Wednesday 6 November 2019

GANDHI LIKED FREEDOM FIGHTERS OF TAMILNADU






GANDHI LIKED FREEDOM FIGHTERS OF TAMILNADU


தென்னாப்பிரிக்கா முதல் தென் குமரி வரை... காந்தியை பிரமிக்க வைத்த தமிழர்கள்! #Gandhi150
தமிழ்மகன்

தமிழர்களுக்கு காந்தியையும் காந்திக்குத் தமிழர்களையும் அளவுக்கு அதிகமாகவே பிடித்துப்போனது. தமிழில் படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது.மகாத்மா காந்திக்கும் தமிழருக்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு. அது, தென்னாப்பிரிக்காவில் காந்தி வக்கீல் தொழிலைத் தொடங்கிய காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது.  தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கியபோது அவருக்கு உறுதுணையாக இருந்து, ஆங்கிலேயர்களின் அடாவடித்தனங்களை எதிர்த்து சிறை சென்று உயிர் மாய்ந்த மூவரில் ஒருவரை நம்மில் பலருக்கும் தெரியும்... அவர் தில்லையாடி வள்ளியம்மை. 16 வயது இளம் பெண். தென்னாப்பிரிக்காவில் யாருடைய தியாகம் அரும்பலன் தந்தது என்று யாரும் கூற முடியாது. ஆனால், ஒன்று நமக்குத் தெரியும். வள்ளியம்மையின் தியாகம்' என்று வள்ளியம்மையின் பெயரைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார், காந்தி.

வள்ளியம்மையோடு அவருடைய தாய் ஜானகியும் சிறைக்குச் சென்றவர். இன்னும் பல தமிழர்கள் அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துச் சிறை சென்றனர். இந்திய முறைப்படி நடைபெற்ற திருமணங்கள் செல்லாது என்ற ஆங்கிலேயர்களின் அறிவிப்புக்குத்தான் ஜோகன்னஸ்பர்க்கில் போராட்டம் வெடித்தது. அந்த வழக்கை எடுத்து நடத்தியவர், காந்தி. இப்படித்தான் தமிழர்களுடனான தொடர்பு காந்திக்கு வாய்த்தது. 1913-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 22-ம் தேதி, வள்ளியம்மை மறைந்தார்.


காந்தியின் சத்தியாகிரகப் போராட்டத்துக்குத் துணை நின்று உயிர்நீத்த இன்னொருவர், கடலூரைச் சேர்ந்த நாகப்பன். 20 வயது நிரம்பாத இளைஞன். அவனுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை 10 நாள்கள்தான்.  சிறையிலிருந்து திரும்பியவன் நடைப்பிணமாகத்தான் வெளியே வந்தான். சொல்லப்போனால் தில்லையாடி வள்ளியம்மைக்கு முன் காந்தியை ஈர்த்த தமிழ் இளைஞர் இவர். இவர், சிறை சென்று வந்து மறைந்தது, 1909-ம் ஆண்டு. எஃகு போன்ற அந்த இளைஞன் உருக்குலைந்து சிறையிலிருந்து வந்தபோது, காந்தி அவனைச் சந்தித்தார். அவன் சொன்னான், ''ஒருமுறைதான் சாகமுடியும். அவசியமானால் மீண்டும் நான் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன். இந்த இருவருக்கும் ஜோகன்னஸ்பர்க்கில் நினைவுச்சின்னம் எழுப்பினார், காந்தி.

மூன்றாவது நபர், நாராயணசாமி. சத்தியாகிரகப் போராட்டங்கள் காரணமாக, தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டு, கப்பலில் கடும் குளிரில் போதிய உடைகள் இன்றி மரணமடைந்தவர். 'இந்தியன் ஒப்பீனியன்' இதழில் இந்த நாகப்பனைப் பற்றியும் நாராயணசாமியைப் பற்றியும் குறிப்பிட்டு எழுதிய காந்தி, 'நாகப்பனையும் நாராயணசாமியையும் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ஜே' என முடித்தார். 1915-ல் அவர் இந்தியாவில் இருந்து வக்கீல் தொழிலைப் பார்க்க முடிவெடுத்த பிறகு, 1917-ல் முதல் முறையாக தமிழகம் வந்தார். அது, ஓர் எளிய பயணம். காந்தியின் அரசியல் வாழ்வின் தொடக்க காலம். அன்னிபெசன்ட் நடத்திய 'நியூ இந்தியா' இதழில் திரு.எம்.கே.காந்தி என்ற தலைப்பில் சிறிய செய்தியாக முதன்முதலில் அவருடைய தமிழக வருகை பதிவுசெய்யப்பட்டது. அதன்பிறகு, மகாத்மா 20 முறை தமிழகம் வந்தார்.

''சென்னை நகர மக்களிடமும் இந்த மாநில மக்களிடமும் எனக்கு எல்லையில்லா நம்பிக்கை உண்டு. இந்தியாவின் எந்த மாநிலத்துக்கும் இந்த மாநிலம் பின் தங்கியது இல்லை. 1893-ல் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் ஏற்பட்ட நம்பிக்கை இது''
காந்தி

அவர் வந்த இடங்களில் எல்லாம் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கூடி வரவேற்றனர். தமிழர்களுக்கு காந்தியையும் காந்திக்குத் தமிழர்களையும் அளவுக்கு அதிகமாகவே பிடித்துப்போனது. தமிழில் படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. தனக்கு தமிழ் சொல்லித் தருவதற்காகவே ஒருவரை நியமித்திருந்தார்.

காந்தி
காந்தி
1920-ல் சென்னை வந்த காந்தி, சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் சேட் கார்டன்ஸில் ஹாஜி அப்துல் ரஹீம் சாகிப்பின் விருந்தினராகத் தங்கினார். திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் பேசினார். ''சென்னை நகர மக்களிடமும் இந்த மாநில மக்களிடமும் எனக்கு எல்லையில்லா நம்பிக்கை உண்டு. இந்தியாவின் எந்த மாநிலத்துக்கும் இந்த மாநிலம் பின் தங்கியது இல்லை. 1893-ல் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் ஏற்பட்ட நம்பிக்கை இது'' என்று பேசினார்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மாயவரம் வழியாக குடந்தை சென்றார். ரயில் நிலையங்களில் காந்திக்கு தமிழர் அளித்த வரவேற்பு பிரமாண்டமாக இருந்தது. நாகப்பட்டினம், நாகூர், திருச்சி நகரங்களில் பேசினார். அந்த நாள்களில் பிராமணர் - பிராமணர் அல்லாதார் பிரச்னையில் நீதிக்கட்சியினர் தீவிரம் காட்டினர். ஐரோப்பியர்கள் காட்டும் நிற வேறுபாட்டுக்கு இணையாக காந்தி பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. அதன்பிறகு, 1921-ல் சென்னை வந்தபோதும் பிராமணர் - பிராமணர் அல்லாதார் பிரச்னையைப் பற்றிப் பேசினார். ''நம்முடைய சகோதரர்களை நாம் தீண்டத்தகாதவராகக் கருதினோம். அந்தப் பாவத்தின் சம்பளமாகத்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கிறோம்'' என்றார்.

காந்தி
காந்தி
மீண்டும் அதே ஆண்டில் இன்னொரு முறை தமிழகம் வந்தார். கடலூர், திருவண்ணாமலை, பரங்கிப்பேட்டை, குடந்தை, திருச்சி , புதுக்கோட்டை, சென்னையில் பிரசாரம் செய்தார். மதுரை, திண்டுக்கல், மேலூர், திருப்பத்தூர், கானாடு காத்தான், காரைக்குடி, தேவகோட்டை என அவருடைய பயணம் தமிழகத்தை குறுக்குநெடுக்காக அலசியது. காரைக்குடியில் காந்தியைச் சந்தித்த எழுத்தாளர் வ.ரா. வர்ணாசிரம தர்மம் வேண்டுமா வேண்டாமா என விவாதித்தார். இந்த விவாதம் மூன்று நாள்களுக்கு விட்டுவிட்டுத் தொடர்ந்தது. சாதி வேற்றுமை வேண்டாம் என்பவர், வர்ணாசிரமத்தை ஆதரிக்கலாமா என்பதே வ.ரா எழுப்பிய கேள்வி. ''வர்ணாசிரமம் என்பது தொழில் பற்றியது. தொழில் பரம்பரையாக வருமானால், பண விரயமும் கால விரயமும் தவிர்க்கப்படும். மற்றபடி தொழில் காரணமாக உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி எனும் கருத்து கூடாது. 'வர்ணாசிரமம் என்பது மக்கள் சமுதாயத்துக்கு வாய்த்த நல்ல அமைப்பு' என காந்தி வாதிட்டார். அந்த விவாதம் ஒரு முடிவுக்கு வராமலே முடிந்துபோனது.


நெல்லை, சேலம், கோவை, கன்னியாகுமரி என தமிழகம் முழுக்க அண்ணலின் கால் படாத இடமே இல்லை எனும் அளவுக்கு தமிழகத்துக்கு மட்டும் 20 முறை காந்தியடிகள் வந்தார்.
பெரியார்  
பெரியார்
ஈரோடு வந்தபோது, பெரியாரின் இல்லத்துக்கும் காந்தி வந்து சென்றார். கதர் வியாபாரம், கள்ளுக்கடை மறியல் என ஈ.வெ.ராமசாமியும் நாகம்மையும் காந்தியடிகளுடன் இணைந்து போராடியதையும் காந்தி அடிகள் 'யங் இந்தியா'வில் குறிப்பிட்டு எழுதினார். 'நாயக்கர் கைதுசெய்யப்பட்டாலும், அவருடைய மனைவியும் தங்கையும் அந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டார்கள்' என எழுதினார். இராஜாஜி, சத்தியமூர்த்தி என காந்தி அடிகளைப் பின்பற்றிய பெருங்கூட்டம் இருந்தது. நெல்லை, சேலம், கோவை, கன்னியாகுமரி என தமிழகம் முழுக்க அண்ணலின் கால் படாத இடமே இல்லை எனும் அளவுக்கு தமிழகத்துக்கு மட்டும் 20 முறை காந்தியடிகள் வந்தார்.

கடலூரில் வெள்ளையரை எதிர்த்துப் போராடி, நிறைமாத கர்ப்பிணியாக சிறைக்குச் சென்று, சிறையிலேயே குழந்தை பெற்றெடுத்த அஞ்சலை அம்மாளை தென்னாட்டு ஜான்ஸி ராணி என காந்தி அடிகள் போற்றினார். சிறையில் பிறந்த அந்தக் குழந்தைக்கு, 'ஜெயில் வீரன்' எனப் பெயரிட்ட வினோதமும் நடந்தது.

அஞ்சலை அம்மாள்
அஞ்சலை அம்மாள்
போதிய உடை இல்லாமல் இந்திய மக்கள் உலவும் அவலம் காந்திக்கு வெகுகாலமாகவே இருந்தபோதிலும், அவர் மதுரை வந்தபோதுதான் இனிமேல் அரை அடை அணியப்போவதாக முடிவெடுத்தார். அதுவே, காந்தி அடிகளின் உலக அடையாளமாக மாறியது.


உலகம் போற்றும் உத்தமரான காந்தி அடிகள் கன்னியாகுமரி வந்தபோது, ஒரு விபரீதமான சம்பவம் நடந்தது. கன்னியாகுமரித் தாயை தரிசிக்க, காந்தி அடிகள் விரும்பினார். அன்றைய நாளில் கடல் கடந்து பயணம் செய்தவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க இயலாத காரணத்தைக் கோயில் நிர்வாகிகள் சொன்னார்கள். அந்த கட்டுப்பாட்டைத் தாம் மதிப்பதாகச் சொன்ன காந்தி அடிகள், குமரி அன்னையைப் பார்க்காமலேயே திரும்பினார்.


தமிழகம் எல்லா வகையிலும் காந்தியைப் பாதித்தது...  காந்தி எல்லாவிதங்களிலும் தமிழகத்தைப் பாதித்தார்.

No comments:

Post a Comment