Monday 9 July 2018

K.BALACHANDAR ,DIRECTOR BORN 1930 JULY 9- 2017 DECEMBER 23





K.BALACHANDAR ,DIRECTOR BORN 1930 JULY 9




கைலாசம் பாலச்சந்தர் (K. Balachander, கே. பாலச்சந்தர், சூலை 9, 1930 - திசம்பர் 23 , 2014) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்தார் [1]. இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்தவர். 90களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.

வாழ்க்கையும், கல்வியும்[தொகு]

இவரது சொந்த ஊர் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி. தந்தை கைலாசம் தாயார் காமாச்சியம்மாள். தந்தைக்கு கிராம முனிசிப் பணி. நன்னிலத்தில் பள்ளிப்படிப்பு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. முடித்தார். இராம. அரங்கண்ணல் இவரது பள்ளித் தோழர். எம். எஸ். உதயமூர்த்தி இவரது கல்லூரித் தோழர். [2] "கவிதாலயா" என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார். இதன் மூலமாக பிற இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார். அவற்றில் நெற்றிக்கண், ராகவேந்தர், சிவா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

அறிமுகப்படுத்திய புதுமுகங்கள்[தொகு]

இயக்குனர் ஸ்ரீதரைப் போலப் பல புதுமுகங்களை அறிமுகம் செய்தவர் பாலச்சந்தர். அவர்களுள் மிக உச்சத்தை அடைந்தவர் ரஜினிகாந்த். கமலஹாசனை கதாநாயகனாக்கியது பாலச்சந்தர் அல்லவெனினும், வரிசையாக அவருக்கு வாய்ப்புக்களை அமைத்துக் கொடுத்தவர் பாலச்சந்தர்.

அவள் ஒரு தொடர்கதை போன்ற சில திரைப்படங்களை முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார். ஃபடாஃபட் ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் அறிமுகமான இது ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது. பட்டினப்பிரவேசம் திரைப்படத்திலும், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தார். இதுவும் ஒரு வெற்றிப்படமே.

மேலும், பிற மொழியிலிருந்தும் சிலரை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அவர்களுள் சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை), ஷோபா (நிழல் நிஜமாகிறது), சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (டூயட்) ஆகியோர் அடங்குவர்.

வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் அறிமுகமான திலீப் மற்றும் நிழல் நிஜமாகிறது படத்தில் அறிமுகமான அனுமந்து ஆகியோர் எதிர்பார்த்த அளவில் திரையுலகில் முன்னேறவில்லை. பாலச்சந்தர் அவர்களை அறிமுகம் செய்த படத்தில் மிகுந்த அளவில் நற்பெயரைப் பெற்றிருந்தனர்.

எஸ். வி. சேகர் (வறுமையின் நிறம் சிகப்பு) மற்றும் மௌலி (நிழல் நிஜமாகிறது) ஒய். ஜி. மகேந்திரன் (நவக்கிரகம்) மற்றும் காத்தாடி இராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) என, முன்னரே நாடக மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை திரைக்கு பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினார். பாலச்சந்தரின் பல படங்களில் நடித்திருந்த மேஜர் சுந்தரராஜன் (மேஜர் சந்திரகாந்த்) இவ்வாறு அறிமுகமானவரே. அவரது இடுபெயரான மேஜர் என்பது இப்படத்திலிருந்தே விளைந்தது.


எம். ஆர். ராதாவின் மகன் ராதாரவியை அறிமுகப்படுத்தியவர் இவரே.

சுவையான தகவல்கள்[தொகு]

தமது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன் முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு மிக விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகையரில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

ஸ்ரீதரைப் போல, பாலச்சந்தரும், தமது துவக்க மற்றும் இடைக்காலப் படங்களில் ஜெமினி கணேசனை வெகுவாகப் பயன்படுத்தியிருந்தார். தாமரை நெஞ்சம், இரு கோடுகள், கண்ணா நலமா, புன்னகை, வெள்ளி விழா, நூற்றுக்கு நூறு ஆகியவை அவற்றில் அடங்கும்.
இயக்குனர் ஸ்ரீதர் பல விடயங்களிலும் தமது முன்னோடி என அவர் உரைத்தது மட்டும் அன்றி, தமக்குப் பின்னர் வந்த பாரதிராஜா, மணிரத்னம் போன்றோரையும் அவர் பல நேரங்களில் பாராட்டியுள்ளார். பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் வெற்றி விழாவில் அவரது பாராட்டுப் பேச்சு ஒரு படைப்பாளியாக உணர்ச்சி வசப்படும் அவரது தன்மையை வெளிப்படுத்திப் பெரும் பரபரப்பை உண்டாக்கியது


1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் அவர் இயக்கிய அரங்கேற்றம் என்னும் திரைப்படம், அதன் கருத்துக்காகவும், கையாளுமைக்காகவும், அது வெளியான காலகட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

சிவாஜி கணேசன் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம் எதிரொலி. 1971 ஆம் ஆண்டு வெளியான இப்படம் தோல்வியுற்றது.

பாலச்சந்தர் வண்ணத்தில் இயக்கிய முதல் படம் நான்கு சுவர்கள். ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் நடித்து 1971ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தோல்வியடைந்தது. இதற்குப் பின்னர், மீண்டும் கருப்பு வெள்ளைக்கே திரும்பி விட்ட பாலச்சந்தர் இயக்கிய அடுத்த வண்ணப்படம் முற்றிலும் புதுமுகங்களையே கொண்டிருந்த பட்டினப் பிரவேசம் மற்றும் அதை அடுத்து கமலஹாசன் கதாநாயகனாக நடித்த மன்மத லீலை. பாலச்சந்தர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளைத் திரைப்படம் நிழல் நிஜமாகிறது.

துவக்க காலத்தில் நாடகபாணித் திரைப்படங்களை (மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம்) இயக்கிய பாலச்சந்தர், நகைச்சுவையில் தமது முத்திரையைப் பதித்த படங்கள், அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா, பாமா விஜயம் போன்றவை. இவை வெற்றிப்படங்களாக விளங்கிடினும், பிற்காலத்தில் பாலச்சந்தர் இயக்கிய நகைச்சுவைப் படங்களான தில்லு முல்லு (ரஜினிகாந்த் நடித்த இப்படம் இந்தியில் அமோல் பாலேகர் நடித்த கோல்மால் என்னும் படத்தைத் தழுவியது), பொய்க்கால் குதிரை ஆகியவை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

நான்கு சுவர்கள் படுதோல்வி அடைந்து, விமர்சன அளவிலும் ஒதுக்கப்பட்ட அதே கால கட்டத்தில் அவரது நூற்றுக்கு நூறு வெளியாகி பெரும் பாராட்டையும் வெற்றியையும் ஈட்டியது.

அரசியல் களத்தைத் தொட்டுப் பார்த்த பாலச்சந்தரின் படங்கள் தண்ணீர் தண்ணீர் (இது கோமல் சுவாமிநா தனின் அதே பெயரைக் கொண்ட நாடகத்திலிருந்து உருவானது; திரைப்படத்தின் வசனத்திற்கும் கோமல் பங்களித்திருந்தார்), அச்சமில்லை அச்சமில்லை போன்றவை.

பல ஆண்டுகளுக்கு தயாரிப்பு, வசனம், இயக்கம் ஆகிய பலவற்றிலும் பாலச்சந்தரின் வலக்கரமாகச் செயல்ப ட்டு வந்தவர் அனந்து. கமலஹாசன் முதலிய நடிகர்கள் இவரைத் தமது குரு என்றே குறிப்பிடுவர்.


நூறு படங்களுக்கும் மேலாக இயக்குனராகப் பணியா ற்றியிருப்பினும், எம்.ஜி.ஆரை பாலச்சந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்திற்கு அவர் வசனம் மட்டும் அளித்திருந்தார். தெய்வத் தாய் என்னும் அத்திரைப்படம் ஆர். எம். வீரப்பன் தயாரிப்பில் பி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படம். பி. மாதவன் எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படம் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலச்சந்தரின் இயக்கத்தில் சிந்து பைரவி படத்தில் தமது பாத்திரத்திற்காக சுஹாசினி இந்திய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார். இளையராஜாவிற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதினை ஈட்டித் தந்த படம் இது.

சிரஞ்சீவியின் நடிப்பில் தெலுங்கில் பாலச்சந்தர் இயக்கிய ருத்ரவீணா வெற்றி பெறவில்லை எனினும், கமலஹாசன் நடிப்பில் உன்னால் முடியும் தம்பி என்னும் பெயரில் வெளியான அதன் தமிழாக்கம் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது.

கமலஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த கடைசிப் படம் பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும். ஆயினும், இது எதிர்பார்த்த வெற்றியை அடைய வில்லை. பாலசந்தர் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நிகழ்த்திய முதல் படமும் இதுவேயாகும்.பாலச்ச ந்தரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.

ஜெமினி கணேசனின் சொந்தத் தயாரிப்பில் பாலச்சந்தர் இயக்கிய நான் அவனில்லை அதன் புதுமையான கையாளுமைக்காகப் பெரிதும் பாராட்டப்பெறினும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்.

பாலச்சந்தரின் வெற்றிப்படங்களில் ஒன்றான நூற்றுக்கு நூறு தற்போது மறுவாக்கத்தில் உள்ளது.

கே.பாலசந்தர் இயக்கத்தில் 1980ல் வெளிவந்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ஒரு காட்சி:

கமல் சலூன் கடையில் வேலை பார்ப்பார். வாடிக்கையாளராக தேங்காய் சீனிவாசன் வருவார்.

என்ன ஜாதி ?

ஷேவிங் க்ரீமை தடவிக்கொண்டே பாரதியார் கவிதை சொல்வார் கமல்.

“ வெள்ளை நிறத்தொரு பூனை ”
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ ”

‘பாட்டு நல்லா இருக்கு...யாரு எழுதினது ?”

“பாரதியார்”

“ பாரதியார் பாட்டெல்லாம் தெரிஞ்சிருக்கே! என்ன படிச்சிருக்கே ?”

“ எம்.ஏ சார்” .

“ எம்.ஏவா !” என எகிறி ஓட்டம் பிடிப்பார் தேங்காய்.

பாலசந்தர்

மேலோட்டமாகப் பார்த்தால் நகைச்சுவையாகத் தோன்றும் அந்தக்காட்சியில் கூட எத்தனை அர்த்தம் கற்பித்தார் கே.பி. படித்த இளைஞர்கள் அரசாங்க வேலைக்கு காத்திராமல் சுயதொழில் செய்யலாம் என்ற ரீதியில் நீங்கள் புரிந்துக் கொண்டால் கே.பியை சரியாக புரிந்து கொள்ளவில்லை எனக்கொள்க. மீண்டுமொரு முறை அந்தப் பிதாமகரின் படைப்புகளை கூர்ந்து கவனிக்கவும்.

.தமிழ் சினிமாவின் பிதாமகர், கே.பி என்று அன்போடு அழைக்கப்படும் கே. பாலசந்தர் தான் இன்றைய முன்னணி நடிகர் / நடிகைகளுக்கு குருநாதர்.

பாலசந்தர் தஞ்சாவூர் ஜில்லாவை சார்ந்த நன்னிலம் என்னும் குக்கிராமத்தில் பிறந்தவர். இளங்கலை பட்டம் பயின்று ஆட்சியர் பணிக்கு போவார் என்று கனவு கண்ட தந்தைக்கு ஆசிரியர் பணி போதுமானது என்று கனவை முடித்து வைத்தவர். ஏனெனில் கே.பி.யின் கனவு வேறு உலகமாய் இருந்தது.

முத்துப்பேட்டையில் ஆசிரியராய் இருந்தவர். பகுதி நேரமாக நாடகங்களை எழுதி இயக்க ஆரம்பித்தார். இவரது நாடகங்கள் அன்றைய கூட்டு குடும்ப சூழலை, மத்திய வர்க்கத்தினரின் அவலத்தை தைரியமாக மேடையேற்றியது. சில மூட நம்பிக்கைகளை உடைத்து பெண்கல்வி, சமூகத்தில் பெண்களின் பங்கு, குடும்ப சூழலை அனுசரிக்கும் பெண்களின் திறமைகளை துணிச்சலாக வெளிச்சதிற்கு கொண்டு வந்தது.

எம்.ஜி.ஆரின் "தெய்வத்தாய்" படத்தின் வசனகர்த்தா வாக சினிமா துறையில் நுழைந்தவர் நறுக் வசனத்தில் பிரபலமடைகிறார். நகைச்சுவை நடிகராக இருந்த நாகேஷ், கே.பியிடம் நடிக்க வாய்ப்பு கேட்க முழுக்க முழுக்க நாகேஷிற்காக உருவான கதை தான் சர்வர் சுந்தரம். இந்த படத்தில் கதை வசனம் கே.பி எழுத கிருஷ்ணன்-பஞ்சு படத்தை இயக்கினர். 1964ல் ஏ.வி.எம். தயாரிப்பில் வெளிவந்த சர்வர் சுந்தரம் திரைப்படம் தான் நாகேஷிற்கு பன்முக கலைஞர் என்ற அடையாளமாகவும், நாகேஷின் திரைப்பட வாழ்க்கையில் மைல்கல்லாவும் அமைந்தது.

1965ல் தனது நாடகத்தில் மிகவும் வெற்றிப்பெற்ற நாடகமான "நீர்க்குமிழி" யை படமாக இயக்குகிறார். பலவிதமான செண்டிமெண்டுகளை உடைத்த படமது. ஆயிரத்தில் ஒருவன், இதயக்கமலம், எங்கவீட்டுப்பிள்ளை, காக்கும் கரங்கள் போன்ற ஜாம்பாவான்கள் பட வரிசையில் அந்த ஆண்டு வெளியான குறைந்த பட்ஜெட் படம் நீர்க்குமிழி.

படத்தின் பெயரிலிருந்து, கதையின் போக்கு வரை தைரியமாக எடுத்த கே.பி, இறுதிகாட்சியில் திணறி இருப்பார். நாகேஷின் மரணத்தோடு முடிய வேண்டிய படத்தை சிறிது இழுத்து டாக்டர் கேரக்டர் மேற்படிப்பி ற்காக வெளிநாடு செல்வதாக முடித்திருப்பார். நாடகத்தை திரைப்படமாக மாற்றியதில் இந்த தடுமாற்றம் இருக்கலாம். ஆனாலும் படத்தில் வசனங்கள், நடிகர்கள் தேர்வு, அவர்களை நடிக்க வைத்த விதம் வெற்றிபடமாக மாற்றியது.

அடுத்தடுத்து வெற்றிபடங்களாக கொடுத்தவர், நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசனை வைத்து இயக்கிய படம் எதிரொலி. படம் படுதோல்வியடைந்தது. சிவாஜி ரசிகர்கள் கே.பியின் வீட்டில் கல்லெறிந்தார்கள். சிவாஜியும்-எஸ்.எஸ்.ஆர் நடிக்கும் கூட்டணி அப்படத்தோடு முடிந்தது. இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவனும் அப்படத்தோடு கே.பிக்கு இசையமைப்பதை நிறுத்திக் கொண்டார். எதிரொலி தோல்விக்கு பிறகு பிரபலங்களை இயக்குவதை குறைத்துக் கொண்டு புதுமுகங்களை அறிமுகப்படுத்தி படம் இயக்க ஆரம்பித்தார் கே.பி.


ஆரம்பகாலக்கட்டத்தில் கே.பி படங்களுக்கு இசையமைத்தவர் மெல்லிசை மாமணி வி.குமார் அவர்கள். இவர் கே.பி.யின் நாடகங்களுக்கு இசை அமைத்ததில் இருந்து அவருடனே பயணித்தவர். கிட்டத்தட்ட 9படங்களை இசையமைத்து இருக்கிறார். மெல்லிசை மாமணி வி.குமாரின் இசைக்குழுவில் தான் இன்றைய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை இசையமைத்துக் கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கே.பி. புதுமை விரும்பி. குசும்பு பிடித்தவர். அவருக்கு சரியான தீனி போட்டது இசையமைப்பாளர் வி.குமார் தான். பாடல்களுக்கு நடுவே துணிகளை கிழித்து இசையாக்குவது, நாகேஷின் சேஷ்டகளுக்கு ஏற்ப ஏப்பம் விடுவதை தனித்தன்மையாக்குவது என கே.பியின் ரசனைகளுக்கு தீனிப் போட்ட இசையமைப்பாளர்.

கமல்ஹாசன் அப்போது கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக பல படங்களில் நடித்துக் கொண்டு இருக்க, அரங்கேற்றம் படம் மூலம் நல்லதொரு சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தவர் கே.பி. 1973ல் வெளியான அரங்கேற்றம் படத்திலிருந்தே குடும்ப கட்டுப்பாடு பற்றிய விழிப்பு உணர்வை சொல்ல ஆரம்பித்திருந்தார். .

கே.பியிடம் இருந்த இன்னுமொரு நல்லபழக்கம் திறமைவாய்ந்த கலைஞர்களுக்கு வாய்ப்பு குறைவாக கொடுத்ததாக நினைக்கும் நடிகர் / நடிகைகளுக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு தருவார். ரஜினியையும் அப்படித்தான் கண்டெடுத்தார் பாலசந்தர்.

புன்னகை மன்னன் படத்தில் நடன மாணவனாக நடித்திருந்தவர் ரமேஷ் அரவிந்த். 1986ல் கன்னடத்தில் "சொல்லத்தான் நினைக்கிறேன்" திரைப்படத்தை இயக்கும் போது முக்கிய வேடம் கொடுத்திருந்தார். அந்த திரைப்படத்திற்கு பிறகே கன்னடத்தில் பிரபல கதாநாயகனாக மாறினார் ரமேஷ் அர்விந்த்.

அழகன் படத்தில் மதுபாலாவின் தோழியாக அறிமுகமானவர் யுவராணி. படத்தின் நீளம் காரணமாக யுவராணி நடித்த பாகங்கள் வெட்டு விழ, ஜாதிமல்லி திரைப்படத்தில் வினித் கதாநாயகனாக நடிக்க, குறும்பான கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார் யுவராணி.

அழகன் படத்தில் நந்தகுமார் (விவேக் உடனான நகைச்சுவை காட்சி ஒன்றில் மைனர் குஞ்சுவிற்கு தீர்ப்பு சொல்பவர்) சிறுவேடத்தில் நடிக்க அடுத்த படத்தில் வாய்ப்பளித்தார். கே.பி.கரங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர்கள் சோடை போனதாக வரலாறு இல்லை. அதனால் தான் அவர் பீஷ்மர்.

கே.பாலசந்தர்

கே.பாலசந்தரின் மெகா ஹிட்டுகளான அரங்கேற்றம், அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு, தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, மனதில் உறுதி வேண்டும், சிந்துபைரவி படங்களை வைத்தே சினிமாவை எப்படி எடுக்க வேண்டுமென நீண்ட தொடரை ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு திரைப்படத்திலும் கற்றுக் கொள்ள அவ்வளவு விசயமிருக்கிறது.

கே.பி.யின் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் வித்தியாசமானதாகவும் ஆச்சரியமானதாகவும் இருக்கும். உதாரணத்திற்கு "புன்னகை மன்னன்" டெல்லிகணேஷ், சிந்துபைரவி ஜனகராஜ், வறுமையின் நிறம் சிவப்பு ஒரு விரல் கிருஷ்ணா ராவ். ஒவ்வொரு படத்திலும் அவரது கதாபாத்திரங்கள் வெகுஜன மக்களில் ஒருவராய், மிகைப்படுத்தப்படாத கேரக்டராக அமைப்பது கே.பியின் ஸ்பெஷல்.

திரையில் கொடிகட்டிப் பறந்த இவர், தொலைக்காட்சிகள் வீடுகளை ஆக்ரமித்துக்கொள்ள அதிலும் கால்பதித்து வெற்றிகண்டவர். 1990ல் சென்னை தொலைக்காட்சியில் இவர் இயக்கிய "இரயில் சினேகம்" தொடர் பிரசித்தம். அண்ணி, ரகுவம்சம், கையளவு மனசு இவருடைய மேற்பார்வையில் இயக்கிய பரப்பரபான தொடர்களாகும்

தெலுங்கில் ஹிட் அடித்த ‘மரோ சரித்ரா’வை ஹிந்தியில் ‘ ஏக் து ஜே கேலியே'வாக ரீமேக் செய்கிறார். படம் அதிரிபுதிரி ஹிட். பாடல்கள், பாலிவுட் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் ஒலிக்க, படம் மெகா வசூல். அந்தப் படத்தின் இறுதிக் காட்சி நாயகனும், நாயகியும் மேலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதாக இருக்கும். ’காதலில் ஜெயிக்க முடியாதவர்கள் உயிரைக்கூட அந்தக் காதலுக்காக விடுவார்கள்’ என்ற வாய்ஸ் ஓவரும் வரும்.

பல காதல் தற்கொலைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, இப்படி ஒரு படமும் அதற்கு காரணமாக இருந்தது என்ற வேதனை கே.பாலசந்தருக்கு இருந்தது. அதற்காகவே ஒரு கதை எழுதி, இயக்கினார். அதுதான் ‘புன்னகை மன்னன்’. ’ஏக் துஜே கேலியே’வின் இறுதிக்காட்சி போன்ற அதே அமைப்பில்தான், ’புன்னகை மன்னன்’ ஆரம்பிக்கும். தற்கொலை முடிவல்ல என்ற கருத்தைச் சொல்லும். ‘ஏக் துஜே கேலியே’ வெற்றி என்றாலும், அந்தக் கருத்தை மக்களிடம் சொல்லியிருக்கக்கூடாது என்ற மனச்சுமையை ’புன்னகை மன்னன்’ மூலம் இறக்கி வைத்தார் கே.பாலசந்தர்.

அந்த மனம் தான்.. அந்த நேர்மைதான் அவர்!

No comments:

Post a Comment