Thursday 25 February 2021

MUNNAR AND TEA ESTATES

 


MUNNAR AND TEA ESTATES



கேரளா மாநிலம் மூணாறில், தேயிலை உற்பத்தி, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. அதன் ருசியும், மணமும் நிறைவாக இருக்கவே, சரக்குகளை கையாள, ஆங்கிலேயர்கள் ரயில் வசதியை ஏற்படுத்தினர். 1902ல், மூணாறில் ரயில் இயக்கம் துவங்கியது.
மூணாறில் இருந்து மேட்டுப்பட்டி, குண்டலா வழியாக தமிழகத்தின், தேனி மாவட்ட எல்லையான, 'டாப் ஸ்டேஷன்' வரையிலும், ரயில் பாதை அமைக்கப்பட்டது.
தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட இக்காலத்திலேயே, 50 கி.மீ., 'மீட்டர் கேஜ்' பாதையை, 'பிராட் கேஜ்' ஆக மாற்ற, நம் ரயில்வே துறையினர், ஒரு மாமாங்கம் எடுத்துக் கொள்கின்றனர். எந்த வசதியுமற்ற, அதுவும், 'கிடுகிடு' பள்ளத்தாக்குகள் நிறைந்த ஒரு மலையில், 115 ஆண்டுகளுக்கு முன், ரயில் பாதை அமைப்பது எவ்வளவு பெரிய காரியம்.
ஆயினும், அதை ஒரு சவாலாகவே நினைத்து, வெற்றிகரமாக, ரயில் போக்குவரத்தை துவங்கினர், ஆங்கிலேயர்கள். இதன் மூலம், மூணாறில் உற்பத்தியான தேயிலை, 'டாப் ஸ்டேஷன்' வரை, ரயிலிலும், அங்கிருந்து, 'ரோப் கார்' மூலம், போடிக்கும் எடுத்து செல்லப்பட்டது.
பின், சாலை மார்க்கமாக, துாத்துக்குடி சென்று, துறைமுகம் வழியாக, பிரிட்டன் சென்றது. இவ்வாறு, மூணாறில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை, உலக அளவில் பிரசித்தி பெற்றது. அடுத்த வளர்ச்சியாக, 1907ல், தொலைபேசி வசதியையும், மூணாறில் ஏற்படுத்தினர், ஆங்கிலேயர்கள்.
இப்படி, 'எல்லாம் சுகமே' என்ற ஒரு சூழலில், மூணாறையும், வரலாற்றையும் ஒரு சேர புரட்டி போட்டது, ஒரு பேய் மழை. ஏறக்குறைய, 95 ஆண்டுகளுக்கு முன், 1924, ஜூலை, 6 முதல் 25ம் தேதி வரை, கேரளா முழுவதும் விடாது கனமழை பெய்தது.
மூணாறில் மட்டும், ஒன்பது நாட்களில், 485 செ.மீ., மழை பெய்து, பேரழிவை ஏற்படுத்தியதாக, ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
காட்டாற்று வெள்ளத்தில், மூணாறு நகரே, நீருக்குள் மூழ்கியது. தண்டவாளங்கள், பாலங்கள், 'ரோப் வே' மற்றும் தொலைபேசி கம்பங்கள் மற்றும் சாலைகள் என, அனைத்தும், பெரும் சேதமடைந்தன.
கனமழைக்கு நுாற்றுக்கணக்கானோர் இறந்தனர். வீடுகளும், கால்நடைகளும் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ள நீர் வற்றவே, இரண்டு வாரங்கள் ஆனது.
பின், கட்டடங்கள், சாலைகள் உள்ளிட்ட வசதிகளுடன், புதிய மூணாறு உருவாக்கப்பட்ட போதிலும், ரயில் சேவை, 'ரோப் வே' போன்றவை மட்டும், சீரமைக்க முடியாத அளவுக்கு சிதைந்து விட்டன. இதனால், அதை மீட்டெடுக்கும் முயற்சிகளை கைவிட்டனர், ஆங்கிலேயர்கள்.
அதன் பின், காலப்போக்கில், தமிழர்களின் அயராத உழைப்பால், மூணாறு, மீண்டு எழுந்தது. தற்போதுள்ள மூணாறு, தேர்ந்த ஓவியரின் சித்திரம் போல, சீராக செதுக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களும், சிரம் வருடும் முகில்களும், கண் கொள்ளா கவிதையாக காட்சி தருகிறது.
தேயிலை உற்பத்தியே அன்றும், இன்றும், என்றும், மூணாறின் பிரதான தொழில். பெரும்பாலான தேயிலை தோட்டங்கள், 'டாடா' நிறுவனத்திடமும், சில தனியார் வசமும் உள்ளன. மலை சரிவுகளில் சீராக கத்தரிக்கப்பட்ட செடிகள், பாத்தி, பாத்தியாக பிரிக்கப்பட்டிருந்தன.
செடியின் கொழுந்துகளை பறித்து, முரட்டு இலைகளை அவ்வப்போது கத்தரித்து விடுகின்றனர். தோட்டங்களில், இடையிடையே, 'ஓக்' மரங்களை நட்டு வைத்துள்ளனர். 'இம்மரத்தின் வேர்கள், நிலச்சரிவை தடுக்கும் என்பதால், இந்த ஏற்பாடு...' என்றார், செபின்.
தேவிகுளம் சட்டசபை தொகுதியில் உள்ள மூணாறு, முழுக்க, முழுக்க தமிழர்களின் ஆதிக்கத்திலேயே இருக்கிறது. 'இத்தொகுதியின், எம்.எல்.ஏ.,வாக இருந்ததும், இருப்பதும், பல தலைமுறைகளுக்கு முன், இங்கு குடியேறிய தமிழர்களே...' என, தெரிவித்தார், வழிகாட்டி செபின்.
மூணாறில், தொழிலாளர்கள், வணிகர்கள், தெருவோர வியாபாரிகள் என, அனைவருமே தமிழர்கள் தான். மலையாளிகள் மிகவும் சொற்பமே. அதே போல, அரசு அலுவலகங்கள், வனத்துறையிலும், தமிழர்களே பெருமளவு பணிபுரிகின்றனர். பெரும்பாலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களாகவே, இவர்கள் உள்ளனர்.
மூணாறில் இருந்து, 15 கி.மீ., துாரத்திலும், கடல் மட்டத்தில் இருந்து, 6,000 அடி உயரத்திலும் உள்ளது, இரவிகுளம் தேசிய பூங்கா. மூணாறில் இருந்து உடுமலை செல்லும் சாலையில், பெரியவரை பாலத்தை கடந்தே இங்கு செல்ல வேண்டும்.
கடந்த, 1924ல், ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பாலம், ஆக., 14, 2018ல், பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் உடைந்தது. இதனால், கான்கிரீட் குழாய்களை பயன்படுத்தி, தற்காலிக பாலம் அமைத்துள்ளனர்.

No comments:

Post a Comment