Tuesday, 20 June 2017

உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள்


உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள்





உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள்

மனிதகுல வரலாற்றில் மக்களது உரிமைகள் மீறப்பட்டு அவர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றபோது மக்கள் ஆட்சியாளனுக்கு எதிராகக் கிளர்த்தெழுந்து தமது எதிர்ப்புக்களைத் திடீரென வெளிக்காட்டுகின்றபோது அது புரட்சியாக உருவெடுக்கின்றது. சுருக்கமாகக் கூறினால் புரட்சி என்பது அரசியல் துறையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார துறைகளில் ஏற்படுத்தப்படும் பாரிய மாற்றமாகும்.

நாம் வரலாற்றுப் பாதையினைத் திருப்பிப் பார்க்கின்றபோது இப்புரட்சிகள் காலத்திற்குக்காலம் நடைபெற்று வந்துள்ளமையை அறியமுடிகின்றது. அந்தவகையில் உலக வரலாற்றில் இடம்பிடித்த மூன்று முக்கிய புரட்சிகளாக மேல்வருவனவற்றைக் குறிப்பிட முடியும்.

ஆங்கிலப்புரட்சி – 1688
அமெரிக்கப்புரட்சி – 1776
பிரான்சியப்புரட்சி – 1789

ஆங்கிலப்புரட்சி – 1688
இங்கிலாந்து வரலாற்றிலே 1688ஆம் ஆண்;டில் இரண்டாம் ஜேம்ஸ் மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஆங்கிலப்புரட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. அமைதியான முறையில் தொடங்கி அமைதியாகவே முடிவுற்றதோடு போர் நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை. இதனால் இப்புரட்சியை 'மாண்புறுப்புரட்சி' என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிரித்தானிய பாராளுமன்றத்திற்கும் ஸ்டுவட் வம்ச அரசர்களுக்குமிடையில் இறைமை பற்றிய போராட்டத்தின் முடிவே இப்புரட்சியாகும். மன்னனுடைய அதிகாரங்களைக் குறைத்து பாராளுமன்றத்தின் அதிகாரங்களை உயர்த்துவதே புரட்சியின்  நோக்காக அமைந்தது. இதன் முதற் கட்டமாக 'மக்னா காட்டா' (மகா பட்டயம்) ஒப்பந்தம் 1215 இல் ஏற்படுத்தப்பட்டது.
புரட்சிக்கான காரணங்களை ஆராய்கின்றபோது 1603ஆம் ஆண்டிலே முதலாம் ஜேம்ஸ் மன்னன் சிம்மாசனம் ஏறியகாலம் தொடக்கம் பாராளுமன்றத்திற்கும் ஸ்டுவட் அரச வம்சத்திற்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டவண்ணமாயிருந்து. இவ்வம்சத்தின் முக்கிய மன்னனாக இரண்டாம் ஜேம்ஸ் விளங்கினான். இவனின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே புரட்சிக்கான உடனடிக்காரணமாக அமைந்தது.
தீவிர கத்தோலிக்கனான இரண்டாம் ஜேம்ஸ் மன்னன் பதவியேற்றதுடன்(1685-1688) மன்னனுக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இம்மோதலுக்கு சமயக் கருத்து வேறுபாடே காரணமாக அமைந்தது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையோர் சீர்திருத்த சமயத்தவராயிருக்க மன்னனோ றோமன் கத்தோலிக்கனாயிருந்தான். மன்னன் அரசுரிமையை றோமன் கத்தோலிக்க சமயத்தவனுக்கு வழங்குவதே குறிக்கோளாகக் கொண்டிருந்தான். ஆயினும் பாராளுமன்றம் மன்னனின் மகளைத் திருமணம் செய்திருந்த சீர்திருத்த சமயத்தவரான நெதர்லாந்தைச் சேர்ந்த இளவரசன் வில்லியத்திற்கு முடிசூட விரும்பியது. இளவரச தம்பதியைப் பதவியேற்க பாராளுமன்றம் அழைப்பு விடுத்தது. அவ்விருவரும் அழைப்பை ஏற்று இங்கிலாந்திற்கு வந்திறங்கியபோது  ஜேம்ஸ் மன்னன் பிரான்சிற்குத் தப்பியோடினான். வெற்றி பெற்ற பாராளுமன்றம் மூன்றாம் வில்லியத்தையும் இரண்டாம் மேரியையும் பிரித்தானிய சிம்மாசனத்தில் அமர்த்தியது. இவர்கள் பாராளுமன்றத்தால் விதிக்கப்பட்ட உரிமைகள் மனுவை ஏற்றுக் கொண்டே பதவியில் அமர்ந்தமையால் பாராளுமன்றத்திற்குக் கட்டுப்பட்ட மன்னராட்சி இங்கிலாந்தில் உருவானது.
எனவே இங்கிலாந்தில் நீண்ட காலமாக மன்னனுக்கும் பாராளுமன்றத்துக்கும் தொடர்ந்து வந்த ஆதிக்கப்போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இப்புரட்சி அரசியல், பொருளாதார சமூக ரீதியில் மாற்றத்தினை ஏற்படுத்தி ஜனநாயக ஆட்சிமுறைக்கான அடித்தளத்தினையும் பிரித்தானியாவின் வளர்ச்சியை ஏற்படுத்திய புரட்சி என்றவகையில் வரலாற்றில் இருப்புக் கொண்டுள்ளது.

அமெரிக்கப்புரட்சி – 1776
பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட நாடுகாண் பயணங்களின் விளைவாக அமெரிக்காக்கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர்  ஸ்பானியர், போர்த்துக்கேயர், பிரான்சியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்போர் அங்கு குடியேற்றங்களை அமைத்தனர். இவர்களில் வட அமெரிக்காவில் நிலையான குடியேற்றங்களை உருவாக்குவதில் வெற்றி பெற்றவர்கள் ஆங்கிலேயராவர்.
1776இல் சுதந்திரப்போர் ஆரம்பமாகும் போது ஆங்கிலக் குடியேற்றங்கள் பதின்மூன்று வட அமெரிக்காவில் காணப்பட்டன. அவையாவன வேர்ஜினியா, ஜோர்ஜியா, பென்சில்வேனியா, நியுயோர்க், நியுஜேர்சி, டெலவெயார், மஸீசெட்ஸ், கெனடிகட், தென்கரோலினா, வடகரோலினா, நியுஹேம்ஷயர், ரோட்ஜலண்ட், மேரிலண்ட் போன்றனவாகும்.

இந்த அமெரிக்கக் குடியேற்றங்களின் பிரஜைகள் தாய்நாடான பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு மேற்கொண்ட புரட்சியே 'அமெரிக்க சுதந்திரப்போர்' எனப்படுகின்றது.
வட அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட குடியேற்றங்கள் பிரித்தானிய முடியினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களாலேயே நிருவகிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் இவர்கள் தமது கைத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கும் முடிவுப்பொருட்களை விற்பதற்குமான ஒரு சந்தையாகவே அமெரிக்காவைப் பயன்படுத்தினர். அத்தோடு புதிய வரிகளையும் அவர்கள் மீது விதித்தனர்(1765). இதனால் விரக்தியுற்ற மக்கள் இவ்வரிகளுக்கு எதிராக தமது பலத்த எதிர்ப்பினையும் தெரிவித்து மேல்வருமாறு கோஷங்களை எழுப்பினர். 'எமது பிரதிநிதிகள் இடம்பெறாத பிரித்தானியப் பாராளுமன்றத்தில் எம்மீது எவ்வாறு வரிவிதிக்கமுடியும்' என அமெரிக்கக் குடியேற்றவாசிகள் கேள்வி எழுப்பினர். இக்கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கப்படாமையால் 'பிரதிநிதித்துவமின்றேல் வரியுமில்லை' என்ற கோஷத்துடன் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். 1773களில் இப்போராட்டம் தீவிரமடைந்தது. 1776களில் பிலடெல்பியா நகரில் ஒன்று கூடிய போராளிகள் தமது போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஜோர்ஜ் வொஷிங்டனைத் தலைவராக நியமித்தனர்.

 1776ஆம் ஆண்டு யூலை மாதம் நான்காம் திகதி பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிராகச் சுதந்திரப் பிரகடனத்தை முன்வைத்தனர். அதனைக் கடுமையாக எதிர்த்த பிரித்தானியரோடு ஜோர்ஜ் வொஷிங்டன் தலைமையில் ஒன்றிணைந்த அமெரிக்கக் குடியேற்றவாசிகள் நீண்டகால யுத்தத்தின் மூலமாக 1783ஆம் ஆண்டில் பிரான்ஸின் வேர்சையில் மாளிகையில் பிரித்தானிய-அமெரிக்க நாடுகளுக்கிடையே ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் ஐக்கிய அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது.
இப்புதிய நாடு 1787 ஆம் ஆண்டு தனக்கென  அரசியல் யாப்பு ஒன்றை வரைந்து கொண்டது. இதுவே உலகில் எழுதப்பட்ட முதலாவது அரசியல் யாப்பாகும். அத்தோடு அடிப்படை மனித உரிமைகள் யாப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டமையால் அது உலகளாவிய மதிப்பைப் பெற்றுக் கொண்டது.

பிரான்சியப்புரட்சி – 1789

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டு பிரான்சில் இடம்பெற்ற  மாபெரும் மாற்றமே பிரான்சியப் புரட்சியாகும். இது அடிப்படை மனித உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் முன்னேற்றப் பயணத்தில்  இன்னுமொரு முக்கிய கட்டமாகும்.
ஐரோப்பிய வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி எதேச்சாதிகாரமான முடியாட்சி, மடாலயங்களின் ஆதிக்கம், பிரபுக்களின் சமூக, பொருளாதார ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கெதிராக பிரஞ்சு நாட்டின் மூன்றாம் குடித்தினையோர் என்று சொல்லப்படும் சாதாரணகுடிகள் போர்க்கொடி உயர்த்தி,
'அனைவருக்கும் சுதந்திரம்
அவர்களிடையே சமத்துவம்
 ஏற்படுவதோ சகோதரத்துவம்'

என்ற ஜனநாயக முழக்கங்களை விண்ணதிர ஒலிக்கச் செய்தனர். ஐரோப்பிய நாடுகளில் முடியாட்சி முறைக்கும் பிரபுத்துவமுறைக்கும் சாவுமணியடித்து ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவத்தினை உலகிற்கு உணர்த்திய புரட்சி இதுவாகும்.
சமகால பிரான்சிய சமூகத்தை பிரதானமாக மூன்று பிரிவுகளாகப் பிரித்து நோக்கமுடியும். அவர்களில் மன்னன் முதன்மையானவன், இரண்டாம் நிலையில் மதகுருமார் மற்றும் பிரபுக்கள் அடங்கியிருந்தனர். இவ்விரு பிரிவினரும்  உயர்குடியினர் என்றும் உரிமையுள்ள வர்க்கத்தினர் என்றும் அழைக்கப்பட்டனர். ஏனையோர் விவசாயிகள், வர்த்தக வகுப்பினர் , புத்திஜீவிகள் அடங்கிய சாதாரண மக்களாகக் காணப்பட்டனர். இவர்கள் மூன்றாம் குடித்திணையோர் என்றும் உரிமையற்ற வர்க்கத்தினர் என்றும் அழைக்கப்பட்டனர்.

பிறப்பின் அடிப்படையில் கணிக்கப்பட்ட வர்க்க வேறுபாட்டில் உரிமையற்ற வர்க்கத்தினரே மன்னனின் கடுமையான வரிச்சுமைக்கும் கொடுங்கோண்மை ஆட்சியின்கீழும் நசுக்கப்பட்டனர்.  இதனால் அதிருப்தியுற்ற மக்கள் புரட்சிக்கான சந்தர்ப்பத்தினை எதிர்பார்திருந்தனர். அத்தோடு மதகுருமார் மற்றும் பிரபுக்களிடையே ஏற்பட்டுக் கொண்ட முரண்பாடுகள் மற்றும் படித்த மத்தியதர வர்கத்தின் எழுச்சி என அனைத்துத் தரப்பினரும் அதிருப்திப்பட்டுக் கொண்டதன் விளைவே புரட்சியாக வெடித்தது.
பிரான்சிய அறிஞர்களின் கருத்துக்கள் புரட்சியை மூட்டும் தீப்பொறிகளாக விளங்கின. 'நூறு எலிகளால் ஆளப்படுவதைவிட ஒரு சிங்கத்தால் ஆளப்படுவது மேல்' என்றுகூறி மக்களைப் புரட்சிக்கான வழிமுறைகளில் ஈடுபடுத்தினர். குறிப்பாக ரூஸோ, மொண்டஸ்கியூ, வோல்டயர் போன்ற அறிஞர்களது கருத்துக்கள் முக்கியமானவை.

எனவே 1789ஃ7ஃ14 ஆம் திகதி ஒன்றிணைந்த புரட்சியாளர்கள் கொடுங்கோண்மையின் சின்னமாக விளங்கிய பஸ்தீல் சிறைச்சாலையை உடைத்தனர். தம்மை எதிர்த்தோரை கிளற்றின் என்ற கருவிக்கு இரையாக்கினர். முடிவில்; அரசியல் யாப்பொன்றை வரைந்து மனித உரிமைகள் பிரகடனத்தையும் தயாரித்து வெளியிட்டனர்.

பிரான்சியப் புரட்சியின் விளைவுகளாக ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்புகள் கட்டியெழுப்பப்பட்டன. மனித உரிமைகள் சாசனம் உருவாக்கப்பட்டது. சமூக ஏற்றத்தாழ்வுகள் களையப்பட்டு தேசிய உணர்ச்சி தூண்டப்பட்டது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கோட்பாடுகள் நிலைநாட்டப்பட்டன. ஜேர்மனிய ஐக்கியம், இத்தாலிய ஐக்கியம், தென்னமெரிக்க நாடுகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்கள் போன்ற பல வரலாற்று நிகழ்வுகளுக்கு வழிகாட்டியாக அமைந்தது.

  எனவே நாகரிக வளர்ச்சியின் பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் வாழ்க்கை ஊட்டம் நடைபெற்று வருகின்றமையை வரலாற்றைக் கற்கின்றபோது புரிந்து கொள்ள முடிகின்றது. அந்தவகையில் உலக வரலாற்றில் இடம்பிடித்த மூன்று முக்கிய புரட்சிகளும் மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்பினை நல்கி உலக வரலாற்றில் தனித்துவம் பெறுகின்றன.


No comments:

Post a Comment