Thursday 18 February 2021

KANTHAN KARUNAI -SIVAJI GANESAN DIALOGUES

 


KANTHAN KARUNAI -SIVAJI GANESAN DIALOGUES




தமிழ்க் கடவுள் முருகனின் அருமையை சுவைபடக்கூற எடுக்கப்பட்ட படம் தான் `கந்தன் கருணை’.
இந்தப் படத்தில் சிவாஜி, கவுரவ வேடத்தில் வீரபாகு தேவனாக நடித்திருப்பார்.
இந்தப் படத்தில்தான் தமிழ் எப்படி விளையாடியிருக்கிறது?
டி. ராஜேந்தர் எழுதும் வசனங்களையெல்லாம் ஏ.பி. நாகராஜன் அப்போதே புராணப் படங்களில் எழுதிவிட்டார்.
`கந்தன் கருணை’ ஒரு உதாரணத்திற்கு பார்ப்போம்!
சூரனை வதைக்கும் போரில் கந்தனின் படைத் தளபதி வீரபாகு தேவர் வேடம்தான் சிவாஜி கணேசனுக்கு !
போரில் கந்தன் வெற்றி பெற்றவுடன், பாடும் பாடல் வெற்றிவேல்
வீரவேல், சுற்றி நின்ற பகைவர் தம்மை தோள்நடுங்க வைக்கும் எங்கள் சக்திவேல், ஆதி சக்திவேல்’ பாட்டிற்கு சிவாஜி ஒரு நடை நடந்து வருவார்.
தியேட்டரே அதிரும் வண்ணம் கைத்தட்டல்! இந்த படத்தில் ஒரு காட்சி!
போருக்கு முன் சூரபத்மனிடம், வீரபாகுவை தூதாக அனுப்புவார் முருகன். இதில் சூரபத்மனாக அசோகன் நடித்திருப்பார்.
சூரனின் சபை. அங்கே சூரன் `என்னை வெல்லுமளவிற்கு அந்த குமரனுக்கு வல்லமை எங்கிருந்து வந்தது? எவர் கொடுத்த சக்தி அது? எப்படிப்பட்டவன்? அவன் யாராக இருப்பான்?’ என்று சபையில் உரக்க கேட்டுக்கொண்டிருப்பான். அப்போது தூதனாக வீரபாகு அவனது சபையில் தோன்றுவான்.
வீரபாகுவான சிவாஜி கணேசன்
பேசுவார் –`அவனையா யார் என்று கேட்கிறாய்? உன்னை ஒழிப்பதற்கென்றே உலகில் தோன்றியவன்! வேலோடு வந்திருப்பவன்! உன்னால் வேதனைப்படும் அமரர்களை விடுவிக்கப் போகிறவன்! வேலன்! வேதத்திற்கு சீலன்! பார்வைக்கு பாலன்! பகைவருக்கு காலன்!’ என்பான் வீரபாகு!
`எத்தனை பெயர்கள் அவனுக்கு ?’ இது சூரபத்மன்.
`கந்தனென்பார், கடம்பனென்பார், கார்த்திகேயனென்பார்! முருகனென்பார், குகனென்பார், சண்முகனென்பார்! உன்னையும் வதைத்த பின் சூரனையும் வதைத்த சூரன் என்பார்.’
`போதும் நிறுத்து, வார்த்தையிலே அழகு கூட்டி, வர்ணனையில் ஜாலம் காட்டி,சொல் அலங்காரத்துடன் என்னைப் பேட்டி காண வந்திருப்பவனே! யார் நீ?’
`சொல்லுக்கும் பொருளுக்கும், முத்தமிழுக்கும், தமிழின் இனிமைக்கும்,ஆயகலை அறுபத்தி நான்கிற்கும், ஆறு சாஸ்திரத்திற்கும், நான்கு வேதத்திற்கும், முன்னை பழமைக்கும், பின்னை புதுமைக்கும் தலைவன் அவன்! அவனே வேலவன்! அவன் அனுப்பிய தூதுவன்! வீரபாகு தேவன்!’
`ஓ! வேலவன் அனுப்பிய தூதுவனோ?’
`தூதுவன் மட்டுமல்ல நன்மையை எடுத்து ஓதுபவனும் கூட !’
அப்போது சூரபத்மனிடம் தம்பிமார்கள் சீற்றமாக எழுந்து `வீரபாகு’ என்று கத்துவார்கள்.
`ஏய்! சூரன் மட்டும் பேசட்டும். மற்றவர்கள் வாயடக்கி இருக்கட்டும். இருக்கையில் அமரட்டும்’ – இது வீரபாகு!
`சற்றுப்பொருங்கள். இவனை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பான் சூரபத்மன்!
`நீ பார்த்துக் கொள்வாய்! நான் பார்த்துக் கொல்வேன்.’
`ம்! எங்கு வந்தாய்? எதற்காக வந்தாய்? வந்த விஷயத்தைக் கூறு! சுருக்கமாகச் சொல்லிவிட்டு ஓடிவிடு!’
`படிப்பையெல்லாம் கற்றாயே தவிர, பண்பை கற்க மறந்துவிட்டாய்! நீ என்ன செய்வாய் பாவம்! என்று உன் தங்கை அகமுகி அடிபட்டு வந்தாளோ அன்றே உன் அறிவு மங்கிவிட்டது! தூதாக வந்தவனை கவுரவித்து, ஆசனமளித்து, அமரச் செய்து பிறகு வந்த நல்ல விஷயத்தை கேட்பதை விடுத்து, நிற்க வைத்துக் கொண்டே பேசுகிறாயே! இதுதான் நீ கற்ற கலையோ?’
`ஹா! ஹா! ஹா! ஆசனமா? உனக்கு நான் கொடுக்கவா ? பைத்தியக்காரா! அசுர குலத்தவர் அமரும் அரசவையிலே மாற்றான் எவனுக்கும் ஆசனமில்லை என்று அன்றே ஆணையிட்டுவிட்டேன். தேவையென்றால் நின்று சொல்! அல்லது ஓடிவிடு!’
` நீ என்ன எனக்கு ஆசனம் தருவது? சரவணப் பெருமான் அருளால் உனக்கு சமமான ஓர் ஆசனத்தை நானே ஏற்படுத்திக்கொண்டு, அதில் அமர்ந்து பதில் சொல்வேனேயல்லாமல் நானாவது நின்றாவது பதில் சொல்வதாவது! பேசுவதாவது!’
`முருகா’ என்பான் வீரபாகு, சூரனுக்கு சமமான ஆசனம் வரும். அதில் அமர்ந்து கொள்வான் வீரபாகு!
`இப்போது உனக்கும் சிம்மாசனம்! எனக்கும் சிம்மாசனம்! அங்கே பணிப்பெண்கள்! இங்கேயும் பணிப்பெண்கள்! நீ சூரன்! நான் வீரன்! சரிதானா?’ என்றபடி வாய்விட்டு சிம்ம கர்ஜனையோடு சிவாஜி ...
சூரபத்மன் : வீரபாகு! இந்த மாதிரி மந்திரஜாலங்களைக் கண்டு நான் பயந்துவிடுவேன் என்று எண்ணிவிடாதே! மாயை என்பவள்தான் என்னைப் பெற்றெடுத்த தாய். தெரியுமா உனக்கு?
வீரபாகு : அந்த மாயையைப் படைத்த பரமனின் பிள்ளைதான் வேலவன். அது தெரியுமா உனக்கு?
சூரபத்மன் : அவன் தந்தையிடம்தான் உலகில் எந்த சக்தியாலும் என்னை அழிக்கக் கூடாது என்கிற வரத்தைப் பெற்றிருக்கிறேன். அதை அறிந்தாயா நீ?
வீரபாகு : வரத்தைப் பெற்றபின் உன் தரத்தில் நீ தாழ்ந்துவிட்டாயென்றுதான் பன்னிரண்டு கரத்தோடு ஆறுமுகத்தைப் படைத்திருக்கிறான் பரமன் என்பதை அறிந்தாயா நீ?
சூரபத்மன் : ஆறுமுகமானால் என்ன, ஆறாயிரம் முகம் படைத்தவனானா என்ன? இந்த சூரனை அழிக்க ஒருவன் பிறக்கவுமில்லை. இனி பிறக்கப் போவதுமில்லை.
வீரபாகு : உன்னை வெல்லவோ,கொல்லவோ குமரன் தேவையில்லை. நான் என் சொல்லினாலேயே கொன்றுவிடுவேன். ஆனால், அது வேலவனின் வேலுக்கு பெருமையில்லையே என்று உன்னை மன்னித்தேன் போ!
சூரபத்மன் : நீயா, என்னை வெல்லவா? உன்னால் என்ன செய்ய முடியும்?
வீரபாகு : என்ன செய்ய முடியுமா? உனக்காகவே தாண்டி வந்தேன் கடலை! வாங்குவேன் உன் உடலை! அணிவேன் மாலையாய் குடலை! ஆனால் என் முருகன் கட்டளை இடலை! அதனால் உன்னைத் தொடலை!

No comments:

Post a Comment