகளை உருவாக்கியிருக்கின்றன; இவை கிட்டத்தட்ட 51 கிலோ மீட்டர் நீளத்திலும் 14 கிலோ மீட்டர் அகலத்திலும் உள்ள கடற்கழியைச் சூழ்ந்து அமைந்திருக்கின்றன. கடலுக்கு வழிவிடும் மூன்று குறுகிய திறப்புகள் ஒரு மீட்டர் உயர கடலேற்ற அலைகளுக்கும் கடல்சார்ந்த போக்குவரத்துக்கும் வழிசெய்கின்றன. “ஓயாத வர்த்தக போக்குவரத்திற்குப் பல நூற்றாண்டுகளாக இந்தக் கடற்கழியே கடைசி நிறுத்தமாக இருந்தது; அப்போக்குவரத்து ஏட்ரியாட்டிக் கடல் வரை சென்றது அல்லது மத்திய மற்றும் வட ஐரோப்பாவில் இருந்து ஆறுகள் வழியாகவோ வணிகக்கூட்டத்தாரின் பாதைகள் வழியாகவோ வந்தது” என ஒரு கட்டுரை சொல்கிறது.
பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் ஏழாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்நகரம் பிறந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள். அந்தச் சமயத்தில் வடக்கிலிருந்து வந்த நாகரிகமற்ற முரட்டுத்தனமான போராளிகள் முக்கிய நிலப்பரப்பில் இருந்த சமுதாயத்தை எரித்துப் போட்டு கொள்ளையடித்தார்கள். இந்தக் கொள்ளையர்கள் வருவதை அறிந்த அநேகர், எளிதில் சென்றடைய முடியாத, ஆனால் பாதுகாப்பான இந்தக் கடற்கழித் தீவுகளில் தஞ்சமடைந்தார்கள்.
வெனிஸ் நகரத்தார் ஆரம்பத்தில், கம்புகளைச் சேற்றில் ஊன்றி அஸ்திவாரம் போட்டு, மெல்லிய கிளைகளாலோ கோரையாலோ வேய்ந்து கட்டடங்களைக் கட்டினார்கள். பிற்பாடு, ஆயிரக்கணக்கான மரக்கட்டைகளால் அஸ்திவாரம் போட்டு அதன் மேல் கற்களை வைத்துக் கட்டினார்கள். இதற்கிடையில், பிற்பாடு நகரத்தின் மையமாக ஆன ரியால்டோ என்ற கடற்கழி தீவுகள் அடிக்கடி தண்ணீரால் நிரம்பின; இதனால், பேரளவான குடியிருப்பாளர்களுக்கு இடமளிக்கத் தேவையான ஸ்திரமும் இடமும் இல்லாமல் போயின. ஆகவே நிலத்தைச் சீர்படுத்தும் பண்டைய முறைகளைப் பயன்படுத்தி நீரை வெளியேற்றவும் இத்தீவுகளை விரிவாக்கவும் வேண்டியிருந்தது. குடியிருப்பாளர்கள் படகுகளைச் செலுத்த வசதியாக வாய்க்கால்களை வெட்டி, சிறந்த முறையில் கட்டடங்களைக் கட்டுவதற்காக இத்தீவுகளை வலுப்படுத்தினார்கள். கால்வாய்களே தெருக்களாயின; அவற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலங்கள் ஒரு தீவிலிருந்து மற்றொன்றுக்குச் செல்ல பாதசாரிகளுக்கு உதவின.
ஒரு குடியரசின் பிறப்பும் எழுச்சியும்
மேற்கில் ரோம சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்த பிறகு, இந்தக் கடற்கழித் தீவுகள் தற்போது இஸ்தான்புல் என்றழைக்கப்படும் கான்ஸ்டான்டினோபிலை தலைநகராகக் கொண்ட பைஸான்டைன் பேரரசின் கீழ் வந்தன. என்றபோதிலும், இந்தக் கடற்கழி சமூகத்தினர் கலகம் செய்து சுதந்திரத்திற்காகப் போராடினர். இதன் விளைவாக, பிராங்கியருக்கும் பைசாண்டியருக்கும் மத்தியில் வெனிஸ் சிக்கிக்கொண்டது; அதாவது “ஒரு சீமானின் ஆட்சிக்குட்பட்ட சிறிய சுதந்திர பிராந்தியமான அது, இரண்டு பேரரசுகளின் மத்தியில் வழக்கத்திற்கு மாறான நிலைக்கு” தள்ளப்பட்டதாக விவரிக்கப்படுகிறது. இந்தத் தனிச்சிறப்பான நிலைமை ஒரு பெரிய “வணிக போக்குவரத்து மார்க்கமாக” இந்நகரம் செழிக்க வழி செய்தது.
அதற்குப் பின் வந்த நூற்றாண்டுகளில், தன்னிடமுள்ள ராணுவ பலத்தைப் பயன்படுத்தி மத்தியதரைக் கடலை ஒட்டியிருந்த சாரஸனியர்கள், நார்மனியர்கள், பைஸாண்டியர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்தது. 1204-ல் நான்காம் சிலுவைப் போரை ஆதாயப்படுத்தி, முக்கிய எதிரியான கான்ஸ்டான்டிநோபிலை அழித்துப்போட்ட பிறகு வெனிஸ் மிக வல்லமையான சக்தியாக ஆனது. கருங்கடல், ஈஜியன் கடல் ஆகியவற்றின் கரையோரத்திலும், கிரீஸ், கான்ஸ்டான்டிநோபில், சிரியா, பாலஸ்தீனா, சைப்ரஸ், கிரீட் ஆகிய இடங்களிலும் வெனிஸ் அநேக வியாபார ஸ்தலங்களை அமைத்திருந்தது. இப்போது அது பைஸாண்டிய பேரரசின் வீழ்ச்சியைச் சாதகமாகப் பயன்படுத்தி, அந்த இடங்களில் ஏராளமானவற்றைத் தன் ஆட்சிக்குட்பட்ட குடியேற்றங்களாக மாற்றியது.
“மத்தியதரைக் கடல் மகாராணி”
12-ம் நூற்றாண்டிலேயே, வெனிஸின் பிரம்மாண்ட கப்பல்கூடங்கள் போர்க்கப்பல்கள் ஒவ்வொன்றையும் சில மணி நேரத்திற்குள் முழுமையாக உற்பத்தி செய்யும் திறனுடையதாக இருந்தன. உள்ளூர் தொழிற்சாலைகள் கண்ணாடி மற்றும் ஆடம்பர துணிவகைகளான லேஸ், பட்டுத்துணி (brocade), பளபளப்பான துணிவகை (damask), வெல்வெட் ஆகியவற்றை உற்பத்தி செய்தன. வெனிஸைச் சேர்ந்த உள்நாட்டு வணிகர்களும் வெளிநாட்டு வணிகர்களும் மேற்கிலிருந்து ஆயுதங்கள், குதிரைகள், அம்பர், ரோமங்கள், மரக்கட்டை, கம்பளி, தேன், மெழுகு ஆகியவற்றையும் அடிமைகளையும் கொண்டுவந்தனர். மறுபட்சத்தில், மத்தியதரைக் கடலின் கிழக்கிலுள்ள இஸ்லாமிய பிரதேசங்களிலிருந்து தங்கம், வெள்ளி, பட்டு, வாசனைப் பொருட்கள், பருத்தி, சாயம், தந்தம், வாசனை திரவியங்கள் போன்ற அநேக பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. நகர அதிகாரிகள் அதன் சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட அல்லது அங்கிருந்து அனுப்பப்பட்ட எல்லா பொருட்களுக்கும் வரிகள் வசூலிக்கப்படுமாறு பார்த்துக்கொண்டனர்.
பலாடியோ, டிஷன், டின்டாரெட்டோ போன்ற பிரபல கட்டடக்கலை நிபுணர்களாலும் ஓவியர்களாலும் அலங்கரிக்கப்பட்ட வெனிஸ் நகரம், லா ஸேரேநிசீமா, அதாவது “மிக அமைதியானது” அல்லது “அழகானது” என்பதாக விவரிக்கப்படுகிறது. “நாகரிக உலகின் மிகவும் செல்வச் செழிப்பான வியாபார மையமாக கொடிகட்டிப் பறந்த” இந்த நகரம் “மத்தியதரைக் கடல் மகாராணி” என்று அழைக்கப்படுவது மிகப் பொருத்தமானதே. பல நூற்றாண்டுகளுக்கு அது அவ்வாறே இருந்தது. ஆனால் 16-ம் நூற்றாண்டில் முக்கிய வியாபார தடம் அட்லாண்டிக்கிற்கும் மேற்கே அமெரிக்க கண்டங்களுக்கும் மாற ஆரம்பித்தபோது அதன் ஆதிக்கம் மங்க ஆரம்பித்தது.
மத்தியதரைக் கடல் பகுதி முழுவதுமாகச் சிதறியிருந்த வெனிஸ் குடியேற்றங்கள் அருகருகே அமையவில்லை; ஒரே அரசாங்கத்தின் கீழ் ஒன்றுபடவில்லை; ஒன்றாகச் சேர்ந்து ஒத்துழைக்கவுமில்லை. இதனால் குடியேற்றங்களை இழக்க வேண்டிய கட்டாயம் வெனிஸுக்கு ஏற்பட்டது. அருகிலிருந்த அரசுகள் வெனிஸின் பிராந்தியங்களை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்ற ஆரம்பித்தன. கடைசியில், நெப்போலியன் இந்தக் கடற்கழி நகரத்தை 1797-ல் கைப்பற்றி ஆஸ்திரியாவின் ஆளுகைக்கு உட்படுத்தினார். 1866-ல் வெனிஸ் நகரம் இத்தாலி நாட்டின் பாகமானது.
கனவு நகரம்
வெனிஸுக்கு விஜயம் செய்யும் அநேகருக்கு இரண்டு, மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்றது போல் இருக்கும். இந்நகரத்தின் சூழல் தனித்தன்மையுடையதாக இருக்கிறது.
அமைதியே அங்கு காணப்படுகிற ஒரு முக்கிய அம்சம். பாதசாரிகளுக்கான குறுகிய நடைபாதை பெரும்பாலும் கால்வாய்களிலுள்ள போக்குவரத்திலிருந்து பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது; ஆனால் கால்வாயை ஒட்டியுள்ள பாதைகளும், கால்வாயுக்குக் குறுக்கே செல்லும் வளைந்த கற்பாலங்களின் பாதைகளும் இதற்கு விதிவிலக்கு. படகுகளே இந்தத் ‘தண்ணீர்த் தெருக்களில்’ செல்ல முடிகிற ஒரே மோட்டார் வாகனங்கள். வெனிஸ் நகரம் கண்கவர் காட்சிகள் நிறைந்ததாக இருக்கிறது. தேவாலயத்தோடு கூடிய புனித மார்க் சதுக்கம், மணிக் கூண்டு, பச்சைக் கடற்கழியில் சூரிய ஒளிக்கதிர்கள் பிரகாசிக்கிற பிரம்மாண்ட கடற்பகுதி ஆகியவை ஓவியர்களின் மனதைத் தூண்டுகின்றன.
முக்கிய சதுக்கத்தில் எப்போதும் பிஸியாக காணப்படும் கஃபேக்கள் சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர்வாசிகளையும் ஒருசேர சுண்டி இழுக்கின்றன. சிறிய ஆர்கெஸ்ட்ராக்கள் இசைக்கும் பாரம்பரிய இன்னிசையைக் கேட்டுக்கொண்டே நீங்கள் ஒரு பானத்தையோ அல்லது ஜெலாட்டோ ஐஸ்கிரீமையோ ருசிக்கலாம். அங்கு உட்கார்ந்து, வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டும், சுற்றியுள்ள பிரமாதமான கட்டடக் கலையை ரசித்துக் கொண்டும், இதுவரை எந்தக் காரையும் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டும் இருக்கையில், ஏதோ பல காலம் பின்னோக்கிச் சென்றுவிட்டதைப் போன்றே நீங்கள் உணருவீர்கள்.
கலைப் பொக்கிஷங்களைத் தேடுவோரை இந்நகரம் சுண்டி இழுக்கிறது. இங்குள்ள எண்ணற்ற அரண்மனைகள், அருங்காட்சியகங்கள், தேவாலயங்கள் போன்றவற்றில் பல பிரபல ஓவியர்களின் ஓவியங்கள் குடி கொண்டிருப்பது தெரியவரும். ஆனால் பார்வையாளர்கள் சிலர், குறுகலான பாதைகளில் ‘ஹாயாக’ நடந்துசென்று, தங்களைச் சுற்றியுள்ள வித்தியாசமான காட்சிகளைப் பார்ப்பதிலேயே திருப்தியடைந்து விடுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கென்றே எண்ணிறந்த கடைகள் உள்ளன; கடற்கழித் தீவான பூரானோவின் லேஸ் மற்றும் எம்பிராய்டரி வேலைகள், முரானோவின் கிரிஸ்டல் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் ஆகியவை அங்கு விற்கப்படுகின்றன; இவற்றிற்காக இந்நகரம் புகழ்பெற்று விளங்குகிறது. வாப்பரிட்டோ, அதாவது மோட்டார் படகுகளில் கொஞ்ச நேரம் சவாரி செய்து இத்தீவுகளுக்குச் செல்லலாம், அங்கே இந்தப் பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் கண்கூடாகக் காணலாம். இப்படகுகளில் சிறிது நேரம் சவாரி செய்வதே ஓர் அலாதியான அனுபவம்தான்.
கூரிய முகடுள்ள வளைவுகளோடு கூடிய பிரம்மாண்டமான அரண்மனைகள், கடந்த காலத்து கிழக்கத்திய செல்வாக்கைப் பறைசாற்றுகின்றன. இந்நகரத்தின் முக்கிய போக்குவரத்துப் பாதையான கிராண்ட் கேனாலின் மீதுள்ள புகழ்பெற்ற ரியால்டோ பாலத்தையும், அதன் கீழே அமைதியாக நீந்திச் செல்லும் பளபளப்பான கருப்புப் காண்டோலா படகுகளையும் நின்று வேடிக்கை பார்க்க அநேகர் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர்.
தப்பிப்பிழைக்க இன்னும் போராட்டம்
“அழகான குடியரசு” வீழ்ந்து இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர், வெனிஸ் இன்னமும் தப்பிப்பிழைக்க போராடிக் கொண்டிருக்கிறது; ஆனால் வித்தியாசமான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. சரித்திரப் புகழ்மிக்க இந்த மையப் பகுதியில், 1951-ல் இதன் ஜனத்தொகை 1,75,000; 2003-ல் 64,000 ஆகக் குறைந்தது. இதற்குக் காரணம் சொத்துக்களின் விலையேற்றம், வேலையின்மை, சொற்ப நவீன வசதிகள் ஆகியவையே. அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இந்நகரம் புதுப்பிக்கப்பட வேண்டுமா வேண்டாமா, எப்படி அதைச் செய்வது போன்ற சிக்கலான சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
இங்குள்ள பொருளாதார நிலைமை சரிசெய்யப்படும் என்ற நம்பிக்கையில் 1920-களில் புதிய தொழிற்சாலைப் பகுதியொன்று முக்கிய நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டது. எண்ணெய்க் கப்பல்கள், சுத்திகரிப்பு மையங்களைச் சென்றெட்ட உதவியாக இந்தக் கடற்கழியின் குறுக்கே ஆழமான கால்வாய் ஒன்று வெட்டப்பட்டது. தொழிற்சாலைப் பகுதி வேலைவாய்ப்புகளை அளித்தது. இருந்தாலும், தூய்மைக்கேட்டுக்கும், ஆக்வா ஆல்டா (உயரளவு தண்ணீர்) என்ற அழிவுண்டாக்குகிற கடலலை ஏற்றங்களுக்கும் காரணமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கடலலை ஏற்றங்கள் அடிக்கடி இந்நகரின் வரலாற்று மையத்தை வெள்ளக் காடாக்குகின்றன.
இக்கடற்கழியின் சுற்றுச்சூழலும், அதன் தண்ணீரின் போக்கும் இயல்பாகவே வெகு நுட்பமாக செயல்பட்டு வந்ததும் இந்நகரம் தொடர்ந்திருப்பதற்கு முக்கிய காரணிகள் என்பது முன்பே அறிந்த விஷயம்தான். 1324-லேயே, இக்கடற்கழியை சேற்றுப்படிவுகளால் நிரப்பும் ஆறுகளைத் திசை திருப்பும் பிரம்மாண்ட வேலைகளை வெனிஸ் நகரத்தார் மேற்கொண்டனர். 18-ம் நூற்றாண்டில், ஏட்ரியாட்டிக் கடல் இக்கடற்கழியை அழிக்காதபடிக்கு அக்கடலில் தடுப்புச் சுவர்களை அவர்கள் எழுப்பினர்.
நிலைமை முன்பைவிட அதிக அபாயகரமாக இருப்பதாகத் தோன்றுகிறது. தொழிற்சாலைகள் நிலத்தடி நீர்த்தேக்கங்களை காலியாக்கி வருவதன் காரணமாக நிலம் அமிழ்ந்துவிடும் அபாயம் நிறுத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் உலகெங்கும் கடல்மட்டம் உயர்ந்து கொண்டே போகிறது. அதுமட்டுமின்றி, கடற்கழிப் பகுதியும் நிலச்சீர்ப்படுத்துதல் காரணமாக குறைந்து வருகிறது. இவ்வாறாக நிலம் மற்றும் நீரின் இடையே உள்ள சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் ஏற்றம் முன்னொருபோதும் இந்தளவு அச்சுறுத்தலாக இருந்ததில்லை. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புனித மார்க் சதுக்கம் வருடத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து முதல் ஏழு தடவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு வருடத்தில் மட்டுமே அது 80 முறை அவ்வாறு பாதிக்கப்பட்டது.
வெனிஸின் தனிச்சிறப்பான வரலாற்று மற்றும் கலைநயமிக்க பாரம்பரிய ஆஸ்தியும், அது எதிர்ப்பட்டு வருகிற பிரச்சினைகளும் சர்வதேச அக்கறையைத் தூண்டியுள்ளன. அதன் துறைமுகத்தின் செயல்பாடுகளையோ மக்களின் தினசரி வாழ்க்கையையோ எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கவும், சுற்றுச்சூழலுக்கு கவனம் செலுத்தவும் ஒரு விசேஷ சட்டம் அமலாக்கப்பட்டிருக்கிறது. சிறந்த முறையில் அதை எப்படிச் செயற்படுத்தலாம் என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
கால்வாய்க் கரைகளை உயர்த்தவும், ஆக்வா ஆல்டா ஏற்படும் சமயத்தில் அடிமண்ணிலிருந்து தண்ணீர் மேலே வராதவாறு தளங்களை அமைக்கவும், நகரக் கழிவுநீர்க் குழாயிலிருந்து கழிவுநீர் திரும்பி வருவதைத் தடுக்கவும் வேலை நடைபெற்று வருகிறது. நீர்மட்டம் அச்சுறுத்துகையில் கடற்கழியின் வாயில்களில் தடுப்புகளை எழுப்புவதற்காக, நகர்த்தும் வசதியுள்ள தடுப்புச்சுவர்களை அமைக்கும் நடவடிக்கையே மிக அதிக சர்ச்சைக்குரியதாய் இருக்கிறது.
இந்த லட்சியத்தைச் சாதிப்பதற்கு ரொம்பவே பாடுபட வேண்டியுள்ளது. “கடலில் மிதக்கும் கம்பீரமான நகரம்” ஆர்வத்தைத் தூண்டுகிற கடந்த காலத்துக்குச் சாட்சி பகர்கிறது. ஆனால் வித்தியாசமான எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளபடி, “வெளியாட்கள் இந்நகர மக்களின் தேவைகளை உதாசீனப்படுத்தி, இங்கிருந்து துரத்திவிட்டுக்கூட இந்நகரை ஓர் அருங்காட்சியகமாக” மாற்றும் ஆபத்திருக்கிறது. பல காலமாக வெனிஸ் மோசமான இயற்கைச் சூழலோடு போராட வேண்டியிருந்தது. இந்நகரை “சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் புதுப்பித்து, குடியேற்றி, உயிரூட்டினால் தவிர மற்றபடி வெறும் தண்ணீரிலிருந்து இதைப் பாதுகாப்பது வீணான ஒன்றாகவே இருக்கும்
No comments:
Post a Comment