Monday, 16 October 2017

ECONOMICAL -POLITICAL DISTRESS


ECONOMICAL -POLITICAL DISTRESS






சில நாடுகள் தங்களை ஒரு வியாபார நிறுவனமாகவே காட்டிக் கொள்ளும். சிங்கப்பூர், கொரியா, ஜப்பான் போன்றவை இப்படித்தான். உலகின் பொருளாதாரத்தை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி இந்த நாடுகளுக்குக் கணிசமாக உண்டு. இந்தப் போட்டியில் சீனா தாமதமாகத்தான் சேர்ந்தது.

செள வம்சம் முடிவுக்கு வந்த பிறகு ஹுவாங் தீ என்பவர் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டார். இவர் காலத்தில்தான் சீனாவில் வடக்கு எல்லை முழுவதும் ஒரு நீண்ட சுவர் எழுப்பப்பட்டது. இதுதான் உலக அதிசயமாகக் கருதப்படுகிற சீனப் பெருஞ்சுவர். 2560 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இதனை கட்டிமுடிக்க சிறைபட்ட கைதிகளும் அரசனுக்கு பிடிக்காதவர்களும் வற்புறுத்தப்பட்டனர். இது நடைபெற்றது சுமார் கி.மு.201-ம் வருடம்.

ஆனால் தன்னைச் சுற்றி எழுப்பிக் கொண்டிருந்த பொருளாதாரச் சுவரை வெற்றிகரமாக இடித்துத் தள்ளி பிற நாடுகளுக்குக் கடும் போட்டியை அளிக்கிறது சீனா. உலக நாடுகளின் ஏற்றுமதியில் ஜெர்மனிக்கும் அமெரிக்காவுக்கும் அடுத்த இடம் சீனாவுக்குதான்.

எப்படி இந்த சாதனையை சீனாவால் செய்ய முடிந்தது என்பதைப் பார்ப்பதற்குமுன் பொருளாதாரக் கோணத்தில் சீனாவை இந்தியாவோடு கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

இந்தியா இரும்பு மற்றும் எஃகு ஏற்றுமதியை சீனாவுக்குக் கணிசமாகச் செய்கிறது. தனி நபர் வருமானம் என்று பார்த்தால் ஓர் இந்தியரைப்போல இருமடங்கு சம்பாதிக்கிறார் ஒரு சீனர்.

ஆனால் வங்கிகளின் செயல்பாடு சீனாவில் மிக மோசம். வாராக் கடன் என்று பார்த்தால் நம் வங்கிகளைவிட சீன வங்கிகளில் இது நான்கு மடங்கு அதிகம்.

சீனாவின் மத்திய வங்கியைவிட நம் ரிசர்வ் வங்கி பல விதங்களில் மேம்பட்டது. பல சீன வங்கிகள் திவாலாகும் நிலையில் உள்ளன. அரசு இந்தத் தகவலை மூடி மறைக்கிறது.

நமக்கு சீனாவின் முன்னேற்றம் பிரமிப்பு அளிக்கிறது. சீனத் தலைவர்களுக்கு நமது முன்னேற்றம் (முக்கியமாக தகவல் தொழில்நுட்பப் பிரிவில்) பெரும் சங்கடத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. இருநாடுகளிலுமே மக்களும் அதிகம். மனித உழைப்பும் அதிகம்.

சீனாவில் பொருளாதார வெற்றி சாத்தியமான கதையைப் பார்ப்போம். 1979 80-ல் எப்படியாவது வெளிநாட்டு முதலீடுகளை சீனாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று முடிவெடுத்தனர் சீனத் தலைவர்கள்.

‘’எங்கள் தொழிலாளிகள் மிகமிகக் குறைவான ஊதியத்துக்கு வேலை செய்வார்கள். அரசுச் சலுகையும் உண்டு’’ என்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆசை காட்டியது சீன அரசு.

அதே சமயம் இளம் விவசாயிகளைப் பார்த்து ‘’நகர தொழிற்சாலைகளில் வேலை செய்யுங்கள். இதைவிட மூன்று மடங்கு ஊதியம் பெறலாம்’’ என்றும் ஆசை காட்டியது சீன அரசு.

பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் கால் பதிக்க இந்தத் தூண்டில்களே போதுமானதாக இருந்தன. தவிர மக்கள் தொகை நிறைந்த, வளர்ந்து வரும் நாடு என்பதால் தங்கள் தயாரிப்புகளில் கணிசமானவற்றை சீனாவிலேயே விற்கவும் முடியும்.

முக்கியமாக சீனாவில் தொழிற்சங்கங்களுக்கு அனுமதி கிடையாது. கம்யூனிச ஆட்சி! தொழிலாளிகள் இணைந்து போராடுவது என்பதெல்லாம் சீனாவில் நினைத்துப் பார்க்க முடியாத நிலை.

தொழிலாளிகளின் நிலையைக் கண்டு மனித உரிமை மீறல் என்று கருதும் சில சமூக அமைப்புகள் ‘’சீனாவுடன் பிற நாடுகள் வணிகம் செய்யக் கூடாது’’ என்று குரல் கொடுப்பது வாடிக்கை. அதுபற்றிக் கவலைப்படாமல் குறைந்த விலை என்பதற்காக சீனப் பொருட்களை பல நாடுகள் இறக்குமதி செய்வது அதைவிட வாடிக்கை.

சீனா இந்தியாவைப் பற்றி மிகவும் கவலைப்படத் தொடங்கி இருக்கிறது. 2016ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீனாவின் பொருளாதார வளர்ச்சியைத் தாண்டிவிடும் என்று கணித்திருக்கிறது சர்வதேச நிதியம் (IMF). இந்தியப் பிரதமர் தொழில் துறையில் கொண்டுள்ள ஈடுபாடும் பிற நாடுகளால் வரவேற்கப்படுகின்றன.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது, ‘’இந்த நூற்றாண்டின் இந்தியாவின் மிகச் சிறந்த தோழனாக அமெரிக்கா இருக்கும்’’ என்றது பொருளாதாரக் கோணத்தில்தான்.

இதன் எதிரொலியாக சீனாவும் ரஷ்யாவும் கொஞ்சம் நெருங்கி உள்ளன.

சீனாவை சங்கடப்படுத்தவோ, என்னவோ ஜப்பானுடன் நெருங்குகிறது இந்தியா. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் நட்பு என்பது சீனாவை மிக உன்னிப்பாக கவனிக்க வைத்திருக்கிறது.

வரலாற்றின்படி சீனாவின் கடும் பகைவன் ஜப்பான். ஆனால் இந்தியாவை தனது தற்போதைய முக்கியத் ‘தலைவலி’யாகக் கருதுகிறது சீனா. இதற்கு முக்கிய காரணம் பொருளாதாரக் கோணத்தில் உலகச் சந்தையைப் பிடிப்பதில் இந்தியர்களும் இந்தியப் பொருட்களும் சீனாவுக்குக் கடும் போட்டியை அளித்துக் கொண்டிருக்கின்றன. தவிர இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள பொதுவான நீர்ப்பரப்பில் (நீர் மின்சக்தி நிலையங்கள் உட்பட) பிரச்சினைகள் வெடிக்கக் கூடும்.

தவிர ராணுவம் என்று பார்த்தால் ஜப்பானிய ராணுவம் சீனாவுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால் இந்திய ராணுவத்தை அதனால் அலட்சியமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. மிக அதிக அளவில் யுத்தக் கருவிகளை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது இந்தியா. அதே சமயம் இங்கு தயாரிக்கப்படும் போர்க் கருவிகளை வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இந்தியா விற்கிறது. இந்த இரண்டும் சீனாவின் நட்பு நாடுகள் அல்ல. தென் சீனக் கடலில் இந்த மூன்று நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்னைகள் உள்ளன.

(உலகம் உருளும்)

No comments:

Post a Comment