SETHUPATHY MANDAPAM ALIAS
NOSE-CUT MANDAPAM -MADURAI HISTORY
மதுரை – மூதூர் மாநகரத்தின் கதை - 6 | மூக்கறு மண்டபம் என்கிற சேதுபதி மண்டபம் சொல்லும் மதுரையின் கதை!
ஆயிரக்கணக்கன பெண்கள், குழந்தைகள், ஆண்களின் மேலுதட்டுடன் மூக்கும் கொடுமையான முறையில் அரிந்து எடுக்கப்பட்ட மிக வக்கிரமான போர் ஒன்றை மதுரை மண் அனுபவித்திருக்கிறது.
மதுரை என்றாலே மீனாட்சி அம்மையோடு, அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் நினைவுக்கு வந்துவிடும். பத்துநாள் மதுரையே கொண்டாடிக் களிக்கும் சித்திரை திருவிழாவில், ஏழாம் நாள் அனந்தராயர் மண்டபத்தில் இருந்து கிளம்பி, சேதுபதி மண்டபத்தில் அழகர் இரவு தங்குவார். அங்கு இரவில் பூப்பல்லக்கு நடைபெறும். அதன்பின் எட்டாம் நாள் காலை பூப்பல்லக்கு ஜோடனையோடு கிளம்பி, ஒன்பதாம் நாள் வழிநெடுக மக்களின் அன்பைப் பெற்றபடி, பத்தாம் நாள் பயணக்களைப்புத்தீர ஓய்வெடுத்து, சித்திரைத் திருவிழாவை முடித்து வைப்பார். இந்தத் திருவிழாவின் அடியொற்றி, சேதுபதி மன்னருக்கு எதற்குத் தல்லாகுளத்தில் கல்மண்டபம் என்ற கேள்விக்கு விடைதேடிப் புறப்படபோது, மதுரை மூதூர் மாநகரத்தின் கதை ஒன்று கிடைத்தது. பெண்களும், குழந்தைகளும் கூட மூக்கறுத்துக் கொல்லப்பட்ட கொடுங்கதைதான் அது.
சேதுபதி மண்டபம்
சேதுபதி மண்டபம்
கற்பனைக்கும் எட்டாத வரலாற்று நிகழ்வுகள் மதுரை மண்ணில் நடந்திருக்கின்றன. ராமாயணத்தில் சூர்ப்பணகையின் மூக்கை அரிந்த புராணக்கதை நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அப்படியான மிகக் கொடுமையான போர் ஒன்று தமிழக மண்ணில், அதுவும் மதுரை மண்ணில் 1659-ல் நடந்துள்ளது. ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களின் மேலுதட்டுடன் மூக்கும் கொடுமையான முறையில் அரிந்து எடுக்கப்பட்ட மிக வக்கிரமான போர் ஒன்றை இந்த மண் அனுபவித்திருக்கிறது. அந்தப்போர் 'மூக்கறுப்பு யுத்தம்' என்றே அழைக்கப்படுகிறது. அந்தப்போரின் வெற்றியை நினைவுகூரும் வகையில், மதுரை தல்லாகுளம் அருகே சேதுபதி மன்னரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் 'மூக்கறுப் போர் மண்டபம்' என்ற பெயரில் கட்டப்பட்ட கல்மண்டம் ஒன்று துயர வரலாறொன்றை நமக்குச் சொல்கிறது.
மதுரை மூதூர் நகரத்தின் கதையில், அழகர் திருவிழாவும், மன்னர் திருமலை நாயக்கரும் இல்லாமல் கதை சொல்ல முடியுமா... இந்தக் கதையும் இவர்களோடு பின்னிப் பிணைந்ததுதான்.
1623-ல் திருமலை நாயக்கர் மதுரையில் அரியணை ஏறியபோது, விஜயநகரப் பேரரசு வலிமை குன்றியிருந்தது. 1625-ல் மைசூர் அரசனான சாமராஜ உடையாருக்கும் திருமலை நாயக்கருக்கும் போர் மூண்டது. திண்டுக்கல்வரை வந்த மைசூர் படையை திருமலை நாயக்கரின் தளபதி ராமபய்யனும், கன்னிவாடி பாளையக்காரர் ரங்கன்ன நாயக்கரும் விரட்டி அடிக்கின்றனர். இந்தப் போருக்குப் பின், விஜயநகர அரசன் மூன்றாம் ஸ்ரீரங்கன் காலத்தில் மைசூர் அரசனோடு சேர்ந்து மீண்டும் நாயக்கர் மேல் போர் தொடுக்கிறார். இம்முறை செஞ்சி, தஞ்சை, மதுரை நாயக்கர்களின் கூட்டுப்படை பீஜப்பூர் சுல்தான் உதவியுடன் விஜயநகர அரசை வீழ்த்தி, சுதந்திர நாடாக மாற்றம் பெறுகிறது. இந்த இரண்டு போரிலும் மைசூர் மன்னன் மதுரை நாயக்கர் படையிடம் பெரும் தோல்வியைச் சந்திக்கிறார். காலம் நகர்கிறது.
சேதுபதி மண்டபம்
சேதுபதி மண்டபம்
1656-ம் ஆண்டு மைசூர் அரசன் கண்டீரவ நரசராஜா, இரண்டுமுறை மைசூர் படைகள் தோற்கடிக்கப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில், மதுரையை நோக்கிப் படையை அனுப்புகிறான். அப்போது 75 வயதான திருமலை நாயக்கர், கொஞ்சம் அயர்ந்திருந்த காலம்.
மைசூர் அரசனின் தளபதி கொம்பையா திருமலை நாயக்கரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியான சத்தமங்கலம் (இன்றைய சத்தியமங்கலம் பகுதி) வழியாக நுழைந்து, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் வெறி கொண்டு தாக்கியது. தாக்கப்பட்டவர்கள் மூக்குகள் மேலுதட்டுடன் சேர்த்து அறுக்கப்பட்டு, சாக்கில் போடப்பட்டு, மைசூர் அரசனின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ச்சியாகப் பல ஊர்களைத் தாக்கி, மைசூர் படை திண்டுக்கல்லை அடைந்தது.
நிலைமை கைமீறுவதை உணர்ந்த திருமலை நாயக்கர், தம் மூத்த ராணியின் மூலம், ராமநாதபுரம் ரகுநாதசேதுபதி மன்னருக்கு உதவி கேட்டு, கோரிக்கை வைக்கிறார்.
திருமலை நாயக்கரின் ஆட்சி தொடங்கிய காலத்தில், தன் முன்னோருடன் போர் நடந்ததும், இரண்டு அரசுகளுக்கும் இடையே மிக நெருக்கமான உறவு இல்லாத போதிலும், மதுரைச் சீமையின் பொதுமக்கள் தாக்கப்படப்போகும் அபாயத்தையும், விஜயநகர அரசோ, மைசூர் அரசோ மதுரையில் நிலைபெற்றால், ராமநாதபுர நாடு, அவர்களோடு பெரும்போர் நடத்த வேண்டியிருக்கும் என்பதையும் ரகுநாத சேதுபதி உணர்ந்து கொண்டார். கண்னிமைக்கும் நேரத்தில் என்பார்களே, அதைப்போல, ஒரே நாளில், 25,000 போர் வீரர்களைத் திரட்டி, மதுரைக் கோட்டைக்கு முன் அரணாக நின்றார்.
சேதுபதி மண்டபம்
சேதுபதி மண்டபம்
ஆறுமணி நேரத்தில் ராமநாதபுரத்தின் பல பகுதிகளில் இருந்தும் மதுரைக்கோட்டைக்கு வீரர்கள் அணிவகுத்தார்கள் என்று ஆச்சர்யமாகச் சொல்லப்படுவதும் உண்டு. மதுரைப்படையின் 35,000 வீரர்களும் இப்படையோடு சேர்ந்தனர். 60,000 வீரர்கள் மைசூர் படையை எதிர்கொண்டு, திண்டுக்கலை நோக்கி அவர்களை விரட்டியடித்தது.
மைசூரில் இருந்து கூடுதல் படை உதவி வேண்டும் என்ற தகவலை அனுப்பிவிட்டு, மைசூர் தளபதி திண்டுக்கல் கோட்டைக்குள் ஒளிந்து கொள்கிறான். அதே நேரம், மதுரைப் படையில் இருந்த ஒரு தளபதிக்குக் கையூட்டு கொடுத்து, மதுரைப்படை சரணடைகிறது எனப் பொய்யான தகவலைப் பரப்பி, போர் தொடங்காமல் மைசூர்ப்படையின் வரவுக்காக, காலத்தையும் நீட்டிக்கிறான். உண்மையை உணர்ந்த சேதுபதி படையினர், அத்தளபதியை நிலவறையில் அடைத்துவிட்டு, மைசூர் படையின் மீது பாய்ந்தனர். இந்த நேரத்தில் மைசூரில் இருந்து கூடுதல் படையும் வந்து சேர்கிறது.
சுமார் பன்னிரண்டாயிரம் வீரர்கள் இருபக்கமும் கொல்லப்பட்ட நிலையில், மைசூர்வரை அவர்களைத் துரத்திச் சென்று, விரட்டியடித்தது சேதுபதியின் படை. பொதுமக்களின் மூக்கை அறுத்த மைசூர் தளபதியான கொம்பையாவின் மூக்கையும், கடுக்கனோடு காதையும் அறுத்துக் கொண்டு மதுரை வந்தார்கள் திருமலையின் தளபதி பின்னத்தேவரும், சேதுபதியின் வீரர்களும். மைசூர் மக்களுக்கும் படைகளுக்கும் எந்தத் தொல்லையும் கொடுக்காமல், தளபதியை மட்டும் இப்படிச் செய்து வந்ததை அறிந்த திருமலை நாயக்கர் பின்னத்தேவருக்கு 'மூக்குப்பரி' என்கிற பட்டத்தை வழங்கினார். ரகுநாத சேதுபதிக்கு 'திருமலை சேதுபதி' என்ற பட்டமும், 'ராணி சொல் காத்தான்' என்ற பெயரும் வழங்கியதோடு, இனிமேல் ராமநாதபுரம் மதுரைக்குக் கப்பம் கட்ட வேண்டாம் என்ற உத்தரவையும் வழங்கினார்.
சேதுபதி மண்டபம்
சேதுபதி மண்டபம்
அத்தோடு, மதுரையில் நவராத்திரித் திருவிழா எவ்வளவு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறதோ, அதே அளவு சிறப்புடன் ராமநாதபுரத்திலும் கொண்டாடலாம் என்ற சிறப்புரிமையை வழங்கினார்.
இந்த மூக்கறு போரின் சாட்சியாக, இன்றும் மதுரை தல்லாகுளத்தில், சேதுபதி மண்டபம் கடைகள் சூழ, சந்தடிமிகுந்த இடத்தில் நிற்கிறது. பேருந்தில் அல்லது பயணத்தில் கடந்து போகிற பொழுதில், மதுரை வரலாற்றின் அவலச்சுவை நிரம்பிய ஒரு முக்கிய பக்கமும் நம்மைக் கடந்து போகிறது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றின் சாட்சியாக நிற்கும் இந்த சேதுபதி மண்டபம் இன்று பராமரிப்பு இன்றிக் காணப்படுகிறது. அதன் சுவர்களின் மரங்கள் வேர்விட்டு வளர்கின்றன. இது அந்த நினைவுச் சின்னத்தையே சிதைவுக்குள்ளாக்கலாம். எனவே அரசு உடனடியாக கவனம் செலுத்தி சேதுபதி மண்டபத்தைப் பராமரிக்க வேண்டும் என்பதுவே மதுரை மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
No comments:
Post a Comment