MAHATMA GANDHI - CHARLIE CHAPLIN
MET 1931 SEPTEMBER 22
வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள 1931ம் ஆண்டு லண்டன் வந்திருந்த காந்தியை நேரில் சந்தித்து உரையாடினார் சார்லி சாப்ளின், செப்டம்பர் 22 அன்று டாக்டர் கத்தியால் வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது,
இந்தச் சந்திப்பு எப்படி நடைபெற்றது என்பது குறித்துப் பல்வேறுவிதமான தகவல்கள், மாற்றுகருத்துகள், கற்பனைகள் இன்றும் உலவி கொண்டேயிருக்கின்றன. எரிக் பிளாம் எழுதிய சாப்ளின் பற்றிய புத்தகத்தினை வாசித்த போது அதில் இச்சம்பவம் பற்றிச் சுவாரஸ்யமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன
தனது சிட்டி லைட்ஸ் படத்தின் துவக்க நிகழ்விற்காக லண்டன் வந்திருந்த சாப்ளின் தானே விரும்பி காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டிருந்தார், ஒரு நடிகரோடு தான் பேசுவதற்கு என்ன இருக்கிறது என அவரது வேண்டுதலை காந்தி நிராகரித்துவிட்டார்,
சாப்ளின் ஈஸ்ட் எண்ட் எனும் அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் வளர்ந்தவர், ஏழை எளிய மக்களின் விருப்பத்திற்குரியவர், நம் காலத்தின் மிக முக்கியமான கலைஞன் என்று சரோஜினி நாயுடு எடுத்துச் சொன்னபிறகே காந்தி இந்தச் சந்திப்பிற்கு ஒத்துக் கொண்டார், காந்தி சட்டம் பயில லண்டன் வந்த போது அதே ஈஸ்ட் எண்ட் பகுதியில் தான் குடியிருந்தார், ஆகவே சந்திப்பிற்கு அது ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது
சாப்ளின் ஏன் காந்தியை சந்திக்க ஆர்வம் கொண்டார், லண்டன் வந்திருந்த சாப்ளின் முன்னதாகப் பெர்னார்ட் ஷா, ராம்சேமெக்னால்ட், ஹெச்.ஜி.வெல்ஸ்,சர்ச்சில் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து அன்றைய சமூக அரசியல் நிலவரங்களைப் பற்றி உரையாடியிருக்கிறார், அதைத் தொடர்ந்தே காந்தியை சந்திக்க விரும்பினார் சாப்ளின்,
லண்டனின் பெக்டன் ரோடில் வசித்துவரும் இந்திய மருத்துவரான டாக்டர் கத்தியாலின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது, தனது நண்பர்களுடன் காந்தி டாக்டரை சந்திக்க வந்திருந்தார், அன்று மாலை ஆறரை மணிக்கு சாப்ளின் காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்கபட்டிருந்த்து, காந்தி, சாப்ளின் என இரண்டு முக்கியப் பிரமுகர்கள் வருகிறார்கள் எனக் கேள்விபட்டு மக்கள் சாலை முழுவதும் பெரும் திரளாகத் திரண்டிருந்தார்கள், சாப்ளின் காரில் வந்தபோது பலத்த கரகோஷத்துடன் வரவேற்பு அளிக்கபட்டது, மரங்களின் மீது ஏறிக் கொண்டு கத்தியால் வீட்டினுள் என்ன நடக்கிறது என்பதைக் காண மக்கள் முண்டியத்தார்கள்
காந்திக்கு சாப்ளினின் திரைப்படங்கள் பற்றி எதுவும் தெரியாது என்பதால் அவர் பற்றிய அறிமுகத்தை உதவியாளர்கள் தயாரித்துத் தந்திருக்கிறார்கள், சாப்ளினுக்குக் காந்தி இங்கிலாந்தே பயப்படும் சர்ச்சிலை மிரட்டு மிரட்டென மிரட்டுகிறாரே என ஆச்சரியம், முதல்மாடியில் இருந்த சிறிய அறையில் அந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது
சாப்ளின் இந்தச் சந்திப்பில் காந்தியிடம் அவர் ஏன் இயந்திரங்களை எதிர்க்கிறார், இயந்திரமயமாவது காலத்தின் தேவைதானே, இயந்திரங்கள் மனித உழைப்பின் அடுத்தக் கட்ட வளர்ச்சியில்லையா, அதை ஏன் தவிர்க்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள், மனித அறிவின் வளர்ச்சியில், விஞ்ஞானத்தின் துணையோடு உருவாக்கபட்டவை தானே இயந்திரங்கள், இவற்றை ஏற்றுக் கொள்வதில் என்ன தயக்கம் எனக் கேட்டிருக்கிறார்,
அவரது விமர்சனத்தை மௌனமாகக் கேட்டுக் கொண்ட காந்தி தனக்கு இயந்திரங்களின் மேல் ஒரு கோபமும் இல்லை, மனித உழைப்பு முடக்கபட்டுவிடும், மனிதர்கள் இயந்திரங்களுக்கு அடிமையாகிவிடுவதை மட்டுமே நான் எதிர்க்கிறேன், இந்தியாவில் உள்ள கனரக இயந்திரங்களில் பெரும்பான்மை காலனிய ஆட்சியின் காரணமாக உருவாக்கபட்டவை, ஆகவே அங்கே இயந்திரங்களும் காலனியத்தின் அடையாளங்கள் தான், அதற்கு மாற்றாகவே ராட்டையில் நூல் நூற்கவும், மனித உழைப்பில் உருவான பொருளாதார வளர்ச்சியையும் முன்வைக்கிறேன் என்று காந்தி பதில் சொன்னார்
அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது காந்தி தனது ஒரு டாலர் கடிகாரத்தைக் கையில் எடுத்து மணி ஏழு ஆகிவிட்டது, அது தங்களின் பிரார்த்தனை நேரம், விருப்பமிருந்தால் அதில் கலந்து கொள்ளுங்கள் எனச் சாப்ளினை அழைத்திருக்கிறார்,
அந்தச் சிறிய அறையில் இருந்த ஒரு சோபாவில் சாப்ளினை உட்கார சொல்லிவிட்டு காந்தியும் அவரது நண்பர்களும் தரையில் அமர்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்,
காந்தி எளிமையாகத் தரையில் அமர்ந்து பிரார்த்தனை செய்வதை வியப்போடு பார்த்த சாப்ளின், சோபாவில் அமர்ந்து இருப்பது குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறியிருக்கிறார், அந்தச் சந்திப்பின் முடிவில் காந்தி சரோஜினி நாயுடு சாப்ளின் ஆகியோர் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள், இந்தச் சந்திப்பினை பற்றிப் பிபிசி ரேடியோ அன்றிரவு விரிவாக அறிவித்தது, பின்னாளில் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக உருமாறியது.
காந்தியின் எண்ணங்களை உள்வாங்கிக் கொண்டே சாப்ளின் பின்னாளில் தனது மார்டன் டைம்ஸ் படத்தில் இயந்திரம் ஒன்றினுள் தான் மாட்டிக் கொள்வது போன்ற காட்சியை வைத்தார் என்று கூறுகிறார் எரிக் பிளாம்
No comments:
Post a Comment