Monday 2 October 2017

RUDOLPH VALENDINO, MGR, RAJESHKANNA WORLD SUPERSTARS



RUDOLPH VALENDINO, MGR, RAJESHKANNA 
WORLD SUPERSTARS





ருடோல்ஃப் வாலென்டினோ என்று ஒரு உச்ச நட்சத்திரத் திரை நடிகர் இருந்தார் அமெரிக்காவில், நூறு ஆண்டுகளுக்கு முன்பு. திரைப்படம் எனும் தொழில்நுட்பம் பிறந்த அதே ஆண்டில் இத்தாலியில் பிறந்தவர்! ஆரம்பகால மௌனப்படங்கள் பலதில் காதல் நாயகனாகவும் சாகச நாயகனாகவும் நடித்து அக்காலத்தைய அமெரிக்க வெகுஜனக்கலையின் வழிபாட்டு உருவமாக அவர் மாறினார். 19 வயதில் நடிக்க ஆரம்பித்து 23 வயதில் உச்ச நட்சத்திரமாக மாறிய அவர் இளம் பெண்களாலும் ஆண் அழகை விரும்பும் ஆண்களாலும் ‘லத்தீன் காதலன்’ என்று அழைக்கப்பட்டு, அவர்களது காம இச்சையின் உச்சபட்சக் குறியீடாக மாறினார். 


நடிப்புத்திறனை விட அவரது உடல் அசைவுகளும் மயங்கின கண்களும் திடமான உடற்கட்டும்தான் ரசிகர்களைக் கவர்ந்தன. ஆறு ஆண்டுகள் மட்டுமே திரைத்துறையில் சோபித்த அவர் தனது 31 வயதில் குடல் சீழ்ப்புண் காரணமாக இறந்துபோனார். வெறிகொண்ட அவரது ரசிகர்களால் நியூயார்க் நகரின் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்தது. அவரது பல தீவிர ரசிகைகளும் சில ரசிகர்களும் தற்கொலை செய்துகொண்டனர்! தன்னைத்தானே அழிக்கத்தூண்டும் அளவில் மக்களின் மனதில் ஆழ்ந்த பாதிப்பை உருவாக்குகிறார்கள் திரை நட்சத்திரங்கள்!

ருடோல்ஃப் வாலென்டினோவின் காலத்திற்கு அரைநூற்றாண்டு கழித்து இங்கு தமிழ்த் திரை நாயகன் எம்.ஜி.ஆர். மறைந்தபோது தீவிர வெறிகொண்ட அவரது எத்தனையோ ரசிகர்கள் தற்கொலை செய்தனர். அவரது இறப்பையொட்டி எத்தனையோ வன்முறைகளும் கொள்ளைகளும் கொலைகளும் நிகழ்ந்தன! அதற்கும் கால் நூற்றாண்டிற்குப் பின்னர் கன்னட நடிகர் ராஜ்குமார் இறந்தபோதும் எத்தனையோ வன்முறைகளும் கலவரங்களும்! திரைநடிகர்கள் ரசிகர்களுக்கிடையே உருவாக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பின் ஆத்திர வெளிப்பாட்டுகள்! ஆனால் ஹிந்தி திரைப்படங்களின் வரலாற்றில் அத்தகைய எதுவுமே ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. கே.எல்.சைகாள், கரன் திவான் (யார் அவர் என்று கேட்காதீர்கள்!), ப்ரித்விராஜ் கபூர், அசோக் குமார், ராஜ் கபூர், ராஜேந்திர குமார், தேவ் ஆனந்த், ஷம்மி கபூர் போன்ற உச்ச நட்சத் திரங்கள் உயிருடனிருந்தபொழுதோ இறந்தபொழுதோ மேற்சொன்னபடியான விஷயங்கள் எதுவுமே அங்கு நடக்க வில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களில் பலர் எப்போது இறந்தார்கள் என்றே பெரும்பாலானோருக்கு நினைவு இல்லை!

ஆனால் இந்தியாவில் உச்ச நட்சத்திரம் (Super Star) என்கின்ற பட்டப்பெயரால் முதன்முதலாக அழைக்கப்பட்ட ராஜேஷ் கன்னா அவரது புகழின் உச்சத்திலிருந்த காலத்தில் தனது ரசிகர்களுக்கிடையே, முக்கியமாக ரசிகைகளுக்கிடையே அதீதமான ஆவேசத்தையும் வெறியையும் பித்தையும் உருவாக்கியவர். காலம் காலமாக அச்சம் மடம் நாணம் எனும் Ôகுலப்பெண்’களின் முக்கியமான குணங்களைக் ‘கடைப்பிடித்து’ வாழ விதிக்கப்பட்ட இந்தியப் பெண்கள் முதன்முதலாக ஒரு திரைநடிகனின் பின்னால் ஓடினார்கள். அவரை ஏழைத்தோழனாகக் கற்பனை செய்ததன் விளைவொன்றுமல்ல அது! நடிப்புத்திறனை விட ராஜேஷ் கன்னாவின் உடல் அசைவுகளும் மயங்கின கண்களும் கண் சிமிட்டல்களும்தான் அப்பெண்களைப் பித்தெடுக்கச் செய்தது. அத்துடன் ஒருவகையான காதல் காவியத்தன்மைகொண்ட அவரது குரலின் வசீகரமும், அக்குரலினூடாக வசனம் பேசுவதில் அவர் வெளிப்படுத்திய தனக்கேயுரிய ஏற்ற இறக்கங்களும் ராஜேஷ் கன்னாவை அவர்களது காதல், காம இச்சையின் உச்சபட்சக் குறியீடாகவே மாற்றியது. அது இந்தியாவில் அதற்கு முன்பும் பின்பும் ஒருபோதுமே நிகழாத ஒன்று!


பதின்பருவத்தினர், கல்லூரிக் குமரிகள், திருமணமான பெண்கள், நடுத்தரவயதைத் தாண்டிய பெண்கள் என அனைத்து வகையான பெண்களும் ஒரே ஒருகணம் அவரைப் பார்ப்பதற்காகவே படப்பிடிப்புத் தளங்களுக்கு வெளியே பெரும் திரளாக நின்றனர். மும்பையில் அவரது பங்களாவின் வெளியே ஒரு 'தரிசன’த்திற்காக நாள்முழுவதும் பெண்கள் நின்றுகொண்டேயிருந்தனர்! திறந்தவெளிக் காட்சிகளின் படப்பிடிப்புக்காக அவர் செல்லும் கிராமப்புறங்களிலும் அவரைப் பார்க்கப் பெண்கள் வரிசையாக நின்றனர். சில பெண்கள் ராஜேஷ் கன்னாவின் உருவப்படங்களுக்கு மாலையிட்டு அவரை ‘மணந்தனர்’. தங்களது கைவிரல்களை அறுத்து நெற்றியில் ரத்த குங்குமம் வைத்தனர். சொந்த ரத்தத்தில் காதல் கடிதங்களை எழுதி அவருக்கு அனுப்பினர். தொலைதூரப் பிரதேசங்களில் இருந்து, தான் ராஜேஷ் கன்னாவின் மனைவி என்றோ ராஜேஷ் கன்னாவால் தான் கர்ப்பமாகியிருக்கிறேன் என்றோ உரிமைக் கோரிக்கை முன்வைக்கும் பெண்களின் கதைகள் அக்கால நாளிதழ்களில் வந்துகொண்டேயிருந்தன. அவர் வெளியே சென்றபோது வெறிகொண்ட ரசிகைகள் அவரது உடைகளைப் பிடித்து இழுத்துக் கிழித்தனர். அவரது வாகனத்தை முற்றுகையிட்டு அதை முத்தங்களால் மூடினர். ரசிகர்களிலிருந்து அவரைக் காப்பாற்ற பல காவலர்கள் தேவைப்பட்டனர். 


இந்தியாவில் முதன்முதலாக ஒரு நடிகனுக்குத் தனது ரசிகர்களிலிருந்து காவல்துறை பாதுகாப்பு அளித்தது ராஜேஷ் கன்னாவுக்குத் தான்! ஆராதனா படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு இங்கு சென்னையிலும் கூட ரசிகைகளின் ’முற்றுகை’களுக்கும் 'தாக்குதல்’களுக்கும் ராஜேஷ் கன்னா ஆளாகியிருக்கிறார்!
“புஷ்பா.. இது என்ன புஷ்பா.. உனது கண்களில் மீண்டும் கண்ணீர்! உனது கண்ணீரை என்னால் பார்க்க முடியாதென்று எவ்வளவு தடவை நான் சொல்லவேண்டும் புஷ்பா? கண்ணீரை நான் வெறுக்கிறேன்.. ஐ ஹேட் டியேர்ஸ் புஷ்பா.. ஐ ஹேட் டியேர்ஸ்....” போன்ற அவரது வசனங்களில் மயங்காத பெண்கள் அக்காலத்தில் குறைவாகத்தான் இருந்தனர். பலசமயம் வண்ணப்படத்தின் முழு சாத்தியங்களையும் பயன்படுத்துமளவில் வடிவமைக்கப்பட்ட அதீத வண்ணம்கொண்ட ஆடைகள், சில-சமயம் குரு குர்தா என்று அழைக்கப்பட்ட எளிமையான ஜிப்பாவும் அத்துடன் வேஷ்டியும், சிலசமயம் கூர்க்கா தொப்பி, சிலசமயம் சட்டையின் மேலேயே கட்டிய வண்ணமயமான அரைப்பட்டை என விதவிதமான ஆடைகளில் பெண்களைக் கவர்ந்த ராஜேஷ் கன்னாவின் முதல் படம்


 1966ல் வந்த ஆக்ரி கத் (கடைசிக் கடிதம்). 2008ல் வெளிவந்த வஃபா (விசுவாசம்) வரைக்கும் மொத்தம் 163 படங்களில் நடித்தார். அவற்றில் நூற்றுக்கும் மேலான படங்கள் பெரும் வெற்றிகள். எழுபது பொன்விழாப்படங்கள்! இருபதுக்கும் மேலான வெள்ளிவிழாப் படங்கள்! மூன்று ஆண்டுகளில் ஒன்றுக்குப்பின் ஒன்றாக வெளிவந்த அவரது 15 படங்களுமே பெரும் வெற்றிகளாக அமைந்தன. இது உலகத் திரைப்பட வரலாற்றில் வேறு எந்த நடிகனுக்கும் கிடைக்காத வெற்றியும் சாதனையும்!
ராஜேஷ் கன்னாவின் நடிப்பும் அவரது நீள்சதுர வடிவ முகமும் அவரது சம மட்டமான உடல் கட்டும் பிடிக்காத கணிசமான ஆண்களும் குறைவான பெண்களும் இருக்கத்தான் செய்தனர். ஆனால் அவர்களிலும்கூட பலருக்கும் 'ஸ்டைல்' என்று பொதுவாகச் சொல்லக்கூடிய அவரது திரைத்தோற்றத்தின் பாங்கும் பாணியும் மிகவும் பிடித்திருந்தது. நடனமாடுவதென்பது ராஜேஷ் கன்னாவால் முடியவே முடியாத ஒன்று! ஆனால் அதைச் சமாளிப்பதற்காக அவர் வளர்த்தெடுத்த சில உடலசைவு பாங்குகள் பின்னர் அவருக்கே உரிய ஒரு நடனப்பாணியாக மாறியது. 

அதை நகலெடுத்து மேடையில் நிகழ்த்தும் கலைஞர்கள் இன்றளவிற்கும் பெரும் கைதட்டல்களைப் பெறுகின்றனர். கிட்டத்தட்ட ஒரேவகையான தலை ஆட்டல்களும் கண் சிமிட்டல்களும் முகபாவனைகளும் மட்டுமே மீண்டும் மீண்டும் முன்னெடுத்த ராஜேஷ் கன்னாவின் பெரும் வெற்றியின் முக்கியமான காரணம், தனது திரைப்படங்களில் அவர் வாயசைத்துப் பாடிய அசாத்தியமான நூற்றுக்கணக்கான பாடல்கள்தான் என்றே சொல்வேன். என்னைப் பொறுத்த வரையில் ராஜேஷ் கன்னா என்பது அவர் நடித்த பாடல்கள்தான்!

அவரது உலகப் புகழ்பெற்ற படமான ஆராதனாவில் கிஷோர் குமார் பாடிய மேரே ஸப்னோம் கி ராணி, ரூப் தேரா மஸ்தானா, கோரா காகஸ் தா யே மன் மேரா போன்ற அனைத்துப் பாடல்களுக்கும் இசையமைத்தவர் எஸ்.டி.பர்மன். அந்தப் பாடல்களின் மெட்டுக்கள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்த நிலையில் எஸ்.டி.பர்மன் கடுமையாக நோயுற்றார். அப்போது அவரது மகன் ஆர்.டி.பர்மன் அப்பாடல்களின் இசை ஒழுங்கையும் படத்தின் பின்னணி இசையையும் ஏற்றெடுத்து அமைத்தார். அங்கிருந்து துவங்கிய ராஜேஷ் கன்னா & ஆர்.டி.பர்மன்&கிஷோர் குமார் கூட்டணிதான் ராஜேஷ் கன்னாவின் பிரபலமான பாடல்களில் பெரும்பாலானவற்றை உருவாக்கியது. ஆனந்த் பக்ஷி அப்பாடல்களை எழுதினார். கிஷோர் குமாரின் குரலும் பாடும் பாங்கும் ராஜேஷ் கன்னாவின் உடல்-மொழிக்கும் வாயசைப்பிற்கும் கச்சிதமாகப் பொருந்தியது. முஹம்மத் ரஃபியைப் பின்தள்ளி இந்தியாவின் உச்ச-நட்சத்திர திரைப்பாடகனாக கிஷோர் குமார் மாறியது ராஜேஷ் கன்னா நடித்த பாடல்கள் வழியாகத்தான்.

ராஜேஷ் கன்னாவின் உப்பு சப்பில்லாத படங்களிலும் கூட ஆர். டி. பர்மனின் இசையில் கிஷோர் குமார் பாடிய அற்புதமான பல பாடல்கள் இருந்தன. ஜிந்தகீ கே சபர் மே, ஜெய் ஜெய் சிவசங்கர், கர்வடேன் பதல்தே ரஹேன், ஓ மெரே தில் கி சேன், சலா ஜாத்தா ஹூம் (மேரே ஜீவன் ஸாத்தி), எக் அஜ்னபீ ஹஸீனா ஸே, பீகீ பீகீ ராத்தோம் மே, ஹம் தோனோ தோ ப்ரேமீ (அஜ்னபீ) போன்றவை உதாரணம். ஹமே தும் ஸே ப்யார் கித்னா (குத்ரத்), மேரே னைனா ஸாவன் பாதோ (மெஹபூபா), ப்யார் திவானா ஹோதா ஹே, யே ஷாம் மஸ்தானி, யே ஜோ மொஹபத் ஹே (காட்டீ பதங்க்), யே க்யா ஹுவா, சிங்காரி கொயீ பட்கே, குச் தோ லோக் கஹேங்கே (அமர் ப்ரேம்), நதியா ஸே டரியா, தியே ஜல்தே ஹே, மே ஷாயர் பத்னாம் (நமக் ஹராம்) போன்ற எத்தனையோ அசாத்தியமான பாடல்கள் அக்கூட்டணியில் பிறந்தது. 40 ஆண்டுகளுக்குப் பின்னரும் இன்றும் அவர்களின் எத்தனையோ பாடல்கள் குற்றலை வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் மிகப்பிரபலமாகவே இருக்கின்றன. 


ஆர். டி. பர்மன் அவரே பாடிய துனியா மே லோகோம் கோ (அப்னா தேஷ்) போன்ற சில பெரும்புகழ் பாடல்களும் அவற்றில் அடக்கம்.
ஓரிரு படங்களில் ராஜேஷ் கன்னாவுக்காக முஹம்மத் ரஃபியையும் பாட வைத்தார் ஆர். டி. பர்மன். குலாபி ஆங்கேன் (த ட்ரெய்ன்) என்ற பெரும் வெற்றிப்பாடல் உதாரணம். ராஜேஷ் கன்னாவுக்காக முஹம்மத் ரஃபி மிகக்குறைவான பாடல்களை மட்டுமே பாடியிருக்கிறார். அதில் சுப் கயே ஸாரே நசாரே மற்றும் யே ரேஷ்மி ஜுல்ஃபேன் (படம்: தோ ரஸ்தே - இசை: லக்ஷ்மிகாந்த் ப்யாரேலால்), அகேலே ஹே சலே ஆவோ (படம் : ராஸ் இசை: கல்யாண்ஜி ஆனந்த்ஜி), குன்குனா ரஹே ஹே மற்றும் பாகோம் மே பஹார் ஹே (படம்: ஆராதனா இசை: எஸ். டி. பர்மன்) போன்றவை மிகப்பிரபலமான பாடல்கள். பாடும் திறன் இல்லாமலிருந்தபோதிலும் தனது பாடல்களைத் தானே பாடுவதுபோல் கச்சிதமாக உதடசைக்கவும் தாளத்திற்கு ஏற்ப உடலசைக்கவும் ராஜேஷ் கன்னாவால் முடிந்தது. தனது பாடல்களின் உருவாக்கத்தில் நேரடியான பங்கு எதுவுமே அவருக்கு இருந்ததில்லை என்றபோதிலும் தன் படத்தில் சிறந்த பாடல்கள் வருவதற்காக சில சூத்திரங்களை அவர் கடைபிடித்தார் என்று சொல்லப்படுகிறது.

 ஒரு பாடல் உருவானவுடன் ஓரிருமுறை அதைக் கேட்டு அங்கிருந்து போய்விடுவாராம். இரண்டு நாட்கள் கழித்து குறைந்த பட்சம் அப்பாடலின் ஆரம்ப வரிகளாவது தனக்கு ஞாபகம் வரவில்லை என்றால் அப்பாடலையே நிராகரித்து விடுவாராம்! தனது படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்க ஆர். டி. பர்மனையும் லக்ஷ்மிகாந்த் ப்யாரேலாலையும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போடவும் வைத்தார் ராஜேஷ் கன்னா!
லக்ஷ்மிகாந்த் ப்யாரேலால் இரட்டையர்தான் ஆர். டி.பர்மனுக்கு அடுத்து அதிகமான ராஜேஷ் கன்னா படங்களுக்கு இசையமைத்தவர்கள். கிஷோர் குமார் பாடிய கிசா கே ஃபூல் ஸே ஆத்தீ (தோ ரஸ்தே), மேரே தில் மே ஆஜ் க்யா ஹே (தாக்), ஆதே ஜாத்தே கூப்சூரத் (அனுரோத்), கோரே ரங்கே பே இத்னா (ரோட்டி) போன்ற பல பிரபலமான பாடல்கள் அவற்றில் அடக்கம். ராஜேஷ் கன்னா - கிஷோர் குமாரின் மிகமுக்கியமான பாடல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜிந்தகீ கா சஃபர் படலை சஃபர் எனும் படத்திற்காக இசையமைத்தவர் கல்யாண்ஜி ஆனந்த்ஜி. பெரும்புகழ்பெற்ற சோகப்பாடலான ஜீவன் ஸே பரீ தேரீ ஆங்கே அதே படத்தில்தான் அமைந்தது. இந்தியா முழுவதும் அனைவருக்குமே தெரிந்திருக்கக்கூடிய ராஜேஷ் கன்னா பாடல் ஜிந்தகீ ஏக் சஃபர் ஹே சுஹானா (அந்தாஸ்) ஷங்கர் -ஜெய்கிஷன் இரட்டையரின் இசையில் வந்தது.

ஹஸார் ராஹேம் (படம்: தோடி ஸி பேவஃபாயீ - இசை: கய்யாம்), வோ ஷாம் குச் அஜீப் தீ (படம்: காமோஷி - இசை: ஹேமந்த் குமார்), யே லால் ரங்க் (படம்: ப்ரேம் நகர் - இசை: எஸ். டி. பர்மன்), ஜிந்தகீ ப்யார் கா கீத் ஹே (படம்: ஸௌதேன் - இசை: உஷா கன்னா) போன்ற அற்புதமான சில பாடல்கள் மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்தும் வாய்த்திருக்கிறது ராஜேஷ் கன்னாவுக்கு. ஆனால் இதையெல்லாம் விட மிகமுக்கியமான ஒரு இசைப்பங்களிப்பை ராஜேஷ் கன்னாவின் திரை வாழ்க்கைக்காகச் செய்தவர் இந்திய வெகுஜன இசையின் மாமேதை சலில் சௌதரி!

1969ல் பாடல்களோ நடனக்காட்சிகளோ இல்லாமல் ஒரு ராஜேஷ் கன்னா படம் வெளிவந்தது! இந்திய வணிக சினிமாவிலேயே அது ஒரு முதல் முயற்சி. அதன் பெயர் இத்தெஃபாக் (எதிர்பாராதது). ஸைன் போஸ்ட் டு மர்டர் (Sign post to murder) எனும் ஆங்கிலப் படத்தை தழுவி யாஷ் சோப்ரா இயக்கிய அந்தப் பரபரப்பூட்டும் மர்மக்கதை படத்தின் வெற்றி, முற்றிலுமாக அதன் பின்னணி இசையை நம்பித்தான் இருந்தது. மிகுந்த இசைக்கற்பனையும் கருவியிசையமைப்புத் திறனும் பொறுப்பும் தேவைப்பட்ட அவ்வேலையை எஸ். டி. பர்மன் போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்கள் ஏற்றெடுக்க மறுத்தனர். கடைசியில் அப்பொறுப்பை ஏற்றெடுத்தவர் சலில் சௌதரி. அசாத்தியமான முறையில் பின்னணி இசையமைத்தார். படம் வெற்றி பெற்றது. பாடல்களில்லாத ஒரு படம் வெற்றிபெறுவது அக்காலகட்டத்தில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று!

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ரிஷிகேஷ் முகர்ஜியின் இயக்கத்தில் ஆனந்த் எனும் படம் வெளிவந்தது. ராஜேஷ் கன்னா நடித்த ஆகச்சிறந்த திரைப்படம் அது. சிறந்த நடிகனுக்கான ஃபிலிம் பேர் விருதை ராஜேஷ் கன்னாவுக்கு வாங்கித்தந்தது மட்டுமல்லாமல் அவ்வாண்டின் சிறந்த திரைப்-படத்திற்கான தேசிய விருதையும் வென்றது அப்படம். உணர்ச்சிப் பெருக்குள்ள பின்னணி இசையுடன் அதில் சலில் சௌத்ரி உருவாக்கின நான்கு பாடல்கள் இந்தியத்திரையிசையில் எக்காலத்திற்குமுரியவை, முதல் தரமானவை. கஹீ தூர் ஜப் தின் டல் ஜாயே, ஜிந்தகீ கைஸீ ஹே பஹேலீ, மே னே தேரே லியே, னா ஜியா லாகே னா (இப்பாடல் பின்னர் தமிழில் ’நான் எண்ணும்பொழுது’ என்று அழியாத கோலங்கள் படத்தில் வந்தது) போன்ற அப்பாடல்களின் உணர்ச்சிக்-கொந்தளிப்பும் அலாதியான இசைத்தரமும் உள்வாங்காத ஹிந்தி திரையிசை ரசிகர்கள் இருக்கவே வாய்ப்பில்லை. 

ராஜேஷ் கன்னாவின் ஆலோசனைகள் எதுவுமேயில்லாமல் உருவாக்கப்பட்ட அப்பாடல்கள்தான் ராஜேஷ் கன்னா என்று சொல்லும்போதே இன்றும் முதன்முதலில் நினைவுக்குவருபவை! அப்பாடல்களைப் பாடியவர்கள் கிஷோரோ ரஃபியோ கிடையாது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்! மன்னா டே மற்றும் முகேஷ் தான் அப்பாடல்களைப் பாடினர். ஆனால் அப்பாடல்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர் ஒருபோதும் ராஜேஷ் கன்னாவின் படங்களுக்கு சலில் சௌதரி இசை அமைக்கவில்லை. தனக்குப் பிடிக்காத பாடல்களை நிராகரிப்பேன் என்ற ராஜேஷ் கன்னாவின் பிடிவாதத்திற்கு சலில் சௌதரி ஒத்துழைக்கவில்லை என்பதுதான் காரணமாகத் தெரியவருகிறது!

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட கதாநாயகன் கடைசியில் இறந்துபோகும் அந்த ஆனந்த் படத்திலிருந்துதான் கேன்சரினால் பாதிக்கப்பட்ட கதாநாயகன் எனும் கதைப்போக்கு இந்தியத்திரையில் புற்றுநோய் போல் பரவியது! அதே ஆனந்த் படம் வழியாகத்தான் அதுவரைக்கும் உச்ச நட்சத்திர அந்தஸ்தின் உச்சத்தில் பறந்து-கொண்டிருந்த ராஜேஷ் கன்னாவிற்கு முதல் அடி விழுந்தது என்பதும் வினோதமானது. அப்படத்தில் இரண்-டாம் நாயகனாக நடித்த அமிதாப் பச்சன் மிகுந்த கவனத்தைப் பெற்றார். அது அவரது இரண்டாவது படம். ஆனால் அதினூடாக துணை பாத்திரத்துக்கான ஃபிலிம்ஃபேர் விருதைப் பெற்றார். தனது ஆட்சியை ஒழிக்க வந்தவர்தான் அமிதாப் என்று ராஜேஷ் கன்னாவிற்கு உள்ளுணர்வில் தோன்றியிருக்கவேண்டும்! எப்போதுமே பாதுகாப்பின்மை உணர்வால் (insecurity) பீடித்தவராகயிருந்த ராஜேஷ் கன்னா அமிதாப்பச்சனை அகற்ற தன்னால் முடிந்த அனைத்து வேலைகளையும் செய்தார். 

தனது படங்களிலிருந்து அவரை வெளியேற்ற முயற்சித்தார். நேரடியாக அவரை அவமானப்படுத்திய நிகழ்வுகளும் நடந்தன. ஆனால் ஆனந்த் மற்றும் நமக் ஹராம் படங்களில் ராஜேஷ் கன்னாவுடன் நடித்துக் கொண்டே தனது இடத்தை உறுதி செய்தார் அமிதாப்பச்சன்!
சிறந்த இசையின் பலத்தில் காதலும், கண்ணடிப்பும், காதல்தோல்வியும், சோகப்பாடல்களுமாக நகர்ந்து கொண்டிருந்த ராஜேஷ் கன்னா யுகத்தை தனது Ôகோபக்கார இளைஞன்’ பாத்திரங்கள் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியமைத்து பின்னர் இந்திய வணிகத் திரையின் எக்காலத்திற்குமுரிய உச்ச நட்சத்திரமாக மாறினார் அமிதாப்பச்சன். ஆனால் ராஜேஷ் கன்னாவை அழித்தது அமிதாப்பச்சன் அல்ல. ராஜேஷ்கன்னாவேதான்! நெப்போலியன் சக்கரவர்த்தியை விட ஆணவமும் கர்வமும் மிக்கவராக இருந்தார் ராஜேஷ் கன்னா என்று அவரது நேர்காணல் இடம்பெற்ற ஒரு பி. பி. சி. நிகழ்ச்சி சொன்னது! 


தன்னை ஒரு கடவுளாகவே அவர் நினைத்தார் என்று அவரை நன்கு அறிந்த அலி பீட்டர் ஜான் போன்ற பத்திரிகையாளர்கள் பின்னர் எழுதினர். படப்பிடிப்பிற்கு மிகவும் காலங்கடந்து வருவது, சிலபோது வராமலே இருப்பது, சொன்ன வார்த்தையையும் நேரத்தையும் காப்பாற்றாதது, விசித்திரமான பழக்க வழக்கங்கள், திடீர் மனநிலை திருப்பங்கள் போன்றவற்றுடன் மிதமிஞ்சிய குடிப்பழக்கமும், தனது தொழில்சார்ந்த மிகத்தவறான முடிவுகளும்தான் ராஜேஷ் கன்னாவின் காலகட்டத்தை மிகவேகமாகக் குறுக்கியது.
ராஜேஷ் கன்னா ஒரேமுறைதான் திருமணம் செய்தார், நடிகை டிம்பிள் கபாடியாவை. பத்தாண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பின்னர் அவர்களாவே பிரிந்தனர். மாடல் அழகியும் நடிகையுமான அஞ்சு மஹேந்த்ரு, சக திரை நடிகை மும்தாஜ், சக திரை நடிகையும் இன்று தொழில் அதிபர் அனில் அம்-பானியின் மனைவியுமான டினா முனிம், பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மார்க்கோஸின் மருமகள் அனிதா அட்வானி என்று பிரபலமான பல பெண்களுடனும் ஆயிரக்க-ணக்கான பிற பெண்களுடனும் ராஜேஷ் கன்னாவுக்கிருந்த உடல் சார்ந்த உறவுகள் அவரது வாழ்க்கையை சிக்கலாக்கியது, 

அவரது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்தது.
தனது உண்மையான நலம்விரும்பிகளை அடையாளம் காணாமல், தனக்கு நிகரானவர்களுடன் சேர்ந்தியங்காமல் தன்னை அண்டிப்பிழைப்பவர்களின் புகழாரங்களுக்கு மட்டும் செவி மடுத்து வாழ்ந்தார் ராஜேஷ் கன்னா. யார் பேச்சையும் அவர் கவனமாகக் கேட்டதில்லை. ஒரு சின்ன விமர்சனத்தையோ எதிர்ப்புக்குரலையோ கூட சகித்ததில்லை. தன்னை எதிர்க்கும் நடிகர்களின், தன்னைப் பிரிந்த பெண் நடிகைகளின் படங்கள் வெளிவராமல் தடுக்கும் முயற்சிகள் வரைக்கும் அவர் இறங்கினார் என்று சொல்லப்படுகிறது. தன்னைப்பற்றியன்றி வேறெதுவுமே யோசிக்க முடியாதவரான அந்த ராஜேஷ் கன்னாவை அரசியலுக்கு இழுத்தவர் ராஜீவ் காந்தி. ராஜீவ் காந்தியின் மிகத்தவறான அரசியல் முடிவுகளில் ஒன்றுதான் ராஜேஷ் கன்னாவின் அரசியல் பிரவேசம் ராஜேஷ் கன்னா மூன்றுமுறை தேர்தலில் போட்டியிட்டார். ஒருமுறை வென்றார். ஆனால் அரசியலில் அவர் தாக்குப் பிடிக்கவில்லை.
இன்னும் மணவிலக்கு வழங்காத மனைவியும் இரண்டு மகள்களும், ஒரு மகளின் கணவரான அக்ஷய் குமார் எனும் ஹிந்தித்திரை உச்ச நட்சத்திரமும் அவ்வப்போது வந்துபோகும் பல பெண் தோழிகளும் இருந்தும் கடந்த பல ஆண்டுகளாகப் புற்றுநோயால் பீடித்து தனிமையில்தான் வாழ்ந்து வந்தார் ராஜேஷ்கன்னா.






மிகச்சிறிய வயதில் ஏற்படும் அனுபவங்களும் அதன் மனப்பதிவுகளும்தான் ஒரு மனிதனின் குணங்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது என்று ஃப்ராயிட் எழுதினார்.

சிறுவயதில் தனது பெற்றோர்களால் கைவிடப்பட்ட ஜதின் அரோரா எனும் சிறுவன்தான் தூரத்து சொந்தத்திலுள்ள ஒரு பணக்காரக் குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டு ராஜேஷ் கன்னாவாக மாறினார்! அங்கு எல்லா வசதிகளுடனும் வாழ்ந்தார். பின்னர் உலகப் புகழ்பெற்ற திரை நட்சத்திரமானார். மறைந்தார்.


'மதிப்பு, மரியாதை, புகழ், பணம், கௌரவம்
எதுவுமே இந்த உலகில் நீடிப்பதில்லை
இன்று நான் நிற்கும் இடத்தில்
நேற்று வேறு யாரோ நின்றிருந்தார்
இது ஒரு காலம், அதுவும் ஒரு காலம்
வரப்போவது வேறு ஏதோ ஒரு காலம்'
ஒரு படத்தில் ராஜேஷ் கன்னாவின் வசனமாக வரும் சாஹிர் லுதியான்வியின் கவிதை வரிகள் இவை.

No comments:

Post a Comment