Saturday 9 November 2019

VALLIKANNAN ,TAMIL WRITER NOVEMBER 11/12 NOVEMBER 1920 -NOVEMBER 9,2006


VALLIKANNAN ,TAMIL WRITER NOVEMBER 11/12 NOVEMBER 1920 -NOVEMBER 9,2006



வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[1]


கவிஞர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இதழாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், நாடக ஆசிரியர், இலக்கிய வரலாற்றா சிரியர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட படைப்பாளி வல்லிக்கண்ணன்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி வட்டாரம் திசையன்விளையில், ரா.மு.சுப்பிரமணியம் பிள்ளை, மகமாயி அம்மாள் வாழ்விணையருக்கு 12.11.1920 ஆம் நாள் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் கிருஷ்ணசுவாமி. இவரது தந்தையார் சுங்கத்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றினார்.  தமது பத்து வயதில் தந்தையை இழந்தார். தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.

கோவில்பட்டி, பெருங்குளம் முதலிய ஊர்களில் தமது தொடக்கக் கல்வியையும், திருநெல்வேலி மந்திர மூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பின்னர், பாளையங்கோட்டை புனித சவேரியார் உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புடன் அவரது படிப்பு முடிவடைந்தது.

பரமக்குடியில் வேளாண்மை விரிவாக்கப் பணியாளர் அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த போது வல்லிக்கண்ணனின் எழுத்துப் பணி குறித்து, வேளாண்மை விரிவு அலுவலர் அந்தோணிப் பிள்ளை என்பவர் உயர் அதிகாரிக்குப் புகார் செய்தார். இதனால், தமது அரசுப் பணியினை உதறித் தள்ளிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளி யேறினார். 1941 ஆம் ஆண்டு முதல் தமது வாழ்க்கையை எழுத்துப் பணிக்கு அர்ப்பணித்தார்.

உலக அளவிலும், இந்திய அளவிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கையையும், செயல்பாடுகளையும் படித்தார். அவை அவரது சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

`மணிக்கொடி’ இதழ்களின் தொகுப்பைப் படித்து, அவ்விதழ்களில் புதுமைப்பித்தன் கதைகளைப் படித்து, அக்கதைகளினால் ஈர்க்கப்பட்டு, தாமும் அதுபோன்று எழுத வேண்டும் என ஆர்வம் கொண்டு, தமது கதை களை இதழ்களுக்கு அனுப்பினார்.

தமது சொந்த ஊர்ப் பெயரான இராசவல்லிபுரம் என்பதிலுள்ள வல்லி என்ற பெயரையும் இணைத்து வல்லிக்கண்ணன் என்ற பெயரை உருவாக்கினார். இப் பெயர் மூலம் இவரது பிறந்த மண் பற்றையும், தமிழ் மொழிப் பற்றையும் உணர்த்துகிறது.

வல்லிக்கண்ணன் `கிராம ஊழியன்’ இதழின் பொறுப்பாசிரியராக 1944 முதல் 1947-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். `இளவல்’ என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதினார். அழகு, திங்கள், அந்திவானம், மழை போன்ற இயற்கைகளை பாடுபொருளாக்கி கவிதைகள் படைத்துள்ளார். இவரது கவிதைகள் அழகுணர்ச்சி மிகுந்தவையாகும். மகாகவி பாரதி யாருக்குப் பின் காட்சிக் கவிதைகள் படைத்து வெற்றி கண்டவர்களுள் வல்லிக்கண்ணன் குறிப்பிடத்தக்கவர்.

“சுதந்திரம் வந்தது

சுகம் தான் வந்ததோ?

உம்மைச் சேர்ந்தோரே

உம் பேர் சொல்லித்

தாம் உயர வகை கண்டனர்!”

என்ற கவிதையின் மூலம் இந்தியா சுதந்திரம் பெற்றாலும், அதனால் பலன் பெறுவதற்கு வழிகண்ட சுயநலவாதி களை அம்பலப்படுத்துகிறார்.

“நீவிர்

அன்று போல் இன்றும்

ஏழையாய் தரித்தரராய்

பட்டினிப் படையினரால்

உண்ண உணவும்

உடுக்க உடையும்

உறையுள் வசதியும்

பெற்றிட இயலாப் பூச்சிகளாய்

உழைத்துச் சலித்து,

வரிகளும் உயர்விலைகளும்

கொடுத்துச் சோர்ந்து

எவர் ஆண்டால் நமக்கென்ன?”

ஏழை மக்கள் வறுமையிலும் பட்டினியிலும் வாழும் அவல நிலைகண்டு குமுறுகிறார். வல்லிக் கண்ணனின் கவிதைகள் நாட்டின் ஒருமைப்பாட்டைக் காணும் வகையிலும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் காட்டுவதாகவும், தொழிலாளர்களின் நலம் நாடு பவைகளாகவும் அமைந்துள்ளது. மேலும் இன்றைய மானுட வாழ்க்கையின் அவல நிலையைக் கண்டு வெதும்பி உள்ளம் குமுறி தமது கவிதைகளைப் படைத் துள்ளார்.

அமர வேதனை, புதுக்குரல்கள் முதலிய கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

கவிஞர் வல்லிக்கண்ணன் காலத்தின் தாக்கத்திற்கு உட்படுபவராகவும் அதே காலத்தின் மீது தமது தாக்கத்தைச் செலுத்துபவராகவும் விளங்குகிறார்.

வல்லிக்கண்ணன் 1950-ஆம் ஆண்டு `விடியுமா?’ என்னும் நாடகத்தை எழுதினார். இந்த நாடகம் ஓட்டல் தொழிலாளர்களின் சிக்கல்களையும், சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும் சித்திரிக்கிறது.

Òநட்ட கல்லைக் குளிப்பாட்ட வெள்ளிக்குடங் களிலே பாலா? ஆகா நாட்டிலே பட்டினிப் பட்டாளம் பெருத்துக் கிடக்கு, பச்சைக் குழந்தைகள் பாலுக்கு பறவாப் பறக்குது. தினந்தோறும் குடம், குடமாகப் பால் சாக்கடையிலே போய்ச் சேருது, அபிசேகமாம், புண்ணியமாம், இது மாதிரி அநியாயம் வேறு எந்த நாட்டிலேயாவது நடக்கிறதா? இந்த நாடு விடியுமா?” இது அவரது Ôவிடியுமா?Õ என்னும் நாடகத்தில் இடம் பெற்றுள்ள வசனமாகும்.

செவ்வானம், வசந்தம் மலர்ந்தது, வீடும் வெளியும், ஒரு வீட்டின் கதை, அலைமோதும் கடல் ஓரத்தில், இருட்டு ராஜா, நினைவுச்சரம் முதலிய நாவல்களை எழுதி உள்ளார். வல்லிக்கண்ணன் தமது பதினாறு வயதிலேயே கதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். அவரது முதல் கதை `சந்திர காந்தக்கல்’ பிரசண்ட விகடன் இதழில் வெளிவந்தது. கல்யாணி முதலிய சிறுகதைகள், மத்தாப்புச் சுந்தரி, ராதை சிரித்தாள். ஒய்யாரி, அத்தை மகள், முத்தம், ஆண் சிங்கம், அருமை யான துணை, மனிதர்கள் உள்ளிட்ட 19 சிறுகதைத் தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார். கடலில்  நடந்தது (மார்க்சிம் கார்க்கி), டால்ஸ்டாய் கதைகள், மாக்சிம் கார்க்கி கட்டுரைகள் முதலிய மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

இவரது `பெரியமனுஷி’ என்னும் சிறுகதை உலகத்துச் சிறுகதைகள் ஆங்கில மொழித் தொகுப் பிற்காக இந்திய மொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டு, வெளியிடப்பட்டது. மேலும், ‘Stories from Asia Today;  என்னும் ஆங்கிலத் தொகுப்பில் இக்கதை இடம் பெற்றுள்ளது.

'இன்றைய சமுதாயம் பிளவுண்ட சமுதாயம், ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி என வர்க்கப் பிரிவும், தொழிற் பிரிவும் மக்களை பிளவுபடுத்தி வைத்திருக்கிறது. இது போன்றே மக்கள் அரசியல் வாதிகள் என்ற பிளவும் மக்களிடம் காணப்படுகிறது. மக்கள் வாக்களிப்பவராகவும், அரசியல் வாதிகள் வாக்குகளைப் பெறுபவராகவும் உள்ளனர். மேலும், வாக்களிக்கும் மக்கள் அரசியல் வாதிகளிடமிருந்து எதிர்பார்ப்பவர்களாகவும், எதிர்பார்க்கின்ற மக்களை அரசியல்வாதிகள் வஞ்சிப்பவர்களாகவும் உள்ளனர்”,  என்ற இன்றைய நடப்பை `வள்ளல்தனம்’ என்னும் தமது சிறுகதையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

சமுதாயத்தில் காணப்படும் சிக்கல்களும், அவற்றை நீக்குவதற்கான தீர்வுகளும், அறிவியல், சமுதாயவியல், உளவியல் அடிப்படையில் வல்லிக்கண்ணனின் சிறு கதைகள் உள்ளது என திறனாய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திட, வாழ்க்கைத் துன்பங்களுக்கான உரிய காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காண தமது கதைகளில் வலியுறுத்தியுள்ளார்.

பாரதிக்குப்பின் தமிழ் உரை நடை, பாரதிதாசனின் உவமை நயம், எழுத்தாளர்களும் பத்திரிகைகளும், வாசகர்கள் - விமர்சகர்கள், சரஸ்வதி காலம், தமிழ்ப் பத்திரிகைகள் அன்றும் இன்றும், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் முதலிய அழியாக் கட்டுரை நூல்களை எழுதி அளித்துள்ளார்.

இவரது 'எழுத்தாளர்களும் பத்திரிக்கைகளும்' என்னும் நூலுக்கு தமிழ் வளர்ச்சிக் கழகம் பரிசளித்துப் பாராட்டியது.

'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்னும் இவரது நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

கோவையில் 1944-ஆம் ஆண்டிலும், சென்னையில் 1946-ஆம் ஆண்டிலும் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர்கள் மாநாடுகளில் கலந்து கொண்டார். அம்மாநாடுகளில் மகாகவி பாரதியாரின் பாடல்கள் நாட்டுடைமை யாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தொடர்ந்து அதற்காகப் பாடுபட்டார்.

திருச்சியில் 1947-ஆம் ஆண்டு நடைபெற்ற சிறு பத்திரிகைகள் மாநாட்டிற்கு வல்லிக்கண்ணன் தலைமை தாங்கி நடத்தினார்.

“இலக்கியத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும், வளத்துக்கும் கனமாக சிந்தனைகள் பரவுவதற்கும், திறமையான எழுத்தாளர்கள் வளரவும் சிறு பத்திரிகைகள் உதவ முடியும்” என்பதை வலியுறுத்தினார்.

மக்கள் கலாசாரத்தை மண்ணாக்கும் திரைப்படம், மேற்கத்திய கலாசார சீரழிவு, பெண்களை வணிகப் பொருளாகப் பாவிப்பது முதலியவற்றை எதிர்த்து படைப்பாளிகள் தங்களின் எழுதுகோலை உயர்த்திட வேண்டுகோள் விடுத்தார்.

எண்ணத்தையும், எழுத்தையும் உயர்வாக மதித்தவர். எழுதுவதையும் சொல்வதையும் ஒன்றாக வாழ்ந்து காட்டியவர். சாதி, மன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர். இளம் எழுத்தாளர்களையும் படைப் பாளர்களையும் ஊக்கப்படுத்தி, ஆதரவளித்தவர். தமிழ் இலக்கிய உலகில், `இலக்கிய பீஷ்மர்’, `இலக்கிய ரிஷி’ எனப் போற்றப்பட்டவர்.

வல்லிக்கண்ணன் சென்னையில் வாழும்போது நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 09.11.2006-அன்று தமது 86ஆவது வயதில் மறைந்தார்.

எழுத்தாளர்: பி.தயாளன் பிரிவு: உங்கள் நூலகம் - பிப்ரவரி 2016 வெளியிடப்பட்டது: 06 ஏப்ரல் 2016
'எழுத்து விவசாயி' வல்லிக்கண்ணன்

 SHARESaveWhatsapp

வல்லிக்கண்ணன்

valikannan(1920-2006)

-2009

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்தவர். இவரின் இயற்பெயர் கிருஷ்ணசுவாமி. மு.சுப்பிரமணியபிள்ளை, மகமாயி அம்மாளுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவருடைய முதல் கதை சந்திரகாந்தக்கல் பிரசண்ட விகடன் இதழில் வெளிவந்தது. இதன் பிறகு பல இதழ்களில் கட்டுரைகளும், கதைகளும் எழுதி வந்தார். புதுக்கோட்டையிலிருந்து வந்த திருமகள் பத்திரிகையில் சில காலமும், கோவையிலிருந்து வந்த திருமகள் பத்திரிகையில் சிலகாலமும், கோவையிலிருந்து வந்த சினிமாஉலகம் பத்திரிகையில் சிலகாலமும் சென்னையிலிருந்து வந்த நவசக்தி மாத இதழிலும் சிலகாலம் பணியாற்றினார்.

கிராம ஊழியன் பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஹனுமான் வார இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1952_ல் முதல் சுதந்திர எழுத்தாளராக வாழ்ந்தார். சி.சு. செல்லப்பாவுடன் இணைந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் சென்று எழுத்துப் பிரசுரங்களை விற்பனை செய்தார். துறையூரில் இருந்துகொண்டு சிறு பிரசுரங்களை வெளியிட்டார். மிவாஸ்கி கோரநாதன் என்ற புனைபெயரில் எழுதியவர். சாகித்திய அகாதெமி பரிசு பெற்றவர். புது எழுத்தாளர்களை அரவணைத்து ஊக்கப்படுத்தியவர். எந்த வித ஒளிவட்டமும் இல்லாமல், எளிமையாக வாழ்ந்த எழுத்துலக ஜாம்பாவன். எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த மாமனிதனர்.

சில நூல்கள்
அ.நா.பாலகிருஷ்ணன் தொகுத்த “சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்” எனும் நூலில் வல்லிக்கண்ணன் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களின் பட்டியல் இது.[2]

கல்யாணி முதலிய சிறுகதைகள் - 1944
நாட்டியக்காரி - 1944
உவமை நயம் (கட்டுரை) - 1945
குஞ்சலாடு (நையாண்டி பாரதி ) - 1946
கோயில்களை மூடுங்கள்! (கோர நாதன்) கட்டுரை - 1946
பாரதிதாசனின் உவமை நயம் - 1946
ஓடிப் போனவள் கதை (சொக்கலிங்கம்) - கதை - 1948
அடியுங்கள் சாவுமணி (மிவாஸ்கி) கட்டுரை - 1947
சினிமாவில் கடவுள்கள் (கோரநாதன்) கட்டுரை -1948
மத்தாப்பு சுந்தரி (கதை) - 1948
நாசகாரக் கும்பல் (நையாண்டி பாரதி) நாடகம் - 1948
ராதை சிரித்தாள் - 1948
கொடு கல்தா (கோரநாதன்) கட்டுரை - 1948
எப்படி உருப்படும்? (கோரநாதன்) கட்டுரை - 1948
விடியுமா? நாடகம் - 1948
ஒய்யாரி (குறுநாவல்) - 1949
அவள் ஒரு எக்ஸ்ட்ரா (குறுநாவல்)- 1949
கேட்பாரில்லை (கோரநாதன்) கட்டுரை - 1949
அறிவின் கேள்வி (கோரநாதன்) - கட்டுரை - 1949
விவாகரத்து தேவைதானா ( கட்டுரை) - 1950
நல்ல மனைவியை அடைவது எப்படி? (கட்டுரை) - 1950
கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா ? (கட்டுரை) - 1950
கல்யாணம் இன்பம் கொடுப்பதா? இன்பத்தைக் கெடுப்பதா? - 1950
அத்தை மகள் (குறுநாவல்) - 1950
முத்தம் (குறுநாவல்) - 1951
செவ்வானம் (கோரநாதன்) நாவல் - 1951
கடலில் நடந்தது ( கார்க்கி கதைகள் (மொழியாக்கம் )- 1951
இருளடைந்த பங்களா (கதை) - 1952
வல்லிக் கண்ணன் கதைகள் (கயிலைப் பதிப்பகம்)
நம் நேரு (வரலாறு) - 1954
விஜயலட்சுமி பண்டிட் (வரலாறு) - 1954
லால்ஸ்டாய் கதைகள் (மொழியாக்கம்)- 1957
சகுந்தலா (நாவல்) - 1957
கார்க்கி கட்டுரைகள் (மொழியாக்கம்) - 1957
சின்னஞ்சிறு பெண் (மொழியாக்கம்) - 1957
தாத்தாவும் பேரனும் (மொழியாக்கம் ) - 1959
விடிவெள்ளி (குறுநாவல்) - 1962
அன்னக்கிளி (நூல்) - 1962
ஆண் சிங்கம் (சிறுகதைகள்) - 1964
முத்துக் குளிப்பு (கட்டுரைகள் ) - 1965
வசந்தம் மலர்ந்தது (நாவல்) - 1966
வீடும் வெளியும் (நாவல்) - 1967
அமர வேதனை (கவிதை) - 1974
வாழ விரும்பியவன் (சிறுகதை)- 1975
புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (கட்டுரை) - 1977
ஒரு வீட்டின் கதை (நாவல்) - 1979
காலத்தின் குரல் (60 கேள்வி பதில்) - 1980
சரச்வதி காலம் கட்டுரை) - 1980
நினைவுச் சரம் (நாவல்)- 1980
அலைமோதும் கடல் ஓரத்தில் (நாவல்) - 1980
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை (கட்டுரை) - 1981
இருட்டு ராஜா (நாவல்) - 1985
எழுத்தாளர்கள்-பத்திரிககள்- அன்றும் இன்றும் (கட்டுரை) - 1986
ராகுல் சாங்கிருத்யாயன் (சாகித்ய அகாடமி B.B.சிற்பி) -1986
சரஸ்வதி காலம் - 1986
புதுமைப்பித்தன் (சாகித்ய அகாடமி B.B.சிற்பி) - 1987
வாசகர்கள் விமர்சகர்கள் (கட்டுரை) - 1987
மக்கள் கலாசாரத்த மண்ணாக்கும் சக்திகள் - 1987
வல்லிக் கண்ணனின் போராட்டங்கள் (கட்டுரை) - 1988
அருமையான துணை (சிறுகதைகள்) - 1991
மன்னிக்கத் தெரியாதவர் (குறுநாவல் தொகுப்பு) - 1991
தமிழில் சிறு பத்திரிகைகள் (கட்டுரை) - 1991
வல்லிக் கண்ணனின் கதைகள் (மணியன் பதிப்பகம்) - 1991
மனிதர்கள் சிறுகதைகள் - 1991
ஆர்மீனியன் சிறுகதைகள் (மொ.பெ) - 1991
சுதந்திரப் பறவைகள் (சிறுகதைகள்)- 1994
சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொ. பெ.)-995
சமீபத்திய தமிழ் சிறு கதைகள் ( N. B. T.தொகுப்பு )
பெரிய மனுஷி (சிறு கதை N.B.T.(பால புத்தக வரிசை ).
வல்லிக் கண்ணன் கடிதங்கள் (கடிதங்கள் ) - 1999
தீபம் யுகம் (கட்டுரை) - 1999
வல்லிக்கண்ணன் கதைகள் (சிறுகதைகள் - இராஜராஜன் பிரசுரம்)- 2000

வல்லிக்கண்ணன் மறைந்து விட்டார். எந்த இழப்பும் மன வேதனை தருவது தான். நம்மைச் சோகத்தில் ஆழ்த்துவது தான். எந்த இழப்புக்கும் நாம் தயாரில்லை. மனித மனத்தின் இயல்பு அது. 85-86 வருடங்கள் வாழ்ந்த மனிதர், நம்மிடையே தம் இருப்பை, பரிச்சய உலகத்திலும் இலக்கிய உலகத்திலும் உணர்த்திக் கொண்டே இருந்தவர். அதுவும் எவ்வளவு காலம்! மூன்று தலைமுறைக்கும் மேல் நீண்டது அது. அவ்வளவு நீண்ட காலமும் படிப்பதற்கும் எழுதுவற்கும் தான் என்று ஒரு தீர்மானத்தைத் தனக்குள் தன் வாலிப வயதிலேயே கொண்டு அந்த பிடிவாதத்தையே ஒரு லக்ஷ¢யமாகப் பற்றி வாழ்ந்து காட்டி விட்டவர்.


நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர் தான். பார்க்கப் போனால் அவருக்கு பெரிய ஆசைகள், கனவுகளோடு வாழ்ந்தவர் இல்லை. வாழ்க்கையில் அவர் கேட்டது, எதிர்பார்த்தது என்று பெரிதாக ஏதும் இருந்ததாகத் தோன்றவில்லை. படிப்பதிலும் எழுதுவதிலுமே அவர் மகிழ்ச்சி இருந்திருக்கிறது. பின் நண்பர்கள். அவர் யாரையும் அவராக விரோதித்துக் கொண்டார் என்று சொல்லமுடியும் என்று தோன்றவில்லை.

திருநெல்வேலிக் காரர். அந்த மண்ணுக்கே உரிய பேச்சும் கிண்டலும், யாரையும் எளிதில் வசப்படுத்திவிடும். அன்னியோன்ய உணர்வைத்தந்து விடும். கிண்டல் சிலரிடம் காலை வாறலாகக் கூடுதல் நிறம் பெறும். வல்லிக்கண்ணன் அப்படியெல்லாம் கிண்டல் செய்ய மாட்டார் என்று தான் நினைக்கிறேன். நான் அவரை ஒரு சில முறைகள், அதிகம் போனால் அரை மணிநேரம் என்று சந்தித்துப் பேசியதுண்டு. அமைதியாக, மிக மெல்லிய குரலில் புன்சிரிப்போடு தான் பேசியதாக என் நினைவு. அதில் கிண்டல் சற்றேனும் கலந்திருக்கவில்லை. திருநெல்வேலிக்காரர் யார் எழுதினாலும், அந்த மண்ணின் மணத்தோடு தன் இயல்பில் பாசாங்கும் வேஷமும் இல்லாமல் எழுதினால் அதில் எனக்கு மிக பிரிய முண்டு. வல்லிக்கண்ணன் கதைகளும், சில திருநெல்வேலி மனிதர்களைப் பற்றிய சொற்சித்திரங்களும் நான் படிக்கும் போது அவை ஜீவனும் உயிர்ப்பும் உள்ள மனிதரை என் முன் திரையோட விடும். அவரது மேடைப்பேச்சுக்கும் கட்டுரைகளுக்கும் நேர் எதிரான சமாசாரம். எப்படி இரு நேர் எதிர் குணங்களை ஒரு மனிதருக்குள் திணித்து வைத்திருக்கிறான் அந்த நெல்லைப்பன் என்று நினைக்கத் தோன்றும். இருமுறை அவர் மேடையில் பேசக் கேட்டிருக்கிறேன். தில்லியில் ஒரு முறை. சென்னை வந்த புதிதில் ஒருமுறை. எல்லாம் சாகித்ய அகாடமி உபயங்கள். எழுந்து நின்று ஏதோ மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது போல வார்த்தைகள் ஒரு தடங்கல் இல்லாமல், வந்து கொட்டிக்கொண்டிருந்தன. முகத்தில், குரலில் எவ்வித உணர்ச்சியும் இல்லாத தகவல்களின் மழை. விவரங்கள் என்பதற்கு மேல் அந்தப் பேச்சுக்களில் ஏதும் இல்லை. இது திருநெல்வேலி மண் இல்லை.


எழுத்து பிரசுரமாக சி.சு. செல்லப்பா ஆண் சிங்கம் என்ற தலைப்பில் வல்லிக்கண்ணனின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளியிட்டிருந்தார். அறுபதுகளில் இடைப்பட்ட வருடங்கள் ஒன்றில் என்று நினைப்பு. அந்தக் கதைகள் எனக்கு சுவாரசியமாக இருந்தன. அப்போது தில்லியில் வெளிவந்துகொண்டிருந்த Thought பத்திரிகையில் ண்சிங்கம் பற்றி எழுதினேன். அதில் தான் படித்தேனோ அல்லது வேறு ஏதும் பத்திர்கையில் படித்தேனோ, சாந்தி, சரஸ்வதி, தாமரை இப்படி ஏதோ ஒன்றில், 'பெரிய மனுஷி' என்று வல்லிக்கண்ணனின் ஒரு கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் கதைகள் எப்பவுமே மிக சுவாரஸ்யமானவை. எழுதியவர் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்தவர் என்று ஒவ்வொரு வார்த்தையும் சொல்லும். எழுதிகிறவரின் சிரிக்கும் உதடுகளையும் கூட மானசீகமாக அவ்வெழுத்தின் பின் பார்க்கலாம். அவர் நிறைய எழுதியிருக்கலாம். எழுதியும் இருக்கிறார் என்று தான் சொல்கிறார்கள். ஆரம்ப காலமாக அது இருக்க வேண்டும். அதோடு சரஸ்வதி பத்திரிகையில் அவர் புத்தகங்களைப் பற்றி, எழுத்தாளர்களோடு உரையாடியது பற்றியெல்லாம் ஒரிரண்டு பக்கங்கள் எழுதுவார். அதுவும் சுவாரஸ்யமாக இருக்கும். 'நான் ஏன் எழுதுகிறேன்" என்று சரஸ்வதி நடந்த காலத்தில் நிறைய எழுத்தாளர்கள் கட்டுரை வாசித்தார்கள் பின்னர் அது புத்தகமாகக் கூட எழுத்து பிரசுரமாக செல்லப்பா வெளியிட்டிருந்தார். அதில் ஒரு குறிப்பு எனக்கு நினைவிலிருப்பது சுவாரஸ்யமானது: 'புதுமைப்பித்தனின் ஒரு வரியில் கருவேப்பிலை கூட உயிர் பெற்றுவிடும். வல்லிக்கண்ணன் பக்கம் பக்கமாக எழுதினால் கூட அதில் ஒன்றும் இருப்பதில்லை' என்று கிட்டத்தட்ட இப்படித்தான் க.நா.சு வல்லிக்கண்ணன் பற்றி எழுதியிருக்கிறார் என்றும் இருந்தாலும் நான் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன் என்று வல்லிக்கண்ணன் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். எனக்கு வல்லிக்கண்ணன் அப்படி எழுதியிருந்தது பிடித்திருந்தது.


வல்லிக்கண்ணனை வல்லிக்கண்ணனாக நாம் பார்க்க முடிவது அவர் கதைகளில் தான் என்றாலும் அவர் அப்படி ஒன்றும் நிறைய எழுதியிருக்கவில்லை. ஏன் என்று தெரியவில்லை. கதை எழுதுவது, தன் அனுபவங்களுக்கும் பார்த்துப் பழகிய வாழ்க்கைக்கும் மனிதர்களுக்கும் எழுத்தில் உயிர் தருவது ஒரு மகிழ்ச்சி தரும் காரியம் என்று தான் நினைப்பேன். அதுவும் சம்பாஷணையிலும் வம்பளப்பிலும் கிண்டலிலும் பிரியமுள்ள திருநெல்வேலிக் காரர்களுக்கு. இன்று நாம் நினைத்துப் பார்க்கும்போது அவரை ஒரு விமர்சகராகத்தான் எல்லோர் மனதிலும் பதிந்திருக்கிறார் என்று தான் தோன்றுகிறது. சுமார் நாற்பது ஐம்பது வயதுக்குட்பட்ட தலைமுறை எழுத்தாளர்களின் ஒரு பெரிய கூட்டம் அவரைத் தட்டிக்கொடுத்து உற்சாகப் படுத்திய பெரியவராகத் தான் பார்க்கிறது. அதைத் தான் அவரும் செய்திருக்கிறார். ஆனால் அவருடைய பார்வை, மதிப்பீடு என்று எதுவும் நம் மனதில் எழுவதில்லை. அப்படி ஏதும் பதிவாகவும் இல்லை. சொல்லும்படியாக புத்தக வடிவில் கிடைப்பன அவர் எழுதியுள்ள பெரும்பாலும் தகவல்களை உள்ளடக்கிய வரலாற்று நூல்கள் தாம். புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும், சரஸ்வதி வரலாறு, பின் சிறுபத்திரிகைகள் பற்றிய ஒரு வரலாறு எல்லாம் என் நினைவில் இருப்பன. இதற்கு மேல் அவர் எதுவும் எழுதியிருக்கிறாரா என்பது தெரியவில்லை. எல்லாவற்றிலும் ங்காங்கே சில குறிப்புகள் காணப்படுமே தவிர அவை எதுவும் விமர்சன பூர்வமாக அவர் பார்வையில் மதிப்பீடு என்று சொல்லத்தக்கனவாக இல்லை.


இதற்கு அர்த்தம் அவருக்கு மதிப்பீடுகள் கிடையாது, தரம் பற்றிய சிந்தனையே கிடையாது என்பதில்லை. இருந்தது. கு.ப.ரா. புதுமைப்பித்தன், மணிக்கொடி கால மற்ற முன்னோடிகள் எல்லோருடனும் பழகியவர். இளைய சகாவாக இருந்தவர். கிராம ஊழியனில் கு.ப.ரா. வுடன் சிரியப் பொறுப்பில் இருந்தவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் மூன்று தலைமுறையினருடன் வாழ்ந்தவர். வெற்று ளாக இருக்க முடியாது. இருப்பினும் அவர் கறாரான அபிப்ராயங்களைச் சொன்னவரில்லை. தன் உடன்பாட்டையோ மறுப்பையோ கூட தெரியச் செய்தவரில்லை. அப்படியும் சொல்லிவிட முடியாது. வானம்பாடி கவிதைகளைப் பற்றி ஒட்டு மொத்தமாகக் கடைசியில் சொல்லும்போது அவை வெற்று வார்த்தை ஜாலங்கள், அலங்காரங்கள் என்று சொல்லியிருக்கிறார். சிவராமூ கவிதைகளைப் பற்றியும் அவர் ஒரு மாதிரியான கண்டனம் செய்துள்ளார். அவரைச் சிவராமூ சீண்டியதன் விளைவு அது.; அவர் கடைசியாக ஒட்டுமொத்தமாக நிராகரித்தது என்பது என்னையும் சிவராமுவையும் தான். மிகுந்த கசப்பும் கோபமுமாகத்தான் எங்கள் இருவரையும் பற்றி அவர் அபிப்ராயங்கள் கடைசியில் இறுகிப் போயிருந்தன.


எங்கள் இருவர் மீதும் அவருக்குக் கோபம் இருந்ததற்குக் காரணங்கள் இருந்தன. அறுபதுகளில் நான் தில்லியிலிருந்து பலமுறை அவர் உதவியை நாடியிருக்கிறேன். பழைய தகவல்கள் வேண்டி. அவர் உடனுக்குடன் பதில் தந்துள்ளார். அவை எனக்கு உதவியாயிருந்துள்ளன. பத்துப் பதினைந்து பேர் ளுக்கு கொஞ்சம் பணம் போட்டு பத்திரிகை நடத்தலாம் என்று நினைத்து, அவரைப் பொறுப்பேற்கக் கேட்டேன். பத்திரிகை தன் காலில் நிற்கும் வரை இலவசமாக எல்லாப் பொறுப்புக்களையும் தான் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார். அவருக்கு அவ்வப்போது உதவும் படி நான் கேட்டுக்கொண்ட ஒரு பெரிய எழுத்தாளர், தனக்கு மாதம் 300 ரூபாய் வேண்டும் என்று சொன்னார். இதுதான் வல்லிக்கண்ணனுக்கும் இந்த பெரிய எழுத்தாளருக்கும் உள்ள வித்தியாசம் என்று தெரிந்தது. அக்காலங்களில் என் மாத வருமானமே 300 ரூபாய்தான். எனவே அது கைவிடப்பட்டு விட்டது. நடக்கவில்லை. சிறு பத்திரிகைகள் பற்றிய வரலாற்றில் நான் பொறுப்பாக இருந்த யாத்ரா பற்றி சிறப்பாகவே எழுதியிருக்கிறார். ஆனால் எனக்கும் சிவராமூவுக்கும் அவர் கண்ட குப்பைகளுக்கும் தராதரம் அற்று தன் பாராட்டுக்களையும் ரசனையையும் வாரிக்கொட்டுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தது எங்கள் இருவருக்கும் அறவே பிடித்ததில்லை. அதன் காரணம் எனக்குப் புரிந்ததே இல்லை. புதிதாக எழுத வந்தவரிடம் ஏதும் சிறு பொறி தட்டினாலும் அதைக் குறிப்பிட்டு உற்சாக மூட்டலாம். தவறில்லை. ஆனால் வல்லிக்கண்ணனிடம் எந்த குப்பை போனாலும் அதற்குப் பாராட்டு வந்துவிடும். இது மூன்று தலைமுறை இலக்கிய வாழ்வு வாழும் முதியவரிடமிருந்து, மணிக்கொடி கால முன்னோடியிடமிருந்து எதிர் பார்க்கக்கூடிய ஒன்றல்ல.


அவருக்கு தராதரம் தெரியாது என்றும் சொல்வதற்கில்லை. அவர் இந்தக் குப்பைக்காரர்களிடமிருந்து எதுவும் எதிர்பார்த்தார் என்றும் சொல்வதற்கில்லை. எதையும் எதிர்பாராதவர். பகட்டும் பீதாம்பரமும் அவர் பலவீங்களல்ல. மிக எளிய மனிதர். அவருக்கான தேவைகளும் மிகக் குறைவு. சாகித்ய அகாடமி பரிசு அவரைத் தேடி வந்தது தான். மற்றவர்களைப் போல அவர் ள் பிடிக்கவில்லை. யார் வீட்டு வாசலிலும் நிற்கவில்லை. யாரையும் பார்த்துப் பல்லிளிக்கவில்லை. விதி விலக்குகள் என ஒரிருவர் இருக்கலாம் தான். ஆனால் தமிழ் மரபு இதுதான். தனக்கு மிக நெருங்கி அன்னியோன்யமாக இருந்தவர்களைப் பற்றிக்கூட மிக அபூர்வமாக ஆனால் மீகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். மணிக்கொடிக் காலத்தைத் தாண்டி புதியவர்கள் எவரையும் படிப்பதில்லை. கண்டு கொள்வதில்லை என்று சி.சு. செல்லப்பாவைப் பற்றி எழுதியிருக்கிறார். இது செல்லப்பாவைப் பற்றிய கடைசி பத்து வருஷகாலத்திற்கு மாத்திரமான உண்மை. அந்த உண்மை வல்லிக்கண்ணனுக்கும் பொருந்தும். எழுத்து பத்திரிகை நடத்தியவரை, புதுக்கவிதையைத் தமிழுக்குத் தந்தவரைப்பற்றி அப்படிச் சொல்லக்கூடாது. ஆனால் வல்லிக்கண்ணன் சொல்லியிருக்கிறார். செல்லப்பா அவரைச் சீண்டியவரில்லை, என்னையும் சிவராமுவையும் போல. புதுக்கவிதை வரலாறு புத்தகம் போட்டு உடன் பணம் கொடுக்க முடியாது, தாமதமாக பல வருஷங்கள் கழித்து செல்லப்பா பணம் கொடுக்கும் வரை வல்லிக்கண்ணன் ஏதும் சொன்னவரில்லை. செல்லப்பா எழுத்துப் பிரசுரங்களை விற்க ஒவ்வொரு கல்லூரியாக சைக்கிளில் செல்லப்பாவை இட்டுச் சென்றவர் வல்லிக்கண்ணன். பின் ஏன் அப்படி எழுதினார்?


அதற்காக செல்லப்பா வல்லிக்கண்ணனை விரோதித்துக் கொள்ளவில்லை. இதே வல்லிக்கண்ணன் தான் சாகித்திய அகாடமி பரிசுக்கான் கடைசித் தேர்வுப் பட்டியலில் சுந்தர ராமசாமியும் செல்லப்பாவும், இமையுமும் இருக்கும் போது இவர்களையெல்லாம் உதறி விட்டு தி.க. சிவசங்கரனுக்கு பரிசு சிபாரிசு செய்தவர். மனித மனத்தின் இரகசிய ழங்களை அவ்வளவு சுலபமாகவா கண்டறிந்து கொள்ள முடியும்? தமிழிலேயே தலை சிறந்த படைப்பு என்று நான் நினைக்கும் தி. ஜானகிராமனின் மோகமுள் பக்கம் பக்கமான வம்பளப்பு என்றோ இல்லை கதையளப்பு என்றோ என்னவோ எழுதியிருக்கிறார். திருநெல்வேலிக்காரர் வம்பளப்பையும் கதையளப்பையும் கண்டனம் செய்கிறார் என்றால் அதிசயம் இல்லையா அது?.


வல்லிக்கண்ணனிடமிருந்தே வந்திருக்கக் கூடிய அவரிடமிருந்து வந்துவிட்ட ஒரு மிகப் பெரிய விஷயத்தைச் சொல்லவேண்டும். வல்லிக்கண்ணன் தமிழக முற்போக்குகளுடன் மிக நெருங்கி இருந்தவர். வல்லிக்கண்ணையும் தம்மவராக அவர்கள் கருதினார்கள். சரஸ்வதி ஒரு இலக்கியப் பத்திரிகையாக, கட்சி சாராது தன்னை இருத்திக்கொண்டது கட்சிக்குப் பிடிக்கவில்லை. இவ்வளவுக்கும் சரஸ்வதி சிரியர் அவர்களோடு சேர்ந்தவர் தான் முற்போக்கு தான். இருப்பினும் சரஸ்வதிக்கு போட்டியாக தாமரை பத்திரிகையை கட்சி துவங்கியது. சரஸ்வதி அச்சானது கட்சியைச் சேர்ந்த அச்சகத்தில். அந்தத் துருப்புச் சீட்டை வைத்துக்கொண்டு சரஸ்வதி அச்சாவதைத் தாமதப்படுத்திக் கடைசியில் அது கடைமூடச் செய்தனர். இந்த உண்மை சரஸ்வதி வரலாற்றில் வல்லிக்கண்ணனால் பதிவு செய்யப்படுகிறது.ம் இந்த உள்கட்சி விவகாரம் வல்லிக்கண்ணன் வெளிக்கொணர்ந்திராவிட்டால் உலகம் அறிந்திராது. சரஸ்வதியை மூடச் செயதவர் நாம் மரியாதை செய்யும் ஜீவா அவர்கள். இதை வெளிக்கொணர்வதில் வல்லிக்கண்ணனுக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. வெகு அதிசயமாக இந்தச் செய்கையால் வல்லிக்கண்ணன் யாருடைய கோபத்துக்கும் ளாகவில்லை. இது எப்படி நிகழ்ந்தது?


1993-94 இந்தியா டுடே மலரில் அவர் மிக கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். எல்லாம் பொத்தம் பொதுவான விமர்னங்கள். ஆனால் மிகக் கடுமையானவை: ' தமிழ் மொழியில், இலக்கியத்தில் ஒரு மந்த குணம் நிலவுகிறது. அது தான் எண்பதுகளிலும் தொடர்கிறது'; 'புரியாத விதத்தில், புதுமை என்ற பெயரில் எதை எதையோ எழுத வேண்டியது எனும் போக்கும் இப்போது தலையெடுத்துள்ளது. இதை நான் - லீனியர் ரைட்டிங்' என்றும், 'போஸ்ட் மாடர்னிஸம் என்றும் பெருமையாகச் சொல்கிறார்கள்;. 'இது அபத்தப் போக்கு மட்டுமல்ல அராஜகப் போக்கும் கூட;....'இப்படி எழுதுகிறவர்கள் எழுத்துக்களில் அழகும் இல்லை. கலையுமில்லை. அர்த்தமுமில்லை. செய் நேர்த்தியுமில்லை. பைத்தியக்காரனத்தனம், போதைப் பிதற்றல்கள் என்று சொல்லப்படவேண்டிய விதத்தில் தான் இருக்கின்றன இவ்வகையில் எழுதப்படும் எழுத்துக்கள்."சமீப காலமாக, விரும்பத்தகாத வேறு அலைகளும் தமிழ் எழுத்து - பத்திரிகை உலகத்தில் தலை தூக்கி விளையாடுகின்றன;. பிராமண எழுத்தாளர், பிராமணர் அல்லாத எழுத்தாலர், பண்டித மனோபாவம் உள்ளவர், தனித்தமிழ் பற்றாளர், வட்டார வழக்கு மன்ப்பண்பை வளர்ப்பவர், சுத்த இலக்கியப் போக்கினர், சமூகப் பார்வை உடைய முற்போக்கு இலக்கிய வாதிகள், அர்fஅசியல் கட்சி சார்பு உடையவர்...... இப்படி பல அடிப்படையில் எழுத்துக்கள் கவனிக்கப்பட்டு, அபிப்பிராயங்கள் உருவாக்கப்படுவதும் பிரசாரம் செய்யப்படுவதும் அதிகரித்துள்ளது". கடுமையான வார்த்தைகள் தான். ஆனால் எந்த ஒரு எழுத்தையும் எழுத்தாளரையும் இது குறிப்பிட்டுச் சொல்லாததால், யாரும் இது தனக்கில்லை என்று மூக்கு உயர்த்தி ராஜ நடை போட முடிகிறது. வல்லிக்கண்ணனுக்கு அன்பளிப்பாக வரும் புத்தகங்களில் இவ்வகை எழுத்தோ, எழுத்தாளரோ இருப்பின் அவர் தன் கருத்தைச் சொல்லியிருக்கவேண்டும் அல்லவா? அப்படி ஏதும் செய்தி நமக்குக் கசியவில்லை. அங்கும் தான் ரசித்து மகிழ்ந்த செய்திக் கார்டு தான் போயிருக்கும். ஏன் இப்படி? நெல்லையப்பனுக்கே இந்த ரகசியம் தெரிந்திருக்காது தான்.


வல்லிக்கண்ணனுக்கு பயம் என்றில்லை. தராதரம் தெரியாது என்றில்லை. வெகு அபூர்வமாக, வேண்டாத இடங்களில் அவர் தன் அபிப்ராயங்களைச் சொல்லியிருக்கிறார். செயலிலும் காட்டியிருக்கிறார். அவருக்கும் கறாரான அபிப்ராயங்கள் உண்டு. ஆனால் சொல்வதில்லை என்று தோன்றுகிறது. அப்படி அவர் சொல்லத் தேர்ந்தெடுக்கும் இடங்கள் ஒரு சீரான பார்வையற்றதாகத் தோன்றும். மோகமுள்ளையும் சிவராமு கவிதைகளையும் உதறித் தள்ளும் வல்லிக்கண்ணன் எப்படி வரும் குப்பைகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் தரமுடிகிறது? ஏன் தன் பலமான திருநெல்வேலி வாழ்க்கைப் புனைவுகளைப் பின்னொதுக்கி தன் உள்ளார்ந்த ரசனைக்கு மாறாக, ரெடி மேட் பாராட்டுக் கார்டுகள் வழங்கும் காரியத்திலேயே, தன் பிற்கால வாழ்க்கையைச் செலவிட்டார்? சிறப்பான ஒரு வல்லிக்கண்ணனை நாம் இழந்து விட்டோம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. ஒவ்வொரு மனிதனும் எந்தத் துறையில் தன் வாழ்க்கையைச் செலவிட்டாலும், தன்னில் சிறந்ததைத் தான், தன் இயல்பான ஒன்றைத்தான் தரவேண்டும். அப்படித்தான் வாழவேண்டும் என்று நான் நினைக்கிறேன். வல்லிக்கண்ணன் தன்னின் சிறந்ததை மறுத்துக்கொண்டு விட்டார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. எளிமையே உருவான மனிதர், சைகள் ஏதுமற்றவர், தான் தீர்மானித்துக்கொண்ட லக்ஷ¢யத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டது போல வாழ்ந்தவர், ஏன் தன் இயல்பில் வாழவில்லை? ஏன் தன்னின் சிறப்பானதைக் கொடுக்கவில்லை? தமிழ் நாட்டின் மற்ற பெரிய எந்தத் துறைப் பிரமுகர்களையும் போல பணத்துக்கோ, பிராபல்யத்துக்கோ தானல்லாத வேஷம் தரித்தவரில்லை வல்லிக்கண்ணன். வல்லிக்கண்ணனின் இழப்பு அது. நமது இழப்பும் தான். எத்தனை பெரிய மனுஷிகள் அவர் தந்திருக்கக் கூடும்!
வெங்கட் சாமிநாதன்


மதிப்பிற்குரிய ஜெயமோகன்,

நீங்கள் வல்லிக்கண்ணனைப் பற்றி எதுவும் எழுதியது போலத் தெரியவில்லையே. உங்களின் கணிப்பில் அவர் ஒரு பெரிய இலக்கிய ஆளுமையாக இல்லாமலிருக்கலாம். ஆனால், இலக்கியத்திற்காக அவருடைய அர்ப்பணிப்பு மிகவும் பெரியதல்லவா? அசோகமித்திரனைப் போலத் தன்னை உருக்கிக் கொண்டு, வாழ்நாளெல்லாம் எழுதிக்கொண்டே இருந்த அவரைப்பற்றி நீங்கள் எழுத வேண்டும் என வேண்டுகிறேன். அப்படி ஏதேனும் எற்கனவே நீங்கள் எழுதியிருந்தால் தயவுசெய்து இந்தக் கடிதத்தைப் பொருட்படுத்த வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

பி.எஸ்.நரேந்திரன்



அன்புள்ள நரேந்திரன்

நான் எப்போதுமே எனக்குப்போட்டுக்கொள்ளும் விதி இறந்தவர்களை, முதியவர்களைப்பற்றி எழுதும்போது இந்திய மரபின் ஆசார நோக்கான நீத்தார், மூத்தார் வழிபாட்டின் மனநிலைகள் ஊடுருவி அவையே மதிப்பீடுகளாக வெளிவந்துவிடக்கூடாது என்று. அப்படி கருத்துச்சொல்லும்போது நம்முடைய சூழலில் ஓங்கியிருக்கும் ஆசாரமான பண்பாட்டு உளவியல் அதிர்ச்சி அடைகிறது, வசைபாட ஆரம்பிக்கிறது என எனக்கு தெரியும். ஆனாலும் வேறு வழி இல்லை. இதை எனக்கு சுந்தர ராமசாமி நூற்றுக்கணக்கான முறை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்

காரணம் நாம் ஒரு பண்பாட்டில் பணியாற்றும்போது நேர்மையான கறாரான விமர்சனங்களை முன்வைத்தாகவேண்டியிருக்கிறது. ஆசார மனநிலைகள் அவ்விமர்சனங்களுக்கு எதிரானவை. கறாரான விமர்சனங்களே விழுமியங்களை முன்வைப்பவை. மனிதர்களை விடவும் மதிப்பீடுகள் முக்கியமானவை என்ற எண்ணம் கொண்ட ஒருவர், மனிதர்களைப்பற்றிய பிம்பங்களை அல்ல அவர்களின் உண்மையான பங்களிப்பையே அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவேண்டும் என எண்ணம் கொண்ட ஒருவர் செய்யவேண்டியது அதுதான்

வல்லிக்கண்ணனை நான் நேரில் கண்டதில்லை. கடிதத் தொடர்புகள் இருந்தது, கொஞ்சநாள். அவரது சிவப்புக்கல் மூக்குத்தி போன்ற கதைகள் முக்கியமானவை. ஆனால் ஆரம்பகாலத்தில் அவர் எழுதிய நாலைந்து நல்லகதைகளுக்கு மேல் படைப்பிலக்கியத்தில் அவருடைய பங்களிப்பு என ஏதும் இல்லை.

விமர்சனத்துறையில் கறாரான இலக்கிய மதிப்பீடுகள் அற்றவராகவே இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் இடதுசாரியாக ஒரு கட்சிநிலைப்பாடு கொண்டு விமர்சனம்செய்தார். பின்னர் எல்லாவற்றையும் பாராட்டுபவராக ஆனார். அகிலனைப்பற்றிய அவரது புளகாங்கிதம்பற்றி சுந்தர ராமசாமி கண்டித்து எழுதியதை நினைவுகூர்கிறேன்.

வயதான காலகட்டத்தில் அவரது இலக்கிய அணுகுமுறை இரு அடிப்படைகள் கொண்டதாக இருந்தது. முதன்மையாக வேளாள சாதிநோக்கு. அதனடிப்படையில் வேளாள எழுத்தாளர்களை அடையாளம் கண்டு தூக்கிவிட அவர் முயன்றார். இரண்டாவது முற்போக்கு கட்சி அடையாளம் கொண்ட எல்லாரையும் எந்த அளவுகோலும் இல்லாமல் பாராட்டி,சீராட்டி சில வரிகள் கார்டுகளிலும் கட்டுரைகளிலும் எழுதிவந்தார். அவர்களிலும் எந்தத் திறனும் இல்லாத எழுத்தாளர்களையே அதிகமும் பாராட்டினார்.அவர்கள் தங்களை அவர் பாராட்டினார் என்பதற்காகவே அவரைப் போற்றினார்கள்

அதே சமயம் அவர் எழுதிக்கொண்டிருந்த காலம் வரை தமிழில் வெளிவந்த எந்த முக்கியமான நூலையும் அவர் வாசிக்கவில்லை. கருத்துச்சொல்லவில்லை. பின்னாளில் முதன்மை பெற்று வந்த பெரும்பாலான எழுத்தாளர்களை அவர் புறக்கணித்தார். எல்லாப் புதிய முயற்சிகளையும் பெயர்கள் சொல்லாமல் பொத்தாம்பொதுவாக நிராகரித்தார்.

அவர் சாகித்ய அக்காதமி போன்ற அமைப்புகளில் பணியாற்றிய நாட்களில் தரமான எழுத்தாளர்களுக்கு எதிரான சக்தியாகவே விளங்கினார். வேளாள -முற்போக்கு எழுத்தாளர்களுக்கு விருதளிப்பதற்கு மட்டுமே அதற்குள் நின்று வாதாடினார். பல முக்கியமான பெரும்படைப்பாளிகள் விருது வாங்கும் நிலை வந்தபோது வல்லிக்கண்ணனின் மூர்க்கமான எதிர்ப்பு அதைத் தடுத்தது என்பது அனைவரும் அறிந்த வரலாறு. வல்லிக்கண்ணன் அளவுக்கு உள்ளூர கட்சிக்காழ்ப்பும் சாதிப்பற்றும் கொண்டிருந்த மூத்த எழுத்தாளர்கள் குறைவு.

நாலந்தர வணிக எழுத்தாளர்கள் விருதளிக்கப்படும் போது வல்லிக்கண்ணன் அதை ஆதரித்தார். அவர்களும் விருதுபெறுவதற்கான சிற்றிதழ்தரப்பின் ஆதரவு என்ற அளவில் அவரைப் பயன்படுத்திக்கொண்டார்கள். ஓர் மூத்த எழுத்தாளர் பேச்சில் சொன்னார். ‘நா பார்த்தசாரதி வணிக எழுத்தாளர். சாகித்ய அக்காதமிக்குள் சென்றதும் இலக்கியவாதிகளைப் போற்றி விருதளிக்கப் போராடினார். அவரால் உள்ளே கொண்டுசெல்லப்பட்டவர் வல்லிக்கண்ணன். அவர் உள்ளே சென்றதும் வணிக எழுத்தாளர்களுக்காகப் பாடுபட்டார். இதுதான் இலக்கிய முரணியக்கம்’

வல்லிக்கண்ணனுக்கு இலக்கியமதிப்பீடுகள் முக்கியமானவையாக இருக்கவில்லை. அவரது தனிப்பட்ட எதிரிகள் விருது பெற்றுவிடலாகாது என்பதே முக்கியம். அவர் ஒருபோதும் இலக்கியத்துக்காக ஏதும்செய்ததில்லை. தனக்காக, தன் பிம்பத்தைக் கட்டமைத்துக்கொள்ளவும் தன் நண்பர்களை ஆதரிக்கவும் மட்டுமே கடைசிக்காலம் முழுக்கப் பணியாற்றினார்.

சென்ற காலங்களில் சாகித்ய அக்காதமி விருதுகள் நாலாந்தர எழுத்தாளர்களுக்கு அளிக்கப்பட்டபோது அதில் வல்லிக்கண்ணன் வகித்த பங்கைப்பற்றி நான் அப்போதே எழுதியிருக்கிறேன். வல்லிக்கண்ணனின் ஆளுமையும் பங்களிப்பும் தமிழிலக்கியத்தின் துரதிருஷ்டமான பக்கம் என்றால் அது மிகையல்ல.

அவரது இளமையில் அவர் நடந்தே சென்னைக்குச் சென்றது, இலக்கியவாதியாக மாறப் போராடியது, திருமணம்செய்துகொள்ளாத வாழ்க்கை ஆகியவை அவருக்கு ஒரு பிம்பத்தைக் கட்டமைத்தன. ஆனால் என்ன செய்தார் என எவருமே பார்ப்பதில்லை. வல்லிக்கண்ணன் பிரம்மச்சாரி என்பது துறவைப்போற்றும் நம் சமூகத்தில் ஒரு பெரிய மதிப்பை உருவாக்கியது. அதெல்லாம்தான் அவரை நிலைநிறுத்தின.அவரைப்போற்றுபவர்கள் அவரது ஒரு நல்ல கட்டுரையை, கதையை சுட்டிக்காட்டமுடியாது. சொல்லப்போனால் இன்றுவரை அவரது ஒரே ஒரு சிறுகதையையாவது சுட்டிக்காட்டி வரக்கூடிய ஒரே இலக்கியவாசகன் நானே

வல்லிக்கண்ணனின் பங்களிப்பில் முக்கியமானது ஒன்றே. இலக்கியவரலாறு. அவர் எழுதிய இரு வரலாற்று நூல்கள் சரஸ்வதி காலம், தமிழ்ப்புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும். அவை அவர் நேரடியாகப் பங்குகொண்ட இலக்கியக் காலகட்டத்தின் வரலாறுகள்.அவர் தன் நினைவை நம்பி எழுதிய நூல்கள் அவை. அம்மட்டுக்குமாவது தமிழில் ஒரு பதிவு வந்ததே என்பதனால்தான் அவை  ஆகவே அவை முக்கியமானவை. ஆனால் வரலாற்று நூல்களுக்கான பொறுப்பான தகவல்களோ, ஆய்வுப்பின்புலமோ, அழுத்தமான மொழியோ இல்லாத வளவள எழுத்து அது. அந்நூல்களையாவது கொஞ்சம் தரவுகளைச் சேகரித்து, கொஞ்சம் உழைத்து எழுதியிருக்கலாம்.

வல்லிக்கண்ணன் வேளாளர்களாலும் வேகாத முற்போக்கினராலும் அவ்வப்போது நினைவுகூரப்படுவது நியாயம். இலக்கியவாசகர்களுக்கு அவர் ஒரு சென்றகாலம்–மறக்கப்படவேண்டியது..

ஜெ

No comments:

Post a Comment