தாத்தப்பன் குளம்!
காரணம் இல்லாமல் காரியம் இல்லை' என்பது போல், சாதாரணமானவை என்று நாம் கடந்து செல்லும் சில இடங்கள், கனமான வரலாறுகளை தன்னுள் தக்க வைத்துள்ளதை அறியும்போது, காலத்தின் சக்தியை வியக்காமல் இருக்க முடியவில்லை.
என் சித்தி மகன் திருமணத்திற்காக, சொந்த ஊரான கம்பத்திற்கு சென்றிருந்தேன். பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாம் அங்கு தான் என்றாலும், என் அப்பாவின் உடல் நலம் கருதி, கிராமத்திற்கு குடிவந்த பின், கம்பத்திற்கும், எங்களுக்குமான தொடர்பு அறுந்து விட்டது. ஆனாலும், தாயின் தொப்புள் கொடி உறவு போல், ஆடி ஓடி விளையாண்ட வீதிகளும், அதை ஒட்டிய சம்பவங்களும், படித்த பள்ளி, தோழிகள் என, நினைவுகள் நெஞ்சை முட்டி, ஏக்கத்தை ஏற்படுத்தும். எப்போதாவது இதுபோன்ற விசேஷங்களுக்கு போனால், பிறந்த மண்ணை மிதித்த சந்தோஷத்தில் மனம் பரவசமாகிவிடும்.
திருமணம் முடிந்து, ஆங்காங்கு கிடந்த நாற்காலிகளில் இருவீட்டு உறவினர்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். என் பெரியம்மா மகளிடம், ''வாசுகி... எத்தனை வருஷமாச்சு... கம்பராயர் பெருமாள் கோவிலுக்கு போயி... கோவிலுக்கு போயிட்டு வருவோமா...'' என்றேன்.
அவள் தலையாட்ட, கோவிலுக்கு புறப்பட்டோம். வழியில் அவள் ஏதேதோ பேசியபடி வர, நானோ, தெரு மற்றும் சாலையின் இருபுறமும், நடந்து, விளையாடிய வீதிகளை ஆவலுடன் நான் பார்த்தபடி வந்தேன்.
எவ்வளவு அழகான ஊர் கம்பம்! இன்று, வயது முதிர்ந்த மனிதனின் சருமத்தைப் போல், மக்கள் தொகை பெருக்கத்தால் சுருங்கி கிடப்பதை பார்த்து, மனம் வலித்தது.
கிரசன்ட் தியேட்டரை நெருங்கிய போது, மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வரும், அந்த கழிவுநீர் கால்வாயை பார்த்தேன்.
ஒரு காலத்தில், ஆறு போல் அகன்று விரிந்து, ஆழமாக இருந்த கால்வாய், இன்று ஒடுங்கி கிடந்தது.
''தெருக்களும், வீடுகளும் தான் சுருங்கிப் போயிருச்சுன்னு பாத்தா, இந்த சாக்கடை கூட இத்துாணுன்டா போயிருச்சே...'' என்றேன், வலி நிறைந்த ஆச்சரியத்துடன்!
அவள் சிரித்தபடி, ''அப்ப, மனுஷங்க மனசு விசாலமா இருந்ததால, வீதிகளும், ஆறு, குளம், ஏன்... இந்த சாக்கடை கூட, அகலமா இருந்துச்சு. எப்ப மனுஷப் பய மனசு, தான், தன்னுடையதுன்னு சுருங்கிப் போச்சோ, அன்னைக்கே, பூமியும் தன்னோட நிலத்தை சுருக்கிக்கிச்சு,'' என்றாள்.
''என்னடி தத்துவமெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டே...'' என்றேன், சிரித்தபடி!
''தத்துவமில்லடி... உண்மைய சொன்னேன்; நம்ம அம்மாயி சின்னப்புள்ளயா இருக்கையில, இது, காட்டாறு ஓடையாக இருந்துச்சாம். மழைக்காலத்துல பளிங்கு மாதிரி தண்ணி ஓடுமாம். பின், நம்ம அம்மாக்கள் சின்னப்புள்ளயா இருந்தப்ப, ஊர்ல இருக்கிற சாக்கடை தண்ணிய எல்லாம் இந்த ஓடைக்கு கடத்தியிருக்காங்க. அப்புறம், அவங்க காலத்துலயே எல்லாரும் மல ஜலம் கழிக்கும் இடமா மாறிப் போச்சு. நாம சின்னப்புள்ளயா இருந்தப்ப, காட்டாறு ஓடைங்கிற பேரு மறைஞ்சு, சாக்கடை ஓடையாச்சு. இப்ப, நம்ம புள்ளைங்க காலத்துல, ஆறு மாதிரி இருந்த கால்வாய், கோவணத்துண்டா சுருங்கிப் போச்சு. இனி, நம்ம பேரப்புள்ளைங்க காலத்துல, இது இருந்த அடையாளம் கூட இருக்காது,'' என்றாள்.
மனிதனின் சுயநலத்தால், இயற்கை எப்படியெல்லாம் உருமாறி, அழிந்து போகிறது என்பதை நினைத்த போது, மனம் வலித்தது.
சிறுவயதில், மழைக் காலங்களில், இந்தக் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். மழை வெறித்ததும், ஆண், பெண், சிறார், முதியவர் என்று எல்லாரும் பாலத்தின் கைபிடிச் சுவரை பிடித்தபடி வேடிக்கை பார்ப்போம்.
பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை வேடிக்கை பார்ப்பதில் அதென்னவோ, மனிதர்களுக்குள் அப்படி ஒரு மாறாத விருப்பம்!
அதுவரை, கரிய நிறத்தில், துர்நாற்றத்துடன் ஓடும் சாக்கடை கால்வாய், மழைக் காலங்களில் மட்டும் இளவரசி பட்டம் கட்டி விடும். மரம், செடி, கொடிகளை எங்கிருந்தோ உருட்டிக்கொண்டு, நுரைகள் பொங்க, இரு கரைகளையும் தொட்டு, தண்ணீர் குதியாட்டம் ஆடி வரும் அழகைப் பார்க்க, பேரானந்தமாக இருக்கும்.
அதன் ஒரு கரையில், எங்கள் பள்ளி இருந்ததால், மழைக்காலத்தில், வகுப்புக்கு, 'டிமிக்கி' அடித்து, அதில், காகித கப்பல்களை விட்டு மகிழ்வோம்.
பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர், வீரப்ப நாயக்கன் குளத்தை சென்றடையும். இதன்மூலம், பல ஆயிரம் ஏக்கர், பாசன நிலங்கள் பயன் பெறும். எப்போது இது சாக்கடை கால்வாயாக மாற ஆரம்பித்ததோ அன்றே பாசனக் கால்வாய்களின் அழிவும் ஆரம்பமாகிவிட்டது. இக்கால்வாய் சென்று கலக்கும் சின்ன வாய்க்கால் மற்றும் சிறு பாசனக் கால்வாய்கள் எல்லாம் இன்று சாக்கடை கால்வாய்களாக துர்நாற்றம் வீசுவதாக பெரியம்மா மகள் சொன்ன போது, இதயம் வலித்தது.
கோவிலில், பிரகாரத்தை வலம் வந்த போது, ஒரு பெண் என்னையே உற்றுப் பார்த்தபடி, எங்களுடன் வந்தாள். பின், சிறு தயக்கத்துடன், ''நீங்க கமலா தானே...'' என்றாள். ''ஆமாம்... நீங்க...'' என்றேன்.
உடனே சந்தோஷமான அப்பெண், தன் வயதையும், சூழலையும் மறந்து, உற்சாகத்தில் ஓங்கி, என் கையில் ஒரு அடி வைத்து,''டீ கமலா... நான் தான்டி தன்யா... '' என்றாள். என்னால் நம்மவே முடியவில்லை. நெடுநெடுவென்ற உயரத்தில், ஒடிந்து விழுவது போல் இருக்கும் அவளா இவள்... பருத்து, உருண்டு, திரண்டு, 'கிங்காங்' போல் இருந்தாள். உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை, அவளின் பணச் செழுமை தெரிந்தது.
ஒரு நிமிடம் அடையாளம் புரியாமல் விழித்தவள், பின், சந்தோஷத்தில், ''ஏய்... தன்யா...'' என்று கூவி, கட்டிப்பிடித்தேன்.
சில நிமிடங்களுக்கு பின், ''டீ கமலா... பாத்து எவ்வளவு வருஷமாச்சு; எப்படி இருக்கே... எத்தனை குழந்தைகள்... இப்ப எங்க இருக்கே... உன் வீட்டுக்காரர் என்ன செய்றார்,'' என்று கேள்விகளை அடுக்கினாள்.
அவள் கேள்விகளுக்கு பதில் சொல்லி, சிறிது நேரம், பழங்கதைகளை பேசி முடித்ததும், ''டீ... எங்க வீட்டுக்கு நீ கண்டிப்பா வரணும்,'' என்றாள்.
''இன்னொரு நாள் வர்றேன்டி... உன் போன் நம்பரக் குடு,'' என்றேன்.
''அந்தப் பேச்சே கூடாது; கார்ல தான் வந்துருக்கேன்; நீ எங்க வீட்டுக்கு வா... உங்க ரெண்டு பேரையும், என் கார் டிரைவர் திரும்பக் கொண்டு வந்து வீட்டுல விட்டுடுவார்,'' என்று அன்பு தொல்லை செய்தாள்.
''அவங்க தான் அவ்வளவு சொல்றாங்கள்ல... வா போயிட்டு வந்துருவோம்,'' என்றாள், பெரியம்மா மகள்.
அவள் வீடு, தாத்தப்பன் குளம் என்ற இடத்தில் இருந்தது. நாங்கள் சென்ற நேரம் வீட்டில், அவளது மாமனாரின், 90 வயதைத் தாண்டிய அம்மா மட்டும் இருந்தார்.
கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதாகவும், பிள்ளைகள் பள்ளிக்கும், மாமனார், மாமியார் உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்றிருப்பதாகவும் கூறினாள்.
பால்ய சிநேகிதிகள் சந்தித்துக் கொண்டால், பேசுவதற்கு விஷயமா இருக்காது... பேச்சு நீண்டு கொண்டே போக, ஹாலில், வெற்றிலையை உரலில் இடித்தபடி அமர்ந்திருந்த அவளது மாமனாரின் அம்மாவான அந்த பாட்டி, ''வந்த பிள்ளைகளுக்கு சாப்பிட ஏதும் குடுக்காம, என்னத்த பேசிகிட்டே இருக்கே,'' என்றார்.
அவள், ''இதோ பாட்டி...'' என்று எழுந்து, சமையல்கட்டிற்கு போக, டீபாயில் இருந்த, மாத பத்திரிகையில் மூழ்கினாள், பெரியம்மா மகள்.
இருக்கையில் இருந்து எழுந்து, சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். எல்லாம் கறுப்பு, வெள்ளை படங்கள்... ரவிவர்மா ஓவியம் போல் கொள்ளை அழகுடன் இருந்தாள், ஒரு இளம் பெண்.
சிறிது நேரம் அதையே ரசித்துப் பார்த்தவள், காபி கொண்டு வந்த தன்யாவிடம், ''யாருடி இவங்க... எவ்வளவு அழகு,'' என்றேன், ரசனையுடன்!
''அது எங்க பாட்டி தாண்டி,'' என்றதும், ஆச்சரியத்துடன் பாட்டியை திரும்பிப் பார்த்தேன். 'அந்த அழகா, இப்படி உருமாறிப் போனது... காலம், மனிதர்களை எப்படி உருக்குலைத்து விடுகிறது...' என நினைத்து, ''வயசுல எவ்வளவு அழகாக இருக்கீங்க பாட்டி,'' என்றேன்.
தன் பொக்கை வாயை திறந்து, 'பொக் பொக்' என சிரித்த பாட்டி, ''இப்பவும் நான் அழகுதேன்,'' என்றார்.
அச்சமயம், போஸ்ட்மேன், தன்யாவிடம் ஒரு தபாலை கொடுத்து விட்டுப் போனார். யாரிடமிருந்து வந்துள்ளது என்று பார்த்தவள், ''இங்க பாருடி... தாத்தப்பன் குளம்ன்னு எழுதுறதுக்கு பதிலா, தத்தப்பன் குளம்ன்னு எழுதியிருக்கான்,'' என்று கூறி, ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து வந்திருந்த அந்த கடிதத்தை என்னிடம் காட்டி, சிரித்தாள்.
பதிலுக்கு சிரித்தபடி, தன்யாவின் பாட்டியிடம், ''ஏன் பாட்டி, இந்த பகுதிக்கு தாத்தப்பன் குளம்ன்னு பேர் வந்துச்சு?'' என்று கேட்டேன்.
''அந்தக் காலத்துல இது பெரிய குளமா இருந்துச்சு தாயி... தாத்தப்பன்ங்கிறது, இந்தக் குளக்கரையில இருந்த காவக்கார சாமி. ரொம்ப துடியானது. அவர கும்பிட்டுட்டு தைரியமாக தனியா காட்டுக்கு போகலாம்; ஆளு கூட வர்றது மாதிரியே நமக்கு துணையா வருவாரு. அப்பேர்பட்ட சாமிய, அந்தப் பக்கம் குடியேறிய சிலர், 'இதெல்லாம் ஒரு சாமியா... கல்லப் போயி சாமின்னு கும்பிடுறானுங்க'ன்னு, ஏளனம் பேசி, அங்க போயி சிலைய சுத்தி அசிங்கம் செய்றதுன்னு அட்டூழியம் செய்திருக்காங்க.
''எல்லா மதத்துலயும் சில கெட்டவங்க இருக்கிறது மாதிரி, தர்ம, ஞாயம் தெரிஞ்ச நல்லவங்களும் இருக்கத் தானே செய்வாங்க... அப்படிப்பட்ட சிலர், 'டேய்... இப்படி அழிச்சாட்டியம் செய்யாதீங்க... நம்ம சாமிய அவங்க குத்தம் குறை சொல்லி, நாம கும்பிடுற இடத்தை இப்படி அசிங்கப்படுத்தினா நாம பொறுத்துக்குவோமா... இப்படியெல்லாம் செய்யாதீங்கடா'ன்னு புத்திமதி சொல்லியிருக்காங்க. அவனுங்க கேட்கல; அவங்களும் சொல்லிச் சொல்லி பாத்துட்டு, 'நீங்க செய்ற பாவத்துக்கு ஒரு நாள் தண்டனை அனுபவிப்பிங்கடா'ன்னு விட்டுட்டாங்களாம்.
''நாளுக்கு நாள் இவனுங்களோட அக்கிரமம் அதிகரிக்க, தாத்தப்பன் சாமிக்கு பொறுக்க முடியல. இப்பவும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... அப்ப, நான் சின்னப்புள்ள... ஒரு வாரமா மழை விடாம கொட்டுது; வெளியே தலை காட்ட முடியல. எல்லாரும் வீட்டுக்குள்ள முடங்கி கிடக்கோம். அன்னைக்கு ராத்திரி, அந்த நல்லவங்க கனவுல, தாத்தப்பன் வந்து, 'டேய் மக்கா... என் பொறுமை எல்லை மீறிப் போச்சு; நாளைக்கு ராத்திரி, குளத்த நான் உடைச்சு, இந்தப் பகுதிய அழிக்கப் போறேன்... நீங்க உங்க குடும்பம் குட்டியுடன், வேற இடத்துக்கு போயிருங்க'ன்னு சொல்லிருச்சு.
''அவங்களும் மனசு கேட்காம, கொட்டுற மழையில ஒவ்வொரு வீடாப் போயி கதவத் தட்டி, விஷயத்த சொல்லியிருக்காங்க... 'அடப் போங்கய்யா... உங்களுக்கு வேற வேலையில்ல... தாத்தப்பன் உடைஞ்சு வர்றாராக்கும்'ன்னு ஏளனமா பேசி அனுப்பிட்டாங்க. பாவம், அவங்க என்ன செய்வாங்க... தங்களோட புள்ள, குட்டிகளோடு வேற இடத்துக்கு போயிட்டாங்க..
.
''அன்னைக்கு ராத்திரி, வானம் ஆங்காரம் எடுத்தது மாதிரி பேய் மழை பெய்தது. நடுச்சாமம்... ஊரே ஆழ்ந்த நித்திரையில இருக்கும் போது, 'டாமர்'ன்னு வேட்டு வெடிச்சது மாதிரி ஒரு சத்தம்... மழையை மீறி கேட்குது; என்ன ஏதுன்னு அறியுறதுக்கு முன், குளம் உடைஞ்சு, மக்க, மனுஷ, ஆடு, மாடு, கோழி, பண்ட பாத்திரம்ன்னு அத்தனையும் துடைச்சு எடுத்து, காற்றாத்து ஓடை வழியா பிரவாகம் எடுத்து வருதாம்...
''கோழி கூப்பிட, மழை நின்னு போச்சு. விஷயம் தெரிஞ்சு, எல்லாரும் தாத்தப்பன் குளத்துக்கு ஓடி போய் பாத்தா... கொத்துக் கொத்தா ஜனங்க மிதந்துகிட்டு கிடக்காங்க. கட்டில இறுக்கிப் பிடிச்ச மாதிரி ஒரு ஆண், பச்சக் குழந்தைய மார்போட அணைச்சபடியே ஒரு சின்ன வயசு தாய், கைகோர்த்தபடியே கணவன், மனைவின்னு, கண் கொண்டு பாக்க முடியல.
''அப்புறம், கொஞ்சம் கொஞ்சமாக குளம் அழிஞ்சு போச்சு. இப்ப, தாத்தப்பன் குளம்ங்கிற பேரத் தவிர, அந்த குளமோ, சாமியோ இருந்ததற்கான அடையாளம் கூட இல்ல. அந்தக் காலத்துல, காடு, மலைய மட்டுமில்ல, வானத்துல இருந்து பொழியிற மழைத் தண்ணியையும் சாமியா நினைச்சு, அதை கண்மாய், ஏரி, குளம்ன்னு சேகரிச்சு, கரையில சாமியையும் பிரதிஷ்டை பண்ணி, நீர்நிலைகள கட்டிக் காத்து வந்தோம். இப்ப, அத்தனையும் அழிஞ்சு, எல்லாம் கான்கிரீட் கட்டடமாப் போச்சு; குடிக்கத் தான் தண்ணி இல்ல,'' என்றாள், பாட்டி.
பாட்டியின் விசனம் என்னையும் தொற்றிக் கொண்டாலும், ஒரு இடமும், அதில் நிகழும் சம்பவமும், அதைச்சுற்றிய வாழ்க்கை தொடர்புகளும் காலத்தின் அசுர ஓட்டத்தில் எப்படியெல்லாம் மறக்கப்பட்டும், மறக்கடிக்கப்பட்டும் விடுகிறது என்பதை நினைத்து, ஆச்சரியம் அடைந்தேன்.
சிறிது நேரத்தில், தோழி மற்றும் அவள் பாட்டியிடம் விடைபெற்று கிளம்பிய போது, எதிரே இருந்த பெட்டிக் கடையில், 'தினமலர் நாளிதழ்' நகரச் செய்தி ஒட்டப்பட்டிருக்க, அதில், கொட்டை எழுத்தில், 'தாத்தப்பன் குளத்தில், கடும் குடிநீர் பஞ்சம்' என்ற செய்தி கண்ணில் பட்டது!
'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!' என்னை அறியாமல் வாய் முணுமுணுக்க, தாத்தப்பன் குளத்தை கடந்தது, எங்களை சுமந்து சென்றது கார்.
ப.லட்சுமி
No comments:
Post a Comment