T.S.BALAIYA ,ONE OF THE TAMIL LEGEND
ACTOR BORN 1914 AUGUST 23 - 1972 JULY 22
இரட்டைக் குரலில் பேசி அசத்துவதில் நடிகவேள் எம்.ஆர். ராதாவுக்கு நிகரானவர் பாலையா ஒருவரே.
வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் தமிழ்ப்பட உலகை கலக்கிய டி.எஸ்.பாலையா, பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பது, இளைய தலைமுறையினக்ருகுத் தெரிந்திருக்க நியாயம் இல்லை.
அவர் பத்மினிக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்! அது மட்டுமல்ல; சொந்தக் குரலிலும் பாடியிருக் கிறார்.
நாடகம்–சினிமா
பாலையா திருநெல்வேலியை சேர்ந்தவர். தந்தை பெயர் சுப்பிரமணிய பிள்ளை.
23.8.1914–ந் தேதி பிறந்த பாலையா, இளம் வயதிலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து, பல்வேறு வேடங் களில் நடித்து, சிறந்த நடிகராக உருவானார்.
‘‘பதி பக்தி’’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அவர் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.
கோவையைச் சேர்ந்த ஏ.என்.மருதாசலம் செட்டியார், தன் மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ‘மனோரமா பிலிம்ஸ்’ என்ற படக்கம்பெனியை தொடங்கினார்.
‘‘ஆனந்த விகடன்’’ ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘‘சதிலீலாவதி’’ என்ற கதையை படமாக்க அவர் தீர்மானித்தார். இந்த கதைக்கும், ‘பதிபக்தி’ நாடகக்கதைக்கும் நிறைய ஒற்றுமை இருந்தது. நாடகத்தில் எந்த மாதிரியான வேடத்தில் பாலையா நடித்தாரோ, அதே மாதிரியான வேடத்தில் அவரை ‘‘சதிலீலாவதி’’யில் நடிக்க வைத்தார், மருதாசலம் செட்டியார்.
எம்.ஜி.ஆர்.
‘‘சதிலீலாவதி’’ படத்திற்கு பல சிறப்புகள் உண்டு. எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் இதுதான். இதில் எம்.ஜி.ஆருக்கு போலீஸ் அதிகாரி வேடம்.
எம்.கே.ராதா கதாநாயகனாகவும், எம்.ஆர்.ஞானாம்பாள் கதாநாயகியாகவும் நடித்தனர். என்.எஸ்.கிருஷ்ணனும் இப்படத்தில் இடம் பெற்றார்.
அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த எல்லிஸ் ஆர்.டங்கன் இந்தப்படத்தை இயக்கினார்.1936–ம் ஆண்டு வெளிவந்த இப்படம் வெற்றிகரமாக ஓடியது.
‘‘சதிலீலாவதி’’க்கு பிறகு பாலையா நடித்த படம் ‘‘இரு சகோதரர்கள்’’. இந்தப்படத்தையும் எல்லிஸ் ஆர்.டங்கன் தான் டைரக்ட் செய்தார். இந்தப்படத்திலும் பாலையாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.
1937–ம் ஆண்டில் ‘‘சதி அனுசுயா’’ என்ற படத்தில் நடித்தார்.
பாகவதருடன்...
இதே ஆண்டில், எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘அம்பிகாபதி’ திரைக்கு வந்தது. இதில் வில்லனாக நடித்திருந்தார், பாலையா. இந்தப்படத்தில் பாகவதரும், பாலையாவும் கத்திச்சண்டை போட்டார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்த இந்தப்படம், மாபெரும் வெற்றி பெற்ற படம்.
பிறகு ‘பம்பாய் மெயில்’, ‘உத்தமபுத்திரன்’ (பி.யூ.சின்னப்பா), ‘பூலோக ரம்பை’, ‘ஆர்யமாலா’, ‘பிருதிவிராஜன்’, ‘மனோன்மணி’, ‘ஜகதலப்பிரதாபன்’, ‘சாலி வாஹனன்’, ‘பர்மா ராணி’, ‘மீரா’ முதலிய படங்களில் நடித்தார்.
கதாநாயகன்
1946–ம் ஆண்டு, பாலையாவின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வருடமாகும். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘‘சித்ரா’’ படத்தில் பாலையா கதாநாயகனாக நடித்தார். கதாநாயகியாக நடித்தவர் கே.எல்.வி.வசந்தா.
அது யுத்த காலம். சினிமா படங்களை 13 ஆயிரம் அடிக்குள் தயாரிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. எனவே, ‘‘சித்ரா’’வும் 11 ஆயிரம் அடிகளுக்குள் தயாரிக்கப்பட்டது. படம் விறுவிறுப்பாக இருந்தது. கதை, யுத்தத்தில் இந்திய வீரர்கள் புரியும் சாகச செயல்களை பின்னணியாகக் கொண்டிருந்தது.
இந்தப்படத்தில் ஒரு விசேஷம், வழக்கமாக மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களை டைரக்ட் செய்யும் அதன் அதிபர் டி.ஆர்.சுந்தரம் இதை டைரக்ட் செய்யவில்லை. வகாப் காஷ்மீரி டைரக்ட் செய்தார். (1952–ஆண்டில் பானுமதி–எஸ்.பாலசந்தர் இணைந்து நடித்த ‘‘ராணி’’ படத்தில் வில்லனாக நடித்தவர்).
இந்தப்படத்திற்கு பிறகு பாலையா நடித்த படம் ‘வால்மீகி’. ஹொன்னப்ப பாகவதரும், டி.ஆர்.ராஜகுமாரியும் இணைந்து நடித்த இப்படத்தில், பாலையா வில்லனாக பிரமாதமாக நடித்தார்.
மீண்டும் கதாநாயகன்
பிறகு, 1947–ம் ஆண்டு பாலையா மீண்டும் கதாநாயகனாக நடித்த படம் ‘‘செண்பகவல்லி’’. இதில் கதாநாயகியாக நடித்தவர் எம்.எஸ்.விஜயாள்.
எம்.ஜி.ஆர். கதாநாயகனாக முதல்முறையாக நடித்த படம் ‘ராஜகுமாரி’. இந்தப்படத்தில் வில்லனாக நடித்தவர் டி.எஸ்.பாலையா. இதில் எம்.ஜி.ஆருக்கு சமமான முக்கியத்துவம் பாலையாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. இருவரும் போடும் கத்திச்சண்டை படத்தின் சிறப்பு அம்சமாக விளங்கியது.
ஜூபிடர் தயாரிப்பான இந்தப்படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார். வசனம் எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி. என்றாலும், அக்காலக்கட்டத்தில் ஏ.எஸ்.ஏ.சாமி மிக புகழ் பெற்றிருந்ததால், ‘‘வசனம் – ஏ.எஸ்.ஏ.சாமி; உதவி – மு.கருணாநிதி’’ என்று டைட்டில் ‘கார்டு’ போடப்பட்டது.
மோகினி
ஜூபிடர் தயாரிப்பான ‘மோகினி’ என்ற படத்தில் இரண்டு கதாநாயகர்கள். ஒருவர் எம்.ஜி.ஆர். மற்றொருவர் பாலையா! எம்.ஜி.ஆருக்கு ஜோடி வி.என்.ஜானகி. பாலையாவின் ஜோடி மாதுரி தேவி.
மாயாஜாலங்கள் நிறைந்த படம் இது.
பிறகு ‘மாரியம்மன்’, ‘நாட்டிய ராணி’, ‘விஜயகுமாரி’, ‘ஏழைபடும்பாடு’, ‘சந்திரிகா’ முதலிய படங்களில் நடித்தார்.
வேலைக்காரி
1949–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான ஜூபிடரின் ‘‘வேலைக்காரி’’, வரலாறு படைத்த படமாகும். கே.ஆர்.ராமசாமிக்காக அறிஞர் அண்ணா எழுதிய நாடகம். பிறகு திரைப்படத்திற்கு அவரே வசனம் எழுதிக் கொடுத்தார்.
படத்தின் கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி. ‘‘சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு’’ என்று இப்படத்தில் வக்கீலாகத் தோன்றி கே.ஆர்.ராமசாமி பேசும் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை.
இவருக்கு ஜோடி வி.என்.ஜானகி. எம்.வி.ராஜம்மாவும், எம்.என்.நம்பியாரும் மற்றொரு ஜோடி.
(ஆரம்பகாலத்தில் பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர் எம்.என்.நம்பியார். பிறகுதான் பயங்கர வில்லனாக மாறினார்.)
இந்தப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் (கே.ஆர்.ராமசாமியின் உயிர் நண்பர்) டி.எஸ்.பாலையா நடித்தார். கே.ஆர்.ராமசாமியின் தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு பாடம் புகட்ட அவர்தான் யோசனை சொல்வார்.
சில கட்டங்களில் பாலையா நாத்திக வசனங்களை பேச நேரிட்டது. அவரோ தெய்வபக்தி நிறைந்தவர். மானாமதுரையில் குடி கொண்டிருந்த சோனையன் தான் அவருடைய இஷ்ட தெய்வம். படப்பிடிப்பின் போது நாத்திக வசனங்களைப் பேசி முடித்த பின், மடியில் வைத்திருக்கும் விபூதியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, ‘‘அப்பா சோனையா! வயிற்றுப்பிழைப்புக்காக இப்படியெல்லாம் பேசவேண்டி இருக்கிறது, மன்னித்துவிடு’’ என்று வேண்டிக்கொள்வார்!
லலிதாவுக்கு ஜோடி
லலிதா–பத்மினியை திரைப்படங்களுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் பட்சிராஜா ஸ்டூடியோவினர். அதில் இருந்து சில ஆண்டுகள், படங்களில் நடனம் மட்டுமே ஆடிவந்தனர், ‘‘திருவாங்கூர் சகோதரிகள்’’ என்று அழைக்கப்பட்ட லலிதாவும், பத்மினியும்.
1950–ம் ஆண்டு பட்சிராஜா ஸ்டூடியோ ‘‘பிரசன்னா’’ என்ற மலையாள படத்தை தயாரித்தனர். அதில், லலிதாவை கதாநாயகியாகவும் பத்மினியை இரண்டாவது கதாநாயகியாகவும் நடிக்க வைத்தனர்.
லலிதாவுக்கு ஜோடியாக – அதாவது கதாநாயகனாக டி.எஸ்.பாலையா நடித்தார். (பாலையாவுக்கு மலையாளம் நன்றாகத் தெரியும்.)
இந்தப் படத்தில் பாலையாவின் பெயர் ஐயப்பன். வேலைக்காரியின் மகன். பணக்காரப்பெண்ணான பிரசன்னாவுக்கும் (லலிதா), ஐயப்பனுக்கும் காதல். இதை விரும்பாத பிரசன்னாவின் அண்ணன் சூழ்ச்சிகள் செய்து ஐயப்பனை ஒழித்துக்கட்ட முயற்சி செய்கிறான். கடைசியில் அவன் சதித்திட்டங்கள் தோல்வியடைய, ஐயப்பன்–பிரசன்னா காதல் வெற்றி பெறுகிறது.
சொந்தக்குரலில் பாட்டு
பாலையாவுக்கு நல்ல குரல் வளம் உண்டு. ஆரம்பக்காலத்தில், பல படங்களில் அவர் சொந்தக்குரலில் பாடியுள்ளார். ‘‘பிரசன்னா’’ விலும் ஒரு மலையாளப்பாடலை சொந்தக் குரலில் பாடினார்.
‘‘பிரசன்னா’’ படம் மலையாள மொழியிலேயே தமிழ்நாட்டிலும் திரையிடப்பட்டது. அதுவரை லலிதா–பத்மினியை நடனங் களில் மட்டுமே பார்த்து ரசித்த தமிழ்நாட்டு ரசிகர்கள் அவர்களது நடிப்பையும் காண விரும்பியதால், தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது.
கேரளத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் வெற்றிபெற்ற படம் ‘‘பிரசன்னா’’.
மணமகள்
என்.எஸ்.கிருஷ்ணன் சொந்தமாகத் தயாரித்து, டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்ற படம், ‘‘மணமகள்’’.
படத்தின் கதை மலையாள எழுத்தாளர் முன்ஷி பரமு பிள்ளை எழுதியது. திரைக்கதை–வசனத்தை கலைஞர் மு.கருணாநிதி எழுதி இருந்தார். தமிழுக்கு புதுமையான கதை.
இதில் எஸ்.வி.சகஸ்ரநாமமும், பத்மினியும் ஜோடி என்றாலும், பிரதான வேடம். டி.எஸ்.பாலையா வுக்குத்தான். படத்தில் அவர் பாட்டு வாத்தியாராக நடித்தார். பாட்டு வாத்தியார் மிகப்பொல்லாதவர். பெண்களை மயக்கி, தன் வலையில் சிக்க வைத்து, தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்வது தான் அவர் வேலை.
முதலில், படத்தில் விதவையாக வரும் டி.ஏ.மதுரத்தை மயக்கி ஏமாற்றுவார். அப்புறம் லலிதா. கடைசியில் சகஸ்ரநாமத்தையும் பத்மினியையும் பிரித்து, பத்மினியை மணந்து கொள்வார். ஆனால் பத்மினியை அவரால் தொடக்கூட முடியாது.
‘‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’’ என்ற முதுமொழிப்படி பாலையாவின் சூழ்ச்சிகள் கடைசியில் வெளியாகும்.போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு அவர் பலியாவார். இப்படத்தில் பாலையாவின் நடிப்பு மிகப்பிரமாதம்.
சி.ஆர்.சுப்பராமன் இசையமைப்பில், பாடல்கள் சிறப்பாய் அமைந்தன. குறிப்பாக பத்மினிக்காகவும், லலிதாவுக்காகவும் பின்னணியில் எம்.எல்.வசந்தகுமாரியும், பி.லீலாவும் பாடிய ‘‘எல்லாம் இன்பமயம்’’ என்ற பாடல் சிரஞ்சீவி வரம் பெற்றது.
பாலையாவுக்கும் பாட்டு உண்டு. பின்னணியில் பாடியவர், வி.என்.சுந்தரம்.
ஓர் இரவு
ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து அறிஞர் அண்ணா எழுதிய கதை ‘‘ஓர் இரவு’’. கே.ஆர்.ராமசாமி இதை நாடகமாக நடத்தி வந்தார்.அதை ஏ.வி.எம். நிறுவனம் படமாகத் தயாரித்தது. நாடகத்தில் நடித்த அதே பிரதான வேடத்தில் கே.ஆர்.ராமசாமி நடித்தார்.
ஏ.நாகேஸ்வர ராவும், லலிதாவும் இணைந்து நடித்தனர்.
லலிதாவை மணக்க விரும்பும் பாலையா, லலிதாவின் தந்தை டி.கே.சண்முகத்தை ‘‘பிளாக் மெயில்’’ செய்வார். அவர் திட்டங்களை கே.ஆர்.ராமசாமியும், நாகேஸ்வர ராவும் முறியடிப்பார்கள்.இந்தப்படத்திலும் பாலையா நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.
பத்மினிக்கு ஜோடி
1956–ம் ஆண்டு வெளிவந்த ‘‘வெறும் பேச்சல்ல’’ என்ற படத்தில் டி.எஸ்.பாலையாவும், பத்மினியும் இணைந்து நடித்தனர். தன் தாயின் வாழ்க்கையை தரைமட்டமாக்கிய கயவனை பழிவாங்கும் வீரனாக பாலையா நடித்தார்.
இந்த காலட்டத்தில் பத்மினிக்கு வயது 22. பாலையாவுக்கு வயது 42. அத்துடன் உடல் பருமன் வேறு. எனவே, ஜோடிப்பொருத்தம் சரியில்லை என்று பத்திரிகைகள் விமர்சனம் செய்தன. படம் சுமாராகவே ஓடியது. பிற்காலத்தில் வயது காரணமாக குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்தார். அதிலும் முத்திரை பதித்தார்.
‘‘காதலிக்க நேரமில்லை’’ படத்தில், நாகேஷ் ஒரு பேய்க்கதையைச் சொல்ல, அப்போது பாலையாவின் முகத்தில் ஏற்படும் பலவித பாவனைகளை யார் மறக்க முடியும்?
149 படங்கள்
பாலையா நடித்த படங்கள் மொத்தம் 149. அதில் தமிழ்ப்படங்கள் 145. மலையாளம் 3. கன்னடம் 1.
திரை உலகில் ஆல்ரவுண்டராக விளங்கிய பாலையா, சென்னை தியாகராய நகரில் அருண்டேல் தெருவில் உள்ள அவர் இல்லத்தில் 21–10–1972–ந் தேதி தனது 58–வது வயதில் காலமானார்.
பாலையாவின் முதல் மனைவியின் பெயர் பத்மாவதி. பின்னர், பத்மாவதியின் தங்கை லீலாவதியையும் மணந்து கொண்டார்.கலை உலக வாழ்க்கையில், நடிகை சந்திரகாந்தாவின் அக்கா நவநீதம், பாலையா வுடன் இணைந்தார்.
பாலையா தன் கலை வாரிசாக ஜூனியர் பாலையாவை திரை உலகுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.
எனினும், தமிழ்த்திரை உலகில் அவர் விட்டுச் சென்ற இடம் இதுவரை காலியாகத்தான் இருக்கிறது.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களை எடுத்துக்கொண்டல் அதில் டி.எஸ்.பாலையாவுக்கு தனி ஒரு இடம் உண்டு! சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக, குணச்சித்திர நடிகராக, காமெடி நடிகராக கோலோச்சியவர் டி.எஸ்.பாலையா! அவருக்கு அன்றைய காலகட்டத்து பெரிய கதாநாயக நடிகர்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், முத்துராமன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இருந்தது மாதிரியான் புகழும், செல்வாக்கும் இருந்தது. இதற்கு காரணம், அவர் ஏற்று நடிப்பது எந்த வேடமாக இருந்தாலும் அதில் அவரது தனித்தன்மையான நடிப்பும், பங்களிப்பும் தான்! ஒரு சந்தர்பத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசும்போது, ‘‘தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் டி.எஸ்.பாலைய்யாவும் ஒருவர்’’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்த காலத்தில் சிவாஜியிடம் பாராட்டு வாங்குவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்று கூறுவார்கள்! அப்படிப்பட்ட நடிகர் திலகம் சிவாஜியே தன்னை பாராட்டியது குறித்து கேள்விப்பட்ட பாலையா, அது குறித்து தனது நண்பர்களிடம் கூறி மகிழ்ச்சியடைந்துள்ளார்! அது மாதிரி, பாலையா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் மிகவும் பிடித்த நடிகராக இருந்தார்! டி.எஸ்.பாலையாவை இன்னமும் நம் நினைவில் வைத்துக் கொள்ளும் படங்களாக அவர் நடித்த அம்பிகாப்தி, மதுரை வீரன், தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல் உட்பட பல படங்களை வரிசைப்படுத்தலாம். அப்பேர்பட்ட மாபெரும் கலைஞரான டி.எஸ்.பாலையா இந்த மண்ணில் பிறந்த நாள் இன்று! அதாவது 1914-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி பிறந்தார் பாலையா! அவர், இந்த பூவுலகில் 57 ஆண்டுகள் வாழ்ந்து 1972 ஜூலை 22-ஆம் தேதி காலமானார்! இன்று பாலையாவின் 100-ஆவது பிறந்த நாள்! இந்நாளில் அவரை நினைவு கூர்வதில் ‘டாப் 10 சினிமா’ பெருமிதம் அடைகிறது. அவரைப்பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை இன்றைய இளம் சினிமா ரசிகர்களுக்காக....
எவ்வளவுதான் மிகபெரிய நடிகர் நடிக்கும் படமாக இருந்தாலும் உடன் நடிக்கும் வில்லன் நடிகரோ அல்லது குணச்சித்திர நடிகரோ அவருக்கு ஈடுகொடுத்து நடிக்கும்போதுதான் அந்தக் காட்சியும் அந்தப்படமும் சிறப்பாகப் பேசப்படும். இன்றளவும் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிப்பில் ஜொலித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த தலைசிறந்த நடிகர்கள் பலர் உண்டு. ஆனால் வில்லனாகட்டும், அல்லது குணச்சித்திர வேடமாகட்டும் அதை சரிவிகித நகைச்சுவையுடன் கலந்து கொடுத்து தமிழ்த்திரையுலகில் 40 ஆண்டுகள் கொடி கட்டிப் பறந்த நடிகர்கள் மிகச்சிலரே. அதில் முதலிடம் பிடிப்பவர் பாலண்ணன் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட டி.எஸ்.பாலையா!
டி.எஸ்.பாலையா திருநெல்வேலியைச் சேர்ந்தவர். நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர் மதுரையில் ‘யதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளை’ நடத்திவந்த பாலகான நாடக கம்பெனியில் நடித்து வந்தார். அதை மூலதனமாகக் கொண்டு சினிமாவில் நுழைந்த இவர் நடித்த முதல் திரைப்படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய ‘சதிலீலாவதி’. 1934-ல் வெளிவந்த இந்தப் படத்தில் பாலையா வில்லனாக அறிமுகமானார். இதில்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும்கூட அறிமுகமானார்கள்.
1937ஆம் ஆண்டு எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘அம்பிகாபதி’ படத்தில் தளபதியாக வில்லன் வேடத்தில் டி.எஸ்.பாலையா நடித்தார். ஆரம்ப காலத்தில் பாலையாவுக்கு புகழ் தேடித்தந்த படம் இது. அதேபோல பி.யு.சின்னப்பாவின் பல படங்களில் இவர் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்கள் அவரைத் தேடி வரத் தொடங்கின.
எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படமான ‘ராஜகுமாரி’யிலும் வில்லனாக நடித்தார் டி.எஸ்.பாலையா. இப்படத்தில் எம்.ஜி. ஆரும், பாலையாவும் போடுகின்ற கத்திச் சண்டை அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம். தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்களிலும் சிவாஜி படங்களிலும் வில்லனாக நடித்தார் டி.எஸ்.பாலையா. மதுரைவீரன் படத்தில் ஆற்றில் விழுந்த பொம்மியைக் காப்பாற்றியதாக அவர் சொல்லும் கதையும் அதை அவர் சொல்லும் பாவனையும் இருக்கிறதே.. சிரிப்புக்கு நூறு சதவீதம் உத்தரவாதம் தரும் காட்சி அது.
சிவாஜியுடன் பாவமன்னிப்பு, பாகப்பிரிவினை, பாலும் பழமும் ஊட்டிவரை உறவு என நிறைய கருப்பு வெள்ளைப்படங்களில் நடித்திருந்தாலும் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம்பிடித்த பட்ங்கள் தில்லானா மோகனாம்பாளும் திருவிளையாடலும். ‘திருவிளையாடல்’ படத்தில் இசையில் புகழ்பெற்ற ‘ஹேமநாத பாகவதர்’ எனும் பாடகர் வேடத்தில் நடித்திருப்பார் டி.எஸ். பாலையா. "ஒருநாள் போதுமா" என்ற பாடலைப் பாடும்போது பாலையா அப்பாடலுக்கு வாயசைப்பதும் பலவிதமான தலையசைப்பு, கையசைப்புடன் கூடிய அபிநயங்கள் காட்டுவதும் உண்மையிலேயே அவர்தான் அப்பாடலைப் பாடுகிறாரோ என்று பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்.
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் தவில் வித்துவானாக ரயிலில் அவர் அடிக்கும் கூத்துகளையும் அதற்கு சிவாஜி முறைக்கும்போதெல்லாம் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்வதும் அவ்வளவு சுலபத்தில் மறந்துவிடக்கூடிய காட்சிகளா..
அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய ‘வேலைக்காரி’ படத்தில் கதாநாயகன் கே. ஆர். ராசாமியின் நண்பனாக, முக்கிய வேடத்தில் பாலையா நடித்தார். அதுமட்டுமல்ல அண்ணாவின் ‘ஓர் இரவு’ படத்தில் வில்லனாக நடித்தார். ஜெமினிகணேசனுடன் நடித்த பார்த்திபன் கனவு, ஜெயகாந்தன் இயக்கத்தில் நடித்த ‘யாருக்காக அழுதான்’ போன்ற படங்கள் டி.எஸ்.பாலையாவின் நடிப்பிற்கு கட்டியம் கூறின.
என்.எஸ். கிருஷ்ணனுக்குப் பிறகு பாகவதர், சின்னப்பா, எம்.ஜிஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகிய சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்த இன்னொரு நடிகர் டி.எஸ்.பாலையா மட்டுமே. 'மணமகள்' படத்தில் பாலையாவின் அபாரமான நடிப்பைப் பாராட்டி, தனது விலை உயர்ந்த காரையே அவருக்குப் பரிசளித்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
உலகப்போரை பின்னணியாக வைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் தயாரித்த ‘சித்ரா’ படத்தில் டி. எஸ்.பாலையா கதாநாயகனாக நடித்தார். கதாநாயகியாக நடித்தவர் கே.எல்.வி.வசந்தா.
பாலையா கதாநாயகனாக நடித்த மற்றொரு படம் ‘வெறும் பேச்சல்ல’ 1956-ல் வெளியான இப்படத்தில் பாலையாவுக்கு கௌபாய் வேடம். அவருக்கு ஜோடியாக நடித்தவர் நாட்டியப் பேரொளி பத்மினி.
ஸ்ரீதர் தயாரித்த முழு நீள நகைச்சுவை படமான ‘காதலிக்க நேரமில்லை’ பாலையாவின் படங்களில் மைல்கல் என்று சொல்ல்லாம்.. இரட்டைக் குரலில் பேசி அசத்துவதில் நடிகவேள் எம்.ஆர். ராதாவுக்கு நிகரானவர் பாலையா ஒருவரே.
இந்த யுக்தியை இப்படத்திலும் பாலையா கையாண்டிருப்பார். இன்றைக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் பெயரைச் சொன்னதும் உடனே நினைவிற்கு வருவது நாகேஷ் ஒரு மர்மக் கதையைச் சொல்ல அதைக்கேட்டு பாலையா பயந்து நடுங்கும் காட்சிதான். நகைச்சுவையின் உச்சகட்டமாக இந்தக் காட்சி அமைந்திருக்கும்.
‘தூக்கு தூக்கி’ படத்தில் சேட்ஜியாக வந்து நம்மள், நிம்மல் என தமிழ் பேசி அட்டகாசமாக நடித்திருப்பார். இன்று வரை தமிழ்ப் படங்களில் வடநாட்டு சேட் வேடத்தில் நடிப்பவர்கள் பாலையாவின் பாணியைத்தான் பின்பற்றி நடித்து வருகிறார்கள். அதேபோல கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியராக டி.எஸ் .பாலையா நடித்த பாமா விஜயம் அவருக்கு குணச்சித்திர நடிகராக மேலும் புகழ் சேர்த்தது
No comments:
Post a Comment