Monday 15 February 2021

KOTHAMANGALAM SUBBU ,WRITER BORN 1910 NOVEMBER 10 - 1974 FEBRUARY 15

 


KOTHAMANGALAM SUBBU ,WRITER BORN 

1910 NOVEMBER 10 - 1974 FEBRUARY 15



பிரபல   இயக்குனர் ,கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு 1974  பெப்ரவரி 15 இல் இறந்தார்   

கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam Subbu, 10 நவம்பர் 1910 - 15 பெப்ரவரி 1974) என்பவர் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குநர், கதை வசனகர்த்தா, வில்லுப்பாட்டிசைக் கலைஞர் என்று மட்டுமல்லாது பத்திரிக்கையாளர், துணைஆசிரியர், நாடகநடிகர் என்று பன்முகங்கள் கொண்ட அறிஞராக அறியப்பட்டார். மிகப் பிரபலமான தில்லானா மோகனாம்பாள் தொடர்கதையை ஆனந்த விகடனில் கலைமணி என்ற புனைபெயரில் எழுதியவர். பத்மசிறீ விருது பெற்றவர்.

ஆரம்ப காலம்[தொகு]

கொத்தமங்கலம் சுப்புவின் இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் தமிழ்நாடு, காரைக்குடிக்கு அருகில் கன்னாரியேந்தல் என்ற ஊரில் மகாலிங்கம் ஐயருக்கும், கனகம்மாளுக்கும் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்த சுப்பு, சிற்றன்னையின் பராமரிப்பில் வளர்ந்தார். 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். சொந்தத்திலேயே பிற்காலத்தில் பிரபலமான நடிகை சுந்தரிபாயைத் திருமணம் செய்துகொண்ட சுப்பு கொத்தமங்கலம் என்ற ஊருக்குக் குடிபெயர்ந்து, அங்கே வணிக நிறுவனம் ஒன்றில் எழுத்தராகப் பணியாற்றினார். ஆனாலும், அவரது ஆர்வம் நாடகங்களிலும், நடிப்பிலும், பாடல்களிலும் இருந்தது. கவிதைகள் இயற்ற ஆரம்பித்தார். 3,500 பாடல்களில் காந்திமகான் கதையை எழுதினார்.[1] பல நாட்டுப் பாடல்களை இயற்றியிருக்கிறார். 1930களின் இறுதியில் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இயக்குனர் கே. சுப்பிரமணியம் மூலம் கிட்டியது.

திரையுலகப் பணி[தொகு]

கொத்தமங்கலம் சுப்பு முதன் முதலில் 1935 ஆம் ஆண்டில் கே. சுப்பிரமணியம் இயக்கிய பட்டினத்தார் திரைப்படத்தில் நடித்தார். 1936 இல் சந்திரமோகனா என்ற திரைப்படத்தில் நடிகர் எம். கே. ராதாவின் நண்பனாக நடித்தார்.[2] அதன் பின்னர் 1937 இல் மைனர் ராஜாமணி, தொடர்ந்து அனாதைப் பெண், அதிர்ஷ்டம், திருநீலகண்டர், சாந்த சக்குபாய், அடங்காப்பிடாரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.[2]


1944 ஆம் ஆண்டில் வெளிவந்த ஜெமினியின் தாசி அபரஞ்சி இவர் நடித்த ஒரு வெற்றிப் படம் ஆகும். 1945 ஆம் ஆண்டில் கண்ணம்மா என் காதலி படத்தை இயக்கினார். இதன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் சுப்புவே எழுதியிருந்தார்.[2] இப்படத்தில் மனைவி சுந்தரிபாய் கதாநாயகியாக நடித்திருந்தார். 1947 இல் மிஸ் மாலினி திரைப்படத்தை இயக்கி, அதில் தானே கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படம் பின்னர் மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் இந்தியில் வெளிவந்தது. 1953 ஆம் ஆண்டில் அவ்வையார் என்ற பிரபலமான திரைப்படத்தை இயக்கினார். கே. பி. சுந்தராம்பாள் போன்ற அன்றைய பிரபலமான நடிகர்கள் இதில் நடித்தனர். இத்திரைப்படத்தில் மனைவி சுந்தரிபாயுடன் சிறு வேடம் ஒன்றில் சுப்பு நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

பட்டினத்தார் (1935)

நவீன சாரங்கதாரா (1935)

சந்திரமோகனா (1936)

மைனர் ராஜாமணி (1937)

அனாதைப் பெண் (1938)

அதிர்ஷ்டம் (1939)

திருநீலகண்டர் (1939)

சாந்த சக்குபாய் (1939)

பக்த சேதா (1940)

சூர்யபுத்திரி (1941)

அடங்காப்பிடாரி (1939)

கச்ச தேவயானி (1941)

மதனகாமராஜன் (1941)

தாசி அபரஞ்சி (1944)

மிஸ் மாலினி (1947)

அடங்காபிடாரி

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

கண்ணம்மா என் காதலி (1945)

மிஸ் மாலினி (1947)

அவ்வையார் (1953)

படைப்புகள்[தொகு]

தில்லானா மோகனாம்பாள் (புதினம்)

பந்தநல்லூர் பாமா (புதினம்)

பொன்னி வனத்துப் பூங்குயில் (வரலாற்றுப் புதினம்)

ராவ் பஹதூர் சிங்காரம் (புதினம்)

மஞ்சுவிரட்டு (கவிதைத் தொகுப்பு)

150 சிறுகதைகள், 100க்கு மேற்பட்ட நாடகங்கள் எழுதியுள்ளார்.

விருதுகள்[தொகு]

பத்மஸ்ரீ விருது (1971)

கலாசிகாமணி (1967)[3]

தில்லானா மோகனாம்பாளை திரைக்குத் தந்த கொத்தமங்கலம் சுப்பு!  சிறப்புப் பகிர்வு

கவிஞர், சிறந்த எழுத்தாளர், சினிமா கதை வசனகர்த்தா, இயக்குநர் கொத்தமங்கலம் சுப்புவின் பிறந்தநாள் இன்று. இலக்கியவாதிகள் பொதுவாக சினிமாவில் சோபிப்பதில்லை என்ற அரதப்பழசான குற்றச்சாட்டு இன்றளவும் திரையுலகில் உண்டு. அதைத் தகர்த்த முன்னோடிகளில் ஒருவர் கொத்தமங்கலம் சுப்பு. தமிழ்த்திரையுலகின் தவிர்க்கமுடியாத சினிமா தயாரிப்பு நிறுவனமான ஜெமினி நிறுவனத்தின் பல வெற்றிப்படங்களின் ஆதாரமாக இயங்கியவர் சுப்பு.

அங்கு ஜெமினி பட இலாகாவிலும், வாசன் அவர்கள் நடத்திய ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுதும் எழுத்தாளராகவும், ஜெமினி படங்களில் நடிக்கும் நடிகராகவும் இப்படிப் பல துறைகளிலும் பிரகாசித்தவர் சுப்பு.


கொத்தமங்கலம் சுப்பு என்கிற சுப்பிரமணியன் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த கன்னாரியேந்தல் எனும் கிராமத்தில் 1910-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் தேதி பிறந்தார். இளம் வயதில் தாயாரை இழக்கநேர்ந்ததால் தந்தை மகாலிங்க ஐயரின் கட்டுப்பாட்டில் வளர்ந்தார் சுப்பு. இயல்பாக கலை விஷயங்களில் ஈடுபாடு இருந்ததால் எட்டாம் வகுப்புவரை மட்டுமே படிக்க முடிந்தது. மகனை பொறுப்பானவனாக ஆக்க உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்துவைத்தார் தந்தை. பின்னர் ஒரு மரக்கடையில் வேலைக்குச் சேர்ந்து பணிபுரிந்த சுப்புவுக்கு கவனம் முழுவதும் நாடகம், நடிப்பு, பாடல் புனைவது, என்ற விஷயங்களிலேயே இருந்தது. வியாபாரத்தில் துளியும் கவனமில்லை. ஒருமுடிவாக காரைக்குடி அருகே இயங்கிவந்த நாடகக் குழு ஒன்றில் இணைந்தார். நாடக குழுவின் நாடகங்கள் பலவற்றில் நடிக்கத்துவங்கினார்.

தென்னிந்திய திரைப்படத்தொழில் மும்முரமாக வளர்ச்சியடைந்துகொண்டிருந்த நாடக அனுபவம் பட வாய்ப்புகளை பெற்றுத்தந்தது சுப்புவுக்கு. 1936-ல் ‘சந்திரமோகனா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகன் எம்.கே.ராதாவின் தோழன் வேணுகோபால் என்ற கதாபாத்திரத்தில் முதன்முதலாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார் சுப்பு. அக்காலகட்டத்தில் 'பட்டினத்தார்' 'மைனர் ராஜாமணி", "அநாதைப் பெண்" போன்ற படங்களில் தலைகாட்டத்துவங்கினார். அதுவரை படத்தில் அவரது சுப்ரமணியன் என்ற அவரது நிஜப்பெயரே இடம்பெற்றது. 1939-ல் திருநீலகண்டர் படத்தில்தான் முதன்முதலாக கொத்தமங்கலம் சுப்பு என்ற பெயர் இடம்பெற்றது. இந்த பெயர் காரணம் சுவாரஸ்யமானது. சுப்பு நாடகங்களிலும் படங்களிலும் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த காலத்தில் கொத்தமங்கலம் சீனு என்பவர் திரைப்படத் துறையில் புகழ்பெற்றிருந்தார். அவர்தான் சுப்புவை அன்றைய பிரபல இயக்குநர் டைரக்டர் கே.சுப்பிரமணியத்திடம் அறிமுகம் செய்து வைத்தவர். அதிலிருந்து கொத்தமங்கலம் சுப்பு என்றே அழைக்கப்பட்டார்.


தொடர்ந்து கே.சுப்ரமணியத்தின் "பக்த சேதா , "கச்ச தேவயானி" உள்ளிட்ட படங்களில் நடித்தார். 1941-ல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் கே.சுப்பிரமணியத்தின் சினிமா ஸ்டுடியோ முழுவதுமாக எரிந்துவிட நட்டத்தை சமாளிக்க தனது மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்தை எஸ்.எஸ்.வாசன் அவர்களுக்கு விற்றார் சுப்ரமணியம். அப்போது சுப்ரமணியத்தால் 'சிறந்த கலைஞர், பன்முக திறன் மிக்கவர்' என்ற அறிமுகத்துடன் எஸ்.எஸ்.வாசனிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார் சுப்பு.

கொத்தமங்கலம் சுப்புவின் திறமையை பல விஷயங்களில் நேரில் கண்ட வாசன் அவரை தன்னுடனேயே பணிபுரியக் கேட்டுக்கொண்டார்.

இந்த காலகட்டத்துக்குள் மைனர் ராஜாமணி, அனாதைப் பெண், அதிர்ஷ்டம், திருநீலகண்டர், சாந்தசக்குபாய், அடங்காப்பிடாரி, சுகுணசரசா, பக்த சேதா, சூர்ய புத்ரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன், பக்த நாரதர், தாசி அபரஞ்சி, போன்ற படங்களில் நடித்துமுடித்தார்.


ஜெமினியில் சுப்புவின் கொடி பறக்க ஆரம்பித்தது. ஜெமினியில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊதியம் மாதம் 300 ரூபாய். கொஞ்சநாளில் வாசனின் பிரியமான நண்பராகவும் ஆகிப்போன சுப்பு, ஜெமினி கதை இலாகாவில் முக்கிய பங்காற்றினார். ஜெமினியின் புகழ்பெற்ற படங்களான சந்திரலேகா, ஒளவையார், நந்தனார், மிஸ் மாலினி, வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்களின் வெற்றியில் சுப்புவின் பங்கு அளப்பரியது.

ஜெமினியில் நடிகர், கதாசிரியர், இயக்குநராக, கதை வசனகர்த்தா கவிஞர் என தன் பன்முக திறமையுடன் இயங்கி திரையுலகில் புகழ்பெற்றார் சுப்பு. ஜெமினியில் நான்கு படங்களை இயக்கிய சுப்பு, ஏழு படங்களுக்குத் திரைக்கதை எழுதினார். அவரது பல நுாறு பாடல்கள் மக்களால் பெரிதும் பேசப்பட்டது.

ஜெமினியின் தயாரிப்பான ஒளவையார் கொத்தமங்கலம் சுப்புவுக்கு பெரும்புகழ் அளித்தது. சினிமாவையே பார்த்திராத, அதன் மீதுவெறுப்பு கொண்ட ராஜாஜி விரும்பி பார்த்த திரைப்படம் ஔவையார் திரைப்படம். அத்தனை சிறப்பான முறையில் வாசனின் எண்ணத்துக்கு திரையில் உயிர்கொடுத்திருந்தார் படத்தை இயக்கிய கொத்தமங்கலம் ணசுப்பு. படத்தின் திரைக்கதை, பாடல், இயக்கம் அனைத்தும் அவரே. 1954-ல் ஔவையார் படக்குழுவினருக்கு நடந்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட ராஜாஜி, பக்தவத்சலம் “தமிழ் உலகுக்கு கொத்தமங்கலம் சுப்புவும் வாசனும் செய்த சேவையை யாராலும் மறக்கமுடியாது” என பாராட்டித்தள்ளினர்.

இப்படத்தில் கொத்தமங்கலம் சுப்பு நடித்தும் இருந்தார். மனைவிக்கு பயந்தவரான அந்த கதாபாத்திரத்தின் சேஷ்டைகள் ரசிகர்களை சிரிக்கவைத்தது.

திரையுலகிலிருந்து விலகியிருந்த நடிகை கே.பி சுந்தராம்பாளை ஔவையாராக நடிக்க வைத்து ஹாலிவுட் படத்துக்கு இணையான பிரமாண்ட காட்சியமைப்புகளுடன் வெளியான ஔவையார் படம் இன்றைக்கும் ஜெமினியின் மாஸ்டர் பீஸ் என்றால் மிகையாகாது.

ஜெமினியின் ‘கண்ணம்மா என் காதலி’ திரைப்படம் கொத்தமங்கலம் சுப்புவுக்கு நற்பெயருடன் வாழ்க்கைத் துணையையும் தந்தது. ஆம்...1945-ல் வெளியான இந்த படத்தின் கதாநாயகி நடிகை எம்.எஸ்.சுந்தரிபாய் கொத்தமங்கலம் சுப்பு பின்னாளில் திருமணம் செய்து கொண்டார்.

கொத்தமங்கலம் சுப்புவுக்கு புகழை தந்த படங்களில் முக்கியமானது,‘மிஸ். மாலினி’ பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் மிஸ்டர் சம்பத் என்கிற நாவலை ஜெமினி நிறுவனத்தார் திரைப்படமாகத் தயாரித்து 1947-ல் வெளியிட்டனர். இப்படத்தில் ‘சம்பத்’ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார் கொத்தமங்கலம் சுப்பு. இப்படத்தில் இன்னுமொரு சிறப்பு ஜெமினி ஸ்டுடியோ அலுவலகத்தில் பணியாற்றிய அழகான ஒரு ஊழியர் ஒரு காட்சியில் நடித்திருந்தது. அவர்தான் பின்னாளில் காதல் மன்னன் என திரையுலகில் புகழ்பெற்ற ஜெமினி கணேசன்.

இரண்டாவது உலகப் போர் முடிந்து நாட்டில் பஞ்சம் நிலவிய இப்படம் வெளியான காலகட்டத்தில் ரேஷன் கடை அமலில் இருந்தது. உணவுத் தேவையில் கட்டுப்பாட்டை கொண்டுவந்த இந்த அவலத்தை கிண்டல் செய்து பாடல் எழுதியிருந்தார் கொத்தமங்கலம் சுப்பு...

‘காலையில எழுந்திரிச்சு

கட்டையோட அழுவணும்’

‘சக்கரைக்குக் கியூவில போய்

சாஞ்சுகிட்டு நிக்கணும்

சண்ட போட்டு பத்து பலம்

சாக்கட மண் வாங்கணும்’- என்ற அந்தப்பாடல் அன்றைக்கு மக்கள் மத்தியில் வெகு பிரபலமாயிற்று. தொடர்ந்து ‘ஞான சௌந்தரி’ யில் வசனம் எழுதியிருந்தார். இதையடுத்து வி.நாகையா நடித்த ‘சக்ரதாரி’ என்கிற படத்தில் பாடல்களை எழுதியிருந்தார்.

இந்த ஆண்டில் ஜெமினியின் ‘சந்திரலேகா’ வெளியாகி அதன் வெற்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் அசைத்துப்பார்த்தது. இப்படத்தில் மூன்று வசனகர்த்தாக்களில் கொத்தமங்கலம் சுப்புவும் ஒருவர்.

எம்.கே.ராதா இரட்டை வேடத்தில் நடித்த ஜெமினியின் சிறந்த படங்களில் ஒன்றான ‘அபூர்வ சகோதரர்கள்’ அன்றைக்கு பேசப்பட்ட படம். ‘கார்சிகன் பிரதர்ஸ்’ என்கிற ஆங்கில நாவலான இந்தப்படத்தில் சுப்பு சில பாடல்களை இயற்றியிருந்தார். இது ஜெமினியின் மகத்தான வெற்றிப்படங்களில் ஒன்று. 1949-ல் வெளிவந்தது.

1951 இல் ‘சம்சாரம்’ படத்திலும் சுப்பு உருக்கமான பாடல்களை எழுதியிருந்தார். ‘அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே’ என்கிற இப்படப்பாடல் தமிழ்நாட்டின் பிச்சைக்காரர்களை திரும்பத் திரும்ப தியேட்டருக்கு அழைத்துவந்தது எனலாம். 1955-ல் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘வள்ளியின் செல்வன்’ படத்தினை இயக்கியிருந்தார் சுப்பு. ஜெமினியின் வெற்றிப்படங்களில் ஒன்று இது.

‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்துக்குப் பிறகு ஜெமினி நிறுவனத்திலிருந்து சற்று விலகி விகடனில் எழுத ஆரம்பித்தார். கலைமணி என்ற பெயரில் அவர் எழுதிய கதைகள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. விகடனின் அவரது மாஸ்டர் பீஸ் ‘தில்லானா மோகனாம்பாள்’. அது வெளிவந்த காலத்தில் ஆனந்தவிகடன் பரபரப்பான விற்பனையானது. திரையுலகில் அவரது அத்தனை புகழையும் இந்த ஒற்றை நாவல் அவருக்கு அளித்தது.

தொடர்ந்து விகடனில் அவர் எழுதிய‘ராவ் பகதூர் சிங்காரம்’ என்னும் ஒரு தொடரும் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவை பின்னாளில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. இதில் ‘தில்லானா மோகனாம்பாள்’ நாவலைவிடவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தயாரிப்பின்போது நிகழ்ந்த ஓர் சம்பவம் வாசன் மற்றும் சுப்புவின் அரிய குணத்தை பறைசாற்றியது.

கொத்தமங்கலம் சுப்புவின் இந்த நாவலை ஜெமினி நிறுவனமே தயாரிக்க இருந்த நிலையில், இயக்குநர் ஏ.பி நாகராஜன் சினிமாவாக தயாரிக்க முன்வந்தார். தானே அப்படி ஒரு திட்டம் வைத்திருந்த நிலையில் ஏ.பி.நாகராஜனின் ஆர்வத்தைக் கண்டு அவருக்கு விட்டுக்கொடுத்தார் ஜெமினி அதிபர் வாசன். ஆரம்ப காலங்களில் சமூகப் படங்களை எடுத்து பின்னாளில் திருவிளையாடல் உள்ளிட்ட படங்களை எடுத்து புகழ்பெற்றவர் ஏ.பி நாகராஜன். அவரது ஆசைக்கு குறுக்கே நிற்காமல், அந்த படத்தின் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார் வாசன்.

உண்மையில் அந்த நாவலின் உரிமை கொத்தமங்கலம் சுப்புவிடம் இருந்தது. ஆனந்த விகடனில் இடம்பெற்றதால் வாசன், சுப்புவின் அனுமதியுடன் அதை ஏ.பி.என்- க்கு விட்டுக்கொடுத்தார். இங்கு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை குறிப்பிடவேண்டும்.

வாசனின் அனுமதி கிடைத்தவுடன் நேரே ஏ.பி.என் கார் சென்றது கொத்தமங்கலம் சுப்புவின் வீட்டுக்கு. சுப்புவை வணங்கிவிட்டு, நாவலின் ஆசிரியர் என்ற முறையில் 10 ஆயிரம் ரூபாய்க்கான செக் ஒன்றை சுப்புவிடம் நீட்டினார் ஏ.பி. என்.

ஆனால் அதை வாங்க மறுத்த சுப்பு, "நீங்கள் வருவதற்கு கொஞ்சநேரம் முன்புதான் வாசன் அவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கான செக் வந்தது. அதனால் நீங்கள் எனக்கு தனியே எதுவும் தரவேண்டாம்“ என்றார். ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்றார் ஏ.பி.என்.

எழுத்தாளரின் மதிப்பை உணர்ந்து சினிமா உரிமை கொடுத்த பின் கொஞ்சமும் தாமதிக்காமல் எழுத்தாளருக்கான சன்மானத்தை கொண்டு சேர்த்த வாசனை பாராட்டுவதா அல்லது, தனக்குரிய பணம் வந்த தகவலை மறைக்காமல் இவ்வளவு பெரிய தொகையை வாங்க மறுத்த சுப்புவை பாராட்டுவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துபோனார் ஏ.பி. என்.

1960-ல் ‘இரும்புத்திரை’ ஏவிஎம் நிறுவனத்தாரின் ‘களத்தூர் கண்ணம்மா’ 1965-ல் 'படித்த மனைவி' உள்ளிட்ட சில படத்துக்கு வசனம் எழுதினார். சில படங்களில் தலைகாட்டினார்.

1970-க்குப்பிறகு முற்றாக திரையுலகில் இருந்து விலகினார். 1967-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1971-ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது தந்து கொத்தமங்கலம் சுப்புவை கவுரவித்தது.

வில்லுப்பாட்டில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்த கொத்தமங்கலம் சுப்பு பின்னாளில் காந்திமகான் கதையை இவர் வில்லுப்பாட்டு மூலமாக தமிழகம் முழுவதும் நடத்தினார்.

கொத்தமங்கலம் சுப்பு பங்கேற்ற படங்கள்....

1.அனாதைப்பெண்- நடிப்பு 1938

2. அதிர்ஷ்டம்- நடிப்பு 1939

3. சாந்த சக்குபாய் -வசனம், நடிப்பு 1939

4. அடங்காப்பிடாரி -நடிப்பு 1939

5. சுகுண சரசா -நடிப்பு 1939

6. பக்த சேதா -நடிப்பு 1940

7. சூர்ய புத்ரி- நடிப்பு 1941

8. மதனகாமராஜன் -நடிப்பு 1941

9. நந்தனார் - நடிப்பு (ஜெமினி) 1942

10. பக்த நாரதர் -நடிப்பு 1942

11. தாசி அபரஞ்சி - கதை, வசனம், பாடல், நடிப்பு (ஜெமினி) 1944

12. கண்ணம்மா என் காதலி- வசனம், இயக்கம் (ஜெமினி) 1945

13. மிஸ் மாலினி- வசனம், இயக்கம் (ஜெமினி) 1947

14. ஞான சௌந்தரி -வசனம் (கூட்டாக) 1948

15. சந்திரலேகா- வசனம் (கூட்டாக) (ஜெமினி)

16. அபூர்வ சகோதரர்கள்- பாடல் (ஜெமினி) 1949

17. சம்சாரம் -பாடல் (ஜெமினி) 1951

18. மூன்று பிள்ளைகள் -பாடல் (ஜெமினி) 1952

19. ஔவையார்- திரைக்கதை, பாடல், இயக்கம், நடிப்பு (ஜெமினி) 1953

20. வள்ளியின் செல்வன்- திரைக்கதை, நடிப்பு, இயக்கம் (ஜெமினி) 1955

21. வஞ்சிக்கோட்டை வாலிபன் -வசன பாடல், நடிப்பு (ஜெமினி) 1958

22. இரும்புத் திரை -வசனம், பாடல் (ஜெமினி) 1960

23. களத்தூர் கண்ணம்மா -பாடல் (ஏவிஎம்) 1960

24. படித்த மனைவி வசனம் -(கூட்டாக) 1965

25. தில்லானா மோகனாம்பாள் -கதை 1968

26. விளையாட்டுப் பிள்ளை 1970

27. சக்ரதாரி பாடல் (ஜெமினி) 1948

திரையுலகிலிருந்து முற்றாக விலகி ஓய்விருந்த கொத்தமங்கலம் சுப்பு, 1974-ம் ஆண்டு பிப்ரவரி 15 ந்தேதி தனது 63 வயதில் மறைந்தார். தமிழ்த் திரையுலகின் ஆரம்ப கால வளர்ச்சியில் பங்களிப்பு செய்த திரையுலக முன்னோடிகளில் கொத்தமங்கலம் சுப்புவுக்கு தனியிடம் உண்டு.

No comments:

Post a Comment