Monday 30 July 2018

PEOPLES CAME TO SEE MY ACTING ,NOT SET -M.R.RADHA







PEOPLES CAME TO SEE MY ACTING ,NOT SET
-M.R.RADHA




'மக்கள் என் நடிப்பை பாக்க தான் வர்றாங்களே தவிர, செட்டிங்கை இல்ல...' என்பார் ராதா.

அக்காலத்தில், 'மைக்' கிடையாது; கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கும் ரசிகனுக்கும் கேட்கும் வகையில், தொண்டை கிழிய கத்தி பேச வேண்டும். அதனால், ஒவ்வொரு நாள் இரவும் நாடகம் முடிந்த பின், ஒப்பனை அறையில் இவருக்காக ஒரு பெரிய குண்டானில் பழைய சோறும், சின்ன வெங்காயமும் இருக்கும்.
அதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார் ராதா. நள்ளிரவில் பழைய சோறும், சின்ன வெங்காயமும் சாப்பிட்டால், பலருக்கு ஜன்னி வந்து விடும். ஆனால், மேடையில் தன் சக்தியை எல்லாம் பிரயோகித்து நடிக்கும் ராதாவுக்கு, அந்த உணவு தேவையாக இருந்தது. அவரது குழுவிலிருந்த சிறுவர்களுக்கு, ராதாவுக்காக வெங்காயம் உரிப்பது தான் முக்கிய வேலை.

தன் குழுவில் இருந்த ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் அக்கறை காட்டினார் ராதா. குழுவில், 50 லிருந்து 60 பேர் வரை இருந்தனர். அதில், பெண்கள், 10 முதல் 15 பேர்.

'நாடக நடிகர்கள் யாரும் தூங்கக் கூடாது; தூங்கும் போது கூட காலாட்டிக்கிட்டே தான் தூங்கணும். இல்லேன்னா செத்துப் போயிட்டான்னு வேற யாரையாவது போட்டுருவாங்க...' என்பார் ராதா. தன்னுடைய எம்.ஆர்.ராதா நாடக மன்றத்திலிருந்து யாராவது விலகிச் செல்ல நினைத்தால், அவர்கள் நினைத்து பார்க்க முடியாத பெருந்தொகையை கொடுத்து, அவர்களை வாழ்த்தி வழியனுப்புவது ராதாவின் வழக்கம்.

என்றாவது ஒருநாள் விடுமுறை கிடைக்காதா என்று குழுவினர் ஏங்கித் தவிக்கும் அளவுக்கு, ஆண்டு முழுதும் நாடகங்கள் நடந்தன. அதனால், குழுவினர் யாரும் சோர்ந்து போகாதபடி உற்சாகப்படுத்தியவாறு இருப்பார் ராதா.

அதேபோன்று, தன் குழுவினருக்கு உணவளிக்கும் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வார். சமையல் சரியில்லை என்றால் சமையல்காரன் செத்தான். ராதாவின் வாயிலிருந்து கிளம்பும் கெட்ட வார்த்தைகள், அவனை சுட்டுப் பொசுக்கி விடும்.

வாரத்தில் மூன்று நாட்களாவது அசைவம் போட வேண்டுமென்பது ராதாவின் கட்டளை. மீன், ஆட்டுக்கறி பிரதானமாக இருக்கும். ராதாவுக்கு சமைப்பதில் ஆர்வம் உண்டு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மட்டன் சமைப்பதில் ஆர்வம் காட்டுவார். அவர் சமைக்கப் போகிறார் என்றாலே குழுவினருக்கு எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவு சமையலில், 'எம்டன்' ராதா.

சில சமயம், தன் குழுவினருக்கு தானே உணவு பரிமாறுவார். அவரது குழுவில் சைவம் உண்பவர்களும் இருந்தனர். அவர்களுக்கு தனி பந்தி நடைபெறும்.
ஒரு ஸ்டுடிபெக்கர் கார், இரண்டு வேன்கள், ராதாவின் கம்பெனிக்கு சொந்தமாக இருந்தன. காரில் நடிகைகளை ஏற்றிக் கொள்வார். வேனில் நடிகர்கள் வருவர். இன்னொரு வேனில் சாமான் செட்டுகள் வரும். கம்பெனியை நிர்வகிக்கும் சாம்பு அய்யரின் மேல், ராதாவிற்கு மிகுந்த மரியாதை. அவர் தன்னுடன் காரில் வரப்போகிறார் என்றால், பெண்களிடம் ரகசியமாக, 'அடியேய்... வேன்ல வாங்கடி, கார்ல ஏறாதீங்கடி...' என்று கடிந்து கொள்வார்.

ராதாவின் குழுவில், பெரிய பேபி, நீலா, ரமணி, பிரேமா, சுகுணா மற்றும் இன்னும் சிலரும் இருந்தாலும், சந்திரா கதாபாத்திரத்தில் நடித்த நீலா, பேரழகி என்றும், ராதா அவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார் என்றும் செய்திகள் உண்டு.

ரத்தக்கண்ணீரில் வேலைக்கார வேஷம் போட்டு வந்த சுந்தரம் என்பவர், திடீரென கம்பெனியிலிருந்து வெளியேறினார். அப்போதுதான் அறிவானந்தம் என்ற, 12 வயது சிறுவன் கம்பெனியில் சேர்ந்திருந்தான். அவனுக்கு அந்த வேடத்தைக் கொடுத்தார் ராதா. அவனோ நடுங்கியபடி நின்றான்.

'என்னடா பயமா இருக்கா?' எனக் கேட்டார் ராதா. அவனும், 'ஆமாம்...' என்று தலையசைத்தான்.
'நம்மளை பாக்க காசு கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கான்; அவங்கள விட, நாம மூணு அடி உயரத்துல இருக்கோம். முன்னால இருக்கறவனு களுக்கு எல்லாம் ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சுட்டு நடிடா...' என, ராதா உற்சாகப்படுத்த, அறிவுக்கு கொஞ்சம் பயம் தெளிந்தது.

வசனங்களை ராதா உள்வாங்கிக் கொள்ளும் விதமே அலாதி. 'அறிவு... ஆரம்பிக்கலாமா?' என்று கேட்டு, நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக் கொள்வார். அறிவு வாசிக்க ஆரம்பிப்பான். ராதாவிடமிருந்து பதிலோ, அசைவோ இருக்காது. அவர் தூங்கி விட்டாரோ என்று நினைத்து நிறுத்துவான்.

'ம்...' என்று குரல் கொடுப்பார் ராதா. மீண்டும் வாசிக்க ஆரம்பிப்பான். தொடர்ந்து மூன்று நாட்கள் வாசித்தால் போதும், அதற்குபின், ராதாவுக்கு பாடம் தேவையில்லை. அவரது ஞாபக சக்தி அந்த அளவுக்கு அபாரமானது.

அக்காலத்தில், நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியின் நாடக செட்டுகளுக்காவே மக்கள் நாடகம் பார்க்க வருவர். பெரிய பாம்பு, பிளக்கும் கடல், சிருங்கார அரண்மனை, பிரமாண்ட தேவலோகம் என்று, மக்களை அசர வைத்தனர். ஆனால், ராதா அதற்கு நேர் எதிர்.
நீல நிறப்படுதா, அதில் காடு. காட்சி மாறும்... சிவப்பு நிற படுதா, அதில் வீடு. அடுத்து, பச்சை நிறப்படுதா, அதில் பொது இடம். எந்த செட்டிங்கும் கிடையாது. மக்கள் படுதாவை பார்த்து, காட்சி எங்கே நடக்கிறது என்று புரிந்து ரசிப்பர்.

'மக்கள் என் நடிப்பை பாக்க தான் வர்றாங்களே தவிர, செட்டிங்கை இல்ல...' என்பார் ராதா.

பல நேரங்களில் வெளியூர் செல்கையில், 'செட்' சாமான்கள் எதையும் எடுத்துச் செல்லாமல், வெறும் படுதாக்களை வைத்து, வெற்றிகரமாக நாடகம் நடத்தியிருக்கிறார் ராதா. அதிலும், குறிப்பாக ரத்தக்கண்ணீர் நாடகம், அப்படி பலமுறை அரங்கேறியிருக்கிறது.

தன் வாழ்நாளில், புதுப்புது காட்சிகளுடன், புதிய வசனங்களுடன் கிட்டத்தட்ட, 5,000 தடவைக்கு மேல், ரத்தக்கண்ணீர் நாடகத்தை மேடையேற்றியிருக்கிறார் ராதா.

மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்ற, 'ஸ்கிரிப்ட்!' அதை திரைப்படமாக்க எல்லாருக்கும் ஆசையிருந்தாலும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்கிரிப்டை வைத்து வேறு யாரையாவது போட்டு படமெடுக்கலாம் என்றால், யார் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முன் வருவர்? அப்படியே நடித்தாலும் ராதாவைப் போன்று நடிக்க முடியுமா? அத்துடன், முரட்டு மனிதர், கலகக்காரர் என்ற, 'இமேஜ்' ராதாவிற்கு இருந்ததால், தயாரிப்பாளர்கள் ராதாவை நெருங்க பயந்தனர்.

ராதாவுக்கு அப்போது சினிமாவில் விருப்பம் இல்லை. அதற்கு, பழைய அனுபவங்களே காரணம்.
அவ்வையார் படத்திற்காக கே.பி.சுந்தரம்பாள், ஜெமினி வாசனிடம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய செய்தி, பரபரப்பாக பேசப்பட்ட காலம் அது! நேஷனல் பிக்சர்ஸ், பி.ஏ.பெருமாள், ராதாவை தேடி வந்தார்.

முதலில் ரத்தக்கண்ணீர் படத்தில் கதாநாயகன் தேர்வு செய்யப்பட்டவர் சிவாஜி கணேசன் தான் . பராசக்தி அப்போது முடிவடையவில்லை . சினிமாவில் ராதா நடிக்க பிரியப்படா விட்டால் கதையாவது 

வாங்கலாம்னு ராதாவை அணுகினார் பெருமாள் 


'சினிமாக்காரங்க பழக்கத்தை விட்டு ரொம்ப வருஷம் ஆச்சு. இப்போ நீங்க விரும்பிக் கூப்பிடறீங்க; வரேன். ஆனா, என் வழி, தனி வழின்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்....' என்றார்.

'எல்லாத்தையும் தெரிஞ்சு தான் வந்திருக்கேன்; என்ன செய்யணும் சொல்லுங்க?' என்று கேட்டார் பெருமாள்.
'சினிமாவுக்காக நாடகத்தை விட மாட்டேன்; எனக்கு நாடகம் தான் பெரிசு. ஒற்றை வாடைத் தியேட்டர்ல என் நாடகம் தொடர்ந்து நடக்கும். அது, முடிஞ்ச ராத்திரியில தான் என்னால படப்பிடிப்புக்கு வர முடியும்; சம்மதமா...' என்றார் ராதா.

'அதுக்கென்ன; தாராளமா வைச்சுக்கலாம்...' என்றார் பெருமாள்.'நான் நாடக நடிகன். கேமராவின் இஷ்டத்துக்கு திரும்பத் திரும்ப நடிக்க மாட்டேன்; என் இஷ்டத்துக்கு தான் கேமரா என்னை படம் பிடிக்கணும். என்ன சொல்றீங்க...'

'சரி...'


'சமீபத்துல வாசன், கே.பி.சுந்தராம்பாளுக்கு ஒரு லட்ச ரூபா சம்பளம் கொடுத்திருக்காரு; எனக்கு நீங்க, 25 ஆயிரம் கூடுதலாப் போட்டு ஒண்ணே கால் லட்சமாக கொடுத்துடுங்க...' என்றார்.

'அதுக்கென்ன... தாராளமா செஞ்சுட்டாப் போச்சு...'
எல்லாவற்றுக்கும் சம்மதித்தார் பெருமாள்.
நேஷனல் பிக்சர்ஸ் அளிக்கும், ரத்தக்கண்ணீர் என்று, செய்தித்தாள்களில் விளம்பரம் வந்தது.

உடனே, 'இதுவரை படமாக்கப்பட்ட நாடகங்களில் பல, தோல்வியடைஞ்சுருக்கு; இது என்ன ஆகுதுன்னு பாக்கலாம்...'என்று, எதிர்மறை கருத்துகளும் வந்தன.
இத்தகைய விமர்சனங்களுக்கு மத்தியில், 1952ல் பிரகாஷ் ஸ்டுடியோவில், பட துவக்க விழா நடைபெற்றது. நரசு ஸ்டுடியோவில் படப்பிடிப்பு ஆரம்பமானது. கதை, வசனம், திருவாரூர் தங்கராசு; இயக்கம், கிருஷ்ணன் - பஞ்சு. சந்திரா கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீரஞ்சனி ஒப்பந்தமாயினார். இந்நிலையில், காந்தா என்ற தாசி கதாபாத்திரத்தில் நடிக்க யாருமே கிடைக்க வில்லை. அப்போதைய முன்னணி நடிகைகள் இப்பாத்திரத்தில் நடிக்க மறுத்து விட்டனர்.

ஆறு மாதத்தேடலுக்கு பின், காந்தா கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக நடிகையாக ஒப்பந்தமானார் ஒரு இளம் பெண். அவர் பெயர் எம் .என் .ராஜம்

No comments:

Post a Comment