Sunday, 30 July 2017

புதியமாதவி கவிதை , மும்பை



கவிதை: அரபிக்கடலோரம்... அலை...1

- புதியமாதவி, மும்பை 
puthiyamadhavi_abcde.jpg - 16.63 Kbஎன் கடற்கரைகளை..
நான் மூன்று சக்கர வண்டிகள் ஓட்டி
விளையாடிய புல்தரைகளைக் காணவில்லை.
என் கடற்கரையில்
அன்று அலைவீசியது
உண்மைதான்.
ஆனால்-
அள்ளிவந்தவை முத்துக்கள் அல்ல
சிப்பிகளும் கழிவுகளுமே..
என் கடலலைகள்
மீண்டும் மீண்டும் அள்ளிவந்து
என் மடியில் கொட்டின.
தூர எறிந்த சிகிரெட் டப்பா
கை உடைந்த மரப்பாச்சி
பால் டின்
இப்படி எங்கள் அலமாரியின் கழிவுகளை
என் கடலலைகளும் சுமந்தன.
அலைகள் சுமந்துவரும்  கழிவுகளை
ஓடி ஓடிப் பொறுக்குவோம்
பொறுக்கியதை எல்லாம் சேர்த்துச் சேர்த்து
புற்தரையில் குவிப்போம்
யார் குவியல் பெரியதோ
அவர்தான் அன்றைய ஆட்டத்தின்
ஹீரோ..
அவர் கையில்தான் துப்பாக்கி
மற்றவர்கள் எல்லோரும் அவரின் துப்பாக்கி ரவையில்
எப்படியும் ரத்தம் கொட்டி சரிந்து
விழுந்தே ஆகவேண்டும்..
அன்று துரத்தும் ரவையின் குண்டுகள்
சரிந்து விழுவதில் ஒட்டிக்கொள்ளும் சாக்கடை அழுக்கு
இருட்டியவுடன் இந்த எல்லா விளையாட்டுக்கும்
சேர்த்தே வாங்கும் தர்ம அடிகள்
எதுவுமே வலித்ததில்லை.
எங்கள் குடியிருப்பில் கொடிகள் பறக்கும்
எங்கள் சாக்கடைகள் மூடப்பட்டு தற்காலிகமாக
தலைவர்களுக்கு மேடைகள் போடப்படும்
எல்லா தலைவர்களும் மேடைகளில் முழக்கமிடுவார்கள்
"தமிழ் வாழ்க..! தமிழர் வாழ்க!!"
மறுநாள் மீண்டும் எங்கள் சாக்கடைகள் முகம் காட்டும்.
நாங்கள் நடப்போம்
எங்கள் குடியிருப்பின் கதவுகள் கூட
சாக்கடைகளுக்காக மூடப்படுவதில்லை
இன்று-
என் கடற்கரைகளைக் காணவில்லை
என் புல்தரை விளையாட்டு மைதானத்தில்
நெடுஞ்சாலையின் கார்கள் பவனி வருகின்றன.
கடலை நிரப்பி, தரையாக்கி
விண்ணுயரம் காட்டும் கட்டிடங்கள்
திறந்தவெளி திரையரங்கு
நட்சத்திரம் தெரியாத வானம்
எல்லாமே.. எல்லாமே வசப்பட்டுவிட்டன.
ஆனாலும் மகிழ்ச்சிக் கடலின் அலைகள்
எங்கள் கால்களை மட்டும் நனைக்கவே இல்லை.
ஏன்?
குடிசைகள் இன்னும் குடிசைகள்தாம்.
என் மக்கள் இன்றும்..
தீப்பெட்டிக்குள் அடைக்கப்பட்ட குச்சிகள்தாம்.
குச்சிகள் உரசினால்
தீ ..பிடிக்கும்
ஆனால்..
சாதி மழை
அரசியல் மழை
பதவி மழை
பண மழை
..
ஏதொ ஒரு மழையில் என் குச்சிகள் நனைந்து
உரசினாலும் பற்ற வைக்க முடியாத ஒடிந்த குச்சிகளாய்..
இதோ என் குடிசைகள்..
என் குடிசையின் கதவுகள்
சாக்கடைகளுக்காக..
இன்னும் திறந்தே இருக்கின்றன.
கடலோரக் கவிதை..
*
மாடியில் இருந்து
துப்பினால்
குடிசையில் விழும்.
குடிசையில் நின்று
துப்பினால்
மாடியே விழும்"
      - கவிஞர். காசி. ஆனந்தன்
        நறுக்குகள் கவிதை நூலில்.

அரபிக்கடலோரம்.. அலை 2
  
puthiyamadhavi_abcde.jpg - 16.63 Kbஎன் மூச்சில் இன்னும் தொடர்கின்றது திராவிடக்காற்றின் மிச்சம்.
எங்கிருந்து இந்த தொடர்ச்சி.
கருவில் தொடர்ந்த கழகப்பயிற்சியா?
நினைவில் இல்லை.
எத்தனைப் புயல், எத்தனை இடி , எவ்வளவோ மழை..
அனைத்திலும் ஆடிப்போய் ஒடிந்துவிட்டோம் என்று
உருவம் மாறி நின்றாலும் மீண்டும் மீண்டும் இந்த சுவாசம்.
நான், என் இனம், என் மண், என் மனம்
எதுவும் அறியாத வயதில்
என்னை ஆட்கொண்ட காற்றின் மிச்சம்.
அன்று..
09 டிசம்பர் 1961
அரபிக்கடலோரம் அறிஞர் அண்ணாவின் குரல்.
நெப்பூ பூங்காவில் மனித அலைக்கூட்டம்.
கடலின் அலைகள் அனைத்தும் சேர்ந்து வந்து மோதி நின்ற காட்சி..
சின்ன உருவம்.. ஆளுயர மாலை.. அதையும் ஐந்துபேர் சேர்ந்து
தூக்கிப்போடும் காட்சி..
கூட்டத்தில் கடைசியாக பெருமாள் தாத்தாவின் தோள்களில் நான்.
என்ன பேசினார்?
யார் இவர்? ஏன் இவ்வளவு கூட்டம் ?
எதுவும் புரிகின்ற வயதில்லை.
மேடையில் இருப்பது என் தந்தையும் அவருடைய தோழர்களும்.
எனக்கு அவர்களை மட்டும் பார்க்க வேண்டும்..
நான் அவர்களைப் பார்த்தேன் என்பதை நாளை மறுநாள் பெருமையாக
சொல்லவேண்டும்.
அவ்வளவுதான்.
பார்த்தேன். பம்பாய் தி.மு.க. அண்ணாவுக்கு இதயம் அளித்தல்
ஓர் இதயம் வெள்ளியில் செய்யப்பட்டு ஷீல்டாக.
அதைப்புன்னகையுடம் கொடுக்கின்றார் என் தந்தை.
தந்தையின் முகத்தில் தெரிந்தப் புன்னகை, ஆனந்தம்..
அப்படி ஒரு முகப்பொலிவை அதன் பின் என்றுமே நாங்கள் கண்டதில்லை.
அது என்ன ஆனந்தம்?
அப்போது அறிஞர்  அண்ணா அவர்களை யாருமே தங்களின் இல்லத்திற்கு
அழைக்கவில்லை. அதை அண்ணாவே சொல்லுகின்றார்.
"என் தம்பிகள் என்னை அன்புடன் கவனித்தார்கள். ஆனால்  யாருமே
"அண்ணா வா என் வீட்டுக்கு!" என்று அழைக்கவில்லை. அழைக்காத
வருத்தமில்லை, ஆனால் அழைக்கமுடியாத வாழ்க்கைத்தரத்தில் தான் என்
தம்பிகளின் வாழ்க்கைத்தரமிருக்கின்றது என்பதை எண்ணித்தான் வருத்தம்"
அண்ணா அவர்கள் சொன்னது அன்று உண்மைதான்.
அண்ணாவை அழைத்துச் சென்றால் அவருடைய தம்பிகள் எத்தனைபேர்
இல்லத்தில் அவரை அமர வைப்பதற்கு நாற்காலி இருந்திருக்கும்?
எண்ணிப் பார்க்கின்றேன்.
இது மட்டுமா..?
அன்று அப்படித்தான்..
தமிழ்ச் சினிமா பார்க்க குடும்பத்துடன் அனைவரும் மகிழ்வூர்தியில்
ஒவ்வொருவர் குடும்பத்திலும் ஒன்றிரண்டல்ல.. ஐந்தாறு பிள்ளைகள்.
நானகைந்து குடும்பம்.. எழெட்டு மகிழ்வூர்தி..
எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்..
திரையரங்கில் நுழைந்தவுடன்.. ஒரே கசமுசா..
சத்தம், குழப்பம்..விசாரித்ததில் அவர்கள் பார்க்க வந்தக்காட்சி முடிந்துவிட்டது.
மிகவும் முக்கியமான காட்சியாம். அவர்களைப் பொறுத்தவரையில்.
என்ன காட்சி தெரியுமா?
கலைஞர் அவர்கள் பூம்புகார் படத்தின் ஆரம்பத்தில் பேசும் காட்சி.
படம் பார்க்காமலேயே திரும்பி வந்தோம்.
முதுகலை படிக்கும்போது தந்தையாரிடம் அறிஞர் அண்ணாவின் பார்வதி பி.ஏ.
நாவலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது நான் சொல்ல வேண்டிவந்ததைச்
சொல்லாமலிருந்திருக்கலாம்.
"அறிஞர் அண்ணாவின் நாவலில் பிரச்சார நெடி.. மிகச் சிறந்த இலக்கியம்
படைக்கும் திறமை இந்த மாதிரி பிரச்சாரத்தில் வீணாகிவிடுகின்றது.."இப்படி
சொல்லி வைத்தேன். விளைவு..
அறிஞர் அண்ணாவை விமர்சிக்கும் அளவுக்கு நீ வளர்ந்துவிட்டாயா..?
அவ்வளவுதான்.. பிறகென்ன.. என் முனைவர் படிப்பு கனவாகிவிட்டது.
முதுகலையில் வாங்கிய தங்கப் பதக்கம்கூட தந்தையின் மனசை மாற்றவில்லை..
இப்படி .. இப்படித்தான்.
சொல்லிக்கொண்டே போகலாம். கவிஞர் அண்ணன் அறிவுமதியும் இதைப்போல
அவருடைய தந்தையாரைப் பற்றியும் நிறைய என்னிடம் சொல்லியிருக்கின்றார்.
இது ஒரு தலைமுறை..
எங்கள் தந்தையர் தலைமுறை.
ஆரியமாயையும் கம்பரசமும்தான் எங்களுக்கு அன்று வாசிக்க கிடைத்தப் புத்தகங்கள்.
திராவிடநாடு, விடுதலை, நம்நாடு ..இதெல்லாம் தான் எங்களுக்கு வாசிக்க
கிடைத்தப் பத்திரிகைகள்.
வீட்டின் சூழல் இப்படி..
பள்ளியிலோ  இந்துத்துவா கொள்கைகளின் உரைகல்
கல்லூரியோ கத்தோலிக்க சீடர்களின் புனித பைபிள்
நாத்திகம் கொள்ளைதான். ஆனால் அதுவே எங்களிடம் திணிக்கப்படவில்லை.
அன்று வந்தவர்கள் தங்கியது எங்கள் மாடி அறையில் ..
அவர்கள் வந்தால் போனால் தங்க வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காகவே
மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தை ஊரில் வைத்துவிட்டு வாழ்ந்த
வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள்..
மதுரையில் மாநாடா, திருச்சியில் மாநாடா...?
சந்தோசமாக இருக்கும். ஏனென்றால் கட்டாயம் தன் தோழர்கள் புடைச்சூழ
எங்கள் ஒவ்வொருவரையும் தந்தை விடுதிக்குப் பார்க்க வருவார்..
அவர் தோள்களில் நீண்ட நேரியல் தொங்க வெள்ளை நிற ஜிப்பாவில்
வந்திறங்கும்போது.. பெருமையாக இருக்கும். எல்லோரும் விடுதியில் அன்று
என்னையே பொறாமையுடன் பார்ப்பது போல ஓர் ஆனந்தம்...
வளர வளர எல்லாம் புரிந்தது.
புரிய புரிய மனசில் வெறுப்பும் வேதனையும்தான் மிஞ்சியது.
இப்போதும் இவர்களில் சிலர்.. இதே அரபிக்கடலின் காற்றில்
காற்றில் கரைந்த கற்பூரமாய்
பார்க்கப் பார்க்கப் பதைக்கின்றது மனசு.
எதை எல்லாமோ சாதிக்கப் போகிறொம் என்று எழுந்த அலைகள்
எங்கே போனது?
இப்போதும் தலைவர்கள் வருகின்றார்கள்.
வந்தால் தங்குவது ஐந்து நட்சத்திர ஹொட்டலில்.
போய்வர ஆகாயவிமானம்தான்.
அன்றிருந்த வறுமை இன்று இல்லை.
ஆனால் யாருக்கும் சொல்லத்தான் முடியவில்லை.
"நானே வருகின்றேன். என் செலவில் என்று."

அப்படிச் சொன்னவர்கள் இருந்தார்கள் என்று தான் எழுதமுடிகின்றது.
இருக்கின்றார்கள்... என்று எழுதும் பாக்கியம் என் எழுத்துக்களுக்கு கிடைக்கவில்லை.
இது திராவிட இயக்கத்திற்கு மட்டுமல்ல..
காந்தியம் பேசிய காங்கிரசு..
பொதுவுடமை பேசிய கம்யூனிசம்..
அரபிக்கடலோரத்தில் இருக்கும் எல்லா இயக்கக் கொடிகளின் கதையும்
ஒரே கதைதான். தலைப்பை மட்டும் மாற்றினால் போதும். அப்படியே
அதே தொண்டர்கள்.. ஒரே மாதிரியான தலைவர்கள்..
ஒரே மாதிரியான அறிக்கைகள், பிரச்சாரங்கள், உத்திகள்
ஊமையாக அனைத்தைக்கும் சாட்சியாக அரபிக்கடலோரம்
அதே அலைகளுடன் நானும் .....
கடலைத் தாண்டாத அலையாய்..
கரையைத் தொடும் கனவுகளுடன்
நித்தமும் ஓயாதப் போராட்டம்..
சலிப்படையவில்லை. தோற்றுவிடுவேன் என்ற அச்சமில்லை.
கால்களை நனைத்த ஈரம்
மனக்கண்களை ஈரமாக்கும் நாட்களுக்காக ..
மீண்டும் மீண்டும் என் அலைகள்..
அலையின் கவிதை..
நடக்கும் என்ற
கனவுகளில் நடந்தார்கள்
கிடைக்கும் என்ற
நினைவுகளில் வாழ்ந்தார்கள்
இன்று
அவர்களே கனவாகிப் போனார்கள்
அந்தக் கனவுகளின்
ஈரக்கசிவாய்
எங்கள் அலைகள்
உங்கள் கரைகளில்.

 அரபிக்கடலோரம்..3

puthiyamadhavi_abcde.jpg - 16.63 Kbதேசியம் இல்லாத தேசம் 
எங்கள் இந்தியத் தேசம்.
கனக-விசயனின் தலையில் 
கல்சுமக்க வைத்தது எங்கள் சரித்திரம் என்றாலும்
கார்க்கில் போரில் வீரமரணம் எங்களுக்காக எழுதப்பட்டிருக்கும் 
இன்றைய வரலாறு.
இதில் எங்களுக்கு வருத்தமோ வெட்கமோ இல்லை.
இந்த வரலாற்றின் அலைகளில் காந்தியம் என்ற பேரலை வீசிய போதும் நாங்கள் அடித்துச் செல்ல
முடியாத அழிக்க முடியாத எழுத்துகளை எழுதியிருக்கின்றோம்.
அதே நேரத்தில் காந்தியத்தின் சத்தியாகிரகத்தில் எங்கள் சரித்திரமும் கரைந்திருக்கின்றது.
அந்தக் கரைசல் வெறும் பெளதிகக் கரைசல் அல்ல,
சத்திய சோதனையை அக்னி சோதனைக்கு உள்ளாக்காத நம்பிக்கை.
அந்த நம்பிக்கை பலரின் வாழ்க்கையானது.
இந்த அரபிக்கடலோரம் இந்திய வரலாற்றில் எத்தனையோ பக்கங்களை நிரந்தரமாக்கிவிட்டது.
இதில்...
பிரிக்காத, படிக்காதப் பக்கங்கள் மட்டும் எங்களுடையவை.
ஏனேனில் யாரும் படிக்க வேண்டும் என்பதற்க்காக எழுதப்பட்ட பக்கங்கள் அல்ல எங்களுடையவை.
எழுதத் தெரியாத மக்கள் எத்தனையோ எழுதமுடியாதச் சரித்திரங்களை தன் வாழ்க்கையில்
எழுதினார்கள்.
இன்று-
அந்தச் சரித்திரத்தின் எச்சமாக நிற்பவை சிலரின் பெயர்கள்.
அந்தப் பெயர்கள் மட்டுமே கடலோரம் இருக்கும் கல்வெட்டுகள்.
காந்தி, பகவத்சிங் இதெல்லாம்தான் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைத்தப் பெயர்கள்.
அட... காந்தி என்பது தனி நபரின் பெயரல்ல..
அது ஒரு குடும்பத்தின் பெயர்.
இதை எடுத்துச் சொன்னபோது அதனாலென்ன.., அடுத்தக் குழந்தைக்கு காந்தியின் பெயரை
வைத்து விடுகின்றேன் .."மோகன்" என்று..
இப்படி பெயர் வைத்துக் கொண்டு வாழ்ந்தார்கள்.
அவர்களில் ஒருவர்... தொழிலாளி..
தனக்குப் பிறந்தப் பெண்குழந்தையை...இரண்டு மாதம்கூட ஆகாத தன் குழந்தையை எடுத்துக்
கொண்டு மும்பையிலிருக்கும் கடலோரக்கரையில்- சிவாஜி பார்க்கில்... அன்று நடந்த
மாபெரும்பேரணியில் காலையிலிருந்து காத்திருக்கின்றார்...
கூட்டம்.. அலைமோதுகிறது...
அந்தக் காந்தியப் பேரலையில் நனைய வந்திருக்கும் பச்சிளங்குழந்தை அழுகிறது..
வெயில் தாங்காமல்.. கூட்ட நெரிசலில்..பசித்து..
"வேண்டாம் நமக்கு இந்த அலையின் ஈரம்..
இந்த அகிம்சை விடுதலையில் நம் அடிமைத்தளை உடையப் போவதில்லை.
இவர்களுக்காக நீங்கள் ரத்தம் சிந்தியது போதும்
என் கண்களையும் கட்டி விடாதீர்கள்
நான் எனக்கான விடுதலையைப் போராடியே பெறுவதற்குப் பிறந்துவிட்டேன்
வேண்டாம் எந்த மகாத்மாவும் ..
எனக்குத் தேவை மனிதர்கள் மட்டும்தாம்..!."
அழுதது அழுதது....
இன்னும் அழுதுக் கொண்டே இருக்கிறது.
ஆனால் கேட்காதச் செவிகள்..
அப்படித்தான் அந்தக் குழந்தையுடன் அவரும் ...
அந்தக் குழந்தையின் அழுகுரல்..
காந்தியின் கூடாரத்தில் முட்டி மோதி அவர் மெளனத்தைக் கலைத்துவிட்டதா ?
பின் எப்படி நிகழ்ந்தது அந்த நிகழ்வு..!
காந்தியின் உதவியாளர் கூடாரத்திலிருந்து வெளியில் வந்தார்.
அழுகின்ற குழந்தையைக் கையில் ஏந்தி நிற்கும் செல்லையாவிடம்.
செல்லையா கண்களில் நீர்மல்க...
எங்கள் காந்தி-
என் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன்...!
கண்ணப்பனுக்கு காட்சியளித்த  சிவனின்கதை வெறும் புராணம்..
இந்தச் செல்லையாவுக்கு அன்று காந்தி கொடுத்தது?
செல்லையாக்களின் வாழ்க்கையில் அதுவே வரம்..
காந்தி அவர்களுக்குக் கொடுத்த வரம்.
செல்லையாவின் பெண்மகவுக்கு காந்தி வைத்தப் பெயர் கஸ்தூரி..
ஆம் கஸ்தூரி...
அவருடைய வாழ்வின் துணை
காந்தியின் சரிபாதி..
கஸ்தூரியைக் கையில் ஏந்திக் கொண்டு செல்லையா கடலோரம் நின்றபோது..
காந்தி என்ற சரித்திரத்திற்கு தலை வணங்காதக் கடல் அலைகள்
செல்லையா என்ற உழைப்பாளியின் நம்பிக்கைக்கு முன்னால் தலைவணங்கியது.
இந்தச் செல்லையா அவர்கள் தமிழ்நாட்டில் கோவில்பட்டி வட்டாரத்தைச் சார்ந்தவர்,
வேதமுத்து என்ற தமிழ்ப்பண்டிதரின் இளவல்.
இன்று காந்தியின் கஸ்தூரி.. நெல்லை மாவட்டத்திலிருக்கும் சேரன்மகாதேவியில் தன் பேரன்
பேத்திகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
செல்லையா இன்று இல்லை...
யாருக்குத் தெரியும்... எத்தனை பேருக்குத் தெரியும்...
தன் இரண்டு மாத அழுகுரலில் காந்தியை எழுப்பிய கஸ்தூரி இவர் என்பது...
பெரும் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும்போது தன் குழந்தைகளுக்குப் பெயர் வைத்து
அதையே பெரியப் புகைப்படம் எடுத்து நடு அறையில் மாட்டி வைத்துக் கொண்டு வாழ்கின்ற
இன்றைய விளம்பரங்கள் அறியாத செல்லையாக்கள் எத்தனை எத்தனையோ பேர்..
காந்தியம் வெறும் பெயர்களுடன் மட்டுமா நின்று போனது..
அதுவே பலரின் வாழ்க்கை..
அதுவே பலருக்கு வேதம்..
இந்த நம்பிக்கையில் மிகச் சிறந்த சமுதாயப் புரட்சிகளைச் செய்தக் காந்தியவாதிகளின்
அவர்களின் கதைகள் நிறையவே உண்டு.
புரட்சிகரமானக் கருத்துக்களையும் சீர்திருத்த எண்ணங்களையும் வருணாச்சிரம தத்துவத்திலிருந்து
விலகாமல் கொடுத்த காந்தியால் இவர்கள் வாழ்க்கை தரம் உயர்ந்ததா..?
ஆனால் இவர்களின் நம்பிக்கையில் இவர்களின் வாழ்வியல்தரம் உயர்ந்தது.
எண்ணிப்பார்க்க முடியாதப் புரட்சிகளை தங்கள் வாழ்க்கையாக்கி வாழ்ந்தவர்கள் பலர்.
விதவைகளின் திருமணம்.. புரட்சியாக மட்டுமே பேச்சிலும் எழுத்திலும் வாழ்ந்த காலம்
இவர்களில் ஒருவர்... தன் கடும் உழைப்பால் உயர்ந்தவர்.
காந்திதான் அவருக்கு எல்லாமே..
அவர் குடும்பத்தில் மூத்தமகன் அகாலமரணம் அடைந்த நேரம்..
இரண்டாவது குழந்தையைச் சுமந்திருக்கும் நிறைமாதக் கற்பினியாய் மருமகள்.
வீட்டின் மூத்த மருமகள்..
இனி அவள் வாழ்க்கை...?
இனி அவளுடைய பிள்ளைகளின் எதிர்காலம்..?
சொத்தும் பணமும் சமூகத்தில் எல்லாவற்றையும் அவளுக்குத் தந்துவிட முடியுமா?
அவள்.. அவளுடைய குழந்தைகள்.. அவளுடைய எதிர்காலம்..
மருமகள்.. மறு மகள் அல்லவா..
அவருக்கு அடுத்தடுத்து ஆண்பிள்ளைகள்...
அடுத்தவன் கல்லூரியில் .இளைஞன்.
பட்டதாரிக் கனவுகளுடன்..!
அவனை அவர் அழைத்தார்..
அந்த விதவைக்கு வாழ்வு..
அவன் மறுத்தான்..
அவளும் மறுத்தாள்..
வாழ்க்கையை அதன் யாதார்த்தங்களை.. தந்தையாக  ஒரு நண்பனாக..
அவர் சொன்னபோது சரி என்றும் சொல்லாமல் வேண்டாம் என்றும் சொல்லமுடியாமல்
அவர்கள் இருவரும் மெளனத்தில் கரைந்துபோனார்கள்..
இன்று அரபிக்கடலோரம்  அவர்களின் வாழ்க்கைக்கு சாட்சியாய்..
அன்று அவர் செய்தக் காரியம்..
அவரையும் அவரின் காந்திய கண்மூடித்தனங்களை எதிர்த்தவர்களையும்
வாழ்த்த வைத்தது.
அவர் தன் செயல் பாடுகளில் இதை எல்லாம் புரட்சி என்று நினைத்தோ
தன்னை ஒரு புரட்சிக்காரன் என்று காட்டுவதற்காகவோ செய்யவில்லை.
தந்தையின் பெயர் சொல்லும் தனயனாக..
தந்தையின் வணிகத்தை இந்தக் கடலோரம் நிலைநிறுத்தி நிமிர்ந்து நிற்கும் மனிதனாக..
வாழ்ந்து கொண்டிருக்கும் அவன்..
இன்று அரபிக்கடலோர தமிழ் நெஞ்சங்களில் மதிப்பிற்குரியவர்.
அந்தக் குடும்பம் தன் கிராமத்தில் ஒரு நிலத்தை அப்படியே இனாமாக சுவாமி நித்தியானந்த சரஸ்வதி
அமைப்பினர் நடத்தும் மருத்துவமனைக்கு வழங்கிவிட்டார்கள்.
பெல்ஜியம், ஜேர்மனியிலிருந்து மருத்துவர்கள் வந்து சேவை செய்யும் மருத்துவமனை.
அந்த மருத்துவமனைக்கு மண்ணில் இடம் கொடுத்த இந்த மனிதர்களின் சரித்திரம் மட்டும் பதிவு
செய்யப்படாத பட்டாவாகவே இன்னும் ...
இதைப் பற்றி எல்லாம் அவர்களோ அந்தக் குடும்பத்தினரோ கவலைப்பட்டதே இல்லை.
கல்கி இதழ் இதைப்பற்றிய சிறப்பிதழ் கொண்டுவந்தப் போது கூட இவர்களின் பெயர்கள் விடுபட்டு
போயின..
ஏன் என்று கேட்ட யாருமில்லை.
இவர்கள் எல்லோரும் இன்னும் விடுபட்டவர்கள்தாம்..!!
இவர்களின் இன்றைய கோவில்களும் கடவுள் நம்பிக்கையும் இந்த தேச வரலாற்றின் நிகழ்வுகளுடன்
சம்மந்தப்பட்டவை.
பத்து நாட்கள்... இவர்கள் கொண்டாடும் கண்பதி விழா சுதந்திரப் போராட்டத்தில்
திலகரால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுதானே...
வெள்ளையன் மத விசயத்தில் மட்டும் தலையிட மாட்டான்.
அதனாலேயே கண்பதி விழா.. விநாயகர் சதுர்த்தி..
ஒருநாள் மதச்சடங்கு.. பத்து நாட்களுக்கு விழாவானது.
அதில் இவர்களும் இருந்தார்கள்..
அந்தக் கோவில், அந்த விழாக்கள் இன்றும் அரபிக்கடலோரம் தொடர்கின்றன..
ஆனால் அந்தப் பூசைகள் மட்டும்தாம் இவர்களின் நம்பிக்கை..
இவர்களின் நம்பிக்கைக்காக யாரோ மணியடிக்க..
யாரோ கற்பூரம் ஏற்ற..
யாரோ மந்திரம் சொல்ல..
யார் யாரோ வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்...
இவர்கள் மட்டும் அதே நம்பிக்கையுடன்...
இன்னும் அதே விழாக்களில்..
பக்திப் பரவசத்துடன்..
இப்படி ஆரம்பித்த கண்பதி விழாக்களில் இவர்களின் தலைவர்கள்..
இவர்களின் சாதிகள்
இவர்களின் பணம்
இவர்களின் அரசியல்
இவையே இன்று இவர்களின் போராட்டமாகிவிட்டது..
இந்தப் போராட்டத்தில் இவர்களின்  இரத்தம் சிந்தப்படுகிறது...
அரபிக்கடலின் தாதாக்களை இந்த விழாக்கள் வெண்சாமாரம் வீசி வரவேற்பது..
தொடர்கதையாகிவிட்டது..
அடக்கப்பட்ட இவர்கள்
ஒடுக்கப்பட்ட இவர்கள்
பணமும் அரசியலும் பெற்றுத்தரமுடியாத
அந்தஸ்தை, தலைமையை
"தாதா" என்ற ஒற்றை வார்த்தையில் கையகப்படுத்தினார்கள்..
வெள்ளைப் பணத்திற்கு வியர்வைச் சிந்த வந்தவர்களில் சிலர்
கறுப்பு பணத்தின் வங்கிகளாக ஆக்கப்பட்டார்கள்.
இந்த நாட்டின், இந்தச் சமூக அமைப்பின் தலைவிதி..
பொருளாதரச் சீர்திருத்தங்கள் பெற்றுத் தர முடியாத விடுதலையை இவர்கள் இவர்களுக்குத் தெரிந்த
ஏதோ ஒரு வழியில் எட்டிப் பிடித்தப் போது..
அரபிக்கடல் அதிர்ந்தது..
கடலலை எழுதிய கவிதை..
நம்பிக்கை
வாழ்க்கையானது
இவர்கள் வாழவில்லை
நாற்றங்காலில்
சோளக்காட்டில்
வாழைத்தோப்பில்
இவர்கள் வாழ்க்கை
எழுதப்படவில்லை.
சாராயக்காட்டில்
கஞ்சா தோப்பில்
விலைமாதின் வீட்டில்
இவர்களுக்கான
விடியல்..
சட்டத்தின்
சாட்சிக்கூண்டில்
அரபிக்கடலின் அலைகள்.

 அரபிக்கடலோரம்..4
puthiyamadhavi_abcde.jpg - 16.63 Kbஅரபிக்கடலோரம்.. தரையிறங்கும் விமானங்கள் இறங்குவதற்குமுன்
விண்ணாளாவிய அடுக்குமாடிகள்
போட்டியாக குடிசைகளின் அணிவகுப்பு.
சின்னச் சின்ன தீப்பெட்டிகளைத் தெருவோரம் சிதறிப்போட்டிருப்பது போல .
இன்றும் இதுதான் காட்சி..
என்னவெல்லாமோ திட்டங்கள் அறிவிப்பில்..
உலகவங்கியிடம் வாங்கிய கடனுக்கு கணக்கில்  வட்டியைச் செலவுச் செய்திருந்தால்கூட
சாக்கடைகள் மூடப்பட்ட வீடுகளும் கழிவறைகளும் சாத்தியப்பட்டிருக்கும்.
இன்றும் -
கைகளில் தண்ணீர் டப்பாவுடன் கழிவறைக்காகக் காத்திருக்கும் மக்கள்
ஓட்டு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கும் அவலம்.
ஒரு நாள் மேடைக்காகவும்
அந்த மேடையில் உச்சரிக்கப்படும் தன் சரித்திரப்புகழ்ப் பெற்ற பெயருக்காகவும்
தோள்களில் போர்த்தப்படும் பொன்னாடைகளுக்காகவும்
இந்த மக்கள் -
காலம் காலமாய்
இந்தக் கடலோரம் சோரம் போகும் கதை தொடர்கதை...
ஆசியாவில் மிகப்பெரிய குடிசை என்றழைக்கப்படும் தாராவி இந்த வரிசையில் முதலிடத்தில்..
தாராவிக்குத் தனிச்சிறப்புகள் பல உண்டு.. உலகின் மிகச்சிறந்த தோல்பொருட்களின் தயாரிப்பும்
விற்பனையும் இங்கேதாம்..இதில் முன்னிற்பவர்கள் தமிழர்கள்.
இங்கேதான் தோல்பதனிடும் சிறு தொழிற்சாலைகள்
அதில் கூலி வேலைச் செய்யத்தான் நம்  தமிழர்கள் வந்தார்கள்.
அந்தத் தொழிற்சாலைகளில் மிகப்பெரிய கிணறுகள் அமைப்பு கொண்ட குழிகள் உண்டு. அதில்
தோல்கள் மிதந்து கொண்டிருக்கும். அமிலம்/சுண்ணாம்பு கலந்த தண்ணீர் நிரம்பிய கிணற்றுக்குழிகள்..
அங்கே அரைக்கால் டிரவுசருடன் கிணற்றில் இறங்கி தோலைச் சுத்தம் செய்யும் பணியைச் செய்பவர்கள்
தமிழர்கள்.. தோலின் நாற்றம் குடலைப் பிடுங்கி வெளியில் தள்ளும். பகலெல்லாம் சுண்ணாம்புத் தண்ணீரில்
வேலை பார்த்தவர்கள் இரவில் பட்டைச் சராயத்தை வயிற்றில் தள்ளினால்தான் கண்மூடித் தூங்க முடியும்..
இப்படித்தான் தமிழர்கள் பலரின் வாழ்க்கை இங்கே ஆரம்பமானது..
இந்த தோல்பதனிடும் தொழிலில் அதிகமாகக் கூலி வேலைச் செய்தவர்கள் தமிழ் நாட்டின் தென்பகுதியைச்
சார்ந்த ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள்தாம்..
இவர்களில் சிலர் அத் தோல்களை வாங்கி விற்க ஆரம்பித்தார்கள்.. பணம் புரண்டது.
அதன் பின் -
அவர்கள் எல்லாரும் என்னவோ பரம்பரை பரம்பரையாக சேட்டுகளாக பணத்தில் புரண்டது போல
ஒரு தோரணை.. அதட்டல், அதிகாரம்.. அடியாள், சின்னவீடுகள்.
தமிழ்நாட்டில் நிலபுலன்கள்
வீடு வாசல்கள்..
தோல்களை அடுக்கி வைக்க அன்று கட்டப்பட்ட அறைகள்..(Godown)
இவர்களின் வீடுகளானது..
அன்று வாழ்ந்த சேட்டுகளின் கைகளில்தான் இந்த அறைகளின் ஒட்டுமொத்த குத்தகையும்..
அவர்கள் தன்னிடம் வேலைப் பார்ப்பவர்களுக்கு இந்த அறைகளை ஒதுக்கினார்கள்..
இன்று இந்தச் சின்ன அறைகளின் மதிப்புகூட பல இலட்சங்கள்..
 
அரபிக்கடலோர தமிழ்க்குடிகளின் பொருளாதரப்பலம்
மார்க்சின் தத்துவங்களையே ஒரு புரட்டு புரட்டிப்போட்டது.
ஆமாம்.. இப்படிப் பணபலம் பெற்றவர்கள் பெரும்பாலோர் ஒடுக்கப்பட்ட/தாழ்த்தப்பட்ட இனமக்கள்.
மும்பையின் சேட்டுகள் பரம்பரை..
சொந்த ஊரில்..?
இவர்களின் இந்தப் பணபலமும் ஆள்பலமும் தமிழ் மண்ணில்
மிகப்பெரிய கேள்விக்குறியாயின..
இவர்களின் பலம் சாதியப்பிரிவுகளில் குளிர்காய்ந்து கொண்டிருப்பவர்களுக்குச் சிம்ம சொப்பனமானது.
தென் தமிழ் மாவட்டங்களில் சாதியச்சண்டைகளின் ஒர் ஆழ்கடல் தொடர்பு
இந்த அரபிக்கடலோர தமிழனின் ஓர் ஆளுமைப் போராட்டம்..
இவர்கள் கண்விழித்தார்கள்..
இவர்களின் பார்வையில் விடியலாக வந்தவர்கள் தந்தை பெரியார்.. டாக்டர் அம்பேத்கர்.
இந்த இருபெரும் தலைவர்களும் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டு பேசுகின்ற அளவுக்கு
சில தமிழர்களுடன் நெருக்கமாக இருந்தார்கள்..
அன்று..சரியாக அரைநூற்றாண்டுக்கு முன்..1953..
இவர்களில் சிலர்..சாதி ஒழிப்பு மாநாடு நடத்த தீர்மானித்தார்கள்.
இவர்களுக்கு ஒத்துழைப்பு தந்தவர்கள். மறைந்த நாஞ்சில் மனோகரன், சத்தியவாணிமுத்து போன்றவர்கள்.
என் தந்தையார் அமரர் திரு வள்ளிநாயகம், அமரர் தொல்காப்பியனார், அமரர் தியாகராfன் ஆகியோர்
திரு. த. மு. பொற்கோ, த.மு.ஆரியசங்காரன், திரு. சீர்வரிசை சண்முகராசன் இவர்கள் எல்லாரும்
கொண்ட
குழு ஒன்று டாக்டர் அம்பேத்கரைப் பார்ப்பதற்காக அவர் சிகிச்சைப் பெற்றுவந்த கொலபாவில்
இருந்த தனியார் மருத்துவமனைக்குப் போனார்கள்..
அங்கே காவலாளி அவர்களை அனுமதிக்க மறுத்தான்.
தங்களின் பெயர்களை  ஒரு துண்டுக்காகிதத்தில் எழுதி கொடுத்துவிட்டார்கள்..
டாக்டர் அம்பேத்கர் அவர்களை உள்ளே அனுப்பும்படி சொல்லி அனுப்பினார்.
வந்துப் பார்க்கின்றார்கள்.. படுக்கையில் அந்த மாமேதை..
தளர்ந்த உடல்.. ஏமாற்றிய அரசியல் தளங்கள்..உடைந்த மனம்..
இந்தக் கோலத்தில் அவர்..
இவர்களோ அவரைச் சிறப்பு விருந்தினராக தங்கள் மாநாட்டுக்கு அழைக்கப் போயிருக்கின்றார்கள்..
சாதி ஒழிப்பு மாநாடு என்று சொன்னவுடன் எழுந்து உட்கார்ந்து உற்சாகத்துடன் அவர் பேச ஆரம்பித்தாராம்..
யார் யாரை அழைக்கின்றீர்கள்? - அவர் கேட்டார்.
இவர்கள் சொன்னார்கள்.. மாநில வாரியாக யாரெல்லாம் என்று.
"from south?" - அவர் கேட்டார்..
மிஸ்டர் ஈ.வெ.ரா..- இவர்கள் சொன்னார்கள்.
மிஸ்டர் ஈ.வெ.ரா இல்லாமலா?
தி கிரேட் மேன் சு·ட் பி தேர். ஹி இஸ் அவர் பிரண்ட்
"The GREATMAN Should be there..HE is our friend"
இந்த வார்த்தைகள்தான் டாக்டர் அம்பேத்கார் சொன்ன வார்த்தைகள்..
மும்பை தமிழன் டாக்டர் அம்பேத்காரின் இந்த வார்த்தைகளை இன்றும் நம்புகின்றான்..
அதனால்தான்..
தந்தை பெரியாரைத் தலித்துகளுக்கு எதிரி என்று விமர்சிக்கப்படும் கருத்தை- பார்வையை அவர்களில்
பலரால் இன்றும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
தந்தை பெரியாரின் உழைப்பால் அதிகம் பயன்பெற்றவர்கள் தலித்துகள் அல்லாத பிற சாதிய இந்துக்களாக
இருக்கலாம்..
ஆனால்.. அதனால் மட்டுமே பெரியாரைத் தலித்துகளின் எதிரியாக எப்படிச் சித்தரிக்கமுடியும்?
சாதியத்தின் அடிவேரான மதம்
மதத்தைக் காக்கும் பார்ப்பனிய வேதங்கள்..பார்ப்பனர்கள்..
இவர்களை ஒழிக்கின்ற முதல்கட்டத்திலேயே நின்றவர் தந்தை பெரியார்.
அவருக்குப் பின்வந்தவர்கள் அடுத்தக் கட்டமான சாதிகளே இல்லாத தமிழ்ச் சமுதாயம் காணும் வரை
தொடர வேண்டிய போராட்டத்தைத்
தொடராமல்..
அரசியல் களத்தில் அடகு வைக்கப்பட்டார்கள்..
ஒரு ஒட்டு மொத்த அரைநூற்றாண்டு அரபிக்கடலோரத் தமிழனின் கனவு..
அவர்கள் உழைப்பு..
அவர்களின் வாழ்நாள்..
எல்லாமே இன்று வீணாகிப்போய்விட்டதா..?
ஒரு மும்பைத் தமிழரை.. தன் தோழரை..
இல்லாள் மறைந்த பின் மறுமணம் செய்யும் எண்ணமே இல்லாமல் வாழ்ந்தவரை
தந்தை பெரியார் அவரே பெண்பார்த்து.. ஆ.துரையரசன் அவர்களின் உறவினர் பெண்ணைப்
பேசி முடித்து..
திருச்சி பெரியார் மாளிகைக்கு அழைத்து
பெரியவர்களான தி.பொ.வேதாசலம், குத்தூசி குருசாமி, குஞ்சிதம் இவர்களின் முன்னிலையில்
கலப்பு திருமணத்தை நடத்தி வைத்து..
மணமக்களை ஒரு வாரம் தங்க வைத்து ..
மும்பை அனுப்பியது வெறும் கதையல்ல,,
அந்த மணமகன்.. அமரர் தொல்காப்பியனார்..
அவரின் துணைவியார்..இன்று மும்பை செம்பூரில் தன் மகன்களுடன்..பேரன் பேத்திகளுடன்...
இது மட்டுமா...
ஒரு பொதுக்கூட்டம்..
மும்பை தாராவி கட்டவாடி மைதானத்தில்...
தந்தை பெரியார் அவருக்கே உரியத் தொனியில் வேதங்களைக் கிண்டல் செய்துப்
பேசிக்கொண்டிருக்கின்றார்..
"பிரம்மனின் தலையில் பிறந்தவன் அந்தணன்..
....காலில் பிறந்தவன் சூத்திரன்.." என்று/
அப்போது கூட்டத்தில் கேட்டுக்கொண்டிருந்த  சேட் மாடசாமிப்பிள்ளை  துண்டு காகிதத்தில்
தன் கேள்வியை எழுதி விடுகின்றார்..
கேள்வி... "அய்யா.. அப்படியானால் பஞ்சமர்கள் பிறந்தது..?"
தந்தை பெரியாரின் பதில்.."அவர்கள்தான் பிறக்க வேண்டிய இடத்திலிருந்து 
பிறந்தார்கள் "
அரபிக்கடலின் அலைகள் ஆர்ப்பரித்து எழுந்தன..
அந்தப் பதில் கேட்டு..
சாதிகளை ஒழிக்க எழுந்த அரபிக்கடலின் அலைகள்..
மீண்டும் சாதியக் கடலுக்குள்ளேயே அடங்கி...
மீண்டும் அலைகளாக எழுந்து..
மீண்டும் அடங்கி..
தொடர்கின்றது இந்தப் போராட்டம்..
அன்று
நடக்கவில்லை
அவர்களின் சாதி ஒழிப்பு மாநாடு..
இன்றும்
அதற்கு சாட்சியாக
அரபிக்கடலின் அலைகள்
சாதியச் சங்கங்களின்
கால்களை வருடி
உப்புக்கரிக்கின்றது..
உண்மை நிலைகள்..
இப்போதெல்லாம்-
அலைகளின் ஈரத்தில்
மனித ரத்தங்களின் கறைகள்..
அலைகளின் போராட்டம் தொடரும்..
கடலோர கடலலையின் கவிதை...
கடலெல்லாம்
அடுக்குமாடிக் கட்டிடம்.
கட்டியவர்
தூங்குவதுமட்டும்
அதே குடிசையில்..
அருகில் ஓடிய
சாக்கடை
இப்போது
குடிசையின்
அடியில்...
குடிசையின்
மடியில்
கேபிள் அழகிகள்
தகரச் சுவரில்
தமிழ் நாட்டின்
சூப்பர் Sடார்கள்
எல்லாக் குடிசையிலும்
தொண்டர்களை
வாழவைக்கும்
அரசியல் கட்சிகளின்
கொடிகள்.
எல்லாப் பத்திரிகையிலும்
சாதிச் சங்கத்தின்
தேர்தல் விளம்பரங்கள்
அகில இந்திய
அரசியல் தலைவர்களுக்கும்
சாதிச் சான்றிதழ்கள்
இங்கேதான்
வழங்கப்படுகின்றன

அரபிக்கடலோரம்..5
puthiyamadhavi_abcde.jpg - 16.63 Kbஅரசியல்வாதிகள் எல்லோரும் அயோக்கியர்கள்..
இப்படித்தான் எழுத்தாளர்கள் எழுத வேண்டும்!
இது   இன்று எழுதாச் சட்டமாகிவிட்டது
ஆளாளுக்கு ஆட்காட்டி விரலை நீட்டி
அயோக்கியன், சாக்கடை, கிருமி, லஞ்சம்.ஊழல்.என்று சொல்லுவதும்
அப்படிச் சொன்னால் மட்டுமே
எழுத்தாளனின் எழுத்தும் நாணயமும் அடையாளப்படுத்தப் படுவதாகவும் ஒரு மயக்கம்.
என் அலைகளின் ஈரத்தில் அந்த மயக்கம் தெளிந்த முகங்கள் உண்டு.
அன்று..
இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக திரு. காமராசர் அவர்கள்..
அதில் அரபிக்கடலுக்கும் ஆனந்தம்.
ஆனந்த வரவேற்பு அலைகடலோரம்
எளியவர்களின் தலைவன்..
ஏழைகளின் தலைவன்..
தமிழர்கள் அதிகம் வாழும் தாராவிப் பகுதி, கட்டவாடி மைதானத்தில் கூட்டம்..
மகிழ்ச்சியின் விளிம்பில் மக்களும் மக்களூடன் தலைவனும்.
பொன்னாடை போர்த்தும் சடங்கு..
வாழ்த்தும் வரவேற்பும் கூட சடங்காகிப் போன மேடைகளுக்கு
ஒத்திகை  நடந்தக் கால கட்டம்.
சாதிகளின் பெயரால், சாதிச் சங்கங்களின் பெயரால்..
மாலைகளும் துண்டுகளும் மலைபோல.
அரசியல் மேடைதானே. கூடுகின்ற கூட்டத்தை வைத்து தன் எதிரணிக்கு தூக்கமில்லாத
இரவுகளை நிச்சயப்படுத்த நடக்கும் நாடகம்தானே.
அதில் இதுவும் ஒன்று என்று அலைகடல் ஒதுங்கிநின்றது.
அந்த அரசியம் மேடையில்..
அந்த எளிய தமிழன்..
"என்ன உங்களுக்கு 2000 மைலுக்கு அப்பாலே வந்தும் புத்தி வரலையா?.
இந்தச் சாதிப் புத்தியை எல்லாம் ஏன்யா எக்மோரு ஸ்டெசனிலேயே விட்டுட்டு வர்றதுக்கு என்ன?"
கூட்டம் கைதட்டியதோ என்னவோ
அலைகடல் கண்விழித்தது.
அரசியல்வாதியின் கடல் சிப்பிகளிலும் முத்துகள் பிறக்கும்...
"பள்ளியிலே பசித்தப்பிள்ளை
   பாடத்தைப் படிப்பதெப்போ?
பகலுணவு  நீ கொடுத்தாய்-அதைப்
  படம்காட்ட நீ மறுத்தாய்.!
ஒருவேளை சோறுபோட்டு - நீ
  ஓட்டுக்கேட்டு நிற்கவில்லை
பெற்றவள்தான் பசியணைப்பாள்-அதையும்
  போஸ்டர் போட்டா தெருவில் விற்பாள்?
பெறாத பிள்ளைபேரில் - சொத்துப்
பெயரெழுதும் அரசியலில்
பெற்றெடுத்த சிவகாமிக்கு-பிள்ளை நீ
அனுப்பியதோ அஞ்சுபத்து
சொத்துசுகம் எதுவுமில்லை- உனக்கு
சுவிஸ்பேங்கில் கணக்குமில்லை
உயிலெழுதத் தேவையில்லை - உன்
உடமைகளோ எதுவுமில்லை
ஐந்தாறு வேட்டித்துண்டு-அதில்
அஞ்சுபத்து நீ விட்டசொத்து
அதிசயம்தான் வணங்கியது என்
அலைகடலே வணங்கியது..
அன்று-
அந்த அலைகடலின் வணக்கத்திற்கு
வாழ்த்துப்பா எழுதாமல்
கிளிஞ்சல்களை சேர்த்துவைத்து
மணல்வீடுகட்டி விளையாடிய நேரம்.
எங்கள் மணல்வீடுகள்
அலைகள் தொடுவதற்கு முன்பே அழிந்துப்போயின.
எழுத்துக்கூட்டி எழுத ஆரம்பிக்க்கும்போது
என் அலைகடல்
யாரையும் வணங்கும்
இதயமில்லாமல்
ஈரமில்லாமல்
வற்றிப்போனது
2002, ஜனவரி 19ல் மும்பை பாண்டூப் (மே) திருவள்ளுவர் கலையரங்கில்
ஒரு தமிழின கலைவிழா.
கவிஞர் வைரமுத்து அவர்கள்  சிறப்பு விருந்தினர்.
தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் நாடு என்று மூன்று தலைப்புகளின் மூன்று கவிஞர்கள்.
கண்ணகியின் சிலை காணாமல் போன காலகட்டம்.
கண்ணகி, கண்ணகி வழி வந்த கற்பியல் கோட்பாடுகள்.. இவைகளுக்கு எல்லாம் அப்பால்
பலரைச் சிந்திக்க வைத்த நிகழ்ச்சி..
இந்தச் சூழலில் "தமிழினம் " என் கவிதையின்   பாடு பொருள்.
பாண்டியன் குடை உடைக்காத
கண்ணகியின் பீடத்தை
லாரியின் எடை உடைத்ததா?
தமிழர் என்ன ஏமாளியரா?
நிலங்களைப் பிரித்து மனித வளங்களைப் படைத்தவர்
சாதிகளின் பெயரால்
மனித மனங்களைப் பிரித்து
சாதித்தது என்ன?
கேள்விமேல் கேள்வியாய் கேட்கவைத்த மனக்குமுறல்.
இன்னும் என்னுள் அடங்காத மனக்குரல்..
அன்று ஓங்கி ஒலித்த கவிதை மனசை
உடைத்துப்போட்டு காயப்படுத்தியது உண்மை.
விழாவின் சிறப்பு விருந்தினர் சிறப்புரைக்காக எழுந்து நிற்கிறார்.
அதற்கு முன்பு அவருக்குச் சிறப்பு செய்பவர்கள் வந்து சிறப்பு செய்ய
விழாக் குழுவினர் அழைக்கிறார்கள்..
கவிஞருடன் புகைப்படமெடுக்கும் ஆர்வத்தில் கூட்டம்.
காமிராக்களின் பளிச் பளிச்
இதில் எல்லாம் எப்படித்தான் மனிதர்களுக்கு இத்தனை ஆர்வமோ
இன்னும் இந்த மனிதர்களையும் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் ஆர்வங்களையும்
வாசிக்க முயன்று தோற்றுப்போகும் இயலாமையில்
மெளனத்தில் நான்...
எத்தனை முகங்களோ அத்தனை சாதிகள்..
இதுவரை என் அகராதியில்  வாசிக்கப்படாத சாதிகளின் பெயர்கள்
சங்கங்களில் தலைவர்கள்..
இந்த அடையாளங்களில் தன் முகமிழந்து நின்ற தமிழரின் வரிசை.
கவிஞரின் முகத்தை நான் வாசிக்க முயன்றேன்.
கழுத்து மாலைகளுக்காக குனிந்த போது சங்கடத்தில்
ரோசாவின் முள் குத்திய அவஸ்தையில் கவிஞர்.
சிறப்புரைக்காகக் காத்திருந்தேன். காத்திருந்தேன்.
உடல் ஆரோக்கியத்துக்குக் கூடக் கவலைப்பட்ட கவிஞர்
உடல் ஊனத்தைக் கண்டும் காணாமல்..
குரலை ஏற்றி இறக்கி கண்களைக் கூர்மையாக்கி
சொல்லவேண்டியதைச் சொல்லாமல்..
சிறப்புரை முடிந்தபோது..
என் தமிழினம் என்ற கவிதை
பிரசவத்திலேயே இறந்துபோன வலியில்
எழுந்து வந்தேன்..
அப்போது என் அலைகடல் வணங்கிய அரசியல்வாதியின் அரசியல்மேடை
நினைவுமேடையில் ..
ஓட்டு வாங்கும் அரசியல்வாதியின் கிராமத்து கொச்சைத் தமிழ் கேட்டு
வணங்கிய  என் அலைகள்
எங்கள் கலை இலக்கிய மேடைகளைக் கண்டும் காணாமல்
ஒதுங்கியே நடந்தன.
சொல்லியிருக்க வேண்டும்.
ஆனாலும் சொல்லவில்லை.
சொல்லியிருக்கலாம்
ஆனால் சொல்லவிருப்பமில்லை.
இவர் இதைச் சொல்லியே ஆகவேண்டும்
இப்போதாவது இதைச் சொல்லவில்லை என்றால்
இனி எப்போது சொல்லமுடியும்?
சிலரால்தான் எதையும் எப்போதும் எங்கேயும் சொல்லமுடியும்.
சிலரால்தான் மனக்குரலை மனிதக்கடலில் நனைக்கமுடியும்.
இங்கே பலருக்கு மனக்குரல்கள்கூட இரவல்தான்.
யாரும் யாருடைய வசனத்தையும் பேசிவிடமுடியும்.
வாயசைக்கும் மனிதர்கள்.
இந்த இரவல் மனிதர்களிடம்
மனக்குரலைத் தேடித் தேடி
அலைகடல் என்னை இருட்டிலும் அழைக்கிறது.
எழுந்து நடப்பதாய்.. பாவனை.
நடப்பது நானா.. இல்லை கனவா?
என் அரபிக்கடலின் அலைகள் மீது
இதோ ..
நடப்பது நானா.. இல்லை அலைகளா?

அரபிக்கடலோரம்..6

puthiyamadhavi_abcde.jpg - 16.63 Kbகணபதி பப்பா மோரியாவ்
புட்ச்சா வருஷ லவுக்கர்யாவ்
கணபதி பப்பா மோரியாவ்...
மோரியாரே பப்பா மோரியாரே..
உன் தேர்க்கோலம்.....
இதோ என் அலைகளை நோக்கி..
ஜனக்கடலுக்கு நடுவில் நீ..
வாண வேடிக்கைகள்,, டிரம் இசையின் ஒலி..தாள லயத்துடன் இளமையின் துள்ளல்
காற்றில் பறக்கும் வர்ணப் பொடிகள்..
அரபிக்கடலை நோக்கி உன் பயணம்..
தோள்களில் தவளும் குழந்தையாய்..
நடைவண்டியில் நடைப்பயிலும் சிறுவனாய்..
கம்பீரமாய் வீற்றிருக்கும் அரசனாய்..
கணினியின் மவுஸ் உன் காலடியில் கிடக்க
எத்தனை எத்தனையோ மனித வலைத்தளங்களின் பின்னல்களுடன்..
பூத்தேரில் நடக்கிறது உன் தேர்க்கோலம்.
மும்பையில் மட்டும் இன்று (27/9/2004)
1.36 இலட்சம் இல்லங்களில் உனக்கு  வழியனுப்பு விழாவாம்..
உன் மண்டல பூசை மண்டபத்தில் பாடாத பாடகன் இந்த மண்ணில் இல்லை.
தமிழ்நாட்டின் அத்தனைப் பாடகர்களும் மாதுங்காவில் பெரியவர் வரதராசன்
(நாயகன் திரைப்படத்தின் அசல் நாயகன்)
கணபதி மேடையில் பாடி இருக்கிறார்கள்.
தாராவியில் ஒற்றைக் கணபதியாக ஆரம்பித்த உன் தேர்க்கோலம்
இன்று ...
அவரவர் சாதியின் அடையாளத்துடன் தனித்தனியாக தொடர்கிறது.
முடியரசின் மண்ணாட்சி உரிமைபோல
உன்னை இல்லங்களின் இருத்தும் உரிமையும் பரம்பரை பரம்பரையாக
தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது.
துயரம், இழப்பு, பயணம், பணி..
எதுவும் உன் வரவை இடமாற்றி விடமுடியாதச் சங்கிலியாய்
இன்றும் மராட்டிய மண்ணின் மைந்தர்களின் இல்லங்களில்
உன் வரவு நிச்சயிக்கப்பட்டிருகிறது.
அரபிக்கடலின் அலைகள் உன் வரவிற்காகக் காத்திருக்கின்றன.
உன் தலையலங்கராமாய் மின்னும் கீரிடத்தில்
அலைமகளின் மீன்கள் அழிந்துபோய்விடலாம் என்று
சொல்லித்தான் பார்க்கிறோம்..
ஆனால் நீயோ எங்கள் மக்களாட்சி மண்ணில் உன் முடியாட்சியின் சின்னத்தை
இழப்பது சிறுமை என்றுதான் நினைக்கிறாய்!
இயற்கையின் நிறங்களை மட்டுமே நீ அணிய வேண்டும் என்பதுதான் எங்கள்
மண்மகளின் ஆசை.
ஆனால் நீயோ.. எதை வேண்டுமானாலும் அணிந்துகொள்ளும் நாயகனாய்
வலம் வருகின்றாய்.
நீ இருக்கின்றாயா?
இல்லையா?
இதைப் பற்றி கவலைப்பட எனக்கு நேரமில்லை.
உன் பிறப்பு.. உன் பிறப்பின் கதை..உன் பூ¨f, உன் வாழ்க்கை,
இதிலிருந்தெல்லாம் மீண்டுவிட்டது உன் கடற்கரையின் மணல்கள்.
என் மண்ணில் உன் வரவு சின்னதாக ஒரு மனிதநேயத்தை தூவிச் செல்கிறது.
உன் தேர்க்கோலத்தில் எல்லா மதங்களும் கை கோர்த்து தேரிழுப்பது
நடக்கத்தான் செய்கிறது.
என் பாதையும் உன் பாதையும்
கடலை நோக்கித்தான் என்றாலும்
எதிர் எதிர் திசையில் ..
ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் நம் சந்திப்பு..
தொடர்கிறது.
உன்னை தன்னில் கரைத்துக் கொள்ள
வேகத்துடன் வருகிறது என்  அலைகள்.
அலைகளின் மடியில் உன் படுக்கை.
நீ எழுந்திருக்கும் போதெல்லாம் என் மண்ணில் கழிவுகள்.
என் மடியில் காயங்கள்..
காயங்களுடனேயே கடலின் அலைகள்
உன்னைத் தன் மடிவிரித்து அணைத்துக் கொள்கின்றன.
நச்சுப்பொருளாய் ..
அலைகளில் கரைக்கமுடியாத கலவையாய்..(கெமிக்கல்ஸ்)
உன் அலங்காரம்.
என் அலை மீன்களை அணு அணுவாய்
தண்ணீரில் எரிக்கிறது ..
இதோ மரணபயத்தில் அலைகளை விட்டு ஓடுகிறது மீன்கள்..
கரைகளில் இன்னும் கரையாமல் கிடக்கிறது
உன் தும்பிக்கைகள்..
எதுவும் சொல்ல முடியாத மெளனத்தில்
அழுகிறது என் கண்கள்.
யாரோ படைத்தார்கள்..
யார் சொல்லியோ படைத்தார்கள்
யார் யாரோ உன்னை எடுத்தார்கள்.. எடுக்கிறார்கள்
எதுவும் சொல்ல முடியாத மெளனத்தில்
நீயுமா?
சிலைகள் படைத்தவன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
மனிதக் கடலை நீந்தி குகைகளில் வாழ்ந்தவன்கூட
இருட்டில் வரைந்த ஓவியங்களில் வெளிச்சம் பெறுகிறான்.
ஆனால் உன்னைப் படைத்தவர்கள்..
அதுவே தொழிலாக..
உன் கரைசல் சுழற்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உன்னைப் படைத்தவன் இதோ..
உன் கடல் பயணத்தில் கண்ணீருடன் நிற்கிறான்
ஆசை ஆசையாய் தீட்டிய ஓவியம்
மழை நீரில் நனைந்து மண்ணில் விழுந்ததுபோல்
அவன் கலை.. கடலின் அலைகளில்..
கரைப்பதற்க்காகவா படைப்பது?
படைத்தவனுக்கு மட்டும்தான் தெரியும்
அவன் படைப்பு அலைகளில் உடைந்து மிதக்கும்போது
அனுபவிக்கும் வலியும் வேதனையும்.
ஆனாலும் இந்த வலியும் வேதனையுன் தொடர்ந்தால் மட்டுமே
தொடரமுடியும் வாழ்க்கை.
அதனால் தான் மீண்டும் மீண்டும் அவன் கைகளின்  நடனம்
உப்பு நீரில் அரங்கேறி அரங்கேறி
அழிந்து அழிந்து
எழுந்து எழுந்து
அலைகளைப் போலவே தொடர்கிறது.
உன்னை..
என் கடல்மடியில் கரைபடும் உன்னை..
எடுக்கவும் முடியாமல்
தடுக்கவும் முடியாமல்
மெளனத்தில் என் வானம்.
சின்னதாக எட்டிப்பார்க்கிறது
என் கடல்மடியிலிருந்து ஒரு கவிதை..
நீ...
கோவில் கர்ப்பக்கிரகச்
சிறைகளைத்தாண்டி
எப்போது வந்தாய்?
வேதங்கள் ஒலிக்காத
குடிசைகளில்
பத்து நாட்களும்
எப்படி இருந்தாய்?
இந்த பத்து நாட்களுக்காகவா
மீதியுள்ள அத்தனை நாட்களும்
அலைகளின் அடியில்
உனக்கு ஆயுள்தண்டனை?
அன்புடன், 
புதியமாதவி, மும்பை.
 
 [தொடரும்]
  puthiyamaadhavi@hotmail.com

அரபிக்கடலோரம்..7 
"கட்டுப்பட்டிருக்கின்றோம்
  இந்தியத்துக் குள்ளென்றே
   கருதிடாதே!
கண்டி வெகுதூரமில்லை
  கடலுமிக ஆழமில்லை.."
உன் ஆழ்கடலின் அலைகளுக்கு நடுவில் நின்று கொண்டு
தென்திசையை நோக்கி ஒற்றை மனிதனாக ஒரு மனிதன் குரல் கொடுத்தான்.
ஒரு இனவரலாற்றின் முதல் உரிமைக்குரலை
உன் கடல் அலைகளுக்கு அறிமுகம் செய்தவன் அவன்.
மனிதனை நான் தேடுகின்றேன்.. என்று தேடி அலைந்தவன்
எதிர்நீச்சல் போடுகின்றேன் என்று போராடியவன்
உன் அலைகளின் அடியில் கடைசிமூச்சு உள்ளவரை
கவிதைக் காற்றைச் சுவாசித்தவன்.
அவர்தான் வடிவேலு என்ற கவிஞர் கலைக்கூத்தன்.
உன் கடற்கரையோரம் தமிழ்க் கவிதை உலகத்திற்கு கூடாரங்கள் போட்டவன்.
பூத்தொடுக்கும் கரங்கள் இனி போர் தொடுக்கும்
அகநானூறுகளுக்கு புறநானூறு பாட போர்க்கொடி காட்டியவன்.
ஈழத்தில் நம் தமிழர் உரிமைகளுக்காக பம்பாய்த் தமிழ்ச்சங்கத்தில் தீர்மானம்
நிறைவேற்ற வேண்டிக் குரல்கொடுத்தவன்.
அவனை அவன் கவிதைகளை வளர்த்த தமிழ்ச்சங்கத்தின் கதவுகள்
அவன் நிறைவேற்ற துடித்த தீர்மானத்தை மட்டும் கடைசிவரை நிறைவேற்றாமலேயே
கதவுகளைச் சாத்திக்கொண்டுவிட்டது.
அதே தமிழ்ச்சங்கத்தின் அறங்காவலர் குழுவின் தேர்தல்கூட அவனை
வெளியில் தள்ளியது.
அவன்தான் ஈழத்தமிழர்கள் என்ற சொல் வழக்கைக்கூட எதிர்த்தான்.
"பழங்காலத் தமிழ்நாடு
  இலங்கைவரை விரிந்ததடா
   படியா மூடா!
பாழ்கடலின் அழிவுக்குள்
  நிலம்வீழ்ந்ததனாலே
   தீவா யிற்று!"
என்று லெமூரியா வரலாற்றைப் பாடியவன்.
ஈழப்போராட்டத்திற்கு நிதிதிரட்டிய மும்பை மண்ணில் அவனிடம் அப்போது
கொடுப்பதற்கு எதுவுமில்லை.
அவன் தன் கவிதையை வாசித்தான்..
அதையே விலைபேசினான்..
விற்றான்.. தோளில் தொங்கியத் துண்டை ஏந்தி கூட்டத்தில் நடந்தான்..
பெரியவர் வரதராசமுதலியார்தான் அந்தக் கூட்டத்தின் தலைவர்.
எதற்கும் இறங்காத அவன் தோள்களின் துண்டு
இனப்போராட்டத்திற்காக மட்டுமே பிச்சைப் பாத்திரமானது.
பசி தீர்க்ககூட விற்கப்படாத அவன் கவிதைகள்
ஒரு வரலாற்றின் முன்னுரை எழுத அவனாலேயே விற்கப்பட்டது.
அவன் பிறந்த தஞ்சை மண்ணின் ஈரம்
இன்னும் இந்தக் கடலடியில் சிலர் மனங்களில் காயாமல் இருக்கத்தான் செய்கிறது..
அவன் வாரிசுகள் எல்லாம் இப்போது வறியநிலையில் கடினவாழ்க்கை.
சொன்னார்கள் அவன் தோழர்கள்.
யாரிடமும் எதற்காகவும் எந்த உதவியையும் கேட்டு வாங்கி அறியாதவன்
தன் வாரிசுகளுக்கு என்ன சேர்த்து வைத்திருக்கமுடியும்?
"பம்பாய்த் தமிழர்கள்" என்று யார் யாரெல்லாமோ கவிதை எழுதத்தான்
செய்கிறார்கள். சிலருக்கு விருதுகள் கூட இதனாலேயே கிடைத்திருக்கிறது.
ஆனாலும் கலைக்கூத்தன் எழுதியது போல உன் அலைகடல் தமிழனின்
வாழ்க்கையை எழுதியவன் யாருமில்லை.
எட்டடிக்கு எட்டடியாய்
இடுக்கு முடுக்குகளாய்க்
கொட்டடிகள் போலிருக்கும்
கோழிக் குடப்புகளை
வீடென்று சொல்லிடுவர்
வேய்ந்திருக்கு அம்முறையோ
கூடென்று சொல்லிடவும்
கூசிடும் வாய்!
எங்கெங்கோ தோன்றிவிடும்
எந்தவொரு கட்சிக்கும்
இங்கேகிளை இருக்கும்
இரவுவரும் கூட்டம்வரும்!
இப்போதும் பம்பாய்த்தமிழன் உன் அலைகடலோரம் இப்படியேதான் இருக்கின்றான்.

அரபிக்கடலோரம்..8

puthiyamadhavi_abcde.jpg - 16.63 Kb"இந்தியா என் தாய்நாடு. இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள்"
இந்த மதச்சார்பற்ற மக்களாட்சியின் உறுதிமொழி
உடைந்து சிதறி உன் மண்ணில் மிதிக்கப்பட்ட நாள்..
உன் கடற்கரையில் பிறந்து
உன் கடல்மடியில் வளர்ந்து
உன் கடலலையில் வாழ்பவர்களுக்கு
நீயும் உன் கடலலையும் சொந்தமில்லை என்பது
உணர்த்தப்பட்ட நாள்.
உன் மும்பாதேவி கதறி அழுத நாள்..
உன் கடல் அலைகளின் கண்ணீர் வற்றிய  நாள்.
தர்காவின் தாள்களில் பட்டுத் தெறிக்கும் உன் அலைகள்
மகாலட்சுமி தேவியரின் மடிதேடி ஓடிவந்து மனிதனைத் தொட்டு
எழுதியக் கதை முடிந்துபோன நாள்..
அன்றும் இன்று போல் டிசம்பர் மாதக் குளிர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த டிசம்பர் வரும்போதெல்லாம்
உன் அலைகடலின் பதட்டம்..அச்சம்
உன் இரத்தக்கறைப் படிந்த மணல்மீது இன்றும்
ஆயுதம் ஏந்திய காவல்படை காத்துக்கிடக்கும் காட்சி..
இனம்புரியாத அச்சத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கைச்சக்கரம்.
இந்திய வருமானத்தில் 40% ஈட்டித்தரும் உன் மும்பை மண்ணில்
நாங்கள் வெறும் கழிவுகள்தாம் என்று அடையாளம் காட்டப்பட்ட
அந்த தருணங்கள் வேதனையானவை.
இந்த நாட்டின் வரலாற்றையே புரட்டிப் போடும் கேள்விகள்
அந்த வேதனையின் வலியுடன் பிறந்தவை.
அந்த வலிகளைப் போலவே உண்மையானவை.
நியாயமானவை.
மும்பையின் பங்குச்சந்தையில் மனிதர்கள் ஓடிய ஓட்டம்..
தொடர் வெடிகுண்டுகள்..
அதன் பின் தொடர்கதையான வெடிகுண்டு கலாச்சாரம்.
பேருந்துகளில், மின்சாரவண்டிகளில், மகிழ்வூர்திகளில் (டாக்சி)மனித ரத்தம்
உடல் சிதறிய வலியுடன் உயிர் நடக்கும் காட்சி..
அண்மையில் கூட பீகார் மாநிலத்தின் இளைஞர்கள் மும்பை புறநகர் பகுதியான
கல்யாண் ரயில்நிலையத்தில் வைத்து அடித்து காயப்படுத்தப்பட்டார்கள்.
ஏன்? எதற்கு? என்ன குற்றம்? என்ன தண்டனை இது?
இந்திய நடுவண் அரசின் இரயில்வே நிர்வாகம் நடத்தும் அரசு நுழைவுத் தேர்வு
எழுத வந்தவர்கள்.. அடித்து விரட்டப் பட்டார்கள்.
இந்திய முகவரியைத் தேடி வருபவர்கள் அடிக்கப்படும்போதெல்லாம்
காயப்படும் போதெல்லாம்..
"இந்தியா என் தாய்நாடு..இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள்"என்ற
உன் உறிதிமொழி உடைந்து போகிறது..
என் காலடியில் இருக்கும் மண் எனக்குச் சொந்தமானதல்ல.
என் கண்களில் விழுந்த மண் என் கண்ணீருக்கும் சொந்தமானதல்ல
நான் இந்த மண்ணின் மைந்தனில்லை.
இந்த மண்ணுக்கும் எனக்குமான தூரம்
எனக்கும் விண்ணுக்குமான தூரத்தைவிட அதிகமாகி.. நீண்டு.. அதிகமாகி
அதிகமாக அதிகமாக என் அடையாளம் வெறும் புள்ளியாகி..
மங்கிப்போகிறது.
போலியான அSதிவாரத்தின் மீது எங்கள் வாழ்க்கை
நம்பகத்தன்மை இல்லாத ஒப்பந்தங்களில் எங்கள் நாட்கள்
உலக மேடையில் இந்தியப் புகைப்படங்களுக்காக மட்டுமே
கைகுலுக்கி புன்னகைக்கிறது எங்கள் நிகழ்காலம்.
எங்கள் எதிர்காலம்?
-உன் அலைகள் மட்டுமே அறியும்.
மகர்களின் மண் இந்த மகாராஷ்டிரா.
ஆனால் இந்த மண்ணில் மகர்கள் தீண்டத்தகாதவர்கள்!
மனித சரித்திரத்தின் தீட்டாகிப் போன பக்கங்கள்
உன் அலைகளாலும் அடித்துச் செல்லமுடியாத கழிவுகள்.
மனம் ஒட்டாமல்கூட வாழ்ந்துவிடலாம்.
மண் ஒட்டாமல் வாழமுடியுமா?
காகிதம் பொறுக்கியும் கழிவுகள் சுமந்தும்
இட்லி விற்றும் கடலை விற்றும்
வயிறு கழுவ வருகின்ற தமிழர்கள் ..
முடிந்துவைத்தப் பணத்தில்
பிறந்த ஊரில் மண் வாங்கி மனைவாங்கி
வாங்கிய மனையில் வாழாமலேயே
வாழவந்த மண்ணிலும் வாழாமலேயே
வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு
தொலைந்துபோனது கூட தெரியாமல்
முடிந்துபோய்விடுகிறார்கள்.
நூறுகோடிகளை எட்டிப்பிடிக்கும் சொகுசான வாழ்க்கையை
உன் அலைகடலின் கப்பல்கள் சிலருக்கு வாரி வழங்கியிருக்கிறது.
இவர்களும் அவர்களும் தமிழர்கள் என்பதும் வெறும் அடையாளமாகமட்டுமே
அறியப்படுகிறது.
தாய்மொழி இவர்களை இணைக்கவில்லை.
தாய்மொழி இவர்கள் இருவரையும் ஒரே இனமாக
ஒரே மண்ணின் வேர்களாக அடையாளம் காட்டவில்லை.
இவர்கள் தங்களின் மண்ணிலிருந்து வேருடன் பிடுங்கப்பட்ட
தொட்டிச்செடிகள்.
உன் அலைகடலின் காற்றும் காற்று சுமந்துவந்த மழையும்
இவர்களுக்குச் சொந்தமில்லை.
தொட்டிகளில் பூப்பதையே பெருமையாக நினைக்கும் இவர்களிடம்
தோட்டத்தின் நினைவுகள் தொடருமா?
இவர்களின்  அடுத்த தலைமுறை உன் கடலலையுடன்
எந்த மொழியில் பேசும்?
எவர் என்று அடையாளம் காட்டும்?
இங்கே பலரின் பெயர்களில் மட்டுமே இருக்கிறது தமிழின் அடையாளம்.
தமிழனின் அடையாளம் வெறும் பெயர்ச்சொல்லாக மட்டுமே எழுதப்பட்டுவிட்ட
அவலம் ஆப்பிரிக்க மண்ணில் இருப்பதாக தன் பயணக்கட்டுரையில் வருத்தத்துடன்
எழுதியிருந்தார் தோழர் குமணராசன் அவர்கள்.
அந்தக் கதை இங்கேயும் உன் அலைகடலால் எழுதப்படும் நாள் வெகுதூரமில்லை.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று
சங்குகள் முழங்கி என்ன பயன்?
உன் அலைகடல் எங்கள் சங்குகளின் சங்கநாதத்தை
அமுக்கிக்கொண்டு ஆர்ப்பரிக்கின்றது ஆராவாரத்துடன்.
அம்ச்சி மும்பை அம்ச்சி மும்பையாக இல்லை.
உன் கடலலையில் எங்கள் அடையாளங்கள் இல்லை
எங்களிடம் எங்கள் அடையாளங்கள் ஒவ்வொன்றாய்
உடைக்கப்பட்டு சிதைக்கப்பட்டு உருத்தெரியாமல் மாற்றப்பட்டு..
முகமிழந்து நடக்கிறது எங்கள் பயணம்.
சரித்திரப் போர்களில் வடக்கே வந்தவன் தமிழன்.
இல்லை இல்லை ..
சிந்துவும் குமரியும் தமிழனின் வாழ்க்கை
புதைந்து கிடக்கிறது மண்ணில் இன்றும்.
சொல்லாக, செயலாக, உடையாக, உணவாக,
உறவாக, மரபாக, ஏன் பெண்ணின் அலங்காரங்களில் கூட
மங்கிப்போன புகைப்படங்களாய் தமிழனின் அடையாளம்
இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால்..எண்ணிப்பார்க்கிறேன்
உன் அலைகடலில் எங்கள் பாதங்கள் பட்டது எப்போது?
எத்தனை நூற்றாண்டுகளாய் இங்கே எங்கள் உறவுகளின் ஓட்டம்.
இன்னும் ஏன் உன் அலைகள்
எங்கள் கதைகளை எழுத மறுக்கின்றது?
உன்னை உன் அலைகளை ஆள்வதும் அடைவதும்
எங்கள் ஆசை என்றால் அது பேராசை என்பது
உன் ஆழ்கடலின் அரசியல்சட்டம்.
ஆனால்-
என்னை எங்களை
எங்களின் அடையாளத்துடன்
எதிர்கொள்ள வேண்டும் என்பது
எதிர்காலத்தின் கட்டாயம்.
உன் அலைமடியில் பிறக்கிறது
என்னை எனக்கு அடையாளப்படுத்தும் என் ஜீவன்..
அலைகடலின் கவிதை:
உன்னில் நுழைந்து
உன்னில் கரைந்து
உன்னில் ஒன்றாய்
உருமாறிப் போவேனோ?
என்னிடம் இருக்கும்
எதுவும் எனக்கானதாக இல்லை.
உன்னிடம் இன்னும் இருக்கிறது
எனக்கான என் அடையாளம்.
உன் மடியில் இன்னும் துடிக்கிறது
என் கருவறையின் வாசனை.
சரியான நேரத்தில் பனிக்குடம் உடைந்து
எங்கள் அடையாளம் பிறந்தாகவேண்டும்.
உன் அலைகடல் எங்களை
பிரசவிக்காமலேயே
கருக்கலைப்பு செய்து
காலத்தை ஏமாற்றும்
கதைகள் முடிந்துவிட்டது.
அறுவைச்சிகிச்சைக்கு ஆயுத்தமாகிவிட்டது
எங்கள் வலிகள்.

அரபிக்கடலோரம்..9
puthiyamadhavi_abcde.jpg - 16.63 Kbஅலைகளின் மடியில்
உடைந்தப் பனிக்குடம்.
கருவறைப் பிளந்த
மரணத்தின் அழுகுரல்.
உடைந்துபோன படகுகளில்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
உயிரின் சுவாசம்.
 
கருவறையை
கல்லறையாக்கி
நடைப்பிணங்களுடன்
நகர்ந்துகொண்டிருக்கிறது
கடற்கரையின் விடியல்.
கோழி மிதித்து குஞ்சுகள் இறந்தன.
வானத்தில் பறக்கும் கழுகுகள் கூட
கண்ணீர் விடுகின்றன.
தாயின் கருப்பை
சுவாசக்குழாயை இறுக்கி உடைத்து..
எல்லாம் சிதறி..
கண்மூடி கண்திறக்கும் முன்னே
நம்பிக்கை நட்சத்திரங்கள்
நடைப்பிணமாகி..
 
எப்படி..எப்படி.. எப்படி முடிந்தது?
தொட்டில் சீலை எப்படி தூக்கி எறிந்தது?
வேர்கள் எப்படி மலர்களைப் பறித்தன?
நீருக்குள் எரிமலையாய்
கடலுக்குள் கல்லறைகள்.
அமுதம் கூட விடமாகலாம்.
அலைகள் கடலுக்கு விடமாகலாமா?
வலைகள் மீனுக்குச் சிறையாகலாம்.
துடுப்புகள் படகுக்கு சிறையாகலாமா?
இனி இந்த அலைகடலில் எங்கள் படகுகள் பாய்விரிக்குமா?
நம்பிக்கை வற்றிய கடலில் வாழ்க்கையின் அலைகள்.
இந்த அலைகளில் இனி இருக்குமா ஈரம்?
 
உடமைகள் உறவுகள் உயிர்களின் இழப்பில்
உடைந்து கிடக்கும் உடல்மீது
வல்லாங்கு செய்கிறது வெறிநாய்களின் வேட்கை.
மீண்டும் மீண்டும் கடிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு
துடிக்கிறது எங்கள் தமிழச்சியின் மார்பு.
ஒரு போராட்டத்தின் கடைசிக்கட்டம்.
இழப்புகளின் மீதுதான் எழுதப்படும் வெற்றி
எழுதப்படாதப் போர்க்காலத்தின் சட்டம்.
 
தாயாய், தங்கையாய், தோழியாய்..
ஊராய் உறவாய் உண்மையாய்....
உங்கள் தொப்புள்கொடி உறவாய்..
அரபிக்கடலின் காற்றில் கலந்துவிட்ட
உயிரின் துடிப்பை...
உங்கள் சிறகுகளாக
எடுத்து வருகிறது என் அரபிக்கடலின் அலைகள்.
எரிந்த சாம்பலிருந்து எழுந்துபறக்கும்
பறவையாய்..
சுதந்திரவானத்தில் நம் சிறகுகள் பறக்கும்.
அப்போது  சுனாமி என்ற பினாமி பெயரில் வந்த பேரலைகள்
நம் கண்களின் அசைவுக்குக் கட்டுப்படும்.
எல்லாம் இழந்த நிலையில்
இழக்கக்கூடாதது நம்பிக்கை மட்டும்தான்
அந்த நம்பிக்கையின் கடற்கரையில்
பூகம்ப அதிர்வுகளின் இருட்டில்
துடுப்புகளைத் தேடுகிறது நம் படகுகள்.
நம் வலைகளுக்காகக் காத்திருக்கிறது
கடலின் அலைகள்.
 
அரபிக்கடலின் கவிதை:
 
கடலின் அலைதோண்டி
சிப்பிகளில் முத்தெடுத்து
விளிம்பு மனிதர்களுக்கு
வெளிச்சம்தரும் போராட்டத்தில்
இதோ..
அலைகளுடனும் நம் போராட்டம்.
 
puthiyamaadhavi@hotmail.com

Saturday, 29 July 2017

DIANA , SHORT LIFE HISTORY


DIANA , SHORT LIFE HISTORY




நல்ல அழ­கி­யாக, ஒரு கட்­டத்தில் இரா­ணி­யி­னதும் இள­வ­ரசர் சார்ள்­சி­னதும் அன்­பிற்கும், பாசத்­திற்கும் பாத்­தி­ர­மா­ன­வ­ராக, பிறி­தொரு கட்­டத்தில் அவர்கள் இரு­வ­ருக்கும் வெறுப்­பேற்­று­ப­வ­ராக தமது இரண்டு மகன்­மா­ருக்கும் அரு­மை­யான தாயா­ராக, கெம­ராக்­களால் அதிகம் படம் பிடிக்­கப்­பட்­ட­வ­ராக, பிர­பல்­ய­மான பத்­தி­ரி­கைகள், சஞ்­சி­கை­களின் முன்­பக்கக் கதா­நா­ய­கி­யாக, தாம் வாழ்ந்த காலத்தில் தினம் தினம் இறந்து, மர­ண­மான பின்­மக்கள் மனதில் நிரந்­த­ர­மாக வாழ்­ப­வ­ராக உல­கத் ­தொ­ழு­நோ­யா­ளிகள், புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள், எயிட்ஸ் நோயா­ளி­களின் சிநே­கி­தி­யாக, மக்­களின் இள­வ­ர­சி­யாக இருந்த டயா­னாவின் மரணம் இன்­னமும் சரி­யாகத் துப்புத் துலக்­கப்­ப­ட­வில்லை என்­பது நிதர்­ச­ன­மான உண்மை.
தாம் வாழ்ந்த ஒரு கால­கட்­டத்தில் உல­கப்­புகழ் பெற்­ற­வ­ராக இருந்­தாலும் டயா­னாவின் சிறு­ப­ரா­யமும் இள­மைக்­கா­லமும் தென்றல் வீசும் சோலை­யாக அமைந்­து­வி­ட­வில்லை.
ஜானி—­பி­ரான்சஸ் தம்­ப­தி­யி­ன­ருக்கு முத­லி­ரண்டும் பெண் குழந்­தைகள் மிகுந்த எதிர்­பார்ப்­புக்­கி­டையே மூன்­றா­வ­தாக ஆண்­கு­ழந்தை பிறந்து, அந்த மகிழ்ச்­சியில் திளைக்கும் முன்பு குழந்தை பிறந்த வேகத்தில் இறந்து போனது. பத்­து­மணி நேரம் மட்­டுமே அந்த ஆண்­கு­ழந்தை உயிர் வாழ்ந்­தது. ஜானி—­பி­ரான்சஸ் தம்­ப­தி­யினர் மனம் தளர்ந்­தனர்.

இந்நிலையிலேயே அடுத்ததாக டயானா பிறந்த போது இரு­வ­ருக்­கு­மி­டையே எந்­த­வி­த­மான நல்­லு­றவும் இல்லை.
ஸ்பென்சர் குடும்­பங்­களில் ஆண்­பிள்­ளையைப் பெற்­றுக்­கொள்­வ­தென்­பது கெள­ரவம் மட்­டு­மல்ல, அத்­தி­யா­வ­சி­யமும் கூட. சொத்­துக்­களைக் கட்­டிக்­காக்க ஆண்­வா­ரிசே பொருத்­த­மா­னது என்­பது ஸ்பென்சர் குடும்­பங்­களில் எழுதப்ப­டாத ஒரு சட்டம்.
ஒரு வழி­யாக நான்­கா­வ­தாக ஆண் குழந்தை பிறந்­தது. ஆனால் அதற்கு முன்பு ஜானி– பிரான்சஸ் வாழ்க்­கையில் பிளவு ஏற்­பட்­டி­ருந்­தது. அப்­போது டயா­னாவின் அம்­மா­விற்கு வயது இரு­பத்­தெட்டு. இள­மையின் மிதப்பில் இருந்த அவர் வேறு துணை தேட ஆரம்­பித்தார். அவர் நாடிச் சென்ற பீட்டர் ஏற்­க­னவே மண­மா­னவர்.
தனது மகளின் நட­வ­டிக்கை பிடிக்­காத பிரான்­சஸின் அம்மா முக்­கிய முடி­வொன்றை எடுத்தார். நான்கு குழந்­தைகள் பெற்­றெ­டுத்த தனது மகள், இன்­னொரு ஆட­வ­னோடு வாழ முடி­வெ­டுத்­ததை அவரால் பொறுத்துக் கொள்­ள­மு­டி­ய­வில்லை. தமது வீடான ‘பார்க் ஹவுஸில்’ அவ­ருக்கு இட­மில்லை என அறி­விக்­கப்­பட்­டது.
தாயின் உத்­த­ர­வின்­படி பார்க் ஹவு­ஸி­லி­ருந்து தனது முத­லி­ரண்டு பெண் குழந்­தை­க­ளுடன் வெளி­யே­றினார் டயா­னாவின் அம்மா பிரான்சஸ். அதே வீட்டில் விபரம் புரி­யாத சிறுமி டயானா மற்றும் கடைசி மகன் சார்ஸ்­சோடு வசிக்க ஆரம்­பித்தார் டயா­னாவின் தந்தை ஜானி.

டயா­னா­விற்கு அப்­போது விபரம் ஒன்றும் புரி­யா­விட்­டாலும் ஒன்று மட்டும் புரிந்­தது, ‘அம்மா இனிமேல் தன்­னிடம் வர­மாட்டார்’ டயானா சளைக்­க­வில்லை. ஆனால், சின்னஞ் சிறு­வ­னான தம்­பியைச் சமா­ளிக்கச் சங்­க­டப்­பட்டார்.
தாயை நினைத்து அவன் தவித்து அழும்­போது இரவு முழு­வதும் கொட்டக் கொட்ட விழித்­தி­ருந்து சமா­தா­னப்­ப­டுத்தி அவனை உறங்­க­வைத்து தனது துன்­பத்தை மறந்து இள­வ­யது இன்­பத்தைப் பொருட்­ப­டுத்­தாமல் வாழப் பழ­கிக்­கொண்டாள். கல்­வியில் மந்­த­மானாள். தோல்வி பயத்­தினால் பொய்கள் பேசப் பழ­கினாள். டயா­னாவின் வாழ்க்கை தறி கெட்டுப் போவதைக் கண்டு பயந்த தந்தை ஜானி அவ­ளுக்கு விருப்­ப­மான வீட்டு விலங்­கு­களை வளர்க்க ஆரம்­பித்தார். ‘டெடி பெயார்’ போன்ற பொம்­மை­களை வாங்கிக் குவித்தார். விலை­ம­திப்­புள்ள ‘கமரா’ ஒன்றைப் பரி­ச­ளித்தார். ‘கம­ராவும்’ புகைப்­ப­டங்­களும் அழகி டயா­னாவின் வாழ்க்­கையை மாற்­றி­யது என்று கூறி­னாலும் அது மிகை­யல்ல.
இள­வ­ய­தி­லேயே டயா­னா­விடம் நிறைய நல்ல குணங்கள் துளிர்க்க ஆரம்­பித்­தன. மன­நல மருத்­து­வ­ம­னைக்கு அடிக்­கடி சென்று மன­நல நோயா­ளி­க­ளிடம் நீண்ட நேரம் மனம்­விட்டுப் பேசிக்­கொண்­டி­ருப்பார். விதம் வித­மான அழ­கிய நட­னங்­களை அவர்­க­ளுக்கு ஆடிக்­காட்டி அவர்­களை மகிழ்­விப்பார்.
டயானா வின் மறுபக்கம்
சார்ல்ஸ் பிறந்­த­போது இள­வ­ரசி எலி­சபெத் மட்­டும்தான் சார்ல்­ஸிற்கு. மூன்­றரை வய­தி­ருக்கும் போது எலி­ச­பெத்தின் தந்தை ஆறாம் ஜோர்ஜ் கால­மானார். எலி­சபெத் இங்­கி­லாந்தின் இரா­ணி­யானார். சார்ல்ஸ் ‘பிரின்ஸ் ஒப் வேல்ஸ்’ என்று அதி­கா­ரப்­பட்டம் சூட்­டப்­பட்டார்.

இள­வ­ரசர் சார்ல்ஸின் கண்ணில் முதற்­பட்ட பெண்­ணல்ல டயானா. ஆனாலும் அத்­தனை பேரிலும் திரு­மணம் வரைக்கும் சென்ற ஒரே உறவு டயா­னா­வு­டை­யது மட்­டும்தான். டயா­னாதான் தனது எதிர்­காலம் எனத் தீர்­மா­னிப்­ப­தற்குள் சார்ல்ஸ் சற்றுத் தடு­மா­றினார் எனினும் அவ­ரது காதலி கமீ­லாவோ “டயா­னாதான் உனக்­கேற்­றவள்” என்று பச்சைக் கொடி – காட்­டி­ய­வுடன் டயா­னாவை மணம் புரிந்தார் சார்ல்ஸ்.
சார்ல்ஸ் பிறந்த தினம்14 நவம்பர் 1948; டயா­னாவின் பிறந்­த­தினம்1 ஜூலை1961 பதின்­மூன்று வயது வித்­தி­யாசம். இந்­தக்­குறை சார்ல்ஸ்ற்கு எப்­போ­துமே மனத்தை உறுத்திக் கொண்­டி­ருந்­தது. 1981 ஜூலை 29 சார்ல்ஸ்- டயானா திரு­மணம். எனினும் திரு­ம­ணத்­திற்கு முதல் நாள் இரவும் கூட தமது காதலி கமீ­லா­வுடன் நீண்ட நேரம் பேசிக்­கொண்­டி­ருந்தார் சார்ல்ஸ்- அப்­போது உன்னை ஒரு போதும் பிரி­ய­மாட்டேன் என்று கமீ­லா­வுக்கு சத்­தியம் செய்து கொடுத்தார் சார்ல்ஸ்.



ஓர் அரச குடும்­பத்தைச் சேர்ந்­த­வரைத் திரு­மணம் செய்தால் என்­னென்ன அதி­ச­யங்கள் நடக்கும் என்­பதைத் தன் திரு­மண நாளன்று அனு­ப­வ­பூர்­வ­மாக உணர்ந்தார் டயானா. 29/7/1981 அன்று சர்­வ­தேச நட்­சத்­தி­ர­மானார் டயானா. இந்தத் திரு­ம­ணத்தை 75 கோடி மக்கள் கண்­டு­க­ளித்­தனர். ஆங்­கிலம் தவிர 34 மொழி­களில் திரு­மண வர்­ணனை மொழி­பெ­யர்க்­கப்­பட்­டது. காது­கே­ளா­தோ­ருக்­காக விசே­ட­மாகப் பதிவு செய்­யப்­பட்­டது. இந்த திரு­ம­ணத்தை ஏழரை மணி­நேரம் தொலைக்­காட்­சிகள் ஒளி­ப­ரப்­பின. இள­வ­ரசி என்­கிற வட்­டத்­தி­லி­ருந்து விலகி நின்று எல்­லோ­ரி­டமும் பழ­கினார் டயானா. குடும்பம், உடல் நலன், செள­க­ரி­யங்கள் போன்ற தனிப்­பட்ட நலன்கள் மீது ஆர்வம் காட்டி விசா­ரிப்பார். இதனால் மிகவும் புகழ்­பெறத் தொடங்­கினார். பத்­தி­ரி­கை­யா­ளர்கள் இவரைச் சூழ்ந்து கொண்­டார்கள். புகைப்­ப­டக்­கா­ரர்கள் டயா­னாவை மொய்த்துக் கொண்­டார்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
‘மீடியா’ இள­வ­ரசர் சார்ல்ஸை கவனிக் கவில்லை, ஏன் புறக்­க­ணித்­தது என்றே கூறலாம். சார்ல்ஸ் டய­ானா­விற்கு விரிசல் ஏற்­பட இதுவும் ஒரு காரண மெனலாம். 1982 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21 ஆம் திகதி வில்­லியம் பிறந்தான். பிர­ச­வ­நே­ரத்தின் போது அருகே இருந்து கவ­னித்துக் கொண்டார் கணவர் சால்ஸ். இது டயா­னா­விற்கு மிகுந்த சந்­தோ­ஷத்தை அளித்­தது. ஆனால் அந்த சந்­தோஷம் நீண்­ட­காலம் நீடிக்­க­டி­வில்லை. சார்ல்ஸ் கமீலா காதல் / தொடர்பு தொடர்ந்­தது.

1984 செப்­டெம்பர் 15 ஆம் திகதி ஹாரி பிறந்தான். அடுத்த வருடம் 1985ஆம் ஆண்டு பேரி மன்­னகே என்­கிற காவல்­துறை அதி­காரி டய­ானாவின் பாது­காப்பு அதி­கா­ரி­யாகப் பணி­பு­ரி­ய ­வந்தார். வாட்­ட­சாட்­ட­மான ஆள் சால்ஸை திரு­மணம் செய்­தபின் எந்த ஆண்­ம­க­னையும் ஏறெ­டுத்துப் பார்க்­காத டயானா சப­தத்­திற்கு ஆளானார். மன்­னகே டய­ானா­விற்கு ஒரு ‘ரெடி­பி­யரை’ அன்­ப­ளிப்புச் செய்தார். அது டய­ானாவின் படுக்கை அறையை அழகு செய்­தது. செய்தி அரண்­ம­னைக்கு எட்­டி­ய­வுடன் மன்­ன­கேயின் பதவி பறிக்­கப்­பட்­டது. அடுத்த இரண்டு வரு­டங்­களில் மன்­னகே மீது கார்­மோதி உயிரும் பறிக்­கப்­பட்­டது. அவர் ­கொலை செய்யப் பட்­டி­ருக்­கலாம் என டயானா சந்­தே­கித்தார். மன்­னகே புதைக்­கப்­பட்ட கொலை செய்யப் பட்­டி­ருக்­கலாம் என டயானா சந்­தே­கித்தார். மன்­னகே புதைக்­கப்­பட்ட கொலை செய்யப் பட்­டி­ருக்­கலாம் என டயானா சந்­தே­கித்தார். மன்­னகே புதைக்­கப்­பட்ட இடத்தில் மலர் தூவி அஞ்­சலி செலுத்­தினர். அன்­றோடு டய­ா னாவின் முத­லா­வது சிற்­றின்பம் முடி­வுக்கு வந்­தது. 

அடுத்து டய­ானாவின் தொடர்பு ஜேம்ஸ்­ஹெவிட் என்­ப­வ­ருடன் ஏற்­பட்­டது. போலோ­வீரர்; குதிரை ஏறிப் பழகும் காட்டில் அவரை நண்­ப­ராக்கிக் கொண்டார் டயானா. சில ஆண்­டு­க­ளாக சார்ல்­ஸி­ட­மி­ருந்து எது­வித சுகத்­தையும் அனு­ப­விக்­காத டயா­னா­வுக்கு மாற்­றாக விளங்­கினார் ஜேம்ஸ் ஹெவிட் சார்ல்­சிற்கு கமீலா டயா­னா­விற்கு ஹெவிட் என்று இரு­வரும் அவ­ர­வர்க்கு ஏற்ற பிடித்­த­மான வாழ்க்­கையை வாழத் தொடங்­கி­னார்கள். 1986 ஆம் ஆண்டு அர­சாங்­கப்­பணி கார­ண­மாக ஹெவிட் ஜேர்­ம­னிக்குப் பய­ண­மாக நேர்ந்­தது. டயானா எவ்­வ­ளவோ சண்டை போட்டும் தொடர்ந்து டய­ானா­வுடன் தொடர்பு வைத்­துக்­கொள்­வது தனக்கு ஆபத்து என உணர்ந்து ஹெவிட் ஜேர்­மனி சென்றார். 


சார்ல்ஸ் டயானா முறிவு கொஞ்சம் கொஞ்­ச­மாக வெளி­வர ஆரம்­பித்­தது. வந்த வேகத்தில் மறைந்த மன்­னகே சொல்லக் கேட்­காமல் ஓடிப்­போன ஹெவிட் ஆண் துணை­யில்­லாமல் தவிர்த்தார் டயானா. அந்தக் குறையைப் போக்க டயா­னாவின் வாழ்க்­கைக்குள் நுழைந்தார் ஜேம்ஸ் கில்பி என்­பவர். டயா­னாவின் கில்­பிக்கும் முதல் திரு­மணம் தோல்­வியில் முடிந்­தி­ருந்­தது. அதனைச் சாட்­டாக வைத்து கில்­பி­யுடன் ஒட்­டிக்­கொண்டார் டயானா. அதுவும் சொற்­ப­கா­லம்தான். அழகி டய­ானாவின் கடைசிக் காதலன் முகமத் அப்டெல் மொனிம் பயத் என்­கிற முகமத் அல் பயத் செல்­வாக்­கான மனிதர் கோடீஸ்­வரர் செல்­லப்­பெயர் கோடி, அவர் அமெ­ரிக்கக் மொடல் அழகி கெல்பி பிள்ளர் என்ற பெண்ணைத் திரு­மணம் செய்ய இருந்தார்.
டய­ானாவை டோடிக்கு அறிமுகம் செய்து வைத்தார். பயத் பார்த்த மாத்­தி­ரத்­தி­லேயே டோடியின் கன்னக் குழிச் சிரிப்­புக்கு மனதைப் பறி­கொ­டுத்து அடி­மை­யானார் டயானா. அத்­துடன் அந்த வேளையில் டயா­னா­விற்கு நல்ல, நம்­பிக்­கை­யான துணை ஒன்று அவ­சி­ய­மாகத் தேவைப்­பட்­டது. டோடியை எந்தச் சங்­க­ட­மு­மில்­லாமல் ஏற்றுக் கொண்டார்.
1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி டய­ானாவின் வாழ்க்­கையில் முக்­கி­ய­மான நாள். காலையில் உண­வ­ருந்­தி­விட்டு தனி விமா­னத்தில் பாரிஸ் செல்­கி­றார்கள். மாலை 3.20 மணிக்கு பாரிஸை அடைந்­த­போது பத்­தி­ரி­கை­க­ளுக்கு செய்தி சென்று பத்­தி­ரி­கை­யா­ளர்கள், படப்­பி­டிப்­பா­ளர்கள் சூழ்ந்து தொல்லை கொடுக்­கி­றார்கள்.
இரவு உணவு அருந்­தி­யபின் டோடியின் உத்­த­ர­வுப்­படி ஹென்­றிபால் என்­கிற பாது­கா­­வலர் வர­வ­ழைக்­கப்­ப­­டு­கிறார். அவர்தான் இரு­வ­ரையும் பத்­தி­ர­மாக சாம்ஸ் எலி­ஸி­லுள்ள தமது அப்­பார்ட்­மென்­டுக்கு அழைத்­து­வ­ர­வேண்­டு­மென பயத்தின் உத்­த­ரவு முன்­வா­சலில் ஊட­க­வி­ய­லாளர்­களின் தொல்லை இருப்­ப­தனால், மெர்­சிடஸ் எஸ் 280 காரை எடுத்­துக்­கொண்டு ரிட்ஸ் ஹோட்­ட­லின்ட பின்­பக்கம் வரு­மாறு பாலுக்கு தகவல் அனுப்­பு­கிறார் டோடி. மோடி டயானா கீழி­றங்கி வரும்­வரை ‘சும்மா இருப்­பானேன்’ என எண்ணி டிரிட்ஸ் மது­பானக் கூடத்தில் மது அருந்­து­கிறார். ஹென்­றி­பால்—­அங்­குதான் தவறு ஏற்­பட்­டது என்று இன்றும் சிலர் கரு­து­கி­றார்கள்.

ஆகஸ்ட் 31 நள்­ளி­ரவு 12 மணி டயா­னாவும் மோடியும் ஹோட்­டலை விட்டு வெளி­யேற்றி மெர்­ஸிடஸ் காரில் பின் சீற்றில் ஏறு­கி­றார்கள். முன் சீற்றில் மது­போ­தை­யி­லி­ருந்த ஓட்­டுநர் ஹென்­றி­பாலும் பாது­கா­வலர் ரீஸ் ஜோன்ஸும் அமர்ந்து கொள்ள கார் சீறிப்­பாய்ந்து கொண்டு சென்­றது.
தக­வ­ல­றிந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் மோட் டார் சைக்­கிள்­களில் காரை வெகு வேக­மாகப் பின் தொடர்­கி­றார்கள். நள்­ளி­ரவு 12.23 மணி­ய­ளவில் டெல் அல்மா என்­கிற சுரங்­கப்­பாதை வழி­யாக வண்டி வெகு வேக­மாகச் சென்று கொண்­டி­ருந்­தது. மோட்டார் சைக்­கிள்கள் துரத்­து­வதால் வேகத்தை அதி­க­ரிக்­கிறார் ஹென்­றிபால் தமக்கு முன்னால் சென்ற வெள்ளை பியற்­காரை பால் முந்திச் செல்­கிறார். திடீ­ரென மெர்­ஸிடஸ் தனது கட்­டுப்­பாட்டை இழந்து நேராகப் பாலத்­தி­லி­ருந்த பதின்­மூன்­றா­வது கொன்­கிறீட் தூணில் மூர்க்­க­மாக மோது­கி­றது.

ரிட்ஸ் விடு­தி­யி­லி­ருந்து கிளம்­பிய மூன்­றா­வது நிமி­டத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது கவனிக்கத்தக்கது. மோடியும், ஹென்றி பாலும் விபத்து நிகழ்ந்த ஓரிரு நொடிக ளில் காலமானார்கள். ‘சீட்பெல்ட்’ அணிந்திருந்தமையால் ரீஸ் ஜோன்ஸ் உயிர் தப்பினார். லா பிட்டிஸால் மருத்துவமனையில் டயானா மரணமானார். தமது பத்தொன் பதாவது வயதில் இளவரசர் சார்ல்ஸைத் திருமணம் செய்துகொண்டு சார்ல்ஸின் மனதில் இடம்பிடிக்க முடியாவிட்டாலும், உலகத் தொழு நோயாளிகள், எயிட்ஸ் நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அடித்தட்டு மக்களின் இதயத்தில் இடம்பிடித்தவர்இளவரசி டயானா.
மக்களின் இளவரசியாக கோடானுகோடி மக்களின் இதயத்தில் வாழ்கிறார் டயானா!