TRIANGLE OF
KAMARAJ,INDHIRA GANDHI ,AND CHO
பிரதமராக அன்று இருந்த இந்திராகாந்தியை நான் சந்தித்த நிகழ்வு எதிர்பாராத ஒன்றுதான். ‘துக்ளக்’கை துவக்கி அப்போது இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. இந்திராகாந்தியை நான் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த நேரம் அது. பிரஸ் இன்பர்மேஷன் பீரோ அதிகாரி “பிரதமரைச் சந்திக்க உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள். அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறோம்” என்று என்னிடம் சொன்னதும் எனக்கு ஆச்சரியம்.
“எனக்கு விருப்பம் தான். ஆனால் பிரதமர் சம்மதிப்பாரா?”
“அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் அந்த அதிகாரி. பிரதமர் அலுவலகத்திற்கு என்னைக் கடிதம் எழுதச் சொன்னார்.
எனக்கு என்னவோ இதற்குப் பின்னால் ஏதோ ஒரு நோக்கம் இருப்பதாகத் தோன்றிக்கொண்டே இருந்தது. ஏனென்றால் காமராஜரின் ஸ்தாபன காங்கிரசும், இந்திரா காங்கிரசும் இணைவது தேவை என்று கருதிய நான் அது பற்றி எழுதி இருந்தேன். அது குறித்து காமராஜரிடமும் விவாதித்தேன்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு அகில இந்திய ரீதியில் இணைப்பு என்றால் தான் ஒப்புக்கொள்ள முடியும். தமிழ்நாட்டில் மட்டும்தான் என்றால் தன்னால் ஏற்க முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் காமராஜர்.
இந்தநிலையில் இந்திரா காந்தியைச் சந்திப்பது இருகட்சிகளின் இணைப்புக்கு உதவும் என்று நம்பினேன். பேட்டியை அதற்கான வாய்ப்பாக நினைத்தேன்.
பிரதமர் அலுவலகத்திற்கு பேட்டிக்கான நேரம் ஒதுக்கித் தரச்சொல்லிக் கடிதம் எழுதினேன். முதலில் எந்தப் பதிலும் வரவில்லை. எனக்கு நம்பிக்கை போய் விட்டது. என்னைக் கடிதம் எழுதச் சொன்ன அதிகாரியிடம் சொன்னதும் திரும்பவும் என்னைக் கடிதம் எழுதச் சொன்னார்.
நான் மறுபடியும் கடிதம் எழுதினேன்.
சில நாட்களில் பதில் வந்துவிட்டது. பேட்டிக்கான தேதியும் நேரமும் குறிப்பிட்டுக் கடிதம் எழுதியிருந்தார்கள். பதில் வந்ததும் காமராஜரைச் சந்தித்தேன். இந்திரா காந்தியைச் சந்திப்பது குறித்துச் சொன்னேன். அவர் கொஞ்சமும் தன்னுடைய நிலையிலிருந்து மாறவில்லை. அகில இந்திய ரீதியில் பேசினால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.
சந்திப்புக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. அதற்குள் மதுரையில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதில் இந்திராகாந்தி கலந்து கொள்வது தெரிந்ததும் இந்திராகாந்தியைச் சந்திப்பதற்கு முன்னால் எனக்கிருக்கும் ‘பாப்புலாரி’ட்டியை அவர் உணர வேண்டும். அப்படி உணர்ந்தால் அவரைச் சந்திக்கும்போது அது பயன்படும் என்று நினைத்தேன்.
அதற்கு முன்பும், பின்பும் இப்படிப்பட்ட செயல்களில் நான் ஈடுபட்டதில்லை. ஆனால் அன்றைக்குச் செய்தேன்.
மதுரையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் போனேன். பத்திரிகையாளருக்கான பகுதிக்குச் செல்லாமல் மாநாடு நடந்து கொண்டிருக்கும் போது பொதுவான வாசல் வழியாக நுழைந்தேன்.
சினிமா, அரசியல், பத்திரிகை என்று பிரபலமாக இருந்ததால் என்னைப் பார்த்ததும் மக்கள் மத்தியில் ஒரே ஆரவாரம். மாநாட்டில் பேசிக் கொண்டிருந்தவரே பேச்சை நிறுத்த வேண்டியதாயிற்று. முன்னால் உட்காரப் போன என்னை மேடை ஏறச் சொல்லி கூட்டத்தில் ஒரே ஆரவாரம்.
இந்திராகாந்தி இதைக் கவனித்துத் தனக்குப் பக்கத்தில் இருந்தவர்களிடம் என்னைப் பற்றி விசாரித்து மேடையில் அமரச் சொன்னார். நானும் மேடை ஏறி அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு மேடை ஓரமாக அமர்ந்து கொண்டேன்.
என்னைப் பொருத்தவரை அது மலிவான செயலாக இருந்தாலும் மதுரையில் மக்கள் காட்டிய ஆரவாரமான வரவேற்பின் விளைவு நான் டெல்லிக்குப் போனபோது தெரிந்தது.
பிரதமர் அலுவலகத்தில் உற்சாகமான வரவேற்பு. பிரதமருக்கு நெருங்கியவரான யஷ்பால்கபூர் போன்றவர்கள் நெருக்கமாகப் பேசி அழைத்துப் போனார்கள்.
இந்திராகாந்தி அவர்களைச் சந்தித்தேன். பேட்டி கண்டேன்.
பேட்டி முடிந்தது. நான் சொன்னபடி அவரிடம் தனியாகப் பேச நேரம் ஒதுக்கப்பட்டது. அவருடன் இருந்த அதிகாரிகள், உதவியாளர்கள் எல்லாம் வெளியேறிவிட்டார்கள்.
இரு காங்கிரசும் இணைய வேண்டிய அவசியம் குறித்துப் பேசினேன். இரு கட்சிகளும் பிரிந்திருப்பது நல்லதல்ல என்று வலியுறுத்தினேன். நான் சொல்வதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார் இந்திராகாந்தி.
ஸ்தாபன காங்கிரஸுடன் இருந்த பிரச்சினைகளை விளக்கிய அவர், “தமிழகத்தில் மட்டும் இணைப்பு என்றால் சாத்தியம். அகில இந்திய அளவில் சாத்தியமில்லை” என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார். எத்தனையோ முறை நான் வற்புறுத்தியும் கூட அவர் சம்மதிக்கிற மனநிலையில் இல்லை.
காமராஜரின் கருத்து என்ன என்று என்னிடம் கேட்டார். தமிழகத்தில் மட்டும் இணைப்பு என்றால் அவர் சம்மதிக்க மாட்டார் என்று சொன்னேன்.
பேச்சு அதற்குமேல் நகரவில்லை.
எனக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. சென்னை திரும்பியதும் காமராஜரைச் சந்தித்து டெல்லியில் நடந்ததைச் சொன்னேன். அவர் சற்றும் அதிர்ச்சி அடையவில்லை. ஏற்கனவே எதிர்பார்த்த செய்தியைப் போல அதை எடுத்துக் கொண்டார்.
காங்கிரஸுக்கிடையில் இணைப்பு ஏற்பட நான் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு இந்திரா காந்தியை இன்னும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தேன்.
இதெல்லாம் நடந்த சிறிது காலத்திற்குப் பிறகு மத்திய உளவுத் துறையின் தென்மண்டல அதிகாரி என்னைப் பார்க்க வந்திருந்தார். உளவுத்துறையின் டைரக்டர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். அப்போது நான் சினிமா, நாடகம், வழக்கு என்று பிஸியாக இருந்ததால் குறிப்பிட்ட நாளில் இரவு 12 மணிக்குச் சந்திக்கலாம் என்று சொன்னேன்.
அதன்படியே இரவு 12 மணி வாக்கில் தென்மண்டல உளவுத்துறை டைரக்டரைச் சந்தித்தேன். போனதும் என்னுடைய நாடகங்களைப் புகழ்ந்தவர் என்னை பெர்னாட்சாவுடன் ஒப்பிட்டார். ஓட்ஹவுசுக்கு இணையாக உயர்த்திப் பேசினார்.
நள்ளிரவு நேரத்தில் இப்படிப் பேச்சு போனதும் நான் எரிச்சலாகி, “என்ன நோக்கத்தில் என்னை இங்கு வரவழைக்கிறார்கள்?” என்றதும், “தின நாளிதழ் ஏதும் ஆரம்பிக்கிற ஐடியா உங்களுக்கு இருக்கிறதா?” என்றார் டைரக்டர். அந்தச் சமயத்தில் தின நாளிதழ் துவக்குவது பற்றி நான் சிலரிடம் பேசிக் கொண்டிருந்த விஷயம் இவர்கள் கவனத்திற்குப் போயிருக்கிறது.
“அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது?” என்று நான் கேட்டதும், “அனைத்தையும் ஏற்பாடு பண்ணிடலாம்” என்று நம்பிக்கையுடன் சொன்னார் அந்த அதிகாரி.
“யார் சொல்லி இதையெல்லாம் என்கிட்டே சொல்றீங்க?” என்று நான் கேட்டதற்கு அவரிடம் இருந்து பதில் இல்லை.
அடுத்தடுத்து நான் கேட்டு, கடைசியாக “பிரதமர் இந்திராகாந்தி சொல்லி இப்படிப் பண்றீங்களா?” என்று வெளிப்படையாகக் கேட்டும் அவரிடம் இருந்து பதில் இல்லை.
இதையடுத்து அவர் என்னிடம் கேட்டது தான் இன்னும் ஆச்சரியம்.
“தமிழக இளைஞர் காங்கிரசுக்கு நீங்கள் தலைவராக இருந்தால் நன்றாக இருக்கும்” என்று அந்த அதிகாரி சொன்னதும், “இதுவும் பிரதமர் சொன்னதா, சொல்லுங்கள்” என்று நான் தொடர்ந்து கேட்டும் பதில் இல்லை.
“நீங்களாக அப்படி கற்பனை செய்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல” என்று பதிலளித்துவிட்டு அந்த அதிகாரி போய்விட்டார். இரவு மணி இரண்டுக்கு மேல் ஆகிவிட்டது.
உளவுத்துறை அதிகாரியிடம் என்னை அழைத்துச் சென்ற இன்னொரு அதிகாரியுடன் காரில் அடையாறு பக்கம் வந்து கொண்டிருந்தோம். சத்யா ஸ்டூடியோ வாசலில் சின்னக் கோயில். அதற்கு முன்னால் காரை நிறுத்தச் சொன்னேன். இறங்கினேன்.
கோவிலுக்கு முன்னால் அந்த அதிகாரியை நிறுத்தி “பொழுது விடிகிற நேரத்தில் கோயிலுக்கு முன்னாலே இருக்கீங்க. என்கிட்ட இப்பவாவது உண்மையைச் சொல்லுங்க. பொய் சொன்னீங்கன்னா உங்க குழந்தை, குட்டி எல்லாம் என்ன ஆகுமோ எனக்குத் தெரியாது. பிரதமர் சொல்லித்தான் உங்க மூத்த அதிகாரி பேசினாரா? சொல்லுங்க..” என்று உலுக்கியதும் மனிதர் அரண்டுவிட்டார்.
“உங்களுக்குத் தான் எல்லாம் தெரிஞ்சிருக்கே. என்னைப் பொய் சொல்ல வைக்காதீங்க. வம்பிலும் மாட்டி விடாதீங்க”
சொல்லிவிட்டுப் போன அந்த அதிகாரி, அதற்குப் பிறகு என்னைச் சந்திக்கவே இல்லை.
இப்போது நினைத்துப் பார்த்தாலும் தானாக வந்த வாய்ப்புகளை நழுவ விட்டுவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஏதோ தியாகம் செய்ததாகவும் நினைக்கவில்லை. என் மனதிற்குப் பட்ட நடைமுறை அறிவுப்படி நான் நடந்து கொண்டதாகத்தான் நினைக்கிறேன்.”
(தொடரும்…)
No comments:
Post a Comment