BRITISH PLUNDERED INDIA
-SASITHAROOR
பிரிட்டனின் காலனியாதிக்கத் தாக்கங்களை தெளிவான புள்ளிவிவரம் மட்டுமின்றி, சுருக்கென குத்தும் நகைச்சுவையுடனும் தார்மிக சீற்றத்துடனும் ஆக்ஸ்ஃபோர்டில், சசி தரூர் எம்.பி. பேசிய வீடியோ, இந்திய இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. | வீடியோ இணைப்பு கீழே. |
இந்தியாவின் பொருளாதார பின்னடைவுகளுக்கு சுதந்திரம் பெற்றதற்கு பிறகான ஊழல்கள், மக்கள் தொகை ஆகியவை பெரிதுபடுத்தப்படும் வேளையில், பிரிட்டன் காலனியாதிக்கத் தாக்கம், இந்தியாவின் வளர்ச்சியை பெரிதும் முடக்கிய வரலாறுகளை நாம் மறந்திருக்கிறோம்.
பள்ளிப் பாடப்புத்தகங்களில் நமக்கு போதிக்கப்பட்டதெல்லாம் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு, தலைவர்களின் தியாகங்கள் போன்றவையே. ஆழமாக பிரிட்டன் காலனியாதிக்கம் இந்தியாவில் செய்த பல்வேறு விதமான, கணக்கிலடங்கா கொடுமைகள், சுரண்டல்கள், கொலைகள், வன்முறைகள், கொள்ளைகள் ஆகியவை இந்தியாவை எப்படி பாதித்து வருகிறது என்பதையோ, அல்லது வரும் காலங்களில் கூட அதன் தாக்கத்திலிருந்து விடுபடமுடியுமா என்பதே பெரும் கேள்விக்குறியாகியுள்ளது பற்றியோ நமது கல்வித்திட்டங்களில் பெரும்பாலும் இல்லை என்றே கூறிவிடலாம்.
காலனியாதிக்கம் என்பதே மிகப் பெரிய அளவிலான கொள்ளை, பொருளாதாரச் சுரண்டல், அபகரிப்பு மற்றும் வன்முறை என்பதாக பின்காலனியம் என்ற ஒரு அறிவுத்துறையாகவே இன்று வளர்ச்சியுற்று கல்விப்புலத்தில் பல நூல்கள் வெளியாகியுள்ளன. பின்காலனியம் என்பது மிகவும் பரந்துபட்ட, பல்படித்தான, பின்னல்களும், சிந்தனைப் போக்குகளும், நிலைப்பாடுகளும், அரசியல் போராட்ட கொள்கைகளும், புதிய இலக்கிய கோட்பாடுகளையும் அடக்கிய ஓர் எல்லையற்ற புலம் என்பதாக இன்று வளர்ந்து நிற்கிறது.
பிரிட்டன் என்றாலே நமக்கு ரயில்வே கிடைத்தது, சாலைகள் கிடைத்தது, ஆங்கிலம் கிடைத்தது என்று பெருமை பேசுபவர்களுக்கும் சசி தரூரின் பேச்சு பேரிடியாக அமைகிறது. அதாவது, ஒரு ஷேக்ஸ்பியர் என்ற மேதையை நம் நாட்டு மேட்டுக்குடியினர் அறிந்துகொள்ள உயிர் துறந்தவர்கள் எத்தனை பேர், அழிக்கப்பட்ட வாழ்வாதாரங்கள் எவ்வளவு? இவற்றையெல்லாம் 'இழப்பீடு' என்ற பெயரில் சரிகட்டிவிட முடியுமா என்பதே சசி தரூர் முன்வைத்த கேள்விகளின் சாராம்சம்.
இந்தக் கல்விப்புல பின்காலனிய ஆய்வுகளில் காலனியாதிக்கம் பற்றிய பல்வேறு தரவுகள் நமக்கு காணக் கிடைக்கும். ஆனால், இந்த எண்ணற்ற தரவுகளின் சாரம்சமாக, ரத்தினச் சுருக்கமாக, சசி தரூர் பேச்சு அமைந்தது. ஆம்! ஆக்ஸ்போர்ட் யூனியன் சொசைட்டியில் சசிதரூர் பேச்சு அத்தகைய சக்தி வாய்ந்தது.
இந்நிலையில் 189 ஆண்டுகால பாரம்பரியமிக்க, ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி என்ற மிகவும் மதிப்புக்குரிய, பிரபலமான விவாத அரங்கில் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் கலந்து கொண்டு பிரிட்டன் காலனியாதிக்கக் கொடூரங்களை தரவுகளுடன், சரளமான ஆங்கிலத்தில், பரிகாசத்துடன் கூடிய வெறுப்புடன் அல்லது வெறுப்புடன் கூடிய ஒரு பரிகாசத்துடன் புள்ளி விவரத் தரவுகளுடன் கொடுத்து அசத்தியதோடு, வெறும் 15 நிமிடப் பேச்சில் காலனியாதிக்க வரலாற்றை கனக்கச்சிதமாக அனைவரையும் உறையச் செய்யும் வகையில் பேசி சிந்தனையைத் தூண்டியுள்ளார்.
அவரது பேச்சுக்கு ஒவ்வொரு முறையும் அரங்கமே அதிர்ந்தது. இந்திய பார்வையாளர்கள் மட்டுமல்ல, இந்த விவாதத்தில் பங்கேற்ற மற்ற கல்வியாளர்கள், மற்ற அறிவுஜீவகள் கரகோஷம் செய்து பெருத்த வரவேற்பு அளித்தனர்.
சசி தரூர் பேசியதன் முக்கிய அம்சங்கள்:
* காலனியாதிக்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பொருளாதார சூழ்நிலைகள் மோசமடைந்ததுதான் நிகழ்ந்துள்ளது.
* பிரிட்டன் ஆதிக்கவாதிகள் இந்தியாவுக்குள் நுழையும்போது உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 23% ஆக இருந்தது, பிரிட்டன் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு 4% ஆக குறைந்து மோசமடைந்தது.
* பிரிட்டனின் 200 ஆண்டுகால காலனியாதிக்கம் அவர்களது வளர்ச்சிக்காகவே நடைபெற்றது. பிரிட்டனின் 200 ஆண்டுகால வளர்ச்சியில் இந்தியாவில் செய்த சுரண்டல்களே அதிக பங்களிப்பு செய்துள்ளது.
* பிரிட்டனின் வளர்ச்சியாக விதந்தோதப்படும் தொழிற்புரட்சி, இந்தியாவை தொழிற்துறை அழிப்பு செய்ததன் மூலமே உருவானது.
* இந்தியாவின் பருத்தி உற்பத்தி நசுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு பிரிட்டன் பொருளாதாரம் வளர்ந்தது.
* கச்சாப்பொருட்களை இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்து அதனை அங்கு கொண்டு சென்று உற்பத்தி செய்து முழுபொருட்களாக, ஆடைகளாக மீண்டும் இந்தியர்களின் நுகர்வுக்கே இந்தியாவை சந்தைப்படுத்தியது.
* இந்திய நெசவாளர்கள் பிச்சைக்காரர்களாக மாறினர், உலகத் தரம் வாய்ந்த பருத்தி ஆடைகளின் ஏற்றுமதியாளர்களாக கோலோச்சிய இந்தியா இறக்குமதி நாடானது.
( ராபர்ட் கிளைவ் இந்தி வார்த்தை 'லூட்' (கொள்ளை) என்பதை ஆங்கில அகராதிக்கு அளித்தார், அதனுடன் கொள்ளை என்ற பழக்கத்தையும் பிரிட்டனுக்கு அளித்துள்ளார். அவரை 'கிளைவ் ஆஃப் இந்தியா' என்று பிரிட்டன் வர்ணித்தது, ஆனால் நாடே கிளைவின் கொடூர வலைப்பின்னல்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டது.
* 19-ம் நூற்றாண்டு முடிவில் இந்தியா, பிரிட்டனின் மிகப்பெரிய கறவை மாடானது, பிரிட்டன் பொருட்களின் நுகர்வுச் சந்தையாக மாற்றப்பட்டது.
* பிரிட்டிஷ் ஊழியர்களுக்கு நாம் அதிக அளவில் சம்பளம் கொடுத்து, நமது அடக்குமுறைக்கு நாமே சம்பளம் கொடுத்துள்ளோம்.
* அடிமைப் பொருளாதாரம் மூலம் 5-இல் ஒரு பங்கு இங்கிலாந்து மக்கள் பணக்காரர்களானார்கள். சுமார் 30 லட்சம் ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக கப்பல்களில் அனுப்பி கொண்டிருந்தனர்.
* பிரிட்டீஷ் ஆட்சிக் கால பெரு வறட்சிக்கு 15 மில்லியன் முதல் 29 மில்லியன் மக்கள் மடிந்தனர். வங்காள வறட்சிக்கு மட்டும் 40 லட்சம் மடிந்தனர், காரணம் வின்ஸ்டன் சர்ச்சிலின் கொடூரமான கொள்கைகள், 2-ம் உலகப் போரின் போது அத்தியாவசிய பொருட்கள் பிரிட்டன் ராணுவத்துக்காக பதுக்கப்பட்டன.
* காலனியாதிக்க அனுபவம் மூலம் பெறப்பட்டதெல்லாம் வன்முறையும் நிறவெறியும் மட்டுமே.
* 2-ம் உலகப்போரின் போது பிரிட்டன் படையில் 6இல் ஒரு பங்கு இந்தியர்கள். 54,000 பேர் போரில் பலியாகியுள்ளனர். 65,000 பேர் காயமடைந்தனர். 4000 பேர் கதி என்னவென்று தெரியவில்லை, இவர்கள் சிறையில் இருந்திருக்கலாம்.
* இங்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் 2-ம் உலகப் போர் காலக்கட்டத்தில் இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற பொருட்களின் மதிப்பு இன்றைய மதிப்பின் படி 8 பில்லியன் பவுண்டுகள்...
* ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்றெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சி பற்றி எடுத்து வைக்கப்படுகிறது, சித்ரவதை, சுரண்டல், கொலைகள், வன்முறை, முடமாக்கல் என்று 200 ஆண்டுகாலம் அனைத்தையும் செய்துவிட்டு இவையெல்லாம் முடிந்தவுடன் 'ஜனநாயகம்' பற்றி எப்படி பேச முடிகிறது? எங்களுக்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டது, அதை நாங்கள் உங்களிடமிருந்து பறிக்கப் போராட வேண்டியதாக இருந்தது.
* இவற்றையெல்லாம் மீறி பிரிட்டன், இந்தியாவுக்கு நிதியுதவி அளித்தது என்று பேசப்படுகிறது, அந்த உதவி எங்கள் உள்நாட்டு உற்பத்தியில் 0.4%. நாங்கள் உரங்களுக்கு கொடுக்கும் மானியம் இதையும் விட பல மடங்கு அதிகமானது (கைதட்டல்).
* எனவே இதற்கெல்லாம் பிரிட்டன் கடன்பட்டிருக்கிறது என்று அதற்கு நிதி இழப்பீடும் இந்த விவாதத்தில் முன்மொழியப்பட்டது, ஆனால் அனுபவித்த பயங்கரங்களுக்கு எந்த தொகை ஈடாகும்?
* வீட்டுக்குள் நுழையும் கொள்ளைக்காரர் பயங்கரக் கொள்ளையில் ஈடுபட்டு வீட்டைச் சூறையாடிவிட்டுச் செல்கிறார், என்றால் இருதரப்பிலும் 'தியாகங்கள்' இருக்கிறது என்ற வாதம் அற ரீதியாக சரியானதாக இருக்க முடியுமா?
* எனவே கொள்கை ரீதியாக பிரிட்டன் கடன்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள ஒரு 'மன்னிப்பு' கேட்டால் கூட போதும். அதை விடுத்து நிதியுதவி, இழப்பீடு என்ற வாதங்களை ஏற்க முடியாது. ஆனால் 'நாம் கடன்பட்டிருக்கிறோம்' என்ற குற்ற உணர்வு மிக முக்கியம்.
No comments:
Post a Comment