EDWARD VIII -IDENDIFICATION PARADE
OF TRUE LOVE BORN JUNE 23,1894
பேர் என்ன?”
தங்கத் தொட்டிலில் பட்டு மெத்தையில் கிடந்த குழந்தையைப் பார்த்து விட்டு நிமிர்ந்த பாதிரி கேட்டார்: குழந்தை பிறந்து 40 நாட்களுக்கு மேலாகி விட்டது, இன்னும் பெயர் வைக்கவில்லை.
“பெயர் என்ன வைக்கலாம்?” என்றார் மறுபடியும்.
அரண்மனைப் பணியாளர் வந்து பணிந்து வணங்கி ஒரு சீட்டைக் கொடுத்தார். பிரித்துப் பார்த்த பாதிரி ஒரு நொடி திகைத்துப் போனார்.
‘எட்வர்ட் ஆல்பர்ட் கிறிஸ்டியன் ஜார்ஜ் ஆண்ட்ரூ பாட்ரிக் டேவிட்’ என்று சீட்டில் எழுதியிருந்தது.
“இவ்வளவு நீளப் பெயரா?”
முதலில் இளவரசி மேரிதான் -
அவர்தான் குழந்தையின் தாய்-
சற்றுத் தயங்கிப் பேச ஆரம்பித்தார்:
“மேன்மைமிகு பட்டத்து இளவரசர்” என்று தன் கணவரைச் சுட்டிக் காட்டி, “அவரது சகோதரர் எட்வர்டின் பெயரை வைக்க விரும்பினார். மாட்சிமை தாங்கிய அரசி விக்டோரியா, ஆல்பர்ட் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்திருந்தார். அந்தக் கொள்ளுப்பாட்டியின் விருப்பத்தை எப்படி மறுக்க முடியும்?. என் தந்தை வழிப் பாட்டனார், மாட்சிமை தாங்கிய டென்மார்க் அரசரின் நினைவாக கிறிஸ்டியன் என்று பெயர் வைக்க ஆசை. மற்ற நால்வரும்...”
“புரிகிறது. புனித ஜார்ஜ், ஆண்ட்ரூ, பாட்ரிக், டேவிட் என்ற நான்கு புனிதத் துறவிகளும் இங்கிலாந்து அரசைக் காத்துவருகிறார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும் இளவரசி” என்றார் பாதிரி.
“இந்தப் பெரும் மனிதர்களின் பெயரைச் சூடிய இந்தக் குழந்தை ராஜ வம்சத்தின் பெயர் விளங்கும் வகையில் எதிர்காலத்தில் நாட்டை ஆள்வான்” ஆசீர்வதித்து அந்தக் குழந்தையின் தலையில் புனித நீரைத் தெளித்தார்.
நாளைக்கு அரசனாகி, சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை ஆளப்போகிற தலைமகன் என்ற எண்ணத்துடனேயே எட்வர்டை வளர்க்கத் துவங்கினார்கள்.
அப்பா ஐந்தாம் ஜார்ஜ் கண்டிப்பான தந்தை. அவர் மகனைக் கூப்பிட்டு விடுகிறார் என்றால் எதற்கோ ‘அர்ச்சனை’ நடக்கப் போகிறது என்றுதான் அர்த்தம். அம்மா அன்பானவர்தான். ஆனால் பிரஸ்டீஜ் பார்ப்பவர். இருக்காதா பின்னே? அவரது தந்தை வழிப் பாட்டன் டென்மார்க் அரசன். மாமனார் இங்கிலாந்தின் சக்ரவர்த்தி. கணவர் நாளைக்கு அரியணை ஏறப் போகிற பட்டத்து இளவரசர். இந்த வம்சாவளியில் வந்த குழந்தை, ‘கண்ட பசங்களோடு’ பழக
அனுமதிக்க முடியுமா?
12 வயதில் எட்வர்டை கப்பல் படைக்கு அதிகாரிகளைத் தயார் செய்யும் பள்ளிக்கு அனுப்பினார்கள். அங்கு கூடப் படித்தவர்கள் யாரும் எட்வர்டை நெருங்கவில்லை. ராஜா வீட்டுப் பிள்ளையாயிற்றே!. அதுவும் நாளைக்கு அரசராகப் போகிறவர். எனவே ஓர் இடைவெளி காத்தார்கள். ஆனால் அவரது முதுகுக்குப்பின் தங்களுக்குள் கேலி பேசி சிரித்தார்கள். ‘டேய்! நானும் உங்களை மாதிரி சின்னப் பையன்தாண்டா!’ என்று எட்வர்டின் மனது கூவியது. ஆனால் யார் காதிலும் அந்தக் குரல் விழவில்லை.
எட்வர்டைக் கடைசி வரை செலுத்தியது அந்த ஆசை- ஆசையா? ஏக்கமா? ஒரு சாதாரண மனிதனைப் போலத் தான், வாழ வேண்டும் என்ற ஆசை. அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், வெட்டி பந்தாக்கள் இவற்றை விலக்கிவிட்டு எல்லோரையும் போல் வாழ வேண்டும் என்ற ஆசை. அவரது ஆசைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் சிக்கித் தவித்தது அவரது வாழ்க்கை.
பதினொன்றாம் முறையாகக் கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டார் வாலிஸ். அரச குடும்பத்து விருந்து என்றால் அலட்சியமாக உடுத்திக்கொண்டு போக முடியுமா? அவர் அமெரிக்காவில் படிக்கிற நாள்களிலேயே கல்லூரியில் அவரது ஆடைகள் பிரபலம். அவர்தான் கல்லூரியின் ஆடை அழகி.ஆனால் அவர் கலந்துகொண்ட முதல் விருந்தில் இளவரசர் எட்வர்ட் அவரை அதிகம் கண்டு கொள்ளவில்லை. அறிமுகம் செய்ததும் புன்னகைத்தார். கை குலுக்கினார்.
ஆனால் அந்த விருந்துக்கு அவரை அழைத்துச் சென்ற தோழியிடம் சகஜமாகப் பேசினார். அதற்கப்புறம் பல விருந்துகள். அவை அனைத்திலும் வாலிஸ் ஆஜர். வாலிஸின் பெரிய பலம் உரையாடல். எந்த உரையாடலையும் சுவாரசியமாக வளர்த்துக்கொண்டு போகும் திறமை அவருக்கு உண்டு. இருக்கும் இடத்தை கலகலப்பாக மாற்றிவிடும் இயல்பு அவருடையது. அதனால் அறிமுகம் நட்பாக மலர்ந்தது, வளர்ந்தது, உறுதிப்பட்டது.
அன்றும் அப்படி ஒரு விருந்திற்குத்தான் அழைப்பு வந்திருந்தது. அவள் வாழ்க்கையையே, ஏன் இங்கிலாந்தின் சரித்திரத்தையே மாற்றிய விருந்து. ஆனால் அது வெறும் விருந்தல்ல.
கடலில் படகுப் பயணம் செய்து கொண்டே பாட்டு, உணவு, மது என்று பொழுது போக்கும் கேளிக்கை விருந்து... வாலிசிற்கும் அவரது கணவன் ஏர்னஸ்ட் சிம்சனுக்கும் அழைப்பு வந்திருந்தது. ஆனால் சிம்சன் வியாபார விஷயமாக அமெரிக்கா சென்றிருந்ததால், வாலிஸ் மட்டும் அந்தப் படகுப் பயணத்திற்குப் போனார். அட்லாண்டிக் கடல் காற்று சில்லென்று இருந்தது.உறவுகளைப் போல ஊசியாகக் குத்தவில்லை. நட்பைப் போல இதமாக இருந்தது. மாலைச் சூரியனின் தயவால் கடலில் பொன் அலைகள் புரண்டு கொண்டிருந்தன. மேல் தளத்தின் ஓரமாக நின்று ஓர் இசைக்குழு இழைந்து இழைந்து வாசித்துக் கொண்டிருந்தது. கரையே இல்லாமல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து கடந்த தங்கக் கடலும், தலையைக் கோதும் இதமான காற்றும், உயிரைச் சுண்டும் இசையும், மிருதுவான மதுவும் அந்தப் பொழுதைக் கவிதையாக மாற்றின. கவிதையில் மனது இளகிக் கிடந்தது.
“அற்புதம். நன்றி” என்றாள் வாலிஸ்.
“பயணம் பிடிக்குமா?” என்றார் எட்வர்ட்.
“ம். கடல் பயணம் பிடிக்கும். வான் பயணம் என்றால் வயிற்றில் வெட்டுக்கிளிகள் துள்ளும்”.
“விமானம் என்றால் அவ்வளவு பயமா?”
வாலிஸ் தன் சிறுவயதில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு விமானங்கள் தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கியதைப் பார்த்த அனுபவத்தை விவரிக்க ஆரம்பித்தாள். பேச்சு அவரவர் குழந்தைப் பருவத்தை நோக்கிப் போயிற்று. அவள் அப்பா அமெரிக்காவில் ஒரு சிறிய ஊரில் ரொட்டி மாவு விற்கும் சிறிய கடைக்காரர். அவள் ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும்போது இறந்து போனார். சித்தப்பாவின் ஆதரவில் வளர்ந்தார்.
அரண்மனையில் வளர்ந்த எட்வர்டுக்கு இதெல்லாம் புதிதாய் இருந்தது. சுவையாய் இருந்தது. அவருக்குள் ஏங்கிக் கொண்டிருந்த சாதாரண மனிதன் சலனமடைந்தான். நெருங்கி வந்து வாலிஸின் தோளில் கை வைத்தார். அவள் ஆட்சேபிக்கவில்லை. இழுத்து இறுக்கினார். மறுக்கவில்லை. இதழில் இதழ் பதித்தார். ஏற்றுக்கொண்டு முறுவ லித்தாள். அந்தப் பயணத்தில்தான் நட்புக்கும் காதலுக்கும் இடையே உள்ள மெல்லிய இழையை இருவரும் கடந்ததாக வரலாற்றாசிரியர்கள் எழுதுகிறார்கள்.
“நான் கேள்விப்படுவதெல்லாம் உண்மையா?” என்றார் ஐந்தாம் ஜார்ஜ். அவரது குரலில் கடுமை ஏறியிருந்தது. கண்கள் மகனைக் கூர்மையாகத் துருவிக் கொண்டிருந்தது.
“என்ன கேள்விப்பட்டீர்கள்?”
“அவ்வப்போது பல பெண்கள் உன் அரண்மனைக்கு வந்து போகிறார்கள். நீ அவர்களிடம் பல்லை இளித்துக் கொண்டு நிற்கிறாய். எப்போது பார்த்தாலும் பார்ட்டி. அந்தப் பார்ட்டியில் நீ வரம்பு மீறி சல்லாபித்துக் கொண்டிருக்கிறாய். அதுவும் திருமணமான சீமாட்டிகளோடு”.
“என்னை வேவு பார்க்கிறீர்களா?”
“ஓர் அரசனாக அல்ல, உன் தந்தையாகப் பேசுகிறேன்”.
எட்வர்ட் பதில் சொல்லவில்லை.
“பிரபுக்கள் குடும்பத்துப் பெண்களோடு விளையாடுவதையாவது வயதுக் கோளாறு என்று சகித்துக் கொள்வார்கள். ஆனால் நீ அமெரிக்கப் பெண்ணோடு அதிக நெருக்கமாக இருப்பதாகச் சொல்கிறார்களே உண்மையா? அதிலும் அவள் முதல் கணவனை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டவள் என்று சொல்கிறார்களே?”
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அப்பா!”
‘அப்பா’வைச் சற்று அழுத்திச் சொன்னார் எட்வர்ட். ஆனால் அவர் பொய் சொல்கிறார் என்பதைக் கண்கள் காட்டிக்கொடுத்து விட்டன.
“நாளை இந்த ராஜ்யத்தை ஆளப் போகிறவன் நீ. பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” இப்போது அப்பாவாக இல்லாமல் அரசராகப் பேசினார் ஐந்தாம் ஜார்ஜ். “அதுவும் அயல் தேசத்துப் பெண்!” என்றார்.
தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார் எட்வர்ட்.
“நீங்க வேணா பாருங்க. நான் செத்தா ஒரே வருஷத்தில் இவன் கெட்டுக் குட்டிச்சுவராப் போயிருவான்!” என்று பொருமினார் ஜார்ஜ். இப்போது அரசனாக அல்ல, அப்பனாக. அதில் ஆச்சரியமில்லை. அவரது அப்பாவின் பார்வையில், ஏன் மொத்தக் குடும்பத்தின் பார்வையில் எட்வர்ட் ஒரு ‘தறுதலை’.
ஐந்தாம் ஜார்ஜ் 1936ம் வருடம் ஜனவரி மாதம் 20ம் தேதி நள்ளிரவுக்கு ஐந்து நிமிடங்கள் இருக்கும்போது மரணமடைந்தார். அடுத்த நாள் அதிகாரப்பூர்வமாக எட்வர்ட் அரசராக அறிவிக்கப்பட்டார். பொதுமக்களுக்கு அந்த அறிவிப்பு வாசிக்கப்படும்போது அரண்மனை பால்கனியில் வாலிசை பக்கத்தில் வைத்துக்கொண்டு அதை வேடிக்கை பார்த்தார் எட்வர்ட். கூட்டத்தினருக்கு திகைப்பு. முணுமுணுப்பு. ஏனெனில் அப்போது வாலிஸ் இன்னொருவர் மனைவி. அரச குடும்பத்து மரபுப்படி அரசர் தன் மனைவியுடன் மக்களுக்கு தரிசனம் தரலாம் அல்லது மணமாகாதவரானால் தனியாக. ஆனால் இன்னொருவர் மனைவியை இழுத்துக்கொண்டு வந்து நிற்கக் கூடாது.
எட்வர்ட் பல மரபுகளைத் தூக்கி எறிந்தார். அவர் வசித்தபகுதியில் இருந்த ஒரு கடிகாரம் அரைமணிநேரம் ஃபாஸ்ட் ஆக ஓடும்படி அமைக்கப்பட்டிருந்தது. அது காலங்காலமாக நடந்து வரும் பாரம்பரியம். அதை ஒழுங்கான நேரம் காட்டும்படி மாற்றியமைக்கச் சொன்னதுதான் அவரது முதல் உத்தரவு. மரபுகளை மன்னர் மதிக்கவில்லை என அமைச்சர்களும் அதிகாரிகளும் முனங்கினார்கள். ஆடம்பரச் செலவைக் குறைக்க என்று சொல்லி பல அதிகாரிகளைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தார். அரண்மனை ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்தார். சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையைப் பார்த்து விட்டு அவர் சொன்ன,“இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்” என்ற வார்த்தை அரசியல் அரங்கில் புயல் கிளப்பியது.“அப்படியானால் இதுவரை ஏதும் செய்யவில்லை என்கிறாரா அரசர்?” எனக் கேள்விகள் எழுந்தன.
முணுமுணுப்புக்கள் அவதூறுகளாக அவதாரமெடுத்துப் பரவின. பத்திரிகைகள் குஷியாக கிசுகிசுக்கள் எழுத ஆரம்பித்தன. அவற்றில் ஒன்று, அரசர் வாலிஸ்க்கு விவாகரத்துக் கிடைத்ததும் அவரை மணக்கப் போகிறார் என்பது. அரண்மனையிலிருந்து மறுப்பு அனுப்பலாமா என எட்வர்டைக் கேட்டார்கள். அவர் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்.
“இரண்டு முறை விவாகரத்துப் பெற்ற பெண்ணை அவரது முன்னாள் கணவர்கள் உயிரோடு இருக்கும்போது அரசர் மணம் செய்துகொள்ள மதம் அனுமதிக்காது. தேவாலயக் குருமார்கள் அதற்கு ஒப்புதல் தரமாட்டார்கள்” என்றார் அரசரின் செயலாளர்.
“என் திருமணத்திற்கு அவர்கள் ஏன் ஒப்புதல் தர வேண்டும்?” எனக் கேட்டார் எட்வர்ட்.
“அரசர் என்ற முறையில் நீங்கள்தான் இங்கிலாந்து திருச்சபையின் உச்சப் பொறுப்பில் இருப்பவர். நீங்களே திருச்சபையின் கருத்துக்களை அலட்சியப்படுத்த முடியாது”.
எட்வர்ட் யோசனையில் ஆழ்ந்தார்.
“திருச்சபை மட்டுமல்ல, மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்”
“திருமணம் என் சொந்த விஷயம். அதை ஏன் மக்களிடம் கொண்டுபோக வேண்டும்?”
“அரசரை மணப்பவர் நாட்டின் அரசியாகிறார். அவர்களது அரசியைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இருக்காதா?”
“சரி, அதற்கென்ன?”
“அமைச்சரவையும் நாடாளுமன்றமும் உங்கள் திருமண முடிவிற்கு எதிராக உள்ளன”.
“ஓ! அப்படியா!”
“அவர்கள் மட்டுமல்ல, கடல் கடந்து இருக்கும் நம் காலனி நாடுகளும் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும். ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்ரிக்கா உங்கள் முடிவை எதிர்க்கின்றன. நியூசிலாந்து மௌனம் சாதிக்கிறது”.
“இது கொஞ்சம் கூட நியாயமல்ல. அவர்களில் பலர் என்னையோ, வாலிசையோ பார்த்ததில்லை. என் வாழ்க்கையில் அவர்கள் குறுக்கிட நான் எப்படி அனுமதிக்க முடியும்? ஐ டோண்ட் கேர்”.
“மன்னிக்க வேண்டும். அவர்களுக்கும் நீங்கள்தான் அரசர்”.
“அரசர், அரசர், அரசர்! ஒரு சாதாரண மனிதனுக்குள்ள உரிமைகள் கூட அரசருக்குக் கிடையாதா?” கோபத்தில் வெடித்தார் எட்வர்ட்.
“மறுபடியும் மன்னிக்க வேண்டும் அரசே! நீங்கள் சில சம்பிரதாயங்களைக் காக்கக் கடமைப்பட்டவர்”.
பாழாய்ப் போன சம்பிரதாயம்! பற்றிக்கொண்டு வந்தது எட்வர்டுக்கு. “அந்தப் பெண்மணியை கொஞ்சகாலம் உங்களை விட்டு விலகி -அதாவது வேறு நாட்டில் போய்- இருக்கச் சொல்லுங்கள். அதுதான் எல்லோருக்கும் நல்லது” என்றார் செயலாளர்.
சில வாரங்கள் கழித்து வாலிசை ஃபிரான்சில் போய் இருக்கும்படி சொன்னார் எட்வர்ட். அந்த உருக்கமான விடைபெறலின்போது கண்ணில் நீர் தளும்ப எட்வர்ட் சொன்னார்: “நான் உன்னைக் கை விட மாட்டேன்”.
“உங்கள் முன் மூன்று வழிகள் இருக்கின்றன” என்றார் பிரதமர் பால்ட்வின்
என்ன என்பது போல் பார்த்தார் எட்வர்ட்.
“ஒன்று, காதலைத் துறப்பது. இரண்டு, அமைச்சரவை, பாராளுமன்றம், திருச்சபை, காலனி நாடுகள், மக்கள் எவரையும் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்ணை மணப்பது. ஆனால் அதன் பின் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு”.
“மூன்றாவது?”
பிரதமர் சற்றுத் தயங்கினார்.
“ம். சொல்லுங்கள்”.
“நீங்கள் மகுடத்தை அதாவது அரச பதவியைத் துறப்பது”.
“ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் எட்வர்ட் சற்றும் தயங்காமல்.
“என்ன!” திகைத்துப் போனார் பால்ட்வின். அந்தப் பெண்ணுக்காக சூரியன் அஸ்தமிக்காத ராஜ்யத்தின் சக்ரவர்த்திப் பதவியையா துறக்கப் போகிறீர்கள்?”
“ஆம், ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.
திரு. பால்டுவின் கடைசியாக மன்னரிடம் போந்து நிலைமையை நன்கு விளக்கிப் பதில் விரும்பி நின்றார். "யான் காதலிக்கும் பெண்மணியை மணஞ் செய்து கொள்ள முடி தடையாக நின்றால் யான் முடியையே துறப்பேன்" என்று மன்னர் கூறினார். முதலமைச்சர் மன்னரைப் பார்த்து "விரும்பு மாறு செய்க" என்றார்.,
எட்வர்ட் உடனே துறவுக்குச் சித்தமானார்; ஆகி அன்பு கனிந்த ஓர் அறிக்கை விடுத்தார்.
அறிக்கையின் சாரம்:
"ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தேன்; அதில் மூழ்கினேன்; மூழ்கி எழுந்தேன்; எழுந்த பின்னரே என் தந்தையார்க்குப் பின்னை யான் ஏற்ற அரியாசனத்தைத் துறக்க உறுதி கொண் டேன். அத்திண்ணிய உறுதியை அறிக்கை செய்கிறேன். யான் கொண்ட உறுதியையும், அதற்கு அடிப்படையாயுள்ள காரணங்களையும் எனது குடிமக்கள் சீர்தூக்கிப் பார்ப்பார் களாக; பார்த்தால் எனது செயலில் நியாயம் திகழ்வதை உணர் வார்கள் என்று நம்புகிறேன்.
எனது உள்ளத்தில் கிளர்ந்துள்ள உணர்ச்சியை வெளி யிடுதற்கு யான் விரைகின்றேனில்லை. பொதுமைக் கடனாற் றவே யான் விரைகிறேன். அரச பாரம் மிகப் பொறுப்பு வாய்ந்தது. அவ்வரும்பொறுப்பை ஏற்றுக் கடனாற்றத் தற்போதைய நிலைமை இடந்தரவில்லை.
என்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பை யான் உணராம லில்லை. உணர்ந்தே, பொறுப்புக்கேற்றவாறு இனித் திறம் பட வும், எனது உள்ளம் நிறைவுபடவும் கடனாற்றல் இயலாது என்ற முடிவுக்கு வந்தேன். அதனால், முடி துறக்கவே உறுதிகொண் டேன். அதற்குரிய உடன்படிக்கை வருமாறு:-
'கிரேட் பிரிட்டனுக்கும், அயர்லாந்துக்கும், மற்ற பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளுக்கும் மன்னனும், இந்தியா வின் மன்னர் மன்னனுமாகிய எட்டாம் எட்வர்ட் என்னும் யான் அரியாசனத்தைத் துறக்கக் கொண்ட திண்ணிய உறுதியை அறுதி யிடுகிறேன்.
என்வழித் தோன்றல்கட்கும் அவ்வரியாசன உரிமையில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். உடன்படிக்கை உடனே ஏற்றுக்கொள்ளப் படல் வேண்டு மென்பது எனது விருப்பம். 1936ஆம் ஆண்டு, டிசம்பர் 10-ம் நாளாகிய இன்று, சான்றுகள் முன்னிலையில் யான் எனது கைச்சாத்தைப் பொறிக்கிறேன்: (ஒப்பம்) எட்வர்ட், ஆர்.ஐ.
'யான் நிறுவிய இவ்வுடன் படிக்கைக்குச் சான்றவர் என்னுடன் பிறந்த மூவர். அவர், யார்க் கோமகனாரும், குளோஸஸ்டர் கோமகனாரும், கென்ட் கோமகனாருமாவர்.
என் பொருட்டுப் பலதிற வேண்டுதல்கள் வந்தன. அவை களில் கெழுமியுள்ள அன்பைப் பாராட்டுகிறேன். அவைகளைக் கூர்ந்து கூர்ந்து உன்னினேன். மனம் மாறுதல் அடைய வில்லை. யான் கொண்ட உறுதியிலேயே என் மனம் நிலைத்துவிட்டது. இன்னுங் காலந்தாழ்ப்பது எனது அன்பார்ந்த குடிமக்களின் நலத்துக்குக் கேடு விளைப்பதாகும். அவர்கள் நலங்கருதி யான் வேல்ஸ் இளங்கோவாகவும், மன்னனாகவும் தொண்டாற்றி யிருக்கிறேன். அவர்கள் மேலும் மேலும் நலம்பெற வேண்டுமென்பது எனது இடையறாத வேட்கை.
அரசும் சாம்ராஜ்யமும் நீடுவாழவும், குடிமக்கள் இன்புறவும் இம்முடிவுக்கு வருதலே நல்லது என்று கருதலானேன். இக்கருத்துடன் விடை பெற்றுக் கொள்கிறேன். யான் அரியாசனம் இவர்தற்கு முன்ன ரும் பின்னரும் குடிமக்கள் என்பால் செலுத்திவந்த அன்பை மறவேன்; அதற்கு என்றும் நன்றி யறிதலுடையேன். அதே அன்பை என் பின்னவர்க்கும் குடிமக்கள் செலுத்துவார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு.
யான் நிறைவேற்றியுள்ள உடன்படிக்கை உடனே ஏற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும். எனக்குப் பின்னர் அரியாசனத்தில் அமரும் உரிமையுடையார் என் தம்பியார் யார்க் கோமகனாரே யாவர். அவர் அரியாசனம் அமர்தற்குரிய காரியங்கள் விரைவில் நடத்தப்பெறல் வேண்டும்'( ஒப்பம்) எட்வர்ட், ஆர். ஐ
அறிக்கை பார்லிமெண்டில் வாசிக்கப்பட்டது. முத லமைச்சர் திரு. பால்டுவின் நிகழ்ச்சிகளை யெல்லாம் விளக்கி நீண்டதொரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அதன்கண் இருவரை மணந்த ஒருவர் திருமதி ஸிம்ஸன் என்பதும், இரு கணவரும் உயிருடனிருக்கிறார் என்பதும் சிறப்பாக விளக்கப் பட்டன. மற்றுஞ் சிலரும் பேசினர். கர்னல் வெட்ஜ்வுட் தமது தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். சம்பிரதாய முறைகளெல்லாம் நடைபெற்றன. யார்க் கோமகனார் மன்ன ரானார். அவர் மன்னராயதும் தம் தமயனாரை வின்ஸர் கோமகனாராக்கினார்,
எட்வர்ட் அரசு துறந்ததும், சாம்ராஜ்ய மக்களுடன் தேனினுமினிய தீம்மொழியால் பேசினார்,
பேச்சின் சுருக்கம்:
"மன்னன், மன்னர் மன்னன் என்ற தொடர்பைச் சிறிது நேரத்துக்கு முன்னரே யான் அறுத்துக் கொண்டேன்; இப்பொழுது கோமகன் என்னும் முறையில் பேசுகிறேன். என் தம்பியார் யார்க் கோமகனாரால் அரச பாரம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனது வணக்கத்தை முதலாவது அவர்க்குச் செலுத்துகிறேன்; இதை என் மனமார நிகழ்த்துகிறேன்.
யான் அரசு துறக்க நேர்ந்த காரணம் உங்கட்குத் தெரியும். அரசு துறந்தமையால், கடந்த இருபத்தைந்தாண்டாக வேல்ஸ் இளங்கோவாகவும் மன்னனாகவும் நின்று ,தொண்டு செய்தற்கு நிலைக்களனாக இருந்த தேசத்தையும் சாம்ராஜ்யத்தையும் யான் ஒருபோதும் மறந்துவிடேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மன்னர் பொறுப்புச் சீரியது; பெரியது. பொறுப்புக்குரிய தொண்டாற்றல் வேண்டும். யான் காதலித்துள்ள பெண்ணணங்கின் கூட்டுறவின்றி அத்தொண்டை என்விருப்பப்படி ஆற்ற இயலா தென்று நன்கு தெளிந்தேன்; தெளிந்தே அரசு துறக்கத் துணிந்தேன்.
இச்செயலுக்கு யானே பொறுப்பாளி, விடயம் என்னைப் பற்றியது. அதை யானே முடிவு செய்தல் வேண்டும். யான் கண்ட முடிவல்லாத பிறிதொன்றைக் காணுமாறு கெழுதகையர் ஒருவர் என்னை வலியுறுத்தினர். அதனால் என் மனம் மாறுதல் அடைய வில்லை.
இம்முடிவுக்கு யான் ஏன் வந்தேன்? இதற்குரிய காரணம் ஒன்றே. அஃது, எனது செயலால் எல்லார்க்கும் நலன் விளைதல் வேண்டும் என்பதே.
இம்முடிவுக்கு யான் எளிதில் வரலானேன்; எதனால்? இத்தேசத்தின் பொதுக் காரியங்களில் ஈடுபட்டுப் பெரிய அநுபவம் பெற்றவரும், நற்குணம் வாய்ந்தவரும், சாம்ராஜ்ய நிகழ்ச்சிகளில் எவ்விதச் சிக்கலோ இடரோ நேராதவாறு எனது பதவியை ஏற்கும் உரிமையும் வல்லமையும் உடையவருமாகிய தம்பியார் இருத்தலினால் யான் எளிதில் நன்முடிவுக்கு வரலானேன். அவருக்கு ஒரு பெரும் பேறு உண்டு. அஃது உங்களில் பெரும்பான்மையோர்க்கு வாய்த்தது;
எனக்கு வாய்க்காதது. அஃதென்னை? அது, மனைவி மக்களோடு கூடிய இன்ப வாழ்வுப் பேறு.
சோதனை நாட்களிலும் என் அருமை அன்னையாரும், மற்ற அரச குடும்பத்தவரும் என் உள்ளம் மகிழ்வுறும் முறையிலேயே நடந்து கொண்டனர். அமைச்சரும், சிறப்பாக முதலமைச்சரும் பரிவுடன் என்னொடு உறவாடியே வந்தனர். எனக்கும் அவர்கட்கும், எனக்கும் பார்லிமெண்டுக்கும் ஆட்சி முறையில் எவ்விதக் கருத்து வேற்றுமையும் நிகழ்ந்ததில்லை. வரம்பு முறையினின்றும் யான் பிறழாது நடக்குமாறு என்னைப் பண்படுத்திய பெருமை என் தந்தையாருடையது. யான் இளங்கோவான நாள் தொட்டு, யான் அரியாசனம் அமர்ந்த நாள் வரை -சாம்ராஜ்யத்தில் எப்பகுதியிலும் யான் வதிந்த போதும், சென்றபோதும் குடிமக்கள் எல்லாரும் என்பால் அன்பு பூண்டே ஒழுகினர். எல்லார்க்கும் எனது நன்றியைச் செலுத்துகிறேன்
யான் பொதுக் காரியங்களினின்றும் விலகுகிறேன். என் சுமையை இறக்கிவிட்டேன். மீண்டும் நாடு நோக்கச் சின்னாளாகும். பிரிட்டிஷ் இனத்தினதும், சாம்ராஜ்யத்தினதும் நலனை நாடிய வண்ணமா யிருப்பேன். மன்னருக்கு எனது ஊழியம் எப்பொழு தேனும் வேண்டப்படுமானால், அதைச் செய்ய யான் தவறேன்.
நாம் அனைவரும் இப்பொழுது ஒரு புதிய மன்னரைப் பெற்றிருக்கிறோம். அவர்க்கும், அவர்தம் குடிமக்களாகிய உங்கட்கும், மகிழ்வும் நலனும் உண்டாக என்று மனமார வாழ்த்துகிறேன். இறைவன் உங்கட்கு நலம் புரிவானாக; மன்னரைக் காப்பானாக"
என்று பேசி விடைபெற்று, உடனே எட்வர்ட் ஐரோப்பா கண்டத்துக்குப் புறப்பட்டார். அரச குடும்பம் அலமந்தது. பிரிட்டன் உருகலாயிற்று. சாம்ராஜ்யம் கண்ணீர் உகுத்தது. ஒரு பெரும் சாம்ராஜ்ய மன்னராயிருந்த ஒருவர் கோமகனாராகி வியென்னாவுக் கருகேயுள்ள ஒரு பதியைச் சேர்ந்தார்.
No comments:
Post a Comment