Saturday 2 November 2019

STATE DIVISION AS PER LANGUAGE WISE



STATE DIVISION AS PER LANGUAGE WISE


1917ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் கட்சி மொழிவாரி மாநில காங்கிரஸ் அமைக்க ஒப்புக் கொண்டுவிட்டது என்பதுதான், மொழிவழி மாநிலம் பிறந்ததற்கு ‘கரு’ப்பருவம். மொழிவாரி காங்கிரஸ் சீரமைப்பை அண்ணல் காந்தி ஊக்குவித்தார், ஆதரித்தார்.

1937ல் நேருவின் கருத்தும் இதுவாகத்தான் இருந்தது. ஆனால் 1947ல்அவர் வேறு சிந்தனை கொண்டிருந்தார். நாடு அப்போதுதான் இந்தியா-பாகிஸ்தான் என மத அடிப்படையில் பிரிக்கப்பட்டு இருந்தது. மேலும், அதை மொழிவாரியாகப் பிரிப்பது, இந்திய யூனியன் சிதறுவதை ஊக்குவிப்பதாகாதா? என்று நேரு அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

1947 நவம்பரில் “மொழிவாரி மாநில சீரமைப்பு ஒத்திப் போடப்படுவது தற்போது உள்ள சூழ்நிலையில் ஓரளவு நியாயமானதே” என்று அண்ணல் காந்தியடிகளும் நேருவின் கருத்தை வழிமொழிந்து எழுதினார். தற்காலிகமாக மொழிவாரி மாநிலப் பிரிவினை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு மராத்திய மொழி பேசும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தனி மராத்திய மாநிலத்தை வற்புறுத்தினர். குஜராத்தியைத் தாய்மொழியாகக்கொண்ட காங்கிரஸ் உறுப்பினர்கள், அதேபோல அவர்களுக்கு ஒரு சொந்த மாநிலம் கோரினர். தெலுங்கு, கன்னடம், மலையாளம் அல்லது ஒரியா மொழி பேசுபவர்களின் லட்சியமும் அவ்வாறே இருந்தது.

இக்கூக்குரலை அமைதிப்படுத்த ஒரு புதிய குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் பிரதமராக இருந்த நேரு, உள்துறை அமைச்சராக இருந்த வல்லபபாய் படேல், காங்கிரஸ் கட்சியின் வரலாறு எழுதிவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான பட்டாபி சீதாராமைய்யா மூவரும் இருந்தனர். இதை ஜே.வி.பி. குழு என்று அழைக்கப்பட்டது.

இக்குழு மொழிவாரி மாநிலக் கொள்கைக்கு எதிரான கருத்தைத் தெரிவித்தது. “மொழி ஒன்றிணைக்கும் சக்தி மட்டுமல்ல, பிரிக்கும் சக்தியும்கூட” என்று வாதிட்டது. ஆனால் காலம் ஜே.வி.பி. குழுவின் கருத்தை நிராகரித்தது.


1952ல் ஆந்திராவில் பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திர மாநிலப் பிரிவினைக்காக உண்ணாவிரதம் இருந்தார். 58 நாள் உண்ணாவிரதத்தில் பொட்டி ஸ்ரீராமுலு டிசம்பர் 15ம் நாள் இறந்தார். அவருடைய மரணச்செய்தி கலவரத்தை விளைத்தது. இதனால் மேலும் பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியாத கிளர்ச்சிகள் ஏற்படலாம் என்ற அச்சத்தால் நேருவும் வழிக்கு வந்தார். ஸ்ரீராமுலு மறைவுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு “ஆந்திர மாநிலம் அமையும்” என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஆந்திரப் பிரதேசம் பிரதமர் நேருவின் விருப்பமின்றியே உருவானது.


மொழிவாரி மாநில கோரிக்கைகள் வலுவடைந்தது. இந்த மொழிவாரி சிக்கலைத் தீர்ப்பதற்கான பரவலான கொள்கை குறித்து பரிந்துரை செய்ய, “மாநிலச் சீரமைப்பு ஆணையம்” ஒன்றை அமைத்தது மத்திய அரசு. அந்தக் குழுவில் நீதிபதியான எஸ். பசல் அலி தலைவராகவும், வரலாற்றாசிரியரும், ஐ.சி.எஸ். அதிகாரியுமான கே.எம்.பணிக்கர் மற்றும் சமூகத் தொண்டர் எச்.என்.குன்ஸ்ரு இருவரும் குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

இந்த ஆணையம் 1954, 1955 ஆண்டுகளில் இந்தியா எங்கும் பயணம் செய்தது. பதினெட்டு மாதக் கடுமையான பயிற்சிக்குப் பிறகு 1955 அக்டோபர் மாதம் அறிக்கையைச் சமர்ப்பித்தனர். 1956 நவம்பர் முதல் தேதியன்று 21 மொழி வாரி மாநிலங்கள் நடைமுறைக்கு வந்தன.

ஆந்திரப் பிரிவினையின்போதே, "சென்னை நகரம்" ஆந்திராவிற்கு இல்லை, சென்னை மாகாணத்திற்கே என முடிவாகிவிட்டது. வடக்கு எல்லை கிளர்ச்சியின்போது, அதுபற்றி விசாரணை நடத்தத் தனியாக எல்லைக் கமிஷன் நியமிப்பதாக பிரதமர் நேரு உறுதி கூறிவிட்டதால், அந்தப் பிரச்சினையும் பசல் அலி கமிஷன் விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

ஆகவே அகில இந்திய ரீதியில் மொழிவாரி மாகாணங்கள் அமைப்பது பற்றியும், தமிழக அளவில் திருவாங்கூர் – கொச்சி சமஸ்தானங்களிலுள்ள தமிழ் தாலுக்காக்கள் பற்றியுமே பசல் அலி கமிஷன் சென்னையில் விசாரணை நடத்தியது.

திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்தில் உள்ள கொச்சின், சித்தூர், தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை, நெய்யாற்றின் கரை, விளவங்கோடு, கல்குளம், அகஸ்தீசுவரம், தோவாளை ஆகிய ஒன்பது தாலுக்காக்களை தமிழ் மாநிலத்தில் அதாவது சென்னை மாகாணத்தில் சேர்க்க வேண்டும் என்று சென்னை மாகாண அரசு கோரியது.

ஆனால், கேரள அரசு வேறு மாதிரியான கோரிக்கையை வலியுறுத்தியது. "சென்னை மாகாண அரசு சொல்வதுபோல செய்தால், கேரள ராஜ்யத்திற்குப் பெரும் கேடு (?) ஏற்படும். அந்தத் தாலுக்காக்களில் வாழும் மக்களின் நலன்களுக்குத் தீங்கு ஏற்படும். இதற்கு மொழி ஒரு ஆதாரமாக இருந்தாலும், அதையே ஒரே ஆதாரமாகக் கொள்ளக்கூடாது. பூகோள, சரித்திர, நிர்வாக, பொருளாதாரக் காரணங்களும், புதிய மாநிலங்கள் அமைக்கும் விஷயத்திலும் சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டும். இந்த நிலைகளைக் கொண்டு சிந்தித்துப் பார்த்தால், தமிழ்த் தாலுக்காக்களைத் திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்தில் இருந்து பிரிப்பதற்குக் காரணமே இராது. எனவே அவை கேரள மாநிலத்திலேயே இருக்க வேண்டும்.”

“தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்களில் தோட்டத் தொழிலே அதிகம். இந்தத் தாலுக்காக்களில் நிலையான குடிமக்கள் கிடையாது. தோட்டக் காடுகளில் ஒரு வாரத்திற்கு வேலை இல்லையென்றால், இந்தப் பகுதியில் 100க்கு ஒருவர்கூட தங்கியிருக்க மாட்டார்கள். பீர்மேடு, தேவிகுளம் தாலுக்காக்களில் தமிழ் பேசுகிறவர்களும் மலையாளம் பேசுகிறவர்களும் சரிசமமான எண்ணிக்கையில் இருக்கிறார். (இது கேரள அரசு தந்த தவறான தகவல். அப்போது, இந்தத் தாலுக்காக்களில் தமிழர்கள் 82 சதவிகிதம் பேர் இருந்தனர்.) தேவிகுளம், பீர்மேடும்தான் கேரள மாநிலத்திற்கு மலைவாசப் பகுதிகளை அளிக்கவல்லன. மாநிலத்தின் எல்லா முக்கிய நதிகளும் இவ்விரு தாலுக்காக்களில்தான் உற்பத்தி ஆகின்றன. இவற்றில்தான் இந்த மாநிலத்தின் ஹைடிரோ மின்சார அலுவலகமும் பவர் ஸ்டேஷன்களும் இருக்கின்றன.”

“தோவாளை, அகஸ்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய நான்கு தமிழ்த் தாலுக்காக்களும் மிகவும் செல்வம் பொருந்திய பகுதிகளாதலால் இவை கேரளத்திற்குத் தேவைப்படுகின்றன. மேலும், இவைகள் மீன்பிடிக்கும் இடங்களைக் கொண்டிருக்கின்றன. இங்கே முக்கியமான உலோகங்களும், நெல் வயல்களும் உள்ளன.”

கேரளத்தவர்கள் தமிழகத்திலிருந்து கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், உதகமண்டலம் (ஊட்டி) ஆகியவற்றைப் பிரித்தெடுத்து, ஐக்கிய கேரளத்துடன் இணைக்கவேண்டும் என்று விண்ணப்பித்தனர். திருவாங்கூர், கொச்சி ராஜ்யத்தில் உள்ள ஒன்பது தாலுக்காக்களையும் ஐக்கிய கேரளத்திற்கே உரிமையாக்கிவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதுபோன்ற ஆக்கிரமிப்பு வெறியை அன்றைக்கே கேரளத்தினர் வெளிப்படுத்தினர்.

சுருங்கச் சொன்னால், “மலையாள மொழி வழங்கும் பகுதிகளில் எல்லாம் ஒரு அங்குலம் விடாமல் – மலையாளிகளுக்கே! இது மொழி அடிப்படையில்! இத்துடன் மலையாள மொழி வழங்கும் கேரள நாட்டின் எல்லையில் உள்ள தமிழ்த் தாலுக்காக்களும் மலையாளிகளுக்கே! இது தேவையின் அடிப்படையில்!” என்பதே கேரளாவின் கோரிக்கையாக இருந்தது.

இவர்கள் இப்படி கேட்கும் அளவிற்குத் துணிவு வந்ததற்குக் காரணம், மலையாளியான கே.எம்.பணிக்கர் குழுவில் அங்கம் வகித்ததாகும். மலையாளி எங்கிருந்தாலும் மலையாளிதானே!

பசல்அலி கமிஷன் (மொழிவாரி மாநிலச் சீரமைப்புக் கமிஷன்) தென்னிந்தியா வந்து விசாரணை நடத்தியபோது மலையாளிகளின் மனப்போக்கு எப்படி இருந்தது? என்பதற்கு, பிரபல கேரள வழக்கறிஞர் மன்னார் திரு. கோவிந்தப்பிள்ளை என்ற மலையாளி "கொல்ல கொளத்தூர்" என்ற ஊரில் கூடிய நாயர் சமுதாய சங்கக் கூட்டத்தில் பேசிய பேச்சுதான் உதாரணம்.

“இந்தியாவில் எங்கெங்கும் மலையாளிகள் செல்வாக்குப் பெற்றுள்ள காலம் இது. சர்தார் கே.எம்.பணிக்கர் கூறுவதுதான் பிரதமர் நேருவுக்கு வேதவாக்காகும். பணிக்கரும் அவரது கூட்டத்தினரும் நினைத்தது போலவே காரியங்கள் நடக்கின்றன.”

“சர்வதேச நெருக்கடிகளுக்குப் பரிகாரம் காணும் அதிகாரப் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பவர் ஒரு மலையாளி.”

“பிரதமரின் வெளிநாட்டுக் கொள்கைகளை அமலாக்குபவர் ஒரு மலையாளி.”

“பீஜிங்கிலும், மாஸ்கோவிலும், வாஷிங்டனிலும், இன்று பாரத நாட்டின் சார்பில் பிரதிநிதித்துவம் வகிப்பவர்கள் மலையாளிகளே.”

இந்திய ஜனாதிபதியின் மூன்று மெய்க்காப்பாளர்களில் இருவர் மலையாளிகளே.”

“நேருவின் அந்தரங்கச் செயலாளரும் ஒரு மலையாளிதானே!”

- (தினமலர் – 15-9-1955)

இந்தப் பின்னணி பலத்தால்தான் கேரளத்தவர்கள் ‘ஐக்கிய கேரளம்’ என்ற பெயரில் தமிழகத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு ‘ஆதிக்க கேரளம்’ அமைத்துவிட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பசல் அலி கமிஷன் (மொழிவாரி மாநிலச் சீர்திருத்த கமிஷன்) பரிந்துரை வருமாறு :

“சென்னை மாநிலத்தில் உள்ள மலபார் மாவட்டத்தைக் கேரளத்தோடும், தென் கன்னட மாவட்டத்தை கன்னடத்தோடும் சேர்த்துவிட வேண்டும்.”

“திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்தில் உள்ள கல்குளம், விளவங்கோடு, அகஸ்தீசுவரம், செங்கோட்டை ஆகிய தமிழ் வழங்கும் தாலுக்காக்களைத் தமிழ்நாட்டுடன் சேர்த்து தனி ராஜ்யம் அமைக்க வேண்டும். அதன் பெயர் ‘சென்னை ராஜ்யம்’ என்றே இருக்க வேண்டும்.”

“சென்னை நகரம் தமிழ் மாநிலத்திற்குரியதாய் அதன் தலைநகரமாகச் செய்யப்பட வேண்டும்.”

“சென்னை மாநில - ஆந்திர மாநில எல்லைச் சிக்கலை அதற்கென நியமிக்கப்படவிருக்கும் ‘எல்லைக் கமிஷன்’ கிராம அடிப்படையில் திருத்தி அமைப்பதை கமிஷன் ஏற்றுக்கொள்கிறது.”

இதுதான் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பசல் அலி கமிஷன் தீர்ப்பாக இருந்தது.

தேவிகுளம் - பீர்மேடு தாலுக்காக்களைத் தமிழகத்திற்குத் தரமுடியாது என்பதற்கு கமிஷன் கூறியிருந்த காரணங்கள் எல்லாம் போலித்தனமானவை. ஒருதலைபட்சமானவை. நடுவு நிலையில் இருந்து பிறழ்ந்தவை. மாநிலங்களை மொழி அடிப்படையில் திருத்தி அமைக்க ஒப்புக்கொண்ட பசல் அலி கமிஷன் தமிழக – கேரள எல்லைகளைத் திருத்தி அமைப்பதில் மொழி அடிப்படையை ஏற்க மறுத்திவிட்டது.

“தேவிகுளம் – பீர்மேடு தாலுக்காக்கள் விஷயத்தில் மொழிவாரி கொள்கையை கமிஷன் முக்கியமாகக் கருதமுடியாது.”

“பல்வேறு பொருளாதார காரணங்களையும், மற்ற காரணங்களையும் உத்தேசித்து தேவிகுளம் – பீர்மேடு தாலுக்காக்கள் திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்திற்குத் தேவையானவை.” என்பது கமிஷனின் வாதமாக இருந்தது.

தேவிகுளம் – பீர்மேடு போன்ற தமிழகத்தின் எல்லைப் பகுதிகள் கொள்ளைபோனது மட்டுமின்றி ‘தமிழ்நாடு’ என்கிற தன்மானப் பெயர் கோரிக்கையை ஏற்க மறுத்து ‘சென்னை ராஜ்யம்’ என்று அன்னியர் வைத்த அவமானப் பெயரே நீடிக்க வேண்டுமென்று கமிஷன் தந்த பரிந்துரையை இந்திய அரசும் தனது பிரகடனத்திலே உறுதிப்படுத்தியது.

இந்த நேரத்தில் கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பட்டம் தாணுப் பிள்ளை, ஒரு காரியம் செய்தார்.

தேவிகுளம், பீர்மேடு பகுதியில் தமிழர்களின் பெரும்பான்மையைக் குறைக்க புதிதாக மலையாளிகளைக் குடியேற்றினார். கொச்சின் – திருவாங்கூர் சிறைச்சாலைகளில் இருந்த ஆயுள் தண்டனைக் கைதிகளையும், மற்ற கைதிகளையும் விடுதலை செய்தார்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஏக்கர் விவசாய நிலம், கூட்டுறவுக் கடன் வசதி, ரொக்கப்பணமாக 5000 ரூபாய் கொடுத்து, தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் குடியேறச் செய்தார்.
அப்படிக் குடியேறிய பகுதிகள்தான் இப்போது கேரளாவில் இருக்கிற கம்பம்மெட்டு, தூக்குப்பாலம், ஆனவிலாசம், உடும்பன்சோலை, பாரத்தோடு போன்ற பகுதிகள்.
மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்கு மாறாக நேரு அவர்கள் திடீர் பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். இந்தியாவை ஐந்து ராஜ்யங்களாகச் செய்யும் ‘தட்சிண ராஜ்யம்’ என்பது அது.

அவை தட்சிண (தெற்கு) ராஜ்யம், உத்திர (வடக்கு) ராஜ்யம், மேற்கு ராஜ்யம், கிழக்கு ராஜ்யம், மத்திய ராஜ்யம் என்பனவாகும்.

தட்சிண ராஜ்யம் என்பது தமிழகத்தின் எல்லைப் பகுதிகளை இழந்திருந்த தமிழகத்திற்கு, தீப்பிடித்த வீட்டில் இடியும் விழுந்ததைப் போன்று வேதனையைத் தந்தது.

தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள், கிளர்ச்சிகள், கடையடைப்புகள், பந்த் போன்ற போராட்டங்கள் வெடித்தன.போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அரசியல் கட்சியினர் கூடிப்பேசி, கூட்டணி கண்டனர். 27-1-1956ம் நாளன்று சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள திரு. ஜி. உமாபதி என்பவரது இல்லத்தில் கூட்டம் நடந்தது.

ஆளும் காங்கிரஸ் சார்பில் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தி.மு.கழகம் சார்பில் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், ஜஸ்டிஸ் கட்சி சார்பில் சர் பி.டி.ராஜன், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ப.ஜீவானந்தம், மணலி கந்தசாமி, தமிழரசு கழகம் சார்பில் ம.பொ.சிவஞானம், ஜி. உமாபதி, தி.க.சண்முகம், மேலும் பாவேந்தர் பாரதிதாசன், சி.பா.ஆதித்தனார், நாரண.துரைக்கண்ணன், பன்மொழிப்புலவர் க. அப்பாதுரை மற்றும் சில சிறிய அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். போராட்டக் குழுவிற்குத் தலைவராக பி.டி.ராஜன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

ஹர்த்தால் போராட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. ஹர்த்தால் வெற்றிபெற பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. அண்ணா அவர்கள் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் பேசி மக்கள் ஆதரவைத் திரட்டினார். சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டியிலும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சியிலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுவிட்டது.

நேரு கொண்டுவந்த தட்சிணப் பிரதேசத் திட்டம் அவராலேயே திரும்பப் பெறப்பட்டது. தமிழ் மாநிலம் அமைவது உறுதியாகிவிட்டது. இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழகத்திற்குப் பெறமுடியாமலேயே போய்விட்டது.

தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை இழந்ததன் வலியை முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையில் இப்போது அனுபவிக்கிறோம். முல்லைப்பெரியாறு அணை தமிழ்நாட்டில் சேர்ந்திருந்தால் முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டில் இருந்திருக்கும். இடுக்கி அணையும் தமிழ்நாட்டில் இருந்திருக்கும்.

No comments:

Post a Comment