Wednesday, 11 October 2017

JEYALALITHA LIFE STORY


JEYALALITHA  LIFE STORY


‘‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’’ - இது ஜெயலலிதா, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனம். இதை, வெறும் தட்டையான வரிகளாக மட்டும் பார்த்து கடந்து சென்றுவிட முடியாது. ஜெயலலிதாவை நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினால், இந்த வரியை... அதன் உள்ளே பல அடுக்குகளில் ஒளிந்து இருக்கும் விஷயத்தை, அதன் அடர்த்தியை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆம், இந்த வரியைப் புரிந்துகொள்வதும் ஜெயலலிதாவை புரிந்துகொள்வதும் வெவ்வேறானது அல்ல.
பெங்களூரு நோக்கி முதல் பயணம்:

பெரிய வசதியெல்லாம் இல்லைதான். ஆனால், குறையொன்றும் இல்லை என்பதாகத்தான் அம்முவின் (ஜெயலலிதா) வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது, அந்தச் சம்பவம் நிகழும்வரை. அப்போது அம்முவுக்கு இரண்டு வயதுக்கும் குறைவுதான். அவரது அப்பா ஜெயராம், பிணமாகக் கிடத்தப்பட்டு இருக்கிறார். சோகம் அப்பிய இரவு... எங்கும் அழுகை குரல். அம்முவுக்குத் தன்னைச்சுற்றி என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று புரியவில்லை. அதுவும் குறிப்பாகத் தன் அம்மா வேதவல்லி ஏன் அழுதுகொண்டிருக்கிறார் என்று புரியவில்லை. ஆனால், ஏதோ சரியில்லை என்று மட்டும் தெரிந்தது.
ஜெயராமின் அப்பா நரசிம்மன் ரெங்காச்சாரி, மைசூர் மகாராஜா அரண்மனையில் மருத்துவ பொறுப்பாளராக பணிபுரிந்தவர். அரண்மனையில் பணியென்றால் கேட்கவா வேண்டும்...? நல்ல ஊதியம் தான்.  நிறைவான வாழ்வு தான். ஆனால், ஜெயராமிற்கு அதை முறையாக நிர்வகிக்க தெரியவில்லை. ஆம், கல்லூரி முடித்தும் வேலைக்கு செல்லாமல், அப்பாவின் சொத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தார். மழையில் கரையும் மண் வீடு போல, சேமிப்பும் கரைந்து கொண்டே போனது.   ஹூம்... உங்களுக்கு இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். ஜெயராமிற்கு வேதவல்லி முதல் மனைவி அல்ல... இரண்டாம் மனைவி.
வேதவல்லி அன்று தன் கணவருக்காக மட்டும் அழவில்லை. இனி, தன் இரண்டு பிள்ளைகளையும் எப்படி வளர்க்கப் போகிறோம் என்ற கேள்வி நடுக்கத்தை உண்டாக்கியது. கணவர் இல்லை... இனி தனியாக மைசூரு மாண்டியாவில் வசிக்க முடியாது. இப்போது வேதவல்லிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, தன் தந்தை ரெங்கசாமி வசிக்கும் பெங்களூருவுக்குச் செல்வது மட்டும்தான். கணவருடைய ஈமக்கிரியை முடிந்தவுடன் தன் இரண்டு பிள்ளைகளுடன் பெங்களூருவுக்குப் பயணமானார்.
சினிமா வாய்ப்பு:

ரெங்கசாமிக்கு, ஹிந்துஸ்தான் ஏவியேசன் லிமிடெட்டில் குமாஸ்தா பணி. ஸ்ரீரங்கத்திலிருந்து வந்து பெங்களூருவில் வேலைநிமித்தமாக செட்டில் ஆனவர். அவரும், ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார். அதனால் தன் அப்பாவின் சுமையைக் குறைக்க, அம்முவுக்கு நல்ல கல்வியைத் தர வேதவல்லி பணிக்குச் செல்ல வெரும்பினார். தட்டச்சு தெரியும், சுருக்கெழுத்தும் நன்கு வரும். அப்போது இந்த தகுதிகளே போதுமானதாக இருந்தது. பணி கிடைத்தது.  ஆனால், அதிலிருந்து வந்த ஊதியம் போதுமானதாக இல்லை. வாழ்க்கை, வெயில்பொழுதில் வனாந்திரத்தில் நடப்பதுபோன்று இறுக்கமாகச் சென்றுகொண்டிருந்தது.
அந்த சமயத்தில் தான் , கன்னட சினிமா தாயாரிப்பாளர் கெம்பராஜ், வேதவல்லியைப் பார்த்தார். லட்சணமான முகம் என ஒரு நடிகைக்கான அம்சத்தைக் கண்டு கொண்டார். உடனடியாக ரெங்கசாமியைச் சந்தித்து, “என் படத்துக்கு ஒரு நாயகியை தேடிக்கொண்டு இருக்கிறேன். உங்கள் மகள் பொருத்தமாக இருப்பார். நடிக்க அனுமதிப்பீர்களா...?” என்று கேட்ட அடுத்த நொடியே ரெங்கசாமிக்கு கோபம் தலைக்கேறியது. ‘‘முடியாது’’ என்று மறுதலித்தார். உண்மையில், அந்தச் சமயத்தில் வேதவல்லிக்கும் சினிமாவில் நடிக்க விருப்பம் இருந்ததுதான். அதற்கு ஒரே காரணம் ‘நல்ல ஊதியம்’. ஆம், பொருளாதாரச் சிரமத்தில் இருக்கிறோம். இந்தச் சமயத்தில் இது நல்ல வாய்ப்பு. இரு பிள்ளைகளையும் படிக்கவைக்கலாம்... அவர்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். ஆனால், அப்பா மறுக்கிறாரே. இப்போது என்ன செய்ய முடியும்...? என்று அமைதியாக இருந்துவிட்டார்.
ரெங்கசாமி மறுத்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அப்போது, அவரது இன்னொரு மகள் அம்புஜா விமானப் பணிப்பெண்ணாகப் பணியில் இருந்தார். ஓர் ஆச்சாரமான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் விமானப் பணிப்பெண்ணாகப் பணி செய்வது ரெங்கசாமிக்குப் பிடிக்கவில்லை. அம்புஜாவுடன் பேசுவதையே நிறுத்தி இருந்தார். இன்னொரு மகளும் தங்கள் சமூகநெறியை மீறி ஒரு பணிக்குச் செல்வதை ரெங்கசாமி விரும்பவில்லை.
ஆனால், மனிதர்களின் விருப்பங்கள் மட்டுமே நிகழ்கிறதா என்ன..? அப்போது, விதி வேறு மாதிரி இருந்தது. ஆம், விமானப் பணிப்பெண்ணாக இருந்த அம்புஜா, வித்யாவதி என்று தன் பெயரை மாற்றி சினிமாவில் நடிக்க தொடங்கி இருந்தார். இந்தப் புள்ளியிலிருந்துதான் அம்முவின் வாழ்க்கை மாறியது.
ஆம்... அம்புஜா, ‘வித்யாவதி’யாக மாறாமல் இருந்திருந்தால்... ஒருவேளை, அம்முவும் ‘அம்மா’வாக மாறாமல் இருந்து இருப்பார்.
வித்யாவதி சென்னையில் தங்கி திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது, வித்யா தன் சகோதரி வேதவல்லியை, தன்னுடன் சென்னை வந்து தங்குமாறு அழைத்தார். ‘‘அம்முவை, தான் நல்ல பள்ளியில் படிக்க வைக்கிறேன்’’ என்றார். எந்த மறுப்பும் சொல்லாமல் இந்த வாய்ப்பை வேதவல்லி ஏற்றுக்கொண்டு சென்னைக்குப் பயணமானார்.


இப்போது மட்டும் அல்ல, அப்போதும் மாநகரத்தின் நெரிசலில் தொலைந்துபோகாமல் இருப்பது என்பது ஒரு கடும் தவம் போன்றதாகத்தான் இருந்தது. தொலைந்துபோவது என்பது எலும்பு மஜ்ஜைகளால் ஆன பூத உடல் தொலைந்துபோவது அல்ல... தன் சுயம், தன் இருப்பு தொலைந்துபோகாமல் இருப்பது. இதற்காக வித்யாவதி போராடிக்கொண்டிருக்கும் போதுதான், விதியோ அல்லது தற்செயலோ...  வேதவல்லியின் சுயத்தையும், இருப்பையும் வேறுவிதமாக வடிவமைக்கக் காத்துக்கொண்டிருந்தது.  
ஆம். வித்யாவதியைச் சந்திக்க வரும் தயாரிப்பாளர்கள் வேதவல்லிக்கும் திரைப்படத்தில் நடிப்பதற்கேற்ற தோற்றம் இருப்பதைக் காண்கிறார்கள். தங்கள் படங்களில் நடிக்கக் கேட்கிறார்கள். வேதவல்லிக்குக் குழப்பம். என்ன முடிவு செய்வது என்று தெரியவில்லை... அவர் சென்னைக்கு வந்தது, தனது இரண்டு பிள்ளைகளுக்கும் நல்ல கல்வியை வழங்க... நல்ல எதிர்காலத்தைக் கட்டமைத்துத் தர... ஆனால், எதிர்பார்க்காத வாய்ப்பு வந்து இருக்கிறது. வாய்ப்பை ஏற்றுக்கொள்ளலாம்தான். ஆனால், இந்த விஷயம் அப்பாவுக்குத் தெரிந்தால் நிச்சயம் கோபப்படுவார். எதைத் தீர்மானிப்பது என்று பல்வேறு யோசனைகளில் இருந்தபோதுதான்,  கன்னடப் படத் தயாரிப்பாளர் கெம்பராஜூவிடமிருந்து மீண்டும் அழைப்பு.
“மீண்டும் கேட்கிறேன். என் படத்தில் நடிக்க சம்மதமா...?” -  கெம்பராஜூ.
“மீண்டும் அதே நபரிடமிருந்து வாய்ப்பு. நிச்சயம் இது ஏதேச்சையானது அல்ல. இதுதான் இறைவன் நமக்குக் காட்டி இருக்கும் பாதை. இதை நிராகரிப்பது, நிச்சயம் முட்டாள்தனமானது.” ஆம்,  அந்தப் பாதையில் பயணிக்கத் தீர்மானிக்கிறார். வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறார். வேதவல்லி சந்தியாவாக மாறுகிறார்.
சென்னை - பெங்களூரு - சென்னை:

சந்தியாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வர தொடங்குகின்றன. பெரிய வேஷங்கள் எல்லாம் இல்லைதான். ஆனால், சிறு சிறு கதாபாத்திரங்கள் என வாய்ப்புகள் கதவைத் தட்டிய வண்ணம்  இருக்கின்றன. எப்போதும்... எல்லோருக்கும்... விரும்பியது எல்லாம் கிடைக்காது அல்லவா...?  சந்தியாவுக்கும் அது கிடைக்கவில்லை. அவர் சென்னைக்கு வந்தது, தம் குழந்தைகளின் நல் எதிர்காலத்துக்காக. ஆனால், இப்போது அவர்களைக் கவனித்துக்கொள்ள முடியாத அளவுக்கு, பரபரப்பான வாழ்க்கை. என்ன செய்யலாம்...? வேறு வழியே இல்லை... மீண்டும் அம்முவையும், பாப்புவையும் பெங்களூருக்குத் தன் தந்தை வீட்டுக்கு  அனுப்பிவைக்கிறார்.
முதன்முதலாக அம்மு, தன் அம்மாவைப் பிரிகிறார்.  கனத்த இதயத்துடன் பெங்களூரு பயணம் ஆகிறார்.  ரெங்கசாமியும், கமலம்மாவும், சந்தியாவின் தங்கை பத்மா எனக் குடும்பமே அம்மு  மீது பாசத்தைக் கொட்டி கவனித்துக்கொண்டாலும், அந்த வயதில் அம்முவுக்குத் தேவைப்பட்டது, அம்மாவின் அரவணைப்பு...  ஆம். அம்மாவுக்காக அம்மு எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார்.
சந்தியாவுக்கும் இது புரியாமல் இல்லை. இந்தப் பாதையில் செல்லத் தீர்மானித்ததே தம் பிள்ளைகளுக்காகத்தானே...?  அவரும் ஒருநாள் ஓய்வு கிடைத்தாலும், பெங்களூரு சென்று அம்முவைப் பார்த்துக்கொள்கிறார். அம்முவுக்குப் பிடித்தமான அனைத்தும் வாங்கித் தருகிறார். அம்முவை மகிழ்வாக வைத்துக்கொள்ள, என்னவெல்லாம் வாங்கித் தர முடியுமோ... அதையெல்லாம் செய்கிறார். ஆனால், பாவம்.. சந்தியாவுக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை... அம்முவின் சந்தோஷம் உயிரற்ற பொம்மையில் இல்லை... இனிப்பு தின்பண்டங்களில் இல்லை...   அம்முவின் சந்தோஷமும், சுவையும் தன் அம்மாவின் அருகாமை மட்டும்தான்.  சந்தியாவும், அம்முவை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், சென்னைக்கு அழைத்துக்கொள்கிறார்.
அம்முவின் அந்த விருப்பமும் விரைவில் நிகழ்கிறது. அம்முவைக் கவனித்துக்கொண்ட சந்தியாவின் இன்னொரு தங்கை பத்மாவுக்குத் திருமணமாகிறது.  வயதான  ரெங்கசாமி, கமலம்மாவால்,  குழந்தைகள் இருவரையும் கவனித்துக்கொள்ள முடியவில்லை. பத்மாவுடனும் அனுப்ப முடியாது...  வேறு வழியில்லை, மீண்டும் சென்னைக்குத்தான் அனுப்பியாக வேண்டும்.  ரெங்காமிக்கு அவர்களைச் சென்னைக்கு அனுப்பவது கவலையளித்திருக்கக் கூடும்... ஆனால்,  அம்முவுக்கு இதைவிட வேறு என்ன  மகிழ்ச்சி இருக்க முடியும்?  பறவை தன் தாய் இருக்கும் கூட்டுக்கு எவ்வளவு சந்தோஷமாக கிளம்புமோ.... அதைவிட பலமடங்கு மகிழ்ச்சியாக மீண்டும் தன் கூட்டுக்குத் திரும்புகிறார் அம்மு.
உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்மா...!
சென்னை திரும்பியதும் சர்ச் பார்க் பள்ளியில் சேர்க்கப்படுகிறார். படிப்பில் படு சுட்டி. பள்ளியில் சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே ஆசிரியர்களின் செல்ல மாணவியாக மாறுகிறார்.  பள்ளியில் பாராட்டு, ஆசிரியரின் அன்பு.. எல்லாம் இருந்தும் அவர் பெங்களூருவில் எப்படித் தனிமையை உணர்ந்தாரோ அதே தனிமைதான் அம்முவை சென்னையிலும் வாட்டுகிறது.  ஆம், சென்னை வந்தபின்னும் அம்மாவின் அருகாமை அவருக்கு கிட்டவே இல்லை.
இந்தக் கட்டுரையை வீடியோவாகவும் காணலாம்



எப்போதும் படப்பிடிப்பிலேயே இருக்கும் அம்மாவைப் பார்க்க ஏங்குகிறார். அன்பின் கதகதப்பை உணர விரும்புகிறார்... உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொல்ல விரும்புகிறார்... ஒரு நாள், அம்மு தன் அன்பைக் கடிதமாக மாற்றி,  ‘என் அம்மா’ என்ற தலைப்பில் கடிதமாக எழுதுகிறார். தன் அம்மாவுக்கு அந்தக் கடிதத்தைக் காட்ட ஓர் இரவு முழுக்க விழித்து இருக்கிறார். ஆனால், சந்தியா அந்த இரவு முழுவதும் வரவே இல்லை. அடுத்த நாள் பள்ளியில் அந்தக் கடிதத்தைப் பார்த்த ஆசிரியர்கள், உச்சிமுகர்ந்து அம்முவைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், அம்மு எதிர்பார்த்தது அதுவல்லதானே...? அம்மு விரும்பியது, அந்தக் கடிதத்தைத் தன் அம்மாவிடம் காட்டி, அவரை அணைத்து... ‘ உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்மா...’ என்று அழ வேண்டும் என்பதைத்தான்.

அது இரண்டு நாட்கள் கழித்து நிகழ்ந்தது. ஆம், இரண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்த சந்தியா, அம்மு ஒரு புத்தகத்தை அணைத்துக்கொண்டு தூங்குவதைப் பார்க்கிறார். அந்தப் புத்தகத்தை மெதுவாக எடுத்தபோது அம்மு விழித்துவிடுகிறார். பின் அழுதே விடுகிறார். கடிதத்தைப் படித்த சந்தியா, அம்முவை இறுக அணைத்து, “ இனி உன்னிடம் அதிக நேரம் செலவிடுகிறேன் அம்மு... இனி எப்போதும் இதுபோல் நிகழாது...” என்கிறார். ஆனால், துரதிர்ஷ்டமாக, அதுதான் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தது.  அம்மு தன் அம்மாவுக்காகக் காத்திருப்பது தொடர்கதை ஆனது.  பள்ளியில் அவர் பரிசு பெறும் நிகழ்வில்கூட சந்தியா கலந்துகொள்ளவில்லை.


பரிகாசம் செய்பவர்களை, என்ன செய்யலாம்...? வாக்குவாதம் செய்யலாம்; மெளனமாக கடந்துசெல்லலாம் அல்லது அவர்கள் புருவம் உயர்த்தும் வண்ணம் வெற்றியைப் பரிசளிக்கலாம். ஆம், வெற்றி வாள் மட்டுமல்ல... அது கேடயமும்கூட. கிண்டல்கள், பரிகாசங்கள் எல்லாவற்றையும் தன்னில் உள்வாங்கிக்கொண்டு, கரையச் செய்யும் தன்மைகொண்டது அது. தத்துவார்த்தமாக ஆராய்ந்தால், ஆப்ரகாம் லிங்கன் தொடங்கி பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வரை வெற்றியில்தான் கிண்டல் சொற்களைக் கரைத்து இருக்கிறார்கள்.

இந்தத் தத்துவங்கள் எல்லாம் அந்தச் சிறு வயதில் அம்முவுக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை. ஆனால், அவரும்  கிண்டல்களைக் கரைக்க இந்த வெற்றியைத்தான் தேர்ந்தெடுத்தார். கண்ணீரைக்கொண்டு கவலைகளைக் கரைக்க முடியாது என்று ஆனபின், அவர் முன்வைத்தது வெற்றியை மட்டும்தான்.


கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட அம்மு!

அடிப்படையில் ஆண்களால் கட்டமைக்கப்பட்ட இந்தச் சமூகம், நாகரிகத்தின் பொற்காலத்தில் இருக்கிறோம் என்று பிதற்றிக்கொள்ளும் இந்தச் சமூகம், இன்றும்கூட நடிகர்களுக்குச் சமமான மரியாதையை நடிகைகளுக்குத் தருவதில்லைதானே. நடிகைகளைப்பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற எண்ணம்தானே இன்றும் இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஐந்து தசாப்தங்களுக்குமுன் நடிகைகளை இந்தச் சமூகம் எப்படிப் பார்த்து இருக்கும்? அதுவும் சிறுசிறு வேடங்களில் நடிக்கும் ஒரு பெண் குறித்து சமூக மதிப்பீடுகள் எப்படியானதாக இருந்து இருக்கும்...? நிச்சயம் பரிகாசம் செய்து இருக்கும்தானே... அவதூறான வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கும்தானே... ஆம், இது அனைத்தையும் அந்த நாட்களில் சந்தியா சந்தித்தார். சந்தியா மட்டும் அல்ல... துரதிர்ஷ்டமாக பள்ளி நாட்களில் அம்முவும்கூடதான்.

இதை, ஜெயலலிதாவே ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். “சில பணக்கார வீட்டுப் பெண்கள் என்னைக் கிண்டல் அடித்தார்கள். என் அம்மா சிறுசிறு வேடங்களில்தானே நடித்தார். இதைவைத்து என்னைப் பரிகாசம் செய்தார்கள்.”

இந்தக் கிண்டல் சொற்களால், அம்மு முடங்கிப் போய்விடவில்லை; யாரிடமும் தர்க்கமும் செய்யவில்லை; அதை மெளனமாகவும் கடந்துசெல்லவில்லை. அவர் மூன்றாவதைத் தேர்ந்தெடுத்தார். அனைத்துப் பாடங்களிலும் முதல் இடம்பிடித்தார்; பள்ளியில் மிகவும் ஒழுக்கமான மாணவியாக இருந்து, அனைத்து ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையாக ஆனார். தன்னைத்தானே அந்த வயதிலேயே வெற்றியின் மூலம் ஒரு வலுவானவராக வடிவமைத்துக்கொண்டார். ஆம், இப்போது நீங்கள் அம்முவை பரிகாசம் செய்வது அவ்வளவு சுலபமானது அல்ல... அவர், உங்களுக்குமுன் ஒரு வெற்றியை வைத்திருக்கிறார். அவரை, கிண்டல் செய்ய வேண்டுமானால்... நீங்கள் அதைக் கடந்துசெல்ல வேண்டும். அந்த வயதில் அவருக்கு வெற்றி மட்டும்தான் அரணாக இருந்தது.

இந்தக் கிண்டல்களினால், அவருக்கென்று அந்த வயதில் பெரிதாக நண்பர்கள் யாரும் இல்லை. பள்ளிக் காலங்கள் பெரும்பாலும் தனிமையில்தான் அவருக்குச் சென்றன. கிடைத்த ஒரே நண்பரும் அவருக்குத் துரோகத்தைப் பரிசளித்துச் சென்றார். அரசியலில், பல துரோகங்களை ஜெயலலிதாவாக சந்தித்து இருக்கிறார். ஆனால், அம்முவாக 13 வயதில் அவர் சந்தித்த முதல் நம்பிக்கை துரோகம், அவர் பல நாட்கள் தனிமையில் அழ காரணமானது.
முதல் துரோகம்!

அப்போது அவரது வீடு தி.நகர், சிவஞானம் தெருவில் இருந்தது. அவர் வீட்டிலிருந்து சில வீடுகள் தள்ளி இருந்த, இவரைவிட இரண்டு வயது மூத்த பெண் ஒருவர், அம்முவுக்குத் தோழியாகிறார். அதுவரை அவருக்குப் பெரிதாக  தோழிகள் என்று யாருமில்லை. இந்த நட்பு, உண்மையில் அம்முவுக்கு மனமகிழ்ச்சியைத் தருகிறது. சந்தோஷமாக தன் சுகதுக்கங்களை பகிர்ந்துகொள்ளத் தொடங்குகிறார். ஆனால், அந்தப் பெண் தன்னுடன் நட்பானதற்கு வேறொரு காரணம் இருக்கிறது என்பது, அம்முவுக்குச் சில நாட்கள் கழித்துத்தான் தெரிகிறது.

ஆம், அந்தப் பெண் அம்மு வீட்டின் அருகே இருந்த ஒரு ஜெயின் பையனை நேசித்தார். அம்முவீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தால்தான், அந்தப் பையன் வீடு தெரியும். அதனால், தினமும் அந்தப் பெண் அம்மு வீட்டுக்கு வந்து, மொட்டை மாடியிலிருந்து நின்றுகொண்டு அந்தப் பையனிடம் சைகையில் பேசுவார். இதைச் சில நாட்கள் கழித்துத்தான் அம்மு கண்டுபிடித்தார். இதுகுறித்து அந்தப் பெண்ணிடம் அம்மு கேட்க, இதை அவரும் ஒப்புக்கொண்டார்.

“நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். எனக்காக அந்தப் பையனிடம், தூது செல்ல முடியுமா? தான் வராத நாட்களில், அந்தப் பையனிடம் தான் வராத காரணத்தை சைகையில் சொல்ல முடியுமா?” என்று அந்தப் பெண், அம்முவிடம் தங்கள் காதலுக்கு உதவி கேட்கிறார்.

உண்மையில், இது அம்முவுக்குச் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. தன்னைவிட இரண்டு வயது மூத்த பெண் தன்னிடம் உதவி கேட்பதே, அவருக்குச் சிலிர்ப்பூட்டுகிறது. இதன் விளைவுகள் எதனையும் யோசிக்காமல், அந்தப் பதின்பருவ காதலுக்குத் தூது செல்ல அம்மு சம்மதம் தெரிவிக்கிறார். சொல்லப்போனால், அந்த வயதில் அவர் தெரிவித்த இந்தச் சம்மதம்தான், துரோகச் சூழ் இவ்வுலகு குறித்து அவருக்கொரு புரிதல் உண்டாகக் காரணமாக அமைகிறது.

அந்தத் தோழி, சில நாட்கள் அம்மு வீட்டுக்கு வரவில்லை. தான் வராத காரணத்தை அந்தப் பையனிடம் தெரிவித்துவிடும்படி அம்முவிடம் சொல்கிறார். அம்முவும் இதை அந்தப் பையனிடம் மொட்டை மாடியில் நின்று சைகையில் தெரிவிக்கிறார். ஆனால், துரதிர்ஷ்டமாக இதை அம்மு வீட்டுக்கு வரும் பால்காரர் பார்த்துவிடுகிறார்.

இந்த விஷயத்தை சந்தியாவிடம் சொல்லி இருந்தால்கூட, அம்மு உண்மையைச் சொல்லிச் சமாளித்து இருப்பார். ஆனால் பால்காரர், அம்முவின் தோழி வீட்டுக்குச் சென்று, “இனி உங்கள் பெண்ணை அந்த நடிகை வீட்டுக்கு அனுப்பாதீர்கள். அம்முவின் நடவடிக்கை சரியில்லை... அவர் மாடியில் நின்றுகொண்டு ஒரு பையனிடம் தினமும் சைகையில் பேசிக்கொண்டு இருக்கிறார்” என்று சொல்லிவிடுகிறார். அத்துடன் அந்தப் பெண் அம்மு வீட்டுக்கு வருவது நின்றுவிடுகிறது.

தோழி பல நாட்கள் வீட்டுக்கு வராததால்... அம்மு, அந்தத் தோழியின் வீட்டுக்குச் செல்கிறார். அந்தத் தோழியின் பெற்றோர், அந்த பால்காரர் சொன்னதை அப்படியே சொல்லி அம்முவை சரமாரியாகத் திட்டிவிடுகிறார்கள். அந்தச் சமயத்தில், தோழி உண்மையைச் சொல்லித் தன்னைக் காப்பார் என்று அம்மு தன் தோழியையே பார்க்கிறார். ஆனால், அந்தத் தோழி அம்முவின் பார்வையைச் சந்திக்கத் திராணியின்றி அமைதியாகத் தலைகுனிந்து நிற்கிறார்.

வசைச் சொற்கள் தன்னை வந்து தாக்கிய அந்தச் சமயத்திலும்கூட அம்மு, தன் தோழியைக் காட்டிக் கொடுக்கவில்லை. அவர் செய்தது வீட்டுக்குச் சென்று, தனிமையில் வெகுநேரம் அழுதது மட்டும்தான். நம்பிக்கை துரோகம் என்ற பதத்துக்கான அர்த்தத்தை, முதன்முதலாக அம்மு உணர்ந்தது அப்போதுதான். ‘‘துரோகம் இவ்வளவு வலியைத் தருமா? என்று வெகுநாட்கள் இதை நினைத்து அழுதிருக்கிறேன்’’ என்று இந்தச் சம்பவத்தைப் பின்னாளில் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் அம்மு.

ஏன் ஜெயலலிதா மற்ற தலைவர்களைப்போல் அதிகம் பேச மாட்டேன் என்கிறார்... ஏன் அவர் யாரையும் நம்புவது இல்லை... ஏன் எப்போதும் அவர் தனக்குத்தானே ஓர் அரணை அமைத்துக்கொண்டு அதன் உள்ளேயே இருக்கிறார்... என்ற நம் பல கேள்விகளுக்கான விடை, இந்தச் சம்பவத்தால்கூட இருக்கலாம்.

ஆம், மனிதர்களின் ஆளுமையைத் தீர்மானிப்பதில், வடிவமைத்ததில்... சிறு வயதில் அவர்கள் எதிர்கொண்ட நிகழ்வுகளும் இருக்கிறதுதானே...?

No comments:

Post a Comment