Thursday, 12 October 2017

அங்காடித் தெரு








அங்காடித் தெரு



தமிழ்நாட்டின் பரப்பளவில் மூன்று கோடியே 20 லட்சத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ள 10 மீட்டர் அகலமும் 405 மீட்டர் நீளமும் கொண்ட ஒரு குறுகலான தெருவில் இருந்து மட்டும் தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு 10 சதவிகிதத்திற்கு குறையாமல் விளம்பரம் வருகிறது என்றால் சந்தேகமில்லாமல் அது சென்னை தியாகராயர் நகர், ரங்கநாதன் தெருவிலிருந்து தான்!


மாம்பலம் - தியாகராயர் நகர் தொடர் வண்டி நிலையத்திற்கும் வடக்கு உஸ்மான் சாலைக்கும் இடையில் அமைந்திருக்கும் அந்தத் தெருவில் தான் சென்னையின் மக்களின் பெரும்-பகுதியினரின் பேஷன் மாற்றம் நிர்ணயிக்கப்-படுகிறது. நெரிசலான பல மாடிக் கட்டடங்-களிலும், சின்னச் சின்ன சந்துகளிலும், பொந்துகளிலும் உள்ள கடைகளில் பணியாற்றுவோர், தெருவின் இரு ஓரங்களிலும், மத்தியிலும் நீளமாக 'தெருவே உலகம்; ஊனுடம்பே கடை' என தானே விற்பனையக-மாக மாறிப்போய் வியாபாரம் செய்வோர் என பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையும் இந்தத் தெருவில் தான் எந்த மாற்றமும் அற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

சென்னையில் வசிப்போர் இந்த இடத்தை-யோ, அதன் நெருக்கத்தையோ அறியாமல் இருந்திருக்க முடியாது. ஒரே கடையில் எல்லாவற்றையும் 'அள்ளிக்' கொள்ளும் வாய்ப்புக்காகவும், தங்களுக்குப் பிரியமான நட்சத்திரங்கள் பரிந்துரைக்கும் கடை என்பதற்காகவும், நட்சத்திரங்கள் விளம்-பரங்களில் தோன்றி அழகாக்கிய (அழுக்காக்கிய) உடைகளை தாங்களும் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் ஒவ்வொரு நாளும் அங்கு கூடுவோர் ஆயிரம். வண்ண வண்ண துணிகளை அணிந்து நிற்கும் பொம்மைகளை, அந்த உடைகளுக்காக பார்த்த அவர்கள், எப்போதாவது அக்கடையில் இயந்திர பொம்மைகளாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்திருப்பார்களா? இயக்குநர் வசந்த பாலன் பார்த்திருக்கிறார். அதுதான் "அங்காடித் தெரு".

சென்னையில் முழுதும் குளிரூட்டப்பட்ட 5 மாடிக் கட்டடத்தில் இயங்கும் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் கடையில் வேலைக்கு ஆள் எடுப்பதற்காக திருநெல்வேலி ஜங்சன் அருகில் நடைபெறும் சிறப்பு முகாமில், எப்படியேனும் தேர்வாகி வீட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் குவிந்திருக்கும் இளைஞர்களில் ஜோதிலிங்கமும் ஒருவன். ஆள் இல்லா லெவல் கிராசிங்கில் ரயிலில் சிக்கிச் சிதறிய ஆட்டோ விபத்தில் தந்தையை இழந்ததால், பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று, தான் முடித்த 12-ஆம் வகுப்பிற்குப் பிறகு மேல் படிப்புக்கு வழியின்றி குடும்பத்தைக் காக்க வேலை தேடியவன். அவன் நண்பன் மாரிமுத்துவோ, தேர்வில் தோல்வியடைந்து சினேகா அக்கா இருக்கும் ஊருக்கு செல்லும் ஆர்வத்தில் 'அப்பா சந்நியாசம் போய்விட்டதாக'க் கூறி பணியில் சேர்ந்திருப்பவன். 

'நம்ம ஆளுகளா பார்த்து எடுங்க. அப்பா இல்லாதவன், அக்கா, தங்கச்சி இருக்கிறவனாப் பாத்து வேலைக்கு எடுங்க. அப்பத்தான் பொத்திக்கிட்டு வேலை பார்ப்பானுங்க' என்ற தகுதிகளின் அடிப்படையில் தான் ஆள் தேர்வு நடைபெறுவதால் படிப்பு கவலை இல்லை. 'எச்சிக்கையை ஓட்டினா ஆயிரம் காக்காய்' கிடைக்கும் வாய்ப்பிருந்தும், தேரிக் காட்டில் கிடந்துழலும் 'நம்ம' பயலுகளுக்கு தன்னா-லானதை செய்யும் பேருள்ளத்தோடு இவர்களை 'கொத்தடிமை' வேலைக்கு எடுத்துக் கொள்கிறார் அண்ணாச்சி.

ஆம். சேல்ஸ் 'மேன்' வேலை என்று தான் சொல்லி அழைத்து வருகிறார்கள்... ஆனால் மனிதனாய் மதிக்கத்தான் யாரும் இல்லை. சிறையினும் கொடிய அவர்களின் அன்றாட வாழ்க்கை திரையில் விரிகிற போது-தான், இப்படியும் இருக்குமா என்று சந்தேகக் கண்ணோடு வியக்கிறார்கள் பார்வையாளர்கள். ஆனால், "நான் காட்டியது கொஞ்சத்திலும் கொஞ்சமே.. மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து என்னால் இதை மட்டும்தான் காட்ட முடிந்தது" என்கிறார் இயக்குநர்.

ஆண், பெண் இரு பாலரின் கடுமையான உழைப்பு, ஒரு நிமிடம் ஓய்வென்றோ, களைப்பென்றோ அமர்ந்தாலும் அவர்கள் சந்திக்கும் அடி, உதை, பாலியல் தொல்லைகள் என்று காட்சிக்குக் காட்சி, அந்தக் கண்ணாடிக் கூண்டுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கும் நவீன கொத்தடிமைகள் அனுபவிக்கும் கொடுமைகளி-லிருந்து சில பருக்கைகள் மட்டுமே காட்டப்-படுகிறது. வகை தொகையில்லாமல் நடக்கும் இந்த வன்கொடுமைகள் வெளித் தெரியாமல் இருக்க காவல், தொழிலாளர் நலன் உள்ளிட்ட ஒவ்வொரு துறைக்கும் 'கொட்டி அழும்' அண்ணாச்சியின் துயரம்(!?) கூட பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
காலை 8 மணியிலிருந்து இரவு 12 மணி வரை நின்று கொண்டே பணியாற்றியதால் ரத்தக்-குழாயில் கெட்ட ரத்தமெல்லாம் சேர்ந்து வெரிக்கோஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரைக் காட்டும் போது ஒரு நிமிடம் நாம் உறைந்து தான் போகிறோம். செந்தில் முருகன் ஸ்டோர்ஸில் மட்டுமல்லாமல், அந்த அங்காடித் தெருவில் காலத்தை ஓட்டும் பல்வேறு கதாபாத்திரங்களின் வழியே குட்டிக் குட்டிச் சிறுகதைகள் திரைக்கதைக்குள் வந்துபோ-கின்றன. 

பிச்சையெடுத்து வாழ்ந்துவந்த வளர்ச்சி குறைந்த மாற்றுத்திறனாளி, தான் கட்டிக்-கொண்ட முன்னாள் பாலியல் தொழிலாளியின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை தன்னைப்-போலவே வளர்ச்சி குறைவற்று இருந்துவிடக்-கூடாது என்று கடவுளை வேண்டியிருக்க பிறந்த குழந்தையோ அவரைப் போலவே இருக்கிறது. மிகுந்த சோகத்தோடு செல்லும் அவரது நிலைக்கு மாறாக மிகுந்த மகிழ்ச்சியோடு செல்லும் அவரது மனைவி அதற்கு சொல்லும் காரணம் மனிதர்களின் உணர்வுகள் எப்படி-யெல்லாம் இருக்கின்றன என்பதற்கு ஓர் அற்புதமான சான்று.

ஒரே அறையில், புரண்டு படுக்கக்கூட இடமின்றி, சரக்கு மூட்டைகளைப் போல் சாய்ந்துகிடப்பதையும், அண்டா சோற்றுக்குள் தட்டை விட்டு அதற்குள் போட்டியிடும் 20 தட்டுகளிடமிருந்து தட்டி விடாமல் சோற்றை எடுக்கும் சாமர்த்தியத்தையும், ஒரு நிமிடம் தாமதமானாலும் ஒரு ரூபாய் பிடிக்கப்படும் சம்பளத் தொகையை முழுதாக வாங்கி வீட்டுக்கு அனுப்ப அவர்கள் பொறுத்துக்கொள்ளும் அத்தனை வதைகளையும் அதன் கோரம் குறையாமல் வெளிச்சமிடுகிறது படம். ஒரே ஒரு புடவை எடுப்பதற்காக 'இதே கலர்ல' வேற என்னென்ன இருக்கோ எடுத்துப் போடுங்க..' என்று கேட்கும் போது, இரண்டுக்கு மேல் மாதிரி எடுத்துப் போடாத கடைப் பணியாளர்-களை நோக்கி எப்போதும் எரிச்சல் பார்வையைப் படரவிடும் வாடிக்கையாளர்-களுக்கு அந்த சலிப்புக்கான காரணம் இனி தெரியக் கூடும்.


முதன்மைக் கதாபாத்திரங்களான கனி (அஞ்சலி), ஜோதிலிங்கம்(மகேஷ்), கங்காணி (இயக்குநர் ஏ.வெங்கடேஷ்), அண்ணாச்சி (பழ.கருப்பையா) மற்றும் கனியின் தோழியாக வந்து இறந்துபோகும் செல்வராணி, மாரிமுத்து ஆகியவற்றை ஏற்றிருக்கும் அனைவரும் வெகு அழகாக தங்கள் பங்கைச் செய்துள்ளனர். வீட்டு வேலைக்கு என்று விடப்பட்டுள்ள கனியின் தங்கை பருவமடைந்துவிட அதை தீட்டு என்று நாய் கட்டியிருக்கும் இடத்திற்கு அருகில் அடைத்து வைத்திருக்கும் ஆச்சாரமான மாமியின் மனிதாபிமானம்(?!) இளங்குருத்துகள் சந்திக்கும் சொல்லொண்ணா சிக்கல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு. வேலைக்கு வந்த இடத்தில் விருப்பம் ஏற்பட்டு வேலைக்கு பங்கம் வந்துவிடாமல் தவிக்கும் தவிப்பு, கடுமையான சூழலில் வெளி-யேற்றப்பட்டு, இரவு தங்குவதற்கு இடமின்றி பாதுகாப்பற்ற சூழலில் அலைந்து திரிதல் என இருட்டுப் பக்கங்களிலிருந்து விடுபட்டு, ரிமோட் கவர் விற்றுக் கிடைத்த வருவாயில் மகிழ்கின்றனர் கனியும், லிங்குவும் (ஜோதிலிங்-கமும்). கட்டட வேலை செய்வோர் இரவு உறங்கும் உதயம் தியேட்டர் அருகில் சாலைக்கு வந்து அங்கு தங்கள் இருப்பிடத்தை அமைத்துக்கொள்கின்றனர்.


இரவு ரம்மியமானது சிலருக்கு; நிம்மதியானது சிலருக்கு; இனிமையானது சிலருக்கு! அதிலும் கொசு, மின்வெட்டு என்று கொஞ்சம் இடைஞ்சல் ஏற்பட்டாலும் சகலரையும் சபிக்கிறோம். ஆனால், இரவு படுக்க இடமின்றி, இன்றைக்கு உறக்கம் சாலையிலா, பாலத்துக்கு அடியிலா, சாக்கடைக்குப் பக்கத்திலா என்று சாக்குப்பையைத் தேடி அலையும் ஏதுமில்லா-தோருக்கு? இதற்கு நடுவில் தான் அவர்களின் காதலும், வாழ்க்கையும். ஒரே காட்சிதான் உலுக்குகிறது உண்மை. சாலையோரம் படுத்துறங்கும் தொழிலாளர்-களின் மீது லாரி ஏறி ரத்தச் சகதியாய் மாறிய இடத்திலிருந்துதான் தொடங்குகிறது படம். இரண்டாண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த நிகழ்வுதான்! ஆனால், அதை கதாநாயகன் கனன்று எழுவதற்கான காரணமாகக் காட்டி கதநாயகனை உயர்த்திப்பிடிக்கும் வழக்கமான படங்களைப் போலல்லாமல், மனதில் தைக்கும் விதமாக அந்த உண்மையை உணர்த்தியிருக்-கிறார். கால்களை இழந்து நிற்கும் சேர்மக்-கனியைத் தன் துணையாக ஏற்று, வாழ்க்கையைத் தங்களை நம்பித் தொடங்குகின்றனர். அடுத்தவர் கடையில் வேலை தேடித் தேடி அலையாமல், தொழில் செய்யத் தொடங்கி ஒரு நேர்மறையான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார்.


இந்த நேரத்தில் நாம் சிந்திக்க வேண்டிய மற்றொன்று - அமைப்பு சாராத இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை. பணி நிரந்தரம், உரிய ஊதியம், உரிமைகளைக் கேட்கக் கூட முடியாமல் தவிக்கும் அல்லது தங்களுக்கென்று உரிமைகள் இருக்கின்றன என்பது கூடத் தெரியாத இந்தத் தொழிலாளர்களுக்காக ஒரு குரல் எழும்ப வேண்டியதன் அவசியத்தையும் இப்படம் உணர்த்துகிறது. செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் என்பது கற்பனைப் பெயராக இருக்கலாம்; அல்லது ஏதோ ஒரு கடையை உங்களுக்கு நினைவுபடுத்துவதாக இருக்கலாம். ஆனால் இது ஏதோ ஒரு கடையில் மட்டும் நடப்பதல்ல; ரங்கநாதன் தெருவின் கதை மட்டுமல்ல என்பதை நாம் உணர வேண்டும். தமிழரின் வாழ்க்கையைப் பதிவு செய்யத் தவறிய தமிழ் சினிமாக்களின் மத்தியில், முக்கிய பதிவுகளில் ஒன்றாக வெளிவந்திருக்கிறது அங்காடித் தெரு.


வாழ்க்கையின் பக்கங்களில் வெகு இயல்பாக நாம் கடந்துபோகும், காண மறுக்கும், உணராமல் தவிர்க்கும், நெஞ்சைச் சுடும் நிஜங்-களை இயல்பான கதையோட்டத்தில் அமைந்த நேர்த்தியான திரைக்கதையோடு கண் முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் வசந்த பாலன். வரலாறுகள் எல்லாம் வெற்றிபெற்றோரைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கும்போது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டத்திலும் தோல்வியடைந்தவனைப் பற்றிப் பதிவு செய்த இவரது "வெயில்" திரைப்படம் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த புதிய பரிமாணம். 'அங்காடித் தெரு' வசந்தபாலனுக்கு ஒரு புதிய பரிணாமம்.



No comments:

Post a Comment