HISTORY OF TAMIL CINEMA
இந்திய சினிமாவின் தொடக்க வரலாறு
சினிமா கண்டுபிடிக்கப்பட்ட உடன் அந்த சில நிமிட திரைப்படம் உலகமெங்கும் வலம் வந்தது. பல இடங்களில் திரையிடப்பட்டு மக்களை மாயாலோகத்தில் ஆழ்த்தியது. அப்படிப்பட்ட திரைப்படம் சென்னைக்கும் வந்தது. சென்னைவாசிகளுக்கு சினிமா என்ற பிரமாண்டம், மிகச் சிறிய அளவில் சுவரில் போட்டுக்காட்டப்பட்டது. 1897-ல் எம்.எட்வர்ட்ஸ் என்ற வெள்ளைக்காரர், ரிப்பன் பில்டிங்கிற்கு அருகில் தற்போது இருக்கும் ‘விக்டோரியா மாளிகையில்’ திரையிட்டு காட்டினார். மக்கள் வரிசையில் நின்று அதை கண்டு ரசித்தனர்.
இரண்டு படங்களுமே சில நிமிடங்கள் ஓடக்கூடியவை. ஒன்று ஒரு தொழிற்சாலையில் வேலை முடிந்த தொழிலாளர் கள் கூட்டமாக வெளியே வரும் காட்சி. இந்த படத்திற்கு ‘லீவிங் த பேக்டரி’ என்று பெயர். இதுதான் உலகில் முதன் முதலாக எடுக்கப்பட்ட படம். அதற்கடுத்து திரையிடப்பட்டது ‘த அரைவல் ஆப் த டிரெயின்’ இது வேகமாக வரும் ஒரு ரெயிலை படம் பிடித்திருப்பார்கள். இந்த ரெயிலை பார்த்து பயந்து போய் எழுந்து ஓடியவர்கள், அன்றைய காலகட்டத்தில் ஏராளம். திரையில் வரும் ரெயில் நம் மீது மோதிவிடும் என்று பயந்தார்கள். அது படம் தான் என்பதையே அன்றைக்கு நம்ப மறுத்தார்கள். இவ்வாறு சினிமாவிற்கு இருக்கும் வரவேற்பை பார்த்து, இதுபோன்று ஏராளமான படங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றைப் பார்ப்பதற்கு ஒன்றரை பைசா கட்டணம். மக்கள் பெரும் ஆர்வத்துடன் திரண்டார்கள்.
பயாஸ்கோப் என்ற படம் காட்டும் கருவி அன்று புகழ் பெற்று விளங்கியது. வெறும் மேக்னிசியத்தை வைத்து மின்சாரம் இன்றி, லைசென்ஸ் இன்றி குறைந்த செலவில் வீதி வீதியாக இதைக் காட்டினார்கள். “பாரு பாரு பயாஸ்கோப்பு படத்தப்பாரு..” என்ற பாட்டையும் வைத்திருந்தார்கள்.
1900-ம் ஆண்டு மக்களின் பேரார்வத்தை பார்த்து சென்னையில் வாரிக் மேஜர் என்பவர் ஒரு நிரந்தர சினிமா தியேட்டர் கட்டினார். அதற்கு “எலக்ட்ரிக் தியேட்டர்” என்று பெயரிட்டார். அண்ணா சாலையில் இன்றைய தலைமை தபால் அலுவலகம் இருக்கும் இடத்தில்தான் அன்றைக்கு எலக்ட்ரிக் தியேட்டர் இருந்தது. கோஹன் என்பவர் “லிரிக் தியேட்டர்” என்ற ஒரு தியேட்டரை அண்ணா சாலையில் நிறுவினார். சில நாட்களிலேயே அந்த தியேட்டர் தீயில் எரிந்து சாம்பலானது. அதன் பின்பு அதே இடத்தில் கட்டப்பட்ட தியேட்டர் ‘எல்பின்ஸ்டன்’. இப்படியாகத்தான் சென்னையில் சினிமா வரலாறு தொடங்கியது.
No comments:
Post a Comment