Sunday, 14 February 2021

ROSAAPPOO RAVIKKAIKARI 1979

 


ROSAAPPOO RAVIKKAIKARI 1979


ரோசாப்பூ ரவிக்கைகாரி 1979




ரவிக்கையோ பாவாடையோ அணிந்திராத பெண்கள் நிறைந்த வண்டிச்சோலை கிராமத்தில், ரவிக்கையும் பாவாடையும் அணிந்த மன்னார்பாளையத்து நந்தினியின் பாதம் பட்ட பிறகு நிகழ்ந்த மாற்றங்களுக்கெல்லாம் அவளும் ஒரு காரணம். அதற்காக அவள் பட்ட பாடுகளும் கொஞ்சம் நஞ்சமல்ல

எட்டாம் வகுப்புவரை படித்திருந்த நந்தினி வண்டிச்சோலை கிராமத்துக்கு வந்தபோது, நாட்டில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. விடுதலைக்கு முந்தைய காலத்தில் நடந்தது நந்தினியின் கதை. நந்தினியின் முடிவே இன்றும் பெண்கள் பலருக்கும் ஏற்படுகிறது என்பதுதான் சோகம். நந்தினி நவீனத்தின் அம்சம் என்பதைப் பழமைவாதிகள் உணரும்வரை இத்தகைய சோக முடிவுகளே தொடரும் என்பது கவலை தரும் உண்மை.



அந்தக் கிராமத்துக்கு அவள் உள்ளாடையையும் கிராமபோனையும் பெட்ரோமாக்ஸ் விளக்கையும் கொண்டுவந்தாள். அவை எல்லாவற்றையும்விட அவள் கொண்டுவந்த புதிய நாகரிக மனம்தான் அந்தக் கிராமத்தினரை அதிர்ச்சியடையச் செய்தது. அவள் நகரத்தில் வாழ்ந்தவள்.

காலையில் பல் துலக்க அடுப்புக்கரியையோ ஆலங்குச்சியையோ வேலங்குச்சியையோ தேடாதவள். காலையில் எழுந்தவுடன் நீத்தண்ணியைக் (நீராகாரம்) குடிக்கும் பழக்கம் அற்றவள்.

 அவளுக்கு ரசனையோடு குடிக்க காபித்தண்ணிதான் வேண்டும். அவளது ரசனையான வாழ்வைப் புரிந்துகொள்ள முடியாத மனிதர்களிடம் வந்து அவள் மாட்டிக்கொண்டாள்.

நந்தினியின் புருஷன் செம்பட்டையன், தலைச்சுமையாகப் பொருள்களைச் சுமந்துகொண்டு அக்கம்பக்கத்துக் கிராமங்களில் விற்றுவரும் வியாபாரி.


 அவனுடைய தாய் ஆவுடையம்மாள் புயலுக்கே அசைந்துகொடுக்காத பழமைவாதப் பெருமரம். அவள் நிழலில் புருஷனுடன் கொஞ்சும் சூழல் வந்து வாய்த்தது நந்தினிக்கு. 

பெரும் சுழலில் மாட்டிக்கொண்ட சிறு படகானாள் நந்தினி. 

செம்பட்டையோ வலுவற்ற துடுப்பானான்; தாய் பக்கம் நிற்பதா தாரத்தின் பக்கம் சாய்வதா என்பது புரியாமல் தடுமாறிப்போனான்.

நந்தினியின் எழிலும் நாகரிகமும் அந்த ஊரில் அனைவரையும் ஏறிட்டுப் பார்க்க வைத்தது. தள்ளாடாமல் நிற்கக்கூட முடியாத நீர் மோர் தாத்தாகூட அவளைப் பார்த்து நெஞ்சுருகி நின்றார். 

தங்காயி உள்ளிட்ட கிராமத்துப் பெண்கள் அனைவருக்கும் நந்தினிபோல் உடுத்திக்கொள்ளவும் நடந்துகொள்ளவும் ஆசை எழுந்தது. மாமியாரின் வசவுக்கிடையிலும் கணவனது எரிச்சலுக்கிடையிலும் நாகரிகத்துக்கு முகம்கொடுக்க ஆசைப்பட்டார்கள். 

முகத்துக்கு பவுடர், தலைக்கு நறுமண எண்ணெய் என நந்தினியின் பவுசுக்கு அங்கே மவுசு அதிகரித்தது. நந்தினியும் தானறிந்த நாகரிகத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைந்தாள்.


நந்தினியின் நாகரிகத்தைக் கேள்விகேட்ட பண்ணையாரின் மனைவிகூடத் தன் மகள் தில்லாயிக்குப் பட்டணத்து வரன் அமைந்தபோது அவளுக்கும் உள்ளாடை, ரவிக்கை, பாவாடை, பவுடர் இத்யாதிகளை வாங்கிவரும்படி செம்பட்டையைப் பணிக்கிறாள்.

இதுதான் கிராமத்தினரின் மனமாக இருக்கிறது. அவர்களுக்கு நந்தினி போல நாகரிகம் கொள்ளவும் ஆசை, கட்டிதட்டிப்போன கிராமத்துப் பழக்கவழக்கங்களைக் கைவிடவும் அச்சம். 

இந்த இரண்டுக்கும் இடையே அகப்பட்டு உழன்றார்கள். இன்றுவரை இப்படியான மனநிலை மனிதரிடையே தொடரத்தான் செய்கிறது.

கூட்டுக் குடும்பத்தில் செம்பட்டையின் அண்ணன் சடையால் பொருந்திப்போக முடிந்த அளவு செம்பட்டையால் பொருந்திப்போக முடியாததற்குக் காரணம் ஒருவகையில் நந்தினிதான். 

பாட்டுக் கேட்க ஆசைப்பட்டுத் தன் தந்தை வாங்கித் தந்த கிராமபோனை வீட்டுக்கு எடுத்துவந்த நந்தினியிடம் சண்டைபோட்ட ஆவுடையம்மாள், கிராமபோனை உடைத்ததுடன் நந்தினி தொடையிலும் சூடு போட்டுவிட்டாள்.

தினசரி வேலைகளின் அலுப்புப்போக நாட்டுப்புறப் பாட்டுப் பாடும் பழக்கம்கொண்ட கிராமத்தினருக்கு கிராமபோன் கருவியின் மீது ஒவ்வாமை ஏன் ஏற்பட வேண்டும்? பழமைவாதம் நவீனத்துக்கு விடுத்த எச்சரிக்கையாகவே அமைந்தது நந்தினிக்கு

 ஆவுடையம்மாள் போட்ட சூடு. அதன் பின்னர் சொத்தைப் பாகம் பிரித்துத் தனக்கெனத் தனி வீடு, வாழ்க்கை ஆகியவற்றை அமைத்துக்கொண்டான் செம்பட்டை.

தனியாக வாழ்க்கை நடத்தும் செம்பட்டையின் வீட்டுக்கு வருகிறான் மாணிக்கம். ஆங்கிலேய துரையிடம் பணிபுரியும் அவனிடம் தென்படும் நாசூக்கான நடவடிக்கைகளும் பண்பான பழக்கவழங்கங்களும் நந்தினியைக் கவர்கின்றன.

 அவன் ரசனையுடன் உண்ணும் விதத்தையும் வெற்றிலை மெல்லும் அழகையும் ரசித்துப் பார்க்கிறாள் நந்தினி. அவர்களது மனங்கள் மௌன மொழியில் ரகசிய உரையாடலைநிகழ்த்திக்கொள்கின்றன.

மனம் முன்மொழியும் உரையாடலை உடம்பு வழிமொழியும் தருணமும் வாய்க்கிறது. மன்னார்பாளையத்து மாரியம்மன் கோயில் திருவிழாவுக்குத் தன்னால் வர இயலாது என்பதால், நந்தினியை மாணிக்கத்துடன் அனுப்பிவைக்கிறான் செம்பட்டை.

ஓடை நீர் ஆற்றுடன் கலப்பதுபோல் மாணிக்கத்துடன் கலக்கிறாள் நந்தினி. பழமைவாதம் திருமணம் கடந்த உறவைப் பண்பாட்டைத் தகர்க்கும் வெடியாகப் பார்க்கும் வேளையில்,

 நவீனமோ அதை ரசனைக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும் வாண வேடிக்கையாகப் பார்க்கிறது.

கோயில் விழாவுக்குப் போய்வந்த நந்தினி பெட்ரோமாக்ஸ் விளக்கொன்றை வாங்கி வருகிறாள். லாந்தர் விளக்கைப் போல் அல்லாமல் அதன் வெளிச்சம் பளிச்சென்று கண்ணைப் பறிக்கிறது. அதன் வெளிச்சத்தில் அமர்ந்து செம்பட்டையும் நந்தினியும் பேசிக்கொள்கிறார்கள். 

“மனுசன் காலத்துக்குத் தகுந்த மாதிரி மாறிக்கிடணும். நாகரிகமா இருக்குறதும் 

உடம்ப சுத்தமாக வச்சிகிட்றதும் தப்புங்கிறாங்க.

அதான் மனசுக்குக் கஷ்டமாயிருக்கு” என்கிறாள் நந்தினி.

“போட்டிருக்குற துணியும் உடம்பும் சுத்தமா இருந்தா போதாது. மனசுதான் சுத்தமா இருக்கோணும்” என்கிறான் செம்பட்டை, நந்தினிக்குச் சுருக்கென்றிருக்கிறது.

நந்தினியின் உறவு பற்றி ஊர் பேசிக் களிக்கிறது. அந்தப் பேச்சு செம்பட்டை காதையும் எட்டுகிறது. 

நந்தினியின் முந்தானையில் மண் ஒட்டியுள்ளதாக திருச்செங்கோடன் செம்பட்டையிடமே சொல்ல, இருவருக்கும் சண்டை மூள்கிறது.

தக்க நேரத்தில் பயில்வான் வந்து சண்டையை விலக்கிவிடுகிறார். ஊரின் ஏச்சு பேச்சையெல்லாம் பெரிதுபடுத்தாத செம்பட்டை ஒருநாள் தானே நேரில் நந்தினியைப் பார்க்கிறான்.

நவீனத்தின் நாகரிகப் போக்கை எதிர்கொள்ளத் தெரியாத செம்பட்டையன் மனம் கொதிக்கிறது; குளத்தில் மூழ்கி நிம்மதியடைகிறான். செம்பட்டையனை எதிர்கொள்ள அஞ்சி நந்தினியும் கயிற்றில் தொங்கிவிடுகிறாள்.

வண்டிச்சோலைக்கு நாகரிகம் கற்றுத் தந்த தன் பணி முடிந்துவிட்டதாகக் கருதியவள் தன் கதையை முடித்துக்கொண்டாள்.

நவீனத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் பழமைவாதம் இப்படி எத்தனை நந்தினிகளின் உயிரை வாங்கியுள்ளதோ யாருக்குத் தெரியும்?

தேவராஜ் மோகன் இயக்கிய ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ (1979)

 திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் இது.

 படத்தின் கதையை எழுதியவர் ஆவனஹள்ளி கிருஷ்ணா. திரைக்கதை வசனத்தை எழுதியவர் கிருஷ்ணா (விஜய் கிருஷ்ணராஜ்).

Rசெல்லப்பா

No comments:

Post a Comment