THUMBS UP
தம்ஸ் அப்
''ச்சே... இதென்ன பள்ளிக்கூடமா... சந்தைக் கடையா... இல்லே, கட்சி, 'மீட்டிங்' நடக்கற மைதானமா... முதலில், மாணவர்களை அதட்டி, வகுப்பறைக்கு போக சொல்லுங்க... அப்புறம் அந்த கூட்டத்தை அனுப்பி வைக்கிற வழியை பாருங்க,'' டீச்சர் தயாமலரிடம், எரிந்து விழுந்தார், தலைமையாசிரியர்.
பள்ளி மைதானம் முழுக்க ஒரே கூட்டம். மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோரும் கூடியிருந்தனர். கோபம், ஏமாற்றம், ஆதங்கம், பரிதவிப்பு, ஆவல்... இப்படி, பல உணர்வுகள் பூசியிருந்தன, அவர்களின் முகங்களில்.
'போராடுவோம்... போராடுவோம்...'
'தயா டீச்சரை அனுப்பாதே...'
'தயா டீச்சர் சேவை, எங்களுக்கு தேவை...'
'மாட்டோம், போக விடமாட்டோம்... தயா டீச்சரை போக விடமாட்டோம்...'
இதுவரை இந்த பள்ளிக்கு எத்தனையோ பேர் மாற்றலாகி வந்தும், போயும் உள்ளனர். ஆனால், 'தயா டீச்சருக்கு, மாற்றல் உத்தரவு வந்துள்ளது...' என்ற விஷயம் கசிந்ததுமே... கூட ஆரம்பித்தது கூட்டம். பெற்றோரும் கூடுவர் என்பது, பள்ளி வரலாற்றிலேயே, புது அத்தியாயம்!
நகரமுமில்லாத, கிராமமும் இல்லாத, ரெண்டுங்கெட்டான் ஊர் அது. இங்கே, பிளஸ் 2 வரை, அரசு பள்ளி இருந்தும், பிள்ளைகள் சேர்க்கை குறைவு... பெற்றோருக்கும், பிள்ளைகளை, பள்ளிக்கு அனுப்புவதை விட, ஒரு நாள் கூலி முக்கியமாக பட்டது.
அக்கறையும், கவனிப்பும் காட்டாத பள்ளி வகுப்பறையும் ஜெயிலாக தோன்றியது, பிள்ளைகளுக்கு. 'படித்தால் படி, இல்லையெனில் தொலை...' என்ற விட்டேற்றியான மனநிலையில், ஆசிரியர்கள்...
இந்நிலையில் தான், அங்கு பணியாற்ற வந்தாள், தயாமலர் டீச்சர். கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி, பள்ளி நேரம் போக, பெற்றோரை சந்தித்தாள். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாள்.
அந்த ஊரிலேயே வீடு எடுத்து தங்கினாள், தயாமலர். குழந்தைகளுக்கு, இலவச, 'டியூஷன்' எடுத்தாள். ஏழை குழந்தைகளுக்கு, உணவிலிருந்து, புத்தக வினியோகம் வரை, பார்த்து பார்த்து செய்தாள்.
மெல்ல மெல்ல மாற்றம் வர ஆரம்பித்தது. பள்ளி வளாகத்திலும், வெற்றாய் கிடந்த இடங்களில் தோட்டம் போட வைத்தாள். குழந்தைகளின் பிறந்தநாளுக்கு, மரக் கன்றுகளை பரிசாக தந்து, வளர்க்க செய்தாள். ஒவ்வொரு கன்னும், அவரவர் பெயரை தாங்கியபடி வளர்ந்தது.
குழந்தைகளுக்கு அகச் சுத்தம் மற்றும் புறச் சுத்தம் பற்றி போதித்தாள். இருள் அகன்று, துடைத்து விடப்பட்ட மனசில் ஈரம் படர, கல்வி விதை, வேரை ஆழப் பாய்ச்சியது. முதன் முறையாக, இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், 100 சதவீதம் தேர்வாகினர்...
பள்ளியின் பெயரை விட, 'தயா டீச்சர்' பெயர், அதிகம் உச்சரிக்கப்பட... விஷமிகளுக்கு எரிச்சல்; அதன் விளைவு... மாற்றல் உத்தரவு!
கைகளை கூப்பியபடியே, மைதானத்திலிருந்த உயரமான மேடையில் ஏறினாள், தயாமலர் டீச்சர்.
அவளை கண்டதுமே, கூட்டம் சற்றே அமைதி காத்தது.
முன் வரிசையில் நின்றிருந்த பொம்மி என்ன நினைத்தாளோ, சட்டென்று மேடையேறி, டீச்சரின் முழங்காலை பற்றி, மண்டியிட்டு அழுதாள். 'நீங்க போகக் கூடாது டீச்சர்... நீங்க இல்லைன்னா, நான் பள்ளிக்கூடமே வந்திருக்க முடியாது...' என்றதும், கூட்டமே ஸ்தம்பித்தது.
இதோ, மாணவர் தலைவனாக நின்று, முறைத்துக் கொண்டிருக்கிற வெங்கிடபதி கூட, ஒரு காலத்தில், இந்த பள்ளிக்கே சிம்ம சொப்பனமாக இருந்தவன். ஏழாம் வகுப்பிலேயே ஆசிரியர்களுக்கே சவால் விடுபவனாக... ஏன், சமயத்தில் ஆசிரியர் தலையையே குறி வைப்பவனாக இருந்தவன் தான். அப்படிப்பட்டவனை வழிக்கு கொண்டு வர, இவளும் ரத்தம் சிந்த வேண்டியிருந்தது.
வீட்டு வாசலில் முறுக்கியபடி நின்றவனை, மெதுவாக அழைத்து பேசினாள். அவன் முரடனில்லை, அன்புக்கு ஏங்குகிற குழந்தை என்பதை புரிந்து கொண்டதுமே, வேலை சுலபமாகி விட்டது... அன்பு கிடைக்காத வீடு, அவனை சுலபமாக முரடனாக்கி விட்டிருந்தது... அந்த முகமூடியை கழற்றி துார விட்டெறிய வைக்க, அவளுக்கு பல மாதங்கள் பிடித்தது...
தொண்டையை செருமிக் கொண்டாள், தயா டீச்சர். நெஞ்சு விம்மியது. அவளும் சாதாரண மனுஷி தான் என்பதை நினைவூட்டியது, அந்த செருமல்.
குழந்தைகள் அனைவரின் மீதும், அவள் பார்வை வருடிச் சென்றது... அழுகையில் அதுங்கும் பிஞ்சு முகங்கள்... அன்பை தேக்கி வைத்த முகங்கள்... ஏமாற்றமடைந்த முகங்கள்... மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள், தயா டீச்சர்.
பொம்மியை துாக்கி, தன்னோடு அணைத்துக் கொண்டவள், ''எல்லாரும் கண்ணை துடைச்சுக்கோங்க... நான் சொல்வதை கேட்பீர்கள் தானே... சொல்லுங்க,'' என்றாள்.
ஆனால், அழுகையும், விம்மலும் அதிகமாகியது.
''ஷ்... இப்போ எல்லாரும் வகுப்புக்கு போகணும்... சாயந்தரமா வீட்டுக்கு வாங்க... இன்னிக்கு பவுர்ணமி... ஞாபகம் இருக்கு தானே... இங்கே பாருங்க, யாரும் அழக்கூடாது... என் பிள்ளைகள் அழுமூஞ்சிகளா இருக்கக் கூடாது... வீரர்களா இருக்கணும்... புரிஞ்சுதா?''
மாணவர்கள், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
ஒவ்வொரு பவுர்ணமியும், கூட்டாஞ்சோறு ஆக்கி, குழந்தையோடு குழந்தையாக மாறி, கையில் கவளம் உருட்டிப் போட்டு விளையாடும் டீச்சரை, எல்லாருக்கும் பிடிக்க தான் செய்யும்.
''டீச்சரம்மா... நீங்க ஊரை விட்டு போகக் கூடாது,'' என்றது, ஒரு குரல்.
''ஒரு டீச்சரம்மா, ஒழுங்கா வேலை செய்துடக் கூடாதே,'' என்று, இன்னொரு குரல்.
'தயாமலர் டீச்சரை போக விடக்கூடாது. வாங்க, வண்டி கட்டிகிட்டு, 'டவுனு'க்கு போயி, கலெக்டர் ஆபீஸ் முன், தர்ணா பண்ணலாம்...' என்று, யாரோ கொளுத்திப் போட... கூட்டம் ஆக்ரோஷமாய் ஆரவாரித்தது.
குன்றிப் போனாள், தயாமலர். சங்கடம் நிறைந்த முகத்துடன், கைகளை தலைக்கு மேலே துாக்கி கும்பிட்டாள்.
''இங்கே பாருங்க... உங்க அன்புக்கு நன்றி! இந்த பள்ளியை, குழந்தைகளை நான் ரொம்பவே நேசிக்கிறேன்... ஏன் தெரியுமா... உங்களுக்காக... வேறெந்த எதிர்பார்ப்பும் இல்லை என்னிடம்.''
சின்ன இடைவெளி விட்டு, ''இங்கே படிக்கிற குழந்தைகளுக்கு, யார் யார் மீதோ கோபம்... யார் யார் மீதோ எரிச்சல்... உங்களுக்கோ, வாழ்க்கையின் மீது கோபம்... பணமில்லாத எரிச்சல்... நீங்க, கள்ளுக் கடையில் நிம்மதியை தேட, வீட்டு பெண்களுக்கு, உங்க மேல எரிச்சல்...
''தேவைகளின் நெருக்கடியால், குழந்தைகள் மீது கோபத்தை காட்ட, ஒருவித அக்கறையில்லாத தன்மை எல்லாவற்றின் மேலும்... இதோ, இந்த குழந்தைகள் எல்லாம், ஏதோ அக்கறையே காட்டாத ஜெயிலில் தங்களை தள்ளி விட்டதாக நினைச்சாங்க...
''இதுல பாதி குழந்தைகள், இதை பெரிய விடுதலையா நினைச்சாங்க... ஆக, இவங்க எல்லாருக்கும் ஒரே பெரும் நோக்கமாயிருந்தது; தேவையாயிருந்தது, கொஞ்சம் அன்பும், அக்கறையும் தான். உண்மையான அன்புக்கு ஏங்குகிற ஏக்கத்தை உணர முடிஞ்சது...
''அதனால், பாசத்துடன் கொஞ்சம் அன்பையும் ஊட்டி வளர்த்தேன். நீங்களும் என்னுடன் அன்புடன் பழகினீர்கள்... ஆனா, இந்த பரிசுத்தமான அன்பை, எனக்காக பயன்படுத்திக்கிட்டா, நான் ரொம்பவும் கேவலமானவளா ஆகிடுவேன்... உங்க அன்புக்குரிய நான், கேவலப்படுவதை நீங்க விரும்புவீங்களா?'' எனக் கேட்டாள்.
'இல்லை... இல்லை!' என்ற குரல்கள், அலை அலையாக வந்தன.
''இந்த மாற்றல் உத்தரவு, எனக்கும் கஷ்டம் தான்... ஆனால், ஒவ்வொரு ஆரம்பத்துக்கும் ஒரு முடிவு இருக்கும் தானே... அது தான் இது. இதை எதிர்த்து, நீங்க, போராட்டம், அது இதுன்றது நல்லா இல்லை,'' என்றாள், தயாமலர்.
''கடைசியா ஒரு வார்த்தை சொல்லணும் உங்களுக்கு... நீங்கள்லாம் நல்லா படிச்சு, 'டாக்டர், கலெக்டர், இன்ஜினியர்' ஆகறது சந்தோஷம் தான். ஆனா, அதையும் விட, மேன்மையான நல்ல மனிதர்களா வாழணும்... இது தான், எனக்கு நீங்க தர்ற உண்மையான மரியாதை; அன்பு. அப்படி வாழ, நானும் ஒரு துாண்டுகோலா இருந்திருக்கிறேன்னா... அது தான், என் முழுமையான சந்தோஷம்,'' என, முடித்தாள் தயாமலர்.
கை தட்டினாள், பொம்மி. கைகூப்பி கண்ணீர் விட்டான், வெங்கிடபதி. தலைக்கு மேலே இரு விரல்களால், 'தம்ஸ் அப்' காட்டினான், காதர்.
ஜே.செல்லம் ஜெரினா
No comments:
Post a Comment