CALIFORNIAN , STOPPED NEAR TITANIC ,19 MILES JUST NOTHING ABOUT SEEING FIREWORKS
டைட்டானிக் : கர்பாத்தியாவும், கலிபோர்னியனும் - Titanic : Carpathia & Californian
டைட்டானிக் - இதைப்பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கக்கூடும். என்னதான் உருவத்திலும், தொழில்நுட்பத்திலும் பெரிதாய் இருந்தாலும், இயற்கையின் முன் அனைத்தும் சிறிதே என நிரூபித்தது டைட்டானிக்கின் பேரழிவும், உயிரிழப்புக்களும். அழகைக் குறைக்கிறது எனக் குறைந்த உயிர்ப்படகுகளைக் கொண்டு துவங்கிய டைட்டானிக்கின் முதல் பயணமே கடைசியாகவும் இருந்தது அனைவரும் அறிந்ததே. 2220 பேசுமார் 1200 பேர் செல்லக்கூடிய உயிர்ப்படகுகள் இருந்தும், 705 பேரேக் காப்பாற்றப்பட்டனர்.
டைட்டானிக் |
டைட்டானிக் பனிப்பாறையில் மோதிய நாளன்று, அவ்வழியில் அருகே இருந்த இருக் கப்பல்களின் பார்வையிலேயே இந்தப் பதிவு.
கர்பாத்தியா:
டைட்டானிக் பனிப்பாறையில் மோதிய போது தரப்பட்ட அபாய சமிக்ஞையை (Distress Signal) மதித்து காப்பாற்ற ஓடோடி வந்தது கர்பாத்தியா. நியூயார்க் நகரத்தில் இருந்து ஆஸ்திரிய ஹங்கேரி நாட்டின் ஃபியூமி நகரம் நோக்கிப் புறப்பட்டது கர்பாத்தியா, 14 ஏப்ரல் 1912 அன்று. கர்பாத்தியாவின் கம்பியில்லா வானொலி தொடர்பாளர் (Wireless Operator) ஹெரால்ட் டைட்டானிக் பனிப்பாறையில் மோதியதும் தந்த சமிக்ஞைகளைக் கவனிக்கவில்லை. பின்னர், நியூ பவுண்ட்லேண்ட் தீவின் கேப் ரேஸ் நகரின் தொலைதொடர்பு மையத்திலிருந்து வந்த செய்தி மூலம், ஹெரால்ட் மீண்டும் டைட்டானிக்கைத் தொடர்பு கொண்டார். டைட்டானிக்கின் தொடர்பாளர் ஜேக் பிலிப்ஸ் பதிலாக அபாய சமிக்ஞை அளிக்க, கர்பாத்தியாவின் மீகாமன் ஆர்தர் ஹென்றி, கப்பலைத் தனது முழுவேகத்தில் செலுத்தப் பணித்தார். கப்பலின் அறை சூடாக்கிக்கும், சுடுநீர் சேவைக்கும் பயன்படுத்தப்பட்ட நீராவி நிறுத்தப்பட்டு, அந்த நீராவியும் கப்பலை வேகமாக செலுத்தப் பயன்பட்டது. அதிகபட்சமாக, மணிக்கு 31கிமீ வேகத்தில் பயணப்பட்ட கர்பாத்தியா, 93 கிமீ தொலைவில் இருந்த டைட்டானிக் விபத்து இடத்தை வந்து சேர சுமார் நான்கு மணிநேரம் ஆனது.
கர்பாத்தியா |
ஏப்ரல் 14, 1912 அன்று 11:40 மணிக்கு பனிப்பாறையில் மோதிய டைட்டானிக், 2 மணி 40 நிமிடங்களில், அதாவது ஏப்ரல் 15, 1912 அன்று 2:20க்கு மூழ்கியது. காலை 4 மணிக்கு வந்த கர்பாத்தியா உயிர்ப்படகுகளில் இருந்த - பாதுகாப்புக் கவசம் உதவியுடன் மிதந்து கொண்டிருந்தவர்கள் என 705 பேரை சுமார் ஐந்து மணி நேரம் போராடிக் காப்பாற்றியது கர்பாத்தியா. கப்பல் பயணிகளின் ஒப்புதலோடு, நியூ யார்க் நகருக்குச் சென்றது கர்பாத்தியா. கப்பலின் அன்றைய தலைவன் ஆர்தர் ஹென்றி பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டார்.
கலிபோர்னியன்:
ஏப்ரல் 5 1912 அன்று இங்கிலாந்து லிவர்பூல் நகரிலிருந்து, அமெரிக்காவின் போஸ்டன் நகருக்குப் பயணப்பட்டது கலிபோர்னியன் கப்பல். ஏப்ரல் 14, 1912 அன்று மாலை 6:30 மணிக்கு கப்பலுக்கு வடக்கே 5 மைல் தொலைவில் 3 பனிப்பாறைகள் இருப்பதாக தகவல் கொடுத்திருந்தார் கலிபோர்னியன் கப்பலின் கம்பியில்லா வானொலி தொடர்பாளர் சிரில் ஈவன்ஸ். இதைப் பதிவு செய்து தனது கேப்டனுக்கும் கூறியிருந்தார் டைட்டானிக்கின் பகல் நேர தொடர்பாளர் பிரைடு. இரவு 10:20 மணிக்கு, தானிருந்தப் பகுதியில் பனிப்பாறை அதிகமிருப்பதால், அங்கேயே நின்று காலையில் பயணம் தொடரவிருப்பதாகவும், இதை மற்றக் கப்பல்களுக்கு செய்தி அனுப்பவும் கலிபோர்னியனின் தலைவன் ஸ்டேன்லி லார்ட் கூற, சிரில் ஈவன்ஸ் 'அருகே வேறு எந்தக் கப்பலும் இல்லை. டைட்டானிக் மட்டும் உள்ளது' என்று கூறியுள்ளார். சுமார் 11:20 மணிக்கு, டைட்டானிக் கடந்து செல்வதைக் கண்ட சிரில் ஈவன்ஸ், டைட்டானிக்கைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். அதே நேரம், டைட்டானிக்கின் தொடர்பாளர் ஜேக் பிலிப்ஸ், நிறைய சேர்ந்திருந்த பயணிகளின் தந்திகளை கேப் ரேஸ் தொடர்பு நிலையத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தார். கலிபோர்னியனின் எச்சரிக்கை செய்தியைப் பாராத ஜேக், "Shut up, Shut up, I am busy with Cape Race" என பதிலளித்தார்.
கலிபோர்னியன் |
இந்தப் பதிலால் வெறுப்படைந்த சிரில், 11:35 மணிக்கு வயர்லெஸ் சாதனத்தை அணைத்துவிட்டு உறங்கச் சென்று விட்டார். இந்த நிகழ்வுக்குப் பிறகு, 5 நிமிடங்களில், 11:40 மணிக்கு டைட்டானிக் பனிப்பாறையில் மோதியது. 12:05 முதல் அபாய சமிக்ஞைகள் கொடுக்க ஆரம்பித்தது டைட்டானிக். வயர்லெஸ் சாதனம் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், கலிபோர்னியன் டைட்டானிக்கிற்கு எந்த பதிலும் தரவில்லை.
டைட்டானிக்கில் பெண்களும், குழந்தைகளும் உயிர்ப்படகில் ஏற்றப்படும் நேரம், வாணவெடி மூலம் அபாய சமிக்ஞை தரப்பட்டது. கலிபோர்னியனின் இரண்டாம் அலுவலர் ஸ்டோன் மற்றும் கிப்ஸன் இந்த சமிக்ஞைகளைப் பார்த்து கேப்டன் ஸ்டேன்லி லார்டிடம் கூறியும் அவற்றை அவர் பொருட்படுத்தவில்லை. இத்தனைக்கும் டைட்டானிக் விபத்தான இடம் கலிபோர்னியனிடம் இருந்து 19மைல் தொலைவிலேயே இருந்துள்ளது. கேப்டன் லார்டின் இந்த அலட்சியப் போக்கு எல்லோராலும் கண்டிக்கப்பட்டது. காலை 4:20 மணிக்குத் தன் இடத்திலிருந்து கிளம்பி, சுமார் 9 மணிக்கு விபத்து இடத்திற்கு வந்த கலிபோர்னியன் மிதந்து கொண்டிருந்த பிணங்களையும், மரத்துண்டுகளின் சிதறல்களையும் மட்டுமே காண முடிந்தது.
No comments:
Post a Comment