Sunday 22 July 2018

COINS MAKES HISTORY - ARUMUGA SEETHARAMAN






COINS MAKES HISTORY 





இந்தியச் சரித்திரத்தைக் காசுகள்தான் திறந்து வைத்தன. கல்வெட்டானது ‘தேவனாம்பியதசி’ என்ற மெளரிய மன்னன் வெட்டியது என உலகத்துக்குச் சொன்னபோதுதான் அசோகன் தெரியவந்தான். அசோகன் பிறந்தான், புத்தர் அடையாளம் கண்டறியப்பட்டார்.

எழுநூறு ஆண்டுகளுக்கு முன் சுல்தான் ஃபெரோஷ் ஷா துக்ளக்கால் பெரிய தூண் கல்வெட்டொன்று மீரட்டிலிருந்து டில்லிக்குக் கொண்டுவரப்பட்டது. எவ்வளவு போராடியும் அக்காலத்தைய பேரறிஞர்களால் அந்தக் கல்வெட்டினைப் படிக்க முடியவில்லை. பின்னர் வந்த அக்பர், வடமொழி வல்லுனர்களைத் திரட்டி அதைப் படித்துவிட வேண்டுமென்று தன்னால் முடிந்ததெல்லாம் செய்தார். எல்லா முயற்சிகளும் வீணாகின. ஆனால், 1836-ல் ஆங்கிலேய வரலாற்றாய்வாளர் ஜேம்ஸ் பிரின்செப், ஒருவராலும் படிக்க முடியாத அந்தக் கல்வெட்டை படித்துச் சொன்னார். பிரின்செப்பால் மட்டும் எப்படி படிக்க முடிந்தது? காசின் ஒருபுறம் கிரேக்க எழுத்துகளும் மறுபுறம் பிராமி எழுத்துப் பொறிப்புகளும் இருந்ததை வைத்து கிரேக்க மொழிக்கு நேரான பிராமி எழுத்தில் இருந்த பிராகிருதத்தைப் படித்துவிட்டார்.

ரோசட்டா கல்லைக் கொண்டு பிரமீடுகளிலிருந்த சித்திர எழுத்துகளைப் படித்ததற்கு இணையானது இக்கண்டுபிடிப்பு. இன்னும் சிந்துவெளி முத்திரைகள் படிக்க முடியாத நிலை இருப்பதை நோக்கும் போதுதான் பிராமி பொறிப்புகள் படிக்கப்பட்டதன் சிறப்பு புரியவரும். நம் நாட்டின் வரலாற்றை அறிந்துகொள்வதற்கேற்ற முக்கியச் சான்றாதாரங்களாக நாணயங்களே பயன்படுகின்றன என்று நாணயவியல் அறிஞர் பரமேஸ்வரி லால் குப்தா சொல்வது உண்மைதான். பஞ்சாபில் கிடைத்த காசுகளில் இருந்துதான் கி.மு.200 முதல் அடுத்த ஒரு நூற்றாண்டில் முப்பதுக்கும் மேற்பட்ட ராஜாக்களும் ராணிகளும் ஆண்டிருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. தென்னிந்தியாவில் சாதவாகனர்கள் வரலாறு, காசுகளிலிருந்து மீட்டுருவாக்கம் பெற்றதுதான்.

இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டுகளில் 90% தமிழ்நாட்டில் உள்ளன. ஏராளமான காசுகளும் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. ஆனால், தமிழகக் காசுகள் தமிழக வரலாற்றெழுதுதலில் என்னவித மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன? சர் வால்டர் எலியட் 1886-ல் வெளியிட்ட தென்னிந்திய நாணயங்கள் பற்றிய ஆங்கில நூல்தான் தமிழகக் காசுகளைப் பற்றி விரிவாகப் பேசிய முதல் நூல். 2014 வரை தமிழகக் காசுகள் பற்றி நூறாண்டுகளில் வெளிவந்த புத்தகங்கள் இருபது சொச்சம்தான். அவற்றில் தமிழில் எழுதப்பட்டவை ஆறேழு மட்டுமே.

தினமணி ஆசிரியராக அறிஞர் ஐராவதம் மகாதேவன் பணியாற்றியபோது நாளேட்டில் தொல்லியல், வரலாறு பற்றிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்திகளாக வெளியிட்டு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆர்வலர்கள் ஊக்கத்துடன் வெளிவந்தனர். நாணயவியலில் ஆறுமுக சீதாராமன் அறிமுகமானார். சிறுகச்சிறுகச் சேர்த்த காசுகளைக் கொண்டு பத்துக்கும் மேற்பட்ட சிறுநூல்களை சீதாராமன் வெளியிட்டார். பின்னர், அவை தமிழகக் காசுகள் என்னும் பெருநூல் வெளியாகக் காரணமானது.

தமிழகக் காசுகள் பற்றி தொல்லியல் துறைக்கும் அருங்காட்சியகத் துறைக்கும் இருக்கும் அக்கறை போதாது. சென்னை அருங்காட்சியகக் கிடங்குகளின் கருவூலக் காப்புப் பெட்டகங்களில் துயில் கொண்டிருக்கும் காசுகள் எப்போதாவது ஒருபகுதி மட்டும் காட்சிப்படுத்தப்படும். பல்கலைக்கழகங்களில் கல்லூரிகளில் நாணயவியல் படிப்பில்லை. இத்துறையில் ஈடுபட்டு உழைப்பவர்கள் சொற்ப எண்ணிக்கையினர். இந்த நிலையில்தான் தமிழக நாணயவியல் தனிநபர்களைச் சார்ந்துள்ளது ஏன் என்பது புரிபடும். ஒன்றிரண்டு நாணயவியல் சங்கங்கள் தவிர்த்து மீதமெல்லாம் வியாபாரம் சார்ந்தவை.

நாற்பதாண்டுகளுக்கு முன் இந்திய நாடும் மக்களும் வரிசையில் நேசனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட பரமேஸ்வரி லால் குப்தாவின் அற்புதமான நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘நாணயங்கள்’ புத்தகம் மட்டுமே முழுமையான அறிமுக நூலாக இருக்கிறது. அந்நூல் இன்று செவ்வியல் தன்மை பூண்டு நாணயவியல் பயில்வோர்க்கு பைபிளாகிவிட்டது. தமிழக நாணயவியல் சங்கம் மற்றும் தென்னிந்திய நாணயவியல் சங்கம் வழியாக சு.கிருஷ்ணமூர்த்தி அரிய தொண்டாற்றியுள்ளார். அவர் தமிழில் சங்ககாலச் சோழர் காசுகள், சங்ககாலப் பாண்டியர் காசுகள், சங்ககால மலையாமான் காசுகள் ஆகிய தமிழ் நூல்களை வெளியிட்டார். ஆங்கிலத்திலும் பல்லவர் காசுகள் ரோமானிய நாணயங்கள் பற்றியும் எழுதியுள்ளார். அவை தவிர்த்து முனைவர் கணேஷின் ஆங்கில நூல்களைச் சொல்ல வேண்டும்.

ஒட்டுமொத்தமாக ஈராயிரம் ஆண்டுகள் தமிழகத்தில் புழங்கிய காசுகள் பற்றிச் சொல்லும் ஒரே புத்தகம் என்று ஆறுமுக சீதாராமனின் ‘தமிழகக் காசுகள்’ நூலை மட்டுமே சொல்ல முடியும். அவரின் வாழ்நாள் பணியாக மாறியதை இப்புத்தகம் காட்டுகிறது. 1552 காசுகளின் புகைப்படங்களுடனான நூற்றொகையாக வகைப்படுத்தப்பட்டு, அறிமுகக்கட்டுரைகளுடன் தரமான காகிதத்தில் அச்சிடப்பட்டு வந்திருக்கிறது. இந்தப் புத்தகம் நாணயவியலாளர்களிடம் சிறந்த கையேடாக இருக்கிறது. ஐராவதம் வழங்கியிருக்கும் அணிந்துரை முக்கியமானது. இதுவரை படித்தறியப்பட்டதாகச் சொல்லப்படும்
களப்பிரர், அதியமான், செழியன் காசுகள் வெறும் உருச்சிதைவுகளாலான தோற்றமயக்கங்கள் என்று கறாராக அறிவியல்பூர்வமாகவும் தர்க்கரீதியாகவும் சொல்லும்போது சீதாராமன் மேல் மரியாதை வருகிறது. வியாபாரிகளிடம் பைபிளாக இருக்கும் இந்த அரிய நூல் ஒவ்வொரு நூலகங்களிலும் கல்லூரிகளிலும் இடம்பெற வேண்டியது!

No comments:

Post a Comment