CULTURAL REVOLUTION ...STOP THAT NON-SENSE
பெய்ஜிங்தான் தங்கள் தலைநகர் என்று முடிவெடுத் தார் மா சே துங். கட்சியின் தலைவர் அவர். அரசின் தலைவராக சூ என் லாய்.
விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த அரசு விளங்கியது. கம்யூ னிஸ்ட் கட்சியில் 90 சதவிகிதத் துக்கும் அதிகமானோர் விவசாயி கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீன மக்கள் குடியரசு உருவான அடுத்த தினமே சோவியத் யூனியன் அதற்கு அங்கீகாரம் அளித்தது. இனி ஜப்பான் வாலாட்டினால் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்ற தைரியத்தையும் அளித்தது.
மா சே துங், நாட்டில் பல மாறுதல் களைக் கொண்டு வந்தார். கல்வி அறிவு பெற்றவர்களை அதிக மாக்கினார். விலைகளை கட்டுப் படுத்தினார். கரடுமுரடாக இருந்த சீன எழுத்துக்களை எளிமையாக் கினார். அவர் ஆட்சியில் கிட்டத் தட்ட ஒவ்வொரு வருடமும் தேசிய வருமானம் அதிகரித்தது உண்மை.
ஆனால் மாற்றுக் கருத்துக்களை மனம் திறந்து ஏற்றுக் கொள்பவர் என்று பெயர் எடுத்த மா சே துங் மெல்ல மெல்ல மனம் மாறினார். தன் மீதான விமர்சனங்களை அவர் மிகவும் வெறுக்கத் தொடங்கினார்.
சீனாவுக்குப் புதிய பிரச்னைகள் தோன்றின. சோவியத் யூனியனில் ஸ்டாலின் இறந்தார். குருஷ்ஷேவ் அவர் இடத்தைப் பிடித்தார்.
மார்க்ஸியக் கொள்கைகள் வடிவமைக்கும் பொறுப்பு தனக்கு தான் என்று நினைத்தார் மா சே துங். இதை குருஷ்ஷேவ் ஏற்கவில்லை. சீனாவுக்கு அளித்த தொழில்நுட்ப உதவிகளை சோவியத் யூனியன் நிறுத்திக் கொண்டது. சீனாவில் ஏற்பட்ட தொடர் பஞ்சங்களில் மூன்று கோடி பேர் மடிந்தனர். சீனா பொருளாதாரத்தில் தள்ளாடியது.
மா சே துங் இனி ஓர் அலங்காரத் தலைவராக இருந்தால் போதும் என்று தீர்மானித்தனர் சீனாவின் பிற கம்யூனிஸ்ட் தலைவர்கள். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மா சே துங்கிற்கு. கலாச்சாரப் புரட்சியைத் தொடங்கினார். சீன வரலாற்றில் புதிய திருப்புமுனை. ‘சிவப்பு பாதுகாப்பாளர் படை’ யைச் சேர்ந்தவர்களுக்கு பல அதிகாரங்களை வழங்கினார் மா சே துங். சீனாவின் மரபுகள் மறை வதற்குக் காரணமாக இருப்பவர் களை தட்டிக் கேளுங்கள் என்றார். பல மாணவர்கள் இந்தப் படையில் இணைந்தார்கள். நாட்டில் ரத்த ஆறு ஓடத் துவங்கியது. மா சே துங்கை விமர்சித்தவர்களும், குருஷ் ஷேவ்வைப் பாராட்டியவர்களும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். படித்த கூட்டம்தான் மரபுகளைக் காற்றில்விட்டது என நினைத்து பல எழுத்தாளர்களை கைது செய்தார் மா சே துங். (அப்போது தொடங்கி இன்னும் தொடர் கிறது குடியரசு சீனாவில் சுதந்திரமான கருத்துரிமைக்கான இடைஞ்சல்கள்).
பிரதமர் சூ என் லாய்க்கு இதில் சம்மதம் இல்லை. ‘‘போதும் கலாச்சாரப் புரட்சி’’ என்றார். என்றாலும் மா சே துங் இறக்கும் வரை கலாச்சாரப் புரட்சி உயிர்ப் புடன்தான் இருந்தது. கம்யூனிஸக் கொள்கைக்கு எதிராக மா சே துங்கை வழிபாட்டுக்குரிய ஒரு தலை வராகவே நினைத்தனர் சீன மக்கள். அவரது மேற்கோள்கள் அடங்கிய நூலை கட்சியின் அத்தனை உறுப்பினர்களும் புனித நூலைப் போல வைத்திருந்தார்கள்.
அதே சமயம் எதிர்ப்புகளும் தொடங்கின. சோவியத் யூனியன் சீனாவுடனான நட்பைக் குறைத்துக் கொண்டதற்கு மா சே துங்தான் காரணம் என்ற விமர்சனம் எழுந்தது. மா சே துங்கின் கொள்கைகள் தோல்வியைச் சந்தித்தன என்றார்கள். போதாக்குறைக்கு அமெரிக்காவும் சீனாவின்மீது பொருளாதாரத் தடை விதித்தது.
மா சே துங் இறந்தார். அப்போது அவருக்கு வயது 82. அவரது தாக்கம் கம்போடியா, நேபாளம் போன்ற நாடுகளில் புரட்சி யாளர்கள் நடுவே பரவியது.
அதன்பின் சுமார் 20 வருடங்களுக்கு டெங் ஜியோபிங் என்பவர்தான் சீனாவின் ‘உண்மை யான தலைவராக’ இருந்தார். மா சே துங்கின் நீண்ட நடைப் பயணத்தில் கலந்து கொண்டவர் இவர். மக்கள் சீனக் குடியரசு உருவானபோது கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை இவருக்கு அளித்தார் மா சே துங்.
ஆனால் போகப் போக மா சே துங்கின் கொள்கைகளை டெங் ஜியோபிங்கால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மா சே துங்கின் கலாச்சாரப் புரட்சியை டெங் ஜியோபிங் ஏற்றுக் கொள்ளவில்லை. மா சே துங் இறந்த பிறகு ‘பெய்ஜிங் வசந்தம்’ என்ற இயக்கத்தை அறிமுகப் படுத்தினார். இதில் அரசு குறித்த வெளிப்படையான விமர்சனங்கள் கூட வரவேற்கப்பட்டன.
பல வெளிநாடுகளுக்குச் சென்று சீனா குறித்த நல்ல கருத்துகளை விதைத்தார். அமெரிக்கா தனது சீன தூதரக உறவை முறித்துக் கொண்டதும் அங்கு சென்று வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி கார்ட்டரை சந்தித்துப் பேசி மீண்டும் தூதரக உறவை புதுப்பித்துக் கொண்டார்.
ஜப்பானைக்கூட மன்னித்தார். ஆனால் சோவியத் யூனியனுடன் நெருக்கமாக எந்த முயற்சியையும் அவர் எடுக்கவில்லை. டெங் ஜியோ பிங் சீர்திருத்தங்களை சீனாவில் உலவவிட்டதன் பின்னணியே வித்தியாசமானது. எந்தப் பகுதியி லாவது ஏதாவது சீர்திருத்தம் வெற்றி பெற்றால் (அதை அறிமுகப் படுத்தியது யாராவது உள்ளூர் தலைவராக இருப்பார்). அதை வரவேற்று சீனா முழுவதும் பரப்பு வதை வழக்கமாக்கிக் கொண்டார்.
விளைநிலத்தில் உற்பத்தியாகும் பொருட்களை விவசாயிகள் சந்தை விலைக்கே விற்கலாம் என்று அவர் கூறியது சீனாவுக்குப் புதுசு. கனரகம் அல்லாத தொழில்களிலும், ஏற்றுமதியிலும் சீனா கவனம் செலுத்தினால் நல்லது என்று அவர் கூற அது உண்மைதான் என்று பின்னர் நிரூபணம் ஆனது. தன் ஆட்சியில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கினார்.
ஐந்து அடிக்கும் குறைவான உயரம் கொண்டிருந்த டெங் ஜியோபிங் தனது 92வது வயதில் 1997ல் இறந்தபோது உலகத் தலைவர்களின் பரவலான பாராட்டு அஞ்சலிகளைப் பெற்றார்.
‘‘பூனை கறுப்பாக இருந்தாலென்ன, வெளுப்பாக இருந்தாலென்ன, அது எவ்வளவு திறமையுடன் எலியைப் பிடிக்கிறது என்பதுதான் முக்கியம்'' என்பது டெங் ஜியோபிங்கிற்கு மிகவும் பிடித்த சீனப் பழமொழி. சீனா திறமையாகவே எலிவேட்டையை நடத்துகிறது. பல பொருளாதாரப் புலி நாடுகளையும் கிலியடைச் செய்யுமளவுக்கு சிறப்பான வேட்டை.
ஆனால் வேறொரு விபரீதத்துக்கு அவர்தான் காரணம் என்பதையும் சரித்திரத்திலிருந்து அழிக்க முடியாததுதான்.
No comments:
Post a Comment