Tuesday, 9 February 2021

HOW DEVADASI DANCE BECOME BHARATHA NATYA THRO` CENTURIES

 

HOW DEVADASI DANCE BECOME 

BHARATHA NATYA THRO` CENTURIES


தமிழர் கலாசாரத்தின் தேவதாசி சதிர் நடனம், 

பரதநாட்டியமாக மாறியது எப்படி? 

#தமிழர்_பெருமை

அபர்ணா ராமமூர்த்தி

பிபிசி தமிழ்

6 செப்டெம்பர் 2020


சோழ சேர பாண்டிய காலத்தில் இருந்தே கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் எந்தளவிற்கு உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டது என்பதை பல வரலாற்று நூல்கள் நமக்கு கூறுகின்றன.பட மூலாதாரம்,ADOC-PHOTOS / GETTY

படக்குறிப்பு,

சோழ சேர பாண்டிய காலத்தில் இருந்தே கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் எந்தளவிற்கு உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டது என்பதை பல வரலாற்று நூல்கள் நமக்கு கூறுகின்றன.


(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் 12வது கட்டுரை.)


தேவதாசிகள். இந்த சொல்லின் அர்த்தம் இன்று வேறாக இருக்கலாம். ஆனால், இன்று தமிழகத்தின் பாரம்பரிய நடனமாக விளங்கும் பரதக் கலைக்கு அவர்கள்தான் முன்னோடிகள்.


தமிழ்நாட்டின் பெருமைமிக்க கலாசாரமாக அறியப்படும் பரதநாட்டியத்தை, இந்தியாவில் மட்டுமல்லாது, பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் கற்றுக்கொள்ள விரும்புகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் பலர் இந்த நடனத்தை கற்றுக் கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


பரதத்தில் அசத்தும் பல்கேரிய பெண்மணி: இந்திய நடனங்களுக்காக உலகளவில் பிரசாரம்

அந்தளவிற்கு தமிழகத்தின் முகமாக இருக்கும் பரதநாட்டியத்தின் தொடக்க வடிவமான சதிர் நடனம் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.


சோழ சேர பாண்டிய காலத்தில் இருந்தே கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் எந்தளவிற்கு உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டது என்பதை பல வரலாற்று நூல்கள் நமக்கு கூறுகின்றன.


சதிர் நடனம், அதன் வரலாறு, இந்த கலை, பரதநாட்டியமாக மாறியது எப்படி என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.


தேவதாசிகளின் சதிர் நடனம்

தேவ என்றால் 'கடவுள்'. தாசி என்பதற்கு அர்த்தம் 'சேவகர்'. இறைவனுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் தேவதாசிகள்.


தேவரடியார்கள் என்றும் அழைக்கப்படும் இவர்கள், ஆடல், பாடல் என பல கலைகளில் வித்தகர்களாக இருந்தார்கள். இறைவனை திருமணம் செய்து கொள்ளும் இவர்களின் பணி, இறைவனுக்காக மட்டுமே இருக்கும்.



தேவதாசிகளின் சதிர் நடனம்

பட மூலாதாரம்,CHRISTOPHER PILLITZ /GETTY

இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் சாகித்யா, சங்கீத, சாஷ்திரா ஆகிய மூன்றையுமே கற்றுத் தேர்ந்தவர்களாக இருந்தனர் என்றும் அவர்களின் சதிர் நடனம் என்பது கடவுள் வழிபாட்டின் ஒரு வடிவமாக இருந்தது என்கிறார் நாட்டிய வரலாற்றாய்வாளர் ஆஷிஷ் மோகன் கோகர்.


சதிர் நடனம் குறித்தும், அது பிற்காலத்தில் பரதநாட்டியமாக எவ்வாறு வடிவம் பெற்றது என்பது குறித்தும் பல ஆராய்ச்சிகளை இவர் மேற்கொண்டிருக்கிறார்.


கடந்த நூற்றாண்டில்தான் சதிர் நடனம், பரதநாட்டியமாக உறுபெற்றது என்று அவர் கூறுகிறார்.


தமிழ் வரலாற்றில் நாட்டியம்

தமிழில் நடனக்கலையை நாட்டியம், கூத்து, ஆடல், நர்த்தனம் என்று பல வகைகளாக அழைத்து வந்துள்ளனர்.


சங்கம் மருவிய காலத்திலேயே பரதநாட்டிய முறை இருந்தது என்பதை சிலப்பதிகாரம் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.


இந்நூலில் இந்நாட்டிய முறை குறித்த கருத்துகள் மிகுதியாக காணப்படுகின்றன.


தேவதாசி மரபு கொண்ட சித்தராபதியின் மகளான மாதவி, தனது 5 வயதிலேயே நாட்டியம் கற்க தொடங்கி, பின்னர் 12 வயதில் தலைசிறந்த நடனக்கலைஞராக, காவேரி பூம்பட்டினத்தில் நடந்த இந்திர திருவிழாவில் மன்னர் முன் நடனமாடினார். மனம் மகிழ்ந்து போன சோழ மன்னன் மாதவிக்கு 1008 பொற்காசுகளையும், தலைகோல் பட்டத்தை வழங்கி கௌரவித்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.


உயர்ந்த நிலையில் இருந்த சதிர் நடனக் கலைஞர்கள்

கடவுளுக்கு மட்டுமே சேவை செய்ய தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தேவதாசிகளுக்கு சோழர் காலத்தில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் தரப்பட்டதாக கூறுகிறார் வரலாற்றாய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.



உயர்ந்த நிலையில் இருந்த சதிர் நடனக் கலைஞர்கள்

பட மூலாதாரம்,INDIAPICTURES

"கோவிலில் பணிபுரிந்த இவர்கள் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தார்கள். பல கோயில்களுக்கு தானம் செய்திருக்கிறார்கள். எந்த விதத்திலும் அவர்கள் தாழ்வாக நடத்தப்படவில்லை. சோழர் காலத்தில் எந்த சதிர் நடனக்கலைஞரும் மன்னரின் அரண்மனையிலோ, அந்தப்புரத்திலோ ஆடியதாக வரலாற்றில் இல்லை. கவின் கலைகள் அனைத்தும் கோயில்களில் மட்டுமே அரங்கேற்றப்பட்டன. அவர்களுக்கு தலைமை கடவுள் மட்டுமே" என்று அவர் கூறுகிறார்.


"உதாரணமாக தஞ்சை பெரிய கோயில். 400க்கும் மேற்பட்ட தேவதாசிகள் அங்கு இருந்தார்கள். தேவாரம் பாடுபவர்கள் 50 பேர், 200க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் இருந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் கோயில் கஜானாவில் இருந்துதான் ஊதியம் வழங்கப்படும். ஆனால், கோயில் நிர்வாகத்தில் பணிபுரிபவர்களுக்கு அரச கஜானாவில் இருந்து ஊதியம் வழங்கப்படும். அரச கஜானாவில் இருந்து தேவரடியார்களுக்கு நிதி சென்றால், அது மன்னருக்கு அடிமை என்ற பொருள் ஆகிவிடும் என்பதால், அவர்களுக்கு கோயில் கஜானாவில் இருந்து வழங்கப்பட்டது. அதாவது அவர்கள் கடவுளுக்கு மட்டுமே அடிமை என்று அர்த்தம். இவை அனைத்தும் கல்வெட்டுகளில் இருக்கிறது."


10ஆம் நூற்றாண்டின் இறுதியில், பல தேவதாசிகளும் செல்வந்தர்களாக இருந்ததற்கான சான்று இருப்பதாக நாட்டிய வரலாற்றாய்வாளர் ஆஷிஷ் மோகன் எழுதியிருக்கிறார்.


முக்கியமாக 9 மற்றும் 12ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையேயான சோழர் காலத்தில் அவர்கள் செல்வ செழிப்பாக இருந்துள்ளனர்.


மன்னர்கள் சிலர் தேவதாசிகளின் நடனத்தால் ஈர்க்கப்பட்டு, கிராமங்களுக்கு அவர்களின் பெயரை சூட்டியிருக்கிறார்கள் என்று எழுதியுள்ள ஆஷிஷ், செல்வம் மிகுந்து இருந்த தேவதாசிகள் கோயில் சேவைகளுக்காக தங்க நகைகள், விலக்குகள், தட்டுகள், எல்லாம் வழங்கியது உண்டு என்கிறார்.


ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியா மற்றும் கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன்

கரிகாலன் கட்டிய கல்லணை: தமிழர்களின் நீர் மேலாண்மை குறித்து நீங்கள் அறிவீர்களா?

தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன? #தமிழர்_பெருமை

"நாயக்க மன்னர்கள் காலத்தில் அவர்கள் ஆடல் மகளிராக மட்டுமில்லை. இன்று எப்படி ராஜீய ரீதியான அதிகாரிகள் நிலை இருக்கிறதோ, அதற்கு நிகரான இடத்தில் இருந்தவர்கள் தேவதாசிகள். அவர்களில் கலை கேளிக்கைக்கானது கிடையாது," என்கிறார் நாட்டியக் கலைஞரும், நாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஸ்வர்ணமால்யா.


சோழ, பாண்டிய காலம் முடிந்து 14 - 15ஆம் நூற்றாண்டில் வடக்கில் இருந்து முஸ்லிம் படை தமிழகத்திற்கு வந்தபோது இந்த நிலை மாறியது என்று குறிப்பிடும் குடவாயில் சுப்பிரமணியம், அவர்கள் கோயில்கள் மற்றும் அவற்றின் வளங்களை சூறையாடியதோடு, இந்த நடனக்கலைஞர்களை போகப்பொருளாக பயன்படுத்தினார்கள் என்கிறார். அதைத் தொடர்ந்து வந்த விஜயநகர பேரரசும், இவர்களை சரியாக நடத்தவில்லை என்பதால் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், கோயில்களில் நடனம் ஆடுவதற்கு தடை விதிக்கப்பட்டது என்று தெரிவிக்கிறார்.


ஆதரவை இழந்த சதிர் நடனக் கலைஞர்கள்

சதிர் நடனம் என்பது பரதநாட்டியமாக மாறியது குறித்து நாட்டிய வரலாற்றாய்வாளர் ஆஷின் மோகன் கூறுகையில், "தேவதாசிகளின் நடனம் என்பது கேளிக்கை அல்லது பொழுதுபோக்கிற்காக இருக்கவில்லை. அவர்களின் நடனம் இறை வழிபாட்டின் ஒருமுறை. கலை, இசை, நடனம் எல்லாம் கோயில்களுக்கானது.


பண்டைய காலத்தில் ஒரு கிராம பொருளாதாரத்தில் முக்கிய பங்கு கோயில்களுக்கு உண்டு. மக்கள் அதிகம் கூடும் இடமாகவும் அது இருந்தது. அங்கு தேவதாசிகள் நடனம் ஆடுவதை பக்தர்கள் பார்ப்பார்கள். அவர்களுக்கு சம்ஸ்கிருதம், கீர்த்தனை எதுவும் தெரியாது என்றாலும் அவர்கள் அதனை கண்டு களிப்பார்கள்.


கோயில் சமூகத்தில் முக்கிய பங்கு வகித்தது.


பின்னர் 1880களில் பிரிட்டிஷ் காலத்தில் கோயில்களில் நடனம் ஆடும் வழக்கத்திற்கு தடை விதித்தார்கள். அவர்களின் ஆட்சியில் மன்னர்கள், ஜமீன்தார்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். அதன் விளைவாக கோயில்களும், வளங்களும் பாதிக்கப்பட்டன. அதனால் கோயிலுக்கு சொந்தமான தேவதாசிகளும் நேரடியாக பாதிக்கப்பட்டனர். பிரிட்டிஷ் படையால் கிராம பொருளாதாரம் அடிபட கோயில்களிலேயே இருந்து வணங்கி சேவை செய்து கொண்டிருந்தவர்கள், இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்."



ஆதரவை இழந்த சதிர் நடனக் கலைஞர்கள்

பட மூலாதாரம்,ARCHIVE PHOTOS / GETTY

ஆனால், வடக்கில் இருந்த முஸ்லிம், முகலாய மற்றும் பாரசீக படையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறும் ஆஷீஷ் மோகன், பிரிட்டிஷ் விதித்த தடையே 18,19ஆம் நூற்றாண்டுகளில் தேவதாசிகள் சிதறிப்போக காரணமாக அமைந்ததாக கூறுகிறார்.


"18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, வளங்கள் பொருளாதாரம் சிதைந்து போக, மன்னர்களின் ஆதரவும் இல்லை. அதனால் சிறு கோயில்களால் தேவதாசிகளுக்கு ஆதரவளிக்க முடியாமல் போனது. இதனால் அவர்களின் கலையும் பாதிப்புக்குள்ளானது. இந்த காரணத்தால் வேறு தொழில் தேடி அவர்கள் பயணிக்க ஆரம்பித்தனர்."


ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்ட தேவதாசிகள் பலர், பிழைப்பு தேடி மெட்ராஸ், மைசூர் போன்ற பெரும் மாகாணங்களுக்கு செல்லத் தொடங்கினர்.


தேவதாசி முறை ஒழிப்பு

நெருக்கடி காரணத்தினால் தேவதாசிகள் அப்போதைய மெட்ராசில் விலைமாதர்களாக ஆனார்கள், இல்லை அந்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றன.


இந்நிலையில், தேவதாசிகள் முறை என்பது பெண்களை முன்னிலைப்படுத்துவது என்பதால், இந்த ஆணாதிக்க சமூகத்தில் அவர்களின் நடத்தை கேள்விக்குறியாகவே இருந்தது என்று கூறுகிறார் ஸ்வர்ணமால்யா.


இப்படி இருக்கும்போது 1882ல் கோயில்களில் நடனம் ஆடுவதற்கு தடை செய்ய வேண்டும் என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. இந்துக் கோயில்களில், பெண்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் முறைக்கு தடை விதிக்க அறிவுறுத்தப்பட்டது. கல்வி மற்றும் கலாசாரத்தை நிர்வாகத்தில் இருந்து தனியே பிரிக்க வேண்டும் என்பது பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்தது என்கிறார் ஆஷிஷ் கோக்கர்.


பின்னர் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல சமூக சீர்த்திருத்தவாதிகள், தேவதாசி முறைக்கு எதிராக குரல் கொடுத்தனர். பெண்கள் கோயில்களுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவும், கோயில்களில் நடனம் போன்ற கலைகளை வெளிப்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் என்பதற்கான சட்ட மசோதா முன்மொழியப்பட்டது.


தேவதாசி முறையை ஒழிக்கப் போராடிய முத்துலட்சுமி ரெட்டி குறித்து தெரியுமா?

முத்துலட்சுமி ரெட்டி (கண்ணாடி அணிந்திருப்பவர்)


பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

முத்துலட்சுமி ரெட்டி (கண்ணாடி அணிந்திருப்பவர்)


இதற்கு சில இந்துக்களும் தேவதாசி சமூகத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


அதனால் தற்காலிகமாக எந்த முன்னேற்றமும் காணாத இந்த மசோதாவை 1928ல் மெட்ராஸ் மாகாணத்தின் முதல் பெண் எம்எல்ஏவான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.


தனது தாய் தேவதாசி முறையால் பாதிக்கப்பட்டதே, இந்த சட்டத்தை கொண்டுவர முத்துலட்சுமிக்கு உந்துதலாக இருந்ததாக கூறப்படுகிறது.


1947ஆம் ஆண்டு தேவதாசி ஒழிப்பு சட்டம் மெட்ராஸில் கொண்டுவரப்பட்டது.


"கோயில்கள், மத இடங்கள், இந்து கடவுள்களுக்கு முன், கோவில் திருவிழாக்களில் பெண்கள் நடனமாவது சட்டவிரோதம் என அறிவிக்கப்படுகிறது" என்றது அச்சட்டம்.


"இதை மீறுபவர்களுக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். இதையும் மீறி நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி செய்யும் பெண், பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை தேர்ந்தெடுத்ததாக எண்ணப்படும்."


இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சுமார் 35,000 கோயில்களில், பெண் நாட்டிய கலைஞர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.


பரதநாட்டியமான சதிர் நடனம்

தேவதாசிகள் முறை ஒழிய, நடனக் கலையை காக்க வேண்டும் என்று சில படிப்பறிவு மிக்க புத்திஜீவிகள் முடிவு செய்தனர்.


இந்தியாவின் பாரம்பரிய கலைகள், அறிவியல், தத்துவங்கள் ஆகியவற்றை காக்க முடிவு செய்த அடையாறில் உள்ள தியோசபிகல் சொசைட்டியும் இதில் முக்கிய பங்கு வகித்தது.


ருக்மினி தேவி அருண்டேல் மற்றும் இ. கிருஷ்ண ஐயர் ஆகியோரை குறிப்பிடாமல் பரதநாட்டியம் என்ற ஒரு கலை இன்று இருந்திருக்காது.



ருக்மினி தேவி அருண்டேல்

பட மூலாதாரம்,THE INDIA TODAY GROUP

படக்குறிப்பு,

ருக்மினி தேவி அருண்டேல்


கடவுள்களுக்கு முன்பு ஆடப்பட்ட நடனக்கலையை இன்று இருக்கும் பரதநாட்டியமாக மாற்றி அமைத்தவர் ருக்மினி தேவி அருண்டேல்.


இதனை மக்களுக்கான கலையாகவும், பொது இடத்தில் ஆடுவதற்கு ஏற்பவும், மாற்ற பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.


தேவதாசி சமூகத்தை சேர்ந்த தஞ்சாவூர் பாலசரஸ்வதி போன்றோரும், இதனை பொதுமக்கள் முன்பு ஆடும் கலையாக்க வேண்டும் என்ற முயற்சிகள் எடுக்க, இதுபோன்ற கலைகளை வளர்க்க ருக்மினி, சென்னையில் கலாக்ஷேத்திரா என்ற நடன பள்ளியை தொடங்கினார்.


முத்துலட்சுமியின் தேவதாசி ஒழிப்பு முறையை கடுமையான எதிர்த்த இ. கிருஷ்ண ஐயர், நடனக்கலைக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தனார்.


1932ஆம் ஆண்டு மெட்ராஸ் மியூசிக் அகாடமியை தொடங்கிய அவர், இந்த சதிர் நடனத்தை பரதநாட்டியம் என்று பெயர் மாற்ற வேண்டும் என முன்மொழிந்தார்.



இந்த கலையின் பெருமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும் தேவதாசிகள் என்ற சொல் மரியாதை இழக்க, அதில் இருந்து இக்கலையை மீட்க வேண்டும் என்றும் அவர் நினைத்தார்.


1932ஆம் ஆண்டு மெட்ராஸ் மியூசிக் அகாடமியை தொடங்கினார் கிருஷ்ண ஐயர்

பட மூலாதாரம்,THE INDIA TODAY GROUP

படக்குறிப்பு,

1932ஆம் ஆண்டு மெட்ராஸ் மியூசிக் அகாடமியை தொடங்கினார் கிருஷ்ண ஐயர்


இந்நிலையில், இதற்கான ஆடை, அலங்காரங்கள், அணிகலன்கள், மேடைகள் போன்றவற்றை உட்புகுத்தி பக்தியை பிரதானமாக வைத்து, அரங்கேற்றம் செய்தார் ருக்மினி. கதையோடு நடனம் என்ற அம்சத்தையும் அவர் கொண்டு வந்தார்.


இந்த இருவராலுமே, சதிர் நடனக்கலை, பரதநாட்டியமாக மாறி பெரும் வளர்ச்சியை பெற்றது.


ஆனால், 16-17ஆம் நூற்றாண்டுகளிலேயே சதிர் நடனம் எல்லா தரப்பு மக்களுக்காகவும், எல்லா கலையையும் உள்வாங்கிய பரவலான கலையாக இருந்தது தனது ஆய்வில் தெரிய வந்ததாக ஸ்வர்ணமால்யா கூறுகிறார். அந்தக் கலையின் எச்சம்தான் பரதநாட்டியம் என்கிறார் அவர்.


ஸ்வர்ணமால்யா, விராலிமலை முத்துக்கண்ணம்மாள் என்ற தேவதாசி மரபு பெண்ணிடம் தான் சதிர் நடனத்தை கற்றுக் கொண்டதாக கூறுகிறார். அவரது மாணவர்களுக்கும் இந்த நாட்டியத்தை சதிர் நடனமாகவே கற்றுக்கொடுப்பதாக அவர் தெரிவிக்கிறார்.


''அரசாங்கம் தேவரடியார் முறையை ஒழித்துவிட்டது. ஆனால் பரம்பரை பரம்பரையாக கோயில் சேவகம் செய்த எங்களின் நலனில் அக்கறை காட்டாமல் போய்விட்டார்கள். கோயில் சடங்குகளில் இருந்த முக்கியத்துவமும் குறைந்துவிட்டதால், சமூக அந்தஸ்தும் இல்லாமல், வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டோம்'' என முத்துக்கண்ணம்மாள் பிபிசி தமிழிடம் அளித்த பேட்டியில் ஒரு முறை தெரிவித்திருந்தார்.


நவீன கால பரத நாட்டியத்திற்கும், சதிர் நடனத்திற்கும் இருக்கும் வித்தியாசங்களைப் பற்றி பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் பேசிய அவர், ''சதிர் நடனத்தில் நாங்கள் பாடிக்கொண்டே ஆடுவோம். நம் நடனத்திற்கு ஏற்றவாறு நாமே பாடவேண்டும் என்பது அடிப்படை பயிற்சி. ஒரு பாடலை புரிந்துகொண்டு ஆடுவது என்பதைத் தாண்டி, அந்த பாடலே நாமாக மாறிக்கொண்டு, முகபாவங்களைக் கொண்டும், உடல் அசைவுகளைக் கொண்டும் இயல்பாக நாங்கள் ஆடுவோம். பாடிக்கொண்டே ஆடுவது என்பது சதிர் நடனத்தின் முக்கிய அங்கம். சதிர் நடனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பரதநாட்டியத்தில் நட்டுவனார் என்ற கலைஞர் பாட, நடனம் ஆடுபவர், முத்திரையுடன் ஆடுவது என்ற விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது,'' என்று விளக்கினார்.


இன்று உலகில் அதிகளவில் கற்றுக் கொள்ளப்படும் தனிக்கலையாக பரதநாட்டியம் இருக்கிறது என்கிறார் ஆஷிக்ஷ் ஷோகர்.


சதிர் நடனத்தில் இருந்து உருவெடுத்தாலும், இன்று பரதநாட்டியம் என்றே உலகளவில் இந்த நடனக் கலை அறியப்படுகிறது. தமிழரின் பாரம்பரிய கலைப் பெருமையின் முகமாகவும் இது இருக்கிறது.



காணொளிக் குறிப்பு,

இந்திய பாரம்பரிய நடனங்களை உலகளவில் பரப்பும் வெளிநாட்டு பெண்மணி

No comments:

Post a Comment